இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஆறாம் ஞாயிறு

என்ன! நானும் ஒரு இறைவாக்கினரா! உண்மையா? போலியா?

எண்ணிக்கை 11:25-29
யாக்கோப்பு 5:1-6
மாற்கு 9:38-43, 45, 47-48

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட நாம் அனைவருமே இறைவாக்கினர்கள் என்று இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோயீசனிடமிருந்த ஆசீர்வாதத்தை எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர். நாமும் திருமுழுக்கின் வழியாக தூய ஆவியைப் பெற்றிருக்கின்றோம், மேலும் உறுதிபூசுதலின் வழியாக பரிசுத்த ஆவியின் கனிகளையும், கொடைகளையும் பெற்றிருக்கின்றோம். அப்படியானால் ஆவியைப்பெற்றுக்கொண்ட நம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்களே.
அதைப்போலவே இரண்டாம் வாசகத்தில் தூய யாக்கோப்பு நாம் அனைவரும் எப்படிப்பட்ட இறைவாக்கினர்கள் என்று சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுக்கின்றார். நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். அதாவது கடவுளின் இறைவாக்கினர்கள் எப்போதுமே கடவுள் பக்கம் உள்ளனர் என்றும், மேலும் கடவுளின் இறைவாக்கினர்கள் என்பதற்காக அவர்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறி மேலும் கடவுளின் இறைவாக்கினர்கள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது என்கின்றார். ஆக இன்று ஆலயம் வந்துள்ள நாம் அனைவரும் முதலில் இறைவாக்கினர்கள் தானா என்று சிந்திப்போம்? இரண்டாவதாக நாம் எப்படிப்பட்ட இறைவாக்கினர்கள்? போலியான இறைவாக்கினர்களா? அல்லது உண்மையான இறைவாக்கினர்களா? கடவுளின் இறைவாக்கினர்களா? அல்லது மக்களின் இறைவாக்கினர்களா? மூன்றாவதாக இறைவாக்கினர்களைப்போல நீங்களும், நானும் வாழாவிட்டாலும் கடவுளின் இறைவாக்கினர்களாக வாழ்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம் அப்படி உதவியும் செய்ய முடியவில்லையென்றால் அவர்களுக்கு தொந்தரவு செய்யாது வாழ்வோமா?

பிரியமானவர்களே யாரெல்லாம் இறைவாக்கினர்கள்?
தேர்ந்துகொள்ளப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைவாக்கினர்கள் தாம்.
இன்று நாம் யாரால் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளோம்?
கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டால் நாம் கடவுளின் இறைவாக்கினர்கள். மக்களால் தேர்ந்து கொள்ளப்பட்டால் நாம் மக்களின் இறைவாக்கினர்கள். நான் யாரால் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளேன்?
கடவுளின் இறைவாக்கினர்களுக்கும், மக்களின் இறைவாக்கினர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட இறைவாக்கினர்கள் கடவுள் கூறுவதை எடுத்துரைப்பர்; கடவுளுக்காக பேசுவர்; என்ன நேர்ந்தாலும் உண்மையை மட்டுமே எடுத்துரைப்பர். ஆனால் மக்களால் தேர்ந்து கொள்ளப்பட்ட இறைவாக்கினர்கள் மக்கள் கூறுவதை எடுத்துரைப்பர்; மக்களுக்காக பேசுவர்; உண்மையை திரித்து பொய்யை பேசுபவர்கள்; பொதுவாக ஜால்ரா அடிப்பவர்கள். எனவே இன்று நாம் உண்மையை பேசினால் கடவுளின் இறைவாக்கினர்கள், பொய் பேசி, ஜால்ரா அடித்தால் போலி இறைவாக்கினர்கள், அல்லது மக்களின் இறைவாக்கினர்கள். இன்று நாம் போலி இறைவாக்கினர்களா? கடவுளின் இறைவாக்கினர்களா?
யாரெல்லாம் கடவுளின் இறைவாக்கினர்கள்?
கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட ஒவ்வெருவருமே கடவுளின் இறைவாக்கினர்கள் தாம். பழைய ஏற்பாட்டில் கடவுள் தாமே இறைவாக்கினர்களை தேர்ந்து கொள்கின்றார். இணைச்சட்டம் 18:18 “உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான்” என்கின்றார் கடவுள். உதாரணமாக கடவுள் தாமே மோயீசனை இறைவாக்கினராகத் தேர்ந்து கொள்கின்றார். ஆனால் மோயீசனோ நான் ஒரு திக்குவாயன் என்றால் பேச இயலாது என்றுரைக்கின்றார். ஆனால் கடவுளோ விடுவதாக இல்லை. விடுதலைப்பயணம் 7:1-2 ல் ஆண்டவர் மோயீசனை நோக்கி, "பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான். நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம் நீ எடுத்துச் சொல்வாய். பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்” என்றார். ஆக, மோயீசன் கடவுளின் இறைவாக்கினராகவும், ஆரோன் மோசேவின் வாய்மொழியாகவும் இருக்கின்றார்.
ஏசாயா 6:8 ல் கடவுள் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவியபோது ஏசாயா, "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றார். ஆனால் ஏசாயாவும் ஆண்டவரே நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான் என்று கூற அதற்கு கடவுளின் தூதர் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அவருடைய வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது, "என்று கூறி ஏசாயாவை கடவுள் தன்னுடைய மக்களுக்கு இறைவாக்கு உரைப்பதற்கு கடவுள் தாமே இறைவாக்கினராக தேர்ந்து கொள்கின்றார்.
1அரசர் 11:29-35 இறைவாக்கினர் அகியாவை கடவுள் தேர்ந்து கொண்டு அரசர் எரோபவாமுக்கு இறைவாக்கு உரைக்க அனுப்புகின்றார். ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது சீலோமைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர். அப்பொழுது அகியா தான் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின் வருமாறு கூறினார்; "இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்தக் கொள். ஏனெனில் இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்;
"இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன்.... இப்படியாக இறைவாக்கினர்கள் அனைவருமே கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டு, கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

யாரெல்லாம் போலி இறைவாக்கினர்கள்?
மத்தேயு நற்செய்தி 7: 15-16 ல் ஆண்டவர் இயேசு தாமே போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார். இந்த போலி இறைவாக்கினர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? எனக்கேட்டு போலி இறைவாக்கினர்களை இனம் கண்டுகொண்டு வாழ இயேசு அழைப்பு விடுக்கின்றார்.
இணைச்சட்டம் 13 1-4 உங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் தோன்றி உங்களிடையே ஓர் அடையாளம் அல்லது அருஞ்செயல் காட்டுவேன் என்று சொல்லலாம். அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம். அதன்பின் அவன், "வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம்" என்று கூறலாம். அவை நீங்கள் அறியாதவை. அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவனின் சொற்களுக்குச் செவி கொடுக்க வேண்டாம். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நீங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களா என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார்.
1அரசர் 22: 6-35ல் போலி இறைவாக்கினர்களைப் பற்றிய செய்தியானது இடம் பெற்றிருக்கின்றது. அதாவது அன்புக்குரியவர்களே இராமோத்து-கிலயாதின் மீது போர் தொடுக்க இஸ்ராயேலின் அரசர் ஆகாபு விரும்புகின்றார். பேரிலே வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வி தான் கிடைக்குமா போருக்குச் செல்லலாமா அல்லது வேண்டாமா? என்று அறிந்துகொள்ள தன்னுடைய நாட்டில் உள்ள நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, "நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அந்த பொய் இறைவாக்கினர்கள், "நீர் போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்" என்றனர். ஆனால் இந்த பொய் இறைவாக்கினர்களைப் பற்றி அறிந்த யூதாவின் அரசன் யோசபாத்து, "ஆண்டவரின் திருவாக்கினருள், ஒருவரேனும் இங்கில்லையா? அவரிடமும் இதுபற்றி நாம் கேட்டறியலாமே?" என்றான்.
அப்போது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "இம்லாவின் மகன் மீக்காயா என்னும் ஒருவன் இருக்கிறான். அவன் கடவுளின் இறைவாக்கினன். அவன்மூலம் ஆண்டவரைக் என்ன கூறுகின்றார் என்பதைக் கேட்டறிந்து கொள்ளலாம். ஆனால் அவனை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைக்கிறான்" என்றான். அதற்கு யோசபாத்து, "அரசே! நீர் அப்படிச் சொல்ல வேண்டாம்" என்று கூறி இம்லாவின் மகன் மீக்காயாவை விரைவில் அழைத்து வர ஒருவரை அனுப்புகின்றான்.
