இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

எனது பார்வை பரமனிலா? பரத்தமையிலா?

1சாமுவேல் 3:3-1, 19
1கொரிந்தியர் 6:13-15, 17-20
யோவான் 1:35-42

எனது பார்வை பரமனிலா? பரத்தமையிலா? நானும், எனது பிள்ளைகளும் கடவுளைப் பார்க்கின்றோமா? அல்லது காமத்தைப் பார்க்கின்றோமா? இறை இயேசுவில் பிரியமான சகோதர சதோதரிகளே! கடந்த வாரம் எங்களது வருடாந்திர தியனத்திற்கு சென்றிருந்தோம். உங்கள் அனைவருக்காகவும் நான் சிறப்பாக ஜெபித்துக் கொண்டேன். கடவுள் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

அனைவரும் சந்தோசமாக இருக்கின்றீர்களா? உங்கள் அனைவருக்கும் தமிழர்களின் திருவிழாவாகிய பொங்கல் பெருவிழா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரியமானவர்களே! இன்றைய மறையுரையை என்ன தலைப்பில் சிந்திக்கலாம் என்று யோசித்து தலைப்பைக் கொடுத்த போது என்னுடன் இருந்த நண்பர்கள் இந்த தலைப்பிலா மறையுரை வைக்கப் போகின்றாய்? எதை பற்றி சொல்ல வேண்டும் என உனக்கு தெரியாதா? ஆலயத்தில் எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாதா? என்று ஒவ்வொருவரும் ஒருவிதமாக கூறினர்.

ஆம் அன்புக்குரியவர்களே நாம் சிந்திக்கும் தலைப்பு
எனது பார்வை பரமனில் இருக்கின்றதா? பரத்தமையில் இருக்கின்றதா? எளிதாக கூறவேண்டுமானால் என்னுடைய பார்வையில் கடவுள் தெரிகின்றாரா? அல்லது காமம் தெரிகின்றதா? நானும், எனது பிள்ளைகளும் கடவுளைப் பார்க்கின்றோமா? அல்லது காமத்தைப் பார்க்கின்றோமா?

இந்த தலைப்பு கேட்பதற்கு சற்று அருவருப்பாகத்தான் இருக்கின்றது. ஆனாலும் இந்த தலைப்பில் பள்ளியில் சிந்திக்க முடியாது, ஆலயத்தில் சிந்திக்க முடியாது, பொது இடங்களில் பேசக்கூடாது ஆனாலும் ஒவ்வொருநாளும் நம்முடைய சிந்தனைகளும், நமது பிள்ளைகளின் சிந்தனைகளும் இதைச்சுற்றியே தான் இருக்கின்றன என்ற உண்மையை எத்தனை பேர் உங்களில் ஏற்றுக் கொள்ள முடியும்? இப்படிப்பட்ட சிந்தனைகளை நினைக்காமல் எத்தனை பேர் இருக்கின்றனர்? உதாரணமாக உங்கள் வீதியிலோ அல்லது நீங்கள் பணிசெய்யும் இடங்களிலோ ஒரு அழகான கண்ணுக்கு கவர்ச்சியாக ஒரு பெண் அறைகுறை ஆடையுடன் உங்களை கடந்து சென்றால் உங்களது பார்வை எப்படிப்பட்டதாக இருக்கும்? என்னுடைய பார்வையும், நான் வளர்க்கும் எனது பிள்ளையின் பார்வையும் பரமனை நோக்கி மட்டும்தான் இருக்கும் என்று கூறினால் இது உங்களுக்கான மறையுரை அல்ல.

பிரியமானவர்களே! இன்று நம்முடைய பார்வை எப்படிப்பட்டதாக இருக்கின்றது? ஆண்டவர் இயேசு “கண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாய் இருந்தால் நம் உடல் முழுவதும் ஒளிபெற்றிருக்கும்” என்று கூறுகின்றார். கடவுளின் பார்வை யார் மீது எல்லாம் பட்டதோ அவர்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகளாக மாறினர். அதைப்போலவே யாருடைய பார்வையெல்லாம் கடவுள் மீது இருந்ததோ, கடவுளும் அவர்களை கண்டு கொண்டு அவர்களது குடும்பத்தை ஆசீர்வாதத்தால் நிரப்பினார். இன்று நம்முடைய பார்வை யார்மீது இருக்கின்றது?

