இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி இரண்டாம் ஞாயிறு

கடவுளுக்கு கணக்கு பார்க்காமல் கொடுங்கள்

1 அரசர்கள் 17:10-16
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44

இறை இயேசு கிறிஸ்துவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று ஆண்டின் பொதுக்காலம் 32 -ம் ஞாயிரை நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தை வழிபாடானது கடவுளுக்கு கொடுப்பதற்கு கணக்கு பார்க்காமல் கொடுக்க அழைப்பு விடுக்கின்றது. அன்புக்குரியவர்களே படைப்புகள் அனைத்துமே கொடுக்கல் - வாங்கல் என்ற நடைமுறையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நாம் ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்தால் அந்தப் பொருளுக்கேற்ற மதிப்பை மறுபடியும் நாம் பெற்றுக் கொள்கின்றோம். உதாரணமாக மனிதர்கள் வேலைக்கு சொல்லுகின்ற பொழுது தங்களுடைய உடல் உழைப்பை கொடுக்கின்றனர் அதன் பயனாக உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்; மனிதர்கள் அனைவரும் சுவாசிக்கும் பொழுது கார்பன்-டை-ஆக்சைடை இயற்கைக்கு கொடுக்கின்றோம் அதன் பயனாக மரங்களிலிருந்து ஆக்ஸிஜனை நாம் பெற்றுக் கொள்கின்றோம். விலங்குகளுக்கு நாம் உணவை கொடுக்கின்றோம் அதன் பயனாக விலங்குகளிடம் இருந்து அன்பை நாம் பெற்றுக் கொள்கின்றோம். இப்படியாக ஒன்றைக் கொடுக்கின்ற பொழுது அதற்கு பயனாக மற்றொன்றை நாம் பெற்றுக் கொள்கின்றோம்.

தூய பிரான்சிஸ் அசிசியாரின் சமாதான ஜெபத்தில் “கொடுக்கும் பொழுது நாம் மிகுதியாக பெறுகிறோம்” என்று ஜெபிக்கிறோம். ஆக கொடுக்கின்ற பொழுதுதான் நாம் மிகுதியாக பெற முடியும். எனவே சாதாரண படைப்புகள் இடத்தில் நாம் ஒன்றை கொடுக்கின்ற போது கொடுப்பதைக் காட்டிலும் மிகுந்த பயனை நாம் பெற்றுக் கொள்கின்றோம். அப்படியானால் இந்த அகில உலகத்தையும் படைத்த அந்த கடவுளிடத்தில் நாம் கொடுக்கின்ற பொழுது இன்னும் அதிகமாகவே நாம் பெற்றுக்கொள்வோம். எனவே கடவுளிடம் கொடுப்பதற்கு கணக்கு பார்க்காமல் கொடுத்தால் கடவுளும் கணக்கு பார்க்காமல் நமக்கு தேவையான ஆசீர்வாதங்களையும், நமக்கு வேண்டிய வரங்களையும் நமக்கு கொடுப்பார் என்ற சிந்தனையில் இன்றைய வார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் எலியா இறைவாக்கினர் சாரிபாத்து என்ற நகரில் ஏழைக் கைம்பெண்ணிடம் எனக்கு கொஞ்சம் தண்ணீரும், அப்பமும் கொண்டு வா என்கின்றார். ஆனால் அந்த கைம்பெண் தன்னுடைய இயலாமையையும், தன்னுடைய ஏழ்மை நிலையையும் வெளிப்படுத்துகின்றார். “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை. பானையில் கையளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளது. நானும் எனது மகனும் சாப்பிட்டுவிட்டு அதன்பின் சாகத்தான் வேண்டும்” என்று கூறுகின்றார். இந்த ஏழை கைம்பெண் தன்னையும், தன்னுடைய மகனையும், தங்களுடைய உயிரையும் கடவுள் மீது ஒப்படைத்துவிட்டு கடவுளின் தூதர் எலியா சொன்னபடியே செய்கின்றார். கடவுளின் தூதர்களுக்கு செய்த உதவி கடவுளுக்கே செய்த உதவி என கருதி அப்பெண் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கின்றார். ஒரு நேரத்திற்கு மட்டுமே இருந்த எண்ணெய்யும், மாவும் பலுகி பெருகி பானையில் இருந்த மாவும் தீரவில்லை; கலயத்தில் இருந்த எண்ணையும் குறையவில்லை. ஆண்டவர் இரட்டிப்பாக ஆசீர்வதிக்கின்றார். திருச்சபை கட்டளையில் கடைசி கட்டளை “நம்மால் முடிந்த உதவிகளை நம் ஞான மேய்ப்பர்களுக்கு செய்ய வேண்டும்” என்பதே. இந்த பெண் தன்னிடமிருந்த அனைத்தையும் ஞான மேய்ப்பரான எலியாவிற்கு செய்கின்றார். கடவுள் அக்குடும்பத்தை ஆசீர்வதிக்கின்றார். இன்று நாமும் நம்மால் இயன்ற உதவிகளை நம் ஞான மேய்ப்பர்களுக்கு கொடுப்போம் கடவுளின் ஆசீர்வாதத்தை இரட்டிப்பாக பெற்றுக்கொள்வோம்.

