இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









குருத்து ஞாயிறு முதலாம் ஆண்டு

அவமானங்களே வெற்றியின் படிக்கட்டுகள்

ஏசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மத்தேயு 26:14,27:66

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! இன்றைய உலகில் வெற்றியாளர்களின் சரித்திரத்தை புரட்டி பார்த்தோமானால் இவர்கள் தங்கள் வாழ்வில் சாதித்த சாதனைகளைக் காட்டிலும் அவர்கள் சந்தித்த அவமானங்களே அதிகமாக இருக்கும். இந்த அவமானங்கள் தான் அவர்களின் வெற்றிகளுக்கு படிக்கட்டாக இருந்துள்ளது. அவமானம் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம், அவமானம் என்ற வார்த்தையில் சம்பந்தப்படாதவர்களை விரல்விட்டு நாம் எண்ணிவிடலாம். ஏதாவது ஒரு வகையில், விசயத்தில் இதை நாம் சிறிதளவேனும் நமது வாழ்க்கையில் சந்தித்து இருப்போம் அல்லது சம்பந்தப்பட்டு இருப்போம். அந்தச் சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களை சொல்லி மாளாது, எதையுமே பிடிக்காது வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போம்.

“நீ வெற்றியாளனாய் வளம் வர வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. அதாவது மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு, கடைசில பாறை போல உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடு கட்டிக் குடியிருக்கலாம்.

இப்படியாக அவமானங்களை ஏற்படுத்துபவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள். இன்று கைகளில் குருத்தோலைகளை ஏந்தி இயேசு கிறிஸ்துவே வெற்றியின் அரசர் என ஓசான்ன பாடல் பாடி இயேசுவை வெற்றியாளராக நாம் கொண்டாடுகிறோம். இந்த வெற்றிக்கு காரணம் அவர் தன்னுடைய வாழ்வில் சந்தித்த அனைத்து அவமானங்களைளயும் வெற்றிகொண்டவர். எனவே நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் அவமானங்களை எப்படி எதிர்கொள்வது என இயேசுவிடம் கற்றுக்கொண்டு வெற்றியாளர்களாக வாழ நம்மை சுயஆயவு செய்வோமா?

ஒரு முறை அந்த குருமடத்திலே பல இளைஞர்கள் படித்து வந்தனர். அவர்கள் அனைவருக்குமே பலவிதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. அதிலே ராஜ் என்னும் மாணவன் படிப்பிலே மிகவும் பின்தங்கியவன். ஆனால் படிப்பை தவிர மற்ற வேலைகளை நன்கு செய்யக் கூடியவன். ஒருநாள் கிறிஸ்து பெருவிழா அன்று அந்த குருமடத்தின் சார்பாக ஒரு புத்தகம் வெளியிட முடிவு செய்தனர். எனவே அந்த புத்தகத்திலே அச்சிடுவதற்கு அந்த குருமடத்தின் ஆங்கில வகுப்பு ஆசிரியர் கிறிஸ்து பெருவிழாவை வைத்து ஆங்கிலத்திலே அவர்கள் அனைவரையும் கவிதைகள், கட்டுரைகள் எழுதச் சென்னார். ஒவ்வொரு மாணவரும் தனது திறமையை பயன்படுத்தி வித்தியாசமன படைப்புகளை தயார்செய்து ஆசிரியரிடம் கொடுத்தனர்.

மறுநாள் அந்த ஆசிரியர் அனைத்தையும் படைப்புகளையும் திருத்தி, மாணவர்களிடம் கொடுத்தார். அனைவரின் படைப்புகளில் ஏதோ ஒரு வகையில் சிகப்பு மையில் அடித்தலும், திருத்தலும் இருந்தன. ஆனால் இந்த ராஜுவின் பேப்பரில் எந்தவிதமான அடித்தலே திருத்தலோ எதுவுமே இல்லை. இது அங்கிருந்த சகமாணவர்களுக்கும், ஏன் ராஜுவுக்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. படிப்பிலே ஆச்சரியப்படும் அளவுக்கு முன்னேறி விட்டான், எந்த விதமான சிகப்பு மையுமே அவனது பேப்பரில் இல்லை என்று அனைவரும் ராஜுவை வாழ்த்த ஆரம்பித்தனர்.

