இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பெரிய வியாழன்

கடமைக்காக செய்கின்றேனா? கடமை என செய்கின்றேனா?

விடுதலைப்பயணம் 12:1-8,11-14
1 கொரிந்தியர் 11:23-26
யோவான் 13:1-15

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்று கத்தோலிக்க திருச்சபையின் மிக முக்கியமான நாள். இன்று ஆண்டவர் இயேசு தாமே, குருத்துவத்தை ஏற்படுத்திய நாள். குருத்துவம் இல்லையென்றால் கிறித்தவம் என்றோ அழிந்து போயிருக்கும். காரணம் குருக்கள் இல்லையென்றால் நற்கருணை கிடையாது; நற்கருணை இல்லையென்றால் கிறித்தவம் கிடையாது. ஆக கிறித்தவத்தின் ஆனிவேராக இருப்பது குருத்துவம். அப்படிப்பட்ட குருத்துவத்தின் மேன்மையை கடவுள் நமக்கு கொடுத்திருக்கின்றார்.

ஒருமுறை புனித அசிசியாரிடம் ஒருவர் இவ்வாறாக கேட்பார். தந்தையே வழியில் அன்னை மரியாளும், ஒரு குருவானவரும் சென்றால் முதலில் யாருக்கு வணக்கம் செலுத்துவீர்கள்? என்று கேட்டதற்கு அவர் முதலில் நான் குருவிற்குத்தான் வணக்கம் செலுத்துவேன்; அதன்பிறகு அன்னை மரியாளுக்கு வணக்கம் செலுத்துவேன் என்றார். காரணம் அன்னை மரியாள் ஒரே ஒரு முறைதான் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொண்டுவந்தார் ஆனால் குருவானவர்களோ ஒவ்வொரு முறை திருப்பலியின் போதும் இயேசுவை மக்களுக்கு கொண்டு வருகின்றனர்.

ஆம் பிரியமானவர்களே அப்படி மேன்மை பொருந்திய குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நன்னாளில் ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று ஒவ்வொருநாளும் நமக்காக ஜெபித்து, நம்மோடு இருக்கும் குருக்களை வாழ்த்துவோமா…

ஒரு நிமிடம் இறைமக்களாகிய நீங்கள் அனைவரும் உங்களது இரண்டு கைகளையும் குருக்கள் பக்கம் திருப்பி அவர்களுக்கு உங்களது வாழ்த்தையும், கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தையும் அவர்களுக்கு சமர்பிப்போமா…


கடவுளே! எங்களோடு இருந்து எங்களுக்காகவும், திருச்சபைக்காவும் உழைக்கும் உலகெங்குமுள்ள குருக்களுக்காக ஜெபிக்கின்றோம். குறிப்பாக இன்று எங்களோடு இருக்கும் எங்களது குருக்கள் மீது நீர் இரங்கி வந்து, அவர்களுக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை அவர்கள் மீது வீசுவீராக! அப்பொழுது, எம் குருக்கள் வழியாக இவ்வூலகம் உமது வழியை அறிந்து கொள்ளும்; குறிப்பாக எங்களது குருக்களை ஈன்ற பெற்றோர்களுக்காவும் ஜெபிக்கின்றோம். நீர் தாமே அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுகின்றோம். எங்களது குருக்களுக்கு நல்ல உடல், உள்ள, ஆன்ம நலன்களைக் கொடுத்து அவர்களை உமது சாட்சிகளாக விளங்க தேவையான ஆசீர்வாதங்களை பொழிந்தருளும். ஆமென்!