இவ்வேளையில் இஸ்ரயேலின் அரசனும் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச உடை உடுத்தி தம்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் பொய்வாக்கினரும் அரசர்களுக்கு முன்பாக வாக்குரைத்துக் கொண்டிருந்தனர். பொய்வாக்கினர்களில் ஒருவன் கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, அரசன் ஆகாபிடம் சென்று "'இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அவர்களை அழித்துவிடுவீர்,' என்று ஆண்டவர் கூறுகின்றார்" என்றான்; மற்றொருவனோ "இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி கொள்வீர். ஏனெனில் அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்" என்றனர். அதைப்போலவே மற்றெல்லாப் பொய்வாக்கினரும் அரசருக்கு ஏற்றார் போல் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தனர்; வாக்குரைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இவ்வாறு அரசருக்கு ஏற்றார் போல் வாக்குரைத்துக் கொண்டிருந்த போது கடவுளின் இறைவாக்கினர் மீக்காயா உள்ளே நுழைகின்றார். அப்போது அவரை அழைத்து வந்த தூதன் மீக்காயாவைப் பார்த்து, "இதோ! இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்பட அரசருக்கு உகந்ததாகவே இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கும் அவர்களது வாக்கைப் போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்!" என்று கூறி அரசருக்கு ஏற்றார் போல் பேச வேண்டும் என கூறுகின்றனர்.
அதற்கு மீக்காயா, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்வதையே நான் உரைப்பேன்" பொய்பேசமாட்டேன் என்றார். மிக்காயா அரசன் முன் வந்து நிற்க, அரசன் அவரை நோக்கி "மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா?" என்று கேட்டான்.
அதற்கு அவர், "போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்!" என்றார். இந்த வார்த்தையானது (போய்த்தான் பாரே… வெற்றியா வேண்ணும் வெற்றி… போனாத்தெரியும் உனக்கு… அதாவது உள்ஒன்றும் புறம் ஒன்றும் வைத்து பேசப்பட்டுள்ளது). அப்பொழுது அரசன் ஆகாபு அவரிடம், "ஆண்டவர் பெயரால் உண்மையைத் தவிர வேறெதையும் என்னிடம் சொல்லலாகாது என்று எத்தனை முறை உன்னை ஆணையிட வைப்பது?" என்றான். அதற்கு அவர், "இஸ்ரயேலர் அனைவரும் ஆயன் இல்லா ஆடுகளைப் போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர் கூறியது; இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவனும் அமைதியாகத் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும்" (எல்லோரும் வீட்டுக்கு திரும்பி போங்க! போருக்கு போனங்கின யாரும் உயிரோட வீடு திரும்பமாட்டேங்க!) என்று எச்சரிக்கின்றார்.
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "இவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைப்பான்' என்று உம்மிடம் நான் கூறவில்லையா?" என்றான். மீக்காயா மீண்டும் கூறியது; "ஆண்டவரின் வாக்கைக் கேளும்; ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும், இடத்திலும் நின்றனர். அப்பொழுது ஆண்டவர் 'இராமோத்து-கிலயாதைத் தாக்கி வீழ்ச்சியுறும்படி ஆகாபைத் தூண்டிவிடக் கூடியவன் யாரேனும் உண்டா?' என்று கேட்டார். அதற்கு போலிவாக்கினர்கள் ஒருவன் ஒன்றைச் சொல்ல, வேறொருவன் வேறொன்றைச் சொன்னான்.
இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, 'நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.' என்றது. அதற்கு ஆண்டவர், 'அது எப்படி?' என்றார். அப்பொழுது அது, 'நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்' என்றது. அதற்கு அவர், 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்' என்றார். ஆதலால், இங்குள்ள உம்முடைய எல்லாப் போலி இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும்படி ஆவியை ஆண்டவர் ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்குத் தீங்கானவற்றையே கூறியிருக்கிறார்" என்றார். அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா, மீக்காயாவின் அருகே வந்து, அவரைக் கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி உன்னிடம் பேசும்படி எப்படி என்னை விட்டுவிட்டு வந்தது?" என்று கேட்டான். அதற்கு மீக்காயா, "நீ உன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளன்று, அதைத் தெரிந்து கொள்வாய்" என்றார்.
