இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் 16-ம் ஞாயிறு

ஆண்டவரின் உயிர் மூச்சும்; மனிதர்களின் பெருமூச்சும்

சாலமோனின் ஞானம் 12:13, 16-19
உரோமையர் 8:26-27
மத்தேயு 13:24-43

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! கடவுள் இன்று உங்களை நிறைவாக ஆசீர்வதிக்க விரும்புகின்றார். அத்தோடு மட்டுமல்லாமல் தூய ஆவியனவர் உங்களுக்காக பரிந்து பேச காத்திருக்கின்றார். தூய ஆவியனவரின் பரிந்துரை வழியாக ஆண்டவரின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோமா!

இன்றைய சூழலில் உலகமெங்கும் மக்கள் கொத்துக் கொத்தாக கொரோனாவினால் இறந்து கொண்டிருக்கின்றனர். யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரியமலேயே ஒரு வித பயத்திலே பலர் வாழ்ந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் என்னடா துன்பம் இது… போதுமட சாமி இந்த வேதனை… ஐயோ இப்ப நெனச்சாலும் பயமா இருக்கே.. எனக்கு மட்டும் ஏன் இந்த நோய்… ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வறுமையின் கோரபிடி… என்று ஒவ்வொரு நிமிடமும் பெருமூச்சுவிட்டு வாழும் மக்களுக்கு மத்தியில் ஆண்டவரின் உயிர்மூச்சு பற்றியும் மனிதர்களின் பெருமூச்சு பற்றியும் இன்று சிந்திப்பேமா?

"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!" என்று பட்டினத்தார் மனித உடலைப் பற்றி பாடினார். "உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" என்றார், திருமூலர்.
உள்ளத்தில் இருக்கும் உற்சாகம், முகத்தில் இருக்கும் பொலிவு, உடலில் இருக்கும் வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றே. இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! மனிதன் தினமும் அனிச்சையாக செய்யும் செயல்களில் ஒன்று, மூச்சு விடுதல் அல்லது சுவாசித்தல் இவை இரண்டும் தானாகவே, தடைகளின்றி நடந்து வரும். இன்று சுவாசம் சீராக இல்லாததால் கொரோனா நோயினால் மரணம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மற்றொருபுரம் இந்த கொடிய கொரோனா நோயினாலும், வாழ்க்கை சிக்கல்களாலும் மனிதரின் பெருமூச்சும் இறப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அன்புக்குரியவர்ளே தொடக்க நூலில் கடவுள் தான் விரும்பியபடியே தன்னுடைய படைப்புகளை படைக்கின்றார். அதுவும் வார்த்தையாலேயே படைக்கின்றார். அனைத்தும் உயிர் உள்ளவையாக மாறுகின்றது. ஆனால் மனிதனைப் படைக்கும் போது கடவுள் வார்த்தையை பயன்படுத்தவில்லை. மாறாக தன்னுடைய கைவேலைப்பாட்டை பயன்படுத்துகின்றார். மண்ணை எடுத்து பிசைந்து தன்னுடைய உருவில் படைக்கின்றார். மனிதனுக்கு உருவம் இருந்தது ஆனால் அவனுக்கு உயிர் இல்லை. எனவே மீண்டுமாக கடவுள்
தொநூ 2:7-ல் “மனிதனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்”.

பிரியமானவர்களே இன்று நாம் அனைவரும் உயிரோடு இருப்பதற்கு காரணம் நம்முடைய சுவாசம் (மூச்சுக் காற்று). எங்கே ஒரு 5 நிமிடம் மூச்சுவிடாமல் இருந்து பாருங்கள். அவ்வளவு தான் அடுத்த சில நிமிடங்களில் நம்மை பிணம் என அழைக்க ஆரம்பித்து விடுவர். ஆனால் இந்த உயிர் தரும் மூச்சுக் காற்று கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த மாபெரும் கொடை.

இந்த உயிர்தரும் மூச்சுக்காற்று பெருமூச்சாக மாறக் காரணம் என்ன? மனிதன் தான் அன்றாடம் சந்திக்கும் வேதனை, துன்பம், நோய், துயரம், கஸ்டம், வறுமை, நம்மை பிறர் ஏற்றுக் கெள்ளாத நிலை, போன்ற காரணிகளால் ஒவ்வொரு நாளும் நாம் பெருமூச்சு விடுகின்றோம். இன்று பெருமூச்சுவிடாதவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? ஏதோ ஒரு வகையில் உடல் களைப்பினாலும், மன பாரத்தினாலும், பெருமூச்சு விடும் மனிதர்கள் ஏராளம்.

