இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

எனது விசுவாசம் அடையாளங்களிலா? ஆண்டவனிலா?

விடுதலைப்பயணம் 20:1-17
1 கொரிந்தியர் 1:22-25
யோவான் 2:13-25

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தை சிறப்பிக்கின்றோம். இந்த தவக்காலத்தின் மூன்றாம் வாரம் எந்த பெயரால் அழைக்கப்படுகின்றது என்று யாருக்காவது தெரியுமா?

திருவருகைகாலத்தில் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கின்றது. அதைப்போலவே தவக்காலத்திற்கும் ஒவ்வொரு வாரத்திற்கும் ஓவ்வொரு பெயர் இருக்கின்றது. யாருக்காவது தெரியுமா? சாமி இதெல்லாம் யாருக்கு தெரியும்? ஏதாவது நடிகர்கள் படத்தை கேளுங்கள் சொல்கின்றோம். அப்படித்தான! இது தான் நம்முடைய விசுவாசம். பிரியமானவர்களே, இன்றைய வாசகங்கள் வழியாக நமது விசுவாசத்தை அடையாளம் காண கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

அன்புக்குரியவர்களே,
அடையாளங்கள் என்றால் என்ன?

அடையாளங்கள் என்பது ஏதாவது ஒன்றை சுட்டிக்காட்டுவது. சுட்டிக்காட்டுவது மட்டும் தான் அதனுடைய வேலை. அது அதுவாக இருக்க வேண்டியதில்லை. உதாரணமாக கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூறுவார். தூரத்தில் உள்ள ஓர் மலைக்குப் பின்னால் புகை வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்த புகையை பார்த்த மாத்திரத்தில் நாம் என்ன நினைப்போம் அங்கு ஏதோ தீ பற்றி எறிகிறது எனவே புகை மேலே எழும்புகிறது என நாம் அறிந்துகொள்கின்றோம். அந்த புகையானது தீ கிடையாது மாறாக தீ எரிவதை சுட்டிக்காட்டுகின்றது. அங்கு புகையானது தீயின் அடையாளமாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

அதைப்போலத்தான் நம்முடைய அன்றாட வாழ்விலும் நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. பல வேலைகளில் அடையாளங்களை வைத்துதான் நம்மை நாம் அறிமுகப்படுத்திக் கொள்கின்றோம். உதாரணமாக பலர் கூறுவதுண்டு இந்த குழந்தை அவங்க தாத்தா மாதிரி அப்படியே இருக்கு. அப்படியானால் இந்த குழந்தை தாத்தா கிடையாது. மாறாக தாத்தாவின் அடையாளத்தை, சாயலை ஒத்திருக்கின்றது. இங்கு அந்த குழந்தை தாத்தாவின் அடையாளமாக இருக்கின்றது.

அப்படியேத்தான் நம்முடைய திருச்சபையிலும் அன்றாடம் நாம் பல வித அடையாளங்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் பல நேரங்களில் அடையாளத்தை நாம் கெட்டியாக பிடித்துக்கொண்டு அடையாளங்கள் சுட்டிக்காட்டுவதை நாம் மறந்துவிடுகின்றோம். தவக்காலம் என்று சொன்னாலே பலவித அடையாளங்களை நாம் பின்பற்றுகின்றோம். உதாரணமாக இறைச்சி சாப்பிடுவதில்லை, விரதம் இருப்போம் என்று பல அடையாளங்கள்தவக்காலத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றது. ஆனால் உண்மையிலே இந்த தவக்காலம் நமக்கு சுட்டிக்காடுவது என்ன?

