இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு

எனது நம்பிக்கை உயிருள்ளதா? உயிரற்றதா?

ஏசாயா 50:5-9
யாக்கோபு 2: 14-18
மாற்கு 8:27-35.

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமா?
யானைக்கு தனது தும்பிக்கை தான் பலம்; மனிதனுக்கு அவனது நம்பிக்கை தான் பலம் என்பார்கள். அப்படி இந்த இருபத்திநான்காம் ஞாயிறு கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பலமுள்ளதா? அல்லது பலமற்றதா? உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா? என்று ஆராய்ந்து பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.


முதல் வாசகத்தில் நாம் துன்புறுத்தப்பட்டாலும், அவமானப்படுத்தபட்டாலும், இழிநிலையைக்கூட நாம் அடைந்தாலும் நமது நம்பிக்கை பலமானதாக இருந்தால் நிச்சம் கடவுள் நம்மை காப்பார் என்று ஏசாயா இறைவாக்கினர் நமக்கு கூறுகின்றார். அதைப்போலவே இரண்டாம் வாசகத்தில் தூய யாக்கோப்பு செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் எனவே நமது நம்பிக்கை பலமுள்ளதாக உயிருள்ளதாக இருக்க வேண்டுமானால் அது செயல் வடிவம் பெறவேண்டும் என நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே தங்களது அன்றாட சிலுவைகளை தூக்கிக்கொண்டு நடக்க முடியும் நம்பிக்கை அற்றவர்கள் சாத்தானுக்கு சொந்தமானவர்கள் என இயேசு தனது சீடர்களுக்கு குறிப்பாக இரயப்பருக்கு தெரியப்படுத்துகின்றார்.

அன்புக்குரியவர்களே இன்று நமது நம்பிக்கை எப்படி இருக்கின்றது? நமது நம்பிக்கை உயிருள்ளது, பலமுள்ளது என்று சொன்னால் எந்தெந்நத வழிகளில் அதை உயிருள்ளதாக நாம் மாற்றுகின்றோம் என்று சிந்திப்போமா? கடுகளவு விசுவாசம், நம்பிக்கை இருந்ததென்றால் ஒரு மலையைக்கூட நம்மால் கடலில் விழ வைக்க முடியும் என்று இயேசு கூறும் போது இதை நம்மால் செயல்படுத்த முடியுமா? நம்மால் செயல்படுத்த முடியுமென்றால் அது உயிருள்ள, பலமுள்ள நம்பிக்கை, நம்மால் செயல்படுத்த இயலாது என்றால் நம்மிடம் இருப்பது உயிரற்ற, பலமற்ற நம்பிக்கைதான். எனவே நம்மிடம் உள்ள நம்பிக்கையை பலப்படுத்த முயற்ச்சிப்போமா?

மனிதர்களுக்கு தன்னம்பிக்கையும், அவர்களின் வாழ்க்கையை அருளுடனும், பொறுப்புடனும் வாழத் தைரியத்தைக் கொடுக்க வல்லது எது வென்றால் அதுவே அவர்களின் நம்பிக்கையாகும். ஒருவன் அறிவிலே மிகச் சிறந்தவனாக இருக்கலாம், அல்லது மிகப்பெரிய பலசாலியாக இருக்கலாம். இதை அவனுக்கு அறிவுறுத்துவதே அவனது நம்பிக்கைதான். என்னால் முடியும் என்று படித்ததால்த் தான் அவன் அறிவாளியாக இருக்கின்றான். என்னால் முடியும் என்று தனது உடல் வலிமையில் நம்பிக்கை வைத்ததால் அவன் இன்று பலசாலியாக இருக்கின்றான். ஆக நம்பிக்கை என்பது நமது அன்றாட வாழ்வின் அஸ்திவாரமாகும். இந்த நம்பிக்கை என்ற அஸ்திவாரம் கட்டமாக எழுப்பட வேண்டுமானால் நமது நம்பிக்கை செயல் வடிவம் பெறவேண்டும்.

ஒருமுறை நெப்போலியன் தனது படைவீரர்களைப் பார்த்து “நீங்கள் போரிடும் போது, அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு என்பது போல் போரிட வேண்டும். மேலும் பிரார்த்தனையின் போது, எல்லாம் கடவுளின் பொறுப்பு என்பது போல் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று கூறினார். சுருங்கக்கூறினால் இதுவே நம்பிக்கை ஆகும். ஆக நம்பிக்கை என்பது நமது செயல்களை முழுமையாக்குவதாக இருக்க வேண்டுமே தவிர நம்மைச் செயலற்றவராக மாற்றக் கூடாது.


