இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு

கடவுளின் கட்டளைகளும் மனிதர்களின் மரபுகளும்; நாம் கிறித்தவர்களா? கத்தோலிக்கர்களா?

இணைச்சட்டம் 4:1-2,6-8
யாக்கோபு 1:17-18,21-22,27
மாற்கு 7:1-8,14-15,21-23.

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! எல்லோரும் நலமா?
கடவுள் மனிதர்களுகளுக்கு கொடுத்த கட்டளைகள் எத்தனை?

இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி சீனாய் மலைக்கு வந்த சில நாட்களில் கடவுள் மோயீசன் வழியாக மனிதருக்கு கொடுத்த கட்டளைகள் 10. காலப்போலக்கில் இந்த 10 கட்டளைகளை வைத்துக்கொண்டு 613 கட்டளைகளாக இந்த பரிசேயர்கள் மாற்றிவிட்டனர். இதுவே அவர்களின் மரபாகவும் மாறிப்போய் விட்டது. ஆக கடவுளின் கட்டளைகள் ஒருபுறமும், மனிதர்களின் மரபுகள் மற்றொருபுறமும் என இஸ்ராயேலரின் சமுதாயத்தை வழிநடத்தியது. இன்று ஆலயம் வந்துள்ள நமக்கு கடவுளின் கட்டளைகள் முக்கியமா? அல்லது மனிதர்களின் மரபுகள் முக்கியமா? என்று சிந்திக்க உங்களை அழைக்கின்றறேன்.

பிரியமானவர்களே மனித வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு மரபுகள் உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்வும் அமைந்திருந்தது.


அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஒரு ஆலயத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரத்தில் குடியிருந்த ஒரு பிச்சைக்காரர் அழகுசாமி என்பவர் அந்த ஆலயத்திற்குள் உள்ளே நுழைந்தார். அது மிகவும் பாரம்பரியமான ஆலயம். ஆலயத்திற்கு வரும் அனைவரும் கோட் சூட் அணிந்து இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. அழகுசாமி உள்ளே வருவதை பார்த்த கோவில் கண்காணிப்பாளர் அழகுசாமியை தடுத்து நிறுத்தி “நீங்கள் இங்கே வரக்கூடாது, இந்த சர்ச்சுக்கு வர்றவங்களுக்குனு சில உடைகள் இருக்கு, அத போட்டுகிட்டு வந்தா தான் உள்ள அனுமதிப்போம்” என்று கூறினார். அதை கேட்ட அழகுசாமி, திரும்பவும் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

மீண்டும் அடுத்த வாரமும் இதே கதை, திரும்பவும் கோவில் கண்காணிப்பாளர் அவரை பார்த்து,“இந்த சர்ச்சுக்கு எந்த உடை அணிந்து வர வேண்டும் என்று இயேசு உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்”. தெரியாதுங்களே!” என்று கூறிவிட்டு அழகுசாமி திரும்பி சென்றுவிட்டார்.
அடுத்த முறையும் அழகுசாமி தன்னிடம் அழுக்குச் சட்டையை அணிந்துகொண்டு வந்தார். அப்போது அந்த கோவில் கண்காணிப்பாளர் மீண்டுமாக தடுத்து,
“என்ன இயேசு உன்னிடம் எதுவும் கூறவில்லையா? என்று கேட்டார்
“ஓ! இயேசுவா அவர பார்த்தேன்!”
“ஓ! இயேசுவ பாத்தியா, அப்டினா இங்க என்ன உடை அணியனும்னு அவர் சொல்லி இருப்பாரே” என்றார்

“இல்லிங்க, அவரையும் ரொம்ப வருஷமா இந்த சர்ச்சுக்குள்ள விடலயாம், அதான் அவருக்கும் எந்த உடை அணியவேண்டும் என்று தெரியாதுன்னுட்டார்” என்றார் அழகுசாமி.


அன்புக்குரியவர்களே! கடவுள் எங்கும் நிறைந்திருக்கின்றார். அவர் தூணிலும் இருக்கின்றார். துரும்பிலும் இருக்கின்றார் என்று எவ்வளவுதான் படித்திருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் நமக்கு என்று ஒருசில சம்பிரதாயங்களையும், மரபுகளையும் நாம் தூக்கிபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் மீண்டும் கடவுளிடமே திரும்பி போவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் நமக்கு எதை பின்பற்றினால் கடவுளை அடையலாம். கடவுளிடம் சென்றடைய நாம் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கவேண்டுமா? அல்லது மனித மரபுகளை பின்பற்ற வேண்டுமா?

