இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

கடவுள் பார்த்துக் கொள்வார்

தொடக்க நூல் 22:1-2,9-13,15-18
உரோமையர் 8:31-34
மாற்கு 9:2-10

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தை சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஒருமுறை ஒரு மனிதன் கடவுளை நோக்கி கடும் தவம் இருந்து வந்தான். ஒருநாள் கடவுள் அவனுக்கு காட்சி அளித்து வழக்கம்போல என்ன வரம் வேண்டுமென அவர் கேட்க, பரிசுச்சீட்டில் 1 கோடி ரூபாய் வரவேண்டுமென்று தன் வரத்தை அவன் கடவுளிடம் முன்வைத்தான். அப்படியே ஆகட்டும் என்று கடவுள் அவன் கேட்ட வரத்தை அளித்துவிட்டு மறைந்து விட்டார். இவனுக்கு மகா மகிழ்ச்சி. ஊரெங்கும் சென்று 1 கோடி கிடைத்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்தான். ஏகப்பட்ட சொத்துக்களை தவணை முறையில் வாங்கி குவித்து ஏகபோகமாக இருந்தான். வரம் கொடுத்தவர் கடவுளாயிற்றே, நம்பாமல் இருக்க முடியுமா என்ன? சில நாட்கள் சென்றன. பரிசுச்சீட்டு முடிவுகளும் வெளிவந்தன.

ஆனால் இவன் பெயர் அதில் இல்லவேயில்லை. நாளிதழை நாலாபுறங்களிலும் திருப்பித்திருப்பி பார்த்தான், நிச்சயமாக இல்லவேயில்லை. அவன் இதயம் சுக்குநூறாய் உடைந்து போனது. அனைத்து சொத்துக்களும் இவனிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. கடன் தொல்லை வேறு மிக அதிகமாகிவிட்டது. ஊருக்குள் தலைகாட்ட முடியாமல், அவமானம் தாங்காது தற்கொலை அவன் செய்துகொண்டான்.

இறந்துபோன அவனின் ஆன்மா மேலோகம் சென்றது. அங்கே கடவுள் இருக்கும் இடத்தை தேடி சென்று அவரைக்கண்டு கேள்விகளை வீசினான். "நான் என்னயா தப்பு பண்ணேன்? நீ வரம் கொடுத்தத நம்பினேன், அது தப்பா? உனக்கு சொல் சுத்தம் இல்லையா?", என்று ஏகவசனங்கள் பேசினான். கடவுள் அவர் இருக்கையில் இருந்து இறங்கிவந்து, இவன் கன்னத்தில் 'பொளேர்' என்று ஒரு அறை விட்டார். “நான் வரம் அளித்தது உண்மை தான். நீ ஊருக்குள்ள சென்று தம்பட்டம் அடித்தாய், சொத்துக்களை வாங்கி குவித்தாய், ஆனால் கடைக்கு சென்று பரிசுச்சீட்டு வாங்கினாயா மடையா? நீ பரிசுச்சீட்டை வாங்கினால் தானே, என்னால் உன் பெயரை குலுக்கலில் இருந்து தேர்ந்தெடுக்க முடியும்", என்று பதிலளித்தார் கடவுள்.