பிரியமானவர்களே எனக்கு பழக்கமான ஒரு குடும்பம். மிகவும் நெருக்கமான நண்பர்கள் கூட. அந்த குடும்பம் மிகவும் பக்தியான கத்தோலிக்க குடும்பம். அன்றாடம் ஜெபமாலை ஜெபிக்கும் குடும்பம். அவர்கள் வசிக்கும் பகுதியில் எங்காவது கத்தோலிக்க வழிபாடுகள் நடந்ததென்றால் அவர்கள் தான் முதல் ஆளாக அங்கு இருப்பார்கள். ஆன்மீக காரியங்களை தனது குடும்ப காரியம் போல நினைத்து கடுமையாக உழைப்பவர்கள். அவர்களது நம்பிக்கையும், விசுவாசத்தைம் பார்த்து பல முறை நேரிலே சென்று வாழ்த்தி இருக்கின்றேன். இப்படி கடவுள் நம்பிக்கையில் உயர்ந்தவர்களாயினும் அவர்களது நம்பிக்கை ஏனோ உயிருட்டம் உள்ளதாக இல்லை. காரணம் நம்பிக்கை இருக்கும் அளவிற்கு அது அவர்களின் செயல்பாட்டில் காண்பது மிக அரிதாகி விட்டது.

தூய யாக்கோப்பு இன்றைய இரண்டாம் வாசகத்தில் “என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் என்ற யாக்கோப்பின் வார்த்தையை மெய்பிக்கும் வண்ணமாக எனது நண்பரின் குடும்பம் இருந்தது.

ஒருமுறை என்னிடம் ஒரு மிகவும் ஏழையான ஒரு மனிதர் தன்னுடைய மனைவியின் மருத்துவ செலவிற்கு பணம் தேவை என்று என்னிடம் வந்தார். நானும் எனது நண்பரின் குடும்பம் நிச்சயம் உதவி செய்வார்கள் என்று அவர்களை எனது நண்பரின் வீட்டிற்க அனுப்பினேன். ஆனால் அங்கு நடந்ததோ வேறு. எனது நண்பரின் குடும்பத்தினர் என்னிடம் இவ்வாறாக கூறினர். இந்த ஏழைகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஒவ்வொரு வீடாக சென்று உதவி என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்கள். இவர்களுக்கு உதவி செய்வதைக் காட்டிலும் கோவிலுக்கு பணம் தருவது எவ்வளவோ மேல். கடைசியாக என்னிடம் ஃபாதர் உதவி என்று என்னிடம் வராதீர்கள். மற்ற எது வேண்டுமானும் கேளுங்கள். ஏழைகளுக்கு உதவி, ஏழை குழந்தைகளுக்கு படிப்புச் செலவு மருத்துவ செலவு, என்று பணம் பற்றிய நிகழ்வுகளுக்கு என்னை நாடாதீர்கள் என்று கூறினர்.

ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார் என நீதிமொழியும், 28 : 27, ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு; இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும் என சீராக்கின் ஞானம் 7 : 32 லும், அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று மாற்கு நற்செய்தி 10 : 21 லும், மேலும் சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகின்றேன்" என்று லூக்காஸ் 19 : 8 ல்லும் சக்கேயு ஏழைகள் மீது அன்ப செலுத்தியதால் அவன் ஆபிரகாமின் பிள்ளை என்னும் அளவிற்கு பெரியவராக உயர்ந்துள்ளார். ஆக கடவுளிடம் நாங்கள் நம்பிக்கை வைக்கின்றோம் எனச் சொல்லிக் கொண்டு அதை செயலாக்கம் பெற உழைக்கவில்லை என்றால் அதனால் எந்தவொரு பயனும் இல்லை.

பிரியமானவர்களே எனக்கு அவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்கள், ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்தல் என்று வரும்போது அவர்களின் மனநிலை அப்படியே மாறிவிடுகின்றது. கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் அக்குடும்பத்தினர். ஆனால் அவர்களின் கடவுள் நம்பிக்கை அங்கு செயலாக்கம் பெறவில்லை. ஆக இன்று ஆலயம் வந்துள்ள நம் ஒவ்வொருவரின் நம்பிக்கை சிந்தித்துப் பார்ப்போம். நம் அனைவரிடமும் நம்பிக்கை உண்டு. நம்மிடம் உள்ள கடவுள் நம்பிக்கை எந்தெந்த வடிவத்தில் செயலாக்கம் பெருகின்றது என சிந்திப்போமா?

