இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஆண்டின் இருபத்தி எட்டாம் ஞாயிறு

மண்ணின் சாயல் அழகு பெறுகிறது; கடவுளின் சாயல் அழிக்கப்படுகிறது

சாலமோனின் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30

இறைஇயேசுவில் மிகவும் பிரியமானவர்களே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? நாம் அனைவரும் அழகுபடுத்த பிறந்தவர்களா? அல்லது அழிக்கப் பிறந்தவர்களா? என்று சிந்திக்க கடவுள் நம்மை அழைக்கின்றார்.

பிரியமானவர்களே!
கடவுளின் சாயல் எது?
ஒவ்வொரு மனிதருமே கடவுளின் சாயல் தான். அப்படி கடவுளின் சாயலைப் பெற்றுள்ள மனித இனம் இன்று பல வழிகளில் அழிந்து வருகின்றது. உதாரணமாக ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் மண்ணுலக செல்வங்களுக்காக ஒருவரையெருவர் கொலைசெய்யும் நிகழ்வுகளும், மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொன், வெள்ளி, தங்கம் போன்ற செல்வங்களை அடைவதற்கு எப்படிப்பட்ட பாதக செயலை செய்யும் மனிதர்கள் நமது மத்தியில் ஏராளம். இன்றைய நாட்களில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இடத்தில் கடவுளின் சாயலை உடைய பெண்குழந்தைகள், பெண்கள், அதே கடவுளின் சாயலை உடைய சக மனிதர்களால் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றது. ஆக, பணத்திற்காகவும், சொத்திற்காகவும், மனிதர்களை மனிதர்களே அழிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஆனால்
மண்ணின் சாயலை உடையது எது?
மண்ணிலிந்து எடுக்கப்பட்டதெல்லாம் மண்ணின் சயால் தான். உதாரணமாக பொன், வெள்ளி, தங்கம், பெட்ரோல், போன்ற கனிமங்கள் பல… இன்று இவையனைத்தும் மனிதர்களை அழகுபடுத்தும் அழகு சாதனங்களாகவும், ஒவ்வொருநாளும் இதன் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. மனிதர்களுக்கு செலுத்தும் மதிப்பும், மரியாதையைக் காட்டிலும் மண்ணுலக செல்வங்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். ஆக மண்ணில் இருந்து தோன்றிய இயற்கை வளங்கள் மனிதால் அழகுபடுத்தப் படுகின்றது. ஆனால் கடவுளின் சாயலை உடைய மனித இனம் அழிந்து வருகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர் எனக்கு பொன்னோ, பொருளோ, வெள்ளியோ, எதுவும் வேண்டாம்; மாறாக கடவுளின் சாயலை உடைய மக்களை வழிநடத்த தேவையான ஞானத்தை கடவுளிடம் கேட்கின்றார். பொன்னையும், வெள்ளியையும் குப்பை என சாலமோன் கருதுகின்றார். அதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் செல்வர்கள் விண்ணரசில் புகுவது கடினம். ஒட்கம் கூட ஊசியின் காதில் புகுந்து விடும் ஆனால் செல்வர்கள் விண்ணரசில் நுழைவது கடினம் என்கின்றார்.

இன்று
நம்மில் யாரெல்லாம் செல்வர்கள்?
எவரிடம் இயற்கை வளங்களான தங்கம், வெள்ளி, நிலம், பொருள், என்று அதிகமாக இருக்கின்றதோ அவர்கள் தானே செல்வர்கள். இப்படி பொன்னையும், பொருளையும் சேர்த்து வைத்திருப்பவர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை இயேசு தெளிவாக நமக்கு உணர்த்துகின்றார். இரண்டாவது வாசகத்திலே படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. எனவே கடைசி நாளின் போது நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும் என்கின்றார் தூய பவுல்.

