இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு

தனிமையில் இன்பம் மட்டுமல்ல இறைவனையும் காணலாம்.

லேவியர் 13: 1-2, 44-46
1 கொரிந்தியர் 10:31-11:1
மாற்கு 1:40-45

இறை இயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை நம்மிடத்தில் ஏற்படுத்தி வந்தது. இன்று வரை இந்த கொரோனா பயத்துடனும், குழப்பத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கொடிய கொரோனா நோய் நம் அனைவருக்கும் கற்றுத்தந்த பாடம் எதுவெனில் தனிமைப்படுத்துதல். தனிமைபடுத்துவது மட்டுமே கொரோனாவிற்கு தகுந்த தீர்வு என அறிவுறுத்தப்பட்டது. நாமும் அப்படித்தான் வாழ்ந்து வந்தோம். அதனால்த்தான் ஒருவர் மற்றவருக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். திருமணம், இரங்கல் உள்ளிட்ட சமூக அல்லது மத ரீதியான கூட்டங்களுக்குக் கட்டாயம் செல்லக்கூடாது. வீட்டில் தனிமைபப்டுத்தப்படுபவர்கள் எப்போதும் சர்ஜிக்கல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று நம்மையே நாம் தனிமை படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தோம்.

இதைப்போலவே தொழுநோய் என்ற கொடிய தொற்றுநோய் கொண்டவர்களும் வரலாற்றிலே தங்களை தனிமைபடுத்தி வாழ்ந்து வந்தனர். அதற்கு விவிலிய சான்றுகளும் நம்மில் நிறைய உள்ளன. தொழுநோய் மற்றும் கொரோனா தந்த தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை என்று பலரும் பேச கேள்விப்பட்டோம். அப்படியே நம்மை எண்ணவும் வைத்தது. இப்படியாக தனித்து வாழ்பவர்களையும், தனிமையில் விடப்பட்டவர்களையும் கடவுள் நான் விரும்புகின்றேன் குணம்பெறுங்கள் என்று குணப்படுத்துவதை இன்றைய வசகங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

அன்புக்குரியவர்களே இன்றைய சூழலில் நாம் இரண்டு வகையான தனிமையை அனுபவிக்கின்றோம். முதலாவதாக தானாக முழுமனதுடன் தேடி கொள்ளும் தனிமை இது நமக்கு நன்மையாக அமையும். இரண்டாவதாக நம் மீது திணிக்கப்படும் தனிமை அது தீமை விளைவிக்கின்றது.

01. தானாக முழுமனதுடன் தேடி கொள்ளும் தனிமை
நாமாக தேடிய தனிமை நம்மை புரிந்து கொள்ள உதவுகின்றது. இதைத்தான் துறவிகள் மேற்கொண்டார்கள். நான் யார், எனக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் என்ன சம்பந்தம் என்று உணர்ந்து கொள்ள தனிமை உதவுகின்றது. நம்மை, நாமே ஒரு கண்ணாடியில் பார்ப்பதுபோல், சுயவிசாரனை செய்து கொள்ள தனிமை ஒரு சிறந்த கருவியாகும்.

தனிமையில், நம்முடைய செயல்களை, வினோதமான பழக்கங்களை, ஆசாபாசங்களை அலசி பார்க்க ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது. சில நேரம் உலக வாழ்க்கையிலிருந்து விலகி இருக்க உதவுகிறது. இது நம்முடைய ஆழ்மனதின் தவிற்க்ககூடிய பக்குவங்களையும் பழக்கங்களையும் (conditioning) உதற உதவுகிறது. இதை தான் இந்திய ஆன்மீகத்தில் தபஸ் என்று சொன்னார்கள். இயேசும் விரும்பியே பல நேரங்களில் தனிமையை தேர்ந்துகொள்கின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு தனிமையிலே தனிமையான இடங்களில் தங்கி வந்தார் என்றும் இறைவனிடம் ஜெபிப்பதற்காக பல வேளைகளில் தன்னையே தனிமைபடுத்திக் கொண்டார் என்று விவிலியத்திலே நாம் வாசிக்கின்றோம்.


