இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிறு

ஆண்டவரின் கேதுருகளாக

எசேக்கியேல் 17:22-24
2 கொரிந்தியர் 5:6-10
மாற்கு 4:26-34

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! இன்று பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிரை நாம் சிறப்பிக்கின்றோம். ஆண்டவரின் கேதுருக்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

லீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி சிந்திப்போம்.
லீபனோன் என்றால் வெண்மலை என்று பொருள். இது பாலஸ்தீனத்தின் வடமேற்கிலுள்ள ஒரு மலை நாடாகும். எர்மோன் எனும் மலை இங்குதான் உள்ளது. இதன் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதினால் ‘வெள்ளை மலை’ என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பச்சைப்பசேலென்று இருக்கும். காரணம் அங்கு செழித்து வளர்ந்துள்ள கேதுரு மரங்களேயாகும். நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு கேதுரு மரத்தின் அடியில் ஐயாயிரம் பேர் தங்கலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே தான் நீதிமானின் செழிப்பை லீபனோனின் கேதுருக்கு இணையாக விவிலியம் சொல்கிறது, “நீதிமான் செழித்து லீபனோனில் உள்ள கேதுருவைப்போல் வளருவான்” (திபா 92:12).

கேதுரு மரத்தைப் போல வளர்ந்தவர் தான் புனித அந்தோணியார். இந்த கோடி அற்புதரான புனித அந்தோணியாரின் திருவிழாவையும் நாம் இன்று சிறப்பிக்கின்றோம். உங்களைப் போல, என்னைப் போல இம் மண்ணில் பிறந்த அந்தோணியார் கோடி அற்புதராக இருப்பதற்கு காரணம் ஆண்டவரின் கேதுருவாக தன்னை மாற்றிக் கொண்டாதால் தான். எனவே இன்று ஆண்டவரின் கேதுருக்களாக வாழ நம்மை நாம் தயார் படுத்துவோமா?

கேதுரு மரத்தின் முக்கிய தன்மைகள்
1. வேர்கள் மண்ணுக்கு அடியில் ஆழமாக சென்று உயரமாக வளர்கின்றன
2.எவ்வகை இயற்க்கை சீற்றங்களுக்கும் அஞ்சாமல் உறுதியாய் நிற்கின்றன.
3. தன்னையே முழுமையாக கட்டிட வேலைகளுக்கு அர்ப்பணிக்கின்றன
4. கேதுருவின் பிசின் தரும் நறுமணமாக


1. வேர்கள் மண்ணுக்கு அடியில் ஆழமாக சென்று மண்ணுக்கு மேலே உயரமாக வளர்கின்றன
இயற்கையில் உள்ள மற்ற மரங்களைக் காட்டிலும் கேதுரு மரங்கள் வித்தியாசமான வளர்ச்சியைக் கொண்டுள்ளன. லீபனோனிலுள்ள சில கேதுரு மரங்கள் 12 மாடி கட்டிடம் அளவுக்கு உயரமாக வளரும் தன்மை கொண்டது. அதன் வேர்கள் உறுதியாகவும் மிக ஆழமாகவும் இருக்கும்; அடிமரத்தின் சுற்றளவு 40 அடி அதாவது 12 மீ, உயரமோ 37 மீட்டர் இருக்கும். ஆரம்பத்தில் இம்மரம் படுவேகமாக வளரும். வெகு ஆழமாக தன்னுடைய வேர்களை ஓடவிடும். வெளிப்படையாக இம்மரம் வளர்வதை நாம்மால் பார்க்க முடியாவிட்டாலும் வருடங்கள் செல்லச் செல்ல அடிமரம் பெரிதாகும். வேர்கள் ஆழமாகவும், விரிவாகவும் ஊடுருவிச் செல்லும். இதனால் மரம் மிகவும் உறுதியாகிறது. அதனால்த்தான் “தாவர உலகின் முடிசூடா மன்னர்கள்” என கேதுரு மரங்களை அழைக்கின்றனர்.