அன்புக்குரியவர்களே கடவுளுக்கு கணக்கு கொடுக்கும் போது கடவுள் நம்மை பார்த்து கேட்க கூடிய கேள்வியும் இதுதான். உன்னை எனது சாயலிலே படைத்தேன்; எனது சாயலில் உள்ள மனிதர்களை அன்பு செய்தாயா? அல்லது மண்ணின் சாயலை உடைய பொன், பொருள், மீது அன்பு செலுத்தினாயா? நம்முடைய பதில் என்னவாக இருக்கப் போகின்றது. இன்று நம்முடைய கழுத்துகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இந்த பொன் நகைகள் முக்கியமா? அல்லது கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித இனம் முக்கியமா? சாலமோன் அரசர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். எனவே ஞானத்தோடு சேர்ந்து அனைத்து வளங்களும் அவரிடம் வந்த சேர்ந்தன. அதைப்போலவே சீடர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினர். எனவே விண்ணுலகிலும் மண்ணுலகிலும் தங்களுக்குத் தேவையான செல்வங்களை பெற்று மகிழ்ந்தனர். இன்று கடவுள் நமக்கு தந்துள்ள வாய்ப்புகளை நாம் எவற்றிற்கு பயன்படுத்தப் போகின்றோம்? வாய்ப்புகள் மேகங்களைப் போன்றது நலுவ விட்டுவிடாதீர்கள்!.

பிரியமனவர்களே! ஒரு முறை ஒரு சொற்பொழிவாளர் ஒரு கல்லூரிக்கு உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடைக்கு வந்தவுடன் அங்கிருந்த மாணவிகளைப் பார்த்து இங்கு யார் நன்றாக படிக்க கூடியவர்கள் உங்களது கைகைளை உயர்த்துங்கள் என்றார். நான்கு, ஐந்து பேர் தங்களது கைகைளை உயர்த்தினர்.

மீண்டும் அவர் எனக்கு ஒரு (Volunteer) வேண்டும். யாராவர் ஒருவர் மேடைக்கு வர முடியுமா? என்றார். உடனே தூக்கிய கைகள் அனைத்தும் அப்படியே கீழே சென்றன. ஓரே அமைதி. சிலநொடிகள் யாருமே வரவில்லை. ஒருசில வினாடிகள் கழித்து ஒரு பெண் நடுங்கிய படியே மேடைநோக்கி சென்றார். உடனே அந்த சொற்பொழிவாளர் தன்னுடைய பையில் இருந்த 1000 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து நன்றி சொல்லி விட்டு அவரை உன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்துகொள் என்றார்.


உடனே அங்கிருந்த அனைவரும் ஆக நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே! என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர். 1000 ரூபாய் போச்சே என்று ஒருசிலர் முனுகினர். ஆம் பிரியமானவர்களே வய்ப்புகள் இப்படித்தான் நமது வாழ்விலும் வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் நிறைய நாம் பெற்றுக்கொள்ளலாம். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியவர்கள் கடவுளின் பிள்ளைகளாக வாழ பழகிக் கொண்டனர். வாய்ப்புகளை நழுவவிட்டோர் கடவுளையும் நழுவவிடுவர்.

கடவுள் சாதாரண மனிதரான சாலமோனை தேர்ந்துகொள்கின்றார். 1அரசர் 3:5-14ல் ஆண்டவர் கிபயோன் எனும்மிடத்தில் சாலமோனுக்குக் கனவில் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்கின்றார். அதற்குச் சாலமோன் என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. எனவே கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, மண்ணுலக செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான் என்றார். ஆக சாலமோன் அரசருக்கு ஒரே ஒரு முறைதான் வாய்ப்புகள் தரப்பட்டது. கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், தன்னுடைய வாழ்வில் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானத்தை கேட்கின்றார் கடவுளும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை அவருக்கு பொழிகின்றார்.

அப்படி தான் ஏன் ஞானத்தை பெற்றுக்கொண்டேன் என இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர் கூறுகின்றார். அதாவது “எல்லோரும் ஒரே வகையில் பிறக்கின்றனர்; ஒரே வகையில் இறக்கின்றனர். எனவே நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும், அரியணைக்கும் மேலாக அதை விரும்பித்தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, மண்ணுல செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை, அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்” என்கின்றார்.

ஆக அன்புக்குரியவர்களே! ஒருமுறை நீங்கள் உங்கள் கழுத்திலும், காதிலும் இருக்கும் நகைகளை தொட்டுப்பாருங்கள். (சும்மா தொட்டுப் பாருங்க) நீங்கள் உங்கள் கழுத்திலும், காதிலும் அணிந்திருக்கும் பொன்னும், வெள்ளியும் எதற்கு சமம் என்று சாலமோன் அரசர் கூறுகின்றார்? இவையனைத்தும் களிமண்ணுக்கும், மணலுக்கும் சமம். என்கிறார். மண்ணில் இருந்து வந்த பொன், வெள்ளி போன்ற செல்வங்கள் அனைத்தும் மண் எனத் தெரிந்தாலும் அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித இனம் அழிந்து கொண்டே இருக்கின்றது.

