இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பெரிய வியாழன்

பாதங்களைக் கழுவி ஆன்மாவை அழகுபடுத்துவோம்: குரோனாவிற்காக அல்ல... கடவுளுக்காக!

விடுதலைப்பயணம் 12:1-8, 11-14
1 கொரிந்தியர் 11:23-26
யோவான் 13:1-15

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று திருச்சபையின் மிக முக்கியமான நாள். கத்தோலிக்க கிறித்தவ விசுவாசத்தின் ஆனிவேராகவும், அஸ்திவாரமாகவும் இருப்பது இன்றைய பெரிய வியாழன் ஆகும்.

காரணம்
யோவான் 1:14-ல் “வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார்” என்று நமது மத்தியில் மனுவுறுவான கடவுள் தான் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தையும், தமக்குப்பின் இந்த உலகத்தை பண்படுத்த, வழிநடத்த தன்னுடைய சீடர்களுக்கு கடவுளின் சித்தத்தை வெளிப்படுத்திய நாள் தான் இன்று. இதையே யோவன் 1:18-ல் “கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்”. இந்த ஓரே மகன் இயேசு கிறிஸ்து குருத்துவத்தை ஏற்படுத்தி கடவுளின் நிலையான நற்கருணை பிரசன்னத்தை ஏற்படுத்திய நாளும் இதுவேயாகும்.

பிரியமானவர்களே இந்நன்னாளில் நம்முடைய பாதங்களை கழுவி ஆன்மாக்களை அழகுபடுத்த கடவுள் நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். கடந்த வாரம் நமது அரசாங்கம் மக்கள் அனைவரும் கிருமிநாசினி கொண்டு கைகளையும், கால்களையும் சுத்தம் செய்யுங்கள் என ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பு வந்த நாளில் இருந்து இன்று வரை பலஇலட்சக்கணக்கான கிருமிநாசினி பாட்டில்கள் விற்று தீர்ந்துவிட்டன. கடந்த 06 தேதி தினகரன் செய்தித்தாளில் இன்றைய காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய துப்பாக்கி வைக்க கூடிய பெல்ட்களில் கிருமிநாசினி பாட்டில்களை சுமந்து செல்கின்றனர் என்ற படத்தோடு செய்தி வெளியானது. காரணம் கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் கிருமி நம் அனைவரையுமே கைகளையும், கால்களையும்; கழுவ நமக்கு கற்றுகொடுத்து விட்டது. உயிருக்கு பயந்து போய் ஒருமுறையல்ல, இருமுறையல்ல ஒவ்வொரு மணித்துளிகளும் நம்மையே கழுவி சுத்தம் செய்ய நமக்கு கற்றுகொடுத்து விட்டது. இந்த வெளிப்புற சுத்தம் நம் உடலை மட்டும் பாதுகாக்கும். ஆனால் இது நமது ஆன்மாவை சுத்தப்படுத்த இயலாது. ஆன்மா சுத்தமாக இருந்தால்த் தான் நமது உடல் நலமாக இருக்கும்.

மக்கள் சொல்லலாம் உடல் இருந்தால் தானே ஆன்மா இருக்க முடியும் என்று. ஆனால் இது தவறு. ஆன்மா என்ற உயிர் உடம்பில் இருந்தால் தான் உடம்புக்கு மரியாதை. இல்லையென்றால் உடல் பிணத்திற்கு சமம். ஆன்மா என்பது அஸ்திவாரம் போன்றது; உடல் அதன் மேல் எழுப்பப்படும் கட்டிடம். அதனால்த்தான் ஆண்டவர் இயேசு மத்தேயு 10 : 28 “ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” இங்கு உடலைக் கொல்லும் கொரானாவிற்கு பயந்து உடலை மட்டும் கழுவுபவர்களே உங்கள் ஆன்மாவையும் சேர்த்து கழுவுங்கள் என்கின்றார் நமதாண்டவர்.

மேலும்
மத்தேயு 16: 26-ல் “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் ஆன்மாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?” ஆக, ஆன்ம சுத்தம் மிக அவசியம். ஆனால் இன்று உடலை சுத்தம் செய்ய பணத்தை கொட்டி, கிருமி நாசினிகளை வாங்க கடைகளில் வரிசையில் நிற்கின்றோம். ஆனால் எத்தனை நாள் நம்முடைய இந்த ஆன்மாவை சுத்தம் செய்ய பாவசங்கீர்தனம் என்ற கடைக்குச் சென்று வருசையில் நின்று நம்முடைய பாவங்களை கழுவியிருக்கின்றோம்.

