இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஆண்டின் இருபத்தி ஒன்பதாம் ஞாயிறு

நாற்காலிக்கு சண்டை போடுபவர்களா? அல்லது நாட்டையும், வீட்டையும் துறந்து பணியாற்றும் இயேசுவின் சீடர்களா? நற்செய்தியை அறிவிப்பவரின் பாதங்கள் எத்துணை அழகானவை

எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45

இறைஇயேசுவில் மிகவும் பிரியமானவர்களே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்று நாம் மறைபரப்பு ஞாயிரை சிறப்பிக்கின்றோம். ஒருமுறை ஒரு சிறுவனிடம் மறைபரப்பு ஞாயிறு என்றால் என்ன? என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில். ‘வழக்கமாக உண்டியலில் காசுபோடுவோம் ஆனால் மறைபரப்பு ஞாயிறு அன்று கவரில் காசு வைத்து கொடுப்போம்’ இதுதான் மறைபரப்பு ஞாயிறு என்றான். ஒருபெரியவரிடம் கேட்டபோது அதற்கு அவர் மறைபரப்பு ஞாயிறு என்பது மக்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல; இது ஒவ்வொரு குருக்களுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் இயேசு கொடுத்த பணி என்றார்.

பிரியமானவர்களே இன்று இந்த இருவர் மட்டுமல்ல ஆலயம் வந்திருக்கும் நாம் ஒவ்வொருவருமே அப்படித்தான் பலவேளைகளில் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மறைபரப்பு ஞாயிறு என்பது தமது பங்குகளில் வழங்கப்படும் கவரில் காணிக்கையைப் வைத்து காணிக்கைப் பெட்டியில் போடுவதும், அல்லது மறைபரப்பு பணி என்பது குருக்களுக்கும் கன்னியர்களுக்கும் கொடுக்கப்பட்ட பணி என்று குறுகிய வட்டத்தில் நினைப்பது அல்ல. மாறாக இயேசு விட்டுச் சென்ற இறையாட்சிப் பணியை தொடர அவர் விட்டுச் சென்ற கட்டளைகளை கடைப்பிடித்து வாழ்வதாகும். இயேசு தனது விண்ணேற்றத்திற்கு முன்பு தன்னை பின்பற்றி வந்தவர்களைப் பார்த்து ஒரே ஒரு கட்டளையைக் கொடுக்கின்றார். அதாவது, இயேசு கொடுத்த கடைசிக் கட்டளை


“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும், அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்" (மத்.28:19-20). என்றார்.

இயேசுவின் இந்த வார்த்தைகள், எல்லா இடங்களிலும், காலத்திலும், உயிர்த்த ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கவும், அதன் வழியாக அவரில் எல்லா மக்களும், இறை நம்பிக்கை கொள்ளவும், தமது சீடர்கள் அனைவரையும், இயேசு அனுப்புகிறார் என்பதை அறிகிறோம். இயேசுவே ஒரு சிறந்த நற்செய்தி அறிவிப்பு பணியாளர் என்பதை இயேசு தனது நற்செய்தி அறிவிக்க தனது ஆர்வமிக்க வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். “நாம் அடுத்த ஊர்களுக்கும் போவோம். வாருங்கள் அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்" (மாற்.1:38) என்ற இறைவார்த்தைகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இதுதான் மறைபரப்பு பணியின் நோக்கமாகும். இயேசுவின் சீடர்களாகிய ஒவ்வொருவரும் நற்செய்தியை அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று யாரெல்லாம் இயேசுவின் சீடர்கள்? திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்து அவனும், கிறிஸ்து அவளும், சீடர்கள் தான். அப்படியானால் மறைபரப்பு பணி என்பது ஆலயம் வந்துள்ள நாம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த மறைபரப்பு பணிக்கு பாதுகாவலர்கள் யார் தொரியுமா?
மறைபரப்பு பணிக்கு இருவர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். ஒருவர் குழந்தை இயேசுவின் புனித தெரேசா. இம்மாதம் முதல் தேதியன்று நாம் கொண்டாடிய இப்புனிதர், மறைபரப்புப் பணிகளின் காவலர் என்ற பெருமைக்குரியவர். தான் இருந்த இடத்திலே இருந்துகொண்டு இயேசுவின் போதனைகளை அறிவித்தவர்; மற்றொருவர் பாரிஸ் நகரில் இருந்த பற்பே பல்கலைகழகத்தில் உள்ள நாற்காலிக்கு ஆசைப்படாமல் தனது சொந்த நாட்டையும், வீட்டையும், விட்டு பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து கிறிஸ்துவை பல கோடி மக்களுக்கு அறிமுகம் செய்த பிரன்சிஸ்கு சவேரியார். இவர்கள் இருவர்தான் மறைபரப்பு பணிக்கு பாதுகாவலர்கள்.

