இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

குறுக்கு வழியிலும், கொரோனா வழியிலும்
வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

திருதூதர் பணிகள் 2:14 , 36-41
1 பேதுரு 2: 20-25
யோவான் 10:1-10

இன்று ஆலயம் வந்துள்ள நம்மில் எத்தனை பேர் திருடர்கள்? எத்தனை பேர் கொள்ளையர்கள்?
நம்முடைய பிள்ளைகளுக்கு திருடவும், கொள்ளையடிக்கவும் நம்மில் எத்தனை பேர் கற்றுத் தருகின்றோம்?

வாரத்தின் முதல் நாளே இப்படிப்பட்ட கேள்வியா? என்று நினைக்க வேண்டாம்…


நாங்களெல்லாம் நல்லவர்கள், திருடர்களும், கொள்ளையர்களும் கிடையாது என்று நாம் கூறினாலும், இன்று குறிப்பாக கொரோனா வைரசால் பசிக்கும், பட்டிணிக்கும் போராடிக் கொண்டிருக்கும் பட்சத்தில் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற திருட்டு உலகத்திலும், கொள்ளையடிக்கும் உலகத்தில் தான் வாழ்ந்து வருகின்றோம்.

உதாரணமாக 28 ரூபாய் பெட்ரோல் 58 ரூபாய், 225 ரூபாய் கொரோனா டெஸ்ட் மிஷின் 660 ரூபாய், 68000 ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்து நாட்டை விட்டு ஓடிய கும்பலுக்கு வங்கிகளில் கடன் தள்ளுபடி; அதுவே 10000 ரூபாய், கடன் வாங்கிய ஏழைகளுக்கு தண்டனை இப்படி பல… இன்று இந்த திருடர்கள் கூட்டம் திருந்தி கடவுளிடம் வரவும், கொள்ளையர்கள் தங்கள் குணத்தை மாற்றி வாழவும் கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.


மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள் இவை “குறுக்கு வழியில், வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா _
தம்பி; தெரிந்து நடந்து கொள்ளடா _
இதயம் திருந்த மருந்து சொல்லடா…

ஆம் பிரியமானவர்களே இன்று குறுக்கு வழியில் முன்னேறும் மனிதர்களுக்கு மத்தியிலும், கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகத்தில் வாழும் அனைவரையும் வாயில் வழியாக, நேர்மையான வழியில் நுழைய கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.


இன்று அனைத்து துறைகளிலும் குறுக்கு வழிகள் உள்ளன. குறுக்கு வழிகளை கற்றுக் கொடுப்பதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரும் ஆர்வத்தோடு செயல்படுகின்றோம். 21-ம் நூற்றாண்டு மக்கள் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கும் மக்கள் என்று ஒரு கணிப்பு கூறுகின்றது. காரணம் நம்மிடையே குறுக்கு வழி ஆன்மீகம்-spiritual shortcuts, குறுக்கு வழி நெறிமுறைகள்-ethical shortcuts குறுக்கு வழி அறநெறிகள்- moral shortcuts, குறுக்கு வழி படிப்பு-Edugcational shortcuts, குறுக்கு வழி பணபரி வர்த்தனை-financial shortcuts குறுக்கு வழி உறவுகள்- relational shortcuts என குறுக்கு வழியில் மூழ்கியுள்ளோம்.