இன்றைய முதல் வாசகத்திலே கடவுளின் ஊழியரான ஏலி கடவுள் பணி செய்து வருகின்றார். ஆனால் அவரது பிள்ளைகள் ஒப்பினியும், பினகாசும் கீழ்த்தரமான செயல்களை செய்து கடவுளுக்கு எதிராக வாழ்ந்து வருகின்றனர். உதராணமாக இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு காணிக்கை பலி செலுத்தும்போது ஏலியின் பிள்ளைகள் வந்து அவர்களின் கண்களுக்கு எது பிடித்தாக இருக்கின்றதோ அவர்கள் அதை எடுத்துக் கொள்வர். அப்படி மக்கள் தரவில்லை என்றால் வழுக்கட்டாயமாக அதை பிடுங்கிக் கொள்வார்கள்; மேலும் ஆலயத்தில் ஊழியம் செய்து வந்த பெண்கள் கண்களுக்கு அழகுள்ளவர்களாக இருந்ததால் அவர்களோடு தகாத முறையில் உறவுகளும் வைத்து வாழ்ந்து வந்தனர். இவ்வாறாக கடவுளுக்கும், மக்களுக்கும் எதிராக பல பாவங்களை செய்து வருகின்றனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற கூற்றுக்கு ஏற்ப காலங்கள் கடந்த பிறகு ஏலி தன்னுடைய பிள்ளைகளை எச்சரிக்கின்றார். “வேண்டாம் பிள்ளைகளே! ஒருவர் மனிதருக்கு எதிராக பாவம் செய்தால் வேறொருவர் கடவுளிடம் அவருக்காக மன்றாடலாம்; ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்தால் அவருக்காக பரிந்து பேசுபவர் யார்? எனவே உங்களது பாவ வாழ்க்கையை விட்டு கடவுளிடம் திரும்பி வாருஙகள்” என அழைக்கின்றார்.

ஆனால் அவரது பிள்ளைகளோ தந்தையின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. இத்தருணத்தில் தன்னுடைய பார்வை முற்றிலும் மங்கிய நிலையில் ஏலி கடவுளுக்கு ஊழியம் செய்கின்றார். அப்படிப்பட்ட நேரத்தில் கடவுளின் பார்வை சாமுவேல் மீது விழுகின்றது. கடவுள் “சாமுவேல்” “சாமுவேல்” என அவரை பெயர் சொல்லி அழைத்து தன்னுடைய இறைவாக்கினராக கடவுள் தேர்ந்து கொள்கின்றார். அத்தோடு மட்டுமல்லாமல் ஏலிக்கு வரவிருக்கும் தண்டனையையும் அறிவிக்கின்றார். ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்திருந்தும் அவர்களை தடுக்காத குற்றத்திற்காகவும், தன்னுடைய பிள்ளைகளை நல்ஒழுக்கத்தில் வளர்க்காத காரணத்தாலும் ஏலிக்கும் அவரது குடும்பத்திற்கும் நீங்காத தண்டணை தீர்ப்பு வழங்குவேன் என கடவுள் சாமுவேல் வழியாக எச்சரிக்கின்றார். அதற்கு தன்நிலை உணர்ந்தவராய் ஏலி
“ஆண்டவர் பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும்” என ஏற்றுக்கொள்கின்றார். கடைசியில் அந்த குடும்பமே எப்படி அழிந்தது என விவிலியம் நமக்கு கூறுகின்றது. ஒப்பினியும், பினகாசும் போரிலே இறக்கின்றனர். இந்த இறப்பு செய்தியைக் கேட்ட ஏலி கீழே விழுந்து கழுத்து முறிந்து அவரும் இறந்து போனார். மேலும் பினகாசின் மனைவி தன்னுடைய பேருகால வேதனையிலே அவரும் இறக்கின்றார். ஆம் அன்புக்குரியவர்களே ஏலி கடவுளின் ஊழியராக இருந்தாலும் தன்னுடைய பார்வையும், தன்னுடைய பிள்ளைகளின் பார்வையும் தவறான சிந்தனையிலும், தவறான எண்ணத்திலும் இருந்ததால் அக்குடும்பமே அழிவுக்கு உள்ளானது.