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள், தன்னுடைய கட்டளைகளை முழுமையாக பின்பற்ற வேன்டும் என்று கூறுகின்றார். மோயீசன் மக்களைப் பார்த்து “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகின்றேன்; அவற்றை பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்டு சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். (6) நீங்கள் அவற்றை பின்பற்றி நடக்கும்போது அதுவே மக்களினங்களின் முன்னிலையில் உங்களுக்கு ஞானமும், அறிவாற்றலுமாய் விளங்கும்” என்று கூறி 10 கட்டளைகளைத் தந்து அவற்றை முழுமையாக கடைபிடிக்க கடவுள் அவர்களை பணிக்கின்றார். ஆக கடவுளின் கட்டளைகளை கடைபிடிப்பது மிக அவசியம் என்பதை முதல் வாசகம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

அப்படியானால் மனித மரபுகள் எங்கிருந்து வந்தன?. அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன? கடவுளின் கட்டளைகள் இருக்கும் போது மனித மரபுகள் ஏன் சமூதாயத்தில் நுழைந்தன?

மனித மரபுகள் என்பது மனித குலத்தின் அல்லது ஒரு சமூதாயத்தின் வளர்ச்சிக்காக மக்களால் வரையறுக்கப்பட்ட ஒருசில சட்டங்கள். இந்த மரபுகள் அனைத்து சமூதாயத்திலும் வேருன்றி காணப்படுகின்றன. இந்த சட்டங்கள் தானாக தோன்றியது அல்ல. மறாக அந்த சமூதாயத்தில் மக்கள் பின்பற்றி வந்த கடவுள் கொள்கைகளையும், கட்டளைகளையும் தங்களது நடைமுறை வாழ்விற்கு ஏற்ப மனித உறவுகளை மேம்படுத்த உருவாக்கப்பட்டது தான் மரபுகள். அந்த மரபுகள் மூதாதையர்களால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களும் அதை பின்பற்றி அவர்களின் வழிவந்தோருக்கு அவற்றை கற்பித்து காலப்போக்கில் அதுவே அச்சமுதாயத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது தான் மரபுகள். இன்னும் எளிதாக கூறவேண்டுமானால் மனித மரபுகள் என்பது ஒரு அகராதி டிக்ஸ்னரி போன்றது. யூதசமூதாயத்தில் கடவுளின் கட்டளைகளுக்கு இந்த மனித மரபுகள் விளக்கம் அளித்து வந்தது நமது தமிழ் சமூதாயத்தையும் சேர்த்து.

உதாரணமாக தமிழர்களின் மரபு என்ன?
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது தமிழர் மரபும் தமிழ்ப் பண்பாடும் ஆகும் – மனிதர்களுக்கு என்று சொந்த அல்லது நிரந்தர நிலம் ஏதும் கிடையாது. எல்லா ஊர்களும் எல்லோருக்கும் சொந்தம். யார் எங்கு வேண்டுமானும் சென்று வாழலாம்.! அதனால்த்தான் தமிழர்கள் திரைகடலோடியும் திரவியம் தேடினர். அங்கு தாங்கள் கண்ட நற்பண்புகளை தமிழ்ப் பண்பாட்டுடன் இணைத்தனர். அதுபோலவே வந்தாரை வரவேற்கும் தமிழர்கள் – வடக்கிலிருந்தும், கடல்தாண்டி வந்தோரையும் தமிழர்கள் வரவேற்றனர். அந்தப் மரபும் தமிழ்ப் பண்பாடுடன் இணைந்து தமிழ் மரபுக்கு மெருகூட்டியது. தனிமரம் தோப்பாகாது – எனவே தமிழர்கள் கூடிவாழ்ந்தனர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சேர்ந்து வாழ்தல் தமிழர் மரபோடு இணைந்துவிட்டது. ஆக தமிழர்களின் மரபு அவர்களின் வாழ்வோடு இரண்டர கலந்திருந்தது. தமிழர்களின் மரபு மனிதர்களைப் பக்குவப்படுத்தியது, ஓன்றித்து வாழ வழிவகைச் செய்தது, அடுத்தவரை மதிக்கவும், மரியாதை செலுத்தவும் கற்றுக்கொடுத்தது.

