இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

இறந்த விசுவாசிகளின் நினைவுநாள்

இறக்கத்தானே போகின்றோம் இரக்கத்தோடு இ(ற)ருப்போம்

ஏசாயா 25:6-9
உரோமையர் 5:5-11
லூக்கா 7:11-17

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று நமது வாழ்வின் மிக முக்கியமான நாள். நாம் நின்று கொண்டிருக்கும் இந்த கல்லறைத் தோட்டம் தான் நாம் சம்பாதித்த சொத்து. உயிரோடு இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது நிச்சயம். பிறப்பு எப்படி மனித வரலாற்றில் எழுதப்படுகின்றதோ அதைப்போலவே இறப்பும் வரலாற்றில் இடம் பிடிக்கின்றது. ஒரு மனிதனின் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சரி; அல்லது எவ்வளவு தாழ்நிலையிலும் இருந்தாலும் சரி அவனது சகாப்தத்தையே முடிவுக்கு கொண்டு வருவது இந்த இறப்புத்தான். எனவே தான் இறப்பு என்பது நமக்கு முக்கியமான நாள். இந்த இறப்பை தாயாம் திருச்சபை நன்றியின் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றது. காரணம் நம்மோடு வாழந்து இறந்தவர்கள் நமக்கு பல நல்ல செயல்களை விட்டுச் சென்றுள்ளனர். இன்றைய நாளில் அவர்களையும் அவர்களது நல்ல செயல்களையும் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கவும் நன்றி செலுத்தவும் நாம் இந்த இடத்தில் கூடியிருக்கின்றோம்.

பிரியமானவர்களே கிறிஸ்துவில் இறந்த அனைவருக்கும் இறப்பு என்பது ஒரு முடிவு அல்ல. மாறாக அது மற்றொரு வாழ்வின் தொடக்கம் என தாயாம் திருச்சபை நமக்கு அறிவுறுத்துகின்றது. உயிரோடு இருக்கும் அனைவருக்கும் இறப்பு நிச்சயம் என தெரிந்த விசயமே. அதனால்த்தான் இன்றைய நாளில் நாம் அனைவருமே தவறாமல் திருப்பலியில் பங்கு பெறுகிறோம். கல்லறைகளைச் சுத்தம் செய்கிறோம். அவைகளை அழகுபடுத்துகிறோம், மந்திரிக்கிறோம். இறந்த போன சொந்தங்களை நினைத்து அவர்களுக்காக கண்ணீரோடு செபிக்கிறோம். “நீங்கள் இறந்துவிட்டாலும், உடலளவில் நீங்கள் எங்களோடு இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்கவில்லை. உங்களை, உங்களின் செயல்களை நினைத்துப் பார்க்கிறோம். இறப்பு நம்மை பிரித்துவிட முடியாது. நமது உறவு என்றும் தொடருகிறது” என்ற செய்தியைத்தான் கல்லறைத் திருவிழாவிலே நாம் வெளிப்படுத்துகிறோம். இறந்தவர்கள் இரக்கத்தோடு இறந்ததால்த்தான் இன்றும் அவர்களது இரக்கத்தை நினைத்து அவர்களுன்கு நன்றி கூற இந்த இடத்தில் கூடியிருக்கின்றோம். மேலும் இவர்கள் இரக்த்தோடு இருந்தது இறந்தது போல நாமும் இரக்த்தோடு வாழ்ந்து இறக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

பிரியமானவர்களே இறந்த விசுவாசிகளை நாம் மூன்று வகைப்படுத்தலாம் ஒன்று விசுவாசத்திற்காக இறந்தவர்கள்; 2 விசுவாசத்தோடு இறந்தவர்கள்;3 விசுவாசம் இல்லாமல் இறந்தவர்கள்.

01. விசுவாசத்திற்காக இறந்தவர்கள்:
திருச்சபையின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் எத்தனையோ மனிதர்கள் கிறித்தவ விசுவாத்திற்காக தங்களது உயிரை கையளித்து இருக்கின்றனர். பழைய ஏற்பாட்டு காலம் தொட்டு இன்று வரை கடவுளின் விசுவாசத்திற்காக இறந்தவர்கள் ஏரளம். கிறிஸ்துவுக்காக, கிறித்தவ விசுவாசத்திற்காக முதன் முதலில் ஸ்தேவான் தனது உயிரை கையளிக்கின்றார். அதைத் தொடர்ந்து அப்போஸ்தலர்கள் கிறித்தவ விசுவாசத்திற்காக இறக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்கள் கழித்தாலும் இன்றும் கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவ விசுவாசத்திற்காக இறப்பவர்கள் ஏராளம். இதைத்தான் தூய பவுல் உரேமையருக்கு எழுதிய திருமுகம் 8:35-36 ல் “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? "உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்" எனக் குறிப்பிடுகின்றார். கிறித்தவ விசுவாசத்திற்காக இறந்தவர்கள் புனிதர்களாக உயர்தப்படுகின்றனர். நாமும் விசுவாசத்திற்காக இறக்கும்போது நாமும் புனித நிலைக்கு உயர்த்தப்படுவோம்.

