இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு

புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லோரும் புண்ணியவான்களே

எரேமியா 1:4-5, 17-19
1கொரிந்தியர் 13:4-13
லூக்கா 4:21-30

இறை இயேசு கிறிஸ்துவின் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று ஆண்டின் பொதுக்காலம் நான்காவது ஞாயிறை நாம் என்று சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் கடவுளின் பணியாளர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் நாம் கொடுக்க வேண்டும் என்பதையும், கடவுளின் பணியாளர்களை கடவுள் அபரிவிதமாக ஆசீர்வதிக்கிறார் என்பதையும் நமக்கு கோடிட்டு காண்பிக்கின்றது. கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பல மனிதர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இறைவாக்கினர் எரேமியா மென்மையான அன்புள்ளம் படைத்தவர். இவரை கடவுள் தன்னுடைய பணிக்காக தேர்ந்துகொள்கின்றார். அதுவும் தாயின் வயிற்றில் உன்னை உருவாக்கும் முன்பே உன்னை அறிந்திருந்தேன். நீ பிறக்கும் முன்னே உன்னை திருநிலைப்படுத்தினேன். மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். எனக்கூறி அவரை தேர்ந்துகொள்கின்றார். ஆனால் இஸ்ராயேல் மக்களோ அவரை ஏற்றுக்கொள்ளவும், அவருடைய இறைவாக்கையும் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர். ஏன் அவரை கொலை செய்யவும் முற்படுகின்றனர். எரேமியா 34 முதல் 44 அதிகாரங்கள் வரை எரேமியாவின் துன்பங்கள் விவரிக்கப்படுகின்றன. தேர்ந்துகொள்ளப்பட்ட எரேமியாவை கடவுள் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன் என கூறி திடப்படுத்துகின்றார்.

அதைப்போலவே புதிய ஏற்பாட்டிலே சவுலாக வாழ்ந்து கிறித்தவர்களை கொலை செய்தவரை கடவுள் தன்னுடைய பணிக்கென தேர்ந்துகொள்கின்றார். கடவுள் அனனியாவிடம் பிறஇனத்தவருக்கும், அரசருக்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்து கொண்ட கருவி (தி.ப 9:15) என சவுலை பவுலாக மாற்றி தேர்ந்துகொள்கின்றார். ஆனால் இவரை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுக்கின்றனர். எந்தஅளவிற்கு என்றால் இவருடைய மக்களே இவரை கொலைசெய்ய முற்படுகின்றனர் (தி.ப 9:23-24). மேலும் ஆனாலும் தூய பவுல் நம்பிக்கையோடு எல்லா சவால்களையும் எதிர்கொள்கின்றார். தூய பவுல் தான் பட்ட துன்பங்களை 2கொரிந்தியர் 11:16 – 29 ல் தெளிவாக விவரிக்கின்றார். கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களை மக்கள் புறக்கணித்தாலும் கடவுள் கைவிடுவதில்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாசரேத்து ஊரில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர் ஆம் பிரியமானவர்களே கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல மனிதர்கள் இன்றளவும் புறக்கணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.

இன்றைய நாளிலே யாரெல்லாம் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்…
கடவுளால் தேர்ந்துகொள்ளப்ட்டவர்களை மக்கள் நிராகரிப்பது ஏன்?
கடவுள் தேர்ந்துகொள்வதற்கும் நாம் தேர்ந்துகொள்வதற்கும் என்ன வித்தியாசம்?


