இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

எனக்கு பிடித்தது ஒளியா? இருளா?

1குறிப்பேடு 36:14-16, 19-23
எபேசியர் 2:4-10
யோவான் 3:14-21

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் வாரத்தை சிறப்பிக்கின்றோம். இந்த வாரம் எந்த பெயரால் அழைக்கப்படுகின்றது என்று யாருக்காவது தெரியுமா? இஸ்ராயேலரின் ஞாயிறு, அல்லது புண்ணிய பூமியாகிய எருசலேமின் ஞாயிறு என்று அழைக்கப்படுகின்றது.

இஸ்ராயேல் மக்கள் ஒளியைக்காட்டிலும் இருளையே அதிகம் விரும்பினர். என்பதற்கு சான்றாக இன்றைய முதல் வாசகம் இருக்கின்றது. இன்று
நீங்களும், நானும் ஒளியை அதிகம் விரும்புகின்றோமா? அல்லது இருளை அதிகம் விரும்புகின்றோமா? என்று இயேசு நம்மை பார்த்து கேட்க்கின்றார். “ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்”. எனவே இன்று நாம் ஒளியின் மக்களா? அல்லது இருளின் மக்களா? சிந்திப்போமா?

பிரியமானவர்களே இன்று நாம் அனைவருமே ஒளியையும் விரும்புகின்றோம், அதே வேளையில் இருளையும் விரும்புகின்றோம். அப்படித்தான? ஒளி என்பது பகல் என வைத்துக் கொண்டால் ஒளி நமக்கு மிகவும் முக்கியம். காரணம் அந்நேரத்தில் தான் நம்முடைய அன்றாட வேலைகளை நாம் செய்கின்றோம். அதே நேரத்தில் இருள் என்பதை இரவு என்று குறிப்பிட்டால் இரவு நம் அனைவருக்கும் மிகவும் முக்கியம். காரணம் ஓய்வு எடுப்பதற்கு இரவு நேரம் மிகவும் முக்கியம். ஆக ஒளி, இருள் ஆகிய இரண்டையும் சார்ந்த மக்கள் தான் நாம்.


கடவுள் சுட்டிக்காட்டும் ஒளியின் மக்கள் யார்? இருளின் மக்கள் யார்?

ஒரு தந்தையும், மகனும் பக்கத்து ஊரில் நடந்த மாதா திருவிழாவிற்கு சென்றுவிட்டு தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் அவர்கள் வந்த வண்டி பழுதாகிவிட்டது. அங்கிருந்து அவர்களுடைய ஊர் ஓரளவிற்கு நடந்து போய்விடும் தூரந்தான் இருந்தாலும் இருள் சூழ்ந்து விட்டது. வண்டி வேலை முடியக் கொஞ்சம் நேரம் எடுக்கும். வழியில் தெருவிளக்குகளும் எரியவில்லை. எனவே மெக்கானிக் அவர்களிடம் ஒரு டார்ச் லைட்டைக் கொடுத்து அவர்களை ஊருக்குப் போய் விட்டு மறுநாள் வந்து வண்டியை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்.

அவர்களும் புறப்பட்டனர். எப்படி நடந்து போனாலும் அவர்கள் வீடு போய்ச் சேர இரண்டு மணி நேரமாகும். அன்றைக்கென்று பார்த்து அம்மாவாசை இருட்டு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மகன், தந்தையிடம் கேட்டான்,
“அப்பா இந்த இருளைப் பார்த்தா உங்களுக்கு பயமாயில்லைப்பா?” அப்பா சொன்னார், “நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்” (மீக்கா 7:8) என்று சொல்லு. பயமெல்லாம் போயிடும் என்றார்.

மீண்டும் மகன் கேட்டான்,
“ஏம்பா, வழியெல்லாம் இத்தனை கல்லாக் கிடக்கே ? எங்கேயாச்சும் தடுக்கி விழுந்திட்டா?” அப்பா சொன்னார், “உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்”(திபா 91:12) என்கிற வசனத்தை நினைச்சுக் கிட்டா அந்த பயமும் வராது” என்றார்.

