இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

புனித வெள்ளி

உலகைத் திருடியவன் சொர்கத்தையும் திருடிக் கொண்டான்

ஏசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16;5:7-9
யோவான் 18:1-19,42

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் இந்த கல்வாரிப் பலியில் இணைந்து இயேசுவின் மரணத்தை நம்முடைய வீட்டில் நடக்கும் மரணமாக நினைத்து, இயேசுவுக்காக கண்ணீர் சிந்தாமல் நம்முடைய பாவத்திற்காகவும், நமது பிள்ளைகளின் பாவத்திற்காகவும் மனவருந்தி மன்னிப்பு கேட்க உங்களை இத்திருப்பலிக்கு அழைக்கின்றேன்.

நாம் அனைவரும் நல்ல நிலையில் பிறக்க வேண்டுமென்பதற்காக மாட்டுதொழுவத்திலே பிறந்து, நல்ல குடும்பத்தில் நாம் வாழ வேண்டுமென்பதற்காக தன்னுடைய குடும்பத்தை துறந்து, நாம் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக தன்னுடைய அனைத்து சுகங்களையும் மறந்து, நாம் நல்ல முறையில் மரித்து அடக்கம் செய்யப்படுவதற்காக மாற்றானுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு, மனிதனோடு மனிதனாகப் பிறந்து, அனைத்து துன்பங்களையும் உங்களைப்போல என்னைப்போல அனுபவித்து, இன்று விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தன்னந்தனியாக மரித்து தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவின் பாடுகளை தியானிக்க அழைக்கின்றேன்.

தன்னுடைய இந்த கொடுரமான வேதனையிலும் கூட தந்தையே இவர்கள் அறியால் செய்கின்றார்கள் இவர்களது பாவங்களை மன்னியும் என்று மன்றாடி, தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட கள்வனைப் பார்த்து இன்று என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்ற பாரலோக இராஜ்ஜியத்தை கொடுத்த இயேசு இன்று நம்மையும் அதே வான்வீட்டிற்கு அழைத்துச் செல்ல அழைப்பு விடுக்கின்றார். தகுதியுடையோர் வான்வீட்டை உரிமையாக்கிக் கொள்ள முற்படுங்கள்.

பிரியமானவர்களே! கடந்த இரண்டு மாதங்களாக, நமது சென்னையிலும் பிற பகுதியிலும் மக்களை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கியத சம்பவம். திருடர்களின் செயல்கள். வங்கியிலே கொள்ளையடித்தவர்கள், நகைக்காக பல பெண்களை கொலை செய்த திருடர் கூட்டம், குழந்தைகளை கடத்த வந்திருக்கும் திருடர் கூட்டம் என ஒவ்வொரு நாளும் பயத்திலே வாழ்ந்த நாட்கள் அதிகம். ஏன் இன்று கூட பாருங்கள்! பணம், நகை சம்பாதிக்க அனைவரும் ஆசைப்படுகின்றோம். ஆனால் நகைகளை வெளியிலே அணிந்துவரவும், பணத்தை எடுத்து வரவும் பயந்துபோய் லாக்கரில் பூட்டி வைக்கும் மக்கள் நமது மத்தியில் ஏராளம்.


இப்படிப்பட்ட இந்த திருட்டு சம்பவங்களுக்கு மத்தயில் திருடர்கள், கள்வர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?... திருடர்கள், கள்வர்கள் என்றாலே எப்படி நல்லவர்களாக இருக்க முடியும் அவர்கள் கெட்டவர்கள் தான் என்ற நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டு விவிலியம் இயேசுவின் வலது பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட மனிதனைப் பார்த்து இவன் நல்ல கள்வன், அல்லது நல்ல திருடன் என்கிறது. இந்த திருடன் உலகில் வாழ்ந்த போது உலகை கொள்ளையடித்தான் ஆனால் தான் இறக்கும் தருவாயில் செர்கத்தையே கொள்ளையடித்து இருக்கின்றான். தீயவனாக வாழ்ந்தாலும் கடைசியில் மனம் மாறி விண்ணகத்திற்கு இயேசுவோடு செல்கின்றான்.

இன்று நாம் எப்படி வாழ்கின்றோம். நல்லவர்களாக வாழ்ந்தால் நிச்சயம் விண்ணரசில் இடம் உண்டு. ஆனால் இன்றைய உலகில் நல்வர்களாக வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அப்படியே கெட்டவர்களாக வாழ்ந்தோமானல் எப்படிப்பட்ட வழியில் விண்ணரசுக்குள் நாம் நுழையப்போகின்றோம் என சிந்திப்போம்.