புனித சவேரியார் தன் போதனைகளால் பல்லாயிரம் உள்ளங்களை இறைவனிடம் அழைத்து வந்ததுபோல், புனித தெரேசாவும் தன் செபங்களால் பல்லாயிரம் மனங்களை இறைவனிடம் கொணர்ந்தார். மறைபரப்புப் பணியில், இறைவனைப் பறைசாற்றுதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இறைவனை நோக்கி எழுப்பப்படும் செபங்களும் முக்கியம் என்பதை நாம் ஆழமாக இன்றை நாளில் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆக ஒரு நாணயத்திற்கு எப்படி இரண்டு பக்கங்கள் முக்கியமோ அதுபோலவே மறைபரப்பு பணிக்கு முதலில் ஜெபம் முக்கியம் அதற்கு அடுத்தாற்போல் நாம் கற்றுக்கொண்ட இயேசுவின் போதனைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது மிகவும் முக்கியமாகும்.


எங்களது இறைஇயல் கல்லூரியானது இந்து மக்கள் வாழும் பகுதியை ஒட்டி உள்ளது. அன்று சனிக்கிழமை அனைத்து அருட்சகோதரர்களும் தாங்கள் பணிசெய்ய வேண்டிய பங்குகளுக்கு சென்று கொண்டிருந்தோம். அப்படி எங்களோடு (ஆந்திராவில்) தெலுங்கு பேசும் பகுதியில் இருந்தும் ஒருசில சகோதர்கள் படித்து வந்தனர். அதிலே ஒருவர் இந்த இந்து மக்கள் வாழும் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த வயது முதிர்ந்த ஒரு பெண் தனது வீட்டின் முன்பாக நெல் காயப்போடுக் கொண்டிருந்தார். அப்போது அந்த முதியவர் அந்த சகோதரரைப் பார்த்து தம்பி இந்த வெயில எங்க போறீங்க? என்று கேட்டார். அதற்கு தமிழ் அதிகம் தெரியாத அந்த தெலுங்கு சகோதரர் நாங்கள் மறைபரப்பு பணிக்கு போய்கொண்டிருக்கின்றோம் என்று கூறினார். அதற்கு அந்த பெண்மணி தம்பி இந்த நெல்ல கொஞ்சம் பரப்பிட்டு போங்க! அப்பறம் நீங்க பரப்புறது என்னானு பாப்போம் என்றார். அந்த சகோதரரும் எதுவும் புரியாத காரணத்தால் சென்றுவிட்டர்.

மீண்டும் ஞாயிறு மாலை பங்கு பணி முடிந்து எங்களது இல்லத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மீண்டும் அந்த பெண் தம்பி நல்ல பரப்புனீங்களா? எப்டி இருந்தது என்று கேட்க மற்ற சகோதரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அந்த பெண் மற்ற தமிழ்ச் சகோதரர்களிடம் இல்லப்பா இவரு நேத்து எதையே பரப்ப போரோனு சொன்னார் நான் முதல்ல இங்கு உள்ள நெல்ல பரப்புங்க என்றேன். அதான் அவரு என்னாத்த பரப்புனாரு என்று கேட்டடேன் என்றார். அங்கிருந்த ஒரு சகோதரர் அம்மா மறைபரப்பு பணி என்பது நெல் காயவைப்பது போன்றது அல்ல. மாறக நாங்கள் படித்த, உணர்ந்த இயேசுவின் போதனைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் இயேசுவின் அன்பை உணர்துவது ஆகும் என்றார். உடனே அந்த பெண்மணி தம்பி அந்த இயயேசுவ பத்தி எங்களுக்கு கொஞ்சம் கூறமுடியுமா என்று கேட்டார். அதன் பிறகு ஒவ்வொருநாளும் அங்கு உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கும், யாருக்கெல்லாம் இயேசுவைப் பற்றி தெரிந்து கெள்ள ஆசையோ அவர்கள் அனைவருக்கும் மாலை வேளைகளில் மறைகல்வி போதிக்க ஆரம்பித்தோம்.


