இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பெரிய வியாழன் முதலாம் ஆண்டு

நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்.

விடுதலைப்பயனம் 12:1-8, 11-14
1 கொரிந்தியர் 11:23-26
யோவான் 13:1-15

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நாள் நமது கத்தோலிக்க திருச்சபையின் மிக முக்கியமான நாள். இன்றைய நாளில் தான் ஆண்டவர் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார். நற்கருணை தான் நமது திருச்சபையின் அடித்தளம். எனவே இந்த நற்கருணை கொண்டாட்டத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் இப்போது கோயிலுக்கு வந்துகொண்டு இருக்கிறீர்கள். தீடீரென ஒரு காட்சி. உங்கள் முன்னால் மிக ஜெகஜோதியாக அன்னை மரியாள் காட்சி தருகிறரர்கள் அருகிலே உங்களுக்கு பிடிக்காத ஒரு பங்குத்தந்தை அங்கு நின்று கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். முதலில் யாருக்கு வணக்கம் செலுத்துவீர்கள்? அன்னை மரியாளுக்கா? அல்லது பிடிக்காத அந்த பங்கு தந்தைக்கா?

இதே கேள்வியை ஒரு முறை புனித அசிசி பிரான்சிஸிடம் புனித லாரன்ஸ் கேட்டாராம் அதற்கு புனித அசிசியார் கூறுவார் முதலில் நான் சென்று குருவானவரின் கரங்களை முத்திசெய்வேன் அதன் பிறகு அன்னை மரியாளிடம் நான் செல்வேன் என்றாரம். கராணம் அன்னை மரியாள் ஒரேஒரு முறை தான் தனது மகனை இந்த உலகிற்கு கொண்டுவந்தார்கள். ஆனால் குருவானவரோ ஒவ்வொரு திருப்பலியின் போதும் இயேசுவை இந்த உலகிற்கு கொண்டு வருகிறார்.

குருவானவர் இல்லையென்றால் நற்கருணை கிடையாது,
நற்கருணை இல்லையென்றால் இயேசு கிடையாது.
இயேசு இல்லையென்றால் திருச்சபையே கிடையாது.

ஆம்அன்புக்குரியவர்களே குருத்துவம் என்பது மிகவும் மகிமை பொருந்தியது. அப்படிப்பட் குருத்துவத்தை ஏற்படுத்தியநாள் தான் இது. இன்றைய வழிபாடானது மூன்று பகுதிகாளக பிரிக்கப்பட்டுள்ளது.

01.இறைவாக்கு வழிபாடு,
02. பாதாம் கழுவும் சடங்கு,
03. குருத்துவத்தை ஏற்படுத்துதல்.

01.இறைவாக்கு வழிபாடு,
இன்றைய மூன்று வாசகமும் ஆண்டவரின் பாஸ்கா பலியைப் பற்றி எடுத்துரைக்கிறது. இந்த பாஸ்கா பலி இஸ்ராயேல் மக்கள் வாழ்விலும் சீடர்கள் வாழ்விலும் நம்பிக்கையை விதைத்தது. பழைய ஏற்பாட்டு பாஸ்காவிலே கடவுள் அவர்களை கடந்து சென்றபோது அனைவரும் காப்பாற்றப்பட்டனர். புதிய ஏற்பாட்டு பாஸ்காவில் கடவுளே அவர்கள் மத்தியில் குடிகொள்கிறார். இந்த பாஸ்கா விழாவில் ஒவ்வொருவருமே தங்களையே ஆண்டவரின் திருவிருந்துக்காக தயாரித்து இருந்தனர். இன்றும் தகுந்த தயாரிப்புடன் யாரெல்லாம் ஆண்டவரின் உடலையும், இரத்தத்தையும் உட்கொள்கின்றனரோ அனைவரும் காப்பாற்றப்படுவர். இன்று யாரெல்லம் தகுந்த தயாரிப்புடன் ஆலயம் வந்திருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்ப்போம்!