02. நம் மீது திணிக்கப்படும் தனிமை
இதே தனிமை நம் மீது திணிக்கப்பட்டால் சிறையில் இருப்பதுபோல் மிக கொடுமையாகும். திணிக்கப்படும் தனிமை நம்மை மனநோய்க்கு இட்டுச்செல்கின்றது. உதாரணமாக உறவினர்களோ, நண்பர்களோ இல்லாத நபர்களை பார்த்தால் தெரியும், அவர்கள் எப்படி தவிக்கிறார்கள் என்று. முதியோர்களை கேட்டுப்பார்த்தால், தனிமையின் தாக்கத்தை பற்றி வரலாறே சொல்வார்கள். இன்றைய விஞ்ஞான உலகத்தில் நமக்கும் அனைத்தும் இருந்தும் அனைத்தும் இல்லாதது போன்ற தனிமையை ஏதோஒரு காலக்கட்டத்தில் நாம் அனுபவித்து வருகின்றோம். எனவே சூழ்நிலைகளால் திணிக்கபடும் தனிமை ஒரு கொடுமை என்றும்; தானாக தேடும் தனிமை ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர்.

"தனிமை நம்மை அரைப் பைத்தியமாக்குகிறது. அதிலிருந்து தப்பிக்க நாம் ஒரு துணையை நாடுகிறோம். அவர்களோ நம்மை முழு பைத்தியமாக ஆக்கிவிடுகிறார்கள் என ஒரு கட்டுரை ஆசிரியர் கூறுகின்றனர். எனவே தனிமைக்கான காரணங்களை உணர்ந்து தனிமையில் இறைவனை காண்போம் வாருங்கள்.


01. தனிமை ஓர் மிகச் சிறந்த ஆசான்
பிரியமானவர்களே முதலாவதாக உண்மையில் தனிமை ஓர் மிகச் சிறந்த ஆசான். வாழ்க்கையை பற்றிய சரியான, உண்மையான பாடங்களை கற்றுக் கொடுப்பதே தனிமை தான்.

02. தனிமை ஓர் சிறந்த நண்பன்
இரண்டாவதாக தனிமை ஓர் சிறந்த நண்பன். உங்கள் மீது உண்மையான அன்பு செலுத்துபவர்கள் யார்? உங்களிடம் நேர்மையாக நடந்துக் கொள்பவர்கள் யார்? என்பதை தனிமை தான் உணர்த்துகிறது. அதனால்த்தான் என் இனிய தனிமையே என்று தமிழ் பாடல் வரிகள் கூட தனிமையை அனுபவிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

மனிதன் தனிமையாக உணர காரணங்கள் எவை?

01. தோற்றம் தரும் தனிமை
ஒரு நபரின் தோற்றமானது, மற்றவர்களின் தோற்றத்துடன் ஒப்பிடும்போது வேறுபட்டால், 'நான் மற்றவர்கள் போல் இல்லையே; என்னிடம் இந்த குறையிருக்கிறது' என்ற உணர்வும், எதிர்மறையான எண்ணங்களுமே அவரை தனிமைக்குள் தள்ளிவிடும். இந்த தனிமை மற்றவர்களோடு நம்மை இயல்பாக பழகவிடாது. தோற்றத்தால் ஏற்படும் தனிமையைப் பற்றி விவிலியத்தில் நிறை குறிப்புகள் உள்ளன. முக்கியமாக இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது; 2 "ஒருவர் உடலின் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவரைப் பார்த்த குரு அவரைத் தீட்டுடையவர் என முடிவு செய்து ஏழு நாட்களுக்கு அவர் தனிமைபடுத்தி இருக்க வேண்டும். மேலும் நோய் உள்ள நாட்கள் வரை அவர் தன்னையே தனிமைபடுத்தி இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

மேலும் எண்ணிக்கை புத்தகம் 12:10-ல் மோயீசனுடைய சகோதரி மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; மிரியாம் ஏழு நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; யோபு தன்னுடைய உடல் தோற்ற மாற்றத்தினால் தனிமைபடுத்தப்பட்டார். இதுபோன்று ஒருவர் மற்றவர் மீது சுமத்தப்படும் தனிமை அவர்களை மிக கொடுமையான வாழ்க்கைக்கு உள்ளாக்கியது.