அப்போது அந்த வகுப்பு ஆசிரியர் ராஜுவை அழைத்து அனைவருக்கும் மத்தியில் நிறுத்தி இவ்வாறாக கூறினார். “ராஜு நீ படிப்பதற்கு இலாய்கு இல்லாதவன், குருவாவதற்கும் தகுதியற்றவன். நீ எழுதிய கவிதையை என்னால் திருத்த முடியவில்லை. உன்னுடைய படைப்பை புத்தகத்தில் அச்சிட்டால் அதைவிட அவமானம் வேறேதும் இல்லை” என்று சகமாணவர்களுக்கு மத்தியில் திட்டிக் கொண்டிருந்தார். உனது பேப்பரின் கடைசி பக்கத்தை திருப்பி பார் என்றார். அங்கு அந்த பக்கம் முழுவதும் புதிதாக சிகப்பு மையில் ஒரு கவிதை எழுதியிருந்தது. நீ எழுதியது கவிதையே கிடையாது மேலும் நீ எழுதிய கவிதையை என்னால் திருத்த முடியவில்லை. எனவே உன் பெயரில் நான் புதிய கவிதை ஒன்று எழுதியுள்ளேன் அதை பார்க்கவும் என்றார். உடனே அங்கிருந்த அனைவரும் ராஜுவை எள்ளி நகையாடினர். அவமானத்தின் உச்சிக்கு சென்ற ராஜுவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அன்று நாள் முழுவதும் பலவிதமான யோசனைகள். அனைவருக்கும் மத்தியில் மிகப்பெரிய அவமானம், எதற்கும் இலாய்க்கு இல்லாதவன் என்ற பெயர், சகமாணவர்களின் ஏளனச் சிரிப்பு, மற்ற குருக்களின் வித்தியாசமான பார்வை… இந்த தருணத்தில் ஆலயத்திற்கு சென்று கண்ணீரோடு ஜெபிக்கிறான். அப்போது நன்கு, நிதானமாக யோசித்து ஜெபித்துக் கொண்டிருந்த போது கடவுள் அவருக்கு நம்பிக்கையான வாக்குறுதியைக் கொடுக்கிறார். அதாவது ஏசாயா 50:7-ல் “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்”. என்ற இந்த வார்த்தை அவமானத்தில் இருந்த ராஜுவுக்கு நம்பிக்கையை கொடுத்தது. என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார். நான் எதற்கும் அவமானம் அடையேன் என்று தீர்க்கமாக முடிவு எடுத்து இன்று தன்னுடைய சுய சிந்தனையில் பல படைப்புகளை எழுதி வருகிறார். எதற்கும் இலாய்கு இல்லாதவன் என்று கருதப்பட்டவன் இன்று உங்கள் முன்னால் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆம் அன்புக்குரியவர்களே! நான் சந்தித்த அவமானங்களே என்னை உயர்த்தியது. இன்று குருத்தோலைகைளை கையில் ஏந்தி இயேசுவை வாழ்க என வாழ்த்துகிறோமா? அல்லது ஒழிக என ஆண்டவரை அவமானப்படுத்துகிறோமா?