அதைப்போலவே மற்றொரு நிகழ்வு! ஆடுமேய்த்துக் கொண்டிருந்த தாவீதை பார்த்த கடவுள் இஸ்ராயேலரின் அரசராக அவரை தேர்ந்து கொள்கின்றார். ஆனால் தாவீதினுடைய பார்வை எங்கு இருந்தது? ஓர் அரசன் போருக்குச் சென்று போரிட்டு, மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய அரசன், தன்னுடைய படைவீரர்களை மட்டும் போருக்கு அனுப்பி விட்டு தன்னுடைய அரண்மணையிலே உலவுகின்றார். அவருடைய பார்வையானது பத்சேபாமீது விழுகின்றது. அவள் அழகிய தோற்றம் உடையவராய் இருந்ததால் கடவுள் தந்த கட்டளையை மீறி அடுத்தவர் மனைவி என்று கூட பாரமல், அவள் மீது தன் பார்வையை செலுத்தி கடவுளுக்கு எதிராக பாவம் செய்கின்றார். அதனால் அவர் அடைந்த தண்டணையோ மிகக்கொடியது. தன் கண்முன்னாலே அவருடைய மகன் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றான். அத்தோடு மட்டுமா தாவீதின் மகன் அம்மோன் தன்னுடைய சொந்த சகோதரிமீது தன்னுடைய இச்சையான பார்வையைச் செலுத்தி தவறுசெய்கின்றான். 2சாமுவேல் 13:14. அதனால் அப்சலோம் தன் சொந்த சகோதரன் அம்மோனை கொலை செய்கின்றான். தாவீது அரசர் இரண்டாவதாக தனது மகனை இழக்கின்றார். அதைப்போலவே தாவீதின் மகன் அப்சலோம் மிக அழகு நிறைந்தவனாக இருக்கின்றான். 2சாமுவேல் 14:25. அவனும் தீய வழியில் தன் பார்வையை செலுத்தி கடவுளுக்கு எதிராக நடக்கின்றான். இஸ்ராயேல் மக்கள் முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தை தாவீதின் வைப்பாடிகளுடன் உறவுகொண்டான். அதன்படியே அப்சலேமின் நெஞ்சில் யோவாபு ஈட்டியை பாய்ச்சினான். யோவாபின் படைகள் வந்து அப்சலோமை வெட்டிக்கொன்றனர் . 2சாமுவேல் 18:15.

தந்தையின் தவறான பார்வையாலும், தன் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்காததாலும் குடும்பமே எப்படி அழிந்தது எனப் பாருங்கள்! இன்று என்னுடைய பார்வை எனது குடும்பத்தையும், எனது பிள்ளைகளையும் காப்பாறுகின்றதா? அல்லது அழிக்கின்றதா? இன்று எத்தனை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தவறான வாழ்க்கை வாழ்வது தெரிந்தும் அவர்களை திருத்த எத்தனை பேர் முயற்சி எடுக்கின்றீர்கள்? பிள்ளைகள் தவறான வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் யார்? அவர்களுடைய பெற்றோர்கள் தானே!
நல்ல மரம் எப்போதும் கெட்ட கனி தருவதில்லை. அதைப்போலவே நல்ல பெற்றோர்களின் வளர்பில் வளர்ந்த குழந்தைகள் கடவுளுக்கு எதிராக தங்களது பார்வைகளை திருப்புவதில்லை. இன்று நம்முடைய பார்வையும், நம்முடைய பிள்ளைகளின பார்வையும் யாரை மையப்படுத்தி இருக்கின்றன?

அன்று திங்கள் கிழமை காலை 8.30 மணி. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தது ஒரு பேருந்து. கண்டக்டர் டிக்கட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். டிரைவரோ அருகில் உள்ள டீ கடையில் அரசியல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். கண்டக்டர் விசில் அடிப்பதை கேட்டு டிரைவர் வந்து பேருந்தை இயக்கினார். அலுவலகம் செல்பவர்களும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஏறக்குறைய ஒரு நான்கு ஐந்து இருக்கை தவிர மற்ற இருக்கைகள் நிரம்பி விட்டது.