பிரியமானவர்களே இந்த கேதுரு மரத்தைப் போல நாமும் நம்முடைய விசுவாசத்தை இறைவன் மீது ஆழமாக பதித்து கடவுளின் கிருபையால் மிக உயரமாக வளர கடவுள் விரும்புகின்றார். நாம் நம்முடைய தோட்டங்களில் செடிகள் நடும் போது யாரும் நுனி கொழுந்தை உடைத்து நடுவதில்லை. அப்படியே நட்டாலும் அது காய்ந்து கருகிப் போய்விடும். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் சாதராண நுனிக் கொழுந்தை உடைத்து, அதையும் மலைஉச்சியில் நடுகின்றபோது இந்த கொழுந்து கிளைத்து, கனிதந்து சிறந்த கேதுரு மரமாக வளரும் என கடவுள் கூறுகின்றார். மனிதர்கள் நுனி கொழுந்தை நடுகின்ற போது அது கருகிவிடும்; அதுவே கடவுள் நட்டால் மிகப்பெரிய மரமாக வளரும். இதைத்தான் வானதூதர் அன்னை மரியாளிடத்தில் “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

யார் ஒருவர் தன்னையே கடவுளிடம் ஒப்புக்கொடுக்கின்றாரே கடவுள் அவர்களை கேதுரு மரங்களைப் போல உயர்த்துவார். அன்னை மரியாள் கடவுளின் விசுவாசத்தில் வேருன்றினாள், தன்னுடைய நம்பிக்கையை கடவுள் மீது ஆழப்படுத்தினாள். எந்த அளவிற்கு நம்பிக்கை ஆழமானதோ அந்த அளவிற்கு மரியாள் உயர்ந்து நிற்கின்றாள். “இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுபெற்றவள் என அழைக்கும்” என்று அவர் வாய்பட சொல்லும் அளவிற்கு கடவுள் அவரை உயர்த்துகின்றார். இன்று நாமும் நம்முடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கடவுள் மீது ஆழப்படுத்தும் போது நாமும் கேதுரு மரபோல உயர்ந்து நிற்க்க முடியும்.

2. எவ்வகை இயற்கை சீற்றங்களுக்கும் அஞ்சாமல் உறுதியாய் நிற்கின்றன.
கேதுரு” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு “உறுதியாயிருத்தல்” என அர்த்தமாகும். கேதுரு மரங்களின் வேர் வெகுதூரம் படர்ந்து வளரும். இவைகள் பாறைகளை இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்வதால் கடும்புயலானாலும் இம்மரங்கள் அசைக்கப்படுவதில்லை.

அதைப்போலவே நம்முடைய வாழ்வில் மலைபோன்ற துன்பங்கள் வந்தாலும், புயல் போல பிரட்சனைகள் வந்தாலும், சூறாவளி போன்று நம்மை சுற்றி சுற்றி தாக்கினாலும் நம்முடைய விசுவாசத்தில் நாம் உறுதியாய் இருந்தால் எதைப்பற்றியும் நாம் அச்சப்படத் தேவையில்லை.


புனித அந்தோணியார் தான் சிறுவயதிலிருந்தே பல புதுமைகளைச் செய்தவர். ஒருமுறை ரிம்னி என்ற இடத்தில் இறைவார்த்தையை போதிக்கச் செல்கின்றார். ஆனால் அங்கு உள்ள மக்கள் இவருடைய போதனையை கேட்க மறுக்கின்றனர். விசுவாத்தில் உறுதியாய் இருந்த அந்தோணியார் உங்களுக்கு போதிப்பதைக் காட்டிலும் கடலில் உள்ள மீன்களுக்கு போதிப்பது சிறந்து என கூறிவிட்டு கடற்கரைக்குச் சென்றார். என்ன நடக்கின்றது என்பதை பார்க்க மக்களும் அவரோடு சென்றனர். கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு “ஓ மகா பாக்கியம் பெற்ற மீன்களே இறைவார்த்தையை கேட்க வாருங்கள்” என போதிக்க ஆரம்பித்தார். உடனே கடலில் உள்ள பெரிய மீன்கள் முதல் சிறிய மீன்கள் வரை அனைத்தும் அந்தோனியாரின் வார்த்தையை கேட்க தண்ணிரிலே வாயை பிளந்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்தன. அந்தோணியாரின் விசுவாசம் எத்தகைய தடையையும் உடைத்தெரிந்து அற்புதங்களை செய்ய தூண்டியது.

இன்றும் கொரோனா என்ற பெருந்தொற்று முதலாம், இரண்டாம், மூன்றாம் அலை என நம்மை தாக்கினாலும் கடவுள் மீது கொண்டுள்ள விசுவாசம் நம்மை பாதுகாக்கின்றது.

3. தன்னையே முழுமையாக கட்டிட வேலைகளுக்கு அர்ப்பணிக்கின்றன
கேதுரு மரம் என்றாலே, நினைவுக்கு வரவேண்டியது, அதன் கெம்பீரமான வளர்ச்சி.. மற்றும் அதன் வலிமை.. பற்பல வேலைகளுக்கு இசைந்துவரும் தன்மை.. இஸ்ரயேல் நாட்டில் காணப்படும் எல்லா மரங்களையும் விட லீபனோனின் கேதுரு மரம் வேதாகமத்தில் 70 தடவைக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம் அதன் மரத்தின் தன்மையும், அதன் வலிமையும் ஆகும்.