இன்றைய முதல் வாசகமானது ஆண்டவரின் ஊழியர் பற்றிய மூன்றாவது கவிதையாகும். இதிலே இஸ்ராயேல் மக்கள் தங்களது வாழ்வில் அனுபவித்த அவமானங்களையும், ஏசாயா இறைவாக்கினர் தான் தன்னுடைய வாழ்வில் அனுபவித்த அவமானங்களின் வெளிப்பாடாக இன்றைய வாசகம் அமைந்துள்ளது. அவமான நேரங்களில் ஆண்டவரின் உடனிருப்பை மறந்தோமானால் நிச்சம் அது நம்மை அழிவுக்கு இட்டுச்செல்லும். மாறக கடவுளின் பிரசன்னத்தையும், உடனிருப்பையும் உணரும்போது அது நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இயேசு சந்தித்த அவமானங்கள்
மனிதனாய் பிறந்த அனைவருமே நிச்சயம் அவமானத்தை சந்திக்க வேண்டும் என்ற சொல்லாடலை இயேசு தன்னுடைய வாழ்க்கையிலும் அனுபவிக்கிறார். உலகத்தின் மீட்பராகிய இயேசு மாட்டுதொழுவத்தில் பிறந்தது முதல் அவமானம். மீட்பரும் அரசருமாகிய இயேசு மாடமாளிகையில் வாழாவிட்டாலும் நம்மைபோல ஒரு சாதரண வீட்டிலாவது வாழ்ந்திருக்க வேண்டும் ஆனால் விவிலியம் நமக்கு சொல்கிறது இயேசுவுக்கு தலைசாய்க்ககூட இவ்வுலகத்தில் இடமில்லாமல் வாழ்ந்தது அவரின் இரண்டாவது அவமானம். இப்படியாக பல்வேறு அவமானங்களை தன்னுடைய வாழ்க்கையிலே அனுபவிக்கிறார். இயேசு தன்னுடைய பாடுகளின் போது சந்தித்த அவமானங்களை சிந்திப்போமா!.

01. அவமானத்தின் சிம்மாசனம் - கழுதை
இயேசு பிறந்தபோதே அரசருக்கு உரிய பொன், தூபம், வெள்ளைப்போளம் என்ற காணிக்கைகளை பரிசாகப் பெற்றவர். சாத்தான்களின் சோதனைகளை வென்றவர், மக்கள் அனைவராலும் போதகராக போற்றப் பெற்றவர், தீயஆவிகளை ஒடுக்கும் அதிகாரம் பெற்றவர், எந்த வகையான நோயானாலும் குணமளிக்கும் ஆற்றல் பெற்றவர், இன்று அழுக்கு மூட்டைகளை சுமந்து திரியும் கழுதையில் பயணம் செய்கிறார். வழக்கமாக கழுதை என்பது மற்ற எல்லா மிருகங்களை விடவும் கேவலமாக சித்தரிக்கப்படுவது அந்த கழுதையிலே உலகாலும் அரசர் பயணம் செய்வது அவமானத்திலும் பெரிய அவமானமாகும்.

02. ஓசான்வா… ஒழிகவா…
கழுதையில் அமர்ந்து வருவதே அவமானம் அதிலும் அந்த மக்கள் கூட்டம் அனைவரும் “தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதங்களிலே ஓசான்னா என்று ஆர்பரிக்கின்றனர்”. ஒரு மனிதனை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அவமானப்படுத்துகின்றர். இதே ஓசான்னா என்று ஆர்ப்பரித்த கூட்டம் தான் பிலாத்து இந்த இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது ‘இவனை சிலுவையில் அறையும்’ என்று கூச்சலிடுகின்றனர். ஆம் அன்புக்குரியவர்களே எந்த வாயால் வாழ்க என்று வாழ்த்தினரோ அதே வாயால் ஒழிக எனவும் வாழ்த்துகின்றனர்.