பிரியமானவர்களே இன்றைய சமூகத்தில் பல நேரங்களில் பலவற்றை தேர்ந்தெடுக்கிறோம். நாம் பயண்படுத்தும் செல்போன், லேப்டாப்பை தேர்ந்தெடுக்கிறோம்; படிப்பை தேர்ந்தெடுக்கிறோம்; படிப்பிற்காண வேலையை தேர்ந்தெடுக்கிறோம்; உணப்பொருட்களை தேர்ந்தெடுக்கிறோம்; உடுத்துகின்ற உடைகளை தேர்ந்தெடுக்கிறோம்; வாழ்க்கை துணைவர்களான கணவன் மனைவியை தேர்ந்தெடுக்கிறோம்… இப்படியாக நமக்கு தேவையனவற்றை நாம் தேர்ந்தெடுக்கிறோம். தேர்ந்தெடுத்த பிறகு அது சரி இல்லை என்று சொன்னால் உடனே அதை மாற்றிக் கொள்கிறோம். கணிணி, செல்போன், வேலைகள், உணவுப்பண்டங்கள் என தேர்ந்துகொள்வது சரியில்லையென்றால் உடனே அதை மாற்றிவிடுகின்றோம். ஆனால் கடவுளின் திட்டத்தில் மாற்றத்திற்கு இடமில்லை. ஒரு முறை கடவுள் தேர்ந்து கொண்டார் என்று சொன்னால் கடைசிவரை அதை பாதுகாக்கின்றார், பக்குபவப்படுத்துகின்றார். உதாரணமாக ஆதாமும், ஏவாலையும் கடவுள் தேர்ந்துகொள்கின்றார். அவர்கள் பாவம் செய்தபோது கடவுள் அவர்களுக்கு பதிலாக புதிய மனிதர்களை படைக்கவில்லை அல்லது ஆதிப்பெற்றோருக்கு பதிலாக புதிய ஆதிப்பொற்றோரை அவர் உருவாக்கவில்லை. மாறக இழந்துபோன கடவுளின் சாயலை புதுப்பிக்கின்றார். இஸ்ராயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுக்கின்றார். கடவுளுக்கு எதிராக அவர்கள் சென்றபோது அவர்களை புறக்கணித்து வேற்றுமக்களை தன் சொந்த மக்களாக கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவர்களை திருத்தி தன் வயப்படுத்துகின்றார்.

எனவே கடவுள் தேர்ந்துகொள்வதற்கும் மனிதர்கள் தேர்ந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கடவுள் தான் தேர்ந்துகொள்ளும் ஒவ்வொரு மனிதர்களையும், பொருட்களையும் சிந்தித்து, உருவாக்கி, பக்குவப்படுத்தி தேர்ந்தெடுக்கின்றார். வார்த்தையில் உலகை படைத்த கடவுள் மனிதனை படைக்கும் போது சிந்தித்து, மண்ணை பிசைந்து உருவமாக உருவாக்கி தன்னுடைய உயிர்மூச்சை அவன் நாசிகளில் ஊதி ஆதாமையும், ஏவாலையும் உருவாக்கி தேர்ந்துகொள்கின்றார். எரேமியாவை தாயின் கருவில் உருவாகும் முன்பே அவரை தேர்ந்துகொள்கின்றார்.

கடவுள் தான் தேர்ந்துகொள்பவற்றை முழுமையாக அறிந்தவாராக இருக்கின்றார்.
தான் தேர்ந்துகொண்டவற்றிற்கு உறுதுணையாக இருந்து அதை பாதுகாக்கின்றார்.


ஆனால் இன்று நாம் தோர்ந்துகொள்பவற்றை முழுமையாக அறிந்துகொள்வது கிடையாது. அது பொருட்களாக இருக்கட்டும் அல்லது வாழ்க்கை துணையாக இருக்கட்டும். பொருட்களாக இருந்தால் அதைஉடனே மாற்றிவிடுகின்றோம். வாழ்க்கை துணையாக இருந்தால் விவாகரத்து செய்து அவர்களையும் நாம் மாற்றிவிடுகின்றோம்.

