இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

பாதையை மாற்றினால் பரமனை அடையலாம்

யோனா 3:1-5,10
1 கொரிந்தியர் 7:29-31
மாற்கு 1:14-20

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்றைய சூழலில் நாம் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றோம். குடிசை வீடுகளில் வாழ்ந்த நாம்; இன்று மாடி வீடுகளுக்கு மாறிவிட்டோம்; சைக்கிளில் பயணம் செய்த நாம்; இன்று கார், விமானம் என்று பயணம் செய்கின்றோம்; கம்பு, சோளம் இவற்றை உணவாக உட்கொண்ட நாம்; இன்று விதவிதமான உணவுகளை தேடி உண்கின்றோம். இப்படியாக நம்முடைய வாழ்வு முழுவதும் இன்று மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதுப்புது மாற்றங்கள். அனைத்தையும் மாற்றி மாற்றம் என்ற பாதையிலே பயணம் செய்யும் நாம் கடவுளை அடைவதில் எப்படிப்பட்ட மற்றங்களை நம்முடைய வாழ்வில் பின்பற்றுகின்றோம்?

உண்மையில் பார்த்தோமானால் என்னுடைய தாத்தா காலத்தில் 2மணிநேரம் திருப்பலி நடக்குமாம்; மக்களும் நிறையபோர் பங்கெடுப்பார்களாம். ஆனால் இன்று வாரநாட்களில் 30 நிமிடம் தான் திருப்பலி நம்மில் எத்தனை பேர் அதிலே பங்கெடுக்கின்றோம்? ஞாயிறு திருப்பலி 1 மணிநேரம் மட்டும் தான் திருப்பலி இன்று நம்மை சுற்றிப் பாருங்கள் நம்முடைய பங்கு மக்கள் முழுவதும் இங்கு இருக்கின்றோமா என்று? திருச்சபையும் மக்களுக்கு ஏற்ற முறையில் செபவழிபாடுகளை மாற்றி வந்தாலும் அதை மனமுவந்து யாரும் ஏற்றுக்கொள்ளவதில்லை அதில் பங்கெடுப்பதும் இல்லை. ஆக இன்று நம்முடைய இறைவன் நம்மை பார்த்து கூறுகின்றார் என் அன்பு மகளே, மகனே உன்னுடைய பாதையை மாற்றினால் நிச்சயம் என்னை கண்டுகொள்ளலாம் என அழைப்பு விடுக்கின்றார். முதல் வாகத்திலே யோனாவின் வார்த்தையை நம்பி மக்கள் தங்கள் பாதைகளை மாற்றினர். கடவுளைின் அருளை கண்டடைந்தனர். நற்செய்தி வாசகத்திலே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தங்களது பாதைகளை மாற்றி இயேசுவின் பின்னால் சென்றனர் இன்று அப்போஸ்தலர்களாகவும், புனிதர்களாகவும் இருக்கின்றனர். இன்று நாமும் நம்முடைய பாதைகளை கடவுளுக்கு ஏற்ற முறையில் மாற்றும் போது நாமும் கடவுளை கண்டடையாலம் கடவுளின் ஆசீரையும் பெறலாம்.


ஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு நண்பர்கள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு நாள் அவர்கள் இருவரும் விறகு வெட்டிக்கொண்டிருக்கையில் திடீரென ஒருவர் மயங்கி விழுந்துவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொருவர் தவமிருக்கும் முனிவரிடம் சென்று தன்னுடைய நண்பன் திடீரெனெ மயங்கி விழுந்துவிட்டான் அவனை காப்பாற்றுங்கள் என கதறுகிறார்.