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் கட்டளையிட்டது; "மீக்காயாவைக் கைது செய்து அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும் அரசனின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள். நீங்கள், அங்கு சென்று 'அரசர் கூறுவது இதுவே; போரை முடித்து நலமாய் நான் திரும்பும் வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள். இவனுக்குச் சிறிதளவு அப்பமும் தண்ணீருமே கொடுத்து வாருங்கள்" என்றும் கூறுங்கள். அப்பொழுது மீக்காயா, "நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். பின்பு இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர். இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நான் மாறுவேடம் பூண்டு போர்க்களத்திற்கு வருவேன். ஆனால் நீர் அரச உடைகளை அணிந்துகொள்ளும்; என்று சொன்னான். அவ்வாறே இஸ்ரயேலின் அரசன் மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.
இப்படியிருக்க, சிரியாவின் மன்னன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி, "நீங்கள் சிறியோர், பெரியோர் என யாரோடும் போரிடாமல் இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான். ஆதலால் தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், இவன்தான் இஸ்ரயேலின் அரசன் என்று நினைத்து அவனைத் தாக்குவதற்காக அவன்மேல் பாய்ந்தார்கள். அப்பொழுது யோசபாத்து பெரும் கூக்குரலிட்டான். அதனால், அவன் இஸ்ரயேலின் அரசன் இல்லை என்று கண்டுகொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை மேலும் தொடரவில்லை. ஆயினும் ஒருவன் வில்லை நாணேற்றிச் சரியாய்க் குறிவைக்காது அம்பை எய்தான். அது இஸ்ரயேல் அரசனது கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. எனவே அவன் தன் தேரோட்டியை நோக்கி, "தேரைத் திருப்பிப் போர் முனையினின்று வெளியே என்னைக் கொண்டு போ; ஏனெனில் நான் காயமுற்றிருக்கிறேன்" என்றான். அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால், தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான். போலி இறைவாக்கினர்களின் பேச்சைக்கேட்டு போருக்கு சென்ற அரசன் சடலமாக நாடு திரும்பினான்.

எசேக்கியல் 13:9 ல் பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும் போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும். என் மக்களின் அவையில் அவர்கள் இரார். இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா. இஸ்ரயேலின் மண்ணில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்கின்றார் சேனைகளின் கடவுள்.

எரேமியா 23: 15-17ல் போலிஇறைவாக்கினரைப் பற்றிப் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்; நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன். ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள்; அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே என்றுரைக்கின்றார்.
எரேமியா 28: 15-17 அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது; "அனனியாவே, கூர்ந்து கேள்; ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய். எனவே, ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்! "அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான். இவ்வாறாக உண்மையைச் சொன்னால் உயிர் போய்விடும்; தண்டனைகள் கிடைக்கும் என நினைத்து கடவுளுக்கு எதிராக இறைவாக்குரைத்த அனைவரும் இடமில்லாமல் அழிந்து போயினர். இன்று ஆலயம் வந்துள்ள நீங்களும், நானும் எப்படிப்பட்ட இறைவாக்கினர்கள்?
நான் போலி இறைவாக்கினனா? அல்லது கடவுளின் இறைவாக்கினனா என்பதை எப்படிக் கண்டு கொள்வது?
இணைச்சட்டம் 18:18-22 உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான் என்கின்றார்.
"ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது?" என்று நீ உன் மனத்தில் எண்ணலாம். ஓர் இறைவாக்கினன் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன். அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை.

மேலும் லூக்கா 6: 26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினரும் இவ்வாறே செய்தார்கள். அதாவது நம்மில் எவராவது ஒருவர் உங்களைப் பார்த்து, அல்லது நீங்களே மற்றொருவரைப் பார்த்து, ஐயோ! நீங்களா ரொம்ப நல்லவுங்க… இவரு வல்லவரு நல்லவரு, இவருக்காக நான் எதையும் செய்வேன். இவர்தான் எங்களது கழகத்தின் குலவிளக்கு என்று புகழ்ந்து பேசினால் நீரும் ஒரு போலி இறைவாக்கினரே என்கிறார் இயேசு.
