இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

வலுவின்மையில் வெளிப்படும் கடவுளின் வல்லமை

எசேக்கியேல் 2:2-5
2 கொரிந்தியர் 12:7-10
மாற்கு 6:1-6

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே “கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார்” 1 கொரிந்தியர் 1: 27. இன்று கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் வலுவுள்ளவர்களா? அல்லது வலுவற்றவர்களா? ஒருகாலத்தில் இஸ்ராயேல் மக்கள் வலுவற்றவர்களாக எகிப்திலே இருந்தபோது கடவுள் அவர்களை உடன்படிக்கை வழியாக தன்னுடைய பிள்ளைகளாக தேர்ந்துகொண்டார். வலுவற்ற மக்களை தன்னுடைய ஆசீரல் நிரப்பி வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றார். வலிமையைப் பெற்ற மக்கள் தங்களுடைய சுயநலத்தால் கடவுளின் வல்லமையை இழக்கின்றனர்.

இரண்டாம்வாசகத்தில் தூய பவுல் தன்னுடைய அழைப்புக்கு முன் உலக தன்மையில் வலுவுள்ளவராக இருக்கின்றார். அவரது வல்லமையில் நம்பிக்கை வைத்து கிறித்தவர்களை துன்புறுத்துகின்றார், கொலைசெய்கின்றார், கிறித்தவத்தை அழிக்க முயற்ச்சிக்கின்றார். அவருடைய வல்லமை தமஸ்கு நகருக்கு செல்லும் வழியில் வலுவின்மையாக மாறுகிறது. இந்த அவரது வலுவின்மை கடவுளின் அருளை நிரப்பும் வாய்க்காலாக அமைகின்றது. அதனால்த்தான் உலக மக்கள் அனைவரும் தங்களுடைய வல்லமையை போற்றி புகழும் போது தூய பவுல் தன்னுடைய வலுவின்மையில் பெருமை கொள்கின்றார். நற்செய்தியில் இயேசு தச்சருடைய மகனாக இருந்தாலும் கடவுளின் வல்லமையால் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்கின்றார். இன்று என்னுடைய வல்லமையும், வலுவின்மையும் எது? வலுவின்மையில் வல்லமை பெற நம்மை சுய ஆய்வு செய்வோமா?


ஒருமிகப்பெரிய கம்பெனியின் நேர்முகத் தேர்வுக்கு பலரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளையும், படிப்பையும், இலட்சியத்தையும் விதவிதமாக விளக்கிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் நிர்வாகி நிராகரித்தக் கொண்டே இருந்தார். சுந்தர் என்பவர் உள்ளே நுழைகின்றார். இவர் தன்னுடைய வலுவின்மையை முதலில் குறிப்பிடுகின்றார். அதைத்தொடர்ந்து தன்னுடைய வலுவின்மையிலிருந்து தன்னுடைய கடின முயற்ச்சியால் முன்னேறி இருப்பதாககூறி தன்னுடைய திறமைகள், இலட்சியங்களை குறிப்பிடுகின்றார். இதைக்கேட்க அந்த கம்பெனியின் நிர்வாகி அவரை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

இந்த நேர்காணலில் பங்கு கொண்ட அனைவரும் தங்களுடைய திறமையில் நம்பிக்கை வைத்து தங்களை பற்றி தம்பட்டம் அடித்தனர். ஆனால் குமார் தன்னுடைய வலுவின்மையைக் கண்டுனர்ந்து தன்னுடைய விடா முயற்சியால் முன்னேறியுள்ளார். இவர் தான் இந்த வேலைக்கு தகுதியானவர். எவர் ஒருவர் தன்னுடைய வல்லமையையும், வலுவின்மையையும் அறிந்து இருக்கின்றாரோ அவர் மட்டுமே மற்றவர்களின் வலுவின்மையில் அவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி தொழிளாளர்களையும், இந்த கம்பெனியையும் முன்னேற்ற முடியும் என்றார். வலுவின்மையில் தான் வல்லமை வெளிப்படுகின்றது.


மனிதர்களின் வலுவின்மையை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
உடல் வலுவின்மை, மன வலுவின்மை, ஆன்மீக வலுவின்மை.