ஆம் அன்புக்குரியவர்களே இயேசுவின் மறைபரப்பு பணி என்பது இரண்டு இலட்சியங்களை அடிப்படையாக கொண்டது. ஒன்று தூய குழந்தை தெரசம்மாளைப் போன்று நான்கு சுவர்களுக்கு மத்தியில் ஜெபம் என்ற ஆயுதத்தால் இயேசுவின் போதனைகளை வாழ்வாக்குவது. எப்படியென்றால் கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் கூட பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும் என்றும்; எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும் (யோசுவா 6:5)என்ற நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன. செபத்தினால் வெற்றி பெற்றவர்கள் விவிலியத்திலும் நமது அன்றாட வாழ்விலும் எண்ணிலடங்க நபர்கள் உள்ளனர்.

நாம் ஜெபிக்கும் ஜெபம் எப்படி நமது மறைபரப்பு பணியை வெளிப்படுத்தும்?
கி.பி 3 ஆம் நூற்றாண்டு, சந்தைவெளியில் இராயப்பர் மற்றும் அவரது நண்பர் யூதாவும் பேசிக்கொண்டு மீன் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். நீங்க கிறிஸ்துவோட சீடரா?” என்று மென்மையான குரலில் கேட்டார் யேசான். இராயப்பர், யூதா இருவரும் அச்சத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“பயப்படாதீங்க, என் கால பாருங்க” என்று தன் காலில் வரையப்பட்டிருந்த மீன் அடையாளத்தை (ΙΧΘΥΣ) காட்டினார் யேசான். அதை பார்த்ததும், யேசானும் கிறிஸ்தவர் என்பதை இராயப்பர் மற்றும் யூதா ஆகிய இருவரும் தெரிந்து கொண்டார்கள். “சரி இங்க எதுவும் பேச வேண்டாம், ரோம காவலர்கள் நம்மல சுத்தி இருக்காங்க, சாயங்காலம் நான் சொல்ற இடத்துக்கு வாங்க !” என்று இராயப்பர் யேசானிடம் கூறினார். மூவரும் மாலையில் ஒரு குடிசை வீட்டிற்குள் சென்றார்கள். அங்கு அவர்களை போன்ற விசுவாசிகள் மேலும் 20 பேர் இருந்தார்கள். அனைவரும் சூழ்நிலையை அறிந்து அமைதியாக இயேசுவிடம் ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த ரோம அதிகாரி, வீட்டின் கதவை தட்டினான். உள்ளே இருந்தவர்கள் வேறு வழியாக தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவர்கள் அனைவரையும் ரோம காவலர்கள் பிடித்து சிறையில் அடைத்தார்கள். அவர்கள் அனைவரையும் மரணத்திற்கு நியமிக்கும்படி அவர்கள் தலையில் சிலுவை மாதிரியான (XPIETOE) அடையாளத்தை வரைந்தார்கள் .

ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் கடுமையான துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள். அடுத்த நாள் காலையில் யூதா, இராயப்பர் மற்றும் யேசான் ஆகிய மூவரும் மக்களுக்கு முன்பாக தீயிட்டு கொழுத்தபட இருக்கிறார்கள் என்னும் செய்தி வந்தது. யூதாவும் இராயப்பரும், இயேசுவை சந்திக்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால், யேசானுக்கு மனதில் மரண பயம். அந்த இடத்தில் மூவரும் இணைந்து அந்த இரவு முழுவதும் ஜெபிக்க ஆரம்பித்தனர்