யோவேல் 2:12-14-ல் “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, மட்டும் இருக்காமல் உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர். நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்கின்றார். அதைப்போலவே நினிவே நகரத்து யேனாவின் சுட்டிக்காட்டிய அடையாளத்தை நம்பி மக்கள் சாக்கு உடை என்ற அடையாளத்தை அணிந்து கொண்டு மனம்மாறி கடவுள் மீது விசுவாசம் கொள்கின்றனர். ஆக இந்த தவக்காலத்தில் இருக்கும் நமக்கு தவக்காலத்தில் இருக்கும் அடையாளங்கள் முக்கியமா? அல்லது அந்த அடையாளங்கள் சுட்டிக்காட்டுபவை முக்கியமா?

அன்புக்குரியவர்களே உதாரணமாக ஆண்டவர் இயேசு யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு யோவானால் முழுக்கு ஞானஸ்தானம் பெற்றார். அப்போது இரண்டு அடையாங்களை நாம் பார்க்க முடிகின்றது. ஒன்று இயேசு தண்ணீரில் திருமுழுக்கு பெற்றார் என்பது, இரண்டாவது தூயஆவியார் புறா வடிவில் பேசியது. ஆனால் இன்று குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத சூழல் இத்தருனத்தில் இயேசு முழுக்கு ஞானஸ்தானம் பெற்றார் எனவே நீங்கள் அனைவரும் முழுக்கு ஞானஸ்தானம் பெற்றால் தான் மீட்பு என்று சொல்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா? இல்லை. ஆனால் பலபேர் நம்மில் முழுக்குஞானஸ்தானம் தான் பெறவேண்டும் என வாதாடுகின்றனர். ஆக முழுக்குஞானஸ்தானம் என்ற அடையாளத்தை தூக்கிபிடித்துக் கொண்டு அந்த அடையாளம் சுட்டிக்காட்டும் திருமுழுக்கினால் நமது பாவம் கழுவப்படுகின்றது, கிறிஸ்துவுக்குள் இணைக்கப்படுகின்றான், திருச்சபையில் ஓர் உறுப்பினராக சேர்கப்படுகின்றார் என்ற தன்மையை மறந்து விடுகின்றோம்.

மற்றொரு கேள்வி.
உங்களுக்கு அன்னை மரியாள், புனிதர்கள் முக்கியமா? அல்லது இயேசு முக்கியமா?

அன்னை மரியாள், புனிதர்கள், நமக்கு முக்கியம் தான் அதேவேளையில் இயேசு அதிக முக்கியம். அன்னை மரியாளும், புனிதர்களும் அவர்களுக்காக அவர்கள் வாழவில்லை. மாறாக இயேசுவுக்காக வாழ்ந்தனர், இயேசுவை சுட்டிக்காட்டி வாழ்ந்தனர். உதாரணமாக யோவான் நற்செய்தி 2:5-ல் அன்னை மரியாள் அங்கிருந்தவர்களைப் பார்த்து “அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்” என்று இயேசுவை அறியாதவர்களுக்கு இயேசு யார் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

அன்புக்குரியவர்களே நம்மில் பலபேர் வேளங்கண்ணிக்கு மாலை பேட்டு விரதம் இருந்து 5 முதல் 10 நாட்கள் நடந்து செல்வார்கள். வேளாங்கண்ணிக்கு சென்றவுடன் அங்கு கோவிலில் அவர்கள் செலவிடக்கூடிய நேரம் மிகவும் குறுகியது. உதாரணமாக நடந்து வந்த களைப்பில் ஒருமணிநேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டும், போட்டோ எடுத்துக் கொண்டும் திருப்பலியில் பங்கெடுப்பர், கடலில் சென்று மணிக்கணக்கில் குளிப்பர், மொட்டையடிப்பர், மாலையை வாங்கிக்கொன்டு வரிசையில் சென்று மாதவுக்கு காணிக்கையிடுவர், அவ்வளவுதான் அவர்களது பக்தி.

