இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

நான் கடவுளின் இறைவாக்கினனா? போலி இறைவாக்கினனா?

எரேமியா 31:31-34
எபிரேயர் 5:7-9
யோவான் 12:20-33

கல்லான இதயத்தை எடுத்துவிடு
எமைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு (2)
எம்மையே நாங்கள் மறக்கவிடு - 2
நெஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு.
இறைவா இதோ வருகின்றோம் உம்திரு உள்ளம் நிறைவேற்ற (2).

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? வழக்கம் போல தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு எப்படி அழைக்கப்படுகின்றது? இந்த வாரமானது இறைவாக்கினர்களின் ஞாயிறு என அழைக்கப்படுகின்றது. கல்நெஞ்சம் கொண்ட மனிதர்கள் அனைவருக்கும் கடவுள் தரும் சதையிலான இதயத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அழைப்போடு இறைவாக்கினர்களின் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கின்றது.

யார் இந்த இறைவாக்கினர்கள்?
இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி (Prophet) என்பவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்களாகவும், தெய்வீகத் தன்மை கொண்டவர்களாகவும் கடவுளுக்காக பேசுபவர்களாகவும், (அதாவது இறைவனின் வார்த்தையைப் மக்களுக்கு எடுத்துரைப்பவர் எனவும்), கடவுளிடம் மக்களுக்காக பரிந்து பேசுபவர்களாகவும் அழைக்கப்படுகின்றனர். தீர்க்கதரிசி என்ற சொல், எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை முன்னறிவிப்பவர் என்ற பொருளில் கையாளப்படுகிறது. இந்த இறைவாக்கினர்கள் அனைவருமே கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டு இஸ்ரயேல் மக்களுக்கு நல்வழியைச் சுட்டிக்காட்டி கடவுளின் வார்த்தையை அம் மக்களுக்கு போதித்தவர்கள். இவர்கள் அனைவரும் உங்களைப்போல என்னைப்போல சாதரண மனிதர்கள் தாம்.

ஆக இஸ்ரயேலரின் வரலாற்றில், மக்களை கடவுளின் வழியில் நடத்திய பலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். உங்களுக்கு தெரிந்த இறைவாக்கினர்கள் யார்? சொல்லுங்கள் பார்க்கலாம்… அன்புக்குரியவர்களே, எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரயேலரை மீட்டு வந்த மோசே முதன்மையான இறைவாக்கினராக போற்றப்படுகின்றார். அவருக்கு பின் கடவுளின் பெயரால் இறைவாக்குரைத்த சிலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். உதாரணமாக அரசர் தாவீதும் இறைவாக்கினர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார். எலியா, நாத்தான், ஆமோஸ், எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஓசேயா, யோவேல், ஒபதியா, யோனா, மீக்கா, அபகூக்கு, செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி போன்றோர் பல்வேறு காலக்கட்டங்களில் தோன்றிய இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் ஆவர்கள்.

இப்படியாக கடவுள் தான் படைத்த மக்களை பாதுகாத்து பராமரிக்கவும், தன்னுடைய வார்த்தையையும், தன்னுடைய ஆசீரையும் மக்களுக்கு அளிக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கடவுள் அன்று முதல் இன்று வரை அவருக்கென இறைவாக்கினர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் தனது பணியை நிறைவேற்றி வருகின்றார். அப்படி இன்று ஆலயம் வந்துள்ள நீங்களும், நானும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட இறைவாக்கினர்கள் என்பதை இன்றை வாசகங்கள் வழியாக கடவுள் நமக்கு உணர்த்துகின்றார். உதாரனமாக இவ்வுலகில் கோடிக்கனக்கான மக்கள் இருந்தாலும் நீங்களும், நானும் மட்டும் தான் கிறிஸ்து அவனாகவும், கிறிஸ்து அவளாகவும் வாழ அழைக்கப்பட்டு இருக்கின்றோம். காரணம் நம்மை கடவுள் தேர்தெடுத்து இறைவாக்கினராக வாழ அழைப்பு விடுக்கின்றார். இன்று நம்மில் எத்தனைபேர் நல்ல இறைவாக்கினர்கள்? எத்தனைப் பேர் போலி இறைவாக்கினர்கள்? என்று சிந்திப்போமா.