அன்புக்குரியவர்களே அப்படியே நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து காணிக்கை பெட்டியின் அருகில் அமர்ந்து மக்கள் காணிக்கை போடுவதை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைவரும் தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து கடவுளுக்கு அளந்து காணிக்கை போடுகின்றனர். ஆனால் ஓர் ஏழைக்கைம்பெண்ணும் காணிக்கை போடுகின்றார். இந்த ஏழைக் கைம்பெண்ணோ தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருந்த அனைத்தையுமே கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கின்றார். இந்த பெண்ணைப் பார்த்து இயேசு பாரட்டுகின்றார். நாமும் அன்றாடம் கடவுளுக்கு காணிக்கை செலுத்துகின்றோம். நமது காணிக்கைகளை அளந்து கடவுளுக்கு கொடுக்கின்றோமா? அல்லது கணக்கு பார்க்காமல் நமது காணிக்கையை செலுத்துகின்றோமா?

கடவுளுக்கு கொடுக்கின்ற போது கணக்கு பார்க்காமல் கொடுத்தோம் என்று சொன்னால் கடவுளும் கணக்கு பார்க்காமல் நம்மை ஆசீர்வதிப்பார். அதைத்தான் லூக்கா நற்செய்தி 6:38-ல் “கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; அமுக்கிக் குழுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ அதேஅளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” என்று கடவுள் கூறுகின்றார். இன்று நாம் கொடுக்கின்ற மக்களாக இருக்கின்றோமா? அல்லது பெறுகின்ற மக்களாக இருக்கின்றோமா?

இன்றைய உலகத்தில் கொடுப்பவர்களை காட்டிலும் பெறுகின்ற மக்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். ஆனால் கடவுள் நம் ஒவ்வொருவரையும் கொடுக்க அழைப்பு விடுக்கின்றார். நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு வகையில் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். நாம் கொடுக்க கூடியது கணக்கு பார்த்து கொடுக்கின்றோமா? அல்லது கணக்கு பார்க்காமல் கொடுக்கின்றோமா?

எதையெல்லாம் நாம் கடவுளுக்கு கொடுக்க முடியும்?
அன்புக்குரியவர்களே நம்மிடம் இருப்பது அனைத்தும் கடவுள் நமக்கு கொடுத்தது. நம்முடைய வேலை, பணம், உடல் ஆரோக்கியம், குழந்தைகள், பட்டம், பதவி, திறமைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் கொடுத்ததையே அவருக்கு கொடுப்பதில் எந்தவித சந்தோசமும் அவருக்கு இருக்காது. ஆனால் நம்மிடம் உள்ளதை அவருக்கு கொடுக்கும் போது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.

01. முதலில் நம்முடைய நேரம்
நம்முடைய நேரமானது நமக்கானது. இந்த நேரத்தை நாம் கடவுளுக்காக செலவிடும் போது நிச்சயம் அவர் மகிழ்சியடைவார். ஆண்டவர் இயேசு வாழ்ந்த போது தன்னுடைய நேரத்தை கடவுளுக்கு கொடுத்தார். இரவு நேரங்களில் தனிமையான இடங்களுக்குச்சென்று தன்னுடைய நேரத்தை கடவுளோடு செலவழித்தார். எனவே கடவுளும் அவரை எப்பெயருக்கும் மேலாக உயர்த்தினார். விண்ணவர், மண்ணவர், மேலுலகோர், கீழுலகோர் என அனைவரும் அவருக்கு முன் மண்டியிட்டு ஆராதிக்கும் அளவிற்கு கடவுள் இயேசுவை உயர்த்தினார். ஆங்கிலத்தில் ஒரு கூற்றை அழகாக கூறுவர் “God does not want our ability or inability but He wants our availability” ஆதவது கடவுளுக்கு நம்முடைய திறமைகள் தேவைப்படாது ஆனால் நம்முடைய நேரங்கள் அவருக்கு தேவைப்படுகின்றது.

