இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









அனைத்து புனிதர்களின் விழா

புனிதர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள் மட்டுமல்ல நம் வாழ்வின் வழிகாட்டிகள் என்னுடைய பெயரில் புனிதர்கள் இல்லை எனவே நானும் புனிதனாக ஆசை

திருவெளிப்பாடு 7:2-4,9-14
1 யோவான் 3:1-3
மத்தேயு 5:1-12

கடவுளின் சாயலைப்பெற்று இன்று அவர் முன்பாக அமர்ந்திருக்கும் புனிதர்களே, புனிதைகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! பிரியமானவர்களே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? ஒவ்வொரு வருடமும் நமது தாயாம் திருச்சபை அனைத்து புனிதர்களின் விழாவைச் சிறப்பிக்கின்றது. இந்த விழா நமக்கு விடுக்கும் அழைப்பு என்னவென்றால் இன்று நாம் கொண்டாடும் புனிதர்கள் ஏதோ மேலுகத்திலோ அல்லது கீழுலகத்திலே பிறந்தவர்கள் அல்ல மாறாக உங்களைப் போல, என்னைப் போல ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஆக இவர்களை வைத்துப் பார்ககும்போது மனிதராகப் பிறந்த நீங்களும் நானும் புனிதர்கள் தான். இன்று நாம் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும் நாமும் புனிதராக முடியும் என்பதை நிருபிப்பதற்காகாத்தான் ஒவ்வொரு ஆண்டும் இப்பெருவிழாவைக் நாம் கொண்டாடுகின்றோம்.

இன்று எத்துணை பேருக்கு புனிதர்களா வாழ ஆசை? கையை உயர்த்துங்கள்.
புனிதர்களாக வாழ ஆசையுள்ளவர்கள் மட்டும் தயவு செய்து எழுந்து நிற்க்கவும்.
அவர்கள் அனைவரும் பீடத்தின் முன்பாக வரவும். (ஒருசில புனிதர்களின் படங்களை அவர்களுக்கு கொடுக்கவும். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட புனிதர்களைப்போல வாழ முயற்சி எடுங்கள். இவர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவர்).
பிரியமானவர்களே நான் முதலில் எத்துணை பேருக்கு புனிதர்களா வாழ ஆசை? கையை உயர்த்துங்கள் என்று கேட்ட போது நிறைய கைகள் உயர்ந்தன. எழுந்து நில்லுங்கள் என்ற போது உயர்த்திய கைகளில் பாதிபேர் எழுந்து நின்றனர். பீடத்திற்கு முன்பாக வாருங்கள் என்ற போது ஒரு சிலரே வந்தனர். இதுதான் புனிதர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். மனிதராக பிறந்த அனைவருமே கடவுளின் சாயலில் உள்ளவர்கள் தாம்; கடவுளின் சாயலைக் கொண்டிருந்தால் நிச்சயம் புனிதர்கள் தான். ஆனால் பாருங்கள் உங்களுடைய தாத்தாவும் புனிதர்கள் கிடையாது; என்னுடைய தாத்தாவும் புனிதர்கள் கிடையாது. காரணம் இப்போது நடந்த நிகழ்வு சரியான உதாரணம் ஆகும். நாம் அனைவருக்குமே மனதில் புனிதர்களா வாழ ஆசை தான். எங்கே நான் கையை தூக்கினால் மற்றவர்கள் என்னை தவறாக நினைத்துக் கெள்வர். நான் எழுந்து நின்றால் எல்லோரும் என்னை கேலி செய்வர் என்ற தாழ்வு மனப்பான்மை தான் நம்மை கடவுளிடம் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் திருச்சபையின் வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் எப்படிப்பட்ட மனிதர்களெல்லாம் புனிதர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உதராணமாக நன்கு படித்து பட்டங்கள் பெற்றவர்களும் புனிதர்கள்; புனித ஆல்பர்ட், புனித சவேரியார் பாரீசில் பட்டம் வென்றவர். படிப்பறிவு அதிகம் இல்லாதவர்களும் புனிதர்கள் – புனித ஜான் மரிய வியானி,
பணக்காரர்களும் புனிதர்கள் – புனித தாமஸ் மூர், புனித ஹெலேனா; ஏழைகளும் புனிதர்கள் மரிய கொரத்தி,
பாவிகளாக வாழ்ந்தவர்களும் புனிதர்கள் புனித அகுஸ்தினார்; தூயவர்களாக வாழ்ந்தவர்களும் புனிதர்கள் புனித குழந்தை தொரசம்மாள்,
அரசர்களும் புனிதர்கள் புனித ஹென்றி, புனித லூயிஸ், புனித எலிசபெத்; ஆண்டிகளும் புனிதர்கள் அரச குடும்பத்தில் பிறந்த அசிசியார் தனது கடைசி நாட்களில் ஏழ்மையை ஆடையாக அணிந்து கொண்டு இறந்தவர்.
ஆண்களும் புனிதர்கள்; பெண்களும் புனிதர்கள்,
ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணனும் புனிதர்கள் புனித பெனடிக்ட்; தங்கையும் புனிதர்கள் – ஸ்கொலாஸ்டிகா,
அழகுள்ளவர்களும் புனிதர்கள் – புனித கிளாரா - அழகற்றவர்களும் புனிதர்கள் தான் அழகாக இருந்தால் கடவுளுக்கு ஊழியம் செய்ய இயலாது என நினைத்து தங்களுடைய அழகை கடவுளுக்கு அர்ப்பணித்து மக்கள் மத்தியில் அழகற்றவர்களாக வாழ்ந்தவர்களும் புனிதர்கள்.
ஒரு குடும்பத்தில் பிறந்த தாயும் புனிதர் புனித மோனிக்கா தன்னுடைய மகனும் புனிதர் புனித அகுஸ்தினார்.
ஆம் பிரியமானவர்களே இப்படியே நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி; நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி நம்மாலும் புனிதராக முடியும் என்பதைத்தான் இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது. இதைத்தான் புனித அகுஸ்தினார் இவ்வாறக கூறுவார். “அவனாலும், அவளாளும் புனிதராக முடிந்தால் ஏன் என்னால் முடியாது” என்ற ஒற்றை வாக்கியத்தை தனது வாழ்நாளின் குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர். அதன் படியே புனிதரும் ஆனார். ஆக இப்ப சொல்லுங்க உங்களில் எத்துணை பேருக்கு புனிதர்களா வாழ ஆசை? கையை உயர்த்துங்கள்.

