இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









புனித வெள்ளி

சிலுவை மரம் தந்த ஏழு வாழ்வு
(சிலுவையில் வடியும் இரத்தம் குரோனாவுக்கு அருமருந்தாகும்)

ஏசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16;5:7-9
யோவான் 18:1-19:42

இறைஇயேசுவின் பாடுகளில் பங்கெடுக்க வந்திருக்கும் அல்லது ஆண்டவரின் பாடுகளை வீடுகளில் இருந்து தியானிக்கும் ஆண்டவரின் அன்புப் பிள்ளைகளே! இன்று எந்த மதமும் சொல்லிக் கொடுக்காததை, எந்த இனமும் கற்றுக் கொடுக்காத வாழ்க்கை பாடத்தை இன்றைய நாளாகிய புனித வெள்ளி கிறித்தவர்களாகிய நம் அனைவருக்கும் உணர்த்திக் கொண்டு இருக்கின்றது. அதாவது சிலுவை மரம் நமக்கெல்லம் வாழ்வு தரும் மரம். சிலுவையில் தொங்கும் இயேசு அன்றும் இன்றும் அவரை ஆரதிப்பவர்களுக்கு புதிய வாழ்வை தந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் இன்று சிலுவை என்ற வார்த்தையை எந்த மதமும் பெரிது படுத்துவதில்லை. எந்த கலாச்சாரமும் சிலுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கற்றுக் கொடுப்பதில்லை. சிலுவை என்ற சொல்லாடலை யாரும் விரும்புவதில்லை. அதானால்த் தான் எத்தனையோ புனிதர்களின் படங்களை வீடுகளில் வைக்கும் நாம் சிலுவையை நம் வீடுகளில் பெரும்பாலும் வைப்பதில்லை. ஏன் கழுத்தில் கூட சிலுவை அடையாளமுள்ள படங்களை அணிவது கிடையது. காரணம் மக்கள் விரும்பாத சொல்லும், படமும் இந்த சிலுவை தான். இந்த சிலுவை தருவது துன்பமும், துயரங்களும் ஆகும். நம்முடைய அன்றாட வாழ்வில் சிலுவையான துன்பங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களைக் காட்டிலும் துன்பமான தருணங்கள், துயரமான சம்பவங்கள் தான் நம் வாழ்வில் அதிகம் இடம் பிடிக்கின்றன. மனித இனம் தோன்றிய நாள் முதல் இன்று வரை துன்பங்களை அனுபவிக்காத மனிதர்கள யரும் இல்லை என்றே சொல்லலாம்.

துன்பத்தை, பாரமான சிலுவை போன்ற துயரங்களை அனுபவிக்காத மனிதர்கள் யாரேனும் இங்கு உண்டா? நிச்சயம் கிடையாது. ஆனால் கிறித்தவர்களாகிய நமக்கு இந் சிலுவை நம்பிக்கையின் சின்னமாகவும், எழுச்சியின் கோலாகவும், சிதருண்ட மக்களை ஒன்று சேர்க்கும் கருவியாகவும், கிறிஸ்தவததை இவ்வுலகிற்கு அறியப்படுத்தும் அடையளமாகவும், சிலுவையில் வழிந்தோடடிய இரத்தம் புதிய வாழ்வு தரும் ஊற்றாகவும் நமக்கு இருக்கின்றது.

இன்று நமது தாயம் திருச்சபையானது வாழ்வு தரும் சிலுவைக்கு ஆராதனையும், வணக்கமும் செலுத்த நம்மை அழைக்கின்றது. எனவே வீடுகளில் இருந்து கொண்டு ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் அன்புப்பிள்ளைகளே உங்களது வீடுகளில் சிலுவை இருந்தால் அதை கையில் ஏந்திக்கொள்ளுங்கள். ஒருநிமிடம் அதையே உற்றுப்பாருங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எந்த பாவமும் செய்யாத நமதாண்டவர் தான் படைத்த மக்களை அன்பு செய்த குற்றத்திற்காக விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் கைகளும், கால்களும் துளைக்கப்பட்டு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கின்றார். அவரது வேதனையின் உச்சக்கட்டத்தில் தந்தையே ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் என்று கதருகின்றார்.