அன்புக்குரியவர்களே! ஒருமுறை ஒரு பங்கிற்கு ஒருநாள் தியானம் கொடுக்க சென்றிருந்தேன். அப்போது அந்த பங்குத்தந்தை இறைமக்களைப் பார்த்து பிரியமான பங்குமக்களே, பங்கு மக்களுடைய அழுக்கு துணிகளை துவைப்பதற்கு அருட்தந்தை திருச்சியில் இருந்து வந்திருக்கின்றார்கள். எனவே உங்களிடமும், உங்கள் குடும்பத்திலும் உள்ள எல்லா அழுக்கு துணிகளையும் விரைவாக எடுத்து வந்து வரிசையில் நின்று அருட்தந்தையிடம் துணிகளை துவைத்துக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார். ஒருநிமிடம் நான் குழம்பி விட்டேன். அப்போது அவர் அழுக்கு துணி என்பது உங்களுடைய பாவங்கள். துவைக்கும் இடம் பாவசங்கீர்த்தன தொட்டி, துவைத்து தருபவர் குருக்கள் என்று கூறினார்.

ஆம் பிரியமானவர்களே ஒவ்வொரு முறையும் பங்குத்தந்தையர்களும், ஆயர்களும், பாவவாழ்க்கையில் இருந்து திரும்பி வாருங்கள் என்று பல முறை நம்மிடம் அழைப்பு கொடுத்தாலும் நம்மில் எத்தனை பேர் பாவசங்கீர்த்தனம் செய்ய மனமுவந்து முன்வருகின்றோம். ஆனால் இந்த கொரோன வைரஸ் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் தாக்காமல் இருக்க கிருமிநாசினி கொண்டு கழுவுங்கள் என்றவுடன் அன்றாடம் குளிக்காதவர்கள் கூட கைகைளைக் கழுவி சுத்தம் செய்வதை நாம் பார்க்கின்றோம்.

இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுள் தன்மையில் இருந்த அவர் நம்முடைய பாவம் என்ற துணிகளை துவைப்பதற்கு தன்னுடைய கடவுள் தன்மை என்ற மேலுடையை கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவுகின்றார்.


பாதம் கழுவுதல்
அன்புக்குரிவர்களே நம்முடைய பாதம் தான் மனித உடலுக்கு அஸ்திவாரம். உதாரணமாக உங்களுடைய பாதத்தில் ஏதோ முள் தைத்து விட்டது, அல்லது ஏதோ ஒரு கட்டி வந்து விட்டது என வைத்துக் கெள்வோம். உங்களால் எழுந்து நடக்க முடியுமா?, ஏதாவது வேலைகள் செய்யமுடியுமா? நிச்சயம் முடியாது. காரணம் கால் பாதங்கள் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த கால் பாதங்களை எளிமையாக கிருமிகள் தாக்க வாய்ப்புகள் அதிகம். அதனால்த்தான் கிருமிகள் நம்மை தாக்காமல் காலில் செருப்பு அணிந்து கொள்கின்றோம்.

இன்று ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவுகின்றார். இங்கு அவர்களுடைய பாதங்களை மட்டுமல்ல அவர்களின் பாவங்களையும் சேர்த்து கழுவுகின்றார். ஒவ்வொரு சீடரும் தன்னுடைய மனித இயல்பில் வெவ்வேறு விதத்தில் பாவங்கள் செய்கின்றனர்.


01. உதாரனமாக இராயப்பர்:
vசாதாரணமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த சீமோனை இயேசு அழைத்து தன்னுடைய போதனைகளை கற்றுக்கொடுத்து தன்னை யார் என்று கேட்டபோது சீமோன் “நீரே இறைமகன்; நீரே மெசியா” என்று கூறியவரைப் பார்த்து
மத்தேயு 16 : 18 “நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்று தன்னுடைய இறையாட்சி பணிக்கு தலைமை பொறுப்பை வழங்குகின்றார்.

அதன் பிறகு தன்னுடைய பாடுகளையும் சாவையும் சீடருக்கு வெளிப்படுத்துகின்றார். தலைமை பொறுப்பை பெற்ற பேதுரு இயேசுவை தனியே அழைத்துக் கடிந்துகொண்டு,"
ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" மத்தேயு 16 : 22 என்றார். தலைமைத்துவம், அதிகாரம் அல்லது பதவி கிடைப்பதற்கு முன்பக ஒரு பேச்சு, அது கிடைத்தபிறகு மற்றொரு பேச்சு. இயேசுவை யார் என்றே எனக்கு தெரியாது என மூம்முறை மறுதலித்த சீமோன்.