உடல் வலுவின்மையில் வெளிப்பட்ட கடவுளின் வல்லமை
அன்புக்குரியவர்களே மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்து எது? மனிதர்களின் உடல் ஆரோக்கியமே அவனது மிகப்பெரிய சொத்து ஆகும். அதைத்தான் ஆங்கிலத்தில் “Health is Wealth” எனக் கூறுவர். இந்த கொரோனா காலக்கட்டங்களில் அனைத்து மக்களும் உடல் ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து என பலரும் உணர்ந்திருக்கின்றனர். எவ்வளவு பணம், பேரும், புகழும் இருந்தாலும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் சேர்த்து வைத்த செல்வம், சொத்து, மதிப்பு எதுவும் அவர்களுக்கு உதவவில்லை மாறக உடல் ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து என கொரோன நமக்கு உணர வைத்தது.

உடல் வல்லமையை இழக்கும்போது பல்வேறு சிக்கலுக்கு நாம் உள்ளாகின்றோம். உடலில் வலுவின்மையைப் பெற்ற மனிதர்கள் கடவுளை நாடும்போது கடவுளின் வல்லமை அவர்கள் மீது வெளிப்படுவதை விவிலியம் நமக்கு கூறுகின்றது.


உதாரணமாக சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான். இவர் சிரியா நாட்டில் மிகப்பெரிய வல்லமை உடையவராக இருந்தவர். இவர் வலிமைமிக்க வீரர், படைகளை வழிநடத்தும் தலைவன், தேசத்தில் பெரிய அந்தஸ்தை பெற்றவன். நாமான் மூலமாக சிரியா நாடு எதிரிகளிடமிருந்து வெற்றியைப் பெற்றது. எனவே சிரியா நாட்டு அரசனின் சிறப்பையும், நன்மதிப்பையும் நாமான் பெற்றிருந்தார். மிகப்பெரிய திறமைசாலியாக இருந்தவர். இவ்வளவு வல்லமையை பெற்றிருந்த நாமான் ஒரு தொழுநோயாளி. பேரும் புகழும் கொண்ட நாமானுக்கு கடவுள் தொழுநேயைக் கொடுத்திருந்தார். இவருடைய வலுவின்மையில் கடவுளை நாடிய பொழுது கடவுளின் வல்லமை இவரில் வெளிப்படுகின்றது. 2 அரசர் 5.

கடவுள் தன்னுடைய அருளை எங்கே வைத்திருக்கின்றார் தெரியுமா?
2 கொரிந்தியர் 4:7-ல் “இந்தச் செல்வத்தை (கடவுளின் அருளை) மண்பாண்டங்கள் போன்று நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது”. கடவுள் தன்னுடைய அருளை மண்பாண்டம் போன்று எளிதில் உடையக்கூடிய பாத்திரத்தில் வைத்திருக்கின்றார். திறமைசாலியாக இருந்த நாமான் தொழுநோய் என்ற உடல் நோயினால் துன்படுகின்றான். ஒருபுறம் அவனுடைய திறமைகள் அவரது வல்லமையை காண்பித்துக் கொண்டிருந்தது. மறுபுறம் மண்பாண்டம் போன்று எளிதில் அழிந்து போக்ககூடிய அவரது உடலில் தொழுநோய் என்ற அவரது வலுவின்மையை கடவுள் வைத்திருந்தார். தொழுநோயினால் அழிந்து கொண்டிருந்த அவரது உடல் தன் வீட்டில் வேலை செய்யும் மனிதர்கள் வழியாக அவரது வலுவின்மை புதுப்பிக்கப்படுகின்றது.

2 கொரிந்தியர் 4:16-வது இறைவார்த்தை “எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனந்தளருவதில்லை”. எனவே வலுவின்மையில் இருந்த நாமான் யோர்தான் ஆற்றில்ஏழு முறை முழ்கி எழுகின்றான். கடவுளின் வல்லமையாகிய உடல் நலத்தை பெற்றுக் கொள்கின்றான். தன்னுடைய வல்லமையில் பெருமை பாராட்டிக் கொண்டிருந்த மனிதன் வலுவின்மையில் தன்னையே தாழ்த்துகின்றான். அவரது வலுவின்மை அவருக்கு வல்லமையாக மாறுகின்றது. பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் இயேசுவும் அவருடைய சீடர்களும் கண்கின்றனர். "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று கேட்ட சீடர்களுக்கு இயேசு மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார் யோவன் 9:1-3. இன்றும் உடல் நோயினால் அன்றாடம் வருந்தும் மக்களைப் பார்த்து வல்லமை குன்றியவர்களே கடவுள் உங்களது வலுவின்மையை மாற்றி உடல் ஆரோக்கியம் என்ற வல்லமையை தர தயாராக இருக்கின்றார். எனவே மனித வல்லமையில் நாம் பெருமை பாராட்டாமல் நம்மையே தாழ்த்துவோம் அவரது வல்லமையில் உயர்வோம். கடவுளின் அருள் நமக்கு போதும்.