ஆனால் யூதர்களின் மரபுகள் மனிதர்களுக்கு சுமையாக இருந்தது. காரணம் கடவுளின் கட்டளைகளை மீறுவதைக்காட்டிலும் மரபுகளை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டடது. இதற்கு விவிலியத்தில் பல உதாரணங்கள் உண்டு. குறிப்பாக இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் உண்கின்றனர். இது பரிசேயர்களுக்கும், யூதர்களுக்கும், மிகப்பெரிய பாவமாக தென்படுகின்றது. எனவேதான் இயேசு தெளிவாக கூறுகின்றார். “நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்றும் மேலும் அவர் "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்” என்கின்றார்.

ஓய்வுநாள் கடவுளுக்கூறிய நாள் அந்நாட்களில் மனிதர்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. உதாரணமாக ஓய்வு நாட்களில் இயேசு நோயாளிகளை குணப்படுத்துகின்றார், இறந்து போனவர்களுக்கு வாழ்வைக் கொடுக்கின்றார், பசித்தோருக்கு உணவு கொடுக்கின்றார். இப்படியாக தேவையில் இருப்போருக்கும், கடவுளே எனக் கூப்பிடுவோருக்கும் இயேசு அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்கின்றார். ஆனால் இயேசுவின் இந்த மனித நேயச் செயல் பாவமாக கருதப்பட்டது. யூதர்களின் மரபுகளை மீறுபவர்களை அச்சமூதாயத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

மேலும் இன்றைய நற்செய்தியில்
"உன் தந்தையையும் தாயையும் மதித்துநட" என்பது கடவுள் கொடுத்த கட்டளை. தந்தையையோ, தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்" என்று மோசே இஸ்ராயேல் மக்களுக்கு கற்பித்திருந்தார். காலப்போக்கில் பரிசேயர்கள் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, "நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது "கொர்பான்" ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று" என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை என்கின்றார் இயேசு.

நம்முடைய தமிழ் மரபில் பெற்றோர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். எனவே தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோர்களை மிக உயர்வாக மதித்து வந்தோம். அவர்களின் வயதான காலத்தில் அவர்களோடு இருந்து பணிவிடை புரிய வேண்டும் என தமிழ் மரபு நமக்கு சொல்லிக் கொடுத்தது. தமிழர்களின் மரபு கூடி வாழ்தல், கடைசி மூச்சுவரை ஏன் இறந்த பின்பும் பெற்றோர்களுக்கு செய்யக்கூடிய கடமைகள் மகன்களுக்கு நிறைய உண்டு என்பதை வழியுருத்தியது நமது தமிழ்ச் சமூதாயம். ஆனால் யூதர்களின் மரபில் ஒரு மகன் தன்னுடைய தாய் தந்தையரைப் பார்த்து “கொர்பான்” என சொல்லி விட்டால் அந்நேரமுதல் அவர்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள். எனவே மகன் பெற்றேர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. ஆக பெற்றோர்கள் தனித்து விடப்படுவர். தங்களுடைய சுயலாபத்திற்காக பெற்ற தாய்தந்தையருக்கு செய்ய வேண்டிய பொறுப்புகளிலிருந்து மகன்கள் விலகிக்கொள்வர்.

இப்படி கடவுளின் கட்டளைகளை மீறி மனித மரபுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த செயலை இயேசு கண்டிக்கின்றார். "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள் என்கின்றார் இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினார். ஆம் பிரியமானவர்களே கடவுள், மனிதர்கள் நல்ல ஒழுக்கத்தோடும், ஒருவருக்கொருவர் சகோதர அன்பிலும் வாழவேண்டும் என நினைத்து அவர்களுக்கு கட்டளைகளைக் கொடுத்தார். அதைப்போலவே அந்த கட்டளைகளை அடிப்படையாக கொண்டு யூதர்கள் தங்களுக்கு வேண்டிய மரபுகளை உருவாக்கிக் கொண்டனர். ஆனால் இவர்கள் உருவாக்கிய இந்த மரபுகள் காலப்போக்கில் மனிதர்களுக்கு சுமையாக அமைந்தன.

எனவேதான் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்து
மத் 23:1-4."மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தையும், மரபுகளையும் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்” என்று கூறினார்.

"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை; "குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு” என்று யூதர்களை வசைபாடுகின்றார்!