அதன்பிறகு கடைவீதிகளுகுச் சென்று பல மணிநேரம் பொருட்கள் வாங்க செலவிடுவர், சமைத்து சாப்பிடுவதற்கு பல மணிநேரங்களை ஓதுக்குவர், ஆனால் எத்தனை பேர் பக்தியாக ஒரு 2 மணி நேரமாவது அன்னை மரியாள் சுட்டிக்காட்டும் நற்கருணை நாதரிடம் சென்று நேரம் செலவிடுகின்றனர். ஆலயத்தை சுற்றி சுற்றி வருவோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் தனிமையில் ஆண்டவரோடு உரையாட செல்கின்றோம்? இன்று நாம் வேளங்கண்ணிக்கு நடந்து செல்லவேண்டும் என்ற அடையாளங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடையாளம் சுட்டிக்காட்டும் கடவுளை தரிசிக்க மறந்துவிடுகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோயீசன் வழியாக இஸ்ராயேல் மக்களுக்கு 10 கட்டளைகள் அடங்கிய பேழை என்ற அடையாளத்தை கொடுக்கின்றார். ஆனால் இந்த மக்களோ 10 கட்டளைகள் தாங்கிய பேழையை கவனமாக பாதுகாத்தனர். ஆனால் 10 கட்டளைகளை கடைபிடித்தனரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். நம்முடைய இஸ்ராயேல் மக்களோ ஆரோன் வைத்திருந்த கோள், மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடி, இவற்றோடு இந்த பத்துக்கட்டளைகளையும் உடன்படிக்கை பேழைக்குள் வைத்து பூட்டி எங்கு சென்றாலும் அதை தூக்கிக்கொண்டே சென்றனர். உடன்படிக்கை பேழையை கடவுளின் பொக்கிக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். ஆனால் உடன்படிக்கை பேழைக்குள் இருந்த 10 கட்டளைகளை வாழ்வாக்க, அவற்றை கடைபிடிக்க மறந்துவிட்டனர்.

உதாரணமாக அந்த 10 கட்டளைகளில் முதலாவதாக இருப்பது
“நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” என்றார் கடவுள். ஆனால் நம்முடைய இஸ்ராயேல் மக்கள் என்ன செய்தனர். தங்களை பாதுகாக்க சிலைகளை செய்து அவற்றை கடவுளாக வணங்க ஆரம்பித்தனர். அதே தவற்றைத்தான் இன்றுவரை நாமும் செய்து வருகின்றோம்.

மேலும் கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே, பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே, பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே என்றார் கடவுள் ஆனால் இஸ்ராயேல் மக்கள் என்ன செய்தனர் கடவுள் கூறியதற்கு மாறாக அத்தனையையும் செய்தனர். ஏன் இன்று நாமும் அவர்களைப்போலத்தான் நாமும் கடவுள் சொன்ன எதையும் கடைபிடிக்காமல் வாழ்ந்து வருகின்றோம்

உதாரணமாக இன்று நமக்கு எத்தனை கடவுள்கள் இருக்கின்றனர்?

பணம் என்ற கடவுள், பதவி என்ற கடவுள், பட்டம் என்ற கடவுள் செல்வாக்கு என்ற கடவுள், இப்படி பல கடவுள்கள். இந்த கடவுளை நோக்கித்தானே நாமும் வாழ்ந்து வருகின்றோம். பணத்தை சம்பாதிக்க குறைந்த பட்சம் 5 முதல் 8 மணிநேரம் செலவிடுகின்றோம். ஆனால் கடவுளை சம்பாதிக்க, கடவுளை அறிந்துகொள்ள நாம் செலவிடும் நேரம் எவ்வளவு? ஒவ்வொருவரும் நீங்களே உங்கள் பதிலை கண்டுபிடியுங்கள்.

மேலும் “உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே” என்றார் கடவுள். ஆனால் இன்று நாம் என்ன செய்கின்றோம் எத்தனைமுறை “கடவுள் சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாது” என்று கடவுள் பெயரால் நாம் வீணாண செயல்களுக்கெல்லாம் சத்தியம் செய்கின்றோம். இந்த கூட்டத்தில் சத்தியம் செய்யாதவர்கள் யாரேனும் உண்டா?

“ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்” என்றார் கடவுள். இன்று நம்மில் எத்தனை பேர் ஓய்வுநாளை கடவுளுக்காக அர்ப்பணித்து அவர் சொல்படி நடக்கின்றோம்? ஆறுநாட்களும் உழைக்கின்றோம், ஏழாம் நாளும் சேர்த்து உழைக்கின்றோம். எதற்காக பணம், பதவி என்ற கடவுளை அடைந்துகொள்ள. கொலை, கொள்ளை, அடுத்தவர் பொருளின் மீது ஆசை என்று கடவுள் கூறிய அனைத்து கட்டளைகளையும் மீறி வாழ்ந்து வருகின்றோம். இஸ்ராயேல் மக்கள் காலத்திலாவது அவர்கள் படிக்கத் தெரியாதவர்கள், எனவே கடவுள் கட்டளைகளை மீறினார்கள் எனச் சொல்லலாம், ஆனால் இன்று நாம் அனைவரும் படித்த மேதைகள், ஆனாலும் கடவுளின் கட்டளைகளை கடைபிடிப்பது கிடையாது. ஆனால் அடையாளங்கள் நமக்கு முக்கியம். உதாரணமாக பங்குபேரவைத் தலைவர் என்ற அடையாளம், கிறித்தவர் என்ற அடையாளம் முக்கியம் ஆனால் கிறிஸ்து காண்பித்த வழிகளில் நாம் நடப்பது கிடையாது.

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் நம் ஒவ்வொருவருக்கும்
ஒன்று சுய புத்தி இருக்க வேண்டும், அல்லது சொல்வார் புத்தியாவது இருக்கனும் இரண்டும் இல்லையென்றால் நமக்கும் இப்படித்தான் நடக்கும். நடந்தது என்ன?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, உங்களைப் போன்ற என்னைப் போன்ற மனிதர்களையும், அடையாளங்களை மட்டும் முன்னிலைப்படுத்தி ஆண்டவனை மறந்த மக்களை அடித்து விரட்டுகின்றார். ஆண்டவரின் இல்லத்தை விற்பணைக் கூடரமாக மாற்றியதற்காக மனிதர்களை விரட்டியடிக்கின்றார்.

ஆண்டவர் குடியிருக்கும் இல்லம் எது?

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் உடன்படிக்கை பேழை கடவுள் வாழும் கூடாரமாக பார்கப்பட்டது. அதன் பிறகு கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் கடவுளின் இல்லமாக பார்க்கப்பட்டது. ஆக, கோவில்கள் நம்பிக்கைகுரியவர்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது. இந்த அடையாளத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடையாளம் சட்டிக்காட்டும் கடவுளையும், அந்த கடவுள் கற்பித்த கட்டளைகளையும் மக்கள் மறந்து விட்டனர். எனவே தான் கடவுளின் இல்லமாகிய கோவிலை சந்தைக்கூடாரமாக்கினர்.

இன்றும் நமது கோவில்கள் சந்தைக்கூடரங்களாகத்தானே மாறிவருகின்றது. 1ரூபாய்க்கு விற்கும் மெழுகுதிரி திருத்தலங்களில் 2ரூபாய், அந்த 2ரூபாய் மெழுகுதிரியும் 2 நிமிடங்கள் கூட எரியாது. கோவில் பணியாளர்கள் அதை எடுத்து மீண்டும் மறுசுழற்ச்சியில் விற்பணை செய்து விடுகின்றனர், சாதாரண தண்ணீர் தீர்த்தம் என்ற பெயரில் காசுக்கு விற்கப்படுகின்றது, எண்ணெய்யை பாட்டிலில் அடைத்து மாத எண்ணெய், புனிதர்களின் எண்ணெய் என்று பணத்திற்காக விற்கப்படுகின்றது, இன்னும் இதைப்போன்ற பொருட்களை விற்கும் சந்தைக் கூடாரங்களாக ஆண்டவரின் இல்லம் மாறிவருகின்றது. ஆக இன்று கடவுளை அடையாளப்படுத்தும் திருத்தலங்கள், கோவில்கள் முக்கியமாகிப்போனது, எதற்காக? பொருட்களை விற்பதற்காக!

