இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு

நீதிமான்கள் கடவுளின் மக்கள்; அவர்களை சீண்டாதீர்கள். சீண்டினால் எகிப்தியரின் கதி தான் உங்களுக்கும்!

சாலமோனின் ஞானம் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்று நாம் ஆண்டின் இருபத்தி ஐந்தாம் ஞாயிரை சிறப்பிக்கின்றோம். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கின்றன. கடந்த சில தினங்களாக மக்கள் மத்தியில் அதிகமாக உரையாடப்படும் செய்தி நீதி மன்றங்களைப் பற்றியது தான். நம்முடைய நீதிமன்றங்கள் உண்மையிலே நீதியைத்தான் வழங்குகின்றனவா? அல்லது நீதி என்பது பணத்திற்கும், பதவிக்கும், அடிமையாகிப் போய்விட்டதா? ஏழைக்கு ஒரு நீதி, பணம், செல்வாக்கு படைத்தவர்களுக்கு மற்றெரு நீதி என்று நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படிப்பட்ட இந்த சூழ்நிலைக்கு மத்தியில் இன்றைய வாசகங்கள் நீதியை பற்றி போதிக்கின்றது. கடவுளின் நீதி எப்படிப்பட்டது என்றும், அவரது நீதி யாருக்கானது என்றும் இன்றைய முதல் வாசகமும், இரண்டாவது வாசகத்திலே நீதியின் ஊற்று அல்லது அதன் பிறப்பிடம் எங்கிருந்து வருகின்றது என்பதை தூய யாக்கோப்பு நமக்கு விவரிக்கின்றார். நற்செய்தி வாசகத்திலே கடவுளின் நீதி, பணம், செல்வம், அந்தஸ்து படைத்தவருக்கானது அல்ல, மாறாக ஏழைகளுக்கான நீதி என்பதை தெளிவாகக் கூறுகின்றது. இன்று நீங்களும் நானும் எப்படிப்பட்ட நீதியை ஆதரிக்கின்றோம்? நம்முடைய நீதிமன்றங்களில் கூறப்படும் பணம், செல்வம் படைத்தோருக்கான நீதியையா? அல்லது கடவுள் கூறும் நீதியையா? சிந்திப்போமா?


பிரியமானவர்களே நம்முடைய நீதிமன்றங்களில் நீதிதேவதை என்று ஒரு சிலை இருக்கும். அனைவரும் அதை பார்த்திருக்கின்றீர்களா? அதனுடைய கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டிருக்கும்? ஏன் என்று யாராவது கூறமுடியுமா?

அன்புக்குரியவர்களே அந்த நீதிதேவதையின் கண்கள் கருப்புத்துணியியால் கட்டப்பட்டதின் அர்த்தம் என்னவென்றால் நீதி மன்றத்தில் நீதி வழங்கும் நீதியரசர்கள் யாருக்கும் பாரபட்சமின்றி, சரியான, நேர்மையான, தீர்ப்புகள் வழங்க வேண்டுமென்பதற்காகத்தான் கருப்பு துணியானது கட்டப்பட்டிருக்கினறது. நீதியின் முன் அனைவரும் சமம் என்பதை அது உணர்த்துகின்றது.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது? நீதி தேவதையின் கண்களை கட்டிவிட்டு நீதியரசர்கள் கண்களை திறந்துகொண்டு ஏழை, பணக்காரன், செல்வாக்கு படைத்தவன், அதிகாரத்தில் உள்ளவன், என்று மனிதர்களைப் பார்த்து நீதி வழங்குகின்றனர். வழங்குகின்ற நீதியிலே ஒரு நீதியரசர் ஒருமாதிரியாகவும் மற்றொரு நீதியரசர் மற்றொரு மாதிரியாகவும் வழங்குகின்றனர். அதெப்படி ஒரே குற்றத்திற்கு வெவ்வேறுபட்ட நீதிகளை நீதியரசர்கள் எழுத முடியும்? சற்று சிந்தித்து பார்ப்போம்.

மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு நீதிமன்றத்தில் ஒரு நீதியரசர் மாதக்கணக்கில் அந்த குற்றத்தை ஆராய்ந்து, பல்வேறு தரப்பினரை விசாரித்து கடைசியில் இவர் குற்றவாளி என தீர்ப்பு எழுதுகின்றார். ஆனால் அதே குற்றவாளியை மற்றொரு நீதியரசர் இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு எழுதுகின்றார். மீண்டுமாக மூன்றாவது முறையாக மற்ற நீதியரசர்கள் ஒன்று சேர்ந்து இவர் குற்றவாளிதான் என தீர்ப்பு எழுதுகின்றனர். இப்போது எவருடைய தீர்ப்பு நீதியானது? ஒரே குற்றத்திறகாக மூன்று முறை தீர்ப்புகள் வழங்கப்பட்டது. லேவியர் 19 : 15- ல் தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு என்று எழுதப்பட்டு இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் எவர் ஒருவர் நீதியோடும், எந்தவித பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கின்றாரோ அவர்தான் நீதிமான் எனவும், அப்படி நீதியோடு தீர்ப்பு வழங்குபவர்கள் கடவுளின் மக்கள் என்றும், இப்படிப்பட்டவர்கள் நீதியோடு தீர்ப்பு வழங்கும் போது அவருக்கு நிறைய பகைவர்கள் வெகுண்டெழுவர். காரணம் பணம், சொத்து, செல்வாக்கு, அதிகாரம் இருப்பதனால். ஆனால் இப்படி நீதிமானுக்கு எதிராக பகைவர்கள் சூழும் போது கடவுள் தாமே அவர்களுக்காக வழக்காடி அவர்களை பகைவரிடமிருந்து மீட்பார் என்கிறது சாலமோனின் ஞானநூல். இன்று இரண்டு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய மனிதர்களின் வாழ்வை பார்த்தால் யார் உண்மையான நீதியரசர்கள் என்பது நமக்கு தெரிந்து விடும்.

உதாரணமாக முதலில் குற்றவாளி எனத் தீர்ப்பிட்ட நீதியரசர் அந்த தீர்பிற்கு பிறகு இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது சட்டப்பணிகளை கவனித்து வருகின்றார். அவர் நான் ஒரு அரசாங்க ஊழியன், சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலத்தான் இந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு எனது பணி முடிந்துவிட்டது. எந்த வித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை என்று கூறி மிகப்பெரிய பதவியில் இருக்கின்றார்.

இரண்டாவதாக இவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்தவர் இன்று எந்தவொரு வேலையும் இல்லாமல் அரசாங்கத்தாலும், மக்களாலும் நிரகரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார். வழக்கமாக நீதித்துறையில் இருந்த ஓய்வு பெற்றவர்களை அரசாங்கம் அவர்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இவரும் 10க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளில் பணியாற்ற விருப்பக் கடிதம் கொடுத்தார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. மனம் நொந்துபோன இவர் இரயில்வே வாரியத்திலும் வேலைக்காக விண்ணப்பிக்கின்றார் அவரது விண்ணப்பம் அங்கும் நிராகரிக்கப்படுகின்றது. மீண்டுமாக அரசாங்கத்தின் கிரிமினல் அட்மினிஸ்ட்ரேசன் பணிக்கு விண்ணப்பிக்கின்றார். அங்கும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. ஒரே குற்றத்திற்காக இரு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியவர்களை ஒருவரை இந்த உலகம் மிகப்பெரிய பதவிகளை வழங்கி கொண்டாடிக் கொண்டிருக்கின்து. மற்றொருவரை நிரகரித்துக் கொண்டிருக்கின்றது. நீதியரசர்கள் பாரபட்சமின்றி சரியான நேர்மையான தீர்ப்புகளை வழங்கும் போது மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு கிடைக்கும். அதே வேலையில் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலைக்கு கடவுள் அவர்களை உயர்த்துவர். இவர்கள் வேறுயாரும் இல்லை. குற்றவாளி எனத் தீர்ப்பளித்த திரு. மைக்கில் டி குன்காவும், குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்த திரு. குமாரசாமியும் தான்.