பேருந்தும் கிளம்பியது. இரயில்வே நிலைய நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், பத்து பதினைந்து பேர் தடதடவென அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினர். அவர்கள் கண்கள் அனைத்தும் காலியான இருக்கைகளை தேடிக்கொண்டே ஒவ்வொருவரும் முண்டியடித்துக் கொண்டு ஒரு மியூசிகல் சேர் போல் ஒருவித பதற்றத்தோடு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இந்த போரட்டத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் காலி இருக்கையை கண்டுபிடித்து அவரால் முடிந்த வேகத்தில் ஓடினார். ஆனால் அவரையும் மோதி கீழே தள்ளிவிட்டு 20முதல் 25 வயதுடைய ஒரு இளைஞன் அந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனது முகத்தில் என்னோ சந்தோசம்! ஒரு வெற்றிக் கோப்பையை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி. ஒரு பெரியவர் தன்னால் கீழே விழுந்து கிடக்கின்றார் அதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. அவரிடம் ஒரு மன்னிப்பு கேட்போம் என்ற எண்ணமும் அவனிடம் இல்லை. அவன் மிகுந்த வட்ட சாட்டமாக இருந்தால் அவனை தட்டிக்கேட்க யாரும் முன்வரவில்லை.

அந்த பெரியவர், பாவம், தள்ளாடி தள்ளாடி எழுந்து. கம்பியை பிடித்து நின்று கொண்டார் . பேருந்தில் இருந்த பலர் “சோச்சோ! சோச்சோ” ஏன்று பரிதாப்பட்டனர். ஒருசிலர் “பெரியவரே, பார்த்து! பார்த்து!” என்றனர். அப்போது

இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அருவருப்புடன் பக்கத்து சீட் பெண்ணிடம் முணுமுணுத்தாள். “ சே! என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு! பார்த்தீங்களா? இந்த மாதிரியா அநாகரிகமாக நடந்து கொள்வார்கள்?” என்றார்.

இன்னொரு பயணி, “சார்! இந்த மாதிரி நடந்துகிறவர்களை கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்கணும்”! பொறுக்கி பசங்க என்றார்.

மூன்றாவது ஒரு நர்ஸ் “ஐயோ பாவம்! இந்த வயசானவர் கீழே விழுந்துட்டாரே! அடி கிடி பட்டிருக்குமோ?” என்பது போல இருந்தது அவரது பார்வை!

நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளர் “வளர்ப்பு சரியில்லை சார். அப்பா அம்மா சரியாயிருந்தா, இந்த பையன் நிச்சயமா இப்படி நடக்க மாட்டான்! இந்த பையன் சரியான மெண்டல் கேசா இருக்கும் என்றார்”.

பெண்கள் பகுதியில், ஒரு 45 வயது பெண்மணி, குழந்தை இல்லாதவர்போல “இந்த மாதிரி பசங்களை பெத்துக்காம இருக்கறதே புண்ணியம்!” என்று பக்கத்தில் இருப்பவளிடம் கூறினாள்.

கல்லூரி மாணவன் ஒருவன் தன் காதலியோடு அமர்ந்திருந்தான்; அவன் “பாத்து பெருசு! ஏன் இந்த கூட்டத்திலே வந்து கஷ்டப்படறீங்க! ஆட்டோல போலாமில்லே” என்று கூற அந்த பெண் நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்து மற்றொரு மாணவன் “மேல போக டிக்கெட் எடுங்க பெரியவரே! இங்கே வந்து எடுக்கறீங்க?” என்றார்.

“முதியவர்களுக்கு மட்டும்” என்று எழுதப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தான் ஒரு 35 வயதுள்ள இளைஞன். எங்கே தன்னை எழுந்தரிக்க சொல்லுவாங்களோ என்று, தலையை குனிந்து அமர்ந்து கொண்டான்.

பிரியமானவர்களே இந்த நிகழ்விலே ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகின்றது. கீழே விழுந்த பெரியவருக்கு யாரும் எழுந்து இடம் கொடுக்க தயாரக இல்லை! அதற்கான மனப்பக்குவமும் எவரிடமும் இல்லை. ‘வேறே யாராவது இடம் தரட்டுமே? நான் ஏன் தரணும்? அப்புறம், யார் இந்த கூட்டத்தில் நின்று கொண்டே பயணம் செய்வது? என ஒவ்வொருவரின் பார்வையும் இருந்தது. ஒவ்வொருவரும் தங்களது வயதுக்கு ஏற்ப, படித்த படிப்புக்கு ஏற்ப தங்களது கருத்துகளை முன் வைத்தனர் ஆனால் அந்த பெரியவருக்கு உதவ எவரும் இல்லை.