இப்போது கூறுங்கள் கடவுளை சென்றடையவும் மண்ணுலகில் நாம் வாழ்வதற்கு மனித மரபுகள் முக்கியமா? அல்லது கடவுளின் கட்டளைகள் முக்கியமா?

நேற்று என்னிடம் ஒருவர் இவ்வாறக ஒரு கேள்வியைக் கேட்டார். நாம் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமா? அல்லது கத்தோலிக்கத்தை பின்பற்ற வேண்டுமா? என கேள்வியை கேட்டுவிட்டு அவர் தன்னுடைய விளக்கத்தை இவ்வாறு அளித்தார். அவர் அளித்த பதிலை அப்படியே உங்களுக்கு அளிக்கின்றேன். கத்தோலிக்கம் கிறித்தவம் அல்ல; கிறித்தவம் கத்தோலிக்கம் அல்ல. இரண்டும் வேறு வேறு, ஆம் கத்தோலிக்கம் பாரம்பரிய காரியங்களையும், மனிதர்களால் கொண்டுவரப்பட்ட உபதேசங்களையும் அடிப்படையாக கொண்டது.

ஆனால் கிறிஸ்தவம் தேவனுடைய வார்த்தைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

சரி இரட்சிப்பை ஒரு மனிதன் அடைய என்ன செய்ய வேண்டும் என்று கத்தோலிக்க மதமும், கிறிஸ்தவமும் எப்படி போதிக்கிறது என்று பார்ப்போம். இதை வைத்தே கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.


கத்தோலிக்கம்: "குழந்தையாக இருக்கும்போதே ஞானஸ்நானம் எடுத்தால் இரட்சிப்பு” கிடைக்கும்.
கிறிஸ்தவம் : மனம்திரும்பி, ஒரே கர்த்தரை விசுவாசித்து, சீஷராகி பிறகு முழுகி எடுப்பதுதான் தேவன் சொன்ன ஒரே ஞானஸ்நானம் (மத்28:19(அப் 2:38)(எபே 4:5) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் (மாற் 16:16).

கத்தோலிக்கம்: பாதரியாரிடம் போய் பாவ சாங்கீர்த்தனம், பாவ அறிக்கை செய்தால் பாவமன்னிப்பு மீட்பு கிடைக்கும்.
கிறித்தவம்: கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். (ரோமர் 10:9-10).

கத்தோலிக்கம்: பாவிகளுக்க மரியாள் வேண்டுதல் செய்வார், பரிந்து பேசுவார் எனவே பாவிகளாக இருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், என்று மரியாளை நோக்கி ஜெபிக்க வேண்டும்.
கிறிஸ்தவம்: என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். (1 யோவான் 2:1)

கத்தோலிக்கம்: மரியாள் மற்றும் புனிதர்கள் வழியாக இரட்சிப்பை அடையலாம், பரலோகம் போகலாம்.
கிறிஸ்தவம்: இயேசுவே வாசல், அவர் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9). அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.(யோவான்14:6).

கத்தோலிக்கம்: நமது பாவங்களுக்காக பரிந்து பேச, நம் மரண நேரத்தில் நம்மை இரட்சிக்க மரியாள், அந்தோனியார், என்று பல புனிதர்களின் நாமம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்தவம்: இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். (அப்போஸ்தலர் 4:12)

கத்தோலிக்க உபதேசங்களை கடைபிடிப்பவன் இரட்சிப்பை பேற முடியாது, நிச்சயம் பரலோகம் போகவே முடியாது, கர்த்தருடைய உபதேசங்களை கடைபிடிப்பவன் நிச்சயமாக இரட்சிப்பை அடைவான், நித்திய நித்தியமாய் அவரோடு வாழ்வான்.

கத்தோலிக்கம்: கத்தோலிக்க திருச்சபையே உங்களை பரிசுத்தமாக்கும், புனிதமாக்கும் திருச்சபையும் போப்பாண்டவரும் என்ன சொல்கிறார்களோ அவைகள் தான் சத்தியம்.
கிறித்தவம்: தேவனுடைய சத்தியமே நம்மை பரிசுத்தமாக்கும்; தேவனுடைய வசனமே சத்தியம்.(யோவான் 17:17).
கத்தோலிக்கம்: திருச்சபை சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல், மறுப்பு தெரிவித்தால், அவர்களை திருச்சபையை விட்டு ஒதுக்கி புறம்பே தள்ளி வைப்போம், ஏன் கல்லறையில் கூட இடம் கிடையாது.