ஆக கடவுளின் இறைவாக்கினர்கள் கடவுள் உரைப்பதை எடுத்துக் கூறுவர்; ஆனால் போலி இறைவாக்கினர்கள் பணத்திற்காகவும், பதவிக்காவும், சுகபோக வாழ்விற்காகவும் இறைவாக்குரைப்பவர்கள். இப்படிப்பட்ட மனிதர்களை சலைகளில் உள்ள சுவரொட்டிகளில் பார்கலாம். எங்கள் குலவிளக்கே, வள்ளுவனின் தமையனே, அஞ்சா நெஞ்சனே, பேர்வாளே, சரித்திர நாயகனே, இப்படிப் பல… இந்த மனிதர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத் தெரிந்தும் குற்றத்தை எடுத்துரைக்காமால் அதை மறைந்து நீர் வல்லவர், நல்லவர் என்று பேசும் மனிதர்கள் நம்மில் பலபோர். இன்று குற்றவாளிகள் எனத் தெரிந்தும் இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நீங்களும் நானும் ஜால்ரா அடிப்பவர்களா? அல்லது கடவுள் கூறுவதை எடுத்துரைப்பவர்களா? பணம், பதவி, சுகபோக வாழ்விற்காக உண்மையை திரித்து பேசுபவர்களா? அல்லது உயிரே போனாலும் உண்மையை எடுத்துரைப்பவர்களா?
கடவுளின் இறைவாக்கினராக வாழ்வது எளிதான காரியமா?
அன்புக்குரியவர்களே! கடவுளின் இறைவாக்கினராக வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. காரணம் கடவுளின் இறைவாக்கினர்கள் அனைவருமே துன்புறுத்தப்பட்டனர், சித்தரவதைக்கு ஆளாயினர், கடைசியில் இறைவார்த்தைக்காக உயிரையும் விட்டனர். உதாரணமாக ஏரேமியா இறைவாக்கினர் கடவுளைப் பார்த்து “ஆண்டவரே நீர் என்னை மயக்கிவிட்டீர்; நானும் மயங்கிப்போனேன்” என்றும் இறைவாக்கினர்களில் பலபேர் நாடுகடத்தப்பட்டனர் என்று விவிலியம் நமக்கு கூறுகின்றது..
இப்படி உண்மை பேசிய கடவுளின் இறைவாக்கினர்களை இந்த உலகம் எவ்வளவு கொடுமை செய்தது என்பதைப் பற்றி தூய யாக்கோப்பு இன்றைய இரண்டாம் வாசகத்தில் தெளிவாக எடுத்துரைக்கின்றார். “போலி இறைவாக்கினர்களே, பணத்திற்காகவும், பதவிக்காகவும் ஜால்ரா அடிப்பவர்களே! உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டு விட்டன.... இவ்வாறாக கடவுளின் இறைவாக்கினர்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டு கடவுளின் வார்த்தைக்காவே வாழ்ந்தனர்.
இப்படி கடவுளின் வார்த்தைக்காக வாழும்போது நிச்சயம் கடவுளின் பெயரால் நம் ஒவ்வொருவராலும் அரும்அடையாளங்கள நாம் நிகழ்த்த முடியும். அப்படித்தான் நற்செய்தி வாசகத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார். அதற்கு இயேசு கூறியது; "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார் எனக் கூறி கடவுளின் பெயரால் இறைவாக்குரைப்பவர்களை உற்சாகப்படுத்துகின்றார்.

பிரியமானவர்களே! நேற்று எனக்கு தெரிந்த நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த ஒரு நபர் என்னிடம் இவ்வாறாக கேட்டார். பாதர் நான் ஒரு பையனை விரும்புகின்றேன். இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்கின்றோம். இரண்டு வருடங்களுக்கு மேலாக எங்களது நட்பு தொடர்கின்றது. இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைப்படுகின்றோம். ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், உங்களுக்கே தெரியும் நான் ஒரு நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த ஒரு பெண். ஆனால் நான் விரும்பும் மனிதர் இந்து மதத்தைச் சார்ந்தவர். நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி பலரிடமும் விசாரித்தேன். பலரும் பலவித கருத்துக்களை கூறினர் என்றார்.