உதாரணமாக தன் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பிய சாலமோன் அரசர் எருசலேமில் தேவாலாயம் ஒன்றை எழுப்பினார். ஆலயத்தை கட்ட பலவிதமான விலையுயர்ந்த பொருட்களை முதலாவது திரட்டினார். அதில் ஒன்று ‘கேதுரு மரங்கள்’. தேவலாயத்தில் உத்திரங்களை உருவாக்க தீரு நாட்டு மன்னர் ஈராமிடம் சாலமோன் அரசர் ‘கேதுரு’ மரங்களை தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு ஈடாக கலிலேயா நாட்டில் உள்ள 20 ஊர்களை விலையாக கொடுத்தார் (1 அரசர்கள் 5:10, 7:11). தேவலாயத்தின் பலிபீடம், ஆலயத்தின் முக்கிய பகுதிகள் கேதுரு மரத்தால் உருவாக்கப்பட்டவையாகும் (1அரசர் 6:16-20).

தாவீது அரசரின் அரண்மனை கேதுரு மரங்களால் செய்யப்பட்டது என விவிலியம் கூறுகின்றது. தாவீது அரசர் நாத்தானை அழைத்து “பாரும் நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது" என்று கூறினார்.

தொலைதூர தேசத்தில், எங்கோ ஒரு மலைக் காட்டில் வளர்ந்த கேதுரு மரங்கள் இப்போது வல்லவராம் பரிசுத்த தேவனின் ஆலயத்தில் அங்கமாயின. யாராலும் கண்டுகொள்ளாப்படாத அம்மரங்கள் இப்போது அனைவருடைய ஜெபங்களைத் தாங்கும் உத்திரங்கள் ஆகின. கேதுரு மரங்கள் பெற்றிருக்கும் பாக்கியம் தான் எத்துனை பெரியது!

இன்றும் நாம் அனைவரும் கடவுளின் சாயலை பெற்றிக்கின்றோம் என்பதை உணர்ந்தோமானால் ஒவ்வொருவரும் தன்னையே முழுமையாக கடவுளுக்கும், அயலாருக்கும் அர்ப்பணம் செய்யமுடியும். ஆனால் ‘தான்’ என்ற ஆணவமும், ‘நான்’ என்ற கர்வமும் தலைதூங்கி நிற்ப்பதால் நம்மை முமுமையாக அர்ப்பணிக்க முடிவதில்லை. யார் ஒருவர் தன்னையே முழுமையாக கடவுளுக்கும், அயாலானுக்கும் அர்பணிக்கின்றாரோ அவரையே கடவுள் உயர்த்துவார்.

உதாரணமாக அந்தோணியார் மிகப்பெரிய படிப்புகளை படித்தவர், பட்டங்களைப் பெற்றவர். மெய்யியலிலும், தத்துவஇயலிலும் புலமை பெற்றவர். அதிலும் குருவானவர் என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர். இவர் மொராக்கோ மறைசாட்சிகளின் பணி ஆர்வத்தாலும், பிரான்சிசின் ஆன்மீகத்தாலும் ஈர்க்கப்பட்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த போது இவருக்கு கொடுக்கப்பட்ட பணி சமையலறையில் பாத்திரங்களை தோய்த்து கழுவுவது. அந்தோனியாரிடம் தான் என்ற ஆனவமும் கிடையாது, நான் படித்தவன் என்ற கர்வமும் கிடையாது. தன்னையே முழுமயாக கடவுளின் பணிக்கும், பிரான்சிஸ்கன் சபைக்கும் அர்ப்பணித்தார். எனவே கடவுள் அவரை கோடி அற்புதராக உயர்த்தினார். எங்கோ முளைத்த மரம் ஆண்டவரின் இல்லத்தையும் அவரது பேழையையும் அழகுபடுத்துகின்றது; எங்கோ மலர்ந்த பூக்கள் ஆண்டவரின் பீடத்தை அலங்கரிக்கின்றன; எங்கோ பிறந்த அந்தோனியார் இன்று கடவுளின் தூதுவராக அற்புதங்களின் அடையாளமாக நிற்கின்றார். எங்கோ பிறந்த நானும், என்னையே கடவுளுக்கு அர்ப்பணிக்கும் போது நிச்சயம் கடவுள் என்னையும் உயர்துவார்.