உதாரணமாக ஷாட்கட் அல்லது குறுக்கு வழி. பயணத்திற்கு நாம் தேர்ந்தெடுப்பது ஷாட்கட் – 3-கிலோமீட்டர் சுற்றி போகனும் ஆன ஷாட்கட்டில் போனால் சீக்கரம் போய்விடலாம்; படிப்பிற்கு தேர்ந்தெடுப்பது ஷாட்கட் - பணம் கொடுத்தும், பிட் அடித்தும் படிப்பை விலைக்கு வாங்கும் மக்கள் கூட்டம்; பணம் சம்பாதிக்க தேர்ந்தெடுப்பது ஷாட்கட் – மக்களை ஏமாற்றி பணம் பார்க்கும் கூட்டம்; 1000 கட்டினால் 2000 கிடைக்கும் என்று அன்றாடம் ஏமாந்து போகும் மக்கள் கூட்டம்; பிரசவ வழி இல்லாமல் பிள்ளைகளை பெற்றெடுக்க நாம் தேர்ந்தெடுப்பது ஷாட்கட் – வலியை மறக்க மயக்க மருந்து செலுத்தி பெற்றெடுக்கும் சிசேரியன் குழந்தைகள்; நம்மில் எத்தனை பேர் ஷாட்கட் குழந்தைகள்? நாம் பயன்படுத்தும் கணிணி (ஷாட்கட் கீஸ்), முதல் நாம் கல்லறைக்கு செல்லும் நாள் வரை நாம் தேர்ந்தெடுப்பது ஷாட்கட். ஆக ஷாட்கட்டை தேர்ந்தெடுக்கும் மனிதர்கள் குருடர்கள் என்றும், கொள்ளையடிப்பவர்கள் என்றும், திருடர் கூட்டம் என்றும் மக்கள் கவிஞர் பாடினார். அதைப்போலவே இன்றைய வாசகத்தில் ஷாட்கட் அல்லது குறுக்கு வழியில் பயணிப்போர் திருடரும், கொள்ளையரும் ஆவர் என்று இயேசு கூறுகின்றார்.

இன்று ஷாட்கட் அல்லது குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கும் அனைவரும் திருடரும், கொள்ளையரும் ஆவர். நாம் எப்படி? நானும் எனது பிள்ளைகளும் தேர்ந்தெடுப்பது ஷாட்கட்டா? ஷாட்கட்டில் பயணிப்பவர்களா?, ஷாட்கட்டில் பணம் சம்பாதிப்பவர்களா? என் வாழ்வில் ஏதாவது ஓரு தருணத்தில் குறுக்கு வழியை அல்லது ஷாட்கட்டை தேர்ந்தெடுத்து இருக்கின்றேனா? என்னுடைய பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் குறுக்கு வழியை கற்று கொடுத்து இருக்கின்றேனா? அப்ப நானும் எனது வீட்டாரும் தான் திருடரும், கொள்ளையரும் ஆவர். எனவே நாங்கள் திருந்த வேண்டும்.

ஷாட்கட்டை தேடாதவர்கள் நம்மில் யாரேனும் உண்டா? சிந்திப்போம்…

அன்புக்குரியவர்களே ஷாட்கட்டில் அல்லது குறுக்கு வழியில் பயணிப்போர் குறுகிய காலத்திலே மடிந்து போவர். மேலும் குறுக்கு வழியில் வரும் எந்தவொரு செயலும் நம்மை முன்னேற்றாது. உதாரணமாக குறுக்கு வழியில் பட்டம் பெற்ற மருத்துவரால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது; குறுக்கு வழியில் பட்டம் பெற்ற ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு நேர்மையான வழியில் நம்பிக்கை ஊட்ட முடியாது. குறுக்கு வழியில் பயணிக்க அதன் பாதை வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் அதன் முடிவு அழகானதாக இருக்காது. ஆனால் பலர் தேர்ந்தெடுப்பது இந்த குறுக்கு வழியைத்தான் என இயேசு மத்தேயு 7: 13-14-ல் “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே”. குறுக்கு வழி பார்ப்பதற்கும், பயணிப்பதற்கும் இலகுவாக இருக்கும். ஆனால் அது வாழ்வுக்கான வழி கிடையாது. எனவே குறுக்கு வழியை நாம் தேர்ந்தெடுக்க கூடாது என்கிறார் இயேசு.

ஏன் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க கூடாது?