அந்த இருள் நிறைந்த இரவு, சூரிய கதிர்களினால் முடிவுக்கு வந்தது. மூவருக்கும் அடைக்கப்பட்டிருந்த கதவு தட்டப்பட்டது. யேசான் கதவை திறந்தார். வெளியே நின்ற காவலன் “உங்களுக்கு ஒரு நற்செய்தி, மன்னர் கான்ஸ்டண்டைன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார், உங்களுக்கு விடுதலை” என்றார்கள். அடுத்த சில நாட்களில் போர்வீரர்களின் ஆயுதங்களில் இருந்த கழுகு அடையாளத்திற்கு பதிலாக சிலுவை போன்ற அடையாளம் (XPIETOE) பொறிக்கப்பட்டது. ஆம் இது தான் மறைபரப்பு பணி என்பது தங்களுடைய ஜெபத்தால் ஒரு அறையில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு மன்னர் கான்ஸ்டண்டைனை இயேசுவை அறிந்து கொள்ளச் செய்தது. இப்படிப்பட்ட செயல்களைத்தான் புனித குழந்தை தெரசாவும், புனித கிளாரவும், தந்தை பியோவும், தங்களது ஜெபம் மூலமாக கிறிஸ்துவை போதித்தனர்.


அடுத்ததாக மறைபரப்பு பணியை ஊர் ஊராக சென்று போதித்தல்:
இன்றைய நாளில் இந்த மறையுரை எழுதுவதில் எனக்கு மிக்க மகிழச்சி. காரணம் மறைபரப்பு ஞாயிருக்கான மறையுரையை ஆப்பிரிக்க மறைபரப்பு பணிதளத்தில் இருந்து எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி. ஆம் பிரியமானவர்களே நான் எங்களது மறைபரப்பு பணிகளை சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். மேற்கு ஆப்பிரிக்காவில் புர்கினோஃபாசோ என்ற நாட்டில் மறைபரப்பு பணியாற்றி வருகின்றோம். நாங்கள் சந்திக்கின்ற சவால்கள் பல. அதில் ஒருசில சவால்களை உங்களோடு பகிர்நது கொள்கின்றேன்.

எங்களது பங்கு 2000 ஆண்டில் தொடங்கப்பட்டது அப்போது வெறும் 300 கத்தோலிக்க கிறித்தவர்கள் தான். இன்று எங்கது பங்கில் ஞானஸ்தானம் பெற்ற கிறித்தவ மக்களின் எண்ணிக்கை 65000 பேர். மொத்தம் 4 குருக்கள் பங்கிலே பணியாற்றுகின்றோம். ஞாயிற்றுகிழமை மட்டும் 9 திருப்பலிகளை நாங்கள் நிறைவேற்றுகின்றோம். ஒவ்வொரு திருப்பலியும் குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று மணிநேரமாகும். குறிப்பாக முக்கியமான விழ நாட்களில் ஐந்து மணிநேரம் திருப்பலி நடைபெறும். ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 1500 முதல் 1900 பேர் வரை திருமுழுக்கு பெறுவார்கள். அதைப்போலவே மற்ற அருட்சாதனங்களும் நடைபெறும். திவ்ய நற்கருணை மட்டும் ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு இலட்சத்திற்கு மேல் தேவைப்படும். எங்களது பங்கில் நற்கருணை கொடுப்பதற்கு கிறித்தவ விசுவாசிகளில் ஒருசிலரை தோந்தெடுத்து அவர்கள் மூலமாக நற்கருணை கொடுத்து வருகின்றோம் ஒவ்வொரு வாரமும் நற்கருணை கொடுக்கும் மக்கள் 67 பேர் உள்ளனர். எங்களுடைய பங்கில் 4 பாடல் குழுவினர் உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் குறைந்த பட்சம் 40 முதல் 60 பேர் வரை இருக்கின்றனர்.

எங்களது பங்கிலே 5 கிளைப்பங்குகளும், 48 அன்பியங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு அன்பியத்திலும் 300 முதல் 400 குடும்பங்கள் உள்ளன. இந்த இடங்களில் மின்சாரம் கிடையாது, ஆலயங்கள் கிடையாது. நாங்கள் திருப்பலிக்கு செல்லும்போது டார்ச்லைட் மற்றும் சூரிய ஒளியில் எரியும் மின் விளக்குகளை எடுத்துச் சென்று திருப்பலி நிறைவேற்றுவோம். பல இடங்களில் திருப்பலி நிறைவுற்றுவதற்கு ஆலயங்கள் கிடையாது. மாறாக சாதரண வெளிப்பகுதியில் தான் திருப்பலி நடைபெறும். மழை வந்து விட்டால் ஓடி ஒதுங்குவதற்கு கூட இடம் இருக்காது. அந்த கொட்டும் மழையில் தான் திருப்பலி நிறைவேற்ற வேண்டும்.