இறைஇயேசுவில் மிகவும் பிரியமானவர்களே கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ்வது சரிதான். ஆனால் அந்த நம்பிக்கை செயலாக்கம் பெறவேண்டும். செயலாக்கம் இல்லாத நம்பிக்கை செத்ததுக்கு சமமாகும். இதைத்தான் மத்தேயு 7 : 21 ல் “என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்றார். இன்றைய மூன்று வாசகங்களும் தந்தையின் திருவுளத்தை செயல்படுத்தி கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் வரும் ஆபிரகாமோடு நமது வாழ்வையும் சேர்த்து சற்று சிந்தித்து பார்ப்போமா? (யாரவது ஒருவர் எழுந்து வாருங்கள்). உதாரணமாக இங்கு நிற்கும் அந்தோணி என்பவர் மிகவும் நல்லவர். கடவுள் மீது அதிக அன்பும், பற்றும் கொண்டவர். ஆனால் திருமணம் முடித்து பல வருடங்களாக குழந்தை பாக்கியமே இல்லை என வைத்துக்கொள்வோம். இந்த அந்தோணியையும், அவரது மனைவியையும் நமது சமூதாயம் எவ்வாறெல்லாம் பேசியிருக்கும் சற்று சிந்தித்து பார்ப்போம்! இவர்களைப் பற்றி இவர்களது பெற்றோர்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்! (நீங்கள் சொல்லுங்கள் எப்படியெல்லாம் இந்த குடும்பத்தை சமுதாயம் கூறியிருக்கும் என்று). குடும்பத்திற்கு வாரிசு வேண்டாமா? வேறொரு பெண்ணை திருமணம் முடித்துக்கொள்; குழந்தை பெற இயலாத மனைவியை விவாகரத்து செய்துவிடு, இவன் கடவுளை ஏமாற்றுகின்றான் கடவுள் மீது அன்பு இருந்தால் நிச்சயம் இவனுக்கு குழந்தைச் செல்வத்தை கொடுத்திருப்பார். ஆனால் இவர்கள் கடவுளையே ஏமாற்றுகின்றனர். எனவேதான் இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லை; இப்படி பல… அந்தோணி மற்றும் அவரது மனைவி இவர்களுக்கு கடவுள் மீதும் மக்கள் மீதும் உள்ள நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்கும்?

மக்களின் இவ்வளவு சாபங்களுக்கு பிறகு அந்தோணியின் கடுமையான தவ முயற்ச்சியால் ஒரு பிள்ளைச் செல்வத்தை கடவுள் கொடுக்கின்றார். இந்த குழந்தை எப்படிப்பட்ட மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் அந்த குடும்பத்திற்கு கொண்டு வந்திருக்கும். கணவன் மனைவி ஆகிய இருவரும் இக்குழந்தையை பாலுட்டி, சீராட்டி, பாசமாக வளர்த்து வருகின்றனர். இந்த சந்தோசமான நேரத்தில் கடவுள் அந்தோணியை அழைத்து உனது குழந்தையை எனக்கு பலியிடு என்று சொன்னால் அவரது எண்ணங்களும், சிந்தனையும் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் உங்களது செயல்பாடு எத்தகையதாக இருக்கும்?

இது கடவுளுடைய வார்த்தை கிடையாது? கடவுள் பச்சிளம் குழந்தைகளை பலியிடுவதை விரும்பமாட்டார்; நான் ஆசையாய் வளர்த்த எனது பிள்ளையை நான் எப்படி பலி கொடுப்பது? இது தான் நம்முடைய நம்பிக்கை. ஆனால் ஆபிரகாம் என்ன செய்தார்?
“ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்”. அப்படி செல்கின்ற போது ஆபிரகாமின் மன நிலை எப்படிப் பட்டதாக இருந்திருக்கும்?

அதிலும் குறிப்பாக
தான் அன்பு செய்த மகன் "அப்பா!" என, அழைத்து "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும், கத்தியும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்கும் போது ஒரு தந்தையின் மனநிலை எப்படிப்பட்டாத இருந்திருக்கும்? ஆனால் ஆபிரகாமோ "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்றார். இது தான் ஆபிரகாமுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். இக்குழந்தை கடவுள் கொடுத்த குழந்தை அக்குழந்தையை கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார் என்ற முழுமையான நம்பிக்கையை கொண்டிருந்தார். அதனால்த்தான் தன்னுடைய சொந்த மகனை பலியிடவும் அவர் தயங்கவில்லை. “ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கின் கைகளையும், கால்களையும் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தி தனது மகனை பலியிட துணிந்தார்”.