அன்புக்குரியவர்களே நாம் அனைவருக்குமே புனிதர்களாக வாழ ஆசை. புனிதர்களாக வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இன்று நாம் எப்படி வாழ்ந்தால் புனிதர்களாக முடியும் என்று ஒருசில கருத்துகளை உங்களோடு சிந்திக்கலாம் என்று இருக்கின்றேன். ஒரு கட்டம் என்றால் நான்கு பக்கங்கள் முக்கியம். அதைப்போலவே ஒரு செவ்வகம் என்றாலும் நான்கு பக்கங்கள் முக்கியம்; திசைகள் என்றால் நான்கு பக்கங்கள். இப்படி நான்கு என்பது ஒரு முழுமையை குறிப்பதாக இருக்கின்றது. அந்த வகையில் திருச்சபையில் புனிதர்களாக இருப்பவர்கள் நான்கு முக்கிய செயல்களை தங்களது வாழ்வில் பின்பற்றியதின் காரணமாக இன்று புனிதர்களாக இருக்கின்றனர்.


01. தெரிந்துகொண்ட இயேசுவை அறிந்து கொண்டபோது புனிதர்கள் ஆனார்கள்
பிரியமானவர்களே இதை உங்களுக்கு ஏற்கனவே நான் கூறியிருக்கின்றேன். நமக்கு நிறைய தெரியும் ஆனால் ஒரு சிலவற்றைத்தான் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். தெரிந்து கொள்வதற்கும் - அறிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. புனித பவுல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். புனித பவுல் ஆரம்ப காலத்தில் சவுல் என்று அழைக்கப்பட்டார். அப்போது இவருக்கு இயேசுவைப் பற்றி நன்கு தெரியும். இயேசு எப்படிப்பட்டவர், அவர் எங்கிருந்து வந்தவர் என்பதை தெரிந்து வைத்திருந்தார். இயேசுவை தெரிந்து வைத்திருந்த போது அவர் ஓர் கொலையாளியாக பார்க்கப் பட்டார். புனித ஸ்டீபனை கொல்வதற்கு முதல் கல் எறிந்தவர் இவர்தான். கிறித்தவர்களை கொல்ல வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஊர் ஊராக சென்று கிறித்தவர்களை கொன்று போட்டார்.

