இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

எனது வாழ்வையும் எனது நேரத்தையும், நான் எதற்காக செலவிடுகின்றேன்: கடவுளுக்கு சான்று பகரவா? கடவுளை சாபமிடவா?

யோபு 7:1-4, 6-7
1 கொரிந்தியர் 9:16-19, 22-23
மாற்கு 1:29-39

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? அன்புக்குரியவர்களே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை நாம் பார்த்து வருகின்றோம். உதாரணமாக கடவுள் நம் அனைவருக்குமே சொத்து, சுகம், பணம், வீடு, பிள்ளைகள், வேலை, என பலவற்றை கொடுத்து இருக்கின்றார். இவையனைத்தும் ஒருவரிடம் அதிகமாகவும், ஒருவரிடம் குறைவாகவும், ஏன் ஒருசிலரிடம் இவை எதுவும் இல்லாமலும் படைத்து இருக்கின்றார்.

ஆனால் உலகில் உள்ள படைப்புகள் அனைத்திற்கும் ஒரே சமமாக ஒருசில கொடைகளை கொடுத்திருக்கின்றார். அது எது தெரியுமா?

ஒன்று நமக்கு கொடுக்கப்பட்ட நேரம், மற்றொன்று நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்வு.

ஒருவர் நம்மைவிடப் புத்திசாலியாக இருக்கலாம், நம்மைவிட அழகுள்ளவராக இருக்கலாம், நம்மைவிட சிறந்த விளையாட்டு வீரராக இருக்கலாம், நம்மைவிடப் பணக்காரராக இருக்கலாம். ஆனால் யாரிடமும் நம்மிடம் உள்ள நேரத்தைவிட அதிகமான நேரம் இருக்க முடியாது; குறைவான நேரமும் இருக்க முடியாது. நம் எல்லோருக்கும் ஒரு வாரத்திற்கு 168 மணிநேரங்களாகவும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமாகவும் சரி சமமாகத் தரப்பட்டிருக்கிறது. உங்களில் யாருக்காவது 25 அல்லது 26 மணி நேரங்கள் கிடைத்திருக்கின்றதா? அப்படியென்றால் நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் சமமான நேரத்தை நாம் எவற்றிற்காக பயன்படுத்துகின்றோம்? சிந்திப்போம்

அதைப்போலவே இன்று நவீன விஞ்ஞான உலகில் குறிப்பாக மருத்துவத்துறையில் நாம் எவ்வளவோ முன்னேறினாலும் ஒருவரை சாகாமல் இருக்க வைக்க முடியவில்லை. சாவை அனைவரும் சந்தித்து ஆக வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம். ஆக ஒருவனுக்கு வாழ்வை தருவது இறைவன் தான். அந்த வாழ்வை இறைவன் நம் அனைவருக்கும் கொடுத்து இருக்கின்றார். நமது வாழ்வு அதிகமாகவோ அல்லது குறைவாகவே இம்மண்ணில் இருக்கலாம். அனால் கடவுள் அனைவருக்கும் ஓர் அழகான வாழ்வை கொடுத்திருக்கின்றார். இவ்வாழ்வை அழிப்பதற்கான உரிமை வேண்டுமானால் நம்மிடம் இருக்கலாம். ஆனால் வாழ்வை கொடுப்பது இறைவன் மட்டும் தான். அப்படிப்பட்ட வாழ்வை நம் ஒவ்வொருவருக்கும் சரி சமமாக கொடுத்து இருக்கின்றார். நமக்கு கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்கையை நாம் எவற்றிற்காக பயன்படுத்துகின்றோம்?


