இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

நான் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா? அல்லது சாத்தானால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா?

இணைச்சட்டம் 18:15-20
1 கொரிந்தியர் 7:32-35
மாற்கு 1:21-28

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? கடவுள் மனிதனை படைக்கும் போது களிமண்ணை தனது கையில் எடுத்து மனிதனை உயிரற்றவனாக உருவாக்குகின்றார். பிறகு தன்னுடைய உயிர் மூச்சை ஊதி உயிரற்ற உடலுக்கு உயிரைக் கொடுக்கின்றார். இப்படியாக ஆண்டவரின் சாயலை உடலாகவும், அவரது உயிர் மூச்சை உயிர் நாடியாகவும் பெற்ற நாம் ஒவ்வொருவரும் உண்மையான நிஜமான மனிதர்களா, அல்லது போலியான மனிதர்களா? அல்லது நான் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா? அல்லது சாத்தானால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா? என்று சிந்திக்க இருக்கின்றோம்.

அன்புக்குரியவர்களே முதல் வாசகத்தில் கடவுளின் பிரதிநிதியாக கடவுளே மனிதர்களிடமிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கின்றார். அப்படி கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர் போலியான மனிதராக இருக்க முடியாது; நிச்சயம் பரிசுத்த ஆவியின் வல்லமையை பெற்றவராகத்தான் இருக்க முடியும். இரண்டாம் வாசகத்தில் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட ஒவ்வொரு மனிதரும் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் தூய பவுல் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நற்செய்தி வாசகத்திலே பரிசுத்த ஆவி நிரம்ப பெற்றவராய் இயேசு கடவுளின் செயல்படுகளை மக்களிடத்தில் நிறைவேற்றுகின்றார். அப்படியானால் இன்று ஆலயம் வந்துள்ள உங்களிடத்திலும் என்னிடத்திலும் குடியிருப்பது தீய ஆவியா, பரிசுத்த ஆவியா? உண்மையான நிஜமான மனிதர்களா, அல்லது போலியான மனிதர்களா? அல்லது நான் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா? அல்லது சாத்தானால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா? என்று சிந்திப்போமா?

பிரியமானவர்களே மனிதர்களாக பிறந்த அனைவருமே கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தான். குறிப்பாக கிறித்தவர்கள் நாம் அனைவரும் இன்னும் ஒருபடி மேலே திருமுழுக்கு என்ற அருட்சாதனத்தால் கடவுளால் தேர்ந்துகெள்ளப்பட்டு அவரோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளோம். இப்படி கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட நாம் நமது கடைசி மூச்சுவரை கடவுளோடு ஒன்றாக வாழ்கின்றோமா? கடவுள் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்று சொன்னால் நிச்சயம் நமது குடும்பத்தையும் தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்ற அர்த்தமில்லை. விவிலியத்தில் அதற்காண உண்மைகள் நிறைய இருக்கின்றன.


உதாரணமாக கடவுள் மீது ஆழ்ந்த பக்தியும், விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டவர் சாமுவேல் என்ற மனிதர். கடவுள் தாமே சாமுவேல், சாமுவேல், சாமுவேல் என மும்முறை அழைத்து அவரை தன்னுடைய இறைவாக்கினராக தேர்ந்தெடுக்கின்றார். சாமுவேல் தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுடைய நலனில் அதிக ஈடுபாடு உள்ளவர். தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேல் மக்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆனால் கடவுள் அவரது மகன்களை தேர்ந்தெடுக்கவில்லை. சாமுவேலுக்கு வயதான போது அவர் தம்மகன்களை இஸ்ரயேலின் நீதித் தலைவராக அமர்த்தினார். ஆனால், அவர்கள் கடவுளுக்கு ஏற்றவாறு நடவாமல், மக்கள் நலனில் அக்கறை இல்லாத பொறுப்பற்றவர்களாக இருந்தனர். எனவே இஸ்ராயேலின் பெரியோர் அனைவரும் சாமுவேலிடம் சென்று “இதோ உமக்கு வயது முதிர்ந்து விட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறைகளில் நடப்பதில்லை. கடவுளுக்கும் அஞ்சுவதில்லை” எனவே எங்களுக்கு ஓர் அரசரை நியமியும் என மன்றாடுகின்றனர்.