கடவுள் நம்மை காப்பாற்ற, வழிநடத்த, பாதுகாக்க அவர் தன்னுடைய நேரத்தை நமக்கு செலவிடுகின்றார். இன்று நாம் அவருக்கான நேரத்தை செலவிடுகின்றோமா? ஞாயிற்றுக்கிழமை கடவுளுக்கான நாள் நம்மில் எத்தனை பேர் குடும்பமாக வந்து நம்முடைய நேரத்தை கடவுளுக்கு செலுத்துகின்றோம்? எத்தனை குடும்பங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள், பெரியோர்கள் என அமர்ந்து குடும்ப ஜெபத்தை கடவுளுக்காக ஜெபிக்கின்றோம்? திருவெளிப்பாடு 3:20-ல் “நான் கதவருகே நின்றுகொண்டு தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு தங்குவேன் (உணவு அருந்துவேன்); அவர்களும் என்னோடு தங்குவார்கள் (உணவு அருந்துவார்கள்)”. அன்புக்குரியவர்களே கடவுளுக்கான நேரத்தை நாம் ஒதுக்குவோம். கடவுளும் நம்மை ஆசீர்வதிப்பார்.

2. நாம் செய்த பாவங்கள்
இரண்டாவதாக நாம் செய்யும் பாவங்கள் நம்மைச் சார்ந்தவை. நாம்மை சார்ந்த பாவத்தை கடவுளிடம் அறிக்கையிட்டு காணிக்கையாக்குவோம். கடவுள் நம் பாவங்களை மன்னித்து அவருடைய பிள்ளைகளாக மாற்றுவார். காரணம் ஆண்டவர் இயேசு “நான் நேர்மையாளர்களை அல்ல; பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார். இந்த இயேசுவிடம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்ளும் போது நம்மை தூய்மை படுத்துகின்றார். 1யோவான் 1:9-ல் “பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்” மேலும் நம்முடைய கடவுள் இரக்கமிகுந்தவர் என்பதை எபிரேயர் 8:12-ல் “அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்" என்கிறார். கணக்கு பார்க்காத கடவுள் நம்முடைய கணக்கிலடங்காத பாவங்களையும் மன்னிக்கின்றார். எனவே கணக்குப் பார்க்காமல் கடவுளுக்கு நம்மையே காணிக்கையாக்குவோம்.

03. ஏழைகளுக்கு உதவுதல்
மேலே கூறப்பட்ட இரண்டும் நம்மிடம் உள்ளதை கடவுளுக்கு நாம்மால் கொடுக்க முடியும். ஏழைகளுக்கு உதவுவது என்பது கடவுள் நமக்கு கொடுத்த கொடைகளிலிருந்து கொடுப்பது. இணைச் சட்டம் 15 : 11 “உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக்கட்டளையிட்டுச் சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற” என்கிறார் ஆண்டவர்.

ஏன் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்?
நீதிமொழிகள் 19 : 17-ல் “ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார். மேலும் நீதிமொழிகள் 28 : 27-ல் ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார். அதைப்போலவே சீராக்கின் ஞானம் 7 : 32-ல் ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு; இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும்; கடைசியாக ஆண்டவர் இயேசு லூக்காஸ் 6 : 20-ல் "ஏழைகளேஇ நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே என்றார். ஆக ஏழைகளுக்கு கொடுப்பது கடவுளுக்கு கொடுப்பதற்கு சமம் இதனால் கொடுத்ததை இரண்டுமடங்காக நாம் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு இறையாசீர் நம்மீது முழுமையாக தங்கும்.

எனவே அன்புக்குரியவர்களே இந்தவாரம் முழுவதும் கடவுளுக்கு காணிக்கை செலுத்த வரும்போது கணக்கு பார்த்து காணிக்கைகளைச் செலுத்துகின்றோமா? அல்லது மனமுவந்து கணக்கில்லாமல் நாம் உதவி செய்கின்றோமா? எந்த அளவையால் நாம் அளக்கின்றோமோ அதேஅளவையால் கடவுள் நமக்கும் அளப்பார் என்பதை அறிந்து கொடுப்போம் அதுவும் மிகுதியாக கொடுப்போம். கொடுப்பதை இரண்டு மடங்காக பெற்றுக்கொள்வோம்.