ஆம் பிரியமானவர்களே, இன்று ஆலயம் வந்துள்ள நீங்களும், நானும் நேர்மையான முறையில் நாம் வாழும்போதும், நமது குடும்பத்தையும், நமது பிள்ளைகளையும் நேர்மையான முறையில் வளர்க்கும் போதும் நாம் ஒவ்வொருவருமே கடவுளின் பிள்ளைகள் என்பதை நமக்கு வழியுறுத்துகின்றது. இன்று நாம் நேர்மையானவர்களா? நமது பிள்ளைகளை நேர்மைத்தனத்தில் நாம் வளர்கின்றோமா? சிந்திப்போம்

அன்புக்குரியவர்களே பழைய ஏற்ப்பாட்டில் எத்தனையோ இனம் வாழ்ந்து வந்தது. ஆனால் கடவுள் இஸ்ராயேல் மக்களை மட்டும் ஏன் தேர்ந்து கொள்ள வேண்டும்? அவர்களை மட்டும் இது தேர்ந்தெடுக்ப்பட்ட இனம் என்று ஏன் கூறவேண்டும்?

இணைச்சட்டம் 7:7ல் “எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள் மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே? ஆனாலும் கடவுள் இஸ்ரயேலரை தேர்ந்துகொண்டார். காரணம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு என இவர்கள் அனைவரும் கடவுளுக்கு பிரமாணிக்கமாய் இருந்து, நீதியோடும், நேர்மையோடும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்த காரணத்தால் மட்டுமே கடவுள் இந்த முன்னோர்கள் வழியாக இஸ்ராயேலரை தமக்கு சொந்தமான மக்கள் எனத் தேர்ந்து கொள்கின்றார்.

உதராணமாக, ஆபிரகாம் கடவுள் முன்னிலையில் நீதிமானாக விளங்கினார். தன்னுடைய ஒரே மகனை பலியிட துணிந்தார். கடவுள் அவரையும், அவர் வழிவந்தோர்களையும் தேர்ந்துகொள்கின்றார். எனவேதான் இணைச்சட்டம் 12:7ல் ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றி உன் வழிமரபினருக்கு இந்நாட்டைக் கொடுப்பேன் என வாக்களிக்கின்றார். இதன் வழியாக இந்த இஸ்ராயேல் மக்கள் மற்ற எல்லா இனத்தாரையும் விட நேர்மையாகவும், நீதியுடன் வாழ்ந்ததால் கடவுள் இவர்களை தேர்ந்து கொள்கின்றார். இன்று நீங்களும் நானும் நேர்மையாகவும், நீதியோடும் வாழும்போது நாமும் கடவுளின் பிள்ளைகள் தாம், நீதிமான்கள் தாம்.

இப்படி நீதியோடு வாழ்ந்த இனம், நேர்மையோடு வாழ்ந்த மக்கள் எகிப்திலே துன்பங்களை அனுபவித்து கடவுளிடம் அழுது புலம்பும் போது கருணையின் கடலன நமது இறைவன் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கின்றார். நீதிமான்களை துன்பப் படுத்தினால் எத்தைகைய அழிவு நேரிடும் என்பதை அவர்களுக்கு கண்கூடவே நிகழ்த்திக் காண்பிக்கின்றார். அதாவது இஸ்ராயேல் கூட்டமைப்பினர் எகிப்திலிருந்து கிளம்பி கடவுள் காண்பிக்கும் இடத்தை அடைய நடந்து செல்கின்றனர். அவர்களின் பின்னால் எகிப்திய மன்னன் தனது படைகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு அவர்களை நோக்கி வருகின்றன். அப்போது மக்கள் பயந்துபோய்
“மோசேயை நோக்கி, "எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே! "எங்களை விட்டுவிடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்" என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்" என்றனர். ஆனால் மோசே மக்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்" என்றார்.

எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் செங்கடலுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை. எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படைவீரர்கள் என அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. கவனிக்கவும் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று நீதிமான்களாகிய இஸ்ரயேலருக்கு கடவுள் விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.

அன்புக்குரியவர்களே நம்முடைய நாடு பல வழிகளில் முன்னேறிவிட்டது, நூற்றுக்கணக்கான விண்கலன்களை வானில் ஏவுமளவிற்கு நம்மிடம் சக்தி உண்டு, ஆனால் ஒரு மிகப்பெரிய தலைவர் இறந்து மூன்று வருடங்களுக்கும் மேல் ஆகின்றது. இன்று வரை அவர் எப்படி இறந்தார் என்பதை நம்மால் அறிய முடிந்ததா? இல்லையே? நம்முடைய நாட்டில் நீதி விலைகொடுத்து வாங்கப்பட்டு வருகின்றது. சாலமோன் அரசர் கடவுளிடம் உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று 1 அரசர்கள் 3 : 9 ல்- கேட்டார். நம்முடைய கடவுள் நீதியின் கடவுள்; இந்த நீதியின் கடவுள் நீதிக்காக போரடக்கூடியவர், நீங்களும நானும் நீதியை சார்ந்திருந்தோமானால் கடவுளின் நீதி நமக்கும் கிடைக்கும், ஆனால் கடவுளை மறுத்து, பணம், செல்வாக்கு, அதிகாரம் என்று நம்பியிருந்தேமானால் நமக்கும் எகிப்தியரின் நிலை தான். எனவே நீதிமான்கள் மீது கைவைக்காதீர்கள். காரணம் அவர்கள் கடவுளின் மக்கள்; கடவுள் அவர்களுக்காக போரிடுவார்.