மீண்டும் மகன் கேட்டான்,
“இதெல்லாம் சரி. வழியில் ஏதாச்சும் ஆபத்தான மிருகமோ, விஷ ஜந்துக்களோ வந்தா ?” அப்பா புன்னகையுடன் அதற்கும் பதில் சொன்னார். “சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். 'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்”(திபா 91:13-14) என்றும் வசனம் இருக்குதே அதை நம்பினா போதுமே என்றார்.

எந்தக் கேள்வி கேட்டாலும் அப்பா, விவிலியத்திலிருந்தே பதில் சொல்வார் என்பது மகனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அப்பாவின் விசுவாசத்தைப் பார்ப்பதில் மகனுக்கு ஒரு சந்தோஷம். இப்போது மகன் கடைசியாக ஒரு கேள்வி கேட்டான்,
“சரிப்பா, இன்னும் கொஞ்ச நேரத்தில நாம வீட்டை நெருங்கிடுவோம், இந்த சின்னப் பயணத்துக்கு பைபிள் வசனம் ஆறுதல் கொடுக்குது. ஆனா வாழ்க்கைப் பயணம் பெருசாச்சே ? அது முழுசையும் இந்தச் சின்னச் சின்ன வசனங்களைக் கொண்டே கடந்து போயிட முடியுமா என்றான்?”

அப்பா ஒன்றும் சொல்லாமல் டார்ச்சை அவன் கையில் கொடுத்தார். இந்த டார்ச் வெளிச்சத்தை நம் வீடு வரைக்கும் தெரியிற மாதிரி காட்டேன் நாம ஈசியா நடந்து போயிடலாம்”
என்றார். மகன் சிரித்தான். “அப்பா, இது டார்ச்சுப்பா. இதால அதிக பட்சமா பத்தடி தூரத்துக்குத்தான் வெளிச்சம் காட்ட முடியும்” என்றான். அப்பா உடனே சொன்னார், “வெறும் பத்தடி தூரத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டுற டார்ச்சை வச்சுகிட்டு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டி வந்துட்டோம். இன்னும் கொஞ்சநேரத்தில் வீட்டிற்கு போகப்போறோம். இது நம்ம வீடு வரைக்கும் தெரியிற அளவுக்கு வெளிச்சம் தரலைன்னாலும், அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமா வழிகாட்டி நம்ம வீடு வரைக்கும் கொண்டு போய்விட்டிடும் . சாதாரண டார்ச் லைட் நம்மை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்க்குது என்றால் இதைவிட கடவுளின் வார்த்தை மேலானது இல்லையா? ஒவ்வொரு கட்டத்துக்கும் ஆவியானவர் கொடுக்கும் ஒவ்வொரு வசனத்தைப் பிடிச்சுக்கிட்டே நடந்து பார். வாழ்க்கைப் பயணத்தை ஈசியாக் கடந்துடலாம்” என்றார்.

அன்புக்குரியவர்களே இந்த தந்தை தனது வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் கடவுளை முன்னிறுத்தி, கடவுளின் ஒளியில் தன்னையும், தன்னுடைய பிள்ளைகளையும், தன்னுடைய குடும்பம் முழுவதையுமே நடத்துகின்றார். இப்படிப்பட்ட மனிதர்களின் செயல்படுகளை வைத்துத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்கின்றார்.

ஆனால் இன்றைய சூழலில் ஒளியைக்காட்டிலும் இருளை விரும்பும் மக்கள் தான் அதிகம். பகலில் செய்யும் வேலைகளை இரவிலும், இரவில் செய்யும் வேலைகளை பகலிலும் தைரியமாக நாம் செய்ய தொடங்கிவிட்டோம். இன்னும் ஒருசிலருக்கு இரவு-பகல் அனைத்துமே ஒன்றுதான். உதாரணமாக ஒரு 10-20 ஆண்டுகளுக்கு முன்பாக பகலில் வேலை செய்துவிட்டு களைப்பிற்காக இரவு நேரங்களில் மதுபானங்களை குடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் வந்து உறங்கிவிடுவர். ஆனால் இன்று பகல் முழுவதும் குடித்துவிட்டு, பகல் முழுவதும் மதுக்கடைகளை திறந்து வைத்து காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.

