இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு

எனது வங்கியில் உள்ள பணமும், கடவுளின் வங்கியில் உள்ள எனது பணமும் எவ்வளவு?

ஏசாயா 35:4-7
யாக்கோபு 2: 1-5
மாற்கு 7:31-37.

இறை இயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! எல்லோரும் நன்றாக இருக்கின்றீர்களா?

இன்று நாம் ஆண்டின் 23-ம் ஞாயிரை சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் சமூதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களிடம் நாம் காட்டும் கரிசனையும், நம்முடைய பார்வையும் எப்படி பட்டதாக இருக்கின்றது என்றும், மேலும் நம்மைப்போன்றவர்களிடமும், நம்மை விட பணத்திலும், பதவியிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவர்களிடம் நாம் காட்டும் மரியாதை எப்படிப் பட்டதாக இருக்கின்றது என்று சிந்திக்க கடவுள் நம்மை அழைக்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய யாக்கோப்பு இவ்வாறு “நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள் என்கின்றார்”. மேலும் அவர் “பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, "அங்கே போய் நில்" என்றோ அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்" என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என்று கூறுகின்றார். இப்படி யாரெல்லாம் தீய எண்ணத்தோடு மற்றவர்களை மதிப்பிடுகின்றீர்களோ அவர்கள் அனைவரையும் முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா வழியாக எச்சரிக்கின்றார்.

இதோ, ஏழைகளின் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து யாரையெல்லாம் நசுக்குகின்றீர்களோ அவர்களை விடுவித்து, உங்களை தண்டனை தீர்புக்கு உள்ளாக்குவார் என்கின்றார்.
இன்று கடவுள் நம்மை விடுவிக்கப்போகின்றாரா அல்லது நம்மை பழிதீர்க்க வருகின்றாரா?

இன்று நம்முடைய சமூதாயத்தில் நாம் யாரையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கி வைக்கின்றோம்? குறிப்பாக முதியவர்கள், வயதான பெற்றோர்கள், நோயாளிகள், ஏழைகள், ஜாதி அடிப்படையில் பிற்ப்பட்டவர்கள், என்று பலரை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி கடவுளின் சாயலாக உங்களைப் போலவும் என்னைப் போலவும் படைக்கப்பட்ட மனித இனத்தை அவர்களிடம் இருக்கும் ஒருசில குறைகளை வைத்து நாம் ஒதுக்கி வைக்கின்றோம். ஆனால் அதே வேளையில் சமூதாய அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களை நம்மை விட மேலாக ஒருபடி அவர்களுக்கு மரியாதையும் அன்பையும், விசுவாசத்தையும் காட்டி வருகின்றோம். இதைப் போலத்தான் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் சரி, புதிய ஏற்பாட்டு காலத்திலும் சரி, நோயளிகள், உடல் குறைபாடு உள்ளவர்களான கண், காது, குறைபாடு உடையவர்களையும், தொழுநோயளிகளையும் யூத சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்தது. இப்படிப்பட்ட மக்களை கடவுள் பழிதீர்க்க வருகின்றார் என்று முதல் வாசகமும், நற்செய்திவாசகத்தில் இயேசு அவர்களிடம் அன்பும் கரிசனையும் காட்டுவதைப் பார்க்கலாம். இன்று நம்முடைய கனிவும் கரிசனையும் யாரிடத்தில்? எழைகளிடமா? பணக்காரர்களிடமா? நம்முடைய மனநிலை உலகை சார்ந்தாக இருக்கின்றதா? அல்லது கடவுளை சார்ந்தாக இருக்கின்றதா என்ற சிந்திப்போமா?