உதரணமாக அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் அதாவது கடந்த வியாழக்கிழமை ஆறாவது சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடினோம். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. தாய்மைதான் பெண்மைக்கு அடையாளம். ஆனால் இந்த தாய்மையை கொண்டிருக்கும் பெண்ணினம் இன்று அழிந்து கொண்டு வருகின்றது. அழிந்து கொண்டு வருகின்றது என்று கூறுவதைக் காட்டிலும் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு வருகின்றது. பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினம் தினம் காண்கிறோம். அஸ்வினி.. நந்தினி.. ஆசிபா-ஹாசினி என்று பலர் இந்த வரிசையில் உள்ளனர். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இந்த அழிவு பொருந்தும்.

குறிப்பாக இந்தியாவில் இதற்கு முன்பு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருந்தது. ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்பொழுது அவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. வீடு, பள்ளி, பஸ், கோவில், மசூதி, சர்ச் என எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத நிலை. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் இந்த மோசமான நிலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

கடவுள் ஆதாமின் விலாவிலிருந்து ஏன் ஏவாளை உருவாக்கினார் தெரியுமா? ஆதாமின் தலையில் இருந்து ஏதாவது ஒன்றை எடுத்து கடவுள் ஏவாளை உருவாக்கியிருந்தால் பெண், ஆண்ணை அடிமைபடுத்தி விடுவாள்; மேலும் ஆதாமின் காலில் இருந்து ஏவாளை உருவாகியிருந்தால் ஆண் பெண்ணை அடிமைபடுத்தி விடுவான். இவற்றையெல்லாம் தெரிந்த கடவுள் ஆதாமின் விலாவிலிருந்து ஏவாளைப் படைக்கின்றார். காரணம் கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித இனம் பெண்ணிலும், ஆணிலும் பாதி பாதி உருவத்தை உடையது. எனவே ஒவ்வொரு ஆணும் கடவுளின் சாயலில் உள்ள பெண்களை மதிக்க வேண்டும்; அதைப்போலவே ஒவ்வொரு பெண்ணும் கடவுளின் சாயலில் உள்ள ஆண்களை மதிக்க வேண்டும். ஆனால் இன்று கடவுளின் சாயலில் உள்ள மனித இனம் அதே மனிதனால் அழிக்கப்பட்டு வருகின்றது.

ஆலயம் வந்திருக்கும் ஆண்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களது எண்ணமும் பார்வையும் சரியான பாதையில் செல்கிறாதா என்று? அதைப்போலவே பெண்களும் நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். உங்களது எண்ணமும் பார்வையும் சரியான பாதையில் செல்கிறாதா என்று? ஹரியானாவில் சி.பி.எஸ்.இ பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். அங்கு இருக்கக் கூடிய ஒரு எம்.எல்.ஏ “இளைஞர்களுக்கு வேலை இல்லாததால்தான் அப்படி செய்கிறார்கள்” என்று சொல்கிறார். ஆக தாய்மையை கொண்ட பெண் குழந்தைகள் தன்னுடைய சக ஆண்களால் அழிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நமது இந்தியாவில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. ஒரு பெண் விமானத்தில் தன்னுடைய கருத்தை கூறியதற்கு கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரு ஆண் தன்னுடைய கருத்தை (நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவமதித்து) பேசும் போது அவர் கைது செய்யப்படவுமில்லை, தண்டிக்கப்படவுமில்லை. இது தான் நமது உலகம்.

ஆக கடவுளின் சாயலில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு போதைப் பொருளாகவும், விளம்பர பெருளாகவும், மட்டுமே கருதப்படும் சூழல் அதிகம். மனிதர்களே மனிதர்களை வேட்டையாடும் நிலை உருவாகி வருகின்றது. இன்று மனிதர்களுக்கு பேச்சு சுதந்திரமும் இல்லை, எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லை. அப்படியானால் மனிதனே மனிதனை அழிக்கும் சூழலில் வாழ்கின்றோம். ஆனால் இயற்கையாக மண்ணில் இருந்து வரும் செல்வங்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாப்போடு இருந்து வருகின்றது. பொன், வெள்ளி, போன்றவற்றை கண்ணாடிக்குள் வைத்து அழகுபடுத்தியும், பீரோக்களில் வைத்து பத்திரமாக பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் கடவுளின் சாயலில் உள்ள மனித இனம் கேட்பாறற்று கிடக்கின்றது.