01. குறுக்கு வழி நிறைவன மகிழ்ச்சியைத் தராது

எல்லாம் இருந்தும் நிறைவான மகிழ்ச்சியை இழந்த மனிதர்களை சமூதாயத்திலும், விவிலியத்திலும் நாம் காணலாம். உதாரணமாக குள்ளன் சக்கேயு லூக்கா 19-ல் சக்கேயுவிற்கு பணம், வரிவசூலிக்கும் தலைவர் பதவி, அரசாங்க அந்தஸ்து, ஏராளமான சொத்துகள், நிலபுலன்கள் என எல்லாம் இருந்தது. ஆனால் எல்லாம் இருந்தும் அவன் தேடியது நாசரேத்து இயேசுவையே. “இயேசு யாரென்று பார்க்க அவர் விரும்பினார்”.

காரணம் சக்கேயுவிடம் இருந்த எல்லா சொத்துகளும் குறுக்கு வழியில் வந்தவை. எனவேதான் இயேசுவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் ஆண்டவர் இயேசுவிடம் அவன் கூறியது; 19:8 சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று இயேசுவிடம் கூறினார். அதன்பிறகு சக்கேயு தன்னுடைய குறுக்கு வழியை விட்டுவிட்டு நேர்மையான வழியை தேர்ந்தெடுத்ததால் நிறைவான மகிழ்ச்சியையும், அவனுடைய குடும்பம் முழுமையான மீட்பையும் கண்டு கொண்டன.

இன்றும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் தரும் மகிழ்ச்சி பெரியது, அதனால் மனநிம்மதி கிடைக்கும். ஆனால் அதுவே குறுக்கு வழியில் வந்த பணமென்றால் அங்கு பயமும், அச்சமும் சூழ்ந்திருக்கும். அது தரும் மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சியாக இருக்காது.


02. குறுக்கு வழி தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்

அன்புக்குரியவர்களே அனைவருமே வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என இரவு பகல் பாராது உழைத்து வருகின்றோம். நேர்மையான வழியில் உழைக்கும் போது தன்னம்பிக்கை இரட்டிப்பாகும்; ஆனால் அதுவே குறுக்கு வழியில் பயணித்தால் நாம் நம்முடைய நம்பிக்கையையும், தன்னம்பிக்கையும் இழந்து விடுவோம். உதாரணமாக மனிதர்களுக்கு தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் எளிதாக கிடைத்து விடுவதில்லை. எப்படி மண்ணில் எடுக்கப்படும் தங்கம் நெருப்பு எனும் உலையில் புடமிடப்படுகிறதோ அதைப்போலவே மனிதர்களுக்கு நம்பிக்கையும் புடமிடப்படுகிறது. இதிலே குறுவழியை தேர்ந்தெடுக்காமல் நேர்மையான வழியில் பயணிப்போர் தங்கம் போல ஜொலிக்கினறனர். மற்றவரோ அழிந்து விடுகின்றனர். இதையே 1பேதுரு 1:7-ல் அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்.

உதாரணமாக ஒரு மருத்துவரோ, ஓட்டுனரோ, ஆசிரியரோ தன்னுடைய தொழிலுக்கான பட்டத்தை நேர்மையான வழியில் பெற்றவரானால் அவரது நம்பிக்கையை அது இரட்டிப்பாக்கும். அதுவே குறுக்கு வழியில் பெற்ற பட்டமானால் தன்னம்பிக்கையையும், நம்பிக்கையையும் குறைத்து விடும். இன்று குறுக்கு வழியில் பிறந்த சிசேரியன் குழந்தைகளையும், இயற்கையாக பிரசவ வேதனையோடு பிறந்த குழந்தைகளையும் வைத்து ஓர் ஆராய்ச்சி செய்த போது சிசேரியன் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறைந்து காணப்பட்டது. காரணம் பிறக்கும் போதே துன்பங்கள், வேதனைகள் இல்லாமல் பிறக்கின்றனர். எனவே அவர்கள் வளரும் போது அன்றாட பிரட்சனைகளை எதிர்கொள்ள போதுமான தன்னம்பிக்கை அவர்களிடம் கிடையாது. ஆனால் அதே வேளையில் இயற்கையான பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பிறக்கும் போதே துன்பத்தையும், வேதனையையும் அனுபவிக்கின்றனர். எனவே பிற்காலத்தில் எந்தவித பிரட்சனைகளையும் அவர்களால் எளிதாக கையாள முடியும் காரணம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அவர்களுக்கு அதிகம். குறுக்கு வழியில் கிடைக்கும் பொருட்களும் சரி; மனிதர்களும் சரி நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் கிடையாது.