Happy Feast Day dear Fathers…

பிரியமானவர்களே இன்றைய நன்னாளில் நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒருசில கடமைகளை கொடுத்திருக்கின்றார். யாரெல்லாம் தங்களது கடமைகளை சரிவர செய்கின்றனரோ அவர்கள் அனைவருக்கும் கடவுள் தனது ஆசீர்வாதத்தைக் கொடுக்கின்றார். கடவுளின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் கடவுளோடு இணைந்திருந்து அவரைப்போல வாழ கடமைப்பட்டிருக்கின்றோம். யோவான் தனது திருமுகத்தில் 1 யோவான் 2 : 6 அவரோடு (இயேசுவோடு) இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர்(இயேசு) வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள் என்கின்றார்.

ஆக கடவுளின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வந்திருக்கும் இந்நாளில் நாம் ஒவ்வொருவருக்கும் கடவுள் நமக்கு கொடுத்துள்ள கடமைகளைப் பற்றியும் அந்த கடமைகளை எப்படியெல்லாம் நிறைவேற்றுகின்றோம் என்பதை பற்றி சிந்திப்போமா?

அன்புக்குரியவர்களே! ஒரு குருவானவரின் கடமைகள் என்ன?
திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவது.
ஓர் ஆசிரியரின் கடமைகள் என்ன?
மாணவர்களுக்கு நற்கல்வியை அளிப்பது.
ஒரு கணவனின் கடமை என்ன?
குடும்பத்திற்காகவும், தன்னை நம்பி வந்த மனைவிக்காக வாழந்து, தன்வழியாக வந்த பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதும்.
இப்படியாக உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒருசில கடமைகள் இருக்கின்றன. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நாம் எப்படி நிறைவேற்றுகின்றோம்.
உண்மையிலே இது எனக்கு கொடுக்கப்பட்ட கடமை என நினைத்து கடமையோடு அதை நிறைவேற்றுகின்றோமா? அல்லது ஏதோ கடமைக்காக நிறைவேற்றுகின்றோமா?
இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணமாக வாழ்வில் வெற்றிபெறவேண்டுமா? உனது கடமையை செய்; தோல்வி அடையவேண்டுமா கடமைக்காக செய். இன்று ஆலயம் வந்துள்ள நீங்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெறவேண்டுமா? அல்லது தோல்வி பெறவேண்டுமா? கடமையை செய்தால் வெற்றி; கடமைக்காக செய்தால் தோல்வி முடிவு உங்கள் கையில்.

கடவுள் நமக்கு கொடுத்துள்ள கடமைகள் என்னவென்று யாராவது சொல்லமுடியுமா?

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது மோசேவுக்கும், ஆரோனுக்கும் கடவுள் இஸ்ராயேல் மக்களின் தலையாய கடமை என்வென்று விளக்குகின்றார். அதில் ஒன்று தான் பாஸ்கா பெருவிழாவைக் கொண்டாடும் கடமை. கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவருமே பாஸ்கா விழாவைக் கொண்டாட கடமைப் பட்டுள்ளனர். காரணம் அடிமைதனத்தில் இருந்த மக்களுக்கு விடுதலையைக் கொடுத்த அடையாளம் தான் இந்த பாஸ்கா விழா. ஆம் பிரியமானவர்களே இந்த இஸ்ராயேல் மக்கள் தங்களது பாஸ்காவிழாவை ஏதே கடமைக்காக செய்யவில்லை; மாறாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை என நினைத்து ஒவ்வொருவருமே அதை கண்ணும் கருத்தோடு நிறைவேற்றுகின்றனர்.

பாஸ்காவிழா கொண்டாடும்முறை
01. குடும்பத்திற்கு ஒரு ஆடு என தேர்ந்து கொள்ளவேண்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக் கொள்ளட்டும்.
02. ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.
03. இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.
04. இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.
05. இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
06. எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்க வேண்டாம். காலை வரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.
07. நீங்கள் அதனை உண்ணும் முறையாவது; இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது "ஆண்டவரின் பாஸ்கா.”
ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

