இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு

பயம் தருவது வாழ்வா? சாவா?

1 அரசர் 19: 9, 11-13
உரோமையர் 9:1-5
மத்தேயு 14:22-33

அது ஒரு அழகிய கிராமம். நிறைய வயல்கள் அவற்றோடு மிக உயர்ந்த தென்னை மரங்கள் என கம்பீரமாக காட்சியளித்தது. ஒரு நாள் அந்த தென்னந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் ஒரு நல்ல பாம்பு வசித்து வந்தது. இதையறிந்த அந்த தோட்டக்காரர் பல முயற்ச்சிகள் எடுத்தும் அந்த பாம்பை விரட்ட முடியவில்லை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே இந்த ஒரு மரத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா மரங்களில் இருந்தும் தேங்காய்களைப் பறிப்பார். அப்படி ஒரு நாள் தேங்காய் பறிப்பதற்காக ஒருவர் வருகின்றார். அவரும் எல்லா மரங்களில் இருந்து தேங்காய்களை பறித்துவிட்டு கடைசியாக இந்த பாம்பு குடியிருக்கும் மரத்தில் ஏறுகின்றார். அப்போது அங்கிருந்த அனைவரும் அந்த மரத்தில் ஏறவேண்டாம் என்று கூறுகின்றனர். ஆனால் இவர் மிகவும் தைரியமாக மரத்தின் மீது ஏறுகின்றார். காய்களை பறிக்கின்றார். அப்போது அந்த மரத்தில் இருக்கும் பாம்பை கண்டு விடுகின்றார். உடனே தான் வைத்திருந்த அரிவாளால் பாம்பின் தலையை வெட்டுகின்றார். பாம்பு இரண்டு துண்டாக தரையில் விழுகின்றது. அனைவருக்கும் ஆச்சரியம். இவரது தைரியத்தை பாரட்டுகின்றனர்.

இவர் மரத்தில் இருந்து கீழே இறங்குகின்றார். கீழே இறங்கியவுடன் அருகில் இருந்த ஒருவர் இவரது காலில் இரத்தம் வருதை கவனித்து ஐயா உங்கள் காலில் இரத்தம் வடிகின்றது. ஒருவேளை பாம்பு உங்ளை கடித்து இருக்குமோ! என்கிறார். அருகில் இருந்தவர்களும் அப்படியே கூற அடுத்த சில விநாடிகளில் வாயில் நுரை தள்ளி இறந்து விடுகின்றார். பிரியமானவர்களே எங்களது ஊரில் நடந்த உண்மை சம்பவம். இந்த மனிதன் மிகவும் தைரியசாலி. நல்ல பாம்பு மரத்தில் குடியிருக்கிறது எனத்தெரிந்தும் தைரியத்தோடு மரம் ஏறுகின்றார். தேங்காய்களை பறிக்கின்றார். பாம்பையும் பார்த்துவிடுகின்றார். சமயோஜிதமாக முடிவெடுத்து தன்னுடைய அரிவாளால் தைரியமாக பாம்பின் தலையை இரண்டாக வெட்டுகின்றார். இவ்வளவு தைரியம் நிறைந்த மனிதர் தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் இவருக்கு பாம்பு கடித்து விட்டது அதனால்த் தான் காலில் இரத்தம் வடிகிறது என்ற சொன்னவுடன் அந்த பயத்தில் இவர் இறந்து விடுகின்றார்.

இதற்கு காரணம் அவரது பயம். மரத்தில் ஏறியவருக்கு தென்னமட்டை குத்தி இருக்கலாம், அல்லது தென்னம்பாலை குத்தி இரத்தம் வந்திருக்கலாம். ஆனால் சுற்றிஇருந்தவர்களின் அவநம்பிக்கை, அவர்களின் பயம் இவரின் உயிரை எடுத்துவிட்டது. தன்னம்பிக்கையோடு இருந்த போது தைரியமாக வாழ்ந்த மனிதர் பயத்தினால் இறந்து விடுகின்றார். இன்றும் மனிதர்களின் இறப்புக்கு முக்கிய காரணம் அவர்களின் பயம் என்று கூறப்படுகின்றது.

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய முதல் வாசகத்தில்
எலியா இறைவாக்கினர் தன்னுடைய உயிருக்கு பயந்து கடவுளை விட்டு ஓடுகின்றார். காரணம் ஈசபெல் அரசி எலியாவிடம் "நீ அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும்" என்று சொன்னதைக் கேட்டு எலியா அச்சமுற்று, தம் உயிரைக் காத்துக் கொள்ளுமாறு தப்பி ஓடினார். ஆனால் கடவுள் பயப்படதோ, தைரியமாக இரு எனச்செல்லி எலியாவை திடப்படுத்துகின்றார்.