03. குறுக்கு வழி அழிவுக்கான பாதை

குறுக்கு வழியில் பயணித்தவர்கள் அனைவரும் குறுகிய நாட்களிலே தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர். இதற்கு விவிலியத்திலும், சமூதாயத்திலும் ஏன் நம்முடைய அன்றாட வாழ்விலும் நிறைய உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். உதாரணமாக குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததால் குறுகிய காலத்திலே அழிவை தேடிக்கொண்ட இயேசுவின் சீடர் யூதாஸ் இஸ்காரியோத். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் குறுக்கு வழியில் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்தான். குறுக்கு வழியில் பெற்ற பணத்தை அவனால் அனுபவிக்க கூட முடியவில்லை. கடைசியில் தற்கொலை செய்து கொள்கின்றான். எனவே குறுக்கு வழியில் வரும் எதுவும் நம்மை நிம்மதியாக வாழவிடாது என்பதற்கு யூதாசு நல்லதொரு எடுத்துக்காட்டு. குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தால் ஒருநாள் அதுவே நம் வாழ்வை அழித்து விடும்.

எனவே அன்புக்குரியவர்களே குறுக்கு வழி கிறித்தவர்களுக்கான வழி கிடையாது. நேர்மையான வழியே கிறித்தவர்களின் வழி. இந்த நேர்மையான வழிகளில் பயணிப்பவர்கள் ஒருசிலர் என்று இயேசு கூறினார். அந்த ஒருசிலரை இன்றும் நமது சமூதாயம் அங்கிகரித்து வருகின்றது. நேர்மையே கிறித்தவர்களின் வழி என்று இன்றும் நமது சமூதாயத்தில் கிறித்தவர்கள் மெய்பித்து வருகின்றனர். உதாரணமாக உயர்திரு ஆட்சியர் திரு. சகாயம் IAS மற்றும் நீதிஅரசர் திரு.மைக்கேல் டிக்குன்னா போன்றோர் நேர்மையான வழியில் வாழ்ந்து நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். இந்த நேர்மையான வழியை தேர்தெடுத்து அதிலே பயணித்ததற்கு அவர்கள் பெற்றுக்கொண்ட வெகுமதி அவமானம், கொலை மிரட்டல்கள், சோதனைகள் இப்படி பல.

ஆனால் எந்தவித சோதனைகளையும் சாதனைகளாக மற்றியது குறுக்கு வழியல்ல மாறாக அவர்கள் தேர்ந்தெடுத்த நேர்மையான வழி. இந்த நேர்மையான வழியில் நுழைபவர் நல்ல ஆயர் என்கிறார் இயேசு. எனவேதான் ஆண்டவர் இயேசு நல்ல ஆயன் என்று அழைக்கப்படுகின்றார். இன்றைய நாளை நல்லாயன் ஞாயிறு என்று தாய் திரு அவை சிறப்பிக்கின்றது. ஆண்டவர் இயேசுவே நல்ல ஆயன். அவரை பின்பற்றும் நீங்களும், நானும் நல்ல ஆயன்களாக வாழ நமக்கு ஆண்டவர் அழைப்பு விடுக்கின்றார்.

யாரெல்லாம் நல்ல ஆயர்கள்?

அன்புக்குரியவர்களே கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நம்மை அச்சுருத்தி வருவது கொடிய நோயாகிய கொரோனா வைரஸின் தாக்கம். இந்த நாட்களிலே பல மனிதர்கள் நல்ல ஆயர்களாக நமது மத்தியில் மாறியுள்ளனர். இந்த நல்ல ஆயரில் எனது பெயர் உண்டா?

நல்ல ஆயரின் பணிகள் எவை என்பதை இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிகின்றார்.


01. நல்ல ஆயன் தன்னுடைய ஆடுகளை இணம் கண்டு அவற்றை பெயர் சொல்லி அழைப்பார்.

