இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (A )

பார்வையால் பாவிகளானோம்!

1சாமுவேல் 16:1,6-7,10-13
எபேசியர் 5:8-14
யோவான் 9:1-41

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே!
நாம் அனைவரும் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? அல்லது பாவிகளா? புனிதர்களா? முதல் கேள்விக்கு நல்லவர்கள் என்று பதில் சொல்வோம். ஆனால் இரண்டாவது கேள்வியானது சற்று நம்மை சிந்திக்க வைக்கிறது. நிச்சயம் நாம் புனிதர்கள் கிடையாது. நாம் பாவிகள் இல்லையென்று சொன்னாள் நாம் அனைவரும் பொய்யர்கள் ஆவோம். ஆக, நாம் பாவிகளாக இருக்க காரணம் என்ன? (பல பதில்களை மக்கள் சொல்லலாம்)

எல்லோருக்கும் பார்வை (கண்) நன்றாக தெரிகிறதா?
நமக்கு கண் நன்றாக தெரிகிறது என்றால் நாம் அனைவரும் பாவிகளே!. இன்றைய நற்செய்தி கடைசி வசனமானது “நீங்கள் எங்களுக்கு கண் தெரிகிறது என்கிறீர்கள் எனவே நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்கள்”யோவா9:41 என்கிறது. ஆம் அன்புக்குரியவர்களே! நம்முடைய கண்கள் தான் நம்மை பாவத்திற்கு இட்டுச்செல்கிறது என்று இன்றைய வாசகங்கள் வழியாக கடவுள் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

அந்த ஊரிலே மிகப்பெரிய திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் செய்யாத தவறுகளே கிடையாது. கொலை, கொள்ளை, என தினமும் ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருப்பான். ஊர்மக்கள் அனைவரும் இவனைக்கண்டு பயந்து நடுங்கினர். மக்கள் அனைவரும் இவனை பாவியாகவும், முரடனாகவும், கொலைகாரனாகவும், கொள்ளைக்காரனகவுமே பார்த்து வந்தனர்.