மனம் வலுவின்மை அல்லது மனச்சோர்வு
உடல் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள் கூட இன்று மனம் வலுவிலந்து காணப்படுகின்றனர். மனம் வலுவின்மைக்கு காரணம் மனச் சோர்வு. மன சோர்வு என்பது இயற்க்கையான விசயம். ஒரிரு நாட்களுக்குள் அது சரியாகி விடும். இந்த மனசோர்வை கடவுள் முதல் கல்லறை செல்லும் மனிதர்கள் வரை அனுபவித்து இருக்கின்றனர். உதாரணமாக தொடக்க நூல் 6 : 6-ல் “மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”. 1 சாமுவேல் 28 : 5 பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்; அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது. ஆண்டவர் இயேசுவும் மனச்சோர்வுக்கு விதிவிலக்கல்ல. மத்தேயு 26 : 38-ல் "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது” என்கிறார். ஆக உள்ளத்துயரம் நம்மை வலுவின்மைக்கு இட்டுச்செல்கின்றது. ஆனால் இன்றைய சூழலில் மனசோர்வு என்பது பல மனிதர்களுக்கு நோயாகவே மாறிவருகின்றது. இந்த மனச்சோர்வில் தான் கடவுளின் வல்லமை வெளிப்படுகிறது.

மனச்சோர்வுக்காண காரணம் எது?
மனசோர்வுக்கான காரணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். உடல் நோய்கள் மனசோர்வுக்கு காரணமாக அமைகிறது. யோபுவின் வாழ்வில் அவரது உடல் நோய்கள் அவரை மனசோர்வுக்கு இட்டுச்செல்கின்றது. அதனால்த் தான் பிறந்த நாளை சபிப்பதை பார்க்கலாம் (யோபு 3).

உறவுகளும், உயிர் காக்கும் மருத்துவமும் கைவிடப்பட்ட நிலையில் ஏற்படும் தனிமை மனசோர்வுக்கு இட்டுச்செல்கின்றது. மற்கு நற்செய்தி 5: 25-29 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது. இவருக்கு இருந்த உறவுகள் இவரை தனிமைபடுத்துகின்றது, இவரிடம் இருந்த சொத்து, பணம் அனைத்தையும் செலவழிக்கின்றார். எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மனச்சோர்வுக்கு ஆளாகின்றார்.


மனச்சோர்வில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்?
மனச்சோர்வில் இருந்து வெளிவர அவரது நம்பிக்கையும், உறவினர்களின் ஆறுதலான பேச்சும், கடவுளின் வல்லமை இவை மூன்றும் ஒருவரை மனச்சோர்வில் இருந்து வெளிக்கொணரும். யோபுவின் நம்பிக்கையும், 18 ஆண்களாக துன்பப்பட்ட பெண்ணும் நம்பிக்கையை கைவிடவில்லை. எனவேதான் யோபு 5:18-ல் “காயப்படுத்தினாலும், கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே” என்ற நம்பிக்கையில் வாழ்கின்றனர். அந்த பெண்னோ இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக் கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில் "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் நம்பிக் கொண்டிருந்தார். மக்களின் மனவலுவின்மையில் கடவுளின் அருள் வெளிப்படுகின்றது. எனவே மனம் தளராது இருப்போம். மனம் தளர்ந்து போய் இருந்த தூய பவுலுக்கும் கடவுள் எனது அருள் உனக்கு போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என கடவுள் அவரை தேற்றுகின்றார். நம்மை தேற்றும் இறைவன் நம்மோடு இருப்பதால் வல்லமை பெறுவோம்.

