இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு

அத்திமரத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

தானியேல் 12:1-3
எபிரேயர் 10:11-14,18
மாற்கு 13:24-32

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று ஆண்டின் 33-ம் ஞாயிறை நாம் சிறப்பிக்கின்றோம். இன்று பொதுக்காலத்தின் கடைசி ஞாயிறு. இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்முடைய இறுதி காலத்தையும் அதற்கு பிறகு உள்ள வாழ்வையும் நமக்கு படம் பிடித்து காட்டுகின்றது. வாழ்வில் தொடக்கம் சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும். தொடக்கம் தடுமாற்றமாக இருந்தால் முடிவும் தடுமாற்றமாகவே இருக்கும். ஆக நம்முடைய தொடக்கத்தை வைத்து நம்முடைய முடிவுகளை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அன்புக்குரியவர்களே உங்களுடைய தொடக்கம் உங்களுக்கு நன்கு தெரியும். அப்படியானால் உங்களது முடிவு உங்களுக்கு தெரியுமா? அல்லது இறப்பிற்கு பின் நாம் எப்படி இருக்க போகின்றோம் என்றாவது தெரியுமா? மூவொரு இறைவனின் நாமத்தில் இவ்வுலகில் பிறந்த நாம் மூன்று வகையான மனிதர்களாக விண்ணுலகில் நாம் நுழைய முடியும். விண்ணுலகில் நுழைய ஆசையா? நவம்பர் மாதம் இறந்தவார்களுக்காக ஜெபிக்கும் மாதம். நம்மை விட்டு பிரிந்தவர்கள் விண்ணுலகில் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் என அறிந்துகொள்ள ஆசையா? வாருங்கள் இந்தவாரம் அதற்கான சிந்தனையை இன்றைய வாசகங்கள் நமக்கு தருகின்றது.

விண்ணுலகில் நுழையும் மனிதர்கள் எப்படிப்பட்வர்கள்?

01. ஞானிகளாக
02. பலரை நல்வழிக்கு கொணர்ந்தவர்களாக.
03. வானதூதர்களைப்போல.


மண்ணுலகில் பிறந்த நாம் அனைவரும் இந்த மூன்று வகையான மனிதர்களாகத்தான் விண்ணுலகிற்குள் நுழைய முடியும்.

இவர்களைப் போல வாழ ஆண்டவர் அத்திமரத்தை நமக்கு உவமையாக தருகின்றார்.


அத்திமரம்
அன்புக்குரியவர்களே தமிழில் ஒரு விடுகதை உண்டு “கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும்” அது எது? அதுதான் அத்திமரம். அத்திமரம் அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இந்து மதத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் அத்தி வரதராஜ பெருமாள் என்ற கடவுள் நீருக்கு அடியில் கருங்கல்லாலான பாறைக்குள் சயன நிலையில் உள்ளார் இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வெளியே வருவார். கடந்த 2019-ம் ஆண்டு அவரை வெளியே கொண்டு வந்ததையும் அவரைப் பார்க்க மக்கள் அலைமோதியதையும் நாம் பார்த்தோம். ஒருமுறை அந்த அத்திவரதரை வணங்கினால் அவர்மோட்சம் பெறுவர் என்றும், இரண்டுமுறை அவரை வணங்கினால் வைகுணடம் செல்வார்கள் என்று நம்பப்படுகின்றது. அதாவது அத்திமரத்தில் செய்யப்பட்ட கடவுள் சக்தி வாய்ந்தவர் என்பதையும் தண்ணீருக்குள்ளேயே எத்தணை ஆண்டுகள் இருந்தாலும் அந்த மரம் அழிவுறுவதில்லை என்பதையும் நாம் அறிகின்றோம். அத்திமரம் அவ்வளவு உறுதியானது.

அதைப்போலவே இஸ்லாமியர்களின் குர்ஆனில் 95-வது அத்தியாயம் அத்தி என்ற பெயரில் தொடங்குகின்றது. அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்வதாகவும், அதன் கனிகள் மருத்துவ குணம் மிகுந்தது என எடுத்துரைக்கின்றது. அதாவது மனிதன் உண்ணும் பழங்களில் மிக உயர்ந்தது அத்திபழம். அத்திப்பழம் தின்ற நொடியிலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து சீரண மண்டலத்தை சீராக்கும். சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தும். வாய் துர்நாற்றத்தை போக்கும். தலைமுடி வளர உதவும். அத்திமர எண்ணை எண்ணற்ற நன்மைகளை தருகிறது. மேலும் சொர்க்கத்திலே நோயின்றி நலமாக வாழ்வோர் சத்துடைய பழங்களை விரும்பி உண்பர் அதில் விரும்பி உண்ணக்கூடிய பழம் அத்திப்பழம். ஆக அத்திபழம் மருத்துவ குணம் உள்ளதாகவும், செர்க்கததில் உள்ளவர்கள் விரும்பிஉண்ணும் பழமாகவும் இருக்கின்றது என குரான் கூறுகின்றது.