அதே வேளையில் இவனுடைய பார்வையும் எண்ணமும் எப்படியெல்லாம் திருடுவது, கொள்ளையடிப்பது என்ற சிந்தனையிலே இருந்தது. ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு முனிவர் ஒருவர் வந்தார். திருடனைப் பற்றி கேள்விப்பட்டு அவனை சந்திக்க செய்தி அனுப்பினார். மக்கள் அனைவரும் கூடியிருக்க ஒருநாள் அந்த திருடன் இந்த முனிவரைப் பார்க்கச் சென்றான். மக்கள் அனைவரும் இவர்களுடைய சந்திப்பு எப்படியிருக்கும் என பார்த்துக் கொண்டிருந்தனர். திருடன் அந்த முனிவர் அருகில் சென்றதும் முனிவர் ஓடிச்சென்று திருடனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டடராம். உடனே திருடன் ஒருவித நடுக்கத்துடன் ஜயா நான் ஒரு திருடன் நீங்கள் எவ்வளவு பெரிய துறவி நீங்கள் போய் என்காலில் விழுவதா? என்று அவரை தூக்கிவிட்டான். அப்போது அந்த துறவி சொன்னார் நான் பெரிய துறவி கிடையாது. நீர்தான் பெரிய துறவி என்றார். மேலும் நான் ஒரு சாதரண துறவி உலக ஆசைகளையும், இன்பங்களையும் துறந்து கடவுள் மட்டும் போதும் என பற்றிக்கொண்டேன். ஆனால் நீயோ மகா துறவி, இந்த உலகையும், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்த கடவுளையே வேண்டாம் என்று சொல்லி அவரையே துறந்து வாழ்பவர் எனவே நீர் தான் மகா துறவி, என்று சொன்னாராம். ஆம் அன்புக்குரியவர்களே! இந்த ஊர்மக்கள் இவனை மனிதாரக பார்க்கவில்லை, மக்கள் அனைவரும் இவனை பாவியாகவும், முரடனாகவும், கொலைகாரனாகவும், கொள்ளைக்காரனகவுமே பார்த்து வந்தனர். ஆனால் இந்த துறவியின் பார்வையானது வித்தியாசமாக இருந்தது அதனால் தான் அந்த திருடன் மனம் மாறி நல்லவனாக வாழ இவரது பார்வை தூண்டியது. இன்று நம்முடைய பார்வையானது எப்படிப்பட்டதாக இருக்கிறது? என்று சிந்திப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் சாமுவேல் வழியாக தாவீதை திருப்பொழிவு செய்கிறார். காரணம் இந்த உலகம் எதுவெல்லாம் தேவையற்றது என என்னுகிறதோ அங்குதான் கடவுளின் பார்வையானது செல்கிறது. சாமுவேல் ஈசாயிடம் கடவுளுக்கு பலிசெலுத்தவும், அவருடைய குடும்ப உறுப்பினர்களை தூய்மைபடுத்திக் கொள்ளவும் அழைக்கிறார். ஈசாய் தாவீதை தவிர தனது அனைத்து பிள்ளைகளையும் தூய்மை சடங்கிற்கு அழைத்துச் செல்கிறார். தாவீதை ஆடுமேயக்க அனுப்பிவிடுகிறார். காரணம் இவன் இந்த பணிக்கு தகுதியில்லாதவன் என நினைத்தாரோ என்னவோ? ஈசாய் தனது பிள்ளைகள் ஒவ்வொருவாரய் சாமுவேலிடம் அனுப்புகிறார். சாமுவேலோ அவர்களுடைய தோற்றத்தையும், உயரத்iயும் பார்த்து தேர்ந்தெடுக்கிறார். ஆனால் கடவுள் சொல்கிறார் மனிதர்களுடைய தோற்றத்தையும், உயரத்தையும் பார்த்து நீர் முடிவுசெய்யாதே என எச்சரிக்கிறார். இப்படியாக 1கொரி 1:28-ல் “உலகம் ஒருபொருட்டாக கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாக கருதுபவற்றையும், இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார் காரணம் கடவுள் முன் எவரும் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படி செய்தார்” இவ்வாறாக ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீதை கடவுள் தேர்ந்து கொள்கிறார். சாமுவேலும் தாவீதை அரசராக திருப்பொழிவு செய்கிறார். இவ்வாறாக கடவுளின் பார்வையும் மனிதர்களின் பார்வையும் வெவ்வேறு திசையில் இருக்கிறது. எனவே தான் முதல் வாசகத்தில் கடவுள் “மனிதர் பார்ப்பது போல நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர் நானோ அகத்தை பார்க்கிறேன்” என்கிறார். கடவுளுடைய பார்வையில் அனைத்தையும் நல்லதாக பார்க்கிறார். ஆனால் மனிதனோ தன்னுடைய பார்வையால் பாவம் செய்கிறான். ஆக மனிதனின் பார்வைகள் தான் பாவத்திற்கு இட்டுச்செல்கிறது.

பார்வைகள் பாவத்திற்கு இட்டுச்செல்கின்றன:
இயேசுவில் பிரியமானவர்களே! கடவுள் தன்னுடைய பார்வையில் எதுவெல்லாம் நல்லது கண்டாரோ அனைத்தும் மனிதனுடைய சுயநல பார்வையால் தீயதாக மறுகிறது. முதலாவதாக கடவுள் தான் படைத்த படைப்புகள் அனைத்தையும் ஆதாமையும், ஏவாளையும் சேர்த்து நல்லது எனக் கண்டார். விலக்கப்பட்ட கனியானது பார்பதற்கு அழகானதாகவும், கண்களுக்கு களிப்புட்டுவதாகவும் இருந்ததால் அக்கனியை உண்டால் நாமும் கடவுள் போல ஆகலாம் என்ற தங்களுயை சுயநலப் பார்வையாhல் பாவம் செய்கின்றனர். எனவே, கடவுள் தொ.நூல் 6:6-ல் “மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்”.