வாழ்க்கை போரட்டத்தால் பெருமூச்சு விட்ட மனிதர்கள் விவிலியத்திலும் உள்ளனர். உதாரணமாக
யோபு தன்னுடைய வேதனையின் உச்சத்தில் 3:24-ல் “பெருமூச்சு எனக்கு உணவாயிற்று; வேதனைக் கதறல் வெள்ளமாய் ஓடிற்று” என்கிறார். கசப்பான கடந்த கால அனுபவங்கள் நம்மை பெருமூச்சு விட வைக்கின்றது. உதாரணமாக சாலமோனின் ஞானம் 11:2-ல் “இருமடங்கு துயரம் அவர்களை ஆட்கொண்டது. கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து ஏங்கி பெருமூச்சு விட்டார்கள்”. ஆண்டவர் இயேசுவும் கூட மக்களின் நம்பிக்கையின்மையைக் கண்டு பெருமூச்சு விடுகின்றார். மாற்கு 7:34-ல் இயேசு “வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு அவரை நோக்கி எப்பாத்தா என்றார்”. மேலும் மாற்கு 8:12-ல் “இயேசு பெருமூச்சு விட்டு இந்த தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?”.. என்கிறார். இன்றைய சூழலில் படைப்புகள் அனைத்தும் வேதனையின் வெளிப்பாடாக பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது என்று உரோமையர் 8:22-23ல் தூய பவுல் கூறுகின்றார்.

ஆக நாம் விடும் பெருமூச்சு நம்முடைய இயலாமையை குறிக்கின்றது. கடவுள் மீது உள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கின்றது. எப்படி ஜெபிப்பது என்று தெரியாத சோகத்திற்கு பெருமூச்சு நம்மை இட்டுச் செல்கின்றது. இப்படி பெருமூச்சுவிட்டு வலுவற்ற நிலையில் இருக்கும் அனைவருக்கும் தூயஆவியனவர் பரிந்துபேசுகின்றார் என இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு கூறுகின்றது. தூய ஆவியானவர் சொல்வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வழியாக நமக்காக பரிந்து பேசுகின்றார். இன்று யாரெல்லாம் பெருமூச்சு விடுகின்றீர்கள்? உங்களுக்கெல்லம் பரிசுத்த ஆவியானவர் இன்று பரிந்து பேசுகின்றார்.

பெருமூச்சு விடுவது நல்லதா கெட்டதா?

முதலில் மூச்சுவிடுவது நல்லதும் உயிர் வாழ தேவையானதும் கூட. அதுவும் ஒரே சீரான முறையில் மூச்சு விடுவது சாலச்சிறந்தது. காரணம் இது கடவுளிடம் இருந்து வந்த கொடை. நம்முடைய சுவாசத்தை வைத்து நம்முடைய ஆயுட்காலத்தை அறிந்து கொள்ள முடியும் என்பார்கள். பிரியமானவர்களே உயிர் வாழ உயிர்மூச்சு முக்கியம். அப்படித்தான.. அப்படியானால் ஒருநாளைக்கு நாம் எத்தனை முறை சுவாசிக்கின்றோம்? ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் உங்களது சுவாசம் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர். நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். இதுவே இன்றைய மனிதர்களின் சராசரி சுவாசத்தின் அளவாகும். மூச்சு எண்ணிக்கை குறையக் குறைய, ஆரோக்கியம் கூடும், ஆயுளும் அதிகரிக்கும். ஒரு நாளைக்கு நாம் தோராயமாக இருபத்தியோராயிரம் முறை நாம் சுவாசிக்கிறோம்.

ஆனால் பெருமூச்சு விடுவது நல்லதல்ல. மனிதர்களின் உயிர்மூச்சு உயிர் வாழ்வதற்கான நம்பிக்கையைத் தருகின்றது; ஆனல் பெருமூச்சோ அவநம்பிக்கையின் நுழைவாயிலாக இருக்கின்றது. உயிர்மூச்சு கடவுளிடமிருந்து புறப்படுகின்றது; பெருமூச்சோ மனிதரிடமிருந்து புறப்படுகின்றது. பெருச்சுக்காண கரணங்களை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று என்னுடைய இயலாமையில் வரும் பெருமூச்சு. இரண்டாவதாக அடுத்தவர் எனக்கு செய்யும் தீங்கிலிருந்து வெளிப்படும் பெருமூச்சு.


01. என்னுடைய இயலாமையினால் வரும் பெருச்சு.