இன்று நாம் எதை பாதுகாப்பவர்கள் கடவுளின் சாயலில் உள்ள மனிதர்களையா? அல்லது மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன், வெள்ளி, தங்கம் போன்ற கனிம வளங்களையா?

சாலமோன் அரசர் உடல் நலத்திற்கும், உடல் அழகிற்கும் மேலாக ஞானத்தை அன்பு செய்தார். இந்த ஞானம் எது நல்லது, எது கெட்டது என அவருக்கு கற்றுக்கொடுத்தது. எனவே ஞானத்தோடு சேர்ந்து எல்லா நலன்களும் அவரிடம் வந்து சேர்ந்தன. இன்று நாம் ஞானத்தை தவிர்த்து பொன், பொருள், தங்கம், வெள்ளி போன்றவற்றை நாடுகின்றோம் எனவே எது நல்லது எது கெட்டது என நம்மால் அறிய முடிவதில்லை.

இன்றைய நற்செய்தியில் ஒருவர் இயேசுவிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று இயேசுவைக் கேட்க; அதற்கு இயேசு அவரிடம் உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? "கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார். இவையனைத்துமே கடவுளின் சாயலால் உள்ள மனிதர்களை பாதுகாப்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டளைகள். ஆனால் அந்த மனிதரோ இயேசுவிடம் இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறுகின்றார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்கின்றர். ஆனால் அவனோ இயேசு சொன்னதைக் கேட்டதும் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. சாலமோன் அரசர் எனக்கு பொன், பொருள், சொத்து எதுவும் வேண்டாம் என்று கடவுளை பற்றிக்கொண்டார். ஆனால் இந்த செல்வரோ தனக்கு சொத்து மட்டும் போதும் வேறெதும் வேண்டாம் என்று சென்று விட்டார்.

இன்று நமது மத்தியில் ஞாயிற்றுக்கிழமை கடவுளுக்குரிய நாள் என்று தெரிந்தும் எத்தனைப்பேர் குடும்பத்தோடு ஆலயத்திற்கு வந்திருக்கின்றோம்? இப்படி கடவுளுக்கு முக்கியத்துவம் தராமல் மண்ணுலக செல்வத்திற்கு முக்கியத்துவம் தரும் மனிதர்களைப் பார்த்து அன்று சீடர்களுக்கு கூறினார். இன்று நம்மை பார்த்தும் இயேசு கூறுகின்றார். “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்கின்றார். மீண்டும் இயேசு நம்மைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்கின்றார். இன்று நாம் செல்வர்களா? எந்த வகையில் செல்வர்கள்? ஞானத்தை பெற்றுக்கொண்டதால் நாம் செல்வர்களா? அல்லது மண்ணுலக செல்வத்தை வைத்திருப்பதால் செல்வர்களா?

ஆம் அன்புக்குரியவர்களே நமது இந்த மண்ணுலக வாழ்வு மிகவும் குறுகியது. குறுகிய வாழ்க்கையை வாழும் நாம் கடைசியில் கடவுளுக்கு நிச்சயம் கணக்கு கொடுக்க வேண்டும் என்கின்றார் தூய பவுல். அப்படி கடவுளுக்கு கணக்கு கொடுக்கும் போது கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித குலத்தை காக்க பிறந்தவர்களா? அல்லது அதை அழிக்கப் பிறந்தவர்களா? அல்லது நமது மண்ணுலக வாழ்வு முழுவதும் மண்ணுலக செல்வங்களை மையப்படுத்திய வாழ்க்கையை நாம் வாழ்ந்தோமா? அல்லது கடவுளின் செல்வமாகிய ஞானத்தை தேடி வாழ்ந்தோமா? சிந்திப்போம். எவரெல்லாம் மண்ணுலக செல்வங்களை புறந்தள்ளி கடவுளை மையப்படுத்தி வாழ்கின்றனரோ அவர்கள் அனைவருக்கும் கடவுள் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் கொடுப்பார் என்கின்றார்.

இன்று நான் மண்ணுலக செல்வங்களை நாடுகின்றேனா? அல்லது விண்ணுலக செல்வங்களை நாடுகின்றேனா? மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட பொன், தங்கம், வெள்ளி இவற்றிற்கு ஆசைப்படுகின்றேனா? அல்லது கடவுளின் ஞானத்தை தேடுகின்றேனா? கடவுளின் சாயலை அழிக்கப் பிறந்தவனா(ளா), அல்லது காக்க பிறந்தவனா(ளா)?