தவத்தில் இருந்து கண் விழித்த முனிவர், என் தவத்தையே கலைகிறாய் என்றால் உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும் என்று கோபத்தோடு எழுந்து அவனை குருவியாக போகும்படி சபிக்கிறார். உடனே அந்த மனிதர் குருவியாக மாறுகிறார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து வந்த இன்னொருவன் நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அந்த முனிவரிடம் தன் நண்பனை எப்படியாவது மீண்டும் மனிதனாக மாற்றும்படி வேண்டுகிறான். கோப நிலையில் இருந்து சாந்தம் அடைந்த முனிவர், எனக்கு சாபம் கொடுக்க தெரியுமே தவிர அதில் இருந்து விடுவிக்க தெரியாது ஆகையால் இது குறித்து நான் என் குருநாதரிடம் அறிந்து வருகிறேன் அது வரை நீ இந்த குருவியை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

தன் குருநாதரிடம் சென்று நடந்ததை பற்றி விவரிக்கிறார். குருநாதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு இந்த சாபத்தில் இருந்து அவன் விடுபட வேண்டும் என்றால் உன் தவ வலிமையை நீ தானமாக கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். தவ வலிமையை கொடுப்பதற்கு அவர் மனம் இணங்கவில்லை ஆகையால் வேறு ஏதும் யோசனை உள்ளதா என கேட்கிறார். அருகில் இருக்கும் சிற்றுரில் பண்பானவன் என்று ஒருவன் உள்ளான். அவனிடம் நிறைய புண்ணியம் இருக்கிறது ஆகையால் அந்த புனியத்தில் சிறுதளவு நீ தானமாக பெற்றால் அதை கொண்டு சாபத்திற்கு விமோச்சனம் தரலாம் என்று கூறுகிறார். அதோடு நீ தேவை இல்லாமல் சினம் கொண்டு இப்படி யாருக்கும் சாபம் அளிக்கவேண்டாம் அது உன் தவப்பயனை குறையச்செய்யும் என்று குரு அறிவுறுத்துகின்றார்.

குரு சொன்ன அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு சிற்றுரை நோக்கி பயணம் செய்கிறார் அந்த முனிவர். வழியில் ஒரு அழகிய பெண்ணைப் பார்க்கின்றார் அவளைக் கண்டு அவள் அழகில் மெய்மறந்து போகிறார். இதை கண்ட அந்த பெண் முனிவராக இருந்து கொண்டு என் அழகில் சொக்குகிறீர்களே இது நியாமா? என்று கேட்கிறார். இதனால் ஆத்திரமுற்ற அந்த முனிவர் அந்த பெண் தன் அழகை இழக்கட்டும் என்று சாபமிடுகிறார். உடனே அந்த பெண் கோர முகம் உடையவராக மாறிவிடுகிறார்.

சிற்றுரை அடைந்ததும் பண்பானவனின் வீடு எங்கிருக்கிறது என்று ஒருவரிடம் வினவுகிறார். பண்பானவன் வீட்டு சமையல் சுவையாக இருக்கும் என்பதற்காக இப்படி சாப்பாட்டிற்காக அவன் வீட்டை தேடி அலைகிறீர்களே ஒரு முனிவருக்கு இது தான் அழகா இன்று அவன் கேட்கிறான். இதை கேட்டு கோபம் கொண்ட அந்த முனிவர் அவனை ஊமையாய் போகட்டும் என்று சபித்துவிட்டு ஒருவழியாக பண்பானவரின் வீட்டை கண்டுபிடித்து உள்ளே செல்கிறார்.

முனிவரை நன்கு உபசரிக்கிறார் அந்த பண்பானவன். சிறிது நேரம் கழித்து முனிவர் பேச்சை ஆரம்பிக்கிறார். என்னுடைய குருநாதர், நீங்கள் ஒரு பெரிய புண்ணியவான் என்று கூறினார். எங்கு தவம் செய்து இவளவு புண்ணியத்தை பெற்றீர்கள் என்று கேட்கிறார். நான் எங்கும் தவம் எல்லாம் செய்யவில்லை ஐயா, என்னிடம் உதவி என்று கேட்டுவரும் அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துவருகிறேன். நான் இறைவனை வணங்குவதெல்லாம் கிடையாது. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருக்கிறார். ஆகையால் நான் எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன்; எல்லோரிடமும் அன்பு பாராட்டுகிறேன். தவம் பற்றி நான் அறியேன் என்கிறார்.