02. விசுவாசத்தோடு இறந்தவர்கள்
கிறித்துவில் திருமுழுக்கு பெற்ற அனைவருமே கிறித்தவ விசுவாத்தோடு இறந்தவர்கள் தாம். நம்முடைய இந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அனைவருமே இதற்கு சாட்சிகள். கிறித்தவ விசுவாத்தோடு இறந்து இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனால்த்தான் இன்று இவர்களுக்காக நன்றி செலுத்தவும், இவர்களுக்காக ஜெபிக்கவும் இங்கு குழுமியிருக்கின்றோம்.

அதேவேளையிலே திருமுழுக்கு பெறாமல் கிறித்தவ விசுவாசத்தோடு இறந்தவர்களும் இதில் இடங்குவர். எப்படி திருத்தூதர்கள் காலத்தில் புனித இரயப்பர் விருத்தசேதனம் செய்வோர் மட்டும் மீட்பு பெருவர் என்று போதித்தார் ஆனால் தூய பவுலோ விருத்தசேதனம் பெறதவரும் மீட்பு பெருவர் என்றார்.
உரோமையர் 3: 30 “ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்”. அதனடிப்படையில் கிறித்துவின் மீது விசுவாம் கொண்டு இறந்தவர்களும் மீட்பு பெருவர் என்பதை இவ்விழா நமக்கு அறிவுறுத்துகின்றது.

இவர்களும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் "தூய்மை பெறும் நிலை" என்று அழைக்கப்படுகின்றது. (purgatory) தூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது “தூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்”

இந்த தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்க திருச்சபை "உத்தரிக்கிற ஸ்தலம்" அல்லது "உத்தரிப்பு ஸ்தலம்" என்று அழைப்பது பழைய வழக்கம் ஆகும். இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் நாம் வேண்டுதல் செலுத்துகின்றோம். இந்நாட்களில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. இவ்வாறு இந்த வாரம் முழுவதும் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் ஜெபிக்கும் போது நாமும் முழு பலனை பெற்றுக்கொள்கின்றோம் (Plenary indulgence).

03. விசுவாம் இல்லாமல் இறந்தவர்கள்
இன்றைய சூழ்நிலையில் கிறித்தவ விசுவாசம் என்பது குறைந்து கொண்டு வருவதை நம் கண்முண்னால் காண முடிகின்றது. உதாரணமாக விவிலியம் எடுத்து வாசிப்பதைக் காட்டிலும் செல்போனில் நாம் செலவிடும் நேரம் அதிகம். பிள்ளைகளை விசுவாசக் கல்வியில் வளர்ப்பதைக் காட்டிலும் புத்தக அறிவை கற்றுக்கொடுப்பதில் அதிக நேரம் நாம் செலவிடுகின்றோம். எந்த பள்ளியில் அல்லது எந்த கல்லூரியில் படித்தால் என் மகனும் மகளும் முன்னேற்றம் அடைவர் என்று அறிந்து வைத்திருக்கும் நாம் எந்தெந்த வழிகளில் கிறித்தவ விசுவாத்தை கற்றுக்கொடுக்க முடியும் என்று நாம் யோசிப்பது இல்லை. இன்று இங்கு கூடியிருக்கும் நாம் அனைவருமே திருமுழுக்கு பெற்றவர்கள் தான். ஆனல் கிறித்தவ விசுவாசம் நமது குடும்பங்களில் குறைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. இப்படி விசுவாசம் இல்லாமல் இறந்தவர்கள் நம்மில் பலபேர் உள்ளனர் அப்படி இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்களுக்காக ஜெபிக்கவும் நாம் இங்கு கூடியுள்ளோம்.

. அன்புக்குரியவர்களே இறந்தவர்களுக்காக ஜெபிக்கும் போது நம்முடைய இறப்பும் எப்படிப் பட்டதாக இருக்கப் போகினறது என்பதையும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