02. பாதாம் கழுவும் சடங்கு
இயேசு யாருடைய பாதங்களை கழுவினார்? இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவினார். அப்படியானால் யார் இயேசுவின் பாதங்களை கழுவியது? சிந்திப்போம்! வழக்கமாக நமது ஆலயங்களில் இந்த பாதம் கழுவும் சடங்கிற்கு மக்களை முன்கூட்டியே தயாரித்து வைத்திருப்பது வழக்கம். ஆனால் ஒரு முறை ஒரு பங்கிலே இந்த பாதம் கழுவும் சடங்கு நேரம் வந்த போது அந்த பங்குத்தந்தை இவ்வாறக அழைத்தார். நான் இந்த பங்கிலே 4 வருடம் பங்குத்தந்தையாக இருக்கிறேன். ஆனால் பலருடைய சாபங்களுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். எனவே இன்றைய நாளிலே யாரெல்லம் என்னை எதிரியாக, ஒரு வேண்டாதவராக நீங்கள் நினைக்கிறீர்களே அவர்கள் அனைவரும் பீடத்திற்கு வரவும். உங்கள் பாதங்களை கழுவி முத்தம் செய்ய ஆசைப்படுகிறேன் என்றார். ஒருசில நிமிடங்கள் ஒரே அமைதி அதன் பின் ஒருவர்பின் ஒருவராக சிலர் பீடத்திற்கு வந்தனர். அப்போது அந்த அந்த பங்குத்தந்தையை எதிரியாக பார்த்த ஒரு மனிதர் ஒரு பிச்சைக்காரரை அழைத்து வந்து உன்னால் முடிந்தால் இவனுடைய பாதங்களை கழுவு என்று சென்னார். காரணம் அந்த மனிதரின் உடல் முழுவதும் புண்கள். குளித்து பல நாட்களாகி இருக்கும், இரத்தமும் சலமும் வடிந்து கொண்டிருந்தது. தூற்நாற்றம் அந்த இடம் முழுவதும் நிரம்பி இருந்தது. இந்த குருவானவர் தனது உடைகளை களைத்து வைத்துவிட்டு அவர்களின் பாதங்களை கழுவி முத்தமிடத் தொடங்கினார். அந்த பிச்சைக்கராரரின் காலில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அந்த புண்களை கழுவி முத்தமிட தொடங்கினார். இந்த செயலைக் கண்ட அந்த பங்கு மக்கள் அன்றுமுதல் மனம் மாறியவர்களாக வாழ ஆரம்பித்தனர்.

இன்றைய நற்செய்தியில் இராயப்பரிடம் இயேசு வந்த போது “ஆண்டவரே நீரோ என் பாதங்களை கழுவுவது” என்று இயேசுவை தடுக்கிறார். இயேசு மறுமொழியாக “நான் உன் பாதங்ககளை கழுவாவிடில் என்னோடு உனக்கு பங்கில்லை என்கிறார்”. ஆம் அன்புக்குரியவர்களே ஆண்டவரோடு நாமும் பங்குகொள்ள வேண்டுமென்றால் நாமும் பிறரின் பாதங்களை கழுவி முத்தமிடவேண்டும். காரணம் மற்றவர்களின் பாதங்களை கழுவது இயேசு நமக்கு கொடுத்த கட்டளை. “ஆண்டவரும், போதகருமான நான் உங்கள் காலடிகளை கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவரின் பாதங்களை கழுவ வேண்டும் என சொல்லவில்லை மாறாக நீங்கள் கழுவ கடமைபட்டு இருக்கிறீர்கள் என்கிறார். நான் செய்தது போல நீங்களும் செய்யமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டியுள்ளேன்” என யோவன் 13:14-ல் கூறுகிறார்.

இயேசுவின் பாதங்களை கழுவியது யார்? லூக்க நற்செய்தி 7:36-50 பாவியான ஒரு பெண் இயேசுவின் பாதங்களில் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை இயேசுவின் பாதங்களில் ஊற்றி தனது கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிடுகிறாள். இயேசு அந்த பெண்ணின் பாவங்களை மன்னிக்கிறார். மேலும் இவள் செய்த இந்த செயல் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துரைக்கப்படும் என்கிறார் இயேசு மத் 26:13, ஒருவரின் பாதங்களை கழுவுவது, அதையே முத்தமிடுவது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் செய்து பார்க்க நாம் தயாரா? பிறருடைய பாதங்களை கழுவ கடமைப்பட்டு இருக்கிறீர்கள் என்கிறார் நமதாண்டவர் எனவே இன்று இந்த பங்குத்தந்தையைப் போல எத்தனை பேர் தங்கள் எதிரிகளின் (பிறரின்) பாதங்களை கழுவ தயாராக இருக்கின்றீர்கள்?