ஆண்டவரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் நான் குணமடைவேன் என்று சொல்லிய மக்கள் கூட்டம் இன்று இயேசுவுக்கு ஆறுதல் செல்லவோ, இவர் குற்றமற்றவர் என்று கூறவோ யாரும் இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட சூழல். அனைவரும் கைவிட்டு விட்டனர். உம்மோடு இருப்போம் என்று வீரவசனம் பேசிய சீடர் கூட்டமெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டது. ஓசான்னா தாவீன் அரசரே என்று பாடிய மக்கள எல்லாம் வாயடைத்து நிற்க்கின்றனர். பிரியமானவர்களே உங்கள் கையில் இருக்கும் சிலுவை நாயகன் படும் துன்பங்களை பாருங்கள். இத்தனை துன்பங்களுக்கும், கொடிய வேதனைகளுக்கும் மத்தியில் சிலுவையில் தொங்கும் ஆண்டவர் பலருக்கும் புது வாழ்வை அளித்தார். இன்று நாமும் புதுவாழ்வைப் பெற்றுக்கொள்ள அவரை ஆராதிப்போம்.

சிலுவை மரம் தந்த வாழ்வு:

இயேசுவை ஈட்டியால் குத்திய மனிதர் பெயர் தெரியுமா?
திருச்சபை அவருக்கு தந்த அங்கீகாரம் என்ன?


01. தம்மை ஈட்டியால் குத்தியவருக்கு புதிய வாழ்வை அளிக்கின்றார்.

பிரியமானவர்களே இன்று உலகமெங்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் கிருமி உலக மக்களை ஒவ்வொரு நாளும் சாகடித்து வருகின்றது. சுனாமி வந்த நாட்களில் ஒரு சில நிமிடங்களில் மக்கள் இறந்து போனார்கள் ஒரிரு நாட்களில் இழப்புகளை சரி செய்து விட்டு வழக்கம் போல நமது பணிகளுக்கு திரும்பி விட்டோம். ஆனால் இன்று ஒவ்வொரு மணித்துளியும் இறந்து போன உடல்களளால் சவப்பெட்டிகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றது. யாரை எந்த நேரத்தில் இந்த வைரஸ் தாக்கும் என்ற பீதியில் மக்கள் உறைந்து போய் உள்ளனர். இன்று வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரசுக்கு மருந்துகள் ஏதும் கண்டு பிடிக்கபடவில்லை.

இதைப்பேலத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புரையோடிய கண்களுக்கு எந்த விதமான மருந்துகளும் கண்டுபிடிக்கபடவில்லை. ஆனால் புரையோடிய, கண்பார்வை மங்கிய லான்ஜினுஸ் என்ற படைவீரர் ஆண்டவரின் விலாவை ஈட்டியால் குத்துகின்றார். அவருடைய விலாவிலிருந்து இரத்தமும், தண்ணீரும் உருண்டோடி வந்து அவரது கண்களில் பட அவர் புதிய பார்வையைப் பெருகின்றார். புதிய உலகை காண்கின்றார். இன்று திருச்சபையில் புனிதர்களின் கூட்டத்தில் வேதசாட்சியாக இருக்கிறார்.

ஆம் பிரியமானவர்களே புதிய பார்வையைப் பெற்ற மனிதன் இயேசுவுக்கு சாட்சியாக இருகின்றான். இவருடைய சாட்சியத்தை அக்டோபர் 16-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் திருச்சபை சிறப்பிக்கின்றது.
யோவான் 19:34-35 படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.

இன்றும் ஒவ்வொரு திருப்பலியின் போதும் கல்வாரி மலையில் சிந்திய இரத்தம் தண்ணீரோடு கலந்து பல லட்சக்கணக்கான மக்களின் உடல், உள்ள நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்பட்டு வருகின்றது. ஆண்டவரின் இரத்தம் நம்மை எல்லா நோய்களில் இருந்தும் விடுவிக்கட்டும்.