ஒருமுறை இந்த மண்ணுலகில் உள்ள மக்களின் உண்மையான தர்ம நெறி பற்றி அறிய விரும்பிய கடவுள் ஒரு பிச்சைக்காரன் போல வேடமிட்டு ஒரு நகரத்திற்குச் சென்று அங்கு பிச்சை எடுக்க தொடங்கினார். முதலில் அங்கு உள்ள செல்வந்தர்கள் வாழும் பகுதிக்கு சென்றார். ஆனால் ஒருவரின் வீடு கூட திறந்திருக்கவில்லை. கடவுளும் அம்மா… அம்மா… என்று கத்தி பார்த்துவிட்டு அங்கிருந்து நடுத்தர மக்கள் வாழும் பகுதிக்கு சென்றார்.

அங்குள்ள பல வீடுகளுக்கும் ஏறி இறங்கினார் ஆனால் அனைவரும் கூறிய ஒரே பதில் இல்லை என்பதே. என்னடா இது இவ்வளவு பெரிய ஊரில் பசிக்கு உணவளிக்க கூட ஒருவர் இல்லையா? என நினைத்து இறைவன் கவலை கொண்டார். அதே ஊரில் பல ஏழை மக்களும் வாழத்தான் செய்தனர். அந்த ஏழைகளின் கூட்டத்தில் தினமும் பிச்சை எடுத்து தன் பசியை போக்கிக்கொள்ளும் ஒரு தொழு நோயாளியும் இருந்தார்.

அந்த ஊரின் ஒட்டுமொத்த கழிவு நீரும் ஆற்றில் கலக்கும் ஒரு பகுதியில் 4 நாய்கள் அந்த தொழு நோயாளியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தது. அந்த நாள் முழுக்க தான் எடுத்த பிச்சையின் மூலம் கிடைத்த உணவை அந்த தொழு நோயாளி அங்கு கொண்டு வந்தார். பின் அதை ஐந்து பங்குகளாக பிரித்தார். அதில் நான்கு பங்கை நாய்களுக்கு போட்டுவிட்டு மீதம் உள்ள ஒரு பங்கை தான் உண்பதற்காக எடுத்து வைத்தார்.

அப்போது அங்கு பிச்சைக்காரன் வேடத்தில் வந்த கடவுள் அவரிடம் பிச்சை கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல் தனக்கு வைத்திருந்த உணவை அவர் இறைவனிடம் நீட்டினார். இதை கண்டு அதிர்ந்து போன இறைவன், என்னை யார் என்று தெரியுமா? என வினவினார். நீங்கள் யாராக இருந்தால் என்ன? முதலில் உங்கள் பசியை போக்கிக் கொள்ளுங்கள் மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார் அந்த தொழுநோயாளி.


இறைவன் மீண்டு அதட்டலாக, என்னை யார் என்று தெரியுமா? என்றார். அந்த தொழு நோயாளி சிரித்தபடியே, நீங்கள் கடவுள் தானே என்றார். இந்த பதிலை எதிர்பார்க்காத இறைவன் வாயடைத்து போனார். அப்போது அவர் ஒரு தொழு நோயாளியின் அருகில் வரவே மக்கள் அஞ்சுவர். அப்படி இருக்கையில் சீல்பிடித்த என் கை கொண்டு பிசையப்பட்ட உணவை ஒருவர் கேட்கிறார் என்றால் அவர் நிச்சயம் இறைவனாக தான் இருக்க முடியும். ஏன் என்றால் இறைவனை பொறுத்தவரையில் அனைவருமே அவர் பிள்ளைகள் தான். அவருக்கு பாரபட்சம் எல்லாம் கிடையாது. அதனால் நீங்கள் இறைவன் தான் என்றார். இறைவன் மீது அந்த நோயாளி கொண்ட புரிதலை கண்டு கடவுள் மெய் சிலிர்த்து போனார். ஆம் பிரியமானவர்களே கடவுளின் பார்வையில் அனைவரும் சமம். ஆனால் மனிதர்களாகிய நம்முடைய பார்வையில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள்.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் “என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா?” என்று சொல்லி நம்மை சுய ஆய்வுக்கு உட்பட கடவுள் அழைக்கின்றார்.

