இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு
இறை இரக்க பெருவிழா

நம்பிக்கை தரும் நல்ல உறவுகள் எனக்கு உள்ளன

திருத்தூதர் பணிகள் 2:42-47
1 பேதுரு 1: 3-9
யோவான் 20:19-31

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று நம் அனைவருக்குமே உறவுகள் நிறைய இருக்கின்றன. இந்த நம்முடைய உறவுகள் நமக்கு நம்பிக்கையை தரும் உறவுகளா? அல்லது அவநம்பிக்கையை பெற்றுத் தரும் உறவுகளா? இன்று நான் நம்பிக்கையின் பிரதிபலிப்பா? அல்லது அவநம்பிக்கையின் மறு உருவமா? என்று சுய பரிசோதனை செய்ய இறைஇரக்கத்தின் கடவுள் நம்மை அழைக்கின்றார். அனைவருக்கும் இறை இரக்க பெருவிழா நல்வாழ்த்துக்கள்.



பிரியமானவர்களே
விவிலியம் ஏன் எழுதப்பட்டது?

உங்களுடைய பதில் என்ன? இன்றைய நற்செய்தியின் கடைசி வசனம் இதற்கான பதிலைத் தருகின்றது. யோவான் 20: 31-ல் “இயேசுவை இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன”. ஆக இரண்டு முக்கிய காரணங்களுக்காக விவிலியம் எழுதப்பட்டது. ஒன்று இயேசுவை மெசியா என்று நாம் அனைவரும் நம்ப வேண்டும்; இரண்டாவதாக இயேசுவை நம்பி அவர் பெயரால் நாம் அனைவரும் வாழ்வு பெறுவதற்காகவே விவிலியம் எழுதப்பட்டது.

அன்புக்குரியவர்களே இன்றைய மூன்று வாசகங்களும் கடவுள் மீது நமக்கு உள்ள நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றன. உதாரணமாக இன்று எப்படி கொரோனா வைரஸ் மூலமாக நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக இருப்பது போல நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர் என்று முதல் வாசத்திலும், கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் சீரழிந்துவிட்டது, ஒருவேளை உணவுக்காக ஏங்கும் மக்கள் பெருகிவிட்டனர், தனிமையும், நோயும், வறுமையும் நம்மை சூழ்ந்து கடவுள் மீது உள்ள நம்பிக்கை புடமிடப்படுகின்றது என்பதை தூய பேதுரு இரண்டாவது வாசகத்திலே விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கை மெய்பிக்கப்படவே நீங்கள் துயருறுகிறீர்கள் என்கிறார். மேலும் நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு புனித தோமாவிடம் என்னை கன்டதால் நம்பினாய்; காணமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்கிறார். இன்று நான் அன்றாட துன்பங்களை அனுபவிக்கும் போது எனது நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்கின்றது? மேலும் என்னை சுற்றியுள்ள உறவுகள் எனக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றதா? அல்லது நானும் எனது உறவுகளும் அவநம்பிக்கையின் கூடாரங்களா? சிந்திப்போம்…

பழைய ஏறப்பாட்டில் ஆபிரகாம் தன்னுடைய ஓரே மகனை பலிகொடுக்க துணிந்ததால் இன்று வரை விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றார். அதைப்போலவே நம்பிக்கைக்கு உரிய பெண், அல்லது தாய் பழைய ஏற்பாட்டில் யாரேனும் உண்டா?