நான் அவர்களிடம் பலரின் கருத்துகளை கேட்ட பிறகு நீங்கள் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து முதலில் நம்முடைய கிறித்தவ ஆலயத்தில் கிறித்தவ முறைப்படி திருமணம் முடித்துவிட்டு; அடுத்தநாள் இந்து ஆலயத்திற்கு சென்று இந்து முறைப்படி திருமணம் செய்யலாம் என்றுள்ளோம் என்றார். மேலும் எங்களது திருமணத்றிற்கு இரண்டு விதமான திருமண அழைப்பிதல்களை அச்சடிக்கலாம் என்றுள்ளோம். அதாவது என்னைச் சார்ந்தவர்களுக்கு கிறித்தவ முறைப்படி அழைப்பிதல்களும், அவரைச் சார்ந்தவர்களுக்கு இந்து முறைப்படி அழைப்பிதல்களும் அச்சடிக்கலாம் என்ன சிந்திக்கின்றோம் என்றனர்.
நான் அவரிடம் ஏன் இந்த இரண்டு சடங்கு சம்பிரதாயங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் கிறித்தவர்களின் மனம் புண்படக்கூடாது. காரணம் எங்களது குடும்பம் ஒரு நல்ல கத்தோலிக்க குடும்பம்; அதைப்போலவே இந்துக்களின் மனமும் புன்படக்கூடாது. இரண்டு விதமாக திருமணம் நடைபெறும்போது யாருக்கும் எதுவும் தெரியாது, எவருக்கும் சந்தேகம் வராது என்று கூறினார். நான் அவரிடம் மக்களுக்கு வேண்டுமானல் தெரியாமல் போகலாம் கடவுளுக்கு தெரியும் தானே என்றேன். அதற்கு அவர் நம்முடைய கடவுள் மன்னித்து விடுவார் பாதர். ஒரு பாவசங்கீர்தனம் செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.
அப்போது அவர் உங்களுடைய பதில் என்ன பாதர்? என்று கேட்டார். நான் அவரிடம் உங்களுடைய உறவினர் என்ற முறையில் உங்களது காதல் திருமணத்திற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினீர்கள். உங்களது விருப்பப்படியே உங்களது பெற்றோர் முன்னிலையில் விரும்பியவரையே திருமணம் செய்து கொள்ளப் போகின்றீர்கள் எனக்கு சந்தோசம் தான். ஆனால் ஒரு குருவானவர் என்ற முறையிலும், கிறித்தவர் என்ற முறையிலும் நான் இந்த திருமணத்தை சம்மதிக்க மாட்டேன்.
காரணம் நீங்கள் வேண்டுமானால் மனிதர்களை ஏமாற்றலம். இரண்டு மதமக்களுக்கும் தெரியாமல் திருமணம் முடிக்கலாம். ஆனால் கடவுளை ஓருபோதும் ஏமாற்ற முடியாது. அதெப்படி ஆலயத்தில் குருவின் முன்பாகவும், பல கத்தோலிக்க மக்களின் முன்பாகவும் இயேசுவின் பெயரால் இவரை என் கணவராக ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அதன்பிறகு எனக்கு பிறக்கும் குழந்தைகளை கத்தோலிக்க விசுவாகத்தில் வளர்ப்பேன் என கடவுள் முன்னிலையில் வாக்குகொடுத்துவிட்டு, அடுத்தநாள் காலையில் வேற்று தெய்வங்களுக்கு முன்பாக சென்று இந்த கடவுளை நான் விசுவசிக்கின்றேன் என்று எப்படி உங்களால் கூற முடியும்? கிறித்தவ விசுவாசத்தை எப்படி இவ்வளவு எளிதாக மறுதலிக்க முடிகின்றது. அப்படியானால் உன்னுடைய விசுவசம் உண்மையான கத்தோலிக்க விசுவாசம் கிடையாது என்று கூறி எனக்கு இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினேன்.