பிரியமானவர்களே சமூதாயத்தில் ஏழைகளாக இருப்பவர்கள் கடவுளின் பார்வையில் மிகப்பெரிய பணக்காரர்கள் எனவும் சமூதாயத்தில் பணக்காரர்களாக இருப்பவர்கள் கடவுளின் பார்வையில் ஏழைகள் என தூய யாக்கோப்பு நமக்கு குறிப்பிடுகின்றார். இன்று
நம்முடைய சமூதாயத்தில் ஏழைகள் என்பவர்கள் யார்? இது நாம் அனைவரும் அறிந்ததே! அதாவது வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் சமூதாயத்தில் ஏழைகள் என நாம் வரைமுறை வகுத்துள்ளோம். இந்த ஏழைகளின் நம்பிக்கையாக இருப்பது கடவுளின் கருணை மட்டுமே. இவர்கள் கடவுளை முழுமையாக நம்பி அவரது பராமரிப்பில் அன்றாடம் வாழ்கின்றனர். அன்றாடம் தெருவோரமும், வீதிகளில் வாழும் மனிதர்களின் வாழ்வில் நாம் காணலாம். ஏழைகள் கடவுளை அன்பு செய்வதற்கு நாம் பல உதாரணங்களை சொல்லலாம். ஏன் நம்மில் ஒருசிலருடைய வாழ்வும் அப்படித்தான் இருக்கின்றது. கடவுளையே முழுமையாக நம்பி வாழ்கின்றோம். யாரெல்லாம் கடவுளை நம்பி வாழ்கின்றீர்களோ அவர்களுக்கு நிச்சயம் கடவுளின் கருணை உண்டு.

சமூதாயத்தில் பணக்காரர்கள் யார்? யாரிடம் பணம், பதவி, பட்டம் இருக்கின்றதோ அவர்கள் பணக்கரர்கள் ஆவர். எளிதாக சொல்லவேண்டுமானால் “தன்னுடைய தேவைக்கு அதிகமாக யாரிடம் சொத்தும், செல்வமும் இருக்கின்றதோ அவர்களே பணக்காரரர்கள்”. இன்று நம்மிடம் தேவைக்கு அதிகமாக ஏதாவது இருக்கின்றதா? அப்படி இருந்தால் நாமும் பணக்காரர்கள் தாம்!.

இன்று இந்த பணக்காரர்கள் குடும்பத்தில் இருக்கின்றனர், ஓரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் கூட சொத்துகளுக்காக உறவுகளை ஊதாசினப்படுத்தும் மக்கள், இந்த பணக்காரர்கள் சமூதாயத்தில் இருக்கின்றனர் தான் உயர வேண்டுமென்பதற்காக எப்பாடுபட்டும் அடுத்தவரை புறந்தள்ளி அவரை மிதித்து மேலே வரும் மனிதர்கள் ஏராளம், இந்த பணக்காரர்கள் திருச்சபையிலும் இருக்கின்றனர் கடவுளுக்காக அனைத்தையும் முற்றிலும் துறந்துவிட்டேன் என கூறிக்கொண்டு கடவுளின் பெயரைச் சொல்லி ஓவ்வொரு வழிபாட்டிலும் காசு காசு என கூப்பாடுபோடும் போதகர்கள் எத்தனை பேர். இப்படிப்பட்ட இந்த பணக்காரர்களைப் பார்த்து இயேசு “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்துவிடும் ஆனால் விண்ணரசில் செல்வந்தாகள் நுழைவது கடினம்” என்று இவர்களைப் பார்த்துதான் கூறுகின்றார்.