பண்பானவன் தன்னுடைய தவத்தை பற்றி கேவலமாக பேசுகிறார் என்று எண்ணி அவருக்கு கை கால் விளங்காமல் போகட்டும் என்று முனிவர் சாபம் அளிக்கிறார். ஆனால் அவருடைய சாபம் இந்த முறை பலிக்கவில்லை. பண்பானவனோ, தங்கள் மனம் புண்படும் படி நான் பேசியது தவறு தான் என்னை மன்னியுங்கள் என்கிறார். ஆனால் முனிவர் மன்னிப்பதாக இல்லை மீண்டும் சாபம் அளிக்கிறார் ஆனால் சாபம் பலிக்கவில்லை. முனிவரிடம் பண்பானவன் மென்மையாக கூறுகிறார், ஐயா நீங்கள் எத்தனை முறை சாபம் அளித்தாலும் எனக்கு பலிக்காது. எனக்கு மட்டும் இல்லை இனி யாருக்கும் பலிக்காது. உங்கள் தவ வலிமை முழுவதையும் நீங்கள் அழகிய பெண்ணுக்கும், வழிப்போக்கனுக்கும், விறகுவெட்டிக்கும் சாபமிட்டே தீர்த்துவிட்டீர்கள் என்கிறார்.

முனிவர் தன் தவறை உணருகிறார். பின் பண்பானவன் தன் புண்ணியத்தில் ஒரு பாதியை அந்த முனிவருக்கு தானமாக தருகிறார். உடனே அவர் தன் தவ வலிமையை திரும்ப பெறுகிறார். அதோடு அவர் சாபமிட்ட அனைவரும் மீண்டும் பழைய நிலையை அடிக்கின்றனர். அங்கிருந்து முனிவர் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் தன் குருநாதரிடம் வருகிறார். குருநாதரிடம் நடந்த அனைத்தையும் விவரித்த பிறகு, எப்படி தவம் செய்யாமல் பண்பானவன் இத்தனை வலிமைகளை பெற்றான் ? இது எப்படி சாத்தியம்? என்று கேட்கிறார். கடவுளை அடைவதற்கும், அவருடைய ஆசீரை பெருவதற்கும் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நம்மைப் போன்றவர்கள் கடவுளே சரணாகதி என்று 24 மணிநேரமும் அவரது நாமத்தை உச்சரித்துக்கொண்டு அவரை அடைய முயற்ச்சி செய்து வருகின்றோம். ஆனால் இந்த பண்பாளனோ தன்னிடம் வரும் ஒவ்வொரு மனிதரிலும் கடவுளின் சாயலை உணர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கடவுளை அடைகின்றனர். ஒருவர் செய்யும் தானமும் தர்மமும் தவத்தால் கிடைக்கும் விலைமயை விட அதிக வலிமை கொண்டது என்கிறார் குருநாதர். சரி இப்போது பண்பானவன் தன் புன்னியத்தின் ஒரு பாதியை தானம் அளித்து விட்டதால் அவன் வலிமை குறைந்திருக்காதா? என்று கேட்கிறார். நிச்சயம் குறையாது. அவன் தன் புன்னியத்தையே தானம் செய்ததால் அவனுடைய வலிமை இதனால் பன் மடங்கு அதிகரித்துள்ளது என்றார் குருநாதர்.


ஆம் பிரியமானவர்களே! நாம் எல்லோரும் கடவுளை அடையவேண்டும் அவருடைய ஆசீர்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என கடவுளை தேடி கோவில் கோவிலாக அழைந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒருசிலர் தங்களுடைய பாதைகளை சற்று மாற்றி கடவுளுக்கு ஏற்ற முறையில் வாழும் போது அவர்களுக்கு கடவுளின் ஆசீரும், அவரிடம் புண்ணியங்களும் வந்து சேர்கின்றது.