இப்படிப்பட்ட நம்பிக்கை இன்று நம்மிடத்தில் இருக்கின்றதா? என்னைப் படைத்த கடவுள் நிச்சயம் என்னை பார்த்துக்கொள்வார் என்று நம்மையே நாம் ஒப்படைத்து அதற்கேற்ப நமது வேலைகளை நாம் செய்தோமானால் நிச்சயம் நம் கடவுள் நம்மை காப்பார். அப்படித்தான் கடவுள் ஆபிரகாமையும் அவரது அன்பு மகனையும் காப்பாற்றி ஆசீர்வாதத்தின் கருவியாக கடவுள் அவர்களை மாற்றுகின்றார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று

"ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, "ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும்இ நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.

பிரியமானவர்களே முதலில் சொன்ன கதையில் அந்த மனிதன் கடவுள் கொடுத்த வரத்தின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தான் ஆனால் அதற்கான செயல்கள் அவனிடத்தில் இல்லை; ஆனால் ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்தார். அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தும் செயலில் இறங்கி தனது ஒரே மகனையும் பலியிட தயங்கவில்லை. இப்படிப்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையை தன்னுடைய சீடர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து இயேசு தன்னுடைய சீடர்களை தாபோர் மலைக்கு அழைத்துச் சென்று அவர்களது நம்பிக்கையை திடப்படுத்துகின்றார்.

பிரியமானவர்களே ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வு சீடர்களின் நம்பிக்கையை திடப்படுத்தியது. காரணம் இந்த வாசகமானது 9-தாவது அதிகாரத்தில் வாசிக்க கேட்டோம். சற்று அதற்கு முன்பும், பின்பும் உள்ள பகுதிகளை நாம் சிந்தித்தால் சீடர்களின் நம்பிக்கையை இயேசு எவ்வொறெல்லாம் சோதித்தார்; கடைசியில் எப்படியெல்லாம் அவர்கள் திடப்படுத்தப்பட்டனர் என்பதை நாம் அறியலாம். உதாரணமாக 8வது அதிகாரத்தில் அப்பம் பலுகுதலைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். இந்த அப்பம் பலுகுதல் மக்களுக்கும், சீடர்களுக்கும், மிகப்பெரிய புதுமையாக இருந்தது. எனவே மக்கள் அப்பம் பலுகியதை வைத்து இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.

இதைத்தான்
யோவான் 6:26-ல் "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். எனவே இந்த மக்களைப் போல அப்பத்தினால் என்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனரா? அல்லது உண்மையிலே என்னை பற்றி அறிந்து தெரிந்து வைத்திருக்கின்றனரா? என சோதித்து அறிய இயேசு தனது சீடர்களை பிலிப்பு, செசாரியா பகுதிகளுக்கு அழைத்துச் சென்று “நான் யார்?” என்று அவர்களிடம் கேட்டு அவர்களின் நம்பிக்கையை சோதிக்கின்றார். ஒவ்வொரு சீடரும் தங்களுக்கு தெரிந்த பதிலை கூறுகின்றனர். ஆனால் பேதுருவோ தான் உணர்ந்த இயேசுவை யார் என்று அங்கு வெளிப்படுத்துகின்றார். “நீரே மெசியா வாழும் கடவுளின் மகன்” என கூறுகின்றார். ஆக 12 சீடர்களில் பேதுரு மட்டுமே இயேசு யார், எப்படிப்பட்டவர் என்பதை அறிந்திருந்தார். ஆனால் இயேசு தான் துன்பங்கள்பட்டு, மக்களால் உதறித்தள்ளப்பட்டு, கடைசியில் கொல்லப்பட வேண்டும் என்ற சொன்னபோது பேதுருவின் நம்பிக்கை ஆட்டம் கான ஆரம்பிக்கிறது.