02. சிலுவையில் சாகும் நேரத்தில் புதிய வாழ்வை பெற்ற கள்வன்

நல்ல கள்வன்: இன்னும் சில மணித்துளிகளில் இறந்து விடுவோம். இறந்த பிறகு என்னுடைய பாவங்கள் நிச்சயம் நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்று காத்திருந்த கள்வன் ஒரு நிமிடம் ஆண்டவரை சிலுவை மரத்திலே உற்று நோக்குகின்றான். ஆண்டவரை உற்று நோக்கிய அந்த நிமிடமே ஆண்டவரோடு பேரின்ப வீட்டிற்கு பயனிக்கின்றான். "நீ இன்றே என்னோடு விண்ணரசில் இருப்பாய்" என்ற ஆண்டவரின் வாக்குறுதி இந்த நல்ல கள்வனைத் தவிர உலகில் வேறு யாருக்கும் ஆண்டவர் கொடுத்ததில்லை. "இவன் இந்த உலகில் வாழ்ந்தவரை உலகைத் திருடினான். ஆனால் இவன் செத்த பிறகு சொர்கத்தையும் திருடிக் கொண்டான்" என்று இந்த நல்ல கள்ளனைப் பற்றி எழுதிவைத்தார் ஒர் ஞானி. சிலுவை மரம் நல்ல கள்வன் என்ற பட்டத்தையும், ஆண்டவரோடு விண்ணரசில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றுக்கொடுத்தது.

03. சிலுவை மரத்தில் ஆதரவு பெற்ற அன்னை மரியாள்

தாயின் அன்பை விவரிக்க இன்று வரை போதுமான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டிய கணவனும் பாதியிலே போய்விட்டார், வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த பிள்ளை தன் கண்முன்னே பாரமான சிலுவையை சுமந்துகொண்டு, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றான். எல்லாம் முடியப் போகின்றது. ஆதரவு சொல்லக்கூட யாருமில்லா அநாதையாக இருந்த தாயின் முகபாவனையை அறிந்த இயேசு தன்னை 10 மாதம் பெற்று பாலுட்டி, சீறாட்டி, வளர்த்து, கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கச் செய்த தன்னுடைய அன்னைக்கு தானும் இவ்வுலகை விட்டு பிரியப் போகின்றேன் எனக்கருதி இயேசு தன்னுடைய தாயை “இதோ உன் தாய்” என்று தான் விரும்பி நேசித்த தன்னுடைய அன்பு சீடரிம் ஒப்படைக்கின்றார். அந்நேரம் முதல் அச்சீடர் அவரை தம்வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். சிலுவை மரத்தில் அன்னை மரியாள் ஆதரவு பெற்று புதிய வாழ்வை வாழ ஆரம்பிக்கின்றார்.

பிரியமானவர்களே தான் சொல்லமுடியாத வேதனைகளை சிலுவையில் இயேசு அனுபவித்தாலும் தன்னுடைய தாய்க்கு உரிய கடமையை செய்யும் நல்ல மகனாக இருக்கின்றார். இன்று நமது பகுதியில் எத்தனை முதியோர் இல்லங்கள். ஏன் இந்த முதியோர் இல்லங்கள் என்று என்றாவது நாம் நினைத்ததுண்டா? பெற்ற தாய், தந்தையருக்கு பிள்ளைகளாக இருந்து செய்ய வேண்டிய கடமைகளை மறந்த மகன்களும், மகள்களும் அதிகமாவதால் முதியோர் இல்லங்களும் அதிகமாகின்றன. உன்னுடைய பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி இருந்தாலும், உன் வீட்டிலே உன் பெற்றேரை கவனிக்க மறுப்பாயானால் அந்த சிலுவையில் தொங்கும் இயேசு உன்னை மன்னிக்க மாட்டார். இன்று உன்னுடைய பெற்றோரின் நிலை என்ன? அன்னை மரியாவைப் போல ஆதரவு அற்ற பெற்றோர்கள் ஆதரவு பெற ஜெபிப்போம்.