பிரியமானவர்களே இன்றைய சூழ்நிலை அன்று இருந்திருந்தால் நிச்சயம் சவுல் அரசராகியிருக்க மாட்டார். காரணம் நமது நாட்டில் வாரிசுகள் தானே பதவியில் இருக்க ஆசைப்படுகின்றனர். வாரிசுகள் மட்டும் தான் பதவிக்கு வரவேண்டும் என எத்தனைபேர் நம்மில் உழைத்துக் கொண்டிருக்கின்றோம். இது அரசியலுக்கு மட்டுமல்ல; நம்முடைய அன்றாட நிகழ்வுகளும் இதற்கு சான்றாக அமைகிறது. உதாரணமாக அரசாங்க வேலைகளில் இருப்போர் எப்படியாவது தனது மகனையும், மகளையும் அதே அரசாங்க வேலையில் சேர்ப்பதற்கு எவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றோம். ஆனால் சாமுவேல் அப்படிச் செய்யவில்லை. தனது பிள்ளைகள் எப்படிப்பட்வர்கள் என நன்கு அறிந்திருந்தார். எனவே தனது மகனை அரசபதவிக்கு தேர்ந்தெடுக்காமல் கடவுள் சொன்ன சவுலை தேர்ந்தெடுக்கின்றார். தன்னுடைய பிள்ளைகளுக்காக கடவுளிடம் பரிந்து கூட பேசவில்லை.

சாமுவேலை கடவுள் தேர்ந்துகொண்டார். ஆனால் அவரது பிள்ளைகளை நிராகரித்து விட்டார்.

கடவுள் சவுலை தேர்ந்தெடுக்கின்றார். அவருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்கின்றார். 1சாமுவேல் 10:24-ல் சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி “ஆண்டவர் தேர்ந்தெடுத்தவரைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல வேறொருவரும் அவரைப்பேல் உண்டோ?” என்கின்றார். அப்படி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுல் இஸ்ரயேலின் முதல் அரசராக மக்களிடம் உலா வருகின்றார். ஆனால் அப்படிப்பட்ட சவுல் கடவுளுடைய ஆலோசனையை பின்பற்றாமல் கடவுளை மறந்ததால் ஆண்டவர் அவரை புறக்கணித்தார்: "சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை." (1 சாமுவேல் 15:11) என்று கடவுள் கூறினார். சவுலின் பிள்ளைகளான யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா போன்ற யாரும் அரச பதவிக்கு வரவில்லை. மாறாக கடவுள் ஆடுமேய்க்கும் தாவீதை தேர்ந்தெடுக்கின்றார்.

பிரியமானவர்களே முதலில் சாமுவேலின் பிள்ளைகள் தவறு செய்ததால் அவரது குடும்பத்தை கடவுள் தேர்ந்தெடுக்கவில்லை; இங்கு தந்தை சவுல் தவறு செய்ததால் அவரது குடும்பம் தேர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக ஆடுமேய்க்கும் தாவீது அரசராகின்றான். அந்த தாவீதின் மரபில் இருந்து வந்த இறைமகன் இயேசு தன்னுடைய வாழ்வாலும், சொல்லாலும், செயலாலும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றியதால் கடவுளின் மகன் என அழைக்கப்பட்டார். இன்றும் அதே இயேசு நம்மைப் பர்த்து கேட்கின்றார் நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களா? நீங்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளா? நம்முடைய பதில் என்னவாக இருக்கின்றது? கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்வர்கள் என்றால் நிச்சம் அவரது வழியில் தான் நாம் நடப்போம். இன்று நம்முடைய வழிகள் அனைத்தும் கடவுளுடையதா? அல்லது சாத்தானுடையதா?