விபச்சாரம் என்ற தொழில் இரவு பகல் என்று பாராமல் நடந்து வருகின்றது. சேலம், சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பேருந்து நிலையத்தைச் சுற்றி சுற்றி மக்கள் இப்படிப்பட்ட தொழிலுக்காவே காத்திருக்கின்றனர். காமராஜர் மக்களின் அறிவுக்கண்ணை திறந்து இருட்டில் வாழ்ந்த மக்களை ஒளிக்கு கொண்டுவர பள்ளிக்கூடங்களை திறந்து அதையே அரசாங்கம் தான் ஏற்று நடத்த வேண்டுமென்று கட்டளையிட்டார். அன்று இருளுக்கு அழைத்துச் செல்லும் இதுபோன்ற மதுக்கடைகளை தனியார் நிறுவனம் நடத்தி வந்தது. ஆனால் இன்று பள்ளிக்கூடம் தனியாரிடமும், மதுக்கடைகள் அரசாங்கத்திடமும் இருந்து வருகின்றது. மதுக்கடைகளை அரசாங்கமே ஏற்று நடத்துகின்றது. இப்படிப்பட்ட சூழலில் நம்முடைய வாழ்க்கைப் பயணம் ஒளியை நோக்கி பயனிக்கின்றதா? அல்லது இருளை நோக்கி பயனிக்கின்றதா?

மேலும் குறிப்பாக கடந்த வாரங்களில் நமது தேசத்தில் நடந்த பிரட்சனைகளை வைத்து பார்க்கும் போது இன்றும் நாம் இருளில் தான் வாழ்கின்றோம் என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றது. உதாரணமாக செங்கல்பட்டு அருகில் நடந்து வந்த கருணை இல்லம். இங்கு தெருவோரங்களிலும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களையும், யாரும் அரவணைக்க ஆள் இல்லாத மக்களையும், இருளிலே சாகப்போகின்றோம் என்று வாழ்ந்த மக்கள் அனைவரையும் ஒளிக்கு அழைத்து வந்து, சாகின்ற தருவாயில் நிம்மதியாக இறக்க உதவிசெய்த அந்த கருணை இல்லம் இன்று இருளின் கூடாரம் என்று முத்திரை குத்தியது, மேலும் ஊடகங்களும் அதை மிகைப்படுத்திய செய்திகளைத்தான் பதிவு செய்தது. ஆனால் இது உண்மையிலே கருணை இல்லம் அல்லது ஒளியின் இல்லம் என்று எத்தனை பேருக்கு தெரியும்? இது உள்நாட்டு இருளின் ஆட்சியை படம் பிடித்து காட்டுகின்றது.

உலக நாடுகளில் நாம் பார்க்கும் இருளின் ஆட்சி இதைவிடக் கொடுமையானது, கொடுரமானது. உதாரணமாக சிரியாவில் நடந்தேறும் போர். உலகிலே மிக வல்லரசாக திகழும் இரண்டு பெரிய நாடுகள் தங்களுக்குள் யார் பெரியவன்? என்பதை நிருபிப்பதற்காக சிரியாவைத் தத்து எடுத்து இன்று ஆயிரக்கணக்கான மக்களையும், சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளையும், ஈவு இரக்கமின்றி காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்து வருகின்றனர். இரண்டு வல்லரசு நாடுகளும் இருளில் வாழும் மக்களை ஒளிக்கு கொண்டுவந்து அவர்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டியது அரசாங்கங்களின் கடமை. ஆனால் மக்களில் வாழ்வில் ஒளியேற்றுவதற்குப் பதிலாக உலகமே சேர்ந்து அவர்களது கல்லறைகளில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆம் அன்புக்குரியவர்களே, கோடி கோடியாய் கொள்ளையடித்த மனிதர்கள் சந்தோசமாக ஒளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் 1000, 500 என்று கடன் பெற்றவர்கள் இருட்டிலே வாழ்ந்து, தங்களது வாழ்வை தீயிலே கருகிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நீங்களும், நானும் வாழ்ந்து வருகின்றோம். ஆக உள்நாட்டு மக்களும் இருளில் வாழ்கின்றனர், உலக நாட்டு மக்களும் இருளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலைக்கு மத்தியில் இன்று நமது வாழ்வு இருளை நோக்கி செல்கின்றதா? அல்லது ஒளியை நோக்கி செல்கின்றதா?