03. பணத்திற்காக உயிர் தோழனே காட்டிக்கொடுத்தல் - யூதாசு
மூன்றாண்டு காலம் இயேசுவோடு தங்கியிருந்து, அவரது போதனைகளைக் கேட்டு, அவர் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் கண்கூடாக பார்த்தவர் இந்த யூதாஸ். ஆனால் இவன் தன்னுடைய உயிர் தோழரான இயேசுவையே காட்டிகொடுக்க முற்படுகிறான். நீதிமொழி 12:26-ல் “சான்றோர்களின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்”. இங்கு இயேசுவின் அறிவுரையை சொந்த நண்பணே புறக்கனிக்கிறான். இயேசு தெளிவாக கூறுகிறார் உங்களில் ஒருவன் என்னை காட்டிக்கொடுக்க போகிறான் என்று. ஆனால் பணம் யூதாசின் கண்களை மறைக்கிறது. பணத்தைக் கண்டால் பிணமும் வாய் பிளக்கும் என்ற கூற்றுக்கு ஏற்ப பணஆசை யூதாசை மயக்குகிறது. இயேசுவால் கொடுக்க முடியாத சந்தோசத்தை சாதராண பணம் யூதாசுக்கு கொடுக்கிறது. இயேசுவின் அறிவுரைகள் அனைத்தும் வேலிக்கு இறைத்த நீர் போல அமைகிறது. சொந்த நண்பனே காட்டிக்கொடுப்பது இயேசு சந்தித்த அவமானம்.

04. நெருங்கிய நண்பன் மறுதலித்தல் - பேதுரு
உன் நண்பனை என்னிடம் காட்டு உன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நான் சொல்கிறேன் என்பார் சேப்பளின் ரோனி மொலன்கோன். நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டதுக்கு அனைவரும் அமைதியாக இருக்க இராயப்பர் நீர் மெசியா என்று அறிக்கையிட்ட மனிதன் இன்று உயிருக்கு பயந்து இம் மனிதரை எனக்கு தெரியவே தெரியாது என ஒருமுறையல்ல இரண்டு முறையல்ல மும்முறை மறுதலிக்கிறார். விண்ணரசின் திறவுகோலை கொடுத்த இயேசுவை, தன்னுடைய மாமியாரை குணப்படுத்திய இயேசுவை இன்றுமுதல் நான் உன்னை மனிதரை பிடிப்பவராக்குவேன; யாரென்று என்று சொன்ன இயேசுவை எனக்கு தெரியவே தெரியாது என்ற சொன்னபோது உண்மையிலே ஆண்டவர் அவமானப் படுத்தப்படுகிறார்.

05. நண்பனுக்காக ஒருமணிநேரம் கூட செலவிட முடியாத கூட்டம் - சீடர்கள்
இயேசு தனது சீடர்களிடம் இன்று இரவு என்னை கைது செய்வார்கள், பலவித துன்பங்களை அனுபவித்து, மரிக்க போகிறேன் என்று சொல்லி தன்னுடைய துன்பகமான நிகழ்வை தனது சீடர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். யார் எங்கு சென்றாலும் தன்னுடைய சீடர்கள் நிச்சயம் எனக்காக இருப்பார்கள் என்று நினைத்து அவர்களை கெத்சமனிக்கு அழைத்துச் சென்று செபிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் இயேசுவுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்று தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். ஆனால் ஆபத்து என அறிந்தும் இயேவை தனியாக விட்டுவிட்டு தூங்குவது இயேசு அனுபவித்த அவமானமாகும்.

06. இயேசுவை கைது செய்தல் - பகைவர்கள்
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டு இருந்தார். அவர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் மத்தியிலே குணமளிக்கும் நாயகனாகவும், மறைநூல் அறிஞர்களே வியக்கும் அளவிற்கு இறைவார்த்தையை போதித்தவராகவும், விளங்கிய இயேசுவை இன்று ஒர் கல்வனைபோல கைது செய்கின்றனர். இவ்வளவு நாட்களாக இவர் மக்கள் மத்தில் இவர் வாங்கிய பெயர், புகழ் அனைத்தும் தவிடு பொடியாகிறது. அனைவருக்கு மத்தியில் அவமானத்தோடு கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகிறார்.