ஒரு கிறித்தவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை நமக்கு முதல் வாசகம் படம் பிடித்து காட்டுகின்றது. முதலில், எவராவது ஒருவர் நமக்கு எதிராக கிளந்தெளும்போது நமது மனநிலை எப்படி உள்ளது?. நானும் அவர்களைப் போலவே கிளந்தெழுகின்றேனா? அல்லது அவர்களை விட்டு விலகிச் சொல்கின்றேனா? அல்லது எது நடந்தாலும் பாரவாயில்லை என்று சொல்லி எதையும் தைரியமாக எதிர் கொள்கின்றேனா? சிந்திப்போம்?

இரண்டாவதாக, என்னை அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப நம்மை ஒருவர் இவ்வாறு கீழ்த்தரமாக நடத்தும் போது நமது மனநிலை எப்படி உள்ளது?. எல்லாம் கடவுளுக்காக என்று சகித்துக் கொண்டு அனைத்து துன்பங்களையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிகின்றதா? அல்லது அவர்களுக்கு எதிராக நானும் அவர்களைப்போல செயல்படுகின்றேன?

மூன்றாவதாக, என்னை ஒருவர் அவமானப்படுத்தும் போதும், இழிவாக பேசும் போதும், என்னை கேவலமாக ஒரு பொருட்டாக மதிக்காத போதும் எனது மனநிலை எப்படி உள்ளது? ஆனால் இவையனைத்தையும் ஆண்டவரும் கடவுளுமான மெசியா என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இயேசு தன்னுடைய வாழ்வில் அனைத்தையும் அனுபவித்தார். எந்த பாவமும் அறியாத அவரை தனது ஆடைகளை உருவி நிர்வாணமாக்கி, காரி உமிழ்ந்து, மூள்முடி சூட்டி அவரை ஏள்ளி ஏளனம் செய்த போது எந்தவித எதிர்பும் தெரிவிக்காமல் அனைத்தையும் தந்தையின் மகிமைக்காக என்று மட்டுமே சிந்தித்து அனைத்து அவமானங்களையும் தாங்கிக் கொண்டார் நமதாண்டவர் இயேசுபிரான்.

ஆனால் இன்று தனக்கு எதிராக யாரவவது ஒரு வார்த்தை சொல்லி விட்டால், எவராவது ஒருவர் தன்னை அவமானப்படுத்தினால், 100 மடங்கு அதிகமாக அவரை அவமானப்படுத்த நாம் நினைக்கின்றோம். இப்படிப்பட்ட வாழ்க்கை நாம் வாழும் போது நாம் எப்படி சொல்ல முடியும் எனது நம்பிக்கை உயிருள்ளதாக இருக்கின்றது என்று?


இன்றைய நற்செய்தி வாசகத்திலே இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னைப்பற்றி அவர்கள் எப்படி அறிந்தும், தெரிந்தும் வைத்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டு அவர்களின் நம்பிக்கையை சோதிக்கும் போது எந்த இராயப்பர் இயேசுவிடம் “நீரே மெசியா” என்று உரைத்தாரோ அவரையே இயேசு "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்து கொள்கின்றார். ஆம் பிரியமானவர்களே, இரயப்பர் இயேசுவை முழுமையாக நம்பினார், மெசியா என அறிந்து கொண்டார், கடவுளின் மகன் என்பதை தெரிந்து கொண்டார். ஆனால் இயேசு தான் துன்பப்பட போகின்றேன் என்று சொன்னதும் பேதுரு ஆண்டவரே இது உமக்கு வேண்டாம் என அவரிடம் கூறுகின்றார். உடனே இயேசு இவரை சாத்தானுக்கு ஒப்பிடுகின்றார். காரணம் செயல் வடிவம் பெறாத நம்பிக்கை சாத்தானின் செயலுக்கு ஒத்ததாகும்.

தொடக்கத்தில் கடவுள் தன்னுடைய உயிர்மூச்சை ஊதி படைத்த மனிதனை நம்பினார். இவன் நிச்சயம் நமது சொல்படி கேட்பான் என நம்பினார் ; ஆதாமும் கடவுளை நம்பினார். ஆனால் அவர்களின் நம்பிக்கை செயல் வடிவம் பெறவில்லை. எனவே சாத்தானின் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கின்றனர். இன்று நாமும் யேசுவைப் பற்றி அறிந்து வைத்திருக்கின்றோம், தெரிந்து வைத்திருக்கின்றோம், ஆனால் நமக்கு துன்பங்களும், சோதனைகளும் வரும் போது நம்பிய கடவுளை மறந்து விட்டு வேற்று தெய்வங்களை தேடி ஓடுவதில்லையா? உண்மையிலே கடவுள் மீது நம்பிக்கை இருந்தது என்று சொன்னால் நிச்சயம் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், துயரங்கள் வந்தாலும், சோதனைகள் வந்தாலும் ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என நம்மில் எத்னைபேர் தைரியமாக கூறமுடியும்.