மேலும் கடவுளுடைய பார்வையிலே சவுல் நல்லவனாக தெரிகிறான் எனவே, இஸ்ராயேல் மக்களுக்கு முதல் அரசராக கடவுள் சவுலை தேர்ந்தெடுக்கிறார் ஆனால் சவுல் கடவுளுக்கு எதிராக செயல்படுகிறான். எனவே 1சாமு 15:11-ல் கடவுள் சாமுவேலிடம் “சவுலை அரசாக்கியதற்காக நான் வருந்துகிறேன் என்கிறார்”. மேலும் கடவுள் தாவீதை அரசராக திருப்பொழிவு செய்கிறார். ஆனால் தாவீதோ தன்னுடைய இச்சை நிறைந்த பார்வையால் பாவம் செய்கிறான். 2சாமு 12:9-ல் “ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையை புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தார்”. இப்படியாக, கடவுளுடைய பார்வையிலே எதுவெல்லாம் நல்லதாக தெரிந்தோ மனிதர்கள் தங்களுடைய சுயநல பார்வையால் அனைத்தையும் பாவமாகவும் தங்களை பாவிகளாகவும் மாற்றிக்கொள்கின்றனர். ஆக மத்தேயு 6:22-ல் “கண்தான் உடலுக்கு விளக்கு. கண்நலமாய் இருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். ஆனால் அது கெட்டுப்போனால் உங்கள் உடல் முழுதும் இருளாய் இருக்கும். ஆக உங்களுக்கு ஒளிதரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படி இருக்கும்” எனவே நம்முடைய பார்வைகளை சரிசெய்து குணப்படுத்த கடவுள் நம்மை அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பார்வையும் பார்வையற்ற மனிதரை நோக்கி செல்கிறது. இந்த பார்வையற்ற மனிதர் பிறவியிலே பார்வையில்லாதவர், இயேசு உமிழ்நீரால் சேறு உண்டாக்கி கண்களில் பூசுகிறார், சிலோவம் குளத்திலே கழுவச்சொல்கிறார். தெளிவான பார்வை பெற்ற மனிதனாக புதிய வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறார். இயேசுவில் பிரியமானவர்களே இன்றைய வார்த்தைகள் வழியாக கடவுள் நமக்கு கூறுவது என்ன?

பிறவியிலே பார்வையற்றவன்: யார் பிறவிலே பார்வையற்றவர்கள்?
மனிதர்களின் பார்வையானது பாவத்திற்கு வழிவகுக்கிறது என்று பார்த்தோம். நம் அனைவருக்கும் பார்வை தெரிகிறது என்று சொன்னால் நாமும் பாவிகள்தான். எப்படிப்பட்ட பாவிகள்? நமக்கு கண்கள் தெரிந்தாலும் பிறவியிலே நாம் அனைவரும் பார்வையற்றவர்கள் தான், பாவிகள் தான்! ஆதாமும் ஏவாளும் செய்தனர் பாவம், அந்த பாவத்தினால் வந்தது சாபம், இப்படியாக ஒரு மனிதர் வழியாக பாவம் உள்ளே நுழைந்தது என பவுலடியார் தெளிவாக விளக்குகிறார். ஒருவகையில் சொல்லப்போனால் நாம் அனைவருமே பிறவியிலே பார்வையற்றவர்கள் தான். அதனால் தான் இன்றைய சமுதாயத்தில் எவ்வளவோ தீமைகள் நடந்தாலும் நாம் பார்த்தும் பார்க்காதது போல சென்றுகொண்டுதான் இருக்கிறோம். எனவே பார்வை பெறவேண்டியது நாம் ஒவ்வொருவருமே!