ஒன்று கிறித்தவ விசுவாசம் வேண்டாம் காதலித்த பையன் தான் வேண்டும் என்றால் இந்து மதத்திற்கு சென்று அவர்களின் முறைப்படி திருமணம் செய்துகொள்; அல்லது காதலித்த பையன் வேண்டாம்; கடவுள் மட்டும் போதும் என முடிவு எடுத்தால் கடவுள் நிச்சயம் நல்லதொரு வாழ்க்கை உனக்கு அமைத்துக் கொடுப்பார். காரணம் கடவுளுக்காக நீர் விரும்பி அன்பு செய்த மனிதரை விட்டுக் கொடுத்துள்ளீர். அதை விட்டுவிட்டு கிறித்தவத்திலும் திருமணம், இந்து முறைப்படியும் திருமணம் என்று சொன்னால் நீர் போலியாக வாழ்கின்றீர் என்றேன். மிகவும் சோகத்தோடு சென்றுவிட்டார். ஆம் பிரியமானவர்களே! கிறித்தவ விசுவாசம் என்பது ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் வைத்து வாழ்வது அல்ல. இரண்டு கால்களையும் ஒருங்கே ஓரிடத்தில் வைத்து உண்மை கடவுளுக்காக வாழவேண்டும்.
இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்து தான் இயேசு இன்றைய நற்செய்தியில் “உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. இறையாட்சிக்க உட்பட்டு வாழவேண்டுமானால் எந்நேரத்திலும், எக்காரணத்திற்காகவும் கிறித்தவ விசுவாசத்தை விட்டுக்கொடுக்க கூடாது.
பிரியமானவர்களே இன்று நாம் அனைவரும் ஒருநிமிடம் சிந்தித்துப் பார்ப்போம்! முதலில், நாம் அனைவரும் உண்மையிலே இறைவாக்கினர்களா? இரண்டாவதாக, கடவுளின் இறைவாக்கினர்களாக வாழவேண்டுமானால் உண்மையை பேசவேண்டும்; உண்மைக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அதற்கு நாம் தயாரா?

மூன்றாவதாக, அப்படி இறைவாக்கினர்களாக வாழ முடியாவிட்டாலும் ஆண்டவர் நமக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகின்றார். அதாவது இன்றைய நாட்களில் எத்தனையோ பேர் நமது மத்தியில் கடவுளின் இறைவாக்கினர்களாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட கடவுளின் இறைவாக்கினர்களை இனம் கண்டுகொண்டு அந்த இறைவாக்கினர்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்கின்றார் இயேசு. அதாவது கடவுளின் பணியாளர்களுக்கு நம்மால் முடிந்த காரியங்களை செய்ய கடவுள் நமக்கு வாய்ப்பளிக்கின்றார். எந்தெந்த வழிகளில் கடவுளின் பணியாளர்களுக்கு நாம் உதவிகள் செய்கின்றோம்? ஆனால் அதேவேளையில் இந்த கடவுளின் பணியாளர்களை பாவத்தில் விழச்செய்யும் மனிதர்களை அவர்களது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது என்கின்றார். அதாவது கடவுள் பணியாளர்களுக்கு உதவி செய்யவேண்டும் அப்படி உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்ரவம் செய்யக்கூடாது என்கின்றார் இயேசு. இன்று நம்மோடு வாழும் இறைபணியாளர்களுக்கு எந்தெந்ந வழிகளில் துன்பங்களை கொடுக்கின்றோம்? சிந்திப்போம்!
அன்புக்குரியவர்களே! இப்போது முடிவு நம்முடைய கைகளில்; கிறிஸ்து அவனாகவும், கிறிஸ்து அவளாகவும் இன்று ஆலயம் வந்துள்ள நம் அனைவரையும் கடவுளின் இறைவாக்கினர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றார். அப்படி கடவுளின் இறைவாக்கினராக வாழ்வது கடினம் எனில் கடவுளின் இறைவாக்கினர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் சொய்ய கடவுள் அறிவுறுத்துகின்றார். இன்று நாம் எப்படிப்பட்ட வாழ்வைத் தேர்ந்து கொண்டு வாழப் போகின்றோம்.

ஹலோ! நீங்களும் ஒரு இறைவாக்கினர் தான்! என்ன! நானும் ஒரு இறைவாக்கினனா?