நல்ல கள்வன் நமக்காக பரிந்து பேசுவாரா…
குழந்தை இயேசு பிறந்தபோது நடந்த நிகழ்வுகள். “ஏரோது அரசன் குழந்தை யேசுவைக் கொல்லத் துடிக்கிறான். அதற்காக நாடு முழுதும் உள்ள மூன்று வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொன்று விடும்படி ரகசிய ஆணை பிறப்பத்துள்ளான். உடனே குழந்தை யேசுவையும், தாய் மரியாளையும் எகிப்திற்கு கூட்டிக்கொண்டு போ” என்ற வானதூதரின் கட்டளைக்கு பணிந்தது தாய் மரியாவையும், குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்திற்கு புறப்படுகின்றார் சூசையப்பர். போகின்ற வழியில் திருக்குடும்பம் எங்காவது ஒரு இடத்தில் தங்க விரும்பினர்.

எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த ஒளிவந்த இடத்திற்கு தன் குடும்பத்தை கூட்டிச்சென்றார் சூசையப்பர். இவர்கள் அங்கு சென்ற மாத்திரத்தில் திடீரென வந்தது கள்வர் கூட்டம். தடித்த கம்புகளோடும், பயங்கர கொலைக் கருவிகளுடனும் திருக்குடும்பத்தை சூழ்ந்து கொண்டனர். அடி, குத்து, கொல்லு, வெட்டு போன்ற வெறிக் கூச்சல்களும் கேட்டன. தேவ மாதா பரிதவித்து தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டார். சூசை தன் மனைவியை ஆதரவாக அணைத்துக் கொண்டார். இந்த நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டவராய் உரத்த குரலில் சூசையப்பர்
"நில்லுங்கள்! இதோ பார் என்னிடம் பணம், காசு ஒன்றுமில்லை. நான் வியாபாரியும் அல்ல, பிழைப்பு தேடிச் செல்கிறோம். என்னையோ, என் மனைவியையோ, என் குழந்தையோ தொடாதே, விலகிச் செல்லுங்கள்" என்றார். ஆனால் இந்த ஜெரிக்கோ திருடர்கள் அக்காலத்தில் வழிப்பறி செய்வது மட்டுமல்ல, கொலையும் ஆட்கடத்தலையும் தங்கள் தொழிலாக வைத்திருந்தனர்.

இரவில் வரும் வணிகர் கூட்டத்தை மடக்க தற்காலத்தில் யானை பிடிப்பது போன்ற பதுங்கு குழிகளை வெட்டி அதன் மீது செடி, கொடிகளையும், மணிகளையும் கட்டி வைப்பர். இருட்டில் அந்த வழியேவரும் ஒட்டக வியாபாரிகள், மனிதர்கள் மற்றும் மிருகங்கள் என்று யார் வந்தாலும் இந்த பதுங்கு குழிக்குள் விழும்போது அதில் கட்டப்பட்டுல்ல மணி ஒலிக்கும். விழுந்தவர் மற்றவர் துணையின்றி மேலே எழும்பிவர முடியாது. மணியோசை கேட்டதும் கள்வர் வந்து அவர்களைத் தூக்கிவிட்டு பின் அவர்களை நையப்புடைத்து அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிடுவர். தூரத்தில் தெரியும் சின்ன விளக்குதான் அவர்களைக் கவரும் தூண்டில் முள். இப்படித்தான் திருக்குடும்பமும் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டது.

இந்த கொள்ளையரது இரக்கமற்ற செயலால் சூசையப்பரும், தேவ மாதாவும் மிகவும் மனம் நொந்து போனார்கள். அப்போது தேவதாயார் தன் குழந்தையை குளிப்பாட்ட தண்ணீர் கேட்டர்கள். அந்த கொள்ளை கூட்டத் தலைவி அவரையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு நீர் நிறைந்திருந்திருந்த கல் தொட்டிக்கு கூட்டிச் சென்றாள். குழந்தை யேசுவை குளிக்கச் செய்யும் போது உள்ளிருந்து ஒரு சிறு பையனின் அழும் குரல் கேட்டது. அம்மா, வலிக்கிறது என்று கதறினான். மாதா மரியாள் அது யார் அழுவது? என்று கேட்டார். அது என் மகன் என்றாள் அந்த தலைவி. அதற்குள் குழந்தை யேசுவை மாதா குளிப்பாட்டியிருந்தார்கள். அதற்குள் அந்த பையனே வெளியே வந்து விட்டான். அவனது தோற்றம் மிகவும் பரிதாபத்துக் குறியதாக இருந்தது. உடல் முழுவதும் செதில் செதிலாக முகம், கை கால்கள் என்று புண்கள் அதிகரித்து குஷ்ட நோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது.