இந்த சவுல் எப்போது இயேவை அறிந்து கொண்டாரோ அப்போதே பவுலாக மற்றம் பெறுகின்றார். வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காவே என்றும் கிறிஸ்துவுக்காக இறப்பு எனக்கு ஆதாயமே எனச் சொல்லிக்கொண்டு இன்று புனிதராக நமது மத்தியில் இருக்கின்றார். தெரிந்து கொண்ட இயேசுவை அறிந்துகொண்டார் புனிதராக மாறினார். புனித அசிசியார் இயேசுவைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார். எப்போது அவரை அறிய முற்ப்பட்டாரோ அப்போதே மறுகிறிஸ்து என மக்களால் அழைக்கப்பட்டார். ஆம் அன்புக்குறியவர்களே இன்று நமக்கு இயேசுவைப்பற்றி நன்கு தெரியும். இயேசு எங்கு பிறந்தார்; எப்படி இறந்தார் என்று! ஆனால் நம்மில் எத்தனை பேர் இயேசுவை அறிந்து வைத்திருக்கின்றோம். அறிந்து கொள்ளுதல் என்பது அனுபவம். எத்தனை பேருக்கு இயேசுவின் அனுபவத்தை தங்களது வாழ்வில் உணர்ந்து இருக்கின்றீர்கள். உணர்ந்த அனுபவத்தை வாழ்வாக்கினால் நீங்களும் புனிதர்கள் தாம்.


02. தான் என்ற அகந்தை ஒழிந்த போது புனிதராக மாறினார்கள்
பிரியமானவர்களே தான் என்ற தற்பெருமையிலும் அகங்காரத்திலும்; வாழும் எவரும் வாழ்வில் முன்னேறியதாக வரலாறு கிடையாது. நாம் கெண்டாடும் புனிதர்களில் பலர் தங்களுடைய பழைய வாழ்க்கையில் தான் என்ற ஆணவத்தில் வாழ்ந்தவர்கள் தாம். ஆனால் எப்போது தான் என்ற நிலையை கடந்தனரோ அப்போதே புனிதாரயினர். புனித பிரன்சிஸ்கு சவேரியார் தான் எப்படியாவது படித்து பட்டங்கள் பெற்று ஒரு பெரிய மனிதனாக வாழ ஆசை கொண்டு பாரீசில் படிக்கின்றார். அப்போது புனித இஞ்ஞாசியார் சவேரியாரைப் பார்த்து “ஒரு மனிதன் உலகமெல்லாம் தனதாக்கி கொண்டாலும் அவனது ஆன்மா இழந்தால் அதனால் வரும் பயன் என்ன?” என்று கேட்க அந்த ஒரு சொல் அவரது வாழ்வை மாற்றி போட்டது. தான் என்ற தலைக்கணத்தோடு வாழ்ந்தவர் அனைவரும் இடம் தெரியாமல் மக்கிப்போயினர்.

ஒருமுறை தீப்பெட்டியும் தீக்குச்சியும் பேசிக்கொண்டன. நம் இருவரையும் ஒரே மனிதன் தான் பயன்படுத்துகின்றான். நாம் இருவரையும் ஒன்று சேர உரசுகின்றான். ஆனால் நான் தீக்குளித்து விடுகின்றேன். நீயோ அப்படியே இருக்கின்றாய் என்று கேட்டதாம் அதற்கு தீப்பெட்டி சொன்னதாம் உனக்கு தான் என்ற தலைக்கணம் அதிகம் அதனால் தான் எரிந்து விடுகின்றாய் என்றதாம்.