யோவான் நற்செய்தி 5:5-ல் 38 ஆண்டுகளாய் ஒருவன் உடல்நலமற்று பெத்சதா என்ற குளத்தருகில் படுத்து இருக்கின்றான். அந்த இடத்திற்கு வந்த அனைவரும் குணமாகிவிட்டனர். இவரைத் தவிரா. அதற்கு காரணம் அவனுடைய இயலாமையே ஆகும். அதற்கான காரணத்தை அவன் இப்படியாக கூறுவான் “ஐயா தண்ணீர் கலங்கும் போது என்னை குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கி விடுகின்றார்”. அன்புக்குரியவர்களே இந்த மனிதன் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் அல்ல 38 ஆண்டுகளாக முயற்ச்சி செய்கின்றான். இவனுக்கு முன்னால் இருந்தவர்கள்; இவனுக்கு பின்னால் வருபவர்கள் அனைவரும் குணம் பெற்று வீடு திரும்புகின்றனர். ஆனால் இந்த மனிதனால் குணம்பெற இயலவில்லை. காரணம் அவருடைய இயலாமையே!. இந்த இயலாமையில் ஒவ்வொரு நிமிடமும் பெருமூச்சே இவருக்கு உணவாகி வருகிறது.

அதைப்போலவே யோபு மாசற்றவரும், நேர்மையானவருமாக இருந்தார். கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வந்தவர். ஆனால் அவர் சந்தித்த சோதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல… தன்னுடைய சொந்த பிள்ளைகளை இழக்கின்றார்; தான் நேர்மையான முறையில் சம்பாதித்த பணம், ஆடு, மாடு, ஒட்டகங்கள் என எல்லாச் செல்வங்களையும் இழக்கின்றார், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரியும் புண்களால் துயரப்படுகின்றார். தன்னுடைய நண்பர்கள் எல்லோரும் கேலியும், கிண்டலும் செய்து அவரை விட்டு செல்கின்றனர், கட்டிய மனைவி சபித்துவிட்டு செல்கின்றாள். இப்படி எண்ணிலடங்கா சோதனைகளை சந்தித்த போது யோபு தன்னுடைய இயலாமையினால் பெருமூச்சே எனக்கு உணவாயிற்று என்கிறார்.


அந்த யோபுவைப் போல, 38 ஆண்டுகளாக உடல் நலமற்ற மனிதனைப் போல இன்றும்; எத்தனையோ மனிதர்கள் நேர்மையாளர்களாகவும், கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி நல்ல வாழ்க்கை வாழ்ந்தலும் கூட அன்றாட வாழ்வின் சுமைகளை சந்திக்கும்போது பெருமூச்சு அவர்களுக்கு உணவாகிக் கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்திலே பெரு பெருமூச்சு விட்டும் வாழும் மனிதர்கள் தான் அதிகம். வேலை இல்லை; வருமானம் இல்லை; குழந்தைகளின் படிப்பு பாதியிலே நின்று விட்டது; குடும்ப உறவுகளிடையே நடக்கும் திருமணம், இறப்பு போன்ற சுப மற்றும் துக்க நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாத சூழல்; எதிர்காலத்தைப் பற்றிய கவலை, என்று நம்முடைய பெருமூச்சுக்காக கரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். பெருமூச்சே பலருக்கு உயிர்மூச்சாக மாறிவருகிறது.

ஆனால் பிரியமானவர்களே யோபு பெருமூச்சே எனக்கு உணவு என்று கூறினாலும், ஐயா தண்ணீர் கலங்கும் போது என்னை குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினாலும் இவ்விருவரும் தன்மீதும், தான் நம்பிய கடவுள் மீதும் நம்பிக்கையை இழக்காது வாழ்ந்து வந்தனர். தான் சந்தித்த கொடிய வேதனைகளுக்கு மத்தியிலும் யோபு 27:3-ல் “என் உடலில் உயிர் இருக்கும் வரை என் மூக்கில் கடவுளின் பெருமூச்சு இருக்கும் வரை என்உதடுகள் வஞ்சகம் உரைக்காது; என் நாவும் பொய் பேசாது. கடவுள்மீது உள்ள நம்பிக்கையை இழக்கமாட்டேன்” என்கிறார். மேலும் யோபு 33: 4-ல் இறைவனின் ஆவி என்னைப் படைத்தது. எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.

யோபுவின் பெருமூச்சு கடவுள் மீது உள்ள நம்பிக்கையை திடப்படுத்தியது. என்ன நேர்ந்தாலும் கடவுளை பழித்துரைக்க மாட்டேன். கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக் கொண்டார் என்று தன்னுடைய இயலாமையினால் வரும் பெருமூச்சை கடவுள்மீது கொள்ளும் நம்பிக்கையின் நங்கூரமாக மாற்றுகின்றார்.

ஆனால் நாம்விடும் பெருமூச்சு கடவுள் மீதும் நம்மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் நங்கூரமா நம்மை மாற்றுகின்றாதா? அல்லது அவநம்பிக்கைக்கு ஈட்டுச் செல்கின்றதா? பல வேளைகளில் எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை, வேதனை, நோய்கள், கடன் பிரட்சனைகள் என்று நம்முடைய இயலாமையில் இருந்து வெளிப்படும் பெருமூச்சு கடவுள்மீதும், நம்மீதும் உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது. அன்புக்கூரியவர்களே இன்று தூய ஆவியானவர் உங்களது பெருமூச்சு வழியாக உங்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுகின்றார்.


