இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு

மனிதர்கள் காண்பதும்; கடவுள் காண்பதும்

ஏசாயா 56:1, 6-7
உரோமையர் 11:13-15,29-32
மத்தேயு 15:21-28

இறைஇயேசுவில் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே! உலகில் உள்ள படைப்புக்கள் அனைத்தும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்கள் எல்லோரும் அடுத்தவரை எப்போதும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். பார்வைகள் தான் மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் அவன் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்க்கும் பார்வையில் பல வித்தியாசங்கள் இருக்கிறது. யாரும் ஒரே மாதிரி பார்ப்பதே இல்லை. ஒவ்வொருவரின் பார்வையும் தனித்துவமாக இருக்கும். அந்த பார்வை முறைதான் அவர்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், விரும்பக் கூடியவர்களாகவும் மாற்றுகிறது. இன்றைய வாசகங்களும் நம்முடைய பார்வைகளை விசாலப்படுத்தி வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

முதல் வாசகத்திலே கடவுளின் பார்வை விசாலமான பார்வையாக இருக்கின்றது. மக்கள் பார்வையில் கடவுளின் இல்லமனது ஒருசிலருக்கு மட்டுமே சொந்தம். தகுதி உள்ளவர்கள் மடடுமே கடவுளின் இல்லத்தில் நுழைய முடியும். என்ற கருத்தை உடைத்து கடவுளின் இல்லம் அனைவருக்கும் சொந்தம் என்ற சிந்தனையை விதைக்கின்றார். உதாரணமாக 2 குறிப்பேடு 23:5-6-ல் “மக்கள் எல்லாரும் ஆண்டவரின் இல்லத்து முற்றத்தில் நிற்க வேண்டும். குருக்களையும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் லேவியரையும் தவிர வேறெவனும் ஆண்டவரின் இல்லத்துள் நுழையக் கூடாது. திருக்கோவிலுள் நுழையும் மற்ற எவனும் கொல்லப்படுவான். புனிதப்படுத்தப்பட்ட இவர்கள் மட்டுமே நுழையலாம். மக்கள் அனைவரும் ஆண்டவருக்கான காவலில் கருத்தாய் இருப்பார்களாக”! என்ற கருத்தை உடைத்து என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’என அழைக்கப்படும் என்கிறார். ஆக கடவுளின் பார்வை மனித பார்வை போன்றது அல்ல என்று விளக்குகின்றார்.

அதைப்பேலவே தூய பவுல் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத குலத்தில் பிறந்திருந்தாலும் அவருடைய பணியும், பார்வையும் பிற இனத்து மக்களை சார்ந்து இருந்தது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் “பிறஇனத்து மக்களுக்கு திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியை குறித்து பெருமை கொள்கின்றேன்” என்கிறார். பவுலின் பார்வை விசாலமாக இருப்பதை நாம் பார்க்கின்றோம். என் பார்வையில் நான் பெருமை கொள்ளும் செயல் எதுவாக இருக்கின்றது.?

மேலும் நற்செய்தியில் இறைமகன் இயேசுவின் பார்வையும் விசாலமாக இருக்கின்றது. தன்னுடைய சீடர்களைப் பார்த்து “இஸ்ராயேல் குலத்தாருள் காணமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்று தன்னுடைய பார்வையை விசாலப்படுத்துகின்றார்.

பிரியமானவர்களே இன்று என்னுடைய பார்வை குறுகியதா? விசாலமானதா? நற்கருணை வழியாக கடவுளை உட்கொள்ளும் நான் கடவுளின் பார்வையை கொண்டுள்ளேனா? அல்லது மனிதர்களின் பார்வையை கொண்டுள்ளேனா? சிந்திப்போமா?