அப்படித்தான் இன்றைய முதல் வாசகத்திலே நாம் பார்க்கின்றோம். பிரியமானவர்களே
இஸ்ராயேல் மக்களின் அடையாளப் பெயர் எது என்று தெரியுமா? “புறா” என்பதேயாகும். இங்கு முதல் வாசகமானது யோனாவின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. யோனா என்றால் புறாவைக்குறிக்கும். இந்த யோனா இரண்டாம் அரசர் எரோபவாம் கிமு 793-753 ம் ஆண்டுகளில் இறைவாக்கு உரைக்கின்றார். இக்காலத்தில் நினிவே நகரமானது அசீரிய நாட்டின் மிக முக்கியமான நகரமாகும். யோனாவின் காலத்தில் இது உலக வல்லரசு நாடாக திகழ்ந்தது. நாடு வல்லரசாக இருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரும் கடவுளுக்கு எதிராக பலவிதமான பாவங்களை செய்து வாழ்ந்து வருகின்றனர். உதராணமாக கடவுளுக்கு எதிராக தங்களது வாழ்வை மாற்றியமைக்கின்றனர், ஏழை, எளியவர்களிடத்தில் கொள்ளையடித்து அந்த செல்வத்தில் தங்களது குடும்பங்களை உயர்த்துகின்றனர்; போரில் மிக கொடுராமாக நடந்து கொள்கின்றனர்; சிலைகளை வழிபடுகின்றனர்; விலைமாதரை நாடுகின்றனர்; பில்லிசூன்யம் பார்க்கின்றனர்… இப்படி பலவிதமான பாவ வாழ்வில் முழ்கிகிடந்தனர்.

இன்றும் எந்ததெந்த நாடுகள் வல்லரசாக இருக்கின்றதோ அங்குதான் பாவங்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாட்டு மக்களும் பெரும் பாவிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதைப்போலவே நமக்கு ஏற்றார் முறையில் சொல்ல வேண்டுமானால் எந்த குடும்பம் பணத்தில் ஜொலிக்கிறதோ அல்லது எந்த குடும்பம் வல்லரசு நாடுகளைப்போல நமது மத்தியில் இருக்கின்றதோ அந்த குடும்பத்தில் தான் மக்கள் பாவிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் தான் கடவுள் யோனாவை தோர்ந்துகொண்டு அந்த நினிவே மக்களுக்கு இறைவாக்கு உரைக்க அழைக்கின்றார். ஆனால் யோனா அந்த நகருக்கு போவதற்கு பிடிக்கவில்லை; இந்த மக்களின் அக்கிரமங்களைக் கண்டு பயப்படுகின்றார்; மேலும் கடவுளை விட்டு விலகிச்சென்றதால் இந்த மக்கள் அனைவரும் கடவுளின் அருளை பெறக்கூடாது என யோசித்து கடவுளுடைய பாதையை தனக்கு ஏற்றார் போல மாற்றி தன்னுடைய வழியில் பயனிக்கின்றார். கடவுள் நினிவே நகருக்கு செல்ல பாதையை ஏற்படுத்துகின்றார் ஆனால் யோனாவோ நினிவேக்கு செல்லாமல் தன்னுடைய பாதையை மற்றியமைக்கின்றார். அதனால் கடல் பயணத்தில் பெரும் புயலில் சிக்கி பலவித துன்பங்களை அனுபவிக்கின்றார். ஆனால் எப்போது தனது மனதை மாற்றி கடவுளுக்கு ஏற்ற முறையில் தனது பாதையை மாற்றி நினிவே நகருக்கு சென்றோரோ அந்நேரமே கொடுரமாக தெரிந்தவர்கள் அனைவரும் யோனாவின் இறைவார்த்தையை கேட்கின்றனர். இறைவார்த்தையை கேட்டதோடு மட்டுமல்லாமல் தங்களது வாழ்வையும் மாற்றுகின்றனர்.