அவனது தாயார், குழந்தை இயேசு குளித்த மீதமுள்ள தண்ணீரில் அவனைக் குளிப்பாட்டினாள். குழந்தை யேசு குளித்த அந்த நீர் பட்டமாத்திரத்தில் அவன் உடம்பிலிருந்த புண்கள் குணமாகி செதில் செதிலான தோல்கள் கீழே உதிர்ந்து விழுந்தன. அவன் ஒரு வினாடியில் குணமாகி வெள்ளை வெலேர் என்று நின்று கொண்டிருந்தான். தன் மகனுக்கு குஷ்டநோய் குணமான அதிசயத்தைக் கண்ட கொள்ளையர் தலைவனுக்கும் தலைவிக்கும் தலை சுற்றிப்போனது. "பாவமே வாழ்வாக, பாவமே தொழிலாக வாழ்ந்த தனக்கா கடவுள் அன்பு காட்டினார்? குஷ்டநோய் குணமாகுமா என்று இருந்த மக்களுக்கு இது பேரதிசயம் அல்லவா? ஆஹா! இவர்கள் எப்பேற்ப்பட்ட தெய்வீகப்பிறவிகள்?" என்று மனம் மாறியவர்களாய் தேவமாதவின் கால்களிலும், சூசையப்பர் கால்களிலும் விழுந்தனர். தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டினர்.

சூசையப்பர் அவர்களிடம் ஏற்பட்ட மன மாற்றத்தைக் கண்டு இனி இத்தொழிலில் ஈடுபடவேண்டாம் என அறிவுருத்தினார். திருக்குடும்பம் மீண்டும் பயணம் தொடரும் முன்பாக “தன் வாழ்நாளில் இத்தகைய கொள்ளைத் தொழிலிலோ அல்லது கொலைத் தொழிலிலோ ஈடுபடப்போவதில்லை எனவும், பிறர் அன்பில் மீதமுள்ள நாட்களிள் ஈடுபடுவதாவகவும் திருக்குடும்பத்திடம் வாக்களித்தனர்”. தலைவன் செய்த சத்தியம் அவன் கூட்டத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சமயத்தில் திருக்குடும்பம் அவர்களிடமிருந்து விடை பெற்றது. அப்போது தலைவன் கூறினான். "ஐயா பெரியவரே, தாங்கள் எப்பொதும் எங்களை மறக்கவேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டான் .

அதன்பிறகு திருக்குடும்பம் எகிப்தில் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் வசித்தனர். அந்த நாட்களில் மீண்டும் திருக்குடும்பம் கள்வர்களின் கையில் சிக்கிக் கொள்கின்றது. இப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞன் இயேசுவின் அழகிய முகத்தை பார்த்த பிறகு அவரை கொள்வதற்கு மனமில்லாதவராய் கள்வரின் கையில் இருந்து யாருக்கும் தெரியா வண்ணம் திருக்குடும்பத்தை விடுதலை செய்கின்றன். அப்போது அந்த இளைஞன் ஐயா நாங்கள் எங்களது பெற்றோர்களை இழந்து தவிக்கின்றோம். அந்த நிலைமை உங்களது குழந்தைக்கு வரக்கூடாது. எனவே நீங்கள் யாருக்கும் தெரியாமல் தப்பிச் செல்லுங்கள். அந்நேரத்தில் பிற்காலத்தில் எனக்கு இரக்கம் காட்ட வாய்ப்பு நேர்ந்தால் என்னை மறக்கவேண்டாம் என திருக்குடும்பத்தை வழியனுப்பி வைக்கின்றான்.