ஆலயத்திற்கு வரும் போது மக்கள் அமர்வதற்கு செங்கல் போன்று பெரிய கற்களையும், நாற்காலிகளையும், அவர்களே சுமந்து வருவர். காலை வேலைகளில் திருப்பலியின் போது மர நிழல்களிலும், கட்டட ஓரங்களிலும், வெயிலிலும் குறைந்த பட்சம் 2 முதல் 3 மணிநேரம் அமர்ந்து திருப்பலியில் பங்கெடுப்பர். இப்படி இன்னும் கூறிக்கொண்டே போகலம். நற்செய்தில் ஆண்டவர் இயேசு “அறுவடையே மிகுதி வேளையாட்களோ குறைவு” என்ற விவிலிய வசனத்தை தினந்தோறும் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த மக்கள் அனைவரும் ஆயனில்லா ஆடுகள் போல இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். நம்முடைய ஊர்களில் ஒரு பங்கின் மக்கள் தொகை 500 முதல் 700 போர் தான் ஆனால் எங்களது பங்கில் 65000 பேர் நான்கு குருக்கள் மட்டுமே! எங்களது நிலைமையை சற்று நினைத்துப் பாருங்கள்.

நாங்கள் சந்திக்கும் துன்பங்களில் ஒருசில…

01. ஆப்பிரிக்க கலாச்சாரம்:
முதலில் இந்த ஆப்பிரிக்க கலாச்சாரம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. காரணம் இங்கு உள்ள பலதரப்பட்ட திருமணங்களை ஆதரிப்பவர்கள். ஆனால் நம்முடைய கத்தோலிக்க கோட்பாடானது ஒருவனுக்கு ஒருத்தி. இந்த கத்தோலிக்க கோட்பாடும் எமது மக்களின் பண்பாடும் ஒன்றுக்கொண்று முரண்பாடு உள்ளது. இதை புரிந்து கொள்வது முதல் சவால். இதை புரிந்து கொண்டால்தான் அவர்களை கத்தோலிக்க விசுவாத்தில் வளர்க்க முடியும்.

02. இரண்டாவது மக்கள் பேசும் மொழி
எங்களது நாட்டில் முப்பதுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் இருக்கின்றன. இந்த மொழிகளுக்கெல்லாம் புத்தகங்கள் கிடையாது. வெறும் வாய்மொழிப் போதனைகள் மட்டும் தான். இங்கு முதலில் பிரெஞ்சு மொழி படிக்க வேண்டும், அதன் பிறகு மக்களின் வழக்கு மொழிகளை படிக்க வேண்டும். எங்களது பங்கில் மட்டும் 5 மொழி பேசும் மக்கள் உள்ளனர். இன்று நமது ஊர்களில் புதிய மொழிகளை கற்றுக் கொள்வதற்கு பலவிதமான புத்தகங்களும், கனினியில் அதற்கான பல பாடங்களும் உள்ளன. ஆனால் இந்த மக்களின் மொழியை கற்றுக்கொள்வது மிகப்பெரிய சவால். மொழி தெரிந்தால் தானே பணிசெய்ய முடியும்.

03. மூன்றாவதாக இங்கு உள்ள தட்பவெப்ப சூழ்நிலை
நாங்கள் வசிக்கும் புர்கினஃபாசோ எனும் நாடு உலகிலே மிக நீளமான சகாரா பாலைவனத்தில் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு வீசும் காற்று மிகவும் புழுதி படிந்தது. வெயிலின் கொடுமையானது வெயில் காலங்களில் 50 முதல் 60 டிகிரிக்கு வரைச் செல்லும். நமது ஊர்களில் பனிமுட்டம் எப்படி சூழ்ந்திருக்குமோ அதுபோல புழுதி மூட்டம் வருடத்திற்கு 7 மாதங்கள் வரை சூழ்ந்திருக்கும்.