அன்புக்குரியவர்களே இன்று பல மனிதர்கள் கண்கள் இருந்தும் குருடராய் வாழ்ந்து வருகின்றனர். யோவ், கண்ணை எங்கேயா வச்சிருக்க? பார்த்து வரதில்ல?’ ரோட்டில் நடந்து செல்லும்போது யாரையாவது இடித்து விட்டால் நாம் கேட்கும் வார்த்தைகள். நம்மை யாராவது இடித்துவிட்டால் நாமே கூறும் வார்த்தைகள். கண் இருந்தும் பலர் பல நேரம் குருடர்களாய் நடந்து செல்கிறோம். நடந்து கொள்கிறோம்.

முதலாண்டு உயர் நிலைப் பள்ளியில் 2014 வரை கற்பிக்கப்பட்ட ஆங்கிலப் புத்தகத்தில் டேவிட் லாம்போனின் “LIFTING THE VEIL”, எனும் அருமையான கதையில் வரும் ஒரு கண்பார்வை இல்லாதவர், தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இடத்தில் சுற்றும் நிகழும் காட்சிகளை அவருக்கு விளக்கிச் சொன்ன ஒரு நண்பரிடம், இருவரும் பிரியும் நேரத்தில் சொன்ன வார்த்தைகள்
“எவ்வளவு அழகாக நீங்கள் எனக்காக எல்லாவற்றையும் பார்த்தீர்கள்?. இதற்கு உரிய விதத்தில் நன்றி சொல்ல என்னால் ஒரு போதும் இயலாது”. (நான் கொடுத்த பெயர் ஜான் - கண் பார்வையில்லாதவர், ராஜா –வழிநடத்துபவர்).

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜான் 60 வயதானவர், தன்னுடைய 17 ஆம் வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால் கண்பார்வை இழக்க நேரிட்டது. இருப்பினும் அவர், அவரது மற்ற நான்கு புலன்களின் உதவியுடன் உலகெங்கும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதுண்டு. ஒருமுறை ஒரு பிரபல கம்பெனியில் பேக்கேஜ் டூர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கம்பெனியில் நன்கு வேலை செய்யக்கூடிய ராஜா என்ற ஒருவரை அழைத்து ஒரு சீனா நண்பருடன் சுற்றுலா செல்ல அனுப்பி வைத்தனர். இவருக்கோ விருப்பமில்லை. அவர் சுற்றுலாவுக்கு மகிழ்ச்சியுடன் போக முடியாததற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் செய்ய வேண்டிய வேலைகளை, அவர்தான் சுற்றுலா முடித்து வந்துச் செய்ய வேண்டும். இரண்டாவதாக, அவர் சீனா நண்பருடன் சுற்றுலா போகும் இடம் பழக்கப்பட்டது. இது போல் பல முறை, பலருடன் நிறுவனத்திற்காகப் போன இடம்.

மறுநாள், சிரித்தபடி சீனா நண்பர் ஜானுடன் ஒரு பேருந்தில் பயணிக்கின்றார். அப்போது கண்பார்வை இழந்தவர்கள் வைத்திருக்கும் ஊன்றுகோலைப் பார்த்த பின் தான் தன்னோடு பயணிப்பவர் கண்பார்வை இழந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டார். தாய்லாந்தில் பல இடங்களிலும் சுற்றினார்கள்.

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டே விடுதியை வந்தடைந்தனர். இறங்கும் போது அவர் ராஜாவிடம், தன்னுடன் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றும், தனக்காகச் சுற்றிலும் உள்ளவற்றை விளக்கிக் கூறவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதற்கு ராஜா சம்மதித்து விட்டார். இவ்விருவரும் அங்கிருந்த ஒரு மேடைக்கு அருகே அமர்ந்தனர். உணவுகள் பரிமாறப்பட்டன. கண்பார்வை இழந்தவர், உணவருந்திக் கொண்டே சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களைப் பற்றிக் கேட்க, ராஜா ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனித்துச் சொல்லத் தொடங்கினார்.