இரண்டாம் வாசகத்தில தூயபவுல் என் உள்ளத்தில் எனக்கு பெருந்துயரமும், இடைவிடாத வேதனையும் என்னை வாட்டுகின்றது என்கிறார். பவுலின் இந்த துன்பமும், இடைவிடாத வேதனைக்கு மத்தியிலும் இயேசுவுக்கு சாட்சியாக வாழ அவர் முடிவெடுக்கின்றார். பிலிப்பியர் 4:13 “எனக்கு வலுவுட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்று நம்பிகையைப் பெறுகின்றார்.

நற்செய்தி வாசகத்திலே தூய பேதுருவும், சீடர்களும் பயத்தினால் ஆட்கொள்ளப்படுகின்றனர். ஆனால் இயேசு அவர்களின் பயத்தை போக்க வருகின்றார். பிரியமானவர்களே பேதுரு ஒரு மீனவர், பலமுறை கடலில் பயணம் செய்தவர், கடலைப் பற்றி நன்கு அறிந்தவர். இயேசு அவரிடம் கடல்மீது நடந்து வா எனக் கட்டளையிட்டதும் கடலிலே நடக்க ஆரம்பிக்கின்றார். கடல் நீரில் நடக்க முடியாது எனத்தெரிந்தும் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றார். கடல் மீது நடக்கின்றார்.

ஆனால் எப்போது அவர் தன்னைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தாரோ குறிப்பாக . பலமுறை நான் கடலில் பயணம் செய்து இருக்கின்றேன்; ஆனால் இதுபோல் கடலில் ஒருபோதும் நான் நடந்து செல்லவில்லை. நான் கடலில் நடக்கின்றேன் என்ற பெருமிதம், அவரை கீழே விழ வைக்கின்றது. தண்ணீரில் முழ்கும் போது ஆண்டவரே என்னை காப்பாற்றும் என பயத்தில் கத்துகின்றார். ஒரு மீனவனுக்கு இருக்க கூடாத பயம் அவரை ஆட்கொள்கின்றது. எத்தனை தடவை கடலில் அவர் விழுந்து இருக்கலாமட, நன்கு நீச்சல் தெரிந்திருக்கும் ஆனால் இவரது பயம் இவரை கீழே அழுத்துகின்றது. ஆனால் கடவுள் இவரது பயத்தை போக்கி நம்பிக்கையையும், கடவுளின் உடனிருப்பையும் அவருக்கு வெளிப்படுத்துகின்றார்.

அன்புக்குரியவர்களே பயம் என்ற உணர்வு, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான் நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கிறது. தொடர்ந்து நம்மை வாழவைக்கிறது. உதாரணமாக நெருப்பை பற்றி பயம் தீயிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றது. விபத்து பற்றிய பயம் நம்மை மெதுவாக வாகனம் ஓட்ட தூண்டுகிறது. இப்படி பல. எனவே, பயம் மிகவும் அவசியமானது. அதேவேளையில் பயம் என்னும் நோய் மனிதனை வாட்டுகின்றது. மனித உயிரையும் பறித்து வருகின்றது.


இந்த பயத்தை இரண்டு வகைப்படுத்தலாம். தேவையான பயம்; (wanted fear or constructive fears) தேவையற்ற பயம் (Unwanted fear or destructive fears). உதாரணமாக பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். பாம்பைப் பற்றிய பயம் அனைவருக்கும் உண்டு. இது தேவையான பயம். அதேவேளையில் துரத்தில் கிடக்கும் ஒரு கயிரைப் பார்த்து பாம்பு என பயந்தால் அது தேவைற்ற பயம். குறிப்பாக இந்த கொரோன காலத்தில் நிறைய மனிதர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகின்றேன். இவர்களையும் ஒருவித பயம் ஆட்கொண்டுள்ளது. கொரேனா என்ற நோயைப் பற்றிய பயம். இங்கு கொரோனா நோய் பயம் என்று கூறுவதைக் காட்டிலும் என்னுடைய உயிரைப் பற்றிய பயமே அதிகம்.

ஒருவர் என்னிடம் வந்து பாதர் எங்களது மேல் வீட்டில் உள்ளவருக்கு கொரோனா; கீழ் வீட்டில் உள்ளவருக்கும் கொரோனா; நான் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா அதனலே ஒருவர் இறந்து விட்டார். நானும் மருத்துவமனைக்குச் சென்று PCR பரிசோதனை, நுரையிரல் Scan என எல்லாம் செய்து விட்டேன் எல்லாம் நார்மலாக இருக்கின்றது. ஆனால் எனக்கு ஒருவித பயம். வீட்டை விட்டு வெளியே வருவதில்லை, ஏன் என்னுடைய அறையை விட்டே வெளியே வருவதில்லை. யாரைப் பார்த்தாலும் ஒருவித பயம், இதனால் சாப்பிட முடிவதில்லை, தூங்க முடிவதில்லை ஒருசில நேரங்களில் தற்கொலை செய்து கெள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன் எனக் கூறினார்.