2 மக்கபேயர் 7-ம் அதிகாரத்தில் கணவனை இழந்த தாயும், 7 சகோதரர்களைப் பற்றிய நம்பிக்கைக்கு உரிய சாட்சிய வாழ்வு இடம் பெறும். ஒரு குழந்தையைக் கொல்ல துணிந்த ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தை என்றால் இத்தாய் தன்னுடைய 7 பிள்ளைகளையும் கடவுள் மீது உள்ள நம்பிக்கையில் திடப்படுத்தி கடைசிவரை தன்னுடைய பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் நங்கூரமாக இருக்கின்றர். எனவே என் பார்வையில் இவரை நம்பிக்கையின் தாய் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆம் பிரிமானவர்களே! இந்த தாயையும், 7 பிள்ளைகளையும் அரசன் கைது செய்கின்றான். எதற்காக? பன்றி இறைச்சி சாப்பிடவில்லை. எனவே பன்றி இறைச்சி உண்ணும் படி அவர்களை கட்டளையிடுகின்றான். பன்றி இறைச்சி உண்பது திருச்சட்டத்திற்கு புறம்பனது என விசுவாச போதனையாக அவர்களுக்கு சிறுவயதிலிருந்து கற்றுக் கொடுக்கப்பட்டது. எனவே பன்றி இறைச்சி உண்ணமாட்டோம் என தைரியமாக அரசனுக்கு எதிராக தெரிவிக்கின்றனர். உதாரணமாக
லேவியர் 11:2-11 ஆகிய வசனங்களில் எந்தெந்த விலங்குகள் உண்ணக் குடியவை, உண்ணத்தாகதவை என நீண்ட பட்டியலுண்டு அதில் 7ம் வசனத்தில் பன்றி உங்களுக்கு தீட்டு; எனவே அதை உண்ணக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில் வேறுன்றியவர்களாய் பன்றி இறைச்சி உண்ண மறுக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக அந்த தாய் கூறும் வார்த்தைகள் தளர்ந்து போன அவர்களின் நம்பிக்கையை திடப்படுத்துவதாக இருக்கின்றது. மூத்த மகன் பன்றி இறைச்சி உண்ண மறுக்கின்றான். எனவே அரசன் அகன்ற தட்டுகளையும், கொப்பரைகளையும் சூடாக்கி அதிலே அவனை இடுகின்றான், நாக்கை வெட்டுகின்றான், கடைசியாக குடுமித்தோலை கீறி எடுக்கவும், கை, கால்களை வெட்டவும் மன்னன் கட்டளையிடுகின்றான். இந்த கொடிய வேதனைகளுக்கும் மத்தியில் கடவுள் மீதும் திருச்சட்டத்தின் மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை. கடைசியில் உயிரை விடுகின்றான்.

ஆனால் தாயும், மற்ற சகோதரர்களும் அதைப்பார்ந்து பயந்து விடவில்லை மாறாக ஒருவர் மற்றவரை தேற்றிக்கொண்டிருந்தனர். இரண்டாம் சகோதரரையும் அழைத்து வந்து தலையின் தோலை முடியோடு உரித்து பன்றி இறைச்சி உண்ண கட்டாயப் படுத்துகின்றனர். ஆனால் இருவம் பிடிவாதமாய் இருக்க கொலை செய்யப்படுகின்றார். இப்படியாக ஒவ்வொருவரும் தங்களது நம்பிக்கையில் உறுதியோடு இருக்கின்றனர். கடைசியாக தான் விருப்பி நேசித்த இளைய மகனை அந்த தாயின் முன் கொண்டு வருகின்றனர்.

இந்த மகனிடம் இந்த தாய்
“என் "மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; மூன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக் காத்து வந்துள்ளேன். குழந்தாய், உன்னை நான் வேண்டுவது; விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்" என்று சொல்லி ஊக்கமூட்டினார்.

தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்;
"எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கும், என்னைப் படைத்த கடவுளுக்கும் நம்பிக்கையோடு கீழ்ப்படிவேன் என்று கூறி தன்னுடைய விசுவாசத்திற்காக கொலை செய்யப்படுகின்றான். மேலும் 20 -தாவது வசனத்திலே எல்லாருக்கும் மேலாக, “அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; இறுதியாக, தம் மக்களைத் தொடர்ந்து அந்தத் தாயும் இறந்தார்”.

ஆம் பிரியமானவர்களே எந்த சூழ்நிலையிலும் கடவுள் மீதும் திருச்சட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அவர்கள் இழக்கவில்லை. அந்த மன்னன் அந்தியோக்கு அந்த தாயிடமும், கடைசி மகனிடமும் "உன் முதாதையரின் பழக்கவழக்கங்களை நீ கைவிட்டுவிட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறுகொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு உனக்கு உயர் பதவி வழங்குவேன்" என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான்”. இந்த மன்னன் கூறிய ஆசை வார்த்தைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை.

அதைப்போலவே 6-ம் அதிகாரத்தில் இறைவசனம் 18-ல் தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடைய வருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். 19 ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதைவிட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார். அவர் தொடர்ந்து, "இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல; ஏனெனில் தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும். குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதுமாகும். இவ்வாறு எலயாசர் உயிர்துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கினர்.