18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் “நீ வாழ்க்கையை நேசிக்கிறாயா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதே. ஏனெனில் வாழ்க்கை நேரத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது”என்கிறார். தனக்கு கொடுக்கப்டட நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி தன்னுடைய வாழ்வை கடவுளுக்கும் தன் அயலானுக்கும் ஏற்ற முறையில் வாழ்ந்து, வாழ்வில் முன்னேற்றம் கண்டவர்கள் பலர். இவர்களைத்தான் வரலாறு இன்றுவரை நினைவுகூர்கிறது. நேரத்தையும், தனக்கு கொடுக்கப்பட்ட வாழ்வையும் யார் யாரெல்லாம் சரியாகப் பயன்படுத்தினார்களோ அவர்களே புனிதர்களாக, சாதனையாளர்களாக, அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, நாட்டை ஆளும் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய மனிதர்களாகிய நீங்களும், நானும் நம்முடைய நேரத்தையும், வாழ்வையும் எதற்காக பயன்படுத்துகின்றோம்? பெரும்பாலன நேரங்களில் இன்றைய நவீன தொடர்புசாதனங்களான தொலைக்காட்சி, கைபேசி, இணையம், கணினி, விளையாட்டுக்கள், முகநூல் போன்றவற்றில் நம்முடைய பொன்னான நேரத்தையும், வாழ்வையும் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்முடைய இந்த பொன்னான நேரத்தையும் நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்வையும் வைத்து கடவுளுக்கு சாட்சி பகர்வதில் செலவிட நமக்கு திருச்சபை அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் யோபு தனக்கு கொடுக்கப்பட் வாழ்க்கை மூலம் கடவுளுக்கு சாட்சியம் பகர்கின்றார். இன்றும் துன்பப்படும் மக்கள் அனைவருக்கும் கடவுளின் சாட்சியாக விளங்குகின்றார். தூய பவுல் நற்செய்திக்காக தனது நேரத்தையும், வாழ்வையும் செலவிடுகின்றார். நற்செய்தியிலே இறைமகன் இயேசு தன்னுடைய நேரத்தை இறைவனிடம் ஜெபிப்பதிலும், தன் வாழ்வு மூலம் மனிதர்களின் பிணிகளை குணமாக்குவதிலும், நற்செய்தியை பிறஊர்களுக்கு எடுத்துரைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார். உதாரணமாக "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று கூறுகின்றார் இயேசு. ஆக, இறைமகனான இயேசுவே தன்னுடைய நேரத்தை கடவுளுக்காவும், தனது வாழ்வை பிறருக்காவும் அர்ப்பணித்தார் என்றால் இன்று நம்முடைய நேரத்தையும், வாழ்வையும் எவற்றிற்காக நாம் பயன்டுத்துகின்றோம்? சிந்திப்போமா?

பிரியமானவர்களே நாம் அனைவருமே படித்து தெரிந்து இருக்கின்றோம் யோபு மிகவும் நல்ல மனிதர். கடவுளின் பார்வையில் மிகவும் நேர்மையாளராகவும், மாசற்றவராகவும் விளங்கினார். சாத்தானுக்கே சவால் விடும் வகையில் அவரது வாழ்வு இருந்தது. அதனால் தான் கடவுளே யோபுவை வைத்து பந்தயம் கட்டுகின்றார். இன்று நம்மை வைத்து கடவுள் பந்தயம் கட்டினால் எப்படி இருக்கும் நினைத்துப்பாருங்கள். உதாரணமாக என் மகன் அந்தோனி, என்மகள் ஜெனிப்பரைப் பார்த்தாயா? என்று யோபுவைப்போல கடவுள் சாத்தானிடம் நம்மை வைத்து பந்தயம் கட்டினால் கடவுளின் நிலைமை என்னவாகும்?

ஆண்டவர் சாத்தானிடம் "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான். ஆண்டவர் சாத்தானிடம், "என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவன் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்றார். அதற்கு சாத்தான் கடவுளிடம் உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்" என்றான்.

அன்புக்குரியவர்களே நம்முடைய கடவுளுக்கு படைத்து அழகு பார்க்க மட்டுமே தெரியுமே தவிர மனிதர்களை துன்புறுத்தி பார்க்க தெரியாத கடவுள் எனவே
ஆண்டவர் சாத்தானிடம், "இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார். மீண்டும் சில நாட்களள் கழித்து ஆண்டவர் சாத்தானிடம், "என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப்போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை. காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்" என்றார்.

யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, "என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் நான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் நான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.


