இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

அழைக்கப்பட்டவர்களுக்கு உயிர் முக்கியமா? அல்லது உணவு முக்கியமா?

1 அரசர் 19:4-8
எபேசியர் 4:30:5:2
யோவான் 6 :41-51

அழைக்கப்பட்டவர்களுக்கு முக்கியம் உணவா? உயிரா? இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! மனிதர்களுக்கு முக்கியம் உணவா? உயிரா? அனைவரும் உயிர் என்று தான் கூறுவோம். அதுவே கடவுளால் அழைக்கப்பட்டவர்களுக்கு உயிர் முக்கியமா? அல்லது உணவு முக்கியமா? சற்று சிந்திப்போம். இன்றைய வார்த்தை வழிபாடு நம் வாழ்க்கைக்கு எது முக்கியம்; எதை தேடி நாம் செல்ல வேண்டும் என நமக்கு உணர்த்துகின்றது.

விவிலியத்தில் தொடக்கமுதல் கடைசி வரை உணவின் முக்கியத்துவத்தைப்பற்றி பேசுகின்றது.
தொடக்கநூல் 1:29-ல் கடவுள் "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்” என்றார். இன்றைய நற்செய்தியில் "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறகின்றார். திருவெளிப்பாடு 3 : 20-ல் “இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்” என்கிறார். உணவின் முக்கியத்துவத்தை விவிலியம் முழுவதும் நாம் அறிந்து கொள்ளலாம். அதேவேளையில் நமக்கு உயிரும் மிக முக்கியம் தான். உயிர் இருந்தால் தானே உணவு உண்ண முடியும். ஒருபுறம் இது உண்மையாக இருந்தாலும் இன்றைய சூழலில் உயிரை காத்துக்கொள்ள உணவை தேடும் மக்கள் ஒருபுறம், உணவிற்காக உயிரையே துட்சமென கருதும் மக்கள் மற்றொரு புறம். இவை இரண்டிற்கும் மத்தியில் நீங்களும் நானும் எதைதேடி அழைகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் எலியா இறைவாக்கினர் உயிருக்கு பயந்து ஒடுகின்றார். காரணம் கார்மேல் மலையில் எலியா செய்த அனைத்தையும் குறிப்பாக பொய்இறைவாக்கினர் அனைவரையும் அவர் வாளினால் கொன்றதை ஆகாபு அரசன், அரசி ஈசபேலுக்குத் தெரிவித்தான். இதையறிந்த அரசி ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி,
"நீ அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும்" என்று கூற கடவுளின் இறைவாக்கினர் எலியா அச்சமுற்று, தம் உயிரைக் காத்துக் கொள்ளுமாறு யூதாவிலிருந்து பாலை நிலத்திற்கு தப்பி ஓடி ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்; "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக் கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல” அன்புக்குரியவர்களே ஒருவர் உயிருக்கு பயந்து தப்பித்து ஓடுகின்றார். ஆனால் அவர் வேண்டுவது என்ன? ஆண்டவரே எனது உயிரை எடுத்துக்கொள்ளும். உயிரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஏன் இவர் இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்? ஈசபேல் அரசிக்கு பயந்து ஏன் ஓடி ஒளியவேண்டும்?

உயிருக்கு பயந்த ஓடிய மனிதர் இப்போது தன்னுடைய உயிரை துட்சமென கருதுகின்றார். எப்போது தன்னுடைய உயிரை ஒரு பொருட்டாக கருதாமல் கடவுளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாரோ அந்நேரமே கடவுளின் துதர்கள் அவருடைய உயிரை காக்க உதவவில்லை மாறாக உணவை கொடுத்து திடப்படுத்துகின்றனர். நீர் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் எழுந்து சாப்பிடு என கடவுளின் தூதர் திடப்படுத்துகின்றார். அந்நிமிடமே எலிய கடவுளின் உணவால் ஊட்டம் பெறுகின்றார் எதிரிகளை முறியடிக்க புறப்படுகின்றார். இதைத்தான்
லூக்கா 10: 4-ல் “இயேசு நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்; உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்”. உயிருக்கு பயந்து ஓடிய எலியா கடவுளின் உணவால் திடப்படுத்தப்படுகின்றார். இப்பொழுது கூறுங்கள் அழைக்கப்பட்டவர்களுக்கு உயிர் முக்கியமா? அல்லது உணவு முக்கியமா? நமது திருஅவை கூறுவதுபோல மறைசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து. ஆக கடவுளின் பணியை செய்பவர்களுக்கு உயிர் முக்கியம் அல்ல; மாறக கடவுளின் பணியை திறம்பட செய்ய திடமான உணவுதான் முக்கியம்.