ஆன்மீக வலுவின்மை
அன்புக்குரியவர்களே உடலும் மனமும் வல்லமையை இழக்கும்போது ஆன்மீகத்தில் நாம் தளர்ந்து விடுகின்றோம். காரணம் அனைத்தும் கைவிடப்பட்ட சூழலில் கடவுளும் நம்மை கைநெகிழ்ந்து விட்டாரோ என்ற ஏக்கம் ஆன்மீக தளர்ச்சிக்கு காரணமாகின்றது. கடவுள் தான் படைத்த மக்களோடு
“நீங்கள் என் மக்கள்; நான் உங்கள் கடவுள்” என உடன்படிக்கை ஏற்படுத்துகின்றார் வி.ப 6:7, எசேக் 36:28, எரே 30:22, 2கொரி6:16. ஆனால் கடவுளின் மக்கள் கடவுளின் உடன்படிக்கையை மீறும் போதெல்லாம் இஸ்ராயேல் மக்கள் ஆன்மீக வலுவின்மைக்குச் செல்கின்றனர். ஆனால் கடவுள் அவர்களது வலுவின்மையை வலிமையாக மாற்றுகின்றார்.

உதாரணமாக, இஸ்ராயேல் மக்கள் யாவே கடவுளை மறந்து பாகாலுக்கு பலிபீடம் கட்டி வணங்குகின்றனர். ஆண்டவரின் பார்வையில் தீயதை செய்கின்றனர் நீ.த 6:1. கடவுள் இஸ்ராயேல் மக்களை வலுப்படுத்த வலுக்குறைந்த மனசே குடும்பத்தில் இருந்து கிதியோனை அழைக்கின்றார் நீ.த 5:15. இந்த கிதியோன் பாகாலின் பீடத்தை உடைத்தெரிந்து, அங்கிருந்த அசேராக் கம்பத்தை வெட்டி எறிந்து யாவே கடவுளுக்கு எரிபலி செலுத்துகின்றார். கிதியோன் வழியாக இஸ்ராயேல் மக்கள் வலிமையுள்ளவர்களாக மாறுகின்றனர். இஸ்ராயேல் மக்கள் ஒன்று கூடி நீரும் உன் மகனின் மகனும் எங்களை ஆளட்டும் என்றபோது கிதியோன் நானும் எனது பிள்ளைகளும் உங்களை ஆளமாட்டோம் ஆனால் ஆண்டவரே உங்களை ஆள்வார். என்கிறார் நீ.த.8:22-23.

அதைப்போலவே இன்றைய நற்செய்தியில் நாசரேத்து இயேசுவை பார்த்து அவரிடம் நம்பிக்கை கொள்ள யோசிக்கின்றனர். ஊரெங்கும் சென்று தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்திய இயேசு தன்னுடைய ஊரில் அவரது வல்லமையை வெளிப்படுத்த முடியவில்லை. ஆன்மீகத்தில் வலுகுன்றியவர்களிடம் வல்லசெயல்கள் எதுவும் இயேசுவால் செய்ய இயலவில்லை.


கடந்த வாரம் ராணி மற்றும் குமார் என்ற தம்பதியினரை மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. இருவருமே நல்ல கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். ஒருவரையொருவர் அன்பு செய்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். வழக்கம் போல குழந்தைக்காக இருவீட்டாரும் காத்திருந்தனர். அதற்காக பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்று வந்தனர். ஆண்டுகள் உருண்டோடின. ஒருகட்டத்தில் குழந்தைக்கு வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த செய்தி இக்குடும்பத்தினர் அனைவரையும் மனதளவிலும், உடலளவிலும் பாதித்தது. இனி ஏன்? எதற்காக வாழவேண்டும்? என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டனர்.

ஒருநாள் அந்த பெண் வயிற்று வலியினால் துடித்துக் கொண்டிருக்கின்றாள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தும் பார்காதது போல் அவரவர் வேளைக்குச் சென்று விடுகின்றனர். உடல் வேதனையின் உச்சத்தில் தானாக வாடகை வாகனம் பிடித்து மருத்துவ மனைக்குச் செல்கின்றார். அங்கு மருத்தவர்கள் இவரை பரிசோதித்துவிட்டு இவருடைய கணவரை அழைக்கின்றனர். மருத்துவர்கள் அவர்களைப் பார்த்து நீங்கள் வேண்டிய கடவுள் உங்களை கைவிடவில்லை. ராணி இப்போது கர்ப்பமாக இருக்கின்றாள். என்ற செய்தியை அறிவிக்கின்றனர். இருவருக்கும் மட்டில்லா மகிழ்ச்சி. பிரிந்துபோன உறவுகள் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கின்றன.