ஆனால் யோபுவின் நிலைமை நமக்கு வந்திருந்தால் நாம் எப்படியெல்லாம் இருந்திருப்போம்? யோபு தனக்கு வந்த சோதனையின் இயலாமையின் வெளிப்பாட்டை இன்றைய முதல் வாசகம் மிக அருமையாக நமக்கு தெளிவு படுத்துகின்றது. தனது துன்ப நேரத்தில் தன்னுடைய மனைவி, நண்பர்கள் அனைவரும் கைவிட்டாலும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து கடவுளிடம் முறையிடுகின்றார். அன்புக்குரியவர்களே துன்ப வேளையில் அழவேண்டும் என நினைத்தால் கண்ட கண்ட மனிதர்களிடம் சென்று அழுது உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள்; மாறாக கடவுளிடம் சென்று அழுங்கள் அவர் உங்கள் கண்ணீரையெல்லாம் துடைப்பார். அதைப்போலத்தான் யோபு தன்னைப் படைத்த கடவுளிடம் தனது துன்பத்தை அறிக்கையிடுகின்றார். ஆனால் ஒரு முறைகூட கடவுளை பழித்துரைக்கவில்லை. இன்று நமக்கு துன்பங்கள், கஸ்டங்கள் வரும்போது நாம் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கின்றோம். கடவுளை பழித்துரைக்கின்றோமா? அல்லது கடவுளுக்கு ஏற்ற சாட்சிய வாழ்வு வாழ்கின்றோமா?

இது ஓர் உண்மைச்சம்பவம் இந்த நிமிடம் வரை…

அந்த குடும்பம் மிகவும் கடவுள் பக்தியில் திளைத்த குடும்பம். ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் திருப்பலியிலும், ஆலயப்பணிகளிலும் அந்த குடும்பம் முழுவதுமே பங்கு கொண்டிருக்கும். அந்த ஊர்மக்கள் அனைவரும் இக்குடும்பத்தை நன்கு அறிவர். கடவுள் அக்குடும்பத்தையும் அபரிவிதமாக ஆசீர்வதித்தார். காரணம் குழந்தை பெற தகுதியில்லாதவர் என கூறப்பட்டவர் அந்த வீட்டுப் பெண். ஆனால் கடவுளின் கிருபையில் 9 குழந்தைகளை பெற்றெடுத்தவர். காலம் கடந்து சென்றது. ஒவ்வொரு குழந்தைகளும் படித்து வெவ்வேறு ஊர்களுக்கு சென்று பிழைப்பு தேடுகின்றனர். அந்த தந்தை தன்னுடைய மூத்த பெண் குழந்தையை கடவுளின் பணிக்காக துறவறம் அனுப்புகின்றார். கன்னியர் மடத்திலே நன்கு படிக்கின்றார். பட்டங்கள் பெருகின்றார்; நல்ல பெயரையும் பெற்றெடுக்கின்றார்.

ஒருநாள் அனைவருக்கும் அதிர்ச்சி தரும்படியாக தன்னுடைய வார்த்தைப் பாட்டிற்கு முந்தினநாள் கன்னியர் மடத்தை விட்டு வெளியே வந்தது விடுகின்றார். ஒருசில மாதங்களில் தான் படித்த படிப்புக்கு ஏற்ப அவருக்கு ஆசிரிய வேலை கிடைக்கின்றது, ஒரு நல்ல ஆசிரியரையே திருமணமும் செய்து கொள்கின்றார். குழந்தைகள் பிறக்கின்றன. காலப்போக்கில் அவர் தலைமை ஆசிரியராகவும் உயர்த்தப்படுகின்றார். கொஞ்சம் கொஞ்சமாக பணம் பெருகுகின்றது, சொத்து சேர்கின்றது. இப்போது பெற்றோர்கள் அவருக்கு அநாதைகளாகி விட்டனர். கடவுளோ வெகுதெலைவில் இருக்கின்றார். தினமும் பள்ளிக்கு தவறாமல் செல்வார். ஆனால் திருப்பலி மற்றும் ஆலய பணிகளுக்கு எதிலும் கலந்து கொள்வதில்லை. ஞாயிற்றுகிழமைகளில் அந்த பள்ளியில் இருந்து பல ஆசிரியர்கள் மறைகல்வி வகுப்புகள் எடுக்க வருவர். ஆனால் இந்த ஆசிரியை மட்டும் கோவில் பக்கமே வருவதில்லை. காலங்கள் உருண்டோடுகின்றன.