ஆக தங்களது அன்றாட தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் மனிதர்கள் அனைவரும் சமூதாயத்தில் பணக்காரர்களாக இருக்கலாம் ஆனால் கடவுளின் பார்வையில் அவர்கள் அனைவரும் ஏழைகள் என்று கூறுகின்றார் தூய யாக்கோப்பு. காரணம் இந்த பணக்காரர்களின் நம்பிக்கை எங்கு இருக்கின்றது. அவர்கள் சேர்த்து வைத்த சொத்து, செல்வம் இவற்றில் தான் இவர்களது நம்பிக்கை இருக்கின்றது. உதாரணமாக போதகர்களின் நம்பிக்கை பக்தியான வழிபாடுகளை நடத்துவதைக்காட்டிலும் ஆலயத்தில் இருக்கும் 10உண்டியல்களில் தான் அவர்களது நம்பிக்கை இருக்கின்றது, குடும்பத்திலும், சமூதாயத்திலிலும் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன என்பதைப் பொருத்தே அவர்களின் நம்பிக்கையும் மாறுபடுகின்றது. ஏன் இன்றைய நாட்களில் நீதிமன்றங்கள் கூட உண்மையை பேச மறுத்து காசுக்கு விலைபோவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகின்றது. இவர்கள் அனைவரும் கடவுளை விட்டு வெகுதூரத்தில் இருக்கின்றனர். மத்தேயு நற்செய்தியில் இயேசு
“எவரும் இருதலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது” என்கின்றார். செல்வமும் கடவுளும் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றன. இன்று நாம் யாருடைய பார்வையில் செல்வந்தர்கள்? உலகத்தின் பார்வையிலா? கடவுளின் பார்வையிலா? சிந்திப்போம்.

பணக்காரர்கள் தங்கள் பணத்தினால் சமூதாயத்தில் செல்வர்கள்
ஏழைகள் தங்களது குணத்தினால் கடவுளிடத்தில் செல்வர்கள்
பணக்காரர்கள் தங்களிடம் உள்ளதை பகிர்ந்தளிக்க யோசிப்பர்
ஏழைகள் பகிர்ந்தலிப்பதில் தான் அவர்களது வாழவே இருக்கின்றது.
பணக்காரர்கள் தங்களது பணத்தில் நம்பிக்கை வைக்கின்றனர்
ஏழைகள் கடவுளிடத்தில் நம்பிக்கை வைக்கின்றனர்.
இயேசுவின் பார்வை ஏழைகளிடத்தில் இருந்தது. ஆனால் மனிதர்களின் பார்வை அன்றும், இன்றும் பணக்காரர்களிடத்தில் இருக்கின்றது.

இன்றைய சூழலில் நாம் அனைவருமே கடவுளிடம் கையேந்துபவர்களாக நாம் இருக்கின்றோம். அதாவது ஆலயத்தின் வெளியில் ஏழைகள் கையேந்தி பிச்சை கேட்கின்றர், ஆனால் ஆலயத்தினுள் பணக்காரர்கள் கையையேந்தி கடவுளிடம் பிச்சை கேட்கின்றனர். ஆக கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தாம். பிறகு ஏன் நமக்குள்ளே ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், என்ற பலவிதான பாகுபாடுகள். எனவே கடவுளிடம் கையேந்தும் நாம் நம்மிடம் கையேந்துபவர்களை கரிசனையோடு நோக்குவோம், கருணை உள்ளத்தோடு உதவி செய்வோம். கடவுளும் நமக்கு அவரது கருணையை நமக்கு வெளிப்படுத்துவார். ஏழைகளுக்கு செய்யும் உதவி கடவுளின் வங்கியில் பணம் போடுவதற்கு சமம். என்னை ஜெயிக்க வைத்தால் உங்களது வங்கியில் பணம் போடப்படும் என்றார் ஒருவர். இன்று நமது வங்கிகளில் நமது இருப்புத்தொகை எவ்வளவாக இருக்கின்றது? அதேவேளையில் கடவுளின் வங்கியில் நம்முடைய இருப்புத்தொகை எவ்வளவாக இருக்கின்றது?

என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொண்டுள்ளார். நம்மையும் கடவுள் தேர்ந்து கொள்ளவேண்டுமானால் கடவுளது வங்கியில் உறுப்பினர்கள் ஆவோம். ஏழைகளுக்கு செய்யும் உதவி கடவுளின் வங்கியில் பணம் போடுவதற்கு சமம். நான் இப்போது எனது வங்கி கணக்கை கடவுளின் வங்கியில் தொடங்கப் போகின்றேன். நீங்கள்…