03. குருத்துவத்தை ஏற்படுத்துதல்.
இயேசு இந்த உலகில் வாழ்ந்த போது எத்தனையோ அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்து வந்தார். ஆனால் தனது சீடர்களை பார்த்து நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் எப்போது நற்கருணையை ஏற்படுத்தினாரோ அப்போது “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” லூக் 22:19 என்று தனது சீடர்களுக்கு போதிக்கிறார். 24 மணி நேரமும் ஒவ்வொரு குருவும் உலகத்தின் ஏதோ ஒரு இடத்தில் ஆண்டவரின் நினைவாக இந்த நற்கருணையை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

குருத்துவம் என்பது கடவுளின் மிகப்பெரிய கொடை. இதை யாரும் பெற்றுக்கொள்ள முடியாது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வாய்ப்பு. இன்று பணமும் படிப்பும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் ஆசிரியராகலம், மருத்துவராகலாம் அல்லது எந்த துறையில் வேண்டுமானாலும்; அவர்கள் வேண்டிய தகுதியை அடைந்துவிடலாம். ஆனால் குருவாதற்கு இந்த பணம்மும் தேவையில்லை படிப்பும் தேவையில்லை. கடவுளின் ஆசீர்வாதம் மட்டுமே தேவையானது. திருச்சபையின் வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் மெத்த படித்தவர்களாகிய புனித ஆல்பர்ட், புனித அந்தோனியார், புனித பொனவெஞ்சர், புனித லாரன்ஸ் மற்றும் படிப்பறிவு அதிகம் இல்லாதவர்களாகிய புனித வியான்னி, அவர்கள் அனைவருமே குருக்கள் தான். இவர்களுக்கு உள்ள ஒற்றுமை கடவுளின் ஆசீர்வாதம் மட்டுமே. இந்த கடவுளின் ஆசீர்வாதத்தை கடவுளின் விருப்பபடி மனிதர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இந்த ஆசீர்வாதம் தாயின் கருவில் இருக்கும் போதே தாய்க்கும் அந்த குழந்தைக்கும் கிடைக்கிறது. உதாரனமாக எரேமியா 1:5-7-ல் “தாயின் வயிற்றில் உன்னை உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன். நீ பிறக்கும் முன்பே உன்னை திருநிலைப்படுத்தினேன். மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக நான் உன்னை எற்படுத்தினேன்” என்கிறார் ஆண்டவர். ஆக குருத்துவம் என்பது எவராலும் விலை கொடுத்து வாங்கமுடியாத மிகப்பெரிய பொக்கிசம்.

இயேசு குருக்களையும், குருத்துவத்தையும் ஏற்படுத்தியதன் நோக்கம் என்ன?
பழைய ஏற்பாட்டு குருத்துவம்
பழைய ஏற்பாட்டு குருத்துவமானது லேவியர் வழி குருத்துவம் அல்லது ஆரோன் வழிக் குருத்துவம், மெல்கிசதேக் குருத்துவம் என அழைக்கப்படும். அதாவது குருத்துவம் என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குலத்திற்கு மட்டும் சொந்தமாக இருந்தது. அதைப்போலவே அவர்களது பணியும் மிகவும் குறுகியதாகவே இருந்தது. மனிதர்கள் சார்பாக மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு பரிகாரப்பலி செலுத்துபவர்களாகவே குருக்கள் இருந்தனர். இந்த குருக்கள் அனைவருமே சாவுக்கு உட்பட்டவர்கள் (எபி7:23).

புதிய ஏற்பாட்டு குருத்துவம்
புதிய ஏற்பாட்டிலே இயேவே தலைமை குருவாக இருக்கிறார் (எபி 4:14, 9:11). இந்த தலைமைக் குருக்கான அதிகாரத்தை “நீர் என் மைந்தர், இன்று நான் உன்னை பெற்றெடுத்தேன்” என கடவுளே இயேசுவுக்கு கொடுக்கிறார், மேலும் “மெல்கிசெதக்கின் முறைப்படி நீர் என்றென்ரும் குருவே என என்றும் வாழும் குருவனவர்” என அழைக்கப்படுகிறார். இந்த இயேசு பாவம் போக்கும் பலியாக தன்னையே கையளித்து உலகின் பாவங்களை போக்குகிறார். எனவே தான் இயேசுவே காணிக்கையாகவும், காணிக்கை ஒப்புக்கொடுப்பவராகவும் மாறுகிறார். “இயேசுகிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலை பலியாக செலுத்தியதன் மூலம் நாம் அனைவருமே தூய்மையாக்கப்பட்டிருக்கிறோம்” (எபி10:10)

இந்த இயேசுவை பின்பற்றும் குறிப்பாக திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருமே கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கெடுக்கின்றனர். ஆக பொதுநிலையினரும்இ குருக்களும் இயேசுவின் குருத்துவத்தில் பங்கெடுக்கின்றனர்.