யாரெல்லாம் கடவுளின் இறைவாக்கினர்கள்?
கடவுளின் இறைவாக்கினர்கள் முதலில் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், இரண்டாவதாக கடவுளுக்காக, கடவுளின் வார்த்தையை மக்களிடம் பேசக்கூடியவர்கள், மூன்றாவதாக மனிதர்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசக்கூடியவர்கள். உதாரணமாக மோசே சாதாரணமான ஓர் ஆடுமேய்க்கும் மனிதன். அவர் ஓர் திக்குவாயனும் கூட. ஆனாலும் “கடவுள் தாமே மோசேயிடம் கூறுகின்றார் நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்கு நானே கற்பிப்பேன்” என்று சொல்லி கடவுள் இவரை தன்னுடைய இறைவக்கினனாக தேர்ந்துகொள்கின்றார். இரண்டாவதாக கடவுளின் வார்த்தையும், அவரின் வல்லமையையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் ஓர் இறைவாக்கினராக அவரை மாற்றுகின்றார். கடைசியாக இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக சென்றபோது கடவுளின் சீற்றம் இஸ்ராயேல் மக்களின் மேல் எழுகின்றது. இந்நேரத்தில் மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுகின்றார்.

இறைவன் மோசேயிடம் “அவர்கள் மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்" என்றார். அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர் முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? "மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்" என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே" என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார். ஆக மோசே ஓர் நேர்மையான கடவுளின் இறைவாக்கினராக திழ்வதை நாம் பார்க்கலம்.


யாரெல்லாம் போலி இறைவாக்கினர்கள்?
கடவுளின் இறைவாக்கினர்கள் கடவுளின் மீட்பு திட்டத்தில் பங்கு எடுப்பவர்கள். ஆனால் போலி இறைவாக்கினர்களோ கடவுளுக்கு எதிராக செயல்படுபவர்கள். தங்களுடைய எண்ணங்களையும், வார்த்தைகளையும் கடவுளின் வார்த்தையாக பாவித்து மக்களுக்கு அறிவிப்பவர்கள். உதாரணமாக எரேமியா 28:15-16-ல் கடவுளின் இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது; "அனனியாவே, கூர்ந்து கேள்; ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய். எனவே, ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப் போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்! " அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான். மேலும் 29:21 –ல் என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான். இவ்வாறாக போலி இறைவாக்கினர்கள் அனைவரும் கடவுளின் தண்டணையை தாமாகவே வருவித்துக் கொள்கின்றனர்.

இன்று நான் உண்மையை எடுத்துரைக்கும் கடவுளின் இறைவாக்கினனா? அல்லது பொய்யும், புரட்டையும் பேசும் போலி இறைவாக்கினனா?
பிரியமானவர்களே, இன்றைய முதல் வாசகத்திலே இறைவாக்கினர் எரேமியா கடவுளின் இறைவாக்கினராக செயல்படுகின்றார். எப்படி அவர் தேர்தெடுக்கப்பட்டார் என்று நாம் சிந்தித்தால் 1:5-10-ல்
“தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். "அதற்கு எரேமியா, "என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே" என்றார். ஆண்டவர் எரேமியாவிடம் கூறியது; "'சிறுபிள்ளை நான்' என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர். "இப்படி கடவுள் தாமே தன்னுடைய இறைவாக்கினராக எரேமியாவைத் தேர்ந்து கொள்கின்றார். இப்படி கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர் கடவுளின் வார்த்தையை பல்வேறு அடையாளங்கள் வழியாக அரசருக்கும், மக்களுக்கும் விளக்குகின்றார். அதில் ஒன்று தான் இன்று நாம் படித்தது கல்லான இதயத்திலிருந்து சதையான இதயத்தை பெற்றுக்கொள்வது.

இப்படி கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட இறைவாக்கினர்களின் பணி என்ன?

கடவுள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனக்கு தேவையான இறைவாக்கினர்களை தேர்வு செய்கின்றார். அதைப்போலவே அவர்களது பணியும் அவர்களுக்கு வித்தியாசப்படுகின்றது. உதாரணமாக மோசேவின் பணி எகிப்திலிருந்து இஸ்ராயேல் மக்களை பாலும், தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்திற்கு மக்களை அழைத்து வருவது, மேலும் கடவுளின் கட்டளைகளை மக்களுக்கு போதிப்பது, அப்படியாக இறைவாக்கினர் எரேமியாவின் அழைப்பு அரசர்களை நல்வழிப்படுத்துவதும், மக்களுக்கு இறைவாக்கு பணியை தைரியமாக எடுத்துரைப்பதும் ஆகும். உதாரணமாக எரேமியா 1:9-10-ல் ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது; "இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் – தகர்க்கவும், அழிக்கவும் - கவிழ்க்கவும், கட்டவும் -நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்” என்று சொல்லி ஓர் இறைவாக்கினரின் பணிகள் எப்படிப்பட்டவை என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