இன்றைய காலத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டும், அவற்றிற்கு பயந்தும் இறந்து போகும் மக்கள் கூட்டம் ஒருபுறம், அதேவேளையில் வறுமையாலும், பசியாலும் இறக்கும் மக்கள் கூட்டம் மற்றொரு புறம். இவ்வேளையில் பல மனிதர்கள் நல்ல ஆயன்களாக இக்காலட்டத்தில் செயல்படுவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகின்றது. தன்னார்வ தொண்டர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தேவையில் இருப்போரை இணம் கண்டு கொண்டு அவர்களுக்கான தேவையை நிறைவேற்றி வருகின்றனர். இதுதான் நல்ல ஆயனுக்கான பணி. மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் இந்த நல்ல ஆயன்களில் நானும், என் வீட்டாரும் இருக்கின்றோமா?

02 . நல்ல ஆயன் ஆடுகளுக்கு முன்பாக சென்று வழிகாட்டுவார்.

இன்றைய கொரோனா நாட்களில் போலியான ஆயர்கள் யார்? நல்ல ஆயர்கள் யார்? என்று எளிதாக கண்டு பிடித்து விடலாம். மக்களின் துயர்களை கண்டு மக்களுக்கு முன்பாகச் சென்று வழிகாட்டுபவர்களே நல்ல ஆயர்கள். ஆனால் இன்று நம்முடைய அரசியல் தலைவர்கள், அல்லது ஆன்மீக தலைவர்களில் பலபேர் போலி ஆயர்கள் என்பதை படம் பிடித்து காட்டுகின்றது. தமிழில் ஒரு பழமொழி உண்டு “உதவி செய்யாவிட்டாலும் உபத்தரவம் செய்யக் கூடாது என்று” இந்த கொரோனா வைரஸ் பாதித்த இக்கட்டானா நேரத்தில் மக்களுக்கு வழி காட்ட வேண்டிய அரசாங்கம் மக்கள் மீது வரிகளை திணிக்கின்றது. சுங்க கட்டணங்களை உயர்த்தி வசுலிக்கின்றது, கோடி கோடியாய் கொள்ளையடித்த மனிதர்களின் வங்கி கணக்குகளை ரத்து செய்கின்றது. ஆனால் ஏழைகள், விவசாயிகள், அன்றாடம் கூலிதொழிலாளர்கள் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் அனைத்து பிழைப்பிற்கான பாதைகளும் அடைபட்ட நிலையில் தற்கொலை செய்கின்றனர். காரணம் வழிகாட்டுவதற்காண நல்ல ஆயர்கள் யாரும் இல்லை.

இன்று வழிகாட்ட வேண்டிய நல்ல ஆயர்கள் வழிகளை மறைத்துக் கொண்டு உள்ளனர். இன்றைய நாட்களில் விவாத மேடைகளிலும், வெட்டி பேச்சுகளில் நேரத்தை செலவிடும் மனிதர்கள் தங்களிடம் உள்ள உறவுகளை வைத்துக் கொண்டு வீதியில் இறங்கி நல்ல ஆயர்களாக சென்று வழிகாட்டினால் எவ்வளவு நலமாக இருக்கும்! மாற்றம் என்னில் இருந்து தொடங்கட்டும்… இன்று நான் வழிகாட்டும் நல்ல ஆயனா? அல்லது வழிகளை மறைக்கும் போலி ஆயனா?


03. நல்லஆயனின் குரலை ஆடுகள் அறிந்துள்ளன.

ஆயனின் குரல் ஆடுகளுக்கு நன்கு தெரியும். இன்று போலி ஆயர்களின் குரலையும், நல்ல ஆயனின் குரலையும் இணம் கண்டு கொண்டால் நம் வாழ்வு சிறக்கும்.