ஆம் பிரியமானவர்களே இந்த எலயாசரம், அந்த தாயும் நம்பிக்கையின் நங்கூரங்களாக இருக்கின்றனர். எனவே தாங்களும் நம்பிக்கையோடு வாழ்ந்து மற்றவர்களுக்கும் நம்பிக்கைக்கு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டியுள்ளனர். இன்று என்னுடைய சோதனையிலும் வேதனையிலும் நான் கடவுளுக்கு நம்பிக்கைக்கு உரியவனா? என்னை சுற்றி உள்ள உறவுகள் எனக்கு கடவுள் நம்பிக்கையை தரும் உறவுகளா? சிந்திப்போம்…

இன்று நாம் இறைஇரக்கத்தின் திருநாளை சிறப்பிக்கின்றோம். இந்த இறை இரக்கத்தின் பக்தியைப் பரப்பும் பணியினை கடவுள் புனித பவுஸ்தீனாவிற்கு கொடுத்தார்.
“கடவுள் என்றும் இரக்கமுள்ளவர். இரக்கத்தின் கடவுளை நம்பி ஏற்றுக்கொள்பவர்களை நான் அமைதியால் நிரப்புவேன். நம்பிக்கையோடு என் இரக்கத்தை நாடி என்னிடம் வருவோருக்கு மீட்பை அள்ளித்தருவேன்” என்று கூறினார். இந்த சகோதரி பவுஸ்தினா நம்பினார்கள்; அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் கொடுத்தார்கள். இன்று உலகமெங்கும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இறை இரக்கத்தின் கடவுள் தன் இரக்கத்தையும், தன் உயிர்ப்பின் சமாதானத்தையும் அளித்து வருகின்றார். இந்த இரக்கத்தின் ஆண்டவர் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?

01. உயிர்த்த இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்

தூய பவுலடியார் 1கொரி 15: 14 “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” என உயிர்த்த ஆண்டவரை நம்பி ஏற்றுக்கொள்ள தூய பவுல் நம்மை பணிக்கின்றார். எப்படி நாம் உயிர்த்த ஆண்டவரை நம்பி ஏற்றுக்கொள்வது? 2 மக்கபேயரில் யாவே கடவுளை நம்பி திருச்சட்டத்தை கடைபிடிப்பதை தன் உயிரைவிட மேலாக அந்த தாயும், அவரது பிள்ளைகளும் கருதினர்.

இன்றைய முதல் வாசகத்தில் தொடக்ககால கிறிஸ்தவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. ஆனால் நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; தங்களுடைய எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள்.

பிரியமானவர்களே இன்று நாமும் உயிர்த்த இயேசுவை நம்புவதற்கு நமக்கு நிறைய சாட்சியங்கள் உள்ளன. குறிப்பாக நம்பிக்கை கொண்ட நாம் அனைவரும் ஒன்றாக வாழும் போதும், தங்களுக்கு உரியவற்றை பிறரோடு பகிர்ந்து வாழும் போதும், திருச்சபை கற்பிப்பவற்றில் உறுதியாக நின்று வாழும் போதும், நம்முடைய சோதனையான காலங்களில் நம்பிக்கையேடு வாழும் போது உயிர்த்த ஆண்டவரில் உள்ள நமது விசுவாசம் நம்மை திடப்படுத்தும்.

இயேசு தன் சீடர்களை சந்தித்து அப்பத்தை பிட்டு அவர்களுக்கு கொடுத்தபோது உயிர்த்த ஆண்டவரை நம்பி ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு நாளும் திருப்பலியில் அப்பத்தை பிட்க்கும் போது இறந்த இயேசு உயிர்த்து விட்டார் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதைத்தான் புனித தோமையாருக்கு இயேசு சொன்னது போல
“நீ என்னை கன்டதால் நம்பினாய் காணமலே நம்புவோர் பேறுபெற்றோர்”. இன்று நாம் வாங்கும் நற்கருணையில் உயிருள்ள ஆண்டவரின் பிரசன்னம் உண்டு என்பதை நம்பும் போது அவரை ஏற்றுக்கொள்ள முடியும். இரக்கத்தின் ஆண்டவர் நம்முடைய விசுவசத்தை திடப்படுத்தட்டும்.

02. உயிர்த்த இயேசு தரும் சமாதான வாழ்வை பெற்றுக்கொள்ள வேண்டும்

உயிர்த்த ஆண்டவர் நமக்கு கொடுத்த மாபெறும் கொடை சமாதானம். இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலே “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்தினார். மீண்டுமாக தன்னுடைய ஆணி துளைத்த கைகளையும், கால்ளையும், விலாவையும் அவர்களுக்கு காட்டி “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று இரண்டாம் முறையாக வாழ்த்துகின்றார். மீண்டுமாக எட்டு நாட்களுக்குப் பிறகு “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்தி தோமையார் வழியாக ஐயத்தோடு இருந்த எல்லா சீடர்களையும் திடப்படுத்துகின்றார்.