அன்புக்குரியவர்களே, இன்று ஆலயம் வந்துள்ள நீங்களும், நானும் முதலில் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள். இரண்டாவதாக கடவுளின் வார்த்தையை கேட்கக்கூடியவர்கள், அவ்வார்த்தையை பிறருக்கு அறிவிக்க தெரிந்தவர்கள், மூன்றாவதாக மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள். ஆக இப்பொழுது சொல்லுங்கள் நீங்களும், நானும் இறைவாக்கினர்களா? இல்லையா?

இன்று
நீங்களும், நானும் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட இறைவாக்கினர்கள் என்றால் நமது இறைவாக்குப்பணி எப்படி இருக்கின்றது?

இறைவாக்கினர் எரேமியாவுக்கு கூறியதுபோல இன்று நாம் எவற்றை பிடுங்குகின்றோம், எவற்றை தகர்க்கின்றோம், எதை அழிக்கின்றோம், எதை கவிழ்க்கின்றோம், எவற்றை கட்டுகின்றோம், எவற்றை நடுகின்றோம் என்று சிந்திப்போம். மேலும் இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் என்று கடவுள் கூறுகின்றார் என்றால் நம்முடைய அரசின் மீதும் நமது மக்களின் மீதும் நமக்கு உள்ள பொறுப்புகள் என்ன என்பதையும் சிந்திப்போமா?

உதாரணமாக ஒவ்வொரு நாளும் நமது கண் முன்னாலே நூற்றுக்கணக்கான பிரட்சனைகளை நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். ஏதாவது ஒரு பிரட்சனைக்கு நம்மால் குரல் கொடுத்து அதில் வெற்றி கண்டிருக்கின்றோமா? நமக்கு ஏன் வம்பு என்று தானே நாம் ஒவ்வொருவரும் சென்று கொண்டிருக்கின்றோம். பிரட்சனை என்று தெரிந்தும், தவறு எனத் தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டு சமூதாயத்தில் நிலவி வரும் பிரட்சனைகள் அனைத்திற்கும் ஏதோ சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டு நான், எனது, என்ற குறுகிய வட்டத்தில் தானே நம்முடைய வாழ்வு பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிரியமானவர்களே ஒன்றை நாம் இங்கு சிந்திக்க கடமை பட்டிருக்கின்றோம். ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில் இருந்தபோது நம்முடைய முன்னோர்கள் ஆங்கிலேயர்களையும், அவர்களின் அதிகாரத்தையும் எதிர்த்து அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் வழி வந்த நாம் இன்று நமது அண்டை வீட்டில் இருக்கும் ஓர் கவுன்சிலரின், அல்லது நம்முடைய ஓர் தலைவர்களின் தவற்றை கூட நம்மால் சுட்டிக்காட்ட நமக்கு தைரியம் வருவதில்லை? ஏன்? பிறகு எப்படி அவர்களின் தவற்றிற்கு எதிராக நாம் போரட முடியும்?


கடவுள் எரேமியா இறைவாக்கினருக்கு கூறியதுபோல நான் உன்னை பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் என்கின்றார். ஆனால் நாம் செய்வது என்ன? பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும், மற்றவர்களிடம் இருக்கும் சொத்துக்களை அடித்து பிடுங்க ஆசைப்படுகின்றோம், தங்களுடைய கொள்கைக்கு எதிரானவர்கள் என்றால் அவர்களின் வீடுகள், வாசல்கள், ஏன் ஆலயங்கள் என்று கூட பாரமல் அதை தகர்க்கும் கூட்டத்தில் ஒருவனாக நாம் இருக்கின்றோம், தன்னுடைய சுயநலத்திற்காக எப்படியெல்லாம் மற்றவர்களை அழிக்கலாம் என சூழ்ச்சி செய்கின்றோம், என்ன பாடுபட்டாலும் அடுத்தவன் முன்னேறி விடக்கூடாது என நினைத்து எப்படியெல்லம் அவரை கவிழ்க்கலாம் என திட்டம் போடுகின்றோம், இவ்வளவு தவற்றையும் செய்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல நல்ல மனிதர்கள் என்ற போர்வையில் நாம் வலம் வந்து கொண்டிருக்கின்றோம்.