அரசன் தாமே முன்வந்து தனது அரியனையை விட்டிறங்கி அரச உடையை களைந்துவிட்டு சாக்கு உடை அணிந்துகொண்டு சாம்பல் மீது அமர்ந்து தன்னுடைய பாதையை கடவுளுக்கு ஏற்ற முறையில் மாற்றுகின்றான் அத்தோடு மட்டுமல்லாமல் தன் நாட்டு மக்களுக்கும் கட்டளை பிறப்பிக்கின்றான். ஏந்த மனிதரும் உணவை சுவைத்துப் பார்க்க கூடாது; ஆயாடு, மாடு முதலிய விலங்குகள் தீனி திண்ணவோ, தண்ணீர் குடிக்கவோ கூடாது; ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும். அதாவது தங்களது பாவம் நிறைந்த பாதையை மாற்றி கடவுளுக்கு ஏற்ற முறையில் சரிசெய்ய வேண்டும் என கட்டளை பிறப்பிக்கின்றான். மக்ககளும் தங்களது பாதைகளை மாற்றுகின்றனர். கடவுள் அந்த மக்களின் மனமாற்றத்தைக் கண்டு அவர்களுக்கு தனது ஆசீரைப் பொழிகின்றார். நினிவே மக்கள் தங்களது பாதைகளை மாற்றுகின்றனர். பரமனின் அருளை கண்டடைகின்றனர். இன்று நாம் எப்படி நமது பாவம் நிறைந்த பாதைகளை மாற்ற நாம் தயாரா?

இன்றைய நற்செய்தி வாசகத்திலே கடலில் மீன்பிடிக்க வலைவீசிக் கொண்டிருந்த சீமோனையும், அந்திரேயாவையும் இயேசு அழைக்கின்றார். தங்களுக்கு மீன் பிடிக்க மட்டுமே தெரிந்த தங்களது பாதையை மாற்றி மீன் வலைகளை அங்கேயே விட்டுவிட்டு இயேசுவை பின் செல்கின்றனர். மேலும் யோவானையும், யாக்கோபையும் அழைக்கின்றார் தங்களது தந்தையை விட்டுவிட்டு மீன் பிடிக்கின்ற பாதையை மாற்றி இயேசுவின் பின்னால் செல்கின்றனர். இன்று இவர்கள் அனைவரும் புனிதர்களாக நமது மத்தியில் இருக்கின்றனர்.


அன்புக்குரியவர்களே யாரரெல்லாம் கடவுளக்காக தங்களது பாதைகளை மாற்றினரே அவர்கள் அனைவருமே கடவுளின் அருளை கண்டடைந்துள்ளனர். இன்றும் அதே இயேசு ஆலயம் வந்துள்ள நம் ஒவ்வொருவரையும் பார்த்து எனது அன்பு மகனே, மகளே “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என அழைப்பு விடுக்கின்றார். நம்மில் எத்தைனப்போர் நம்முடைய பாவ வாழ்வை மாற்றி பரமனின் பாதையை தேர்ந்தெடுக்கப் போகின்றோம். அன்று யோனா நினிவே மக்கள் மனம்திரும்ப வேண்டும் என அவர்களுக்காக அனுப்பப்பட்டார். நற்பது நாளில் மக்கள் மனம்மாறாவிட்டால் அந்நகரம் அழிக்கப்டும் என எச்சரித்தார். இன்றும் கடவுள் நமது பங்குத்தந்தை வழியாக கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். எனது பிள்ளைகளே நீங்கள் உங்களது பாவ வாழ்வை மாற்றி என்பின்னே வாருங்கள் என அழைக்கின்றார். நம்முடைய பாதைகளை மாற்றி பரமனை கண்டுகொள்ள நாம் தயாரா?