ஆம் பிரியமானவர்களே கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு கொடுத்த இந்த கடமையை இன்றளவும் அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இன்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை நாம் எவ்வாறு நிறைவேற்றுகின்றோம்?
(யாராவது ஒருவரை சுட்டிக்காட்டி) உங்களுடைய கடமை என்ன? என்று கேட்டுப்பாருங்கள். சற்று யோசித்து விட்டுதான் பதில் கூறுவர். அடுத்தவர்களுடைய கடமைகளை சுட்டிக்காட்டும் போது தைரியமாக நாம் சொல்லுகின்றோம். ஆனால் அதே நம் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்கும் போது அது நம்மை சிந்திக்க வைக்கின்றது.
திருமணமானவர்களே உண்மையிலே நீங்கள் உங்களது கடமைகளை கடமை என நினைத்து நிறைவேற்றுகின்றீர்களா? அல்லது ஏதோ கடமைக்காக நிறைவேற்றுகின்றீர்களா? உதாரணமாக திருமண வார்த்தைப்பாட்டின்போது …. உன்னை என் மனைவியாக / கணவரக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன் என்று வாக்குறுதி தருகின்றீர்கள். ஆனால் இன்று எத்தனை குடும்பங்களில் இந்த பிரமாணிக்கம் இருக்கின்றது.

இரண்டாவதாக திருமணமானவர்களின் முக்கிய கடமையாக திருச்சபை அறிவிப்பது இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றப்படி வளர்ப்பீர்களா? மணமக்கள்: ஆம் வளர்ப்போம் என்று சொல்லிவிட்டு இன்று உங்களது குழந்தைகளை வளர்ப்பது யார்? சற்று சிந்தித்துப்பாருங்கள். வீட்டிலே ஆயா, வேலைக்காரர்கள் வளர்க்கின்றனர். பள்ளியிலே ஆசிரியர் வளர்க்கின்றனர். பெற்றோர்களிடம் கேட்டால் எங்களுக்கு நேரமில்லை. நமக்கு கொடுக்கப்பட்ட கடமைகள் காற்றிலே பறக்கின்றது.


ஆசிரியர்களே உங்களது கடமை எப்படி இருக்கின்றது? (ஒருநிமிடம் ஆலயம் வந்திருக்கும் ஆசிரியர்களே உங்களது கைகளை உயர்த்துங்கள். எத்தனைபேர் உங்களது பிள்ளைகளை அரசாங்க பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றீர்கள்?) அரசாங்க பள்ளிகளிலே ஆசிரியப் பணிகள் வேண்டும். ஆனால் தங்களது குழந்தைகளை அரசாங்க பள்ளியிலே சேர்ப்பது கிடையாது. இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் எத்தனை ஆசிரியர்கள் தகுந்த தயாரிப்புடன் பள்ளிக்குச் சென்று தங்களது கடமைகளை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுகின்றனர் என்று. பல ஆசிரியர்கள் தங்களது கடமைகளை ஏதோ கடமைக்காக நிறைவேற்றுகின்றனர்.

அரசாங்கத்தில் பணிபுரிபவர்களே உங்களது கடமை எப்படி இருக்கின்றது. அரசாங்கத்திலே நீங்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்குகின்றர்கள். அதுவும் போதாது என்று உங்களில் எத்தனைபேர் லஞ்சம் வாங்காமல் உங்களது கடமைகளை நிறைவேற்றுகின்றீர்கள்.

மேலும் பள்ளி மாணவர்களின் கடமை நன்கு படிப்பது. ஆனால் இன்று படித்து பட்டம் வாங்குவதற்குப் பதிலாக பிட் அடித்தும், பணத்தைக் கொடுத்தும் பட்டம் வாங்கும் பிள்ளைகளும், பெற்றோர்களும் ஏராளம். இப்படி நாம் ஒவ்வொவருமே நமது கடமைகளை காற்றிலே பறக்கவிட்டு ஏதோ கடமைக்காக செய்ய விரும்புகின்றோம். அதனால்த்தான் இன்று எங்கு பார்த்தாலும் தனியார் மையங்கள் பெருகி வருகின்றன. காரணம் அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் தங்களது கடமைகளை சரிவர செய்வதில்லை.