இப்போது மீண்டும் வானதூதர் சூசைக்கு தோன்றி எகிப்தை விட்டு மீண்டும் இஸ்ரேலிலுள்ள நசரேத்தூர் செல்லும்படி கூறினார்.
“என் மகனை மீண்டும் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டேன்" என்னும் மறைநூல் வாக்கு இவ்விதமாய் நிறைவேறிற்று. சூசையப்பரும் உடனே நசரேத்தூருக்கு பயணம் துவங்கினார். அவர்கள் பலாஸ்தின நாட்டிளுள்ள காசா என்ற பட்டிணத்திற்கு வந்த போது சூசையப்பரை கடைவீதியில் பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் அணுகி "ஐயா பெரியவரே, என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா? தாங்கள் என்னை மறக்கவேண்டாம்" என்ற கூறினேனே என்றார். சூசையப்பரும் அவரை நினைவு கூர்ந்தவராய், "ஆமாம் ஐயா, உங்களை நான் மறக்கவில்லை. உங்கள் மனைவி, குழந்தைகள் நலமா?" என்று நலம் விசாரித்தார்.

அப்போது அவர் கூறினார்
"ஆம் ஐய்யா அனைவரும் நலமே. நீங்கள் என்னை மறவாமலிருந்ததற்கு மிக்க நன்றி. என் மனைவி மிகவும் மாறிவிட்டாள். நாங்கள் அன்று உங்களுக்கு கொடுத்த வாக்கின்படி எங்கள் பழைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு புண்ணிய வாழ்வில் மாறிவிட்டோம். என் மனைவி எப்பொதும் ஜெபம், தபம் என்று தன்னை வருத்திக் கொண்டு வெளி மனிதர் யாவரையும் பார்க்கப் பிடிக்காமல் எப்பொழுதும் வீட்டில்லேயே அடைந்து கிடக்கின்றாள். நாங்கள் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்தபின் நாங்கள் பெரிய ஆபத்தை சந்தித்தோம். நாங்கள் அன்று கள்வர் தொழிலை விட்டுவிடுவதாக செய்த சத்தியம் எங்கள் தலைவனுக்கும், மற்ற கள்வர்களுக்கும் பிடிக்கவில்லை. நாங்கள் திருந்திவிட்டோம் என்றால் யார் எங்களை நம்பப்போகிறார்? எந்த அரசாங்கமாவது நம்புமா? உன்னையும் நாங்கள் இனிமேல் நம்பப்போவதில்லை. நீ வேண்டுமானால் போய்க்கொள். நீ போய் எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதபடிக்கு உன் பிள்ளைகள் இருவரையும் நாங்கள் பணயமாக வைத்துக் கொள்வோம்" என்று சொல்லி எங்களது பிள்ளைகளை தூக்கிக்கொண்டர். வேறு வழி இல்லமல் என் மனைவியை மட்டும் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். என் பிள்ளைகளை நினைத்தால் தான் மிகவும் கவலையாக உள்ளது. இன்றுவரை அவர்கள்கள் கள்வர்களோடு சேர்ந்து இருக்கின்றனர் என்றனர். திருக்குடும்பாம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நிச்சயம் உங்களது குழந்தையில் ஒருவனுக்கு கடவுளின் அனுகிரகம் கிடைக்கும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு நாசேரேத்துக்கு வந்து விட்டனர்.

அதன்பிறகு எங்களை மறக்கவேண்டாம் என்ற குரல் ஒலி கல்வாரி மலையில் மீண்டும் எதிரொலித்தது. அதாவது யேசுநாதர் கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த ஒலித்தது. ஆம். என்னை மறக்கவேண்டாம் என்று கதறியவன் நல்ல கள்வனே. அப்போது யேசுநாதருக்கு இவ்வுலக வாழ்க்கை இன்னும் ஒரு சில நிமிடங்களே என்று நன்றாகத் தெரிந்திருந்தது.

ஆஹா தீஸ்மூஸ், நீ யார் என்று எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்? அன்று கள்வர் கூட்டத்தில் நீ சிறு பையனாக குஷ்டரோகியாக இருக்கும்போது உன்னை குணப்படுதியதை நீ மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்கவில்லை. அதைப்போலவே என்னைக் கொள்ள வந்த கள்வரிடம் இருந்து நீர் தான் என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றினாய் என்பதையும் நான் அறிவேன். நீ காலத்தால் மாற்றப்பட்ட கொள்ளையன். உன்னைக் கெடுத்தது உன் அண்ணன் கிஸ்தாஸ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரைசுற்றிப் பார்க்க வந்திருந்த ஒரு ரோமை வீரனின் மனைவியையும் அவளுடைய வயதுக்கு வந்த மகளையும் உன் அண்ணனுடன் சேர்ந்து நீ கொள்ளையடித்தாய். உன் அண்ணன் அந்த பெண்கள் இருவரையும் கற்பழித்துக் கொலை செய்தான். இந்த கொடுர செயலில் உனக்குப் பங்கு இல்லாவிடினும் உனக்கும் அவனுக்குமாய் சிலுவை மரணம் தீர்ப்ளிக்கப்பட்டது. ஆனால் இன்று “நீ உன் பாவங்களுக்கு வருந்தி, உன்நிலை உணர்ந்து, எம்மை நீ ஏற்றுக் கொண்டதால் நாம் உன் பாவங்களை மன்னித்தோம். அதன் பயனாக "நீ இன்றே என்னுடன் வான்வீட்டில் இருப்பாய்" என்றார். சற்று நேரத்தில் யேசுவும் சிலுவையில் இறந்து போனார்.