02. அடுத்தவர் எனக்கு செய்யும் தீங்கிலிருந்து வெளிப்படும் பெருமூச்சு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளைச் சார்ந்தவர்களைப் பற்றியும், தீயோனைச் சார்ந்தவர்களைப் பற்றியும் பேசுகின்றது. கடவுளைச் சார்ந்தவர்கள் நல்ல விதைகள் எனவும், தீயோனைச் சார்ந்தவர்கள் களைகள் எனவும், அவனே பகைவன் அல்லது அலகை எனவும் எடுத்துரைக்கின்றது. ஆம் பிரியமானவர்களே நற்செய்தி வாசகத்திலே அந்த தோட்டக்காரர் நல்ல விதைகளைத்தான் விதைத்தார். ஆனால் அவரும், அவருடைய ஆட்களும் உறங்கிக்கொண்டிருக்கும் போது பகைவன் வந்து களைகளை விதைக்கின்றான். இன்று நாமும் கடவுளின் உயிர் மூச்சைப்பெற்று உயிரோடு வாழ்ந்தாலும் நண்பர்கள், உறவினர்கள், வழியாக அலகை களைகளை விதைக்கின்றான். இன்று நமது மத்தியில் களைகளை விதைக்கும் மனிதர்கள் அதிகமாக பெருகியுள்ளனர்.

ஒருமுறை ஒரு கத்தோலிக்க கிறித்தவர் பங்குத்தந்தையை அனுகி பாதர் “இன்ன சபையில் இன்ன மனிதர் உங்களை பற்றி அவதூறாக பேசுகின்றார் என்று கூறினாறாம். அதற்கு பங்குத்தந்தை: “அந்த சகோதரர் என் மீது அம்பு எய்தார். அது என் மீது படவில்லை. ஆனால் நீர் அதனைச் சுமந்து வந்து என் இதயத்தில் குத்திவிட்டீரே” என்றாராம்.

ஆம் பிரியமானவர்களே இன்று உதவி செய்பவர்களைக் காட்டிலும் உபத்திரவம் செய்யும் மனிதர்கள் தான் அதிகம். இன்று நான் உதவி செய்பவனா? அல்லது களைகளை விதைப்பவனா? என்னுடைய சொல, செயல் மற்றவர்களுக்கு உயிர் மூச்சை அளிக்கிறதா? அல்லது பெருமூச்சை தருகின்றதா? இன்று நாமும் சரி, நம்மை சுற்றியுள்ளவர்களும் சரி பெருமூச்சின் உயிர்நாடியாக வாழ்ந்து வருகின்றோம். எனவே பெருமூச்சை சுட்டெரீத்து விட்டு ஆண்டவரின் உயிர்மூச்சில் வாழ முற்படுவோம்.

அன்புக்குரியவர்களே
நம்முடைய பெருமூச்சுகளை அகற்றி ஆண்டவரின் உயிர்மூச்சில் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய முதல் வாசகத்திலே “ஆண்டவரே உம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை” என்ற ஆழ்ந்த விசுவாசத்தில், உறுதியான நம்பிக்கையில் வாழ முற்படுவோம். அலகைளை வெல்லதற்கு சரியான வழி கடவுள் மீது கெண்டுள்ள நம்பிக்கையேயாகும். அதற்காக தூய ஆவியனவர் நமக்காக பரிந்துபேசுகின்றார் என்ற விசுவாச உறுதியில் வாழுவோம். அதற்கு தடையாக உள்ள அனைத்தையும் தீயிட்டு எரிப்போம். அன்புக்குரியவர்களே 1பேதுரு 5:8-ல் “கடவுளின் பிள்ளைகளே அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரயாகிய அலகை யாரை விழுங்கலாம் என கர்சிக்கும் சிங்கம் போல தேடித்திரிகிறான்” என்று கூறுகின்றது. எனவே நம்முடைய அன்றாட குடும்ப வாழ்வில்; துறவற வாழ்வில்; சமூக உறவில் அலகை என்ற பகைவனை; களைகள் என்ற பகைவனை இணம் கண்டுகொண்டு தீயிட்டு கொளுத்துவோம். அப்போது நம்முடைய பெருமூச்சுகளை அகற்றி ஆண்டவரின் உயிர்மூச்சில் நம்மால் வாழமுடியும்.

ஆண்டவரே என் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தருளும்;
என் பெருமூச்சை கவனித்தருளும். தி.பா 5:1


அருட்பணி . வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின் உளவியல் ஆலோசனை இல்லம், பதோனி, திருச்சி.