தூய பவுல் கொலோசையர் 3:12ல் “நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்குரிய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்” எனக் கூறுகின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்வர்கள் அனைவருக்குமே தனித்தனி கடமைகள் உண்டு என தூய பவுல் விளக்குகின்றார்.

அதாவது மணமாகாதவர்கள் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கின்றார்; எப்படியெல்லாம் அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். அதைப்போலவே மணமாகாத கன்னிப்பெண்களும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும், உள்ளத்திலும் தூயோராயிருக்கின்றனர். அன்புக்குரியவர்களே! அதைப்போலவே திருமணம் ஆனவர்களும் எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபடுத்துகின்றார். திருமணம் ஆனவர்களின் மனமும், உள்ளமும் பிளவுபட்டுள்ளது. எப்படியென்றால் கணவன் எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். அதைப்போலவே மனைவியும் உலகுக்குரியவற்றில் அக்கறை கொண்டு எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக நாம் அனைவரும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டாலும் நம்மில் பலருடைய மனம் பிளவுபட்டுள்ளது என பவுல் கூறுகின்றார்.

ஆம் பிரியமானவர்களே நாமும்,
நமது பிள்ளைகளும், நமது குடும்பமும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்வர்கள் என்பதை எப்படி நாம் அறிந்துகொள்வது? கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்வர்கள் கடவுளுக்கு உரியதை பேசுவார்கள். கடவுளுக்கு உகந்ததை செய்வார்கள். முதல் வாசகத்திலே கடவுள் "ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களின் வார்த்தை அல்லது ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்படாதவர்களின் வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது என நீங்கள் கேட்கலாம் அல்லது உங்கள் மனத்தில் எளலாம்?

கடவுள் கூறுகின்றார் ஓர் இறைவாக்கினன் அல்லது உங்களைப்போல கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான். மேலும் ஓர் இறைவாக்கினன் அல்லது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன். அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை என்கிறார் நமதாண்டவர்.

இன்று நாம் கடவுளின் பெயரால் கூறுவது நடைபெறுகின்றதா? நாம் சொல்வது நடைபெறவில்லையென்றால் நாம் அனைவரும் போலிகளே! நாம் அனைவரும் கடவுளால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது.
இயேசு மாற்கு 11 : 23 – உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, "பெயர்ந்து கடலில் விழு" எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால் அவர் சொன்னவாறே நடக்கும். எங்கே நாம் சொல்லி பார்ப்போமா?...

ஆம் பிரியமானவர்களே நாம் அனைவருமே கடவுளால் படைக்கப்பட்டவர்கள்; அவரது மூச்சை உயிர்நாடியாகக் கொண்டவர்கள் ஆனாலும் நாம் சொல்வது எதுவும் நிறைவேறுவதில்லை. பிளவுபடா உள்ளத்தோடு கடவுளுக்கு பணிசெய்ய முடிவதில்லை. இதற்க்கொல்லாம் காரணம் என்ன? கடவுள் நம்மை படைத்தபோது நல்லது எனக் கண்டார். நாம் பிறந்த போது நமது பெற்றோர்கள், உறவினர்கள் நமது பிறப்பை கொண்டடினர். ஆனால் காலப்போக்கில் நமது பெற்றோர்களுக்கும், உறவினர்களும் நம்மை பிடிக்காமல் போனது. அப்படியானல் கடவுளுக்கும் நம்மை பிடிக்காமல் தானே இருக்கும். கடவுளுக்கு பிடிக்காதவர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றோம். இதை எப்படி சரிசெய்வது.