அந்தோணிராஜின் அனுபவம். எனக்கு வியர்த்து கொட்டியது, நெஞ்சின் அருகே ஏதோ ஒரு வலி இருந்தது. சற்று மயக்கமாகவும் இருந்தது. என்னை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சிறிது நேரத்தில் எனக்கு வலி முற்றிலுமாக நீங்கி விட்டது. எனக்கு முன்பாக என் உறவினர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். என்னுடைய மகனும் இருந்தான். சரியான உதவாக்கரை, ஒன்றுக்கும் உதவாதவன், சொல்பேச்சு கேட்காதவன். என் வாழ்க்கை கட்டுரையில் அவன் ஒரு பிழை என்றே கூறவேண்டும். அவனைப்போலவே எனது மருமகளும்.
ஆனால் நான் தான் நலமடைந்து விட்டேனே இவர்கள் ஏன் அழவேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், அப்போது என் தலையின் வலது பக்கத்தில் ஒரு சுழல் காற்று போல ஒரு ஒளி உண்டானது. ஒருவேளை நான் இறந்துவிட்டேனா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. நான் மேலே சென்றேன். அங்கே ஒருவர் பெரிய தாடியோடு, ஒரு பெரிய வெள்ளை அங்கி அணிந்து அமர்ந்து இருந்தார். எனக்கு முன்பாக பிரபல ரவுடி ஒருவர், ஒரு குருவானவர், ஒரு கடத்தல்காரர் இன்னும் சிலர் நின்றுகொண்டு இருந்தனர். அவர்களில் சிலர் மேலேயும் சிலர் கீழேயும் சென்றனர். மேலே சென்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், கீழே சென்றவர்கள் சற்று சோகமாகவும் இருந்தார்கள். பிரபல ரவுடிகளும், சில தீயவர்களும் மேலே செல்வதை கண்டு நான் அச்சரியம் அடைந்தேன்.
பிறகு என் பெயரை வாசித்தார்கள், “அந்தோணிராஜ், அந்தோணிராஜ் !”
“நான் தான் ஐயா !” என்றேன்.
“நீங்கள் நரகத்துக்குச் செல்ல வேண்டும்!” என்றார் அந்த வெள்ளை அங்கி அணிந்தவர்.
“நான் ஏன் செல்ல வேண்டும் நான் அந்த ரவுடியை விடவும் நல்லவன் தானே” என்றேன்.
அப்போது அந்த வெள்ளை அங்கி அணிந்தவர் ஒரு பட்டியலை எடுத்து என்னிடம் காட்டினார், அதில் என்னுடைய மனைவி, மகள், பேரன், மற்றும் என்னுடைய மகன் மற்றும் மருமகளின் பெயர்கள் இருந்தன.
“இவர்களுடன் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா?” என்று அவர் என்னிடம் கேட்டார்
“என்னுடைய மனைவி, மகள் மற்றும் பேரனுடன் நான் வாழ விரும்புகிறேன். ஆனால் என்னுடைய மகன் ஒரு துரோகி என்னுடைய மருமகள் ஏமாற்றுக்கரி அவர்களோடு நான் வாழ விரும்பவில்லை” என்றேன் நான்.
அப்போது அந்த வெள்ளை அங்கி தரித்தவர், “உங்கள் உறவினர்கள் இன்னும் மரிக்கவில்லை, அவர்கள் இறந்த பிறகு சொர்கத்திற்கு செல்வார்களா அல்லது நரகத்துக்கு செல்வார்களா என்பது தெரியும். ஆனால் இந்த எண்ணத்தோடு நீங்கள் இருந்தால் நரகத்தில் அவர்களை சந்திக்கும்போது சண்டை போட்டுக் கொள்ளலாம், சொர்கத்தில் யாரும் சண்டை போடுவதை நாங்கள் அனுமதிப்பது இல்லை.

சொர்கத்திற்கு சென்ற அந்த ரவுடி, குருவானவர் மற்றும் சிலர் தங்கள் எதிரிகளை முற்றிலுமாக மன்னித்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு விண்ணகத்தில் இடம் கிடைத்தது.

உங்கள் உறவினர்களை மன்னிப்பதா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!” என்றார்.


யாரோ என்னுடைய நெஞ்சிலே குத்தியதைப்போல் இருந்தது, என்னை சுற்றிலும் மின்னல் அடித்தது. நான் என் கண்களை திறந்தேன், மருத்துவர் என்னை பார்த்து, “இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கில்” என்றார்.
ஆம்பிரியமானவர்களே இறப்பு நிச்சயம் என்று நமக்கு தெரியும் எனவே இறக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம் மற்றவரை மன்னித்து வாழ்வோம். ஹிட்லரைப் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். இரக்கமில்லாத மனிதனுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. தன்னுடைய வாழ்நாளில் இரக்கமில்லாமல் எத்தனையோ மனிதர்களை கொன்று குவித்தான் . ஆனால் அவன் இறந்த பிறகு அநாதை பிணமாக எரியூட்டப்பட்டு இருந்த இடம் தெரியமால் அழிந்து பேனான். ஆனால் அன்னை தொரசாள் அவர்கள் தான் சாகும் வரை இரக்கத்தோடு இருந்தார்கள். இன்று புனிதராக ஆசீர் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
எனவே அன்புக்குரியவர்களே நம்முடைய இறப்பு எப்படிப்பட்டதாக இருக்கப் போகின்றது. கிறித்தவ விசுவாத்திற்காக இறக்கப்போகின்றோமா? அல்லது விசுவத்தோடு இறக்கப் போகின்றோமா, அல்லது விசுவாசத்தை இழந்து இறக்கப் போகின்றோமா? விண்ணகத்தில் இடம் வேண்டுமா? நரகத்தில் இடம் வேண்டுமா? முடிவு நமது கையில். அன்னை தொரசாவைப் போல இரக்கத்தோடு இறக்கப் போகின்றோமா? அல்லது ஹிட்லரைப்போல இரக்கமற்றவாராக வாழ்ந்து இறக்கப் போகின்றோமா? சிந்திப்போம்.