பிரியமானவர்களே இந்த மனிதருக்கு கொரோனா நோயைக்காட்டிலும் தன்னுடைய உயிரைப் பற்றிய பயம் தான் அதிகம். நான் அவரிடம் கூறினேன் ஐயா, உங்களை சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு கொரோனா உள்ளது. ஆனால் உங்களுக்கு அது கிடையாது. பிறகு ஏன் பயப்படவேண்டும். உங்க் வீட்டில் உள்ள யாருக்கு இந்த நோய்த் தெற்று கிடையாது. பிறகு ஏன் நீங்கள் பயம் கொள்ள வேண்டும். இது தேவையில்லாத பயம் என எடுத்துக்கூறி அவரை ஆற்றுப்படுத்தி அனுப்பிவிட்டேன்.

பாரதியார் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாடி மக்களின் அச்சத்தைப் போக்கினார். ஆனால் இன்று தொலைக்காட்சி பெட்டிகளும், அன்றாட செய்தி தாள்களும் மக்களுக்கு அச்சத்தையே ஊட்டி வளர்க்கின்றது. இந்த பயம் மனிதர்களின் உயிரையும் எடுத்துவிடுகின்றது. இந்த பேதுருவைப்போல, எலியாவைப் போல நாம் அனைவருமே உயிர் வாழவேண்டும் என்று வாழும் போது நமக்கு எதைப்பார்த்தாலும் ஒருவித பயம் நம்மை ஆட்கொள்கின்றது.

பயம் அனைவருக்கும் உண்டு என நாம் அறிந்தாலும் பயத்தின் முக்கியக் காரணி எதுவெனில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையே ஆகும்! சுருக்கமாகச் சொன்னால், பயம் என்பது எதிர்காலத்தை நினைத்துத்தான். எதிர்காலம் என்பது இங்கே அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்தடுத்த வருடங்கள் என அனைத்துக்குமே பொருத்தும். நாம் நிகழ்காலத்தில் இருக்க, நம்முடைய எண்ணங்களோ எதிர்காலத்தில் இருக்கின்றது! இந்த சிந்தனை தான் பயத்திற்கான முக்கியமான காரணியாகும். மத்தேயு நற்செய்தில் ஆண்டவர் இயேசு 6:34-ல் “நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்; அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்” என்கிறார். எனவே பயத்தை களைந்து தன்னம்பிக்கையோடு வாழ முற்ப்படுவோம்.

Fear:
F: Fear of the Future. எதிர்காலத்தை பற்றிய பயம் நம் அனைவருக்கும் உண்டு. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து என் வாழ்வு எப்படி இருக்கும், நான் சம்பாதித்த சேர்த்து வைத்த பணம் என்னவாகும், என்னும் பல

E: Fear of Everything. எதைப்பார்த்தாலும் பயம். கணவன், மனைவி, பிள்ளைகள், நகை, பணம், வேலை, நண்பர்கள், உறவினர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலம். எதைப்பார்த்தாலும் ஒரு வித பயத்திலே நம் வாழ்வு நகர்கின்றது.

A: Fear of Almighty God. கடவுள் பற்றிய பயம். நான் செய்த குற்றங்களினால் குற்ற உணர்ச்சியில் கடளுள் என்னை தண்டித்து விடுவாரோ என்ற பயம். எனவே கடவுளுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் வாழும் நரக வாழ்க்கை பயத்திற்கு இட்டுச் செல்கின்றது.

R: No Right Reasoning. இந்த பயம் அனைத்திற்கும் காரணம் சரியான சிந்தனை கிடையாது. உதாரணமாக நான் கடவுளை நம்புகின்றேன். நிச்சயம் கடவுள் என்னை காப்பாற்றுவார் என்ற சிந்தனை நம்மை எல்லா பயங்களில் இருந்தும் நமக்கு விடுதலை தரும். நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன் எந்த நோயும் எனக்கு இல்லை ஆகவே நோய் பற்றிய பயம் எனக்கு தேவையில்லை. இப்படி என்னிடம் உள்ள சிந்தனைகள் சரியாக இருக்கும் போது நான் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

எனவே அன்புக்குரியவர்களே எலியாவை தேடிவந்து பயத்தை போக்கிய கடவுள், தூய பவுலுக்கு நம்பிக்கையை கொடுத்து பயத்தை நீக்கிய கடவுள், தன்மீது நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், சாவு பயத்தில் இருந்து பேதுருவை திடப்படுத்திய கடவுள் இன்று உங்களுடைய பயத்தை போக்கி நம்பிக்கையை திடப்படுத்துவாரக. நம்முடைய பயம் நமது உயிரை அழித்துவிடும்; ஆனால் கடவுள் மீதுகொள்ளும் அச்சம் நமக்கு ஞானத்தை சரியான சிந்தனையை பெற்றுத்தரும். சரியான சிந்தனை இருக்கும் இடத்தில் பயம் கிடையாது.

அச்சம் என்பது மடமையடா .. அஞ்சாமை மனிதரின் உடமையடா

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்