இன்றும் உடல் தோற்றத்தை வைத்து எத்தனை மனிதர்களை நாம் தனிமைபடுத்தி வருகின்றோம்?
02. அனுபவங்கள் தரும் தனிமை:
மனிதர்களுடைய மோசமான அனுபவங்கள் அவர்களுக்கு தனிமை உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. அனுபவங்கள் தந்த அச்சம் அவர்கள் நினைவில் நிற்கும் போதும், மனிதர்கள் தங்களுக்கு இழைத்த துரோகங்கள், அவமானங்கள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள், பிறரிடம் நாம் சொல்லும் ரகசியம் காக்கப்படாதபோது, நட்பாகி துரோகம் செய்த அனுபவங்களை சந்திக்கும் போது மனிதர்கள் தனிமைக்கு தள்ளப்படுகின்றனர்.

உதாரணமாக 1 அரசர் 17-19-ல் சமாரியாவை ஆட்சி செய்த ஆகாபு அரசன் ஈசபேலை மணந்து கொண்டு பாகால் தெய்வத்தை வழிபட்டு கடவுளுக்கு எதிராக துரோகங்களை இழைக்கின்றான். எனவே இறைவாக்கினார் எலியா அவனது செயல்பாடுகளை கண்டித்து இறைவாக்கு உரைக்கின்றார். இதையறிந்த ஈசபேல் அரசி எலியாவைக் கொல்ல வழிதேடுகின்றார். உடனே எலியா உயிருக்கு பயந்து தப்பித்து ஓடுகின்றார். தன்னையே தனிமைபடுத்திக் கொள்கின்றார். எலியாவின் அனுபவங்கள் அவரை தனிமைக்கு இட்டுச்செல்கின்றது.

என் வாழ்வில் தனிமைக்கு இட்டுச்செல்லும் அனுபவங்கள் எவை?

03. வயது தரும் தனிமை:
தனிமைக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது வயது. குறிப்பாக நம் நாட்டில் 45 சதவிகிதத்துக்கு மேலான முதியவர்கள் தனிமையை உணர்வதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்கள், கேட்கும் திறன் பாதிக்கபட்டவர்கள், கண் பார்வை இழந்தவர்கள் என தனிமையை சந்திக்கும் நபர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களின் வயது மிகப்பெரிய தனிமையை இவர்களுக்கு விட்டுச்செல்கின்றது.

உதாரணமாக தொ.நூல் 16:3-5-ல் ஆபிரகாமின் மனைவி சாராய் தன்னுடைய வயது காரணமாகவும், இதற்கு மேல் குழந்தை பெற தகுதியற்றவர் என நினைத்து தன்னுடைய எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். ஆகாரும் கருவுற்றாள். ஆகார், தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவி சாரா வயதில் முதிர்ந்தவரும், கருவுற இயலாதவரும் என அறிந்து சாரவை ஏளனத்துடன் நோக்கினாள். 5 அப்பொழுது சாராய் ஆபிராமிடம், நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்" என்றார். இங்கு சாராவின் வயது மூப்பின் அனுபவம் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகாரை தனிமைப்படுத்த துண்டுகின்றது.

இன்று எனது குடும்பத்தில் இருக்கும் வயது முதிந்தவர்களை நான் தனிமை படுத்துகின்றேனா?

04. சமூகம், சூழல் ஏற்படுத்தும் தனிமை
ஒரு மனிதரின் சமூகம், அவர் பிறந்து வளர்ந்த சூழல் அவரை தனிமை படுத்துகின்றது. இன்று சாதியத்தால் ஒரு சமூகமே தனிமைபட்டு இருப்பதை அன்றாட நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. மேலும் சொந்த ஊரை விட்டு வெளி இடங்களுக்கு கல்வி நிமித்தமாகவோ, வேலை நிமித்தமாக செல்லும் போது, புதிய இடம், புதிய மொழி, புதிய கலாச்சாரம் அவர்களுக்கு தனிமை உணர்வை ஏற்படுத்துகிறது. இதைப்போலத்தான் எரேமியா என்ற இறைவாக்கினர் தன் வாழ்நாள் முழுவதும் தனிமையிலே வாழ்ந்தவர். சொந்த மக்களாளே தனிமை படுத்தப்பட்டவர்.

என் வாழ்வில் எந்தெந்த சந்தர்பங்களில் நான் தனிமையை உணர்கின்றேன்?