04. நோயின் தாக்கம்
இங்கு போதிய மருத்துவ வசதிகள் கிடையாது. இங்கு உள்ள மருந்துகளெல்லாம் மற்ற வளர்ந்த நாடுகளில் வேண்டாம் என்றும், Expairy நாட்கள் முடியும் தருவாயில் உள்ள மருந்துகள் தான் ஏராளம். மேலும் மழைக்காலங்களில் காலரா, மலேரியா, டைபாய்டு, தொற்று நோய்கள், மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களினால் மக்கள் இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மறைபரப்பு பணியாள்களாகிய நாங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எனக்கு வருடத்திற்கு 3 தடவைகளுக்குமேல் மலேரியா, டைபாய்டு போன்றவற்றால் பாதிக்கபட்டடிருக்கின்றேன். ஏன் இப்பொழுது கூட கடந்த ஒரு மாதங்களுக்கு மேல் மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சலில் தான் இந்த மறையுரையையும் எழுதிக் கொண்டிருக்கின்றேன். எங்களோடு மறைபரப்பு பணிக்கு வந்த அருட்தந்தை மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். அவரது உடலைக்கூட இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இங்கேயே அடக்கம் செய்துவிட்டோம்.

05. மின்சாரம் இல்லாத பகுதி
இங்கு பல இடங்களில் மின்சாரம் கிடையாது. பெரு நகரங்களில் மட்டுமே மின்சாரம் உண்டு. ஏன் நான் இருக்கும் எனது வீட்டில் கூட மின்சாரம் கிடையாது. இங்கு மக்களில் வாழ்வு காலையில் சூரியன் உதிக்கும் போது தொடங்கி மாலையில் சூரியன் மறைவதற்குள் உண்டு உறங்க சென்றுவிடுவர். இந்த மறையுரையை அனுப்புவதற்கு ஒவ்வொரு வாரமும் 25 கிலோ மீட்டர் பயணம் செய்தால்த்தான் என்னால் அனுப்பமுடியும்.

இப்படி நாங்கள் அன்றாடம் சந்திக்கும் துன்பங்கள் பல. ஆனாலும் இங்கு உள்ள அருட்தந்தையர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகின்றனர். ஒருமுறை இங்குள்ள அருட்தந்தையை பார்த்து ‘பாதர் உங்களுக்கு உடலில் பல பிரட்சனைகள் உள்ளன. இங்கு போதிய மருந்து வசதிகளும் கிடையாது. ஏன் நமது இந்தியாவிற்கு சென்று விடக்கூடாது’ என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் ‘சாமி இங்க பாருங்க! இந்த மக்கள் படிப்பறிவில்லாத மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழக் குடியவர்கள், இயேசுவைப் பற்றி அறியாத மக்கள், இவர்கள் அனைவரும் ஆயனில்ல ஆடுகள் போல இருக்கின்றனர். என்னுடைய பணி இந்த மக்களுக்காகத்தான். நான் இறந்தாலும்; இங்கே இந்த மக்களோடு இறக்கவும் தயராக இருக்கின்றேன் என்றார்.

ஆம் பிரியமானவர்களே கிறிஸ்துவுக்காக எதையும் எப்படிப்பட்ட துன்பங்களையும்; தாங்கிக் கொண்டு பணியாற்றுபவர்கள் தான் மறைபணியாளர்கள். எங்களது பங்கு மக்கள் ஏழைகள் தான், படிக்காதவர்கள் தான், ஆனால் அவர்களிடத்தில் கடவுளின் மீது உள்ள நம்பிக்கை மிகவும் ஆழமானது. கடவுளுக்கான பணி என்றால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் மக்கள் காத்திருப்பர். குறிப்பாக பாவசங்கீர்தனத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளியும், சனிக்கிழமைகளிலும் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கெடுப்பார்கள். வெயில், மழை, குளிர் என்று எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காக தங்களது நேரத்தை செலவிட தயாரனவர்கள். இப்படிப்பட்ட விசுவாசப் பயணத்திலிருந்து எப்படி தாய் நாட்டிற்கு திரும்ப மனது வரும். இப்படித்தான் புனித சவேரியாரும் மற்ற மறைபோதகர்களும் பணியாற்றியிருப்பர் என்பதை நாங்கள் கண்கூடாக உணர முடிகின்றது.

அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இயேசுவைத் துன்புரும் ஊழியனாக நமக்கு முன்னறிவிக்கின்றார். இன்றும் கிறிஸ்துவுக்காக துன்புறும் ஊழியர்கள் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கின்றர். துன்புறும் ஊழியனாக வாழ்வதற்கு குருவாகவோ, கன்னியராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக இயேசுவின் அனுபவம் மட்டும் இருந்தால் போதும். அந்த இயேசுவின் அனுபவத்தை பிறரோடு பகிரும் ஒவ்வொருவரும் மறைபணியாளர்கள் தான். இப்படி இயேசுவுக்காக வாழும் மறைப்பணியாளர்கள் நிச்சயம் துன்புறுத்தப்படுவார்கள். காரணம் இயேசுவையே துன்புறுத்தியவர்கள் அவரது சீடர்களை துன்புத்தமாட்டார்களா என்ன?

இயேசுவுக்காக துன்பங்களை தாங்கிக்கொள்ளும் போது நிச்சயம் வெற்றிகள் நமக்கு உண்டு. இதைத்தான் நமது தலைமைக்குருவாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வலுவின்மையில் நமக்கு உதவ கூடியவராக இருக்கின்றார் என்று இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆண்டவரின் ஊழியர்கள் எப்படி இருக்க வேண்டும் என லூக்காஸ் 17 : 10 ல், “நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள் என மறைபரப்பு பணியளர்களுக்கு இயேசு அறிவுருத்துகின்றார்.

அப்படியானால் மறைபரப்பு பணியாளர்கள் நாற்காலிக்கு சண்டைபோடும் மனிதர்கள் கிடையாது. மாறாக இயேசு கூறுவது போல உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். காரணம் மானிடமகனாகிய இருந்த இயேசு தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். ஆக மறைபரப்பு பணியாளர்களும் பலருடைடைய மீட்புக்காக தங்களது நாடு, வீடு, சுற்றம் அனைத்தையும் துறக்க பணியாற்ற அழைப்பு விடுக்கின்றார். நற்செய்தி வாசகத்திலே செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் மட்டுமல்ல எல்லா சீடர்களுமே பதவிக்காத்தான் ஆசைப்பட்டவர்கள். ஆனால் கிறிஸ்துவின் போதனைகளை எப்போது ஏற்றுக்கொண்டனரோ அப்பொழுதே தங்களது உயிரையும் கையளிக்க தைரியம் பெற்றுக்கொண்டனர்.

ஆம் பிரியமானவர்களே எப்படி திருத்தூதர் யாக்கோப்பு தனது கடிதத்தில் செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் என்பார். அதைப்போல கிறித்தவர்களாகிய நம் அனைவரிடமும் கிறித்தவ விசுவாம் உன்டு. அந்த விசுவாத்தை எந்தெந்த வழிகளில் பயனுல்லதாக்கப் போகின்றோம். இன்றைய நாட்களில் நாம் வாழும் சூழலில், சுற்றுப்புறத்தில் பல பண்பாடுகளையும், சமயங்களையும் சார்ந்த மக்கள் வாழும் சமுதாயத்தில் நற்செய்தி அறிவிக்கும் பணி கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாக இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் கிறித்தவ விசுவாசத்தை நிலைநாட்ட வேண்டிய கடமை ஒவ்வொரு திருமுழுக்கு பெற்ற மனிதருக்கும் உண்டு. வீட்டிலே 4 சுவற்றிற்குள் இருந்து கொண்டு மறைபணியாற்ற போகின்றோமா? அல்லது தூய சவேரியாரைப் போல நம்மிடம் இருக்கும் அனைத்தையும் துறந்து இயேசுவுக்காக பணயியாற்றப் போகின்றோமா?

பதவிகளுக்கு ஆசைப்பட்டு நாற்காலிக்கு சண்டை போடும் பணியாளர்களா? அல்லது நாட்டையும், வீட்டையும் துறந்து இயேசுவுக்கு பணிபுரியும் அவரது சீடர்களா?

நீங்கள் போய் எல்லா மக்களினத் தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:19)
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் : 16:15)
இது நம் அனைவருக்கும் கிறிஸ்து வழங்கும் அன்பின் கட்டளை ஆகும்.