4. கேதுருவின் கிளைகளில் வழிந்தோடும் பிசின்களாக
ஒசேயா 14:6 –ல் “கேதுரு மரத்தின் கிளைகள் விரிந்து பரவும்; அதன் பொலிவு ஒலிவமரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல் நறுமணம் பரப்புவான்”. முதலாவதாக கேதுரு மரத்தின் நிழலில் ஐயாயிரம் பேர் தங்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவிற்கு மரம் உயர்ந்து கிளைகளை பரப்பியிருக்கும். இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுவதுபோல அனைத்துவகைப் பறவைகளும் கேதுரு மரத்தை உறைவிடமாக்கி கொள்ளும். அதன் கிளைகளின் நிழலில் அவை தங்கும்.

இரண்டாவதாக இம்மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று உராய்யும் போது பிசின் போன்ற கசிவு ஏற்படுகிறது. கேதுருவின் பிசின் நறுமணம் மிக்கது. பூச்சிகள் இம்மரத்தை அழிக்காதபடி, நறுமணம் நிறைந்த பிசின் இம்மரத்தைப் பாதுகாக்கிறது. இம்மரத்தைப்பற்றி குறிப்பிடும் போது லீபனோனின் கடற்கரைக்கு 25 மைல்களுக்கு அப்பால் ஒரு கப்பல் வரும்போதே கேதுருக்களின் நறுமணம் இன்ப நுகர்வாயிருக்கும். ஊற்றுத் தண்ணீரானது கேதுரு மரங்களின் வேர்களினால் உறிஞ்சப்படுவதால் இந்த தண்ணீர் பருகுவதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இம்மலைச்சரிவுகளில் மக்கள் வசிக்க விரும்பி குடியேறுகின்றனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

கேதுரு மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் நீண்ட காலம் உழைக்கும். பிசின் தைல வாசனையால் பூச்சிகள் இம்மரத்தை சேதப்படுத்துவதில்லை. சாலமோனின் தேர் கேதுரு மரத்தால் செய்யப்பட்டது என்கிறது (இனிமைமிகுபாடல் 3:9) மேலும் சாலமோன் அரசர் இம்மரத்தைக் குறித்து மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன; உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன; உன் ஆடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது” இனிமைமிகுபாடல் 4:11 எனக் கூறுகின்றார்.

எவ்வாறு கேதுரு மரம் கிளைகளை பரப்பி, மணம் தரும் நறுமணத்தை தருவதால் பறவைகளுக்கும், மக்களுக்கும் தங்க இடம் அளிக்கின்றதோ கடவுளின் பிள்ளைகளாகிய நாமும் மற்றவர்களுக்கு அடைக்கலம் தர வேண்டும். நற்செய்தியில் கடுகு விதையானது எல்லா விதைகளை விடவும் சிறியது. ஆனால் அது முளைத்து வளரும் போது எல்லாச் செடிகளையும் விட பெரிதாகவும், பறவைகள் வந்து தங்ககூடிய அளவிற்கு பெருங்கிளைகள் விடும் என்கிறார் இயேசு. இன்றும் புனித அந்தோணியார் தன்னிடம் நாடி தேடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தந்து அற்புதங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அவருடைய மன்றாட்டு செபத்தில் துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே என்றும்; துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே, அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும் என்று பக்தர்கள் செபிக்கின்றனர். காரணம் நறுமணம் வீசும் மலராக அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து கடவுளின் நிழலில் இழைப்பாற நம்மை அழைக்கின்றார்.

பிரியமானவர்களே ஆண்டவரின் கேதுருவாக புனித அந்தோணியார் விளங்கினார். விசுவாத்தில் தன்னை ஆழப்படுத்தினார். அதனால் கடவுள் அவரை கோடி அற்புதராக உயர்த்தினார். இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கூறுவது போல அவர் வாழ்வில் வந்த அனைத்து சோதனைகளையும் நம்பிக்கையோடும், துணிவோடும் முறியடித்தார். அன்றாடம் சந்தித்த துன்பங்களையும் கஸ்டங்களையும் தன்னுடைய அர்ப்பணத்தின் வழியாக வென்றெடுத்தார்; கடைசியில் கேதுருவின் கிளைகளாக அனைத்து மக்களையும் கடவுள்பால் ஈர்த்து வருகின்றார்.

ஒரு நீதிமானின் ஆசீர்வாதம் கேதுரு மரம் போல உயர்ந்து நிற்க்கும். நாமும் ஆண்டவரின் கேதுருக்களாக வாழ வரம் வேண்டுவோம்; கோடி அற்புதர் நமக்காக பரிந்து பேசுவாராக!. ஆமென்.
அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்
பதோனி, உளவியல் ஆலேசனை மையம், திருச்சி.