கிறிஸ்தவம்: என்னைத் தள்ளி என் "வார்த்தைகளை" ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். (யோவான் 12:48) பரலோகத்தில் இடம் கிடையாது என்று பல விளக்கங்களை அளித்து என்னிடம் வாதாடினார்.
இப்போது எது முக்கியம் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள், கல்லறையில் இடமா ? இல்லை பரலோகத்தில் இடமா? நரகத்தில் இருப்பதா? இல்லை மோட்சத்தில் இருப்பதா? கத்தோலிக்கத்தில் இருப்பதா ? கர்த்தரோடு இருப்பதா ? நீங்களே முடிவு எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். பிரியமானவர்களு உங்களுடைய பதில் என்ன? இன்று நீங்கள் கத்தோலிக்கர்களாக இருக்க ஆசையா? அல்லது கிறிஸ்தவர்களாக இருக்க ஆசையா?

அன்புக்குரியவர்களே கிறித்தவம் என்பது கிறிஸ்துவின் போதனைகளை உள்ளடக்கியது. இயேசு கிறிஸ்து கிறிஸ்தவத்தை தோற்றுவிக்கவில்லை. கிறித்தவம் என்ற வார்த்தையே தூய பவுல் கொடுத்ததுதான். யார் கிறித்தவர்கள்? என பவுல் கூறுகின்றார் அந்தியோக்கியாவில் தான் சீடர்கள் முதன்முதலாக கிறித்தவர்கள் என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றனர். அ.பணி 11:26.

ஆனால் கத்தோலிக்கம் என்பது என்ன? கத்தோலிக்கம் என்ற வார்த்தையை புனித அந்தியோக்கு இன்னாசியார் 107 வது ஆண்டிலே அறிமுகப்படுத்துகின்றார். கத்தோலிக்கம் என்பது உயிருடன் எழுப்பட்ட இயேசு கிறிஸ்து பின்பற்றி வந்த ஒரு குட்டித் திருச்சபை. இந்த குட்டிதிருச்சபையைக்கு பேதுருவை தலைவராக இயேசுவே நியமிக்கின்றார் மத் 16:19-ல் பேதுருவைப் பார்த்து இயேசு “நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்று சொல்லி ஒரு திருச்சபையை ஆரம்பிக்கின்றார். இயேசுவால் தூயபேதுருவை அடித்தளமாகக்கொண்டு பாறையில் கட்டப்பட்ட திருச்சபைதான் கத்தோலிக்க திருச்சபை எனவும், உரோமை கத்தோலிக்க திருச்சபை எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்த உரோமை கத்தோலிக்க திருச்சபைக்கு ஆணிவேரக இருப்பது இயேசுவின் போதனைகளும், அவர் நியமித்த 12 அப்போஸ்தலர்களின் வழியாக வந்த அப்போஸ்தலிக்க மரபும் தான் கத்தோலிக்க கிறித்தவம் என அழைக்கப்டுகின்றது. 16-நூற்றாண்டுகளாக கத்தோலிக்க திருச்சபை ஆழமரம்போல அகன்று விரிந்தது. இந்த 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மற்ற சபைகள் உரோமை கத்தோலிக்க திருச்சபையிலிருந்து தோன்ற ஆரம்பிக்கின்றன. அதிலிருந்து பிரிந்த சபைகள் தான் இன்று இருக்ககூடிய பெந்தகோஸ்தே, லூத்ரன் சபை, சர்ச் ஆப் காட் போன்ற மற்ற சபைகள். இன்று மழையில் முளைக்கும் காளான்கள் போல வளரும் அனைத்து குட்டி குட்டி திருச்சபைகளுக்கும் கத்தோலிக்கம் தான் அடிப்படை வேர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆக ஒரு கிறித்தவனுக்கு கடவுளின் கட்டளைகளும் முக்கியம். அதேவைளையில் மரபுகளும் முக்கியம்.

அன்று அந்த அப்போஸ்தலர்களின் மரபுகள் இல்லையென்றால் இன்று கிறித்தவம் இவ்வளது தூரம் வளர்ந்திருக்க முடியாது. அவை என்றோ அழிந்துபோயிருக்கும். கிறித்தவத்தை பின்பற்றுவதற்கும், அந்த போதனைகளை பிற சந்ததிகளுக்கு கற்று கொடுப்பதற்கும், அப்போஸ்தலிக்க மரபு பயன்பட்டது. இன்று அதே கிறிஸ்துவின் போதனைகளை அடித்தளமாக்கி, அப்போஸ்தலிக்க மரபுகளை உள்வாங்கி அகில உலகமெங்கும் உரோமை கத்தோலிக்க திருச்சபை உலகெங்கும் இயேசுவின் விளுமியங்களை போதித்துக் கொண்டிருக்கின்றது.