04. சிலுவை மரத்தில் அன்னை மரியாவுக்கு அன்பு பிள்ளைகாளகிய நாம்

இன்றைய உலகில் அன்னை மரியாள் பெயரில் எழுப்பப்படும் ஆலயங்கள் கணக்கிலடங்கா. காரணம். சிலுவையில் தொங்கிய இயேசு தன்னை பின்பற்றி வந்த அனைத்து மக்களையும் தன்னுடைய தாயின் அரவணைப்பில் “அம்மா இவரே உம் மகன்” என ஒட்டு மொத்த மனித குலத்தையும் தன்னுடைய அன்னையின் பாரமரிப்பில் ஒப்படைக்கின்றார். இந்த அன்னை மரியாவிடம் தான் “வானதூதர் உன் வயிற்றில் பிறக்கப்போகும் குழந்தை பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமக இருக்கும் என்றார் லூக் 2:34. யூதர்களுக்கு இயேசுவின் இறப்பு வீழ்ச்சியாக இருந்தது; ஆனால் இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு சிலுவை எழுச்சியின் சின்னமாக இருக்கின்றது. இந்த எழுச்சி மிகு வாழ்வை அன்று சீடர்களுக்கும், இன்று நம் ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொடுப்பவர் அன்னை மரியா.

பிரியமானவர்களே தாய்யில்லாமல் சேய்யில்லை என்பார்கள். ஆனால் இன்று எத்தனையோ பிஞ்சு குழந்தைகள் தாயில்லாமல் அநாதை இல்லங்களில் வளர்ந்து வருகின்றனர். இதற்கு காரணங்கள் இன்று பல உண்டு. அன்னை மரியாவைப் போல எத்தனை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு முன்னுதாரமாக வாழ்ந்து வருகின்றனர்.


05. சிலுவை தரும் மன்னிப்பு அதனால் வரும் புது வாழ்வு

மன்னிப்பு என்ற வார்த்தைக்கு கிறித்தவ மதம் ஒரு முன்னோடியாக இருக்கின்றது என்பதை ஒவ்வொருநாளும் நாம் கண்கூடாக பார்த்து மன்னிப்பின் சாட்சிகளாக இருக்கின்றோம். ஆம் பிரியமானவர்களே அன்றுமுதல் இன்று வரை மன்னிக்கும் மனிதர்கள் இந்த உலகத்தின் மகான்கள் என்று மக்களால் போற்றப்பட்டு வருகின்றனர். இந்த உலகிலே வாழ்ந்த போது இயேசு உங்களில் பாவம் செய்யாதவன் முதலில் கல் எறியட்டும் என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்ட பெண்னை மன்னிக்கின்றார். மன்னியுங்கள் மன்னிப்பு பெறுவீர்கள் என்று போதித்து, தான் போதித்ததை சிலுவை மரத்தில் உயிர் பிரியும் நேரத்தில் கூட “தந்தையே இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள் இவர்களை மன்னியும்” என்று தன்னுடைய தந்தையிடம் தன்னுடைய பகைவர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபிக்கின்றார்; தான் போதித்ததை சிலுவையில் வாழ்வாக்குகின்றார்.

அன்புக்குரியவர்களே ஆண்டவர் இயேசு பாவம் செய்யாதவர்கள் மட்டும் தான் கல் எறிய வேண்டும்; பாவம் செய்யாதவர்கள் மட்டும் தான் மற்றவர்கள் பாவிகள் என தீர்ப்பிட வேண்டும் என்றார். துன்பம், அவமானம், நோய், போன்ற சிலுவைகள் என்னை அமுக்கும் போது என்னையும், பிறரையும் குற்றவாளிகள் என தீர்ப்பிடுகின்றேனா? அல்லது என்னையும் அயலாரையும் மன்னித்து புது வாழ்வை அளிக்கின்றேனா?.