அப்போதுதான் ராஜாவும் கவனிக்கிறார், உலகின் பல நாட்டவர்கள், பல வயதினர்கள், பலவிதமான உடையணிந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பதை. இடையே மேடையிலிருந்து இசைக்கலைஞர்கள் இன்னிசை வழங்கத் தொடங்கியதும், அவர்கள் கையிலிருந்த ஒவ்வொரு இசைக் கருவியையும் விவரிக்கும் போது ராஜா உண்மையிலேயே வியந்து போனார். பலமுறை அங்கு வந்திருந்த அவர், இதற்கு முன், ஒரு போதும் அவர்களையோ, இசைக் கலைஞர்களையோ, இசைக் கருவிகளையோ கவனித்ததே இல்லை! அதன் பின், அங்கு நடந்த பல செயல்களை விவரித்து கூற ஆரம்பிக்கின்றார்.


நிகழ்ச்சிக்குப் பின் எல்லோரும் பிரிய வேண்டிய நேரத்தில் பார்வை இல்லாத மனிதர் ராஜாவிடம் சொன்ன வார்த்தைகள்தான் இது; “எவ்வளவு அழகாக நீங்கள் எனக்காக எல்லாவற்றையும் பார்த்தீர்கள்?. இதற்கு உரிய விதத்தில் நன்றி சொல்ல என்னால் ஒரு போதும் இயலாது”என்றார்.

உடனே ராஜா ஐயா “இத்தனை நாள் கண்கள் இருந்தும் இவற்றை எல்லாம் காணாதிருந்த என் கண்களை மூடியிருந்த திரையை அகற்றி, நீங்கள் தான் என்னை அதையெல்லாம் காண உதவினீர்கள். எனவே, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறி விடை பெற்றார்.

பிரியமானவர்களே கடவுள் நமக்கு ஐம் புலன்களையும் நல்ல விதத்தில் படைத்துள்ளார். ஆனால் பல வேளைகளில் நம்மை சுற்றி நடக்கும் பல விசயங்களை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. ஒரு விபத்து நடக்கும் போது பார்த்தும் பார்க்காதது போல செல்லும் தருணங்கள்; ஒருவர் மற்றவர் மீது தாக்குதல் நடத்தும் போது அவர்களை சமாதனம் செய்ய தவறிய தருணங்கள்; உதவியில் இருக்கும் மனிதர்களை பார்த்து உதவி செய்ய மறுத்து விமர்சனங்களை எழுப்பிய தருணங்கள்; அதிலும் குறிப்பாக இன்றைய சூழலில் மற்றவர்களுக்கு எது நடந்தாலும் செல்பி எடுத்து லைக் வாங்கும் பார்வையுள்ள குருடர்கள் நம்மில் எத்தனை பேர்…

இப்படி நம்மைப் போல வாழ்ந்த மனிதர்கள் தான் இயேசுவின் சீடர்களும். சீடர்கள் இயேசுவை அனுகி நமக்கு பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே இவரை அனுப்பிவிடும் என்று கண்ணுள்ள சீட்ர்கள் இயேசுவை பார்த்து கூறுகின்றார். இவர்களை திருத்தும் விதமாக இவர்களைப் பார்த்து “இஸ்ராயேல் குலத்தாருள் காணமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்று தன்னுடைய பார்வையை விசாலப்படுத்துகின்றார்.

மூன்று விதமான மனிதர்களின் பார்வைகள்

01 தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்ர்களின் பார்வை:
ஏசாயா 23, மற்றும் எசேக்கியேல் 26-28, யோவேல் 3:4-6-ம் அதிகாரங்களில் தீர், சீதோன் நகரைப் பற்றி நாம் விரிவாக வாசிக்க முடியும். இந்த இரண்டு நகரில் வாழும் மக்கள் கடவுளின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்றும், சமூதாயத்தில் புறந்தள்ளப்பட்டவர்களாக கருதப்பட்டனர் என்ற கருத்தை உள்வாங்கியவர்களாக வாழ்ந்து வந்தனர்.