இப்படி 8 மாத கர்ப்பிணியாக அவர் இருக்கின்றார். இந்த நேரத்தில் குமார் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில் ராணியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது இருவருமே உடலளவிலும், மனதளவிலும் வலுவிலந்து காணப்படுகின்றனர். ஒருகட்டத்தில் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடுகின்றனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி குமார் இறந்து விடுகின்றார்.

அடக்கத்திற்கு கூட அவரது உடலை மருத்துவமனை கொடுக்கவில்லை. எரித்து சாம்பலை கொடுக்கின்றனர். இதுவரை நம்பியிருந்த அவர்களது விசுவாசம் தளர்ந்து போனது. ராணி தன்னையே வெறுக்க ஆரம்பிக்கின்றார். ஒருகட்டத்தில் மனநோயினால் பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடித்தவர் போன்று உழறிக்கொண்டு இருக்கின்றார். பிரசவத்திற்காக இவரை ஐசியூ அழைத்துச் செல்கின்றனர். கணவனை இழந்த துக்கம் ஒருபுறம், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உடல் வலுவிலந்த நிலை, மனநோய் மற்றொருபுறம், இந்த சூழலில் பிரசவவேதனையில் முற்றிலுமாக வலுவிலந்த நிலைக்கு தள்ளப்படுகின்றார். இவரது வலுவின்மை வல்லைமையாக மாறுகின்றது.

அதாவது குழந்தை பாக்கியம் இவருக்கு இனிமேல் கிடையாது, குழந்தையை பெற்றெடுக்கும் மனநிலையும் இல்லாதவர், கணவனும் இறந்து போன நிலை என நாலப்புறமும் வலுவிழந்த சூழலில் கடந்த மாதம் 17-ம் தேதி இவருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அவரது பிரசவ வேதனை அவரது வலுவின்மையை அதிகப்படுததுகின்றது. ஆனால் பிறந்த இரட்டை குழந்தைகள் மனநோயிலிருந்தும், உடல் நோயிலிருந்தும் அவருக்கு விடுதலை கொடுக்கின்றது. இன்று தாயும், சேயும் நலமோடு இருக்கின்றனர். இவர்களை சந்தித்து உரையாடிய பொழுது வலுவின்மையில் கடவுளின் வல்லமை இவர்களை தேற்றியது. ராணிக்கு குழந்தை பாக்கியம் கிடையாது அவர் அதற்கு தகுதியற்றவர் என்று கூறினார்களோ அந்த குழந்தை பாக்கியமே வலுவின்மையிலிருந்து அவருக்கு விடுதலையும் வல்லமையையும் கொடுத்தது. எனது அருள் உனக்கு போதும்.


இன்றும் கடவுள் அவரது வல்லமையை நம்வழியாக வெளிப்படுத்த விரும்புகின்றார். ஆனால் நாம் தான் ஆன்மீகத்தில் வலுவிழந்தவர்களாக இருக்கின்றோம். நம்முடைய அன்றாட பிரட்சனைகள் நம்மை கடவுளிடமிருந்து பிரித்துவிடுகின்றது. வல்ல தேவனை மறந்துவிட்டு ஜோதிடம், பிற கடவுள்கள், வலிமையற்ற பொருட்கள் மீது நமது நம்பிக்கையை ஊதாசினப்படுத்துகின்றோம். ஆனால் வல்லமை மிக்க நம்முடைய தேவன் நம்மிடமுள்ள ஆன்மீக வலுவின்மையை போக்கி ஆண்டவரின் வல்லசெயல்களை நம்மில் உணர அழைக்கின்றார்.

இதைத்தான் பவுல் தன்னுடைய வலுவின்மையை சாத்தான் அனுப்பிய தூதன் என்றும் அது உடலில் தைத்த முள் போன்று அவரது வல்லமையை வலிமையை இழக்கச்செய்கின்றது. இந்த வேதனையிலும் வருத்தத்திலும் பவுல் கடவுளை அழைக்கின்றார். ஒருமுறையல்ல, இருமுறையல்ல மும்முறை கடவுளை அழைக்கின்றார். உடனே கடவுள் “என் அருள் உனக்கு போதும்; உன்னுடைய வலுவின்மையில் தான் என்னுடைய வல்லமை நிறைவாய் வெளிப்படும்” எனக் கூறி கடவுள் பவுலை தேற்றுகின்றார். இன்றும் கடவுள் நம்மை தேற்றுகின்றார். நம்முடைய வலுவின்மையில் கடவுளின் வல்லமையை உணருவோம். கடவுளின் அருள் நமக்கு போதும்.