நம்முடைய விவிலியத்தில் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் அத்திமரம் முக்கிய இடத்தைப் பெருகின்றது.
உதாரணமாக நம்முடைய ஆதிப் பெற்றோர் ஆதாம், ஏவள் கடவுளின் கட்டளைகளை மீறி பாவம் செய்தபிறகு தொடக்க நூல் 3 : 7-ல் “அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்”. அத்தி இழை மானம் காப்பாற்றும் மரமாக இருக்கின்றது. புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் இயேசு நத்தானியேலை அத்திமரத்தின் கீழ் நின்றபோது அழைக்கின்றார். யோவான் 1 : 48-ல் நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று இயேசுவிடம் கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். மேலும் மத்தேயு 21 : 19-ல் ஆண்டவர் இயேசுவும் அவருடைய சீடர்களும் சென்றுகொண்டிருந்த போது வழியோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றனர். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல், "இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்" என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்தி மரம் பட்டுப் போயிற்று. மேலும் இன்றயை நற்செய்தியில் மாற்கு 13 : 28-ல் "அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கின்றார். ஆக அத்திமரம் எல்லா மதங்களிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இன்று நீங்களும் நானும் விண்ணக வீட்டில் நுழைய அத்திமரம் ஒரு வாய்க்காலாக இருக்கின்றது.

அத்திமரம் நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மைகள் என்ன?

01. அத்திமரம் அனைத்தையும் தாங்கும் சக்தி பெற்றது
நம்முடைய பண்டைய இதிகாசங்களில் இந்த அத்திமரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக சிலப்பதிகாரத்தில் அத்திமலர் மாலை அணிந்து அடுத்த நாட்டு அரசர்களை வரவேற்றார்கள் என நாம் வாசிக்கின்றோம். இந்த அத்தி மரத்திற்கு மற்றொரு பெயரும் உண்டு. அதாவது அத்திமரம் இடிதாங்கி மரம் என அழைக்கப்படுகின்றது. பொரும்பாலான கோவில்களில் இந்த அத்திமரம் வளர்க்கப்படுகின்றது. அதாவது மழை, இடி, மின்னல் போன்ற காலங்களில் பாதுகாப்பிற்காக மக்கள் கோவிலில் தஞ்சம் அடைவர். அப்போது இடி, மின்னலில் இருந்து இந்த அத்திமரம் படைப்புகளை காப்பாற்றும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இடியை தாங்கும் சக்தி இந்த அத்திமரத்திற்கு உண்டு.

பழைய ஏற்பாட்டில் கடவுள் இஸ்ராயேல் மக்களை இந்த அத்திமரத்திற்கு ஒப்பிடுகின்றனர். இஸ்ராயேல் மக்கள் தங்களது வாழ்வில் நடந்த அனைத்து துன்பங்களையும் தாங்கிக் கொண்டவர்கள். எகிப்தியரின் கொடுமைகள், கடினமான உடல் உழைப்பு, பாலைவனத்தில் கடினமான பயணம் என எல்லா சோதனைகளையும், துன்பங்களையும் தாங்கிக் கொண்டவர்கள் தான் இந்த இஸ்ராயேல் மக்கள். ஓசேயா 9:10-ல் அத்தி பழங்களைப் போல் உங்கள் தந்தையரை கண்டுபிடித்தேன் என்கிறார். இந்த அத்திமரம் குறிப்பாக பாலை நிலங்களில் அதிகம் வளரும். எவ்வளவு வெயிலையும் தாங்கும் வலிமை பெற்றது அதைப்போலவே கடவுளின் பிள்ளைகள் நாமும் நமது அன்றாட சோதனைகளை தாங்கும் வலிமையை இந்த மரத்திலிருந்து பெற்றுக்கொள்வோம்.

02. அத்திமரம் நோய் நீங்கும் மருந்தாக
அத்தி மரத்தின் கனியானது அனைவராலும் விரும்பி சுவைத்து சாப்பிடக்கூடியதாக இருக்கிறது. ஒரு அத்தி மரத்தில் 180 முதல் 300 கனிகள் வரை கிடைக்கும். அத்திமரத்தின் இலை, காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இஸ்லாமியர்களின் குரான் இதன் மருத்துவ பயன்களை கோடிட்டு காட்டுகின்றது. விவிலியத்தில் எசாயா 38 : 21-ல் (2 அரசர்கள் 20 : 7) "எசேக்கியா அரசன் நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்" என்று எசாயா கூற அதன்படியே 15 ஆண்டுகள் தன் வாழும் காலத்தை ஆண்டவர் அவனுக்கு மிகுதிபடுத்துகின்றார்.