இன்றைய முதல் வாசகத்தில் யூதாவை ஆண்ட அரசர்களின் வாழ்வும், அந்த மக்களின் வாழ்வும் இருளை மையப்படுத்தியதாக இருக்கின்றது. அப்படி இருளில் வாழ்ந்த மக்களுக்கு கடவுள் தாமே தக்க தண்டணையைக் கொடுக்கின்றார். 36-ம் அதிகாரம் தொடக்கத்தில் பார்த்தோமானல்
யோசியாவின் மகன் யோவகாசு எருசலேமிற்கு அரசனாகின்றான். அப்போது வயது 23. இவன் மக்களிடம் 4000 கிலோ கிராம் வெள்ளியையும், 40 கிலோ கிராம் பொன்னையும் கப்பமாக செலுத்த மக்களுக்கு கட்டளையிடுகின்றான். கடவுளின் கட்டளைகளை மீறி ஆட்சி செலுத்துகின்றான். எனவே எகிப்து மன்னன் அவனை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துகின்றான்.

அதைத் தொடர்ந்து
யோயாக்கிம் அரசானாகின்றான். அப்போது அவனுக்கு வயது 25. இவனும் கடவுளின் பார்வையில் தீயதை செய்கின்றான். (கடவுளின் பார்வையில் தீயது எது? பத்துக்கட்டளைகளை மீறுவது), மேலும் யோயாக்கிமின் பிற செயல்களும், அவன் செய்த அருவருப்பானவையும் அவனுக்கு எதிராய் காணப்பட்டவை யாவும் யூத அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன என்கிறது விவிலியம். இப்படிப்பட்ட இருளில் வாழ்ந்த அரசனை நெபுகத்நேசர் வென்று வெண்கலச்சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு சிறைபிடித்து செல்கின்றான்.

அதன் பின்
யோயாக்கிமின் மகன் யோயாக்கின் அரசானாகின்றான். அப்போது அவனுக்கு வயது 8. இந்த 8 வயதிலேயே கடவுளின் பார்வையில் தீயதை செய்கின்றான். மீண்டும் நெபுகத்நேசர் வந்து இவனையும் பாபிலோனுக்கு சிறைபிடித்து செல்கின்றான். அதன் பிறகு செதேக்கியா அரசனாகின்றான். அப்போது அவனுக்கு வயது 21. இவனும் கடவுளாம் ஆண்டவர் பார்வையில் தீயதை செய்கின்றான். இவனோடு சேர்ந்து யூதாவில் இருந்த குருக்களும், குருக்களின் தலைவர்களும், மக்கள் அனைவரும் சேர்ந்து கடவுளுக்கு அருவருப்புகளைச் செய்து, உண்மையற்றவர்களாய், கடவுளின் இல்லமாகிய எருசலேமை தீட்டுப்படுத்துகின்றனர்.

ஆனாலும் கடவுள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு நிச்சயம் இந்த மக்கள் இறைவாக்கினர்களின் குரலுக்கு செவிசாய்த்து தங்களது தீய வழியில் இருந்து திரும்பி ஒளியின் மக்களாக, கடவுளின் பிள்ளைகளாக வாழ்வார்கள் என நினைத்து கடவுள் தன்னுடைய இறைவாக்கினர்களை அனுப்புகின்றார். ஆனால் நடந்தது என்ன? இந்த மக்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்களின் வார்த்தைகளை புறக்கணித்து, இறைவாக்கினர்களை இழித்துரைக்கின்றனர். இந்த இஸ்ராயேல் மக்களின் தீச்செயலை எரேமியா இறைவாக்கினர் தன்னுடைய புத்தகம் 7 வது அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு செவி சாய்க்கவும் இல்லை; அவருடைய வார்த்தையை கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்கள் தங்களுடைய தீய உள்ளத்தின் படியே நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று. அப்போது ஆண்டவர் யூதாவின் மக்கள் என் கண்முன் தீமை செய்தனர் என்கிறார் ஆண்டவர். இம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும், நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். யாரும் அவற்றை விரட்ட மாட்டார்கள். அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும் என்கின்றார் ஆண்டவர்.