பிரியமானவர்களே இன்று நாம்மில் எத்தனைபேர் தான் என்ற தலைக்கணத்தோடு வாழ்ந்து வருகின்றோம்? இன்றை சமூதாயத்தில் பாருங்கள் மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து மக்களுக்காண பணிகளை செய்கின்றனர். ஆனால் கடைசியில் தன்னுடைய சொந்த பணத்தை எடுத்து உதவியது போல எத்தனை விளம்பரப் பலகைகைள். தான் செய்ததாக எத்தனை மேடைப் பிரசாரங்கள்; ஆனால் இயேசு உன் வலக்கை செய்தது இடக்கைக்கு கூட தெரியக்கூடாது என்றார். நம்முடைய பல புனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் எத்தனையோ அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தனர். ஆனால் ஒருபோதும் நான் தான் செய்தேன் என்று தம்பட்டம் அடித்தது கிடையாது. அன்னை மரியாள் தாழ்ச்சியின் உச்சம். ஒருமுறை கூட தன்னுடைய மகன் என்று தம்பட்டம் அடிக்காதவர். இன்றும் நாமும் நம்முடைய கடமைகளை செய்யும் போது நான் தான் செய்தேன் என்று தம்பட்டம் அடிக்காது தாழ்ச்சியோடு வாழ்ந்தால் நாமும் புனிதர்கள் தாம்.

03. மண்ணுலக ஆசைகளை விண்ணுலக ஆசைகளாக மாற்றிய போது
அன்புக்குரியவர்களே ஆசையில்லாத மனிதர்களே கிடையாது. நம்முடைய ஆசைகள் எதை நோக்கியதாக இருக்கின்றது. இன்று நாம் கொண்டாடும் பல புனிதர்கள் பணம், சொத்து, செல்வாக்கு இவற்றில் உயர்ந்தவர்கள், ஏன் பதவியில் கூட உயர்ந்தவர்கள், ஆனால் இவர்களது சொத்து, சுகம், பதவி எதுவுமே அவர்களை புனிதராக உயர்த்தியது இல்லை. மாறாக இவையனைத்தையும் எப்போது துறந்தனரோ அப்போதே புனிதராக வாழும் தகுதியை பெற்றனர். உதாரணமாக வனத்து அந்தோனியார் தன்னுடைய வாழ்வில் செல்வ செழிப்பிலே வாழ்ந்தவர். அவருக்கு ஏராளமான சொத்துகள் இருந்தன. ஆனால் மத்தேயு நற்செய்தி 19:21ல் “நீர் நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் உம் உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்ற வார்த்தைக்கு ஏற்ப தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் துறந்தார். இன்று புனிதராக இருக்கின்றார்.

அதைப்போலவே புனித அசிசியாரும் இனிமேல் எனக்கு பீட்டர் பெர்னடோனே என்னுடைய தந்தை கிடையாது. விண்ணுலகில் உள்ளவரே என்னுடைய தந்தை என கூறிக்கொண்டு தான் அணிந்திருந்த ஆடையை கூட ஏழைகளுக்கு கொடுத்து விட்டு இன்று மறுகிறிஸ்துவாக புனிதராக இருக்கின்றார். அன்புக்குரியவர்களே இன்று மண்ணுலக வாழ்விற்கு நாம் அன்றாடம் உழைத்து சொத்துகள் சேர்க்கின்றோம். அதே வேளையில் விண்ணுலகில் நாம் எவ்வளவு சொத்துகள் சேர்த்து வைத்திருக்கின்றோம் என்று சிந்திப்போம். விண்ணுலகத்திற்கு சொத்துகள் சேர்க்க தொடங்கி விட்டால் நிச்சயம் நீங்களும் ஒரு புனிதர்தான்.


04. பிறரன்பு பணிகளில் தம்மை ஒப்புவித்த போது
மத்தேயு நற்செய்தி 25:40ல் “மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்” என ஊறுதியாக உங்களுக்கு சொல்கின்றேன். என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பிறருக்காவே வாழ்ந்து அவர்களின் உயர்வுக்காக வாழ்ந்து மரித்த எத்தனையோ பேர் இன்று புனிதர்களாக இருக்கின்றனர். அன்னை தெரசாள் - அவர்கள் நினைத்திருந்தால் எந்த விதமான கஸ்டமும், துன்பமும் இல்லாமல் ஆசிரியப் பணிகளை செய்து கொண்டு வாழ்திருக்க முடியும். ஆனால் தன்னைப்போல படைக்கப்பட்ட மக்கள் துன்பத்தாலும், நோயாளும் துன்பப்படுவதை பார்த்து அவர்களுக்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணிக்கின்றார். தான் வாழ்ந்த காலத்திலே புனிதர் என்று அழைக்கப்பட்டு உலக மக்கள் அனைவருக்கும் அன்னையாக இருக்கின்றார். இன்று புனிதராக ஏழைகளுக்கு பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார்.