தனிமைக்கான அறிகுறிகள்:
01. காரணமே இல்லாமல் சோகமாகவே இருப்பது.
02. ஒருவிஷயத்தை யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைத்து கடைசியில் பகிர ஆள் இல்லாமல் அந்த விஷயத்தை நிராகரிப்பது.
03. என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என வருத்தப்படுவது.
04. இந்த நேரத்தில் யாராவது என்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பது.
05. மற்றவர்களின் நட்பை பார்த்து பொறாமைப்படுவது.
06. மற்றவர்கள் நம்மை விலக்கி வைத்திருப்பதாக நாம் நினைப்பது.
07. யாராவது அனுப்பிய குறுந்தகவலையோ, அவர்களுடன் பழகிய நாட்களையோ மறுபடியும், மறுபடியும் எண்ணி பார்ப்பது.

இவற்றில் எல்லாவற்றுக்கும் 'ஆமாம்' என்று நினைத்தால், நாம் அனைவருமே பயங்கரமான தனிமையில் இருக்கின்றோம் என்று அர்த்தம்.

பிரியமானவர்களே இன்றும் இதுபோன்ற தனிமைபடுத்துதல் நம்முடை குடும்பத்திலும், சமூதாயத்திலும் அன்றாடம் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. இன்றைய கணக்கின்படி 10-ல் 3 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என ஓர் அறிக்கை கூறுகின்றது. இதற்கு காரணம் தனிமையின் உச்சக்கட்டம். தனிமை மனிதர்களின் மனதையும், உடலையும் மிகவும் வெகுவாக பாதிக்கின்றது. தற்கொலைக்கான வழிகளையும் இந்த தனிமை ஏற்படுத்துகின்றது. எனவே நம் வாழ்வில் நாம் சந்திக்கும் தனிமைகளை கண்டுகொண்டு அதலிருந்து வெளிவர முயற்ச்சிப்போமா?

பிரசன்னத்தை உணர்ந்தால் தனிமை தவிடுபொடியாகிவிடும்
இந்த தனிமை தரும் பாதிப்புகளில் இருந்து வெளிவர ஒரே ஒரு காரியம் மட்டும் நாம் செய்ய வேண்டும். அதாவது பிரசன்னத்தை உணர வேண்டும். அது கடவுளின் பிரசன்னமாக இருக்கலாம், அல்லது உற்றார், உறவுகளின் பிரசன்னமாக இருக்கலாம், அல்லது நம்முடைய விலங்குகள், தோட்டம், புத்தகம், உதவி செய்தல் போன்ற (கடவுள், மனிதன், விலங்குகள், இயற்கை) பிரசன்னங்களை நம் வாழ்வில் உணரும் போது தனிமை தவிடுபொடியாகிவிடும்.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் நீங்கள் எதைச்செய்தாலும் கடவுளின் மாட்சிக்காகவே அவரது பிரசன்னத்தை உணர்ந்து செய்யுங்கள் என்றும், யாரும் யாருக்கு இடையூராய் குறிப்பாக தனிமையை தினிக்ககூடியவராக இராதீர்கள் என்கின்றார். மேலும் தூய பவுல் கிறிஸ்து வாழ்ந்ததைப் போன்று நானும் வாழ்கின்றேன்; நீங்களும் என்னைப்போல வாழுங்கள் என்கின்றார். இப்படி வாழ்ந்தோம் என்றால் நாமும் தனிமையை உணர மாட்டோம்; மற்றவரையும் தனிமையில் தள்ளிவிடமாட்டோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த தொழுநோயாளர் இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்து அவரிடம் வந்து விரும்பினால் எனது நோயை குணமாக்கும் என்று கூற இயேசுவும் அவரை தனிமைபடுத்த விரும்பாமல் தன்னுடைய கையை நீட்டி அவரை தொட்டு நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்கின்றார். அந்நேரமே அவர் தனிமை என்ற மனநோயில் இருந்தும், தொழுநோய் என்ற உடல் நோயில் இருந்தும் குணம் பெருகின்றார்.

தனிமை தானாக முழுமனதுடன் தேடி கொண்டால் நன்மையாக அமையும். நம் மீது தனிமை திணிக்கபட்டால் அது தீமை விளைவிக்கக்கூடும்.

சிந்தனைக்கு: என் வாழ்வில் எந்தெந்த சந்தர்பங்களில் நான் தனிமையை உணர்கின்றேன்?
அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்,
பதோனி ஆற்றுபடுத்துதல் இல்லம், திருச்சி.