தேர்ந்துகொள்வதை நாம் மாற்ற காரணம் என்ன?
தேர்ந்துகொள்வதை நாம் மாற்ற காரணம் அன்பு இல்லாமையே. கடவுள் அன்பாக இருக்கின்றார். எனவே தான் தேர்ந்தெடுத்த எல்லா மனிதர்களையும் அன்புசெய்கின்றார். ஏன் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கடவுளுக்கு எதிராக பேசினாலும், கடவுளின் திட்டத்திற்கு எதிராக சென்றாலும் அவர்களை புறக்கணிப்பது இல்லை. காரணம் கடவுளின் அன்பு. எனவேதான் தூய பவுல் அன்பை பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் நமக்கு தெளிவுபடுத்துகின்றார். நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு இவை முன்றுமே முக்கியமாக இருந்தாலும் அன்பே தலைசிறந்தது எனக் கூறுகின்றார். கடவுளின் அன்பு தேர்ந்துகொள்ளப்பட்டவர்களை புண்ணிவான்காளாக மாற்றுகின்றது. மனிதர்களின் அன்பில்லா தன்மை கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்வர்களை புறக்கணிக்கிறது.

இன்றைய நாட்களில் தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படுவது அரியலூரில் இறந்த மாணவியைப் பற்றியே!. இன்று அந்த அருட்சகோதரி சகாயமேரி புறக்கணிக்கப்படுவதற்கும், ஏன் கிறிஸ்தவ மதம் புறக்கணிக்கப்படுவதற்கும் காரணம் மக்களிடம் அன்பில்லா தன்மையே!.

அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்தில் அருட்சகோதரி சகாயமேரி கைது செய்யப்பட்ட போது அவரிடம் தனக்கு உடம்பு சரியில்லை நெஞ்சு வலி என்று சொல்லுங்கள் சிறை செல்வதை தவிர்த்து மருத்துவமனையில் சேர்ந்துவிடலாம் என்று சொன்னபோது "என்னால் பொய் சொல்ல முடியாது" என்று சொல்லி சிறையை புன்முறுவலுடன் ஏற்றுள்ளார்!

தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்ற இயேசுவின் சீடரல்லவா அவர்!
மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளான சிறுமியை அன்பு செலுத்தி அரவணைத்தவர்!
தோல் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்ட அந்த சிறுமியை தாயாய் தாங்கியவர்!
அந்த சிறுமி பெரிய பெண்ணானபோது போர்டிங்கிலேயே சடங்கு செய்து அந்த சிறுமியை மகிழ்வித்தவர்!
அந்த சிறுமியின் விடுதி பீசை தானே கட்டியவர்!
பொங்கலுக்கு தீபாவளிக்கு அந்த சிறுமிக்கு துணிமணிகள் வாங்கி கொடுத்து அந்த சிறுமியை மகிழ்வித்தவர்!
+2 முடித்தவுடன் தனது எதிர் காலத்தை எண்ணி கலங்கிய அந்த சிறுமிமியை ஆற்றுப்படுத்தி அவரை கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்தவர்!
இன்று அந்த சிறுமியாலேயே குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கிறார்!
சகோதரி! சிறையில் இருப்பது நீங்கள் அல்ல தர்மம்தான்!
தர்மத்தின் வாழ்வுதனை இன்று சூது கவ்வியுள்ளது! நாளை தர்மம் நிச்சயம் வெல்லும் உங்கள் திருப்பணியை, பண்பாட்டை, அர்ப்பணிப்பை இந்த உலகமே கொண்டாடும்!


ஆம் பிரியமானவர்களே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் இன்றும் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் கடவுள் நிச்சயம் அவர்களை பாதுகாத்து வழிநத்துவார். ஏன் புண்ணிவான்களாக கூட மாற்றுவார். காரணம் கடவுளின் அன்பு எல்லையற்றது.

எனது சிந்தனைக்கு:
இன்று நான் எத்தனை மனிதர்களை புறக்கணித்து இருக்கின்றேன்?
குறிப்பாக கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்களை நான் ஏன் புறக்கணிக்க வேண்டும்?
அன்பு எனக்கு அளவுகோலாக இருந்தால் குற்றங்கள் மறந்துவிடும். குற்றங்களை மன்னித்து மறக்கும் போது நானும் புன்னியவான்னே!

புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் புண்ணியவான்களே