நீதியின் பிறப்பிடம் எது? இன்று நீங்களும் நானும் நீதிமானாக வாழவேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோப்பு நீதி எங்கிருந்து புறப்படுகின்றது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகின்றார்.

அதாவது அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது என்கின்றார் தூய யாக்கோப்பு.

ஆக யாரெல்லாம் அமைதியின் தூதுவர்களாக வாழ்கின்றனரோ அவர்களிடத்தில் இருந்து நீதி என்னும் கனி தோன்றுகின்றது. இதானால்த் தான் நீதிமான்கள் அனைவரும் மிகவும் பொருமையானவர்கள், அமைதியானவர்கள் என்று பலருடைய வாழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். பழைய ஏற்பாட்டு யோசேப்பும் சரி, புதிய ஏற்பாட்டில் வரும் யோசேப்பும் சரி இவர்கள் இருவருமே நீதிமான்கள் என்று விவிலியம் கூறுகின்றது. காரணம் இவர்கள் இருவரும் மிகவும் பொருமையானவர்கள். அமைதியின் பிறப்பிடங்கள் என்றே சொல்லலாம். தன்னுடைய சகோதரர்கள் எவ்வளவு துன்பங்கள் கொடுத்தாலும், துயரங்களை கொடுத்தாலும் கடைசிவரை அவர்களுக்கு எதிராக வாய்திறக்கவில்லை. தன்னிடம் அதிகாரமும், செல்வமும் மிகுதியாக இருந்தபோது அவர்களை பழிவாங்கவும் இல்லை.

அதைப்போலலே புதிய ஏற்பாட்டில் யேசேப்பு மிகவும் பொருமையாக தாய் மரியாவோடும், மகன் இயேசுவோடும் இருந்து அவர்களுக்கு உதவுகின்றார். வானதூதர் கனவில் கூறியதை முழுமையாக நம்பி அவர்களை ஏற்றுக்கொள்கின்றார். இப்படி கடைசி வரை ஒரு நேர்மையாளனாக, நீதிமானாக விளங்கியவர் தூய யேசேப்பு. இன்றைய நாட்களில் திரு. மைக்கில் டி குன்கா தீர்ப்பு எழுதியபோது அவருக்கு எதிராக எத்தனை முழக்கங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஆனால் அனைத்தையும் பொருமையோடும், அமைதியோடும் கையான்டவர். அதனால்த்தான் அவர்கள் இன்று நீதிமான் எனவும், உண்மையை எடுத்துரைத்த நீதியரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


முதல் வாசகத்தில் நீதியை நிலைநாட்டுபவர் கடவுளின் மக்கள் என்கிறது. இதையே மத்தேயு 5:9-ல் அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என்கின்றது. ஆக அமைதியில் இருந்து புறப்படும் நீதியை கடைபிடித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்றும் நம்முடைய குடும்ப வாழ்விலும் சரி, சமூதாய வாழ்விம் சரி யாரெல்வாம் அமைதியுடனும், பொருமையுடனும் இருந்து நீதிக்காக உழைக்கின்றனரோ அவர்கள் அனைவருமே நீதிமான்கள் தாம்.

இன்று ஆண்டவர் இயேசு நம் ஒவ்வொருவரையும் நீதிமான்களாக வாழ அழைப்பு விடுக்கின்றார். நீதிமான்களாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசு, தன்னுடைய சீடர்களைப் பார்த்து "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது இயேசு, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். எவன் ஒருவன் தொண்டனாக இருக்க ஆசைப்படுகின்றானோ அதுவே நீதிமான்களாக வாழ்வதற்கு தொடக்கமாகும் என்கின்றார். இன்று நம்மிலே யாருக்கு தொண்டனாக வாழ அசையிருக்கின்றது. எப்படியாவது உயர் பதவிகளை அடைய வேண்டும் என்று தானே நாம் அசைப்படுகின்றோம். மேலே உயர ஆசைப்படுவது தவறில்லை மாறாக தன்னிடம் இருக்கும் பணத்தையும், செல்வத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மேலே வருவது தவறு என்று தனது சீடர்களுக்கு கற்பிக்கின்றார்.