ஒருநாள் தன்னுடைய காலில் ஒரு சிறிய புண் உண்டாகின்றது. பணம் கையில் இருந்தும் செலவழிக்க மனமில்லாதவராய் வீட்டில் உள்ள எண்ணெய், மருந்துகள் இவற்றை வைத்து குணப்படுத்த பார்க்கின்றார். ஒருசில நாட்களிலே அது பெரிய புண்ணாக மாறுகின்றது. இப்போது மருத்துவமனைக்குச் செல்கின்றனர். மருத்துவரோ அவரது விரலை வெட்டியெடுக்க வேண்டும் என்கின்றார். விரல் தானே என்று சொல்லி வெட்டுகின்றனர். ஒருசில வாரங்களிலே அந்த புண் கால்களில் மேல்நோக்கி வளர ஆராம்பிக்கின்றது. உடனே மருத்துவர் கூறுகின்றார் முழங்காலுக்கு கீழே உள்ள பகுதியை வெட்டி எடுக்க வேண்டும் என்கின்றார். பணம் தன் நிறைய இருக்கின்றதே காலை வெட்டியெடுக்கின்றனர். மீண்டும் ஒரு வருடம் கழித்து மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இப்போது அந்த புண்கள் மேலும் பரவ ஆரம்பிக்கின்றது. மருத்துவர்கள் இது மேலும் மேலும் பரவாமல் இருக்க வேண்டுமென்றால் தொடைப் பகுதியின் கீழ்வரை வெட்டியெடுப்பது நல்லது என கூறுகின்றார். அதுவும் வெட்டியெடுக்கப்பட்டது. ஓடி ஓடி மருத்துவமனைகளுக்கு சென்றார்களே தவிர கோவில் ஒன்று இருக்கின்றது, கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்பதை முற்றிலும் மறந்து வாழ்ந்து வந்தனர். காரணம் பணம் எனும் காகிதம் அவர்களின் கண்களை மறைத்து விட்டது. ஆனாலும் அவர்களிடம் இருந்த அந்த பண ஆசைமட்டும் குறையவே இல்லை. எனவே தன்னுடைய ஆசிரியப்பணிக்கு தடை வந்துவிடாமல் வாகன வசதி ஏற்படுத்தி இன்று வரை பள்ளிக்குச் சென்று கொண்டு இருக்கின்றார்.

அப்டிப்பட்ட மனிதரை நான் சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் கடைசியாக நீங்கள் ஆலயம் சென்றது எப்பொழுது என்றேன். அதற்கு அவர்கள் 9 வருடங்களுக்கு முன்பு சென்றேன் என்றார்கள். ஆனால் பள்ளிக்கு தினம் தினம் சென்று கொண்டிருக்கின்றார்கள் ஏன் ஆலயத்திற்கு செல்வதில்லை என்று கேட்டபோது அவர் மக்கள் என்னை நொண்டி என்பார்கள், என்மீது பரிதாப்படுவார்கள், அப்படியே ஆலயத்திற்கு சென்றாலும் அந்த கடவுள் எனக்கு என்ன செய்துவிடப் போகின்றார்; கடவுள் என்பவர் இல்லை, இல்லவே இல்லை. எனக்கு இந்த நிலைமையை கொடுத்த கடவுளை நான் ஏன் சென்று வணங்க வேண்டும் என அவரின் உள்ள குமுறல்களை கொட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் கூறியது தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு போன் செய்தால் குருவானவர் வருகின்றார், கன்னியர்கள் வந்து நற்கருணை தருகின்றனர். பிறகு நான் ஏன் ஆலயத்திற்கு செல்லவேண்டும். பணத்தைக் கொடுத்தால் எந்த காரியத்தையும் சாதித்து விடலாம் என்று ஒரு வித ஆணவத்தோடு பேசியதைப் பார்த்தேன். இன்றும் அவர் அப்படியேதான் வாழ்ந்து வருகின்றார். அன்புக்குரியவர்களே கடவுள் அந்த குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதித்தார். நல்ல பெற்றோர்களை, பிள்ளைச் செல்வங்களை, நல்ல வேலையை, நல்ல கணவனைக் கொடுத்தார். இவையனைத்தையும் கொடுத்த கடவுளுக்கு என்ன செய்தனர்? கடவுக்கு ஒத்துழைப்பு தந்து கடவுளுக்காக வாழ்வதை மறந்து பணம், சொத்து, செல்வாக்கு என்று அதை தேடி ஓடினர், இன்றும் ஓடுகின்றனர். கடவுள் அவர்களுக்கு கொடுத்த நேரத்தையும், வாழ்வையும் கடவுளை சபிப்பதற்காகவும், கடவுளை ஏளனப்படுத்தியும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.