ஆனால் அந்த கோவிலில் வாழும் கடவுள் நமக்கு முக்கியமாக தெரிவதில்லை. இப்படிப்பட்ட மக்களைத்தான் அன்று
இயேசு கயிரால் சாட்டை பிண்ணி அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார். இன்று இயேசு சாட்டையை எடுத்தால் நமது நிலைமை என்னவாகும்?

இரண்டாவதாக தூய பவுல் 1கொரிந்தியர் 6:19-ல் உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள் என்கின்றார். ஆக கடவுளின் இல்லம் என்பது நமது உடல் என்பதை பவுல் நமக்கு உறுதிபடுத்துகின்றார். இந்த கருத்தைத்தான் தொடக்க நூலில் நாம் பார்க்கின்றோம் கடவுள் மண்ணை பிசைந்து மனிதனை தன்னுடைய சாயாலாக படைத்தார் என்று. ஆக நாம் அனைவரும் கடவுளின் அடையாத்தை பெற்றிருக்கின்றோம். கடவுளின் அடையாளத்தை பெற்றுள்ள நமது உடலை நாம் எவ்வாறெல்லாம் கடவுளுக்கு உகந்த முறையில் பயன்படுத்தி வருகின்றோம்.

இன்று மனித உடல்கள் விளம்பரப் பலகையாக மாறிவருகின்றது. உதாரணமாக பெண்களின் உடல்கள் சந்தைப்பொருளாக மாறிவிட்டது. உடலின் வெளிப்புற தோற்றத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் அதேவேளையில் உடலின் உட்புறத்தோற்றத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த மனித உடல் வெறும் அடையாளம் மட்டும் தான். மனிதன் என்ற அடையாளத்தை கொடுக்கின்றது. ஆனால் இந்த மனித உடல் கடவுள் வாழும் இல்லம் என்று எப்பொழுது ஒருவன் நினைக்கின்றானோ அப்போது தான் அவனிடத்தில் கடவுளின் ஆசீர்வாதம் வந்து தங்கும். இயேசுவும் இன்றை நற்செய்தியில் தன்னுடைய உடலைப் பற்றி பேசுகின்றார். ஆனால் அந்த மக்களோ எருசலேம் கோவிலை மட்டும் பற்றி சிந்திக்கின்றனர்.

யூதர்கள் இயேசுவைப் பார்த்து,
"இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள். ஆனால் இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

இன்று கடவுள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட கோவில் எந்த நிலைமையில் இருக்கின்றது? சிந்திப்போம். நமக்கு அடையாளங்கள் முக்கியமா? அல்லது அடையாளங்கள் சுட்டிக்காட்டுபவை முக்கியமா?

இரண்டாவது வாசகத்திலே தூய பவுல் கூறுகின்றார்
“யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், (குறிப்பாக இன்று ஆலயம் வந்துள்ள) உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்”.
இன்று என்னுடைய விசுவாசம் அடையாளங்களில் இருக்கின்றதா அல்லது என்னுள் உறைந்திருக்கும் ஆண்டவனில் இருக்கின்றதா?


பிரியமானவர்களே தொடக்கத்தில் கேட்டது போல இந்த தவக்காலத்தின் மூன்றாம் வாரம் எந்த பெயரால் அழைக்கப்படுகின்றது என்று யாருக்காவது தெரியுமா? தவக்காலத்தின் முதல் ஞாயிறு சோதனைகளின் ஞாயிறு தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு ஆபிரகாமின் ஞாயிறு அல்லது உருமாற்றத்தின் ஞாயிறு. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு இன்று மோயீசன் ஞாயிறு.