இதைத்தான் இயேசு தெளிவாக "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார் என்கின்றார். இயேசுவின் இந்த வார்த்தைகள் தான் சாதரண உங்களைப் போன்ற என்னைப் போன்ற மனிதர்களை இன்று புனிதர்களாகவும், அப்போஸ்தலர்களாகவும், மறைசாட்சியர்களாகவும் மாற்றியது. இயேசுவின் மீது நம்பிக்கை வைத்ததன் ஒரே காரணத்திற்காக எத்தனை மனிதர்கள் தங்களது உயிரை இழந்திருக்கின்றனர். ஆம் பிரியமானவர்களே அவர்களின் நம்பிக்கை உயிருள்ளது, பலமுள்ளது. இன்று நமது நம்பிக்கை…

ஒருமுறை ஒரு நாத்திகன் மலைச் சிகரத்தின் மீது நடந்து கொண்டிருக்கும் போது தவறி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டான். கீழே விழும்போது பாறை இடுக்கில் வளர்ந்திருந்த ஒரு மரக்கிளையை கெட்டியாக பிடித்துக் கொண்டான். குளிர் காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த நாத்திகன் தனது நம்பிக்கையற்ற நிலையைச் சிந்தித்துப் பார்த்தான். கீழே பெரும் பாறைகள் மேலே ஏறிச்செல்லவும் முடியாது. கிளையின் மீதான பிடிப்பும் நழுவிக் கொண்டிருந்தது. அவன் நினைத்தான் நான் எப்போதும் கடவுளை நம்பியதில்லை. நான் இதில் தவறு செய்திருக்கலாம். இப்போது நம்புவதில் என்ன இழப்பு வந்து விடப்போகிறது. இப்படி நினைத்த அவன் கடவுளை அழைத்தான்.

கடவுளே நீ இருப்பது உண்மையானால் என்னைக் வந்து காப்பாற்று, நான் உன்னை நம்புகிறேன் என்றான். கடவுளிடமிருந்து பதிலே இல்லை… அவன் மீண்டும் அழைத்தான். கடவுளே எப்போதுமே நான் உன்னை நம்பியதில்லை. ஆனால் இப்போது என்னைக் காப்பாற்றினால் நான் உன்னை இப்போதிலிருந்தே நம்புகிறேன் என்றான். மேலேயிருந்து ஒரு குரல் கேட்டது,
“நீ என்னை நம்ப மாட்டாய்; உனது தன்மை என்னவென்று எனக்குத் தெரியும்” என்றார் கடவுள். கிளையின் பிடியில் நழுவிக் கொண்டிருந்த அவன் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். கடவுளே தயவு செய்து உதவுங்கள். நான் உண்மையாகவே உங்கள் மீது நம்பிக்கை வைப்பேன் என்றான். கடவுளோ, இல்லை நீ என் மீது நம்பிக்கை வைக்க மாட்டாய் என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள் என்றார். அந்த மனிதன் கெஞ்சினான்... வாதாடினான்.

இறுதியாகக் கடவுள் கூறினார். சரி நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். நீ என்னை நம்புகின்றாயா? என்று கேட்டார். அவன் ஆம் கடவுளே நான் உன்னை இந்நேரம்முதல் நம்புகின்றேன் என்று கூறினான்.

உடனே கடவுள் அப்படியானால் “நீ பிடித்திருக்கும் அந்த மரக்கிளையை விட்டுவிடு என்றார்”. உடனே அவன் என்னாது மரக்கிளையை விடுவதா என்னை முட்டாள் என்று நினைத்தீர்களா என்றான் அந்த நாத்திகன்.

ஆம் பிரியமானவர்களே நமது நம்பிக்கையும் இப்படித்தான் பலவேளைகளில் இருக்கின்றது. கடவுளை நம்புகின்றோம் எனச் சொல்லிக் கொண்டு அந்த நம்பிக்கைக்கு நாம் செயல்வடிவம் கொடுப்பதில்லை. செயல்வடிவம் பெறாத நமது நம்பிக்கை செத்த நம்பிக்கைக்கு சமம் என தூய யாக்கோப்பு நமக்கு அறிவுறுத்துகின்றார். எனவே கடவுள் மீது வைத்துள்ள நமது நம்பிக்கை உயிருள்ளதா? உயிரற்றதா? உயிருள்ளது என்று சொன்னால் எந்தெந்த வழிகளில் அதை நாம் உயிருட்டம் பெற வைக்கின்றோம் சிந்திப்போம். ஆமென்.