அதே நேரத்தில் ஒரு கிழவி தலைவிரி கோலமாய் கல்வாரி மலை மீது ஓடி வந்தாள். "மகனே தீஸ்மூஸ், மகனே கிஸ்தாஸ், நீங்கள் மட்டும் அன்று என் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று இந்த இழிநிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. நாங்கள் அந்த பெரியவருக்கு வாக்கு கொடுத்தபடியே எங்கள் வாழ்கையை மாற்றிக்கொண்டோம். உங்கள் இருவருக்கும் எவ்வளவோ புத்திமதி கூறினேனே! எங்கள் பேச்சை நீங்கள் கேட்கவே இல்லையே, அன்று அந்த தெய்வத்தாய் தன் மகனைக் குளிப்பாட்டிய நீரில் உன் தம்பியை குளிப்பாட்டியபோது குஷ்டநோய் குணமானது, அதே தண்ணீரில் எனது பெரிய மகனையும் குளிப்பாட்டியிருக்ககூடாதா…” என்று கதறி அழ ஆரம்பித்தாள். நல்ல கள்வன் ஆண்டவரின் ஆசீர் பெற்றிருந்ததால் அமைதியாக மரித்திருந்தான், பரலோக பாக்கியத்தையும் பெற்றான். "நீ இன்றே என்னோடு விண்ணரசில் இருப்பாய்" என்ற ஆண்டவரின் வாக்குறுதி இந்த நல்ல கள்ளனைத் தவிர உலகில் வேறு யாருக்கும் ஆண்டவர் கொடுத்ததில்லை. "இவன் இந்த உலகில் வாழ்ந்தவரை உலகைத் திருடினான். ஆனால் இவன் செத்த பிறகு சொர்கத்தையும் திருடிக் கொண்டான்" என்று இந்த நல்ல கள்ளனைப் பற்றி எழுதிவைத்தார் ஒர் ஞானி.

ஆம் பிரியமானவர்களளே எவனெருவன் தனது குற்றத்தை ஏற்று மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றானோ அவனுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது உறுதியாகின்றது. “சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,
"நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான்.

பின்பு அவன்,
"இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.

பிரியமானவர்களே! இந்த பேரின்ப வீட்டில் இருக்கும் நல்ல கள்வன் இன்று நமக்காக பரிந்துபேச தயாராக இருக்கின்றான். ஆனால் நாம் செய்யவேண்டியது என்ன?.
லூக்கா நற்செய்தி 19 :8-9 ல் சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே என்றார்”. இந்த சக்கேயு செய்த செயலை நாம் செய்யும் போது நிச்சயம் இந்த நல்ல கள்வன் நமக்காக பரிந்து பேசுவார்.

ஆம் அன்புக்குரியவர்களே பாவத்தை அறிக்கையிட்டவர்கள் பரமனின் பேரிரக்கத்தைப் பெற்று வீண்ணக வீட்டை உரிமையாக்கிக் கொண்டனர். இன்று எந்தெந்நத வழிகளில் பேரின்ப வீட்டை நாம் உரிமையாக்கிக் கொள்ளப் போகின்றோம். இந்த நல்ல கள்வன் இன்று மக்களுக்கு பரிந்துபேசும் புனிதாரக இருக்கின்றார். புனித தீஸ்மாஸ் என்பவர் தான் இந்த நல்ல கள்வன். இவர் யெரூசலமுக்கு வெளியே கொல்கொதா மலையில் இயேசவோடு சிலுவையில் அறையப்பட்டவர். இவருடைய விழாவை திருச்சபையானது மார்ச் மாதம் 25ம் தேதி சிறப்பிக்கின்றது. இவர் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளோர், கைதிகள், சவப்பெட்டி செய்வோர்; மனம்மாறிய கள்வர்கள் இவர்கள் அனைவருக்கும் பாதுகாவலராக இருக்கின்றார்.