ஒருமுறை ஒரு கட்டிடத்தில் சிற்பி ஒருவர் சிலையை செதுக்கி கொண்டு இருந்தார். அந்த வழியே போன ஒருவர் அவர் செதுக்குவதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார். அருகில் இன்னொரு சிலை இப்பொழுது செதுக்கும் சிலை போலவே இருப்பதை பார்த்து இரண்டு சிலையையும் ஒரே மாதிரி செதுக்க சொல்லி சொன்னார்களா? என்று கேட்டார்.

ஒரு சிலை தான் செதுக்க சொன்னார்கள் அந்த சிலையில் சின்ன குறை இருக்கிறது அதனால் வேறு ஒரு சிலைளை நான் செதுக்குகிறேன் என்றார். வந்தவரும் அந்த சிலையை அதிக நேரம் உற்று பார்த்தார் ஆனால் அவரால் எந்த குறையும் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதில் எந்த குறையும் இருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லையே என்று சிற்பியிடம் சொன்னார்.

சிலையை நான் முழுவதுமாக முடித்துவிட்டேன் கடைசி நேரத்தில் சின்னதாக ஒரு கீறல் விழுந்து விட்டது, சிலையின் மூக்கு பகுதியில் உற்று பாருங்கள் சின்னதாக ஒரு கீறல் விழுந்துள்ளது தெரியும் என்று சிற்பி சொன்னார். வந்தவரும் அந்த சிலையை நன்கு உற்று பார்க்கும்போது அந்த கீறல் தெரிந்தது. இந்த சிலையை எங்கே வைக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதோ இருக்கிறதே 20 அடி தூண் அதன் மேலே வைக்கப்போகிறோம் என்று சிற்பி சொன்னார்.

அவ்வளவு மேலே வைக்கும் போது இந்த கீறல் யாருக்கும் தெரியாதே அந்த சிலையையே வைத்து இருக்கலாமே என்று வந்தவரும் சொன்னார். அதற்கு அந்த சிற்பி ‘மேலே இருப்பவர்க்கு’ தெரியும் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர ஆரம்பித்தார்.


ஆம் பிரியமானவர்களே எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும் அதற்கு பதிலாக கடமைக்கு செய்யக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளை ஏதோ கடமைக்கு வளர்ப்பதால்த்தான் இன்று அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் பூற்றீசல் போல் வளர்ந்து வருகின்றன. பணிபுரியும் இடங்களில் மக்கள் தங்களது கடமைகளை மறந்து கடமைக்காக தங்களது பணிகளை செய்யும்பேது லஞ்சமும், ஊழலும் இன்று மலிந்துவிட்டன. அதனால்த்தான் நீ உனது கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்ற தத்துவத்தை போதித்த நமது நாடு, இன்று கடமையா? அப்படியென்றால்… அது என்னவென்றும், ஏதோ கடமைக்கு செய்தால் போதும் என்று நமது பிள்ளைகளுக்கு நாமே போதிக்கின்றோம்.

எனது பிள்ளை நன்கு படித்து நல்ல செயல்களை கற்று, நல்ல நேர்மையாளனாக வளர வேண்டும் என்று நமது முன்னோர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றினர். இன்று எனது பிள்ளை நல்ல மதிப்பெண் பெறவேண்டும், அடுத்தவனை விட உயர்வாக இருக்கவேண்டும், என நினைத்து சின்ன சின்ன செயல்களைக் கூட குழந்தைகள் செய்வது கிடையாது. உதாரணமாக இன்று பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களை யார் செய்வது? பிள்ளைகள் கிடையாது பெற்றோர்களும், டியூசன் ஆசிரியர்களும், ஏன் கடைக்காரர்களும் தான்… ரெடிமேடாக அனைத்தும் கிடைக்கின்றன.