பிரியமானவர்களே! தூய பவுல் செல்வ செழிப்பிலே பிறந்தவர், பலவித கலைகளை கற்றறிந்தவர், திருச்சட்டத்தை முழுவதுமாக கற்றறிந்த அறிஞர், அப்படிப்பட்ட மனிதர் இயேசுவுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த போது அவர் கூறுகின்றார் “கோவிலில் வேலை செய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவுபெறுவர்; பீடத்தில் பணிபுரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர். இது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார். ஆனால் இவ்வுரிமைகளில் எதையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதவுமில்லை. அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான் சாவதே நல்லது” என்கின்றார்.

தன்னுடைய கடைசி மூச்சுவரை தனது நேரத்தையும், வாழ்வையும் உயிர்த்த இயேசுவுக்காக அர்பனித்தவர். நற்செய்திக்காக அனைத்து விதமான இன்னல்களையும் சந்தித்தவர். நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு என்று கூறியவர். நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன். திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன் என்கின்றார். ஆம்பிரியமானவர்களே தன்னுடைய நேரத்தையும், வாழ்வையும் கிறிஸ்துவுக்காக முழுவதும் அர்ப்பணித்து இயேசுவுக்கு சாட்சியம் பகர்ந்தவர்.

அதைப்போலவே நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய பொன்னான நேரத்தை கடவுளுக்காக அர்ப்பணிக்கின்றார். தன்னுடைய நேரத்தை கடவுளிடம், கடவுளுக்காக செவிடுகின்றார். அவர் இறைமகளாய் இருந்தும் தான் உலகிற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்றார். பேதுருவின் மாமியாரை குணப்படுத்துகின்றார், மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் கூட நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள், பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார். அத்தோடு மட்டுமல்லாமல் இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். ஆக இறைமகன் இயேசு தனது நேரத்தையும், வாழ்வையும் கடவுளின் பணிக்காக அர்ப்பணிக்கின்றார்.

மேலும் பேதுருவின் மாமியார் தான் குணம் பெற்றவுடன் எழுந்தவுடன் நான் பெற்றுக்கொண்ட வாழ்வினால் தனது நேரத்தை இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் பணிவிடை புரிவதில் செலவிடுகின்றார். அன்புக்குரியவர்களே இன்று கடவுள் நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்வை வைத்து நாம் எதற்காக பயன்படுத்துகின்றோம்?


பிரியமானவர்களே இன்றைய நவீன ஊடகங்களான கைத்தொலைபேசி, இணையம், கணனி, விளையாட்டுக்கள் போன்றவற்றில் இன்று நமது பொன்னான நேரத்தையும், வாழ்வையும் செலவிட்டு வருகின்றோம். நவீன தொலைத்தொடர்பு சாதனங்களைக் காட்டிலும் கடவுளுக்கு நாம் செலவிடும் நேரம் மிகவும் குறைவுதான். எனவே இன்று“உனக்கு நேரத்தின் மதிப்புத் தெரியுமானால் வாழ்வின் மதிப்பும் தெரியும்” என்கிறார் ஒரு அறிஞர். விவேகனந்தரோ “கடிகாரம் ஓடுவதைப் பார் அதில் ஓடுவது முள் அல்ல; உனது வாழ்க்கை என்கின்றார்”. எனவே எனக்கு கொடுக்கப்பட்ட எனது வாழ்வையும் நேரத்தையும் நான் எதற்காக செவிடுகின்றேன்? இப்போது ஒரு பாடல் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.

கடவுள் உனக்கு வாழ்வு தந்தார்
வாழ்வுக்கு நீ என்ன தந்தாய்
என்ன தந்தாய் நீ என்ன தந்தாய்
நமது பதில் என்னவாக இருக்கபோகின்றது.