நாம் பாவிகளாக பிறந்தது நாம் செய்த பாவமா? அல்லது நம் முன்னோர்கள் செய்த பாவமா?
நாம் செய்த பாவமும் கிடையாது, நம் முன்னோர் செய்த பாவமும் கிடையாது. கடவுளின் செயல் நம் வழியாக இவ்வுலகிற்கு வெளிப்படப் போகிறது. அப்படியானால் கடவுள் நம் அனைவரையும் அவரது கருவியாக பயன்படுத்த போகிறார். பாவிகளைத் தேடித்தான் கடவுள் வந்தார் என்று படிக்கிறோம். ஆக நம் கடவுள் நம்மை தேடிவந்து மீட்கப்போகிறார். இன்றைய நற்செய்தியிலும் கூட இயேசு தான் இந்த பார்வையற்ற மனிதரைச் சந்திக்கிறார். சந்திப்பிற்கு பிறகு புதிய ஒளி பெற்ற மனிதனாக இயேசுவை முழுமையாக யார் என்று அறிந்துகொண்டு பிறருக்கும் மெசியாவை அறிமுகப்படுத்தி வாழ ஆரம்பிக்கிறான். ஆக நாமும் காத்திருப்போம் கடவுளும் நம்மை தேடி வருவார் நம்மையும் ஒளியின் பிள்ளைகளாக மாற்றுவார்.

யார் இந்த உலகின் ஒளி:
“நான் உலகில் இருக்கும் வரை நானே உலகின் ஒளி” என்கிறார் நமதாண்டவர் இயேசு. அப்படியானால் அவர் இந்த உலகத்தில் இருக்கும் வரை அவர்தான் உலகின் ஒளியாக இருந்தார். ஆனால் அவர் இந்த உலகை விட்டு விண்ணகம் சென்ற போது நாம் வாழும் இந்த உலகிற்கு யார் ஒளியாக இருக்கமுடியும். கடவுள் நம் அனைவரையுமே தம்முடைய ஒளியின் மக்களாக வாழ நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார். அதாவது நம்மை உலகின் ஒளிகளாக வாழ அழைக்கிறார். மத் 5:14-ல் “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” . இவ்வாறாக நாம் தான் இவ்வுலகத்தின் ஒளிகள்.

ஒளியின் மக்களாக வாழ என்ன செய்ய வேண்டும்?
01. நாம் அனைவரும் ஒளியின் மக்களாக வாழ வேண்டுமானால் முதலில் நம்முடைய பார்வை தெளிவானதாக இருக்க வேண்டும். அதாவது நம்முடைய கண்தான் நம்முடைய உடலுக்கு விளக்கு. நம்முடைய கண்நலமாய் இருந்தால் நம்முடைய உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.

02. கடவுள் தான் படைத்த படைப்புகள் அனைத்தையும் நல்லனவாக கண்டார் நாமும் நல்லனவாக பார்ப்போம்.

03. இச்சை நிறைந்த பார்வையை தவிர்ப்போம். இன்றைய உலகில் பல பாவங்களுக்கு காரணம் இந்த இச்சை நிறைந்த பார்வையையே!

04. நம்முடைய சுயநல பார்வையை விடுத்து பிறர்நல பார்வையாக மற்றுவோம்.

05. எப்போதும் கடவுளுக்கு ஏற்ற செயல்களில் நம்முடைய பார்வையை பதிப்போம்.

இப்படியாக இந்த தவக்காலத்தில் நம்மையே நாம் சுயஆய்வுக்கு உட்படுத்தி நம்முடைய கண்களில் உள்ள தூசுகளை சுத்தம் செய்வோம், நாம் ஒளிபெற்ற மக்களாக வாழும்போது நிச்சயம் இந்த உலகிற்கு நீங்களும் நானும் ஒளியின் கருவிகளாகளாவோம்.

பார்வையால் பாவிகளானோம்… கடவுளுடைய ஒளியினால் புனிதர்களாவோம்!.