கடமையைச் செய்யும் போது துன்பம் வரும், சோதனைகள் வரும், ஆனால் கடமைக்காக செய்யும் போது துன்பமும் இருக்காது, சோதனைகளும் இருக்காது. இதனால்த்தான் நமது பிள்ளைகளின் வாழ்வில் ஒரு சிறிய துன்பம் வந்தால் கூட அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் கடமையை செய்பவர்களை நாம் ஏளனமாக பார்க்கின்றோம், ஏதோ கடமைக்காக செய்பவர்களை தலைவர்களாகவும், முன்னோடிகளாகவும் நாம் கொண்டாடுகின்றோம். இப்படி ஏதோ கடமைக்காக செய்பவர்களைத்தான் நமது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாளர்களாக நாம் அறிவித்து வருகின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து தன்னுடைய தந்தை தனக்கு கொடுத்த கடமையை செவ்வனே நிறைவேற்றினார். அதைப்போலவே தன்னுடைய சீடர்களுக்கும், இன்று அவரை பின்பற்றி வரும் உங்களையும், என்னையும் பார்த்து இயேசு கூறுகின்றார். ஆண்டவரும் போதருமான நான் இவ்வாறு செய்யும்போது நீங்களும் அவ்வாறே செய்ய கடமை பட்டிருக்கின்றீர்கள் என்கின்றார்.


இயேசு நமக்கு விட்டுச்சென்ற கடமை என்ன?
01. குருக்களோடு சேர்ந்து நற்செய்தி பணியாற்ற கடமை பட்டிருக்கின்றோம்.
குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நன்நாளில் குருக்களின் கடமை என்ன? மாற்கு 3: 14-15ல் தம்மோடு இருக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு 12 சீடர்களை தேர்ந்தெடுக்கிறார். இந்த 12 சீடர்களின் வழிவந்தவர்கள் தான் குருக்கள். ஆக ஒவ்வொரு குருவும் தன்னுடைய கடமையை உண்மையுடன் நிறைவேற்ற அழைக்கப்படுகின்றார். இன்று நாமும் நம்முடைய குருக்களோடு சேர்ந்து நற்செய்தி பணியாற்ற கடமை பட்டிருக்கின்றோம்.

02. மக்களை கிறிஸ்துவோடு ஓப்பரவாக்க கடமைப்பட்டிருக்கின்றோம்:
குருக்கள் கிறிஸ்துவின் வழிவந்தவர்கள். “நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்” (2கொரி 5:20). மக்களுக்காக குருக்கள் மன்றாடி அவர்களை ஓப்புரவாக்கும் பணியில் ஈடுபட இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய சூழலில் அறுவடையோ மிகுதி வேளையாட்களோ குறைவு என்ற நற்செய்தி வார்த்தைக்கேற்ப உலகில் உள்ள மக்கள் அனைவரையும் கிறிஸ்துவோடு ஒப்புரவாக்க வேண்டுமென்றால் திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறித்தவருக்கும் அந்த கடமையானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களை கடவுளோடு ஒண்றினைக்கும் பணியில் குருக்களோடு சேர்ந்து பணியாற்ற நாமும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

03. பலிசெலுத்துவதற்காக
இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று லூக் 22:19-ல் இயேசு கற்பிக்கிறார். ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக ஆண்டவர் விட்டுச்சென்ற நினைவை ஒவ்வொரு குருவும் தம்மையே பலியாகவும், பலிப்பொருளாகவும் மக்களுக்காக கடவுளிடத்தில் ஒப்புக்கொடுக்க இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார். இந்த குருத்துவம் அழியாமல் தொடர வேண்டுமானால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளை கடவுளின் பணிக்கு அர்பணிக்க கடமைபட்டிருக்கின்றீர்கள். குருத்துவம் அழிந்து போகமல் இருக்க பெற்றோர்களே உங்கது கடமைகளை நிறைவேற்ற நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா? சிந்திப்போம்

03. திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவதற்காக
இயேசு தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி மத்தேயு 28:18-20-ல் “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும் படி கற்பியுங்கள். இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்” என்றார் இயேசு. அதைப்போலவே ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை கடமையோடு நிறைவேற்றி தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இயேசுவின் சீடராக்க கடமைபட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே யோவான் 13 : 14 ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நாம் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரின் காலடிகளை கழுவ கடமைப் பட்டிருக்கின்றோம்.