கடவுளின் பணி செய்ய எந்த உணவு முக்கியம்? கடவுள் தரும் உணவு முக்கியமா? அல்லது கலப்பை தரும் உணவு முக்கியமா?
கலப்பை தரும் உணவு என்பது விவசாயத்தில் இருந்து வரும் உணவு. இந்த உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஆனால் கடவுள் தரும் உணவு உடலுக்கும் ஆன்மாவிற்கும் வல்லமையைத்தரும். யோவான் 6: 26 “இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார். கலப்பை தரும் உணவு இன்றிலிருந்து நாளைக்கு அழிந்து போகக்கூடியது. ஆனால் கடவுள் தரும் உணவோ என்றும் அழியாதது. ஆக அழிந்து போகும் உணவிற்காக உழைக்கின்றோமா? அல்லது அழியாத கடவுள் தரும் உணவிற்காக உழைக்கின்றோமா?

கடவுள் தரும் அழியாத உணவு எது?
மண்ணில் இருந்து உருவாகும் உணவு அழிந்துவிடும் என்றால் அழியாத உணவு எங்கிருந்து வரும்? அது அழியாத விண்ணுலகில் இருந்து தான் வரமுடியும். அதானால்த்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் “விண்ணிலிருந்து இறங்கிவந்த உயிருள்ள உணவு நானே இதை உண்பவர் என்றுமே வாழ்வர்”. எனவே கடவுள் தரும் அழியாத உணவு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவேயாகும். இதைத்தான் விடுதலைப்பயணம் 3:14-ல் “இருக்கின்றவராக இருக்கிறவர் நானே” என்று கடவுள் தன்னுடைய அழியாத்தன்மையை எடுத்துரைக்கின்றார். நம்முடைய கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வேரின் கடவுள். இதை வழியுருத்தும் வண்ணமாக யோவான் 6: 57-ல் வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58 உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்” என்று தன்னுடைய உடலை உணவாக கொடுக்கின்றார். 55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்” என்கிறார்.

கடவுள் தரும் அழியாத உணவு ஆண்டவரது உடல். அதுவே நற்கருணை என்று நாம் அழைக்கின்றோம். நற்கருணை என்பது அழியாத கடவுளின் பிரசன்னமாக விளங்குகின்றது. நற்கருணைப் பற்றிய புதுமைகள் நிறைய உள்ளன. உதாரணமாக பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குறிய மார்த்தே ராபின் என்பவர் 1918-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்படுகின்றார். இந்நோயினால் கோமா நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஓரண்ட அல்ல இரண்டு ஆண்டுகள் அல்ல கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாகவே இருக்கின்றார். இந்த 60 ஆண்டுகளும் அவர் உயிர் வாழ்ந்தது ஒற்றை நற்கருணையால் மட்டுமே!. 1981 ஆண்டு பிப்ரவரி மாதம் இறக்கின்றார்.

அதைப்போலவே புனித சியென்னா கேத்தரின் தனது வாழ்வின் கடைசி சில வருடங்களில் நற்கருணையை உட்கொண்டு மட்டுமே உயிர் வாழ்ந்தார். அவருடைய சகோதரிகளும். அவருடைய அம்மாவும் அவரை சாப்பிட வைக்க முயற்சித்தார்கள், ஆனால் அது அவரை மிகவும் நோய்வாய்ப்படுத்தியது. என நற்கருணை மட்டுமே அவருக்கு போதும் என முடிவு செய்து அன்றாடம் நற்கருனையை மட்டுமே உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். நற்கருணை உண்மையான உணவு. அதுவே அழியாத உணவு. இதுவே அழைக்கப்பட்டவர்களுக்கான உண்மையான உனவு.


இயேசு உட்கொண்ட உணவு எது?
வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப நம்மோடு வாழ்ந்த இயேசு மனிதரும் கடவுளுமானவர் உட்கொண்ட உணவு எது? யோவான் 4:32-ல் சமாரியப் பெண்ணிடம் இயேசு உரையாடிக் கொண்டிருப்பார். திரும்பி வந்த சீடர்களிடம் இயேசு "நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது" என்றார். 33 "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ" என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 34 இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார். இயேசு உண்ட உணவு முதலில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது இரண்டாவது கடவுள் அவரிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பது. கடவுளால் அழைக்கப்பட்ட நாமும் கடவுள் தரும் அழியாத உணவை தேடி உட்கொள்வோம்.