06. சிலுவை தரும் புதுவாழ்வு

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். லூக்கா 23:46. இறப்பு மனிதனுக்கு முடிவு அல்ல; மாறாக அது மறுபிறப்பு என்பதை இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு கூறுகின்றது. தான் இறக்கும் முன்பு தன்னுடைய உயிரை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து இறக்கின்றார். எனவே அவரது இறப்பு உயிர்ப்பு என்னும் புது வாழ்வைக் கொடுக்கின்றது. அன்றும், இன்றும் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு இறப்போர் புதுவழ்வை பெற்றுக்கொள்கின்றனர்.

உதாரணமாக அன்று : யோவான் 11:25 “இயேசு, "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று இலாசருக்கு புது வாழ்வை தருகின்றார்.

இன்று: அவரை நம்பும் நம் அனைவருக்கும் (26) “உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்: என்ற நம்பிக்கையையும் புது வாழ்வையும் தருகின்றார். மேலும் தூய பவுல் பிலிப்பியர் 1:21 -ல் “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” என்று சொல்லி புது வாழ்வுக்காக தன்னையே தயார் செய்கின்றார்.

ஆம் பிரியமானவர்களே சிலுவை நம் அனைவருக்கும் வாழ்வு தரும் கேடயமாக இருக்கின்றது. அதனால் தான் எத்தனையோ வேத சாட்சிகள் இறப்பை கண்டு அஞ்சவில்லை மாறாக மகிழ்ச்சியோடும், மனமுவந்து சிலுவை தரும் மரணத்தை ஏற்றுக்கொண்டனர். இன்று சிலுவை தரும் மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேனா?

07. சாபம் என்று கருதப்பட்ட சிலுவைக்கு வாழ்வு தரும் இயேசு

அன்று யூத சமூகத்தில் சிலுவை மரம் ஓர் அவமானத்தின் சின்னமாக கருதப்பட்டது. குற்றவாளிகளுக்கு தரும் மிகப்பெரிய தண்டணையாக சிலுவை இருந்தது. அப்படிப்பட்ட சிலுவை இயேசு சுமந்து அதில் அறையப்பட்ட போது அவமானமாக இருந்த சிலுவை அசீர்வாதத்தின் கருவியாக மாறியது. சிலுவை கடவுளின் வல்லமையை வெளிப்படுத்தும் ஆயுதமாக மாறியது. எனவேதான் தூய பவுல் 1கொரிந்தியர் 1:18,23ல் சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை… நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.

இன்று சிலுவையைக் கண்டாலே ஓடி ஓளியும் மக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான அருட்சகோதரிகள் தங்கள் துறவறத்தின் அடையாளமாகவும், மறைபணியாளர்களுக்கு கடவுள் தம்மையே வெளிப்படுத்தும் கருவியாகவும் சிலுவை இருக்கின்றது. சிலுவை சாத்தானை வெல்லும் கருவியாக பயன்படுகின்றது; தூய சவேரியார் சிலுவையை கையில் ஏந்தி விசுவாசத்தை போதித்தும், அற்புதங்களையும் நிகழ்த்தினார். இன்று எனக்கு இந்த சிலுவை வாழ்வைத் தருகின்றாதா? அல்லது நான் இந்த சிலுவைக்கு வாழ்வைத் தருகின்றேனா?

பிரியமானவர்களே மீண்டுமாக உங்கள் கையில் இருக்கும் அந்த சிலுவையை உற்று நோக்குங்கள். அன்று இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் மோசே உயர்த்திய வெண்கலப் பாம்பை உற்று நோக்கியவர்கள் எல்லோரும் பிழைத்துக் கொண்டனர். இன்று கரங்களில் சிலுவையை ஏந்நதிக் கொண்டும் அதை ஆராதனை செய்யும் நாம் அனைவருக்கும் சிலுவையில் தொங்கும் ஆண்டவர் புதுவாழ்வை அளிக்க இருக்கின்றார்.


இந்த சிலுவை தரும் புது வாழ்வைப் பெற்று சிலுவை நாயகனுக்கு சாட்சிகளாக வாழ்வோம்.

"எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

அருட்பணி. வேத சகாய செல்வராஜ், கப்புச்சின், உளவியல் ஆலோசனை இல்லம், திருச்சி.