02. யோவனும் அவரது சகோதரரும்:
மாற்கு 10: 35 -37-ல் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். ஆக அதிகாரம், பதவிக்கு ஆசைப்படுவது இரண்டு சீடர்கள் மட்டுமல்ல மாறாக 12 சீடர்களுமே.

03. பாசம் என்ற முத்தத்தாலும், பணம் என்ற காகிதத்திற்கு ஆசைப்படும் சீடன் யோவான் 12:4-7 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, "இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு. மத்தேயு 26:14-16-ல் பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, “இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்”. மேலும் லுக்கா 22:48 “இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?" என்றார்

ஆக தன்னுடைய மூன்று வருடப்பணியில் இந்த சீடர்கள் திருடர்களாகவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும், பாசம் என்ற போர்வையில் காட்டிக்கொடுக்கவும் இவர்கள் தயங்கவில்லை. இப்படி பாவவாழ்க்கையில் வாழ்வதைக் கண்ட இயேசு, சீடர்களின் பாவங்களை பாதம் கழும் சடங்கு வழியாக இவர்களை கழுவி புதுப்பிக்கின்றார்.


அன்புக்குரியவர்களே! இன்று நாமும் கடவுளுக்கு எதிராகவும், நம்முடைய பெற்றோருக்கு எதிராகவும், சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும், கடைசியில் இந்த பிரபஞ்சத்திற்கு எதிராக எத்தணை பாவங்களை அன்றாடம் செய்து வருகின்றாம். பதவி என்ற பெயரில் நாம் செய்யும் பழிக்குற்றங்கள், ஆணவம் என்ற பெயரில் நாம் ஆடும் ஆட்டங்கள், நரம்பில்லாத நாக்கினால் நாம் உமிழ்ந்து தள்ளும் தீய வார்த்தைகள், உதவி செய்ய கரங்கள் இருந்தும் உதவிக் கரம் நீட்ட மறந்த, மறுத்த தருணங்கள் என்றும், என் கணவனுக்கு தெரியாது, மனைவிக்கு தெரியாது, பிள்ளைகளுக்கு தெரியாது, பெற்றோருக்கு தெரியாது, அடுத்தவருக்கு தெரியாது, என்று நாம் செய்யும் பாவங்களை பட்டியலிட்டால் போய்க்கொண்டே இருக்கும், இந்த தருணத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து நாம் செய்த பாவங்களை கழுவுவதற்கு கூட நம்மால் இயலாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

சிறுவயதில் நாங்கள் புதுநன்மை எடுத்த போது கதையாக செல்வார்கள். பாவசங்கீர்த்தனம் செய்துதான் நற்கணை உட்கொள்ள வேண்டும். அப்படி நற்கருணை பெற்று இறந்தவர்கள் நேராக மோட்சத்திற்கு செல்வார்கள். காரணம் கடவுள் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுவார்.

இன்று நம்முடைய உலகத்தை நினைத்துப் பார்ப்போம் எத்தனை பேர் பாவசங்கீர்த்தனம் என்ற இந்த அருட்சாதனம் கிடைக்காமல் மரித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் அடக்க சடங்குகள் கூட சரிவர நிறைவேற்ற இயலாத ஒரு சூழலில் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. பாவத்திலே வாழ்ந்து, பாவத்தோடு மரித்து, பாவத்திலே மரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் கடவுள் நமக்கு நல்லதொரு வாய்பை பெரிய வியாழன் வழியாக கொடுத்திருக்கின்றார். எனவே இன்றைய நாளில் நம்முடைய பாவங்களை நினைவு கூர்ந்து கடவுளிடம் மன்னிப்பு பெற்றுக்கொள்வோம்.

பிரியமானாவர்களே இன்று வீட்டில் அமர்ந்து இந்த வழிபாடுகளில் பங்கெடுப்பவர்களே உங்களுக்கு ஒரு சவால்… கொரோனா வைரஸ் காரணமாக பாவசங்கீர்த்தனம் செய்வோ, திவ்ய நற்கருணை உட்கொள்ளவோ சாதகமான சூழ்நிலை கிடையாது. எனவே உங்களுடைய பாவங்களையும், உம் குடும்பத்தாரின் பாவங்களை கழுவிக் கொள்ள அன்று இயேசு செய்தது போல நாமும் ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, குவளையில் தண்ணீர் எடுத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதங்களை ஒருவர் மற்றவர் கழுவுங்கள். கருணையின் கடலான ஆண்டவர் இயேசுவின் பணியை நாம் ஒவ்வொருவரும் வீட்டிலிருந்தே தொடர்ந்து செய்வோம். சீடர்களின் பாதங்கள் வழியாக அவர்களின் பாவங்களை கழுவி திடப்படுத்திய கடவுள் நீங்கள் செய்யும் இச் சடங்குகள் வழியாக உங்களையும், உங்கள் குடும்பத்தையும் திடப்படுத்துவாராக!