பிரியமானவர்களே
ஒருமுறை கோழி ஒன்று தன்னுடைய குஞ்சுகளுடன் ஒரு குப்பை மேட்டில் குப்பைகளை கிளரிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வை கடவுள் உற்று நோக்கி பார்த்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்கள் கழித்து கடவுள் அந்த கோழியிடம் நீயோ குப்பைகளை கிளருகின்றாய் ஆனால் உன்னுடைய குஞ்சுகள் எப்படி அதில் இருக்கும் உணவை உண்கின்றன எனக் கேட்டாராம்.

அதற்கு அந்த தாய் கோழி கடவுளே நான் பல நேரங்களில் பலவித ஓசையுடன் எனது குரலை வெளிப்படுத்துவேன். ஆனால் என் குஞ்சுகள் எனது குரலை அறிந்து வைத்திருக்கின்றன. அதாவது உணவைப் பார்க்கும் போது ஒருவித ஓசையை எழுப்புவேன் என் குஞ்சுகள் உணவிற்கான குரலை அறிந்து என்னிடம் வந்து உணவை உண்டு செல்லும்; அதுவே சில நேரங்களில் ஆபத்து வரும் போது வேறு ஒரு ஓசையை எழுப்புவேன் எல்லா குஞ்சுகளும் ஆபத்திற்கான குரலை அறிந்து ஓடிவந்து என்னிடத்தில் அடைக்கலம் புகுந்துவிடும் நானும் எனது இறக்கைகளினால் அவற்றை மறைத்து பாதுகாப்பேன். ஆபத்து முடிந்தவுடன் மீண்டுமாக ஒருவித ஓசையை எழுப்புவேன் எல்லாம் இரைதேடச் சென்றுவிடும் எனக் கூறியதாம்.

இவையனைத்தையும் பொறுமையுடன் கேட்ட கடவுள் சாதாரண ஐந்தறிவு உள்ள குஞ்சுகள் உனது குரலை கண்டுகொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்றன. இந்த அறிவு மட்டும் என்னுடைய சாயலில் படைக்கப்பட்ட மக்களுக்கு இருந்ததென்றால் எனது மக்கள் என்றோ திருந்திருப்பார்கள் என்றாராம் கடவுள்.
ஆம் பிரியமானவர்களே நல்ல ஆயர்களின் குரலை எத்தனை பேர் அறிந்துள்ளோம்? நல்ல ஆயனின் குரலை அறிந்து வைத்திருந்தோமோனால் குறுக்கு வழியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? மக்கள் கவிஞரும் ஏன் இவ்வாறு பாடவேண்டும்
“குறுக்கு வழியில், வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா_
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா _ தம்பி;
தெரிந்து நடந்து கொள்ளடா
_ இதயம் திருந்த மருந்து சொல்லடா…


எனவே நாம் அனைவரும் முதல் வாசகத்தில் கூறுவது போல மனம் மாறியவர்களாக வாழவும், இரண்டாம் வாசகத்தில் தூய பேதுரு நல்ல ஆயன்களாக வாழ நன்மை செய்தும், பொறுமையோடு துன்பங்கள், அவமானங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு நேர்மையான வழியில் பயணிப்போம். குறுக்கு வழியில் செல்வோர், திருடரும், கொள்ளையரும் ஆவர். அவ்வாரே குறுக்கு வழியை கற்றுக் கொடுப்பவரும் அதை கற்றுக் கொள்பவரும் திருடரும், கொள்ளையரும் ஆவர்.

இன்று கிறிஸ்தவனாகிய நான் பயணிக்கும் பாதை ஷாட்கட்டா? குறுக்கு பாதையா? அல்லது நேர்மையான பாதையா? நானும், எனது பிள்ளைகளும், எனது குடும்பமும், எனது சமுதாயமும் திருட்டு கும்பலா? கொள்ளையடிக்கும் கும்பலா? நல்ல ஆயர்களா? போலி ஆயர்களா?

நல்ல ஆயன் இயேசுவை பின்பற்றி நல்ல ஆயர்களாக வாழ முற்படுவோம்.

அருட்பணி . வேத சகாய செல்வராஜ், கப்புச்சின்
உளவியல் ஆலோசனை இல்லம், பதோனி, திருச்சி.