01. நல்ல கள்வன் இயேசுவின் நல்ல தொண்டன்:
யோவான் நற்செய்தி 12:26ல் “எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார். இந்த நல்ல கள்வனிடம் "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்ற இயேசுவின் வார்த்தைக்கேற்ப இயேசுவோடு தொண்டு செய்ய பேரின்ப வீட்டிற்கு சென்றுள்ளான். "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று சொல்லி இந்த நல்ல கள்ளவன் தன்னுடைய துன்ப நேரத்திலும் இயேசுவைப் பழிக்காது இயேசுவின் துன்பத்தில் பங்கெடுக்கின்றான், அவருக்காக பரிந்து பேசுகின்றான். இயேசுவின் நல்ல தொண்டனாக, புனிதாரக இருக்கின்றான்.

02. நல்ல கள்வன் நல்ல சீடனும் கூட:
யோவான் நற்செய்தி 14:36 ல் “நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்” என்றார் இயேசு. ஆனால் இந்த நல்ல கள்வனுக்கு இயேசு போகும்பேதே அவனையும் தன்னுடைய வான் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடைய சீடராக மாற்றுகின்றார். இயேசு இருக்கும் இடத்திலே அவனும் இருக்கின்றான். தான் தேர்ந்தெடுத்த சீடர்கள் வான்வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே இந்த நல்ல கள்வன் வான்வீட்டிற்கு செல்கின்றான்.

03. நல்ல கள்வன் இயேசுவின் மாட்சியை விண்ணகத்தில் கண்ட முதல் மனிதன்
யோவான் நற்செய்தி 14:36 ல் "தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று தனது தந்தையிடம் வேண்டுகின்றார் இயேசு. அதைப்போலவே இந்த நல்ல கள்வன் இயேசுவின் மாட்சியை முதன் முதலில் விண்ணகத்திலே கானும் பாக்கியத்தைப் பெறுகின்றான்.

04. நல்ல கள்வன் இயேசுவோடு வாழும் முதல் மனிதன்
தூய பவுல் தன்னுடைய ஆசையை பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் 1:23-ல் வெளிப்படுத்துகின்றார். “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தாலும் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன். ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்; உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் மற்றொரு புறம். இதிலே இரண்டாவது மிகச் சிறந்தது” என தேர்வு செய்கின்றார். அதிலே இந்த நல்ல கள்வன் இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று சொல்லி இறந்து இயேசுவோடு முதலில் உயிர்தெழுகின்றான்.

05. நல்ல கள்வனை பாரட்டும் தூய பவுல்
தூயபவுல் கொரிந்திருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில் 12:1-4 ல் “ஆண்டவர் அருளிய காட்சிகளையும், வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன் என்று விளக்குகின்றார். கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார். ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான். இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்” என்று தூய பவுலே நல்ல கள்வனைப் பற்றி பெருமை பாரட்டுகின்றார்.

பிரியமானவர்களே! அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை இயேசுவின் தியாக பலியால் மீட்பின் சின்னமாக மாறியது. அதே சிலுவையில் அறையப்பட்ட கள்வன் இன்று புனிதராக இருக்கின்றார். தான் யார் என்பதையும், தான் எப்படிப் பட்டவன் என்பதையும் சுய ஆய்வு செய்தவன் அந்த கள்வன். எனவே, இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் சிந்திக்கும் இந்நேரத்தில் நம்மை நாம் சுய ஆய்வு மேற்கொள்வோம். நம் ஆண்டவர் இயேசுவின் மரணத்தால் தாய்த் திருச்சபை துக்கத்தில் மூழ்கி இருப்பதை வெறுமையான பீடமும், எரியாத மெழுகுவத்திகளும், ஒலிக்காத மணிகளும் நமக்கு நினைவூட்டுகின்றன. இப்படி இன்று கல்வாரியில் நமக்காக உயிர்விட்ட இயேசுவிடம் எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் நல்ல கள்வனுக்கு கிடைத்த பேரின்ப வீட்டில் நமக்கும் இடமளிக்க பக்தியோடு இயேசுவின் மரணச்சடங்கில் பங்கெடுப்போம்.