2. நற்கருணையை ஏற்படுத்துதல்:

பாதங்களைக் கழுவி ஆன்மாவை சுத்தம் செய்ய ஆண்டவர் ஏற்படுத்திய நற்கருணை.
இந்த பெரிய வியாழனில் தான் ஆண்டவர் இயேசு தன்னுடைய நிலையான பிரசன்னத்தை நற்கருணை வழியாக இவ்வுலகிற்கு அளித்தார். நற்கருணை கிறித்தவத்தின் ஆனிவேராக இருக்கின்றது. இந்த நற்கருணையை நாம் துய்மையான மனநிலையில் தான் உட்கொள்ள வேண்டும். அதனால்த் தான் ஆண்டவர் இயேசுவே இந்த நற்கருணையை ஏற்படுத்துவதற்கு முன்பாக முதலில் சீடர்களின் பாவங்களை பாதம் கழுவும் சடங்கு வழியாக நிறைவேற்றுகின்றார் அதன் பின்பு நற்கருணை பிட்டு தனது சீடர்களுக்கு கொடுக்கின்றார். தகுதியான தயாரிப்பில் உள்ள சீடர்கள் ஆண்டவர் இயேசுவை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் தகுந்த தயாரிப்பு இல்லாமல், தகுதியற்ற முறையில் அப்பத்தை பெற்றவரிடத்தில் சாத்தான் உள்ளே புகுகின்றான். (யோவான் 13:27).

மேலும் இந்த நற்கருணை உட்கொள்ளும் முறையை இன்றைய முதல் வாசகம் நமக்கு கோடிட்டு காட்டுகின்றது.
“இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் புடித்து, விரைவாக உண்ண வேண்டும். ஏனெனில் இது ஆண்டவரின் பாஸ்கா”. இந்த ஆண்டவரின் பாஸ்காவை இன்று நம் இல்லங்களில் இருந்தே கொண்டாடுவோம். அன்று இஸ்ராயேலக்கு கூறிய கடவுள் இன்று நம்மையும், இந்த குரோனா வைரஸ் சூழ்ந்துள்ள இடங்களைப் பார்த்து இவ்வாறாக “நான் உங்களது ஊர்களையும், வீடுகளையும் கடந்து செல்வேன்; அப்படி செல்லும் போது உங்களை கொல்லும் கொள்ளை நேய் எதுவும் உங்களைத் தாக்காது”. என்கின்றார்.

பாவம் என்ற துணிமூட்டைகைளை ஆண்டவரில் இரத்தத்தில் கழுவி நம்மையும், நமது குடும்பத்தையும் இன்று நம் சமூகத்தை அச்சுறுத்தி வரும் கொள்ளை நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் நற்கருணை நாம் பெரும்போது, ஆண்டவரே எனது இல்லத்தில் இறங்கிவர நான் தகுதியற்றவன்(ள்) ஆனால் ஒரு வார்த்தை செல்லும் எனது ஆன்மா நலமடையும் என்று கூறும் நாம் இன்று நம்முடைய பாவங்களைக் கழுவி நம்முடைய ஆன்மாவை புதுப்பிப்போமா!


இன்று குரோனாவுக்கு கைகழுவி தங்களை சுத்தம் செய்யும் மனிதர்களே மத்தேயு 10 : 28 -ல் இந்த கொரோன வைரஸ் ஆன்மாவை கொல்ல இயலாது. எனவே ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவரான நம்முடைய ஆண்டவருக்கே அஞ்சி நடப்போம். அப்போது 1 தெசலோனிக்கர் 5 : 23 -ல் அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக. பாதங்களை கழுவி நம்முடைய ஆன்மாக்களை புதுப்பிப்போம்.

3 யோவான் 1 : 2 –ல் அன்புக்குரியவர்களே! நீங்கள் அனைவரும் ஆன்ம நலத்தோடியிருப்பது போல், உடல் நலத்தோடு இருக்கவும் வரும் நாட்களில் நீங்கள் தொடங்கும் அனைத்தும் இனிதே நிகழவும் நற்கருணை நாதரிடம் வேண்டுகிறேன். நற்கருணை நாதர் நாளும் உங்களை ஆசீர்வதிப்பாராக.

அருட்பணி . வேத சகாய செல்வராஜ், கப்புச்சின்
உளவியல் ஆலோசனை இல்லம், பதோனி, திருச்சி.