இன்று நாமும் உயிர்த்த இயேசு தரும் சமாதான வாழ்வை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். முதலில் ஆண்டவர் உயிர்த்து விட்டார் என்ற நம்பிக்கையே நமக்கு சமாதானத்தை பெற்றுத் தருகின்றது. இரண்டாவதாக நம்பிக்கை உள்ள அனைவரும் ஒற்றுமையாக வாழும் போது ஆண்டவரின் சமாதானம் நம்மோடு தங்கும். நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். எனவே உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று உயிர்த்த இயேசு வாழ்த்துகின்றார். இன்று நான் என்னுடைய குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்கின்றேனா? ஒற்றுமையே சாமாதனத்தின் திறவுகோல்.


03. உயிர்த்த இயேசு தரும் மீட்பை எல்லா ஆன்மாக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும்

தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்காவிற்கு இறை இரக்கத்தின் ஆண்டவர் கூறியது “கடவுள் எல்லாரையும் அன்பு செய்கிறார். நாம் எவ்வளவு பெரும் பாவியாக இருந்தாலும் அவரது அளவிடமுடியாத இரக்கத்தில் நம்பிக்கை வைத்து அவரை நாடி நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரும்போது கடவுளின் அளவிட முடியாத இரக்கம் நம்மீது பாய்தோடி வரும். பாவியின் சீர்கேடு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு இரக்கத்தை பெறும் உரிமையும் அதிகமாக உள்ளது. ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் நம்பிக்கை வைக்க எல்லா ஆன்மாக்களுக்கும் அழைப்பு விடு, எனெனில் எல்லாரையும் மீட்க நான் விரும்புகிறேன். எல்லா ஆன்மாக்களுக்காகவும் சிலுவை மரத்தில் ஈட்டியால் குத்தி திறக்கப்பட்டுள்ளது எனது இரக்கத்தின் ஊற்று. நான் யாரையும் ஒதுக்கி விடுவது இல்லை. என் இரக்கத்தை நீங்கள் பெற்றது போல் நீங்களும் பிறருடன் இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள். நான் மன்னிப்பதுபோல் பிறர் குற்றங்களை நீங்களும் மன்னியுங்கள். பாவத்தில் வீழ்ந்துகிடக்கும் ஆன்மாக்களை இரக்கமுள்ள என் இதயத்தருகே வரும்படி சொல். நான் அமைதியால் நிரப்புவேன். நம்பிக்கையோடு என் இரக்கத்தை நாடி என்னிடம் வருவோருக்கு மீட்பை அள்ளித்தருவேன்” என்று கூறினார். இதையே புனித பவுஸ்தினா ஆன்மாக்கள் அனைத்தும் மீட்புபெற வேண்டுமென இறைஇரக்கத்தின் பக்தியை உலகமெங்கும் பரப்பினார்.

ஆண்டவர் தரும் மீட்பை எல்லா ஆன்மாக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். என்பதையே இன்றைய இரண்டாம வாசகம் நமக்கு கூறுகினது.
“இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், கடைசி நாட்களில் பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும், மாண்பும், பெருமையும் தருவதாய் விளங்கும்”.

எனவே ஆண்டவர் இயேசுவுக்கக அனைத்து துன்பங்களையும் தாங்கிக்கொண்டு நம்பிக்கையில் தளராது இருப்போம். எப்படி அந்த தாயும் 7 சகோதரர்களும் எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொண்டு நம்பிக்கையில் உறுதியாய் இருந்தனரோ நாமும் நமது நம்பிக்கையில் உறுதியாய் இருப்போம். மேலும் பேதுரு “நீங்கள் கடவுளைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்” என்கிறார்.

பிரியமானவர்களே நம் வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், நோய்கள் நெருக்கினாலும், ஆண்டவர் மீது வைத்துள்ள நம்பிக்கை உறுதிபடுத்துவோம். நமது நம்பிக்கையை நங்கூரமாக்குவோம். நமக்கு நம்பிக்கையை தரும் உறவுகளை அதிகம் வளர்த்துக் கொள்வோம். அப்பேது ஆண்டவர் தரும் மீட்பை நமது ஆன்மா பெற்றுக் கொள்ளட்டும்.


ஆண்டவரே உமது பேரில் என் நம்பிக்கையை வைக்கின்றேன்.

அருட்பணி . வேத சகாய செல்வராஜ், கப்புச்சின்
உளவியல் ஆலோசனை இல்லம், பதோனி, திருச்சி.