இப்படி எந்த வகையிலும் திருந்தாத மனிதர்களை என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய பதில் என்ன?

இதைத்தான் கடவுளும் செய்தார். கல்தேயர்கள் படை எடுத்து வந்து இந்த இஸ்ராயேல் மக்களின் உரிமை சொத்தாகிய ஆண்டவரின் இல்லத்தில் இருந்த இளம் வீரர்கள், இளைஞர்கள், கன்னியர்கள், முதியோர்களையும், எவர் மேலும் இரக்கம் காட்டாமல் அனைவரையும் கொன்றொழிக்கின்றான். மேலும் கடவுளின் இல்லங்களை எரித்து, எருசலேம் மதில் சுவர்களை தகர்த்து, தன்னுடைய வாளுக்கு தப்பியவர்கள் அனைவரையும் அடிமையாக தனது நாட்டிற்கு கடத்திச் செல்கின்றான். ஓய்வு நாளை கடைபிடிக்காததால் 70 ஆண்டுகள் யூதா பாழாய்க்கிடக்கும் என்ற இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

ஆம் அன்புக்குரியவர்களே, கடவுள் தான் படைத்து, பாதுகாத்து, பராமரித்து வந்த இஸ்ராயேல் மக்களை ஒளியின் மக்கள் என்று அழைத்தார். ஆனால் எப்போது ஒளியை விட்டு இந்த மக்கள் இருளுக்குச் சென்றனரோ தன்னுடைய இறைவாக்கினர்களை அனுப்பி அவர்கள் திருந்தி வாழ அழைப்பு விடுத்தார். யாரெல்லாம் திருந்தி ஒளியை நோக்கி வந்தனரோ அனைவருமே கடவுளின் இரக்கத்தை பெற்றுக் கொண்டனர்.
(உதாரணமாக யோனா - நினிவே மக்கள்) ஆனால் யாரெல்லாம் திருந்தாமல் இருளிலே வாழ்ந்தனரோ அவர்கள் அனைவரையும் கடவுள் நாடு கடத்தி அடிமைகளாக வாழவும், அதன் பிறகு தங்களுடைய தவறுகளை உணர்ந்து கடவுளிடம் திரும்பி வரும்போது கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கின்றார்.

இன்றை முதல் வாசகத்தின் முடிவிலே பாரசீக அரசன் சைரசு மன்னன் யூத மக்களை விடுவித்து அவர்களுக்கு வேண்டிய பொன், பொருள் அனைத்தையும் கொடுத்து மீண்டும் திருந்தி எருசலேமில் குடியேறவும், ஒளியின் மக்களாக வாழவும் அனுப்பி வைக்கின்றான். ஆக எருசலேம் அழிந்து மீண்டும் உருவாக்கப்பட்டது. அதனால்த் தான் இந்த ஞாயிறு புண்ணிய பூமியாகிய எருசலமின் ஞாயிறு என்று அழைக்கப்படுகின்றது. இருளில் வாழ்ந்த மக்கள் தங்களது தவற்றை உணர்ந்து ஒளியை நோக்கி வந்தனர்.
இன்று நமது குடும்பம் ஒளியாகிய கிறிஸ்துவை நோக்கி பயனிக்கின்றதா? அல்லது இருளாகிய சாத்தானை நோக்கி பயணிக்கின்றதா?