ஆக ஒரு கிறிஸ்தவனுக்கு கடவுளின் கட்டளைகளும் முக்கியம்; அதே வேளையில் திருச்சபையின் மரபுகளும் முக்கியம். பழைய ஏற்பாட்டில் கடவுள் கொடுத்த பத்து கட்டளைகளை புதிய ஏற்ப்பாட்டில் இரண்டே கட்டளைகளில் இயேசு அடக்கிவிட்டார். இந்த இரண்டு கட்டளைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை நமக்கு தெளிவாகச் சொல்வதுதான் கத்தோலிக்க மரபு. கத்தோலிக்கம் என்பது கிறித்தவத்திற்கு எதிரானது அல்ல. கிறித்தவம் தான் கத்தோலிக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பறைமீது கட்டிஎழுப்பப்பட்ட கத்தோலிக்கம் என்ற திருச்சபையை மார்டின் லூத்தரோ, கால்வீனோ, அல்லது உங்களது ஊர்களில் ஆங்காங்கே சபைகளை தோற்றுவிக்கும் மனிதர்கள் ஏற்படுத்தவில்லை மாறாக இறைமகன் இயேசுவே ஏற்படுத்தினார். அப்படி இயேசு ஏற்படுத்திய திருச்சபை வழிநடத்துபவர்கள் இயேசுவின் வழிவந்தவர்களான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இறைமக்கள்.


பிறமதத்தினர் கூறுவது என்ன? கத்தோலிக்கம் தேவையில்லை; கிறித்தவம் மட்டும் போதும் என்று கூறுபவர்களுக்காகவே இறைமகன் இயேசு மத்தேயு நற்செய்தி 5:7-ல் திருச்சட்டத்தையோ, (மனித மரபுகளை) இறைவாக்குகளையோ (கடவுளின் கட்டளைகளை) நான் அழிக்க வந்தேன் என நீங்கள் என்ன வேண்டாம். அவற்றை அழிப்பதற்காக அல்ல நிறைவேற்றுவதற்காகவே வந்தேன்.

இறைமகன் இயேசு கடவுளின் கட்டளைகளை கடைபிடித்தார். அதேவேளையில் மனிதர்களின் மரபுகளையும் மிகவும் நேசித்து கடைபிடித்தார்.

மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது என்கின்றார். இந்த இறைவார்த்தை உங்களுக்கும் எனக்கும் எப்படி ஊன்றப்பட்டது? மெசியாவாகிய இயேசு தன்னுடைய போதனைகளையும், இறைவார்த்தையையும், சீடர்களின் உள்ளத்திலே ஊன்றினார். அந்த சீடர்களின் வழிவந்தவர்களான திருத்தந்தை, குருக்கள் வழியாக நமது உள்ளத்திலே ஒவ்வொருநாளும் ஊன்றப்படுகின்றது. இப்படி நமது உள்ளததிலே ஊன்றப்பட்ட இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்துவிடாமல் அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள் என பவுல் நமக்கு எச்சரிக்கின்றார்.

ஆக கடவுள் நமக்கு கொடுத்த கட்ளைகளோடு நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தையும் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள் என பவுல் நமக்கு தெளிவுபடுத்துகின்றார். மேலும் கடவுளின் பார்வையில் எது உகந்தது தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில் துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும். கடளின் கட்டளைகளை மையமாக வைத்து மனிதருக்கு வாழ்வுதரும் மனித மரபுகளை ஏற்று வாழும்போது நாம் ஒவ்வொருவரும் தூயவர்களே.


கடவுளின் கட்டளைகளும் மனிதர்களின் மரபுகளும் நமக்கு முக்கியம் அதேவேளையில் நாம் கிறித்தவர்களா? கத்தோலிக்கர்களா? என்று பிரித்து பார்ப்பதைக் காட்டிலும் கத்தோலிக்க கிறித்தவர்கள் என்று தைரியமாக எடுத்துச் சொல்வோம். பாறையின் மீது கட்டப்பட்ட திருச்சபையில் நம்மையும் இணைத்துக் கொள்வோம்.