நாம் ஏன் பிறரின் காலடிகளை கழுவவேண்டும்?
01. பிறரின் காலடிகளை கழுவும் போது இயேசுவோடு நாம் பங்கெடுக்கின்றோம்.
இயேசு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்" என்றார். பேதுரு அவரிடம், "நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

ஆக நாமும் பிறரின் பாதங்களை கழுவும் போது ஆண்டவர் இயேசுவோடு அவரது பணியில் பங்கெடுக்கின்றோம்.

02. பிறரின் காலடிகளை கழுவும் போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது.
லூக்கா நற்செய்தி 7: 37-38 ல் பரிசேயரான சீமோன் தன்னுடைய வீட்டிற்கு விருந்துண்ண இயேசுவை அழைக்கின்றார். அவருடைய அழைப்பை ஏற்று இயேசுவும் அவரது வீட்டிற்கு செல்கின்றார். அப்போது அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்து, இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

இங்கே பரிசேயராகிய சீமோன் என்ன செய்யத் தவறினார் என்றும், பாவிப் பெண் என்ன செய்யத் தொடங்கினார் என்றும் சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும்.

வழக்கமாக யூதர்கள் இரபியையோ அல்லது போதகர் ஒருவரையோ தங்களுடைய இல்லத்திற்கு விருந்தினராக அழைக்கின்றபோது மூன்று முக்கியமான காரியங்களை அவர்கள் செய்யவேண்டும். ஒன்று அவர்களுடைய கைகளை முத்தி செய்யவேண்டும். இரண்டு புழுதி படிந்த பாதையில் நடந்துவரும் அவர்களுடைய பாதங்களைத் தண்ணீரால் கழுவவேண்டும். மூன்று தலையில் நறுமணம் கமழும் பூக்களை வைத்து எடுக்க வேண்டும். இங்கு இயேசுவைத் தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைத்த பரிசேயர் சீமோனோ இவற்றை ஆண்டவர் இயேசுவுக்குச் செய்திருக்கவேண்டும். ஆனால், அவர் அவற்றை என்ன காரணத்தினாலோ செய்யவில்லை. ஆனால் பாவிப் பெண் அவற்றை ஆண்டவர் இயேசுவுக்குச் செய்தார். அப்பெண் இயேசுவின் பாதங்களை தன்னுடைய கண்ணீரால் கழுவி, நறுமணத் தைலம் பூசி, அதனைக் கூந்ததால் துடைக்கின்றார். அதனால் இயேசு அந்தப் பெண்ணின் பாவங்களை மன்னிக்கின்றார். இயேசுவின் பாதங்களை துடைத்து பாவியான பெண் பாவ மன்னிப்பு பெறுகின்றார். அன்புக்குரியவர்களே நம்முடைய பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறவேண்டுமா ஒருவர் மற்றவரின் பாதங்களை கழுவ நாம் ஒவ்வொருவரும் கடமை பட்டிருக்கின்றோம்.


ஆம் அன்புக்குரியவர்களே நாமும் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து கடவுளை அடைய முயற்ச்சிப்போம். நம்முடைய கடமைகளை ஏதோ கடமைக்காக செய்யாமல், கண்ணும் கருத்துமாக செய்யும்போது நாமும் நம்முடைய பாவங்களில் இருந்து விடுபட்டு இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறமுடியும்.