07. உயிர் நண்பனின் தற்கொலை – யூதாசு
இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கம் என்ன? மக்கள் வாழ்வுபெறும் பொறுட்டு அதுவும் நிலைவாழ்வு பெறும் பொறுட்டு இவ்வுலகிற்கு வந்தார் என்று விவிலியம் நமக்கு கூறுகிறது. ஆனால் தன்னுடைய உயிர் நண்பன் யூதாசின் மரணம் இயேசுவுக்கு அவமானத்தை பெற்று தந்தது. யூதாசு எப்பொழுது இயேவை காட்டிக் கொடுத்தானோ அதுவே அவனுக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்திருக்கும். மேலும் பழிபாவமில்லாதவரை காட்டிக்கொடுத்து பாவம் செய்தேனே என்ற தனது குற்றஉணர்ச்சி மேலும் அவனை வருத்துகிறது, எப்படி இயேசு தனித்து விடப்பட்டாரோ அதைப்போலவே யூதாசும் தனிமையை அனுபவிக்கிறான். இயேசுவை காட்டிக் கொடுத்தான் என்று சீடர் கூட்டம் அவனை ஒதுக்கி விட்டது, இப்போது யாரிடம் செல்வது, யாரிடம் தனது பாவத்தை அறிக்கையிடுவது, என்று குழம்பிய வண்ணம் தற்கொலை செய்து கொள்கிறான். எத்தனையோ மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்தும், நோயிலிருந்தும் குணப்படுத்திய இயேசுவால் தன்னுடைய நண்பனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. யூதாசு நிச்சயம் தன்னை தேடிவருவான் என்று இயேசு எதிர்பார்த்திருந்திருப்பார் ஆனால் அவனது தற்கொலை முயற்சி மேலும் இயேசுவுக்கு அவமானத்தை வரவலைத்தது.

08. நிரபராதியின் தண்டனையும் குற்றவாளியின் விடுதலையும் - இயேசு - பரபா
எந்த காரணத்தை முன்னிட்டும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்கிறது சட்டம். ஆனால் இங்கு எந்த குற்றமும் செய்யாத இயேசு தண்டிக்கப்படுகிறார். பிலாத்துவுக்கு நன்கு தெரியும் இயேசு எந்த தவறும் செய்யாதவர் என்று ஆனாலும் பிலாத்துவால் இயேசுவை விடுவிக்க முடியவில்லை. பரபா என்பவன் ஒரு கொலை குற்றவாளி சிறைத்தண்டனை அனுபவித்து வருபவன். உங்களுக்கு யாரை விடுவிக்க வேண்டும் என்று கேட்டபோது மக்கள் கூட்டம் பரபா என்று கூச்சலிடுகிறது. எந்த தவறும் செய்யாத இயேசு எந்த மக்களுக்கு உதவி செய்தாரோ அவர்கள் முன்னாலே அவமானப் படுத்தப்படுகிறார்.

09. எள்ளி நகையாடப்படுதல்
ஆட்சியும், அதிகாரமும் தன்னிடம் இருந்தும் பிலத்துவால் இயேசுவை காப்பாற்ற முடியவில்லை. சிலுவையில் அறையுங்கள் என்று தீர்ப்பை கொடுத்துவிட்டு நல்லவன் போல எனக்கும் இவரின் சாவுக்கும் பங்கு இல்லை என கைகழுவுகிறான். படைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை உரித்து, முள்முடியை பிண்ணி தலையில் வைத்து, கையில் ஒருகோலை கொடுத்து ஒரு கோமாளி அளவிற்கு அவரது தரத்தை தாழ்த்தி ஏளனம் செய்கின்றனர். அவர்மேல் காரி உமிழ்ந்து எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு கொடுரமாக நடத்துகின்றனர்.