ஒரு முறை சந்நியாசி ஒருவர் தன்னுடைய மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு ஒரு புனித யாத்திரை மேற்கொள்கின்றார். போகின்ற வழியிலே ஒரு வயலை பார்க்கின்றார். அந்த வயல்வெளி மூழுவதும் களைகள் நிரம்பியிருக்கின்றன. அந்த குரு தன்னுடைய சீடர்களைப் பார்த்து “இந்த களைகளை நீக்க சிறந்த வழி என்ன? என்று கேட்டார்.”
முதலாவது சீடன் கூறினான் “கையால் மிகவும் பொறுமையாக ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி அப்போது தான் களைகளை முழுமையாக களைய முடியும்” என்று கூறினார்.
இரண்டாம் சீடன் கூறினான் இவ்வளவு பெரிய வயலில் ஒவ்வொரு களையாக கையால் பிடுங்கி கொண்டிருந்தால் எப்பொழுது அனைத்து களைகளையும் பிடுங்கி முடிப்பது. மாறாக “களைபிடுங்கும் உபகரணங்களை வைத்து பிடுங்கினால் சீக்கிரமாக அனைத்து களைகளையும் பிடுங்கி விடலாம்” என்றான்.
மூன்றாவது சீடன் கூறினான் இந்த களைகளை யெல்லாம் “தீயால் கொளுத்தினால் ஒரேயடியாக அனைத்தையும் சில நிமிடங்களிலே அழித்துவிடலாம்” என்று கூறினான்.
குரு அவர்களிடம் இந்த வயல்வெளியைப் போலத்தான் மனித மனமும், களைகள் அவனுக்கு தேவைற்றது, அவன் வாழ்க்கைக்கு ஒருபோதும் உதவாது. இந்த களைகளே அவனில் இருக்கும் தீய எண்ணங்கள். எனவே நீங்கள் கூறிய பதிலை வைத்து இந்த தீய எண்ணங்களுக்கு பொருத்தமானதாக இருக்குமா? சிந்தியுங்கள் என்று சொல்லிவிட்டு நடைபயணத்தை தொடர்ந்தனர்.

முதல் சீடன் கூறினான் ஆம் குருவே ஒவ்வொரு தீய எண்ணத்திலும் கவனம் செலுத்தி அதன் தீய தன்மைகளை உணர்ந்து ஒவ்வொன்றாக மனதில் இருந்து நீக்கும்போது அவன் நல்ல மனிதனாக மாற இதுவே சிறந்த வழி என்று கூறினான்.
இரண்டாவது சீடன் மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்க தியானம், ஜெபம், வழிபாடுகள் போன்ற உபகரணங்கள் கொண்டு அழிக்கும்போது மனித மனம் தூய்மையடையும் அதுவே சிறந்த வழியும் என்றான்.
மூன்றாவது சீடன் நம்மையெல்லாம் படைத்த கடவுளிடம் நம்மையே நாம் முழுமையாக ஒப்படைக்கும் போது ஒரேயடியாக மனிதனிடத்தில் இருக்கும் தீய எண்ணங்கள் கடவுளின் அருளால் எரிந்து கருகிவிடும் என்றான்.
குரு அவர்களிடம் மூன்றுமே நல்ல வழிதான்; சிந்திக்கத் தக்கது தான் எனச் சொல்லிவிட்டு பயணத்தை மேற்க்கொண்டனர். குரு எந்த பதில் சரியான பதில் என்று கூறாததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சில மாதங்கள் கடந்த பின்னர் குருவும் அந்த சீடர்களும் மீண்டும் அதே வழியில் திரும்பிக் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்களுக்கே ஆச்சரியம் காரணம் களைகள் நிரம்பியிருந்த வயல் அனைத்தும் இப்போது நெற்கதிர்கள் நிறைந்து இருந்தன. அந்த வயலில் ஒரு களைகள் கூட தென்படவில்லை. இப்பொழுது அந்த குரு சீடர்களைப் பார்த்து எனது கேள்விக்கு இதுததான் சரியான பதில் என்று கூறினார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது குரு அவர்களிடம் நீங்கள் மூவர் கூறிய பதில்கள் அனைத்தும் தற்காலிகமான வழிகள்.