மேலும் தாவீதும் அவருடைய படைகளும் மூன்று நாளாய் அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் சோர்ந்துபோய் இருந்த எகிப்திய ஒருவனுக்கு அத்திப்பழ அடையின் ஒருத்துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்கு கொடுத்தனர். அவன் இதை சாப்பிட்டப்பின் புத்துயிர் பெற்றான் 1 சாமுவேல் 30 : 12. ஆக அத்திமரத்தின் கனி நோய்நீக்கும் மருந்தாக பயன்படுகின்றது. நம்முடைய வாழ்வும் மற்றவர்களுக்கு நோய்நீக்கும் மருந்தாக இருக்க வேண்டும்.

03. காய்க்காத அத்திமரம்
ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன், எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் வீணாக அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்றார். தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார். இங்கு கடவுள் தேட்டக்காரராகவும், தொழிலாளர் பரிசுத்த ஆவியாராகவும் செயல்படுகின்றனர். அத்திமரம் மனிதர்களைக் குறிக்கின்றது. கடவுளின் சாயலில் அவரது உயிர் மூச்சை கொண்டு வாழும் நாம் அனைவருமே அன்றாடம் கனிதரும் மரங்களாக வாழ கடவுள் நம்மை அழைக்கின்றார். கனிதாரத அத்திமரம் வெட்டப்படும் அல்லது கடவுளின் சாபத்திற்கு உள்ளாகி பட்டுப்போகும். லூக்கா 13:6-9.

நீதிமொழிகள் 27:18ன் படி “அத்திமரத்தைக் காத்து பேணுகிறவருக்கு அதன் கனி கிடைக்கும்; தம் தலைவரை காத்து பேணுகிறவருக்கு மேன்மை கிடைக்கும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப நாம் அனைவரும் கனிதரும் மரங்களாக இருக்கின்றோமா? அல்லது கடவுளின் சாபத்திற்கு உள்ளாகி வாழ்வை இழக்கப் போகின்றோமா? அப்படி நாம் வாழ்வை இழந்தாலும் நம்முடைய இறப்புக்குப்பின் நம் வாழ்வு எத்தகையதாக இருக்க போகின்றது. சிந்திப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் இறப்பிற்கு பின் மண் புழுதியில் உறங்கும் அனைவருள் பலர் உயிர்தெழுவர்… சிலர் முடிவில்லா வாழ்வைப் பெறுவர்… வேறு சிலரோ வெட்கத்திற்கும், முடிவில்லா இழிவிற்கும் உள்ளாவர் என்று தானியேல் இறைவாக்கினர் கூறுகின்றார். இறப்பிற்கு பிறகு நமக்கு இரண்டு வகையான வாழ்க்கை உண்டு. முதலில் முடிவில்லாத வாழ்வைப் பெறுவோர்; இவர்கள் இரண்டு வகைப்படுவர் ஒன்று ஞானிகளாகவும், பிறரை நல்வழிக்கு கொண்டு வந்தவர்களாகவும் இருப்பர். இரண்டாவது வகையினர் வெட்கத்திற்கும், முடிவில்லாத இழிவிற்கும் உள்ளாவர். இன்று நீங்களும் நானும் முடிவில்லாத வாழ்வை பெறுபவர்களா? அல்லது முடிவில்லாத இழிநிலைக்கு உள்ளாகுபவர்களா?

01. முடிவில்லாத வாழ்வை பெறுபவர்கள் ஞானிகள்.
யாரெல்லாம் ஞானிகள்?
சீராக்கின் ஞானம் 1 : 8 -ல் ஆண்டவரே ஒருவரே ஞானியாவார் எனவே அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் அவர் தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்துகின்றார். திருமுழுக்கு என்ற அருட்சாதனத்தாலும், அன்றாட ஆண்டவரின் திருவிருந்தில் பங்ககொள்ளும் நாம் அனைவரும் ஞானிகளாக வாழ கடவுள் அழைக்கின்றார்.

நாம் ஞானிகளாக வாழ என்னசெய்ய வேண்டும்?

1. ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்குக்கும் எவரும் ஞானியாவர் - நீதிமொழிகள் 3 : 7
2. தம்மிடம் இருக்கும் எதைக்குறித்தும் பெருமை பாராட்டதவர் ஞானியாவர் - எரேமியா 9 : 23
3. கடவுளின் திருவுளத்திற்கு ஏற்பப் பேசுபவரும், சிந்திப்பவரும் ஞானியாவர் - சாலமோனின் ஞானம் 7 : 15
4. பிறருக்குச் செவிசாய்ப்பவர் ஞானியாவர் - சீராக்கின் ஞானம் 6 : 33
5. எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருந்து பாவத்திலிருந்தும், தீச்செயல்களினின்று தம்மை காத்துக் கொள்பவர் ஞானியாவர். சீராக்கின் ஞானம் 18 : 27
6. நாவன்மை படைத்தோர் ஞானியர் ஆகின்றனர் - சீராக்கின் ஞானம் 18 : 29
7. மதுவிற்கும், மாதுவிற்கும் அடிமையாகதவர் ஞானியாவர் . சீராக்கின் ஞானம் 19 : 2
8. அமைதி காப்போர் ஞானியராக எண்ணப்படுகின்றனர்; சீராக்கின் ஞானம் 20 : 5
9. தன் கணவனை மதிக்கும் மனைவியை ஞானி என அனைவரும் கண்டுகொள்வர்; சீராக்கின் ஞானம் 26 : 26
10. இவ்வுலகில் கடவுளுக்காக தங்களையே மடையர்களாக ஆக்கிகொள்பவர்கள் ஞானிகள் ஆவார்கள். 1 கொரிந்தியர் 3 : 18


மேலே சொல்லப்பட்ட 10 வழிகளை நான் கடைபிடிக்கின்றேனா? இந்த வழிகளை கடைபிடித்து இறக்கும் மனிதர்கள் முடிவில்லாத வாழ்வை பெற்றுக் கொள்கின்றனர். இவர்களே ஞானிகள் என்று அழைக்கப்டுகின்றனர். இவர்கள் வானத்தின் பேரொளிளைப் போல இருப்பர்.

இரண்டாவதாக முடிவில்லாத வாழ்வை பெறுபவர்கள்: பிறரை நல்வழிக்கு கொண்டுவந்தவர்கள்

பிறரை நல்வழிக்கு கொண்டுவந்தவர்கள் இவர்களைத்தான் நாம் புனிதர்கள், வணக்கத்துக்குரியவர்கள், போற்றுதற்குரியவர்கள் என நாம் அழைக்கின்றோம். இவர்கள் அனைவரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் கிடையாது. உங்களைப்போல, என்னைப்போல ஒருதாய் வயிற்றில் பிறந்து இவ்வுலகில் வாழ்ந்து தங்களுடைய வாழ்வால், சொல்லால், செயலால் பலரை நல்வழிபடுத்தியவர்கள். இன்று நீங்களும், நானும் நம்மோடு வாழும் மனிதர்களை நல்வழிபடுத்த கடவுள் அழைக்கின்றார்.

புனித மோனிக்காவின் ஜெபம் பாவ வாழ்கை வாழ்ந்த அகுஸ்தீனை புனித அகுஸ்தீனாக மாற்றியது. படித்து பட்டங்கள் பெற்று உலக வாழ்வை வாழ நினைத்த பிரான்சிஸ் சவேரியாரை புனித சவேரியாராக மாற்றியது இன்னாசியாரின் வழிகாட்டுதல். தன்னைப்பற்றியே சிந்தித்து தான் ஒரு மிகப்பெரிய மனிதனாக உலக பார்வையில் வாழவேண்டும் என்று சிந்தித்து அதன் படி வாழ்ந்த பிரான்சிசை இன்று புனித அசிசி நகர பிரான்சிசுவாக மாற்றியது தொழுநோயாளர்களின் வாழ்க்கை!. கல்விக் கண் திறந்த காமராஜர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் இப்படி அன்றாட வாழ்க்கையில் பிறரை நல்வழிக்கு கொண்டுவர நம்மில் எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இன்று அத்தமரத்தில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்ன கடவுள் நம்மையும் அழைக்கின்றார். பிறரை நல்வழிக்கு கொண்டுவர…குருவானவர் என்ற முறையில், பெற்றோர்கள் என்ற முறையில், ஆசிரியர்கள் என்ற முறையில், தலைவர்கள் என்ற முறையில் எத்தனை மனிதர்களை நான் நல் வழிக்கு கொண்டுவந்து இருக்கின்றேன். யோவான் 15 : 8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. அத்திமரம் கனிதர வேண்டும். கனிதராத அத்திமரத்தை களை எடுத்து உரமிட்டு வளர்ப்பதுபோல கடவுளும் யோவான் 15 : 2 நம்மிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிட்டு கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விட தயாராக இருக்கின்றார். இதற்காகவே கடவுள் நம்மை தேர்ந்துகொண்டார். யோவான் 15 : 16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன் என்கிறார்.

அன்புக்குரியவர்களே அபக்கூக்கு 3 : 17 -ல் நாம் வசிப்பதுபோல அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு அத்திமரத்தைப் போலவும், கடவுளின் பார்வையில் ஞானிகளாக வாழ முயற்ச்சிப்போம். சாலமோனின் ஞானம் 6 : 24 ஞானிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே உலகின் மீட்பு அமையும். அதே ஞானிகளைப் பொருத்தே நம்முடைய மீட்பும், நம்குடும்பததினரின் மீட்பும் இருக்கும்.