அந்த ஊரிலே தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர். “ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். பாவம் இந்த சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? எங்களது பசியைப்போக்க நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டித்துண்டு கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டித்துண்டை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். “இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டித்துண்டு கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டித்துண்டுகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டித்துண்டு கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன். பெரிய ரொட்டித்துண்டை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டித்துண்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டித்துண்டு எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டித்துண்டு பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். ஆம்பிரியமானவர்களே நீதியோடும், பொருமையோடும் வாழ்ந்தோம் என்று சென்னால் கடவுள் நிச்சயம் நம்மை காப்பார்.


நீதிமான்கள் எவருமே நான் தான் பெரியவன் என்று ஒருபோதும் கூறிதில்லை. நீதிமான்கள் எப்போதும் நியாமான, சரியான கருத்துகளை மட்டுமே கூறுவர். நீதிமான்கள் பணத்தாலும், அதிகாரத்தாலும் பெரியவர்கள் அல்ல மாறக கடவுளின் அருளினால் உயர்ந்தவர்கள். எனவேதான் நீதிமான்களைப் பற்றி திருப்பாடல்கள் 34 : 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார் என்றும்; சாலமோனின் ஞானம் 2 : 18 நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார் என்றும், மேலும் சாலமோனின் ஞானம் 4 : 7 நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும், கடவுளிடம் இளைப்பாற்றி அடைவார்கள் என்கின்றது.

ஆக நீதிமான்கள் எப்போதுமே கடவுளின் கண்முன் நிற்கின்றனர். நீதிமான்களுக்கு கடவுளின் கருணை எப்போதும் இருக்கும். இன்று நீதிமான்களாக வாழ அசைப்படுகின்றோமா? அல்லது தங்களிடம் இருக்கும் பணம், அதிகாரம் இவற்றை வைத்து நீதியை விலைக்கு வாங்க ஆசைப்படுகின்றோமா? நம்மில் பலபேர் நீதி மன்றங்களில் இருக்கும் நீதியை நீதிதேவதையின் கண்களை மூடிவிட்டு பணத்தை வைத்தும், அதிகாரப் பலத்தை வைத்தும் நீதி விலைக்கு வாங்கிவிட முடியும் என்று நினைப்பதுண்டு; ஆனால் கடவுளின் நீதியிலிருந்ருந்து ஒருவரும் தப்ப முடியாது என்பதை பலவேளைகளில் மறந்துவிடுகின்றோம்.

பிரியமானவர்களே கடவுள் ஒருவர் என்று நம்பும் நாம் நீதியும் ஒன்று மட்டுமே என்பதை உணரவேண்டும். கடவுளும், நீதியும் ஒன்று தான். கடவுள் எப்படி மாறுவதில்லையோ அப்படியே நீதியும் நேரத்திற்கு நேரம், மனிதர்களுக்கு மனிதர் என மாறுவது கிடையாது. கடவுளின் மறுஉருவம் தான் நீதி. இதை நாம் எப்போது நாம் உணர்கின்றோமோ அப்போது தான் நீங்களும் நானும் நீதிமான்கள் என அழைக்கப் படமுடியும். நம்முடைய நீதி மன்றங்களில் சரியான, நேர்மையான நீதிகளை எதிர்பார்க்க முடியும். திருப்பாடல்கள் 98 : 9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். ஆமென்.


ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டுஇ கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்கஇ கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

ஒருநாள் அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார்இ அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும் சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை தென்னாலிராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் தென்னாலிராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி தென்னாலிராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட தென்னாலிராமன் சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம் என்றார்.

ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம் என்றார்.’ தென்னாலிராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். நேர்மையாளர்கள் ஒருபோதும் வழிதவறி நடப்பதும்மில்லை. நேர்மையாளர்கள் அவர்களின் நேர்மையின் பொருட்டு தக்க சன்மானம் பெருவர்.