உதாரணமாக, ஒரு 100 ரூபாய் லஞ்சம் கேட்கும் மனிதரிடம் நான் லஞ்சம் கொடுக்க முடியாது என நம்மால் தைரியமாக கூறமுடிகின்றதா? ஏன் நம்மிலே எத்தனைபேர் ஓட்டுக்கு காசு வாங்கமல் ஓட்டு போடுகின்றோம்? எனக்கு பணம் வேண்டாம் என எத்தனைபேர் நம்மில் கூறுகின்றோம்? அரசாங்கம் இலவசங்களை அறிவித்ததும் முதல் ஆளாக நம்மில் எத்தனை பேர் முன் வரிசையில் அமர்கின்றோம்? இப்படி நாம் செய்த சிறுசிறு தவறுகளால் தான் இன்று 3லட்சம் கோடிக்குமேல் தமிழகம் கடனில் உள்ளது. இந்த கடனை யெல்லாம் யார்கட்டுவது? நீங்களும் நானும் தான். இப்படி கடவுளுக்கு விரோதமான செயல்களை செய்யும் நாம், அல்லது இப்படிப்பட்ட செயல்களுக்கு துணைபோகும் நாம் கடவுளின் இறைவாக்கினர்களா? அல்லது போலி இறைவாக்கினர்களா? சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே இயேசுவை யாரெல்லாம் பின்பற்ற விரும்புகின்றனரோ அவர்களின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என தெளிவாக கூறுகின்றார்.
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்” என்கின்றார். தமிழில் ஓர் பழமொழி இவ்வாறாக உள்ளது “பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று” அப்படியானால் இன்றைய உலகில் யாரும் நம்மிடையே இருக்கும் பிரட்சனைகளை கண்டு கொள்வதில்லை. ஒவ்வொருவரும் தான் உண்டு தன்வேலை உண்டு எனச் செல்லும் இக்காலத்தில் கடவுளின் இறைவாக்கினனாக தேர்ந்துகொள்ளப்பட்ட நாமும் நமக்கு ஏன் வம்பு என அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்றோம். இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்து தான் ஒருவர் இவ்வாறாக கூறுகின்றார். “பிரட்சனைகள் என்று ஒதுங்கிக் கொள்ளாதே உனக்கும் ஒரு நாள் பிரட்சனை வரும் அப்போது உனக்கென்று பரிந்து பேசுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்”. எனவே மக்களுக்கா பரிந்து பேசுபவர்களாக நாம் இருக்கின்றோமா? அல்லது நான் உண்டு எனது வேலை உண்டு என வாழ்கின்றோமா?

இன்றைய உலகில் பிரட்சனைகளைப் பார்த்து யாரும் குரல் கொடுப்பதில்லை ஏன்?
முதலில் தனக்கு ஓர் பிரட்சனை வரும் வரை அவர்களுக்கு அது பிரட்சனையாகவே தெரிவதில்லை. இரண்டாவதாக தனக்கு ஏன் வம்பு என ஒதுங்கிக்கொள்பவர்கள் தான் நம்மில் அதிகம். மூன்றாவதாக விஞ்ஞானத்தில் நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம் ஆனால் பிரட்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு நாம் இன்னும் பக்குவப்படவில்லை. இப்படி பல. இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன என்று சிந்திக்கும் போது முதலில் மக்களின் இதயம் கல்லாக மாறிக்கொண்டு வருகின்றது. அல்லது தங்களுடைய சுய நலத்திற்காக தங்களது சதையுள்ள, உயிருள்ள இதயத்தை கல்லாக மாற்றிக்கொள்கின்றனர். இப்படித்தான் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களும், உலகின் மிகச்சிறய நாட்டு தலைவர்களின் இதயம் கல்லாக இருக்கும் போது ஒரே ஓருவன் மட்டும் எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று சொல்லி, இது அடுத்தவர்களின் பிரட்சனை, இது அடுத்த நாட்டு பிரட்சனை, என்று பாரமால் இது ஓர் மனித இனத்தின் பிரட்சனை என நினைத்து தனக்கு சதையுள்ள இதயத்தை கடவுள் கொடுத்திருக்கின்றார் என்று நினைத்து போரிலே துன்பப்பட்ட மக்கள் அனைவருக்கும் கலங்கரை விளக்கா நமது மத்தியில் திகழ்கின்றார். யார் அவர்?