களைகளை கையில் பிடுங்கினாலும், உபகரணங்கள் கொண்டு பிடுங்கினாலும், தீயிட்டு கொளுத்தினாலும் மீண்டும் மழை பொழியும்போது அனைத்தும் முளைத்துவிடும். மறாக களைகள் நிறைந்த வயலை அப்படியே வைத்திருக்காமல் அதில் உபயோகமான பயிர்களை விதைக்கும் போது அவை முற்றிலும் அழிந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டு விடும். ஒவ்வொரு நாளும் அந்த விவசாயி நெற்கதிர்களில் கவனம் செலுத்தி கண்ணும் கருத்துமாக வளர்க்கும் போது களைகளை அவன் முற்றிலும் அழித்துவிடுவான். உங்களுடைய எண்ணமெல்லாம் களைகளை எப்படி அழிப்பது என சிந்தித்தீர்கள் ஆனால் அந்த விவசாயோ களைகள் நிரம்பிய வயலை எப்படி பயனுள்ளதாக மாற்ற முடியும் என நினைத்தான்.


அதைப்போலத் தான் மனிதன் பிறக்கின்ற போது அவனிடத்தில் நல்ல எண்ணங்கள் நிறைந்து காணப்படுகின்றன; ஆனால் அவன் வளர வளர தீய எண்ணஙகள் என்ற களைகளும் அவனில் முளைக்க ஆரம்பிக்கின்றன. சிறு சிறு களைகள் என்று நினைத்த அவது தீய எண்ணங்கள் இன்று அவனை முழுவதும் ஆட்கொண்டுள்ளன. இப்படியாக தீய எண்ணங்கள் மனித மனதில் நிரம்பியிருந்தாலும் அதை அப்படியே வைத்திருந்தால் மீண்டும் களைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அல்லது நீங்கள் சொன்னது போல அவ்வப்போது தியானம், ஜெபம், பாவசங்கீர்த்தனம் போன்ற கடவுளுக்கு ஏற்ற செயல்கள் செய்யும் போது அவையனைத்தும் தற்காலிகமாக அழிந்துவிடும். ஆனால் மீண்டும் அவன் ஆலயத்தை விட்டு சமுதாயத்தில் தனது வாழ்வை தொடங்கும் போது அவனிடம் இருந்த களைகளாகிய தீய எண்ணங்கள் அதிக வீரியத்துடன் வெகுண்டெலும்.

எப்படியென்றால்
மத்தேயு நற்செய்தி 12:43-45-ல் "ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், “நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்" எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும். இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்.” இதுதான் நம்முடைய இன்றைய நிலைமை இயேசு இதைத்தெரிந்தே நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.

அன்புக்குரியவர்களே! மாறாக தீய எண்ணங்கள் இருக்கும் இடத்தில் நல்ல எண்ணங்களை, கடவுளுக்கு உகந்த செயல்களை செய்யும் போது மனித மனம் தீய எண்ணங்களில் இருந்து விடுபட்டு நல்ல மனிதனாக மாறமுடியும். மீண்டும் அப்படியே களைகள் முளைத்தாலும் அவைகள் அதிகமாக இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் அதையும் எளிதாக களைந்து விடலாம் என்று அந்த குரு தனது சீடர்களுக்கு கூறினார். ஆம் பிரியமானவர்களே நம்முடைய மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் நிரம்பியிருக்கின்றன? காரணம் எண்ணங்கள் தான் மனித வாழ்வை நிர்ணயம் செய்கின்றன. ஆக இன்று கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்வர்களின் எண்ணங்கள் அனைத்தும் பிளவுபடா உள்ளத்தோடு செயல்படும் போது நாம் போலியானவர்கள் அல்ல மாறாக நேர்மையானவர்கள் என்பது நமக்கு தெளிவாகும். அப்படி நமக்கு தெளிவாகும் போது நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்; நான் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டர்; நம்முடைய பிள்ளைகளும், நமது குடும்பமும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக இருக்கமுடியும்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், நீங்களும் நானும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தான். கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை பரிசேயர்களைப் போல மக்கள் பார்க்கும்படி ஜெபங்களையும், தான தர்மங்களையும், ஜெபவழிபாடுகளைம், எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்யாமல் நம் ஒவ்வொருவருடைய மனதிலும் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழும் போது நாம் அனைவருமே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தான். இதற்காக வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவேம்.