மனிதர்கள் ஏன் கடவுள் தரும் உணவை உட்கொள்ள வேண்டும்?
1. இழந்துபோன கடவுளின் சாயலை புதுப்பிக்க:
மனிதர்களை கடவுள் படைக்கும்போது தன்னுடைய சாயலிலும், உருவத்திலும் படைத்தார். எனவே கடவுளின் சாயலை பெற்றுக்கொண்டவர்கள் கடவுள் தரும் உணவையே உட்கொள்ள வேண்டும். ஆதிப்பெற்றோரின் கீழ்படியாமையால் கடவுளுக்கு எதிராக குற்றம் புரிந்து கடவுளின் சாயலை இழக்கின்றனர். இழந்து போன கடவுளின் சாயலை மீட்டெடுக்க கடவுளே மனிதராக இவ்வுலகிற்கு வந்து தன்னுடைய சதையையும், இரத்தத்தையும் கொடுத்து மனித குலத்தை மீட்டெடுக்கின்றார். எனவே தான் கடவுளின் உணவு அழியாத உணவாக இவ்வுலகில் இருக்கின்றது. அழியாத உணவாக இருப்பதால்த்தான் நாமும் சரி, நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களும், நமக்கு பின் வருபவர்களும் அவரை உண்டு இழந்துபோன கடவுளின் சாயலை புதுப்பித்துக் கொள்கின்றோம். எனவே இழந்துபோன கடவுளின் சாயலை புதுப்பிக்க மனிதர்கள் அனைவரும் கடவுள் தரும் உணவை உட்கொள்ள வேண்டும்.
2. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற:
பிரியமானவர்களே கடவுள் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் கடவுள் தன்னுடைய திருவுளத்தை வெளிப்படுத்தியுள்ளார். மத்தேயு 18 : 14 இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம். யோவான் 6 : 39 "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். யோவான் 6 : 40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.1 தெசலோனிக்கர் 4 : 3 நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்; 1 தெசலோனிக்கர் 5 : 18 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. கடவுள் எனக்கு வெளிப்படுத்திய திருவுளம் என்ன? உதாரணமாக அன்னை மரியாவுக்கு “கன்னி கருவுற்று மகனை பெற்றெடுப்பீர்” என கடவுளின் திருவுளம் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது. அசிசி பிரான்சிசுக்கு “உடைந்து விழும் எனது ஆலயத்தை பழுதுபார்” என கடவுளின் திருவுளம் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது. தூய ஜான் மரிய வியானிக்கு “ஒப்புரவு அருட்சாதனம் வழியாக ஆன்மாக்களை கடவுளிடம் கொண்டு சேர்” என கடவுளின் திருவுளம் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது. கடவுளின் திருவுளத்தை அறிந்த ஒவ்வொருவரும் அதற்கேற்ப தங்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தனர். இன்று கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப வாழ கடவுள் தரும் உணவை உட்கொண்டு ஊட்டம் பெருவோம்.
3. கடவுள் தந்த வேலையை செய்து முடிக்க
படைப்புகள் அனைத்தும் அன்றாடம் தங்களுடைய வேலைகளை செய்கின்றன. தங்களது வேலைக்கு மத்தியில் கடவுளின் வேலையை செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். கடவுள் நமக்கு கொடுத்துள்ள வேலைகள் என்ன? உதாரணமாக எபேசியர் 4: 11-ல் அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும் ஏற்படுத்தினார். 12 திருத்தொண்டாற்றவும், இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் கடவுள் இவர்களை ஏற்படுத்தினார். ஆக கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வேலைகளை கொடுத்துள்ளார். பெற்றோராக, ஆசிரியராக, மாணவர்களாக, பிள்ளைகளாக, அரசு அதிகரிகளாக, அருட்பணியாளர்களாக… இந்த கடவுள் தந்த பணியை நம்மால் முழுமையாக செய்ய முடிகின்றதா? கடவுள் தந்த பணியை முழுமையாக நிறைவேற்ற கடவுளின் திடப்படுத்தும் உணவு நமக்கு தேவை.
அன்புக்குரியவர்களே உயிர் வாழ உணவு தேவை; உயிரையும் ஆன்மாவையும் அழியாமல் பாதுகாக்க கடவுளின் உணவு நமக்கு தேவை. கடவுள் தந்த மன்னா என்ற உணவை உட்கொண்டு பாலைநிலத்தில் உயிர் வாழந்தனர் இஸ்ராயேல் மக்கள். ஆனால் நமக்கு கடவுளே உணவாக அன்றாம் நம்மை தேடி வருகின்றார். எனவே அழைக்கப்பட்ட நாம் அனைவரும் அழிந்து போகும் உயிரை காத்துக் கொள்வதைவிட அழியாத உணவிற்காக உழைப்போம். நற்கருணையால் ஊட்டம் பெருவோம். உயிரை துட்சமென கருதுவோம். நற்கருணை ஆண்டவர் ஒவ்வொருநாளும் நம்மை திடப்படுத்துவாராக!