அவர் தான் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே. சிரியாவில் கொத்துக் கொத்தாக குழந்தைகளும், பெண்களும் கொன்று குவிக்கப்பட்ட போது உலக நாடுகள் அனைத்தும் அமைதி காத்த நிலையில், அங்கு தவித்த மக்கள் அனைவரையும் கனடா நாடு, இது உங்களின் வீடு, வாருங்கள் என்று கூறி அந்த மக்களுக்காக தன்னுடைய நாட்டு விமானத்தை அனுப்பி பாதிக்கப்பட்ட அனைவரையும் தனது நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கான குடியுரிமையைக் கொடுத்து இது ''இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்'' என்று சிரியா மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கிறார். ஆம் அன்புக்குரியவர்களே, இதுதான் ஓர் இறைவாக்கினரின் செயல்பாடு.

உதாரணமாக நம்முடைய தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மக்கள் இலங்கையிலே கொத்துக் கொத்தாக இறந்தபோது நம்முடைய நாடு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால் இன்றுவரை அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தங்களது பூர்வீக நாடகிய தமிழகத்தில் இன்றும் அவர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பாருங்கள்! சிரியா நாடு ஓர் முஸ்லீம் நாடு, அந்நாட்டு மக்கள் அனைவரும் முஸ்லீம்கள், உலக நாடுகளே முஸ்லீம்களை தீரவிரவாத இயக்கம் என சித்தரிக்கின்றது, மேலும் எந்த ஒரு முஸ்லீம் நாடுகளும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இல்லை, தன்னுடைய இனத்தை சார்ந்த மக்களுக்கே தங்களது நாட்டில் இடமில்லை என பல முஸ்லீம் நாடுகள் கூறிவிட்ட நிலையில் முன்பின் தெரியாத இந்த மக்களை, இவர்கள் தீவிரவாதிகளா, நல்லவர்களா, கெட்டவர்களா, என்ற சிந்தனைக்கு தன்னை உட்படுத்தாமல், மனிதாபிமான அடிப்படையிலே எனது இதயம் சதையினால் படைக்கப்பட்டது என்பதை நிருபித்து காட்டியிருக்கின்றார். காரணம் இவரின் வளர்ப்பு ஓர் கத்தோலிக்க குடும்பத்தின் வளர்ப்பு.

பிரியமானவர்களே நீங்களும், நானும் கிறித்தவர்கள் தான், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தான், கத்தோலிக்க கிறித்தவர்கள் தான் நம்முடைய இதயம் எப்படி இருக்கின்றது. போலி இறைவாக்கினர்களைப் போன்ற கல்லான இதயமாக இருக்கின்றதா? அல்லது சதையினால் படைக்கப்பட் இளகிய இயத்தை நாம் கொண்டிருக்கின்றோமா?


அன்புக்குரியவர்களே தவக்காலத்தின் இறுதிவாரத்திலே நாம் இருக்கின்றோம். நாட்டுக் எதிராக நாம் பேசாவிட்டாலும், நாட்டுத்தலைவர்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கா விட்டாலும் பாரவாயில்லை, தவறுகள் நடக்கும்போது நம்மால் தட்டிக்கேட்கும் இதயம் நம்மில் இருக்கின்றாதா? துன்பத்தில் இருக்கும் மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசும் மனப்பக்குவம் நம்மில் இருக்கின்றதா? என ஆராய்வோம். உதாரணமாக எத்தனைபேர் உங்களுடைய தனிப்பட்ட ஜெபத்தில் சிரியா போன்ற நாடுகளில் துன்பங்களை அனுபவித்து வரும் மக்களுக்கு ஜெபிக்க முடிந்தது, சதையிலான இதயத்தை உடையவர்கள் என்றால் நிச்சயம் ஜெபித்து இருப்பீர்கள் இல்லையைன்றால் உங்களது இதயம் எப்படிப்பட்டது என்று இன்று சிந்தித்துப் பாருங்கள்! கோதுமை மனி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் அது பலன் தரும் அதுபோல கிறிஸ்தவ வாழ்வு என்பது கல்லான இதயத்தை கொண்டிருப்பது அல்ல மாறக சதையிலான இதயத்தைக் கொண்டு கடவுளின் இறைவாக்கினர்கள் போல வாழ்வது!

இன்று நான் கடவுளின் இறைவாக்கினனா? போலி இறைவாக்கினனா?