8:32- ல் “பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக் அவரை கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார். இப்படி சந்தோசமான தருணங்களில் நமது நம்பிக்கை உறுதியாகவும், துன்பங்கள் துயரங்கள் வரும்போது நம்முடைய நம்பிக்கை குறைவதை கண்ட இயேசு சீடர்களின் நம்பிக்கையை திடப்படுத்த தபோர் மலைக்குச் அழைத்துச் சென்று அங்கு தான் யார் என்பதையும், எப்படிப்பட்ட வல்லமை உடையவர் என்பதையம் அவர்கள் முன்னால் வெளிப்படுத்துகின்றார். மீண்டும் அதே பேதுரு இயேசுவிடம் "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. கடவுளின் குரலைக் கேட்ட சீடர்கள் தங்களது நம்பிக்கையில் திடம் பெற்றனரா? இல்லையா? என்பதை உங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகின்றேன்.

இன்றும் அதே இயேசு நம்முடைய நம்பிக்கையை திடப்படுத்த இந்த தவக்காலத்தில் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நாம் அனைவரும் நம்பிக்கையில் ஆபிரகாமைப்போல உறுதியுள்ளவர்களா? அல்லது சீடர்களைப்போல சந்தோச நேரங்களில் நம்பிக்கையில் உறுதியாகவும், துன்பங்களில் நம்பிக்கை குறைந்தும் காணப்படுகின்றோமா? சிந்திப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? என கேள்வி எழுப்புகின்றார். கடவுள் நம் பக்கம் இருக்கின்றார் என்று சொன்னால் நிச்சம் நமது நம்பிக்கை ஆபிரகாமைப்போல உறுதியாக இருக்கும். ஆனால் எப்போது துன்பங்கள், சோதனைகள், கடன் பிரட்சனைகள், நோய்கள் என நம்மை தேடித்தேடி தாக்கும்போது இயேசுவின் சீடர்களைப்போன்று நமது நம்பிக்கையும் அழைக்கழிக்கப்படுகின்றது. ஆனால் பவுல் கூறுகின்றார்
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?

ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை என தூய புவுல் வெளிப்படுத்துகின்றார்.


உண்மையிலே நாம் அனைவரும் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தோமானால் , எந்த ஒரு செயலுக்கும் முதல் முயற்சியை, முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும். ஆரம்பத்தில் கூறப்பட்ட கதையில் அந்த மனிதன் எடுத்து வைத்த படிகள் பணத்தை நோக்கி இருந்தது, புகழை நோக்கி இருந்தது, ஆனால் கடவுளை நோக்கியதாக இல்லை. எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று எண்ணிக் கொண்டு இருப்பது நல்ல காரியம் தான். ஆனால் அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது நல்லது அல்ல. ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்தார் எனவே கடவுள் சொல்லிய அனைத்தையும் செய்தார். காரணம் தன்னை படைத்த கடவுள் நிச்சயம் தன்னை காப்பார் என்று எண்ணினார். சீடர்கள் இயேசுவை நம்பினர் ஆனால் துன்பங்களும், சோதனைகளும் வந்த போது இயேசு யார் என்று தெரியாது என சொல்லிவிட்டு சென்றனர். இன்று ஆபிரகாமைப்போல நம்பிக்கையில் உறுதியுள்ளவர்களாக இருக்கின்றோமா? அல்லது சீடர்களைப்போல பயந்து நம்பிக்கையின்மையில் வாழ்கின்றோமா?

தங்கம் நெருப்பிலிடப்படும் போது தான் அதன் தன்மை உறுதியாகின்றது. அதைப்போலவே நம்முடைய துன்பங்கள் வழியே நம் கடவுள் காப்பார் என்ற நம்பிக்கையில் கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் நமது வாழ்க்கை பயணத்தை தொடங்குவோம். இப்படிப்பட்ட நம்பிக்கையை இந்த தவக்காலத்தில் பெற்று இயேசுவின் துன்பங்களில் நமது துன்பங்களையும் ஒப்புக்கொடுத்து நமது நம்பிக்கையை திடப்படுத்திக் கொள்வோம்.