நம்முடைய கடவுள் மிகவும் இரக்கம் நிறைந்தவர் என்பதை தூய பவுல் இரண்டாம் வாசகத்தில் நமக்கு விளக்குகின்றார். “கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது அன்பு கொண்டுள்ளார். நமது குற்றங்களின் காரணமாக இருளில் வாழ்ந்து இறந்தவர்களாயினும் அவருடைய அன்பின் மூலம் நாம் அவரோடு இணைக்கப்பட்டுள்ளோம். இப்படி கடவுள் நம்மை மீட்டது நம்முடைய செயல் அல்ல மாறக கடவுளின் கொடை நமக்கு கிடைத்துள்ளது. எனவே நீங்களும் நானும் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் என்றால் நற்செயல் செய்வதற்காகவும், இருளில் வாழும் மக்களை ஒளியில் கொண்டுவரவும் கடவுள் நம்மை மீட்டுள்ளார். எனவே நம்முடைய குடும்பங்கள் ஒளியை நோக்கி செல்கின்றனவா? அல்லது இருளை நோக்கி செல்கின்றனவா?

பிரியமானவர்களே இந்த தவக்காலத்தில் நாம் அனைவரும் ஒளியின் பிள்ளைகளாக வாழ மீண்டும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக கடவுள் அழைப்பு விடுக்கின்றார். மோயீசன் பாலை நிலத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்தி இருளில் வாழ்ந்த மக்கள், இறக்கின்ற தருவாயில் இருந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் மீட்டு கடவுளிடம் கொண்டு வந்தார். இன்றும் கல்வாரியில் தொங்கிக் கொண்டிருக்கும் அதே இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் உற்றுநோக்கு கின்றனரோ அவைருக்குமே மீட்பு உண்டு என அழைக்கின்றார்.
1 கொரிந்தியர் 1 : 18 ல் தூய பவுல் சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை என்கின்றார். இந்த தவக்காலத்தில் எத்தனைபேர் சிலுவையை உற்று நோக்கி தியானிக்கின்றோம்.

இப்படி கொடுர சிலுவையில் தன்னுடைய மகன் மரிக்க வேண்டும் எனத் தெரிந்தும் கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகிற்கு அனுப்பினார் காரணம் கடவுள் உங்களையும் என்னையும் மிகுந்த அன்பு செய்கின்றார்.
“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்”.

இப்படி ஒளியாகிய இயேசு இவ்வுலகிற்கு வந்திருந்தும் உங்களுடைய, என்னுடைய செயல்கள் தீயனவாய் இருப்பதால் நாம் ஒளியைவிட இருளையே விரும்புகின்றோம். இது தெரிந்து மீண்டும், மீண்டும் நீங்களும், நானும் இருளில் தான் வாழ்வேன் என முடிவு எடுத்தால் நம்முடைய தண்டனைத் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை கடவுள் நமக்கு தெரியப்படுதியுள்ளார். தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

உதாரணமாக யூதாசு இஸ்காரியோத் இவருடைய வாழ்வு இருளை நோக்கி இருந்தது. தான்தான் இயேசுவை காட்டிக் கொடுத்தேன் என்று சொன்னால் தான் செய்த தீச்செயல் வெளியாகிவிடும் என பயந்து தற்கொலை செய்து கொள்கின்றான். ஆனால் அதே நேரத்தில் நான் ஒரு பாவி, நான் என்னுடைய அன்றாட செயல்களினால் இருளில் வாழ்கின்றேன் என உணர்ந்து, திருந்தி கடவுளிடம் நோக்கி வரும்போது கடவுள் உங்களையும், என்னையும் அபரிவிதமாக ஆசீர்வதிக்கின்றார்.

அப்படித்தான் பேதுரு என்னை மூம்முறை மறுதலிப்பாய் என இயேசு அறிவுறுத்தியும் தன்னுடைய சுயநலத்தால் பேதுரு இயேசுவை யார் என்றே தெரியாது என மறுதலிக்கின்றார். ஆனாலும் தன்னுடைய தவற்றிற்காக மனம் வருந்தி, ஒளியாகிய இயேசுவை நோக்கி வருகின்றார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இன்று புனிதராக இருக்கின்றார். ஆம் பிரியமானவர்களே உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும் என்கின்றார் இயேசு.

எனவே இன்று நாம் ஒளியின் மக்களா? அல்லது இருளின் மக்களா? எனது வாழ்க்கை ஒளியை நோக்கி பயனிக்கின்றதா? அல்லது இருளை நோக்கி பயனிக்கின்றதா? சிந்திப்போமா