10. அவமானத்தின் சின்னத்தை பரிசளித்தல்
இயேசு இவ்வுலகிற்கு வந்த போது இந்த உலகம் கொடுத்த முதல் பரிசு மாட்டுத்தொழுவம். பேய்களை ஓட்டியபோது இவன் பேய்களின் தலைவன் பெயல்சபுலை வைத்து பேய் ஓட்டுகிறான் என்று அவருடைய பெயருக்கு கலங்கம் வருவித்தது அடுத்த பரிசு. பாவிகளை மன்னித்து அவர்களின் வீட்டுக்குச் சென்றபோது இவன் மதிமயங்கி அழைகிறவன் என்ற பட்டம், நண்பர்கள் போல கூடவே இருந்து காட்டிக்கொடுத்ததும், மறுதலித்ததும் அடுத்தடுத்து கிடைத்த பரிசுகள், கடைசியில் நம்முடைய பாவங்களுக்காக அவமானத்தின் சின்னமாகிய சிலுயை பரிசாக அளிக்கின்றனர். ஆடைகளை இழந்து, உருவத்தை இழந்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் அனைவரும் கைவிடப்பட்ட நிலையில் இயேசு தன்னுடைய மக்களின் வாழ்வுக்காக அனைத்து அவமானங்களையும் தாங்கிகொள்கிறார். இயேசு ஒவ்வொரு முறை அவமானப்படும் போதும் நிதானமாக முடிவு எடுக்கிறார். கோழையாக இல்லாமல் வெற்றிவீரராக வாழ முற்படுகிறார்.

ஆம் அன்புக்குரியவர்களே நாம் அன்றாடம் நமது வாழ்வில் சந்திக்கும் அவமானங்களை இயேசு தனது பிறந்த நாள்முதல் அனுபவித்து கடைசியில் நமக்காகவே தனது உயிரையும் கொடுத்து இன்று வெற்றிவீரராக நமது மத்தியில் வாழ்ந்து வருகிறார்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அவமானங்களை சந்திக்கும் போது நமது மனநிலை எப்படிபட்டதாக இருக்கிறது. ஒருமுறை அன்னை தெரசாள் கல்கத்தாவில் ஒரு பணக்காரரிடம் ஏழைகளுக்கு ஏதாவது கொடுத்து உதவுங்கள் என்று கேட்டபோது அவன் தெரசாவின் முகத்தில் எச்சியை காரி உமிழ்ந்து இதை எடுத்துச் செல் என்று அவமானப்படுத்துகிறான். ஆயினும் நிதானமாக யோசித்து இது எனக்கு எனது பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றாராம். அதைப் போலவே காந்தியடிகள் தென்ஆப்பிரிக்காவில் இருந்த போது கருப்பினர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்சந்தித்த அவமானங்கள் இவரை மாமெரும் தலைவராக உயர்த்தியது. இன்று வெற்றியாளர்களில் சரித்திர புத்தகத்தில் அவர்களது சாதனைகளை விட அவர்கள் அடைந்த அவமானங்களே அதிகமாகும். அவர்கள் சந்தித்த அவமானங்கள் தான் வெற்றியாளர்களாக அவர்களை உயர்த்தியது.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையை பார்த்தோமானால் அவமானத்தில் மாண்டவர்களின் எண்ணிகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் பெயர்களும் படங்கள் வரும். தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களை பார்த்தோமானால் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும்? குடும்ப வாழ்க்கையில் அவமானத்தை சந்தித்தவர்களின் உடனடி முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும். தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிவிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே "பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா” என்ற பாரதியின் வார்த்தைக்கு ஏற்ப வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள். அவமானத்திற்காக அஞ்சாதீர்கள். அவமானங்கள் தான் நமது வாழ்க்கையின் அடித்தளங்கள். எனவே நாம் அவமானப்படும் நேரங்களில் இயேசுவைப்போல நிதானமாக முடிவு எடுத்தால் நாம் அனைவருமே வெற்றியாளர்கள் தான்.

சதாரண மனிதர்களா?... சராசரி மனிதர்களா?... வெற்றியாளர்களா?...