இயேசு குருக்களை ஏன் ஏற்படுத்தினார்?
குறிப்பாக குருக்களின் பணி என்னும்போது இயேசு தொளிவாக மாற்கு 3: 14-15ல் தம்மோடு இருக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு 12 சீடர்களை தேர்ந்தெடுக்கிறார். இந்த 12 சீடர்களின் வழிவந்தவர்கள் தான் குருக்கள்.

இயேசு ஏன் குருத்துவத்தை ஏற்படுத்தினார்?
01. மக்களை கிறிஸ்துவோடு ஓப்பரவாக்க:
குருக்கள் கிறிஸ்துவின் வழிவந்தவர்கள். “நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்” (2கொரி 5:20). மக்களுக்காக குருக்கள் மன்றாடி அவர்களை ஓப்புரவாக்கும் பணியில் ஈடுபட இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

02. பலிசெலுத்துவதற்காக
“இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று லூக் 22:19-ல் இயேசு கற்பிக்கிறார். ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக ஆண்டவர் விட்டுச்சென்ற நினைவை ஒவ்வொரு குருவும் தம்மையே பலியாகவும், பலிப்பொருளாகவும் மக்களுக்காக கடவுளிடத்தில் ஒப்புக்கொடுக்க இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

03. திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவதற்காக
இயேசு தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி மத்தேயு 28:18-20-ல் “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும் படி கற்பியுங்கள். இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்”.

பிரியமானவர்களே கடவுளே நான் உங்களோடு உலம் முடியும் வரை இருப்பேன் என குருக்களுக்கு கூறுகிறார். ஆனால் இறைமக்களாகிய நாம் குருக்களோடு இருக்கிறோமா? அல்லது அவர்களுக்கு எதிராக இருக்கிறோமா?

இன்றைய குருக்களை பற்றிய மக்களின் சிந்தனை
எங்கோ படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்கிறேன் ஒரு பங்கிலே ஒரு குருவானவர்
திருப்பலியை வரையருக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக தொடங்கிவிட்டார் என்றால் - மக்கள் இவருக்கு வேலையில்லாதவர் அதனல சீக்கிரம் ஆரம்பிக்கிறார்.
திருப்பலியை ஐந்து நிமிடம் தாமதமாக ஆரம்பித்தால் - இவர் மக்களையெல்லாம் காத்திருக்க வைக்கிறார்.
மறையுரையை அதிகமாக கொடுத்தால் - பேசிக்கொண்டே இருக்கிறார்
மறையுரையை கொஞ்சமாக கொடுத்தால் - தயாரிப்பு இல்லாமல் பேசுகிறார்
அவர் கார் வைத்திருந்தால்; - இவர் மிகவும் பணக்காரர்
கார் இல்லையென்றால் - இவர் ஓர் பழமைவாதி
குடும்பங்களை சந்திக்க சென்றால் - இவர் எப்போதும் ஊர் சுற்றுகிறார்
குடும்பங்களை சந்திக்கவில்லை என்றால் - பங்குமக்களுக்கு நேரமே ஒதுக்காதவர்
மக்களிடத்தில் காணிக்கை, நன்கொடை கேட்டால் - இவர் பண பைத்தியம்
மக்களிடத்தில் நன்கொடை கேட்கவில்லையென்றால் - ஏதோவகையில் பணம் புரளுகிறது.
பாவசங்கீர்தனத்தில் அதிகநேரம் எடுத்தால் - யாரும் அவரிடம் செல்வது கிடையாது
பாவசங்கீர்தனத்தை சீக்கிரமாக முடித்தால் - பாவிகள் மீது அக்கரையே இல்லாதவர்
கோவிலை புதுப்பித்தால் - மக்கள் பணத்தை விரயம் செய்பவர்
கோவிலை புதுப்பிக்கவில்லையென்றால் - பங்கின் மீது அக்கரையில்லாதவர்
இளைஞர்களோடு சேர்ந்து இருந்தால் - பெரியவர்களுக்கு மதிப்பளிக்காதவர்
இவரை ஒரு பெண்ணோடு சேர்த்து பார்த்;துவிட்டால் - இவர் கற்பை இழந்தவர்
இவரை சுற்றி ஆண்கள் இருந்தல் - இவர் குடித்து கும்மாளம் அடிப்பவர்
இவர் இளமையாக இருந்தால் - இவருக்கு அனுபவம் போதாது
இவர் வயதானவராக இருந்தால் - இவருக்கெல்லம் ஓய்வு கொடுக்க வேண்டியது தானே

ஆக இந்த குருவானவர் உயிரோடு இருக்கும் வரை இவரைவிட மேலானவர்களைத்தான் மக்கள் தேடுவர். ஆனால் ஒரு குருவானவர் இறந்து விட்டால் அந்த இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. அதனால் தான் குருக்களின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் புனித அசிசி பிரன்சிஸ்.