புனித டேமியன் அவரும் தன்னுடைய வாழ்வை சந்தோசமாக திருஇருதய ஆண்டவர் சபையில் மற்ற குருக்களைப் போல வாழ்ந்திருக்கலாம். ஆனால் தான் படித்து தெரிந்து கொண்ட இயேசுவையும், தன்னுடைய அனுபவத்தால் அறிந்து கொண்ட இயேசுவை மோலக்கி தீவில் வாழும் மக்களுக்கு அறிவிக்க சென்றார். கடைசியில் தானும் அவர்களைப் போல தொழுநோயினால் ஆட்கொள்ளப்பட்டடு அவர்களுக்காகவே தன்னுடைய உயிரை இழக்கின்றார். இவரும் வாழும்போதே புனிதர் என்று அழைக்கப்பட்டவர். ஆம் பிரியமானவர்களே இன்று நம்முடைய சமூதாயத்தில் குறிப்பாக மருத்துவமனைகளிலும், தெரவோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் எத்தனையோ பேர் உதவிக்காக காத்திருக்கின்றனர். எப்போது மனமுவந்து இந்த எழைகளுக்காக உதவி செய்கின்றீர்களோ நீங்களும் புனிதர்கள் தாம்.


பிரியமானவர்களே நான் 2004 ம் ஆண்டு கேரளாவில் நவசந்நியாம் படித்து வந்தோம். நவ சந்நியாச படிப்பின் போது நமது பெயர்களை மாற்றிக் கொள்ள உரிமை உண்டு. அப்படி என்னுடைய நவசந்நியயாச அதிபர் தந்தை என்னிடம் உன்னடைய பெயர் மிகவும் நீளமாக இருக்கின்றது. ஏன் நீர் பெயர் மற்றக்கூடாது. நம்முடைய சபையில் எத்தனையோ புனிதர்கள் இருக்கின்றனர். அவர்களது பெயரை நீர் எடுத்துக்கொள் என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் என்னுடைய பெயரை மாற்ற எனக்கு விருப்பமில்லை. என்னுடைய பெயரையே நான் அப்படியே வைத்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றேன். அதற்கு அவர் ஏன்? ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்று கேட்டார். அதற்கு நான் அன்று அறிந்து சொன்னனோ அல்லது அறியாமல் சொன்னனோ எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் “தந்தையே உலகில் எத்தனையோ புனிதர்கள் இருக்கின்றனர். ஆனால் என்னுடைய பெயரில் ஒரு புனிதரும் கிடையாது; எனவே நான் புனிதராக வாழ்ந்தால் என்னுடைய பெயரும் புனிதர்களின் கூட்டத்தில் இடம் பெரும் எனவே என்னுடைய பெயரை நான் மாற்ற விரும்பவில்லை என்று கூறினேன். இன்றும் நான் கூறிய அந்த வார்த்தைகள் என் கண் முன்னால் வந்து செல்கின்றன.

ஆம் அன்புக்குரியவர்களே கடவுள் நம்மை படைக்கும் போது அவருடைய உயிர் மூச்சை ஊதி அவருடைய சாயலாக நம்மை படைத்தர்; ஆனால் காலப்போக்கில் நாம் நம்முடைய சுயநலத்தால் கடவுளின் அழகை இழந்து வாழ்ந்து வருகின்றோம். எனவே இந்த பெருவிழா மீண்டும் நாம் கடவுளின் சாயலைப் பெற்றுக்கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது. நாமும் புனிதர்களாக வாழ முயற்சிப்போம். முடியாதது ஒன்றுமில்லை. இன்று நம்மிடையே புனிதர்களாக இருப்பவர்கள் வணகத்துக்குரியவர்கள் மட்டுமல்ல; நீங்களும் நானும் அவர்களைப்போல வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய பெயர்களில் உள்ள புனிதர்களை தெரிந்து கொண்டு அவர்கள் காட்டிய வழியில் ஆண்டவரை பின்பற்றி நடப்போம்; அல்லது நமும் புனிதர்களாக வாழ்ந்து நம்முடைய பெயர்களை புனிதர்களின் கூட்டத்தில் சேர்க்க முயற்சிப்போம். ஆமென்.