இரண்டாவதாக பெண் என்றலே யூத சமுதாயத்தில் கீழானவர்களாக கருதப்பட்ட காலம். அதுவும் கானானேயப் பெண் என்றாலே அவர்களுக்கு எந்த உதவியும் செய்யலாகாது என்று கற்பிக்கப்பட்டது. உதராணமாக இணைச்சட்டம்: 7:2-ல் கானானியர், எமோரியர்… இவர்களை நீர் முறியடித்து, முற்றிலும் அழிப்பாய், அவர்களேடு உடன்படிக்கை செய்யவோ, அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம் என அறிவுறுதப்பட்டு வந்தது. ஆக கானானேயர்களுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்ற சிந்தனையில் வாழ்ந்தவர்கள் தான் நம்முடைய சீடர்கள். கடவுளின் அருளும், ஆசீரும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே தவிர புறவினத்தாருக்கு கிடையாது என சிந்தித்த சீடர்களின் பார்வை.

எனவேதான் கானானியப் பெண் தன்னுடைய மகனுக்காக உதவி கேட்கும் போது அப்பெண்ணின் தேவையை காண சீடர்களின் கண்கள் மறைக்கப்பட்டு விட்டன. சீடர்கள் இயேசுவை அனுகி நமக்கு பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே இவரை அனுப்பிவிடும் என்று பார்வையுள்ள சீடர்கள் பார்வை குன்றியவர்களாய் இயேசுவை பார்த்து கூறுகின்றார்.


கானானியப் பெண்ணின் பார்வை:
இயேசுவின் சீடர்கள் தம்மை ஏளனப்படுத்தினாலும், இயேசுவின் வார்த்தைகள் எனது நம்பிக்கையை குறைத்தாலும் எடுத்த சபதத்தில் நான் வெற்றி பெருவேன் என்று இயேசுவின் பின்னாலே கத்திக்கொண்டும், கதறிக்கொண்டும் “ஐயா, எனக்கு உதவியருளும்” என்று நம்பிக்கையோடு இயேசுவை பின்தொடர்ந்து வருகின்றார்.

இயேசு அவரைப் பார்த்து "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்ற போது அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்று புதிய பார்வையை இயேசுவிடம் கூறுகின்றார். ஆக இந்த பெண்ணின் பார்வை எப்படியும் கடவுள் எனக்கு உதவி செய்வார் என்ற முழு நம்பிக்கையில் தன் பார்வையை விரிவுபடுத்துகின்றார். கடவுளின் ஆசீர்வாதத்தையும், பாரட்டையும் பெருகின்றார்.


இயேசுவின் பார்வை:
ஆண்டவர் இயேசு இந்த வரலாற்று ஏற்றத்தழ்வுகளை முற்றிலும் அறிந்தவராய் தன்னுடைய சீடர்களுக்கு புதிய பார்வையை கற்பிக்கின்றர். தன்னை நோக்கி எனக்கு உதவியருளும் என்று கத்திக்கொண்டும், கதரிக்கொண்டும் வந்த பெண்ணிடம் எதுவும் பேசாத இயேசு தன்னுடைய சீடர்கள் இவரை அனுப்பிவிடும் என்று மரியாதை குறைவாக மற்றவரை தீர்பிடும் போது அந்த பெண்ணை பார்த்து இயேசு அம்மா என அழைத்து பெண்ளுக்கான பெருமையை வழங்குகின்றார்.

இரண்டாவதாக தன்னுடைய பணி மக்கள் அனைவருக்கும் என்ற சிந்தனையை சீடர்களிடததில் விதைக்கின்றார், மூன்றாவதாக சீடர்களின் நம்பிக்கையை காட்டிலும் அந்த பெண்ணின் நம்பிக்கை பெரியது என தன்னுடைய சீடர்களுக்கு சுட்டி காண்பிக்கின்றார்.


பிரியமானவர்களே, யேசுவின் பார்வை வித்தியசமானது, விசாலமானது, இன்று எனது பார்வை - என்னுடைய ஜாதி, என்னுடைய மதம், என்னுடைய இனம் என்று குறுகியதா? அல்லது அனைவரையும் ஒரு கூட்டுக்குள் அரவனைக்கும் இயேசுவின் பார்வையா?