புனித அசிசி பிரான்சிஸ் தான் உயிரோடு வாழ்ந்தபோதே புனிதராக கருதப்பட்டவர். திருத்தந்தை, கர்தினால், ஆயர்கள், குருக்கள் இவரை சந்திப்பது வழக்கம். ஒருமுறை இவர் வாழ்ந்த பகுதியில் ஒரு பங்கிலே குருவானவர் இருந்தார். இந்த குருவானவர் எப்போதுமே பெண்களோடு இருந்து மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். மக்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் திருந்தவில்லை. ஒரு நாள் மக்கள் அனைவரும் சேர்ந்து அசிசியாரிடம் வந்து அவரைப் பற்றிய புகார்களை அளித்தனர். அசிசியாரும் மக்களை கூட்டிக்கொண்டு அவர் இருக்கும் இடத்திற்கு சென்றார். பங்குத்தந்தையின் கதவை தட்டியபோது பங்குத்தந்தையோடு பெண்கள் இருப்பதையும் கண்டார். உடனே மக்கள் கூட்டம் நிச்சயம் அசிசியார் இந்த பங்குத்தந்தையை ஏதாவது செய்;வார் என்று அனைவரின் கண்களும் அவரைநோக்கி இருந்தன.

உடனே பங்குத்தந்தை வெளியே வந்தார். புனித அசிசியார் அந்த குருவானவரின் காலில் விழுந்து வணங்கினார். பிறகு அவரின் இரண்டு கரங்களையும் சேர்த்து பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கலானார். உடனே அந்த குருவனவர் திகிலடைந்தவராய் என்னசெய்வது என தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். மக்களுக்கும் இவர் செய்தது ஒன்றும் புரியவில்லை. சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கண்ணீரோடு அசிசியார் கூறினார். உங்களை பொருத்தவரையில் இவர் பாவியானவர் ஆனால் என்னைப் பொருத்தவரை இவர் ஒரு மாபெரும் புனிதர். காரணம் இந்த கரங்கள் தான் இயேசுவை ஒவ்வொருநாளும் நமக்கு பெற்றுத்தருகிறது. இந்த கரங்கள் இல்லையென்றால் நமக்கு நற்கருணை கிடையாது. நற்கருணை இல்லையென்றால் இயேசு கிடையாது என கண்ணீர்விட்டு அழுதாராம். உடனே அந்த குருவானவர் தனது பாவநிலயை உணர்ந்து பாவசங்கீர்த்தனம் செய்து கடைசிவரை உத்தம குருவாக வாழ்ந்தாராம். ஆம் அன்புக்குரியவர்களே குருக்களும் உங்களைப்போல சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவர்கள் தான். அவர்களும் உடல் ஆசைகளுக்கும், உலக ஆசைகளுக்கும் அப்பார்பட்டவர்கள் கிடையாது. இவர்கள் புனிதர்களாக வாழ வேண்டும் என்றால் ஒவ்வொரு குடும்பமுமே புனித்தை தங்களது வாழ்வில் கடைபிடிக்கவேண்டும். குடும்பத்தில் புனித தன்மை இருந்தால் நிச்சயம் அந்த குடும்பத்தில் இருந்துவரும் குருவும் புனிதராக இருப்பார்.

எனவே அன்புக்குரியவர்களே இதுநாள் வரை தங்களது செபத்திலும், திருப்பலியிலும் ஒவ்வொரு இறைமக்களுக்காவும் குருக்கள்; செபித்து வருகிறார்கள். ஆனால் இன்று இறைமக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து இன்றைய நாளில் நம்முடைய குருக்களுக்காக ஜெபிக்கவும், அவர்களை வாழ்த்தவும் ஒவ்வெருவருமே கடமைபட்டிருக்கிறோம். நான் உங்களோடு உலம் முடியும் வரை இருப்பேன் என கடவுள் சொன்னது போல இறைமக்களாகிய நாம் அனைவரும் பங்குத்தந்தையோடு சேர்ந்து நாங்களும் இருப்போம் என்ற உறுதியை அவர்களுக்கு அளித்து அவர்களை பாடல் குழுவினரோடு சேர்ந்து வாழ்த்துவோமா!

அனைவரும் எழுந்து நிற்போமா
Happy Feast Day to you… Happy Feast Day to you Dear Father… Happy Feast Day to you…
May the good God Bless you… May the good God Bless you… May the good God bless you dear father… Happy Feast Day to you!