கண்டக்டர் அவரது இடத்திலேருந்து “டிக்கெட்! டிக்கெட்!” என்று கத்தினார்.
பெரியவர் “எனக்கு சத்திரம் ஒரு டிக்கெட் கொடுங்க என்றார்.!”
“இந்தாங்க சார் டிக்கெட்! அடி கிடி ஒண்ணும் படலியே!”
“ஒண்ணும் ஆவலை கண்டக்டர் சார். தேங்க்ஸ் என்றார் அந்த பெரியவர்”
“சார், இங்கே யாரையும் கேக்க முடியாது. அந்த பையனை போய் எழுந்திருக்க சொன்னா, சண்டைக்கு வருவான். பொறுக்கி மாதிரி இருக்கான். எதுக்கு வம்பு?” என்றார் கண்டக்டர் இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த,

ஒரு இளைஞன் “ஐயா! இங்கே வந்து என் இருக்கையிலே அமர்ந்துகொள்ளுங்கள் என்றான்!”
“இருக்கட்டும்பா! வேண்டாம்பா!”அவசரமாக பதட்டத்தோடு மறுத்தார் அந்த பெரியவர்.
“இல்ல சார்!, இதுலே என்ன இருக்கு? என்னாலே நிக்க முடியும்! நீங்க உக்காருங்க ப்ளீஸ்!”என்று சொல்லி தட்டுத் தடுமாறி கம்பியை பிடித்து கொண்டு எழுந்தான், கருப்பு கண்ணாடி அணிந்த அந்த நாகரிக கண் தெரியாத இளைஞன். (இந்த இளைஞனோ பார்வையற்றவன்).

அவனுக்கு உடளலவில் கண் பார்வை இல்லை. மாறாக மனசு என்ற பார்வை தெளிவாக இருந்தது. ஆனால் பேருந்தில் இருந்தவர்களுக்கோ கண்கள் இருந்தது அனால் அதில் பார்வையற்றதாக இருந்தது. அதனால் தான் இயேசு மத்தேயு 7 : 3-5 ல் “உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், "உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்” எனக் கூறுவார்.

பிரியமானவர்களே இன்று உங்களுக்கு பார்வை இருக்கின்றது தானே! பார்வையிருந்தும் நம்மில் எத்தனை பேர் குருடர்களாக வாழ்ந்து வருகின்றோம். அப்படியே பார்வை நன்றாக தெரிந்தாலும் எத்தனை பேருடைய பார்வை கடவுளை நோக்கி இருக்கின்றது? நம்முடைய பார்வையும், நமது பிள்ளைகளின் பார்வையும் கடவுளை நோக்கியதாக இருக்கின்றது என்றால், ஏன் நம்முடைய சமுதாயத்தில் இன்றும் சிறுகுழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை ஏன் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக வேண்டும்? இன்றைய இரண்டாவது வாசகத்தில் தூய பவுல் தெளிவாக கூறுகின்றார்.
“உங்களது உடல் பரத்தமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். மேலும் உங்களது உறுப்புகள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா?” கிறிஸ்துவின் உறுப்புகளை எப்படிப்பட்ட பார்வையிலே நான் பார்க்கின்றேன்.?

அன்புக்குரியவர்களே ஒருமுறை குடிபழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என 15பேர் சிவகங்கையில் உள்ள ஓர் இடத்தில் கூடியிருந்தனர். அவர்களுக்கான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்கு ஒருநாள் தியானத்திற்கு நான் சென்றிருந்தேன். அன்று அவர்களுக்கு வகுப்பு எடுக்க வந்த ஒரு ஆசிரியர் ஒரு மேசையில் ஒரு மது பாட்டில், ஒரு கூர்மையான கத்தி, ஓர் அழகான பெண்ணின் புகைப்படத்தை வைத்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் அவர்களைப் பார்த்து இந்த மூன்று படத்தில் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்க ஒவ்வொருவரும் ஒரு பதிலை கூறினார். அந்த பதிலை வைத்தே அவர்களுக்கு பாடம் நடத்தினார்.

உதாரணமாக ஒருவர் மதுவைப் பார்கின்றார்; அது பார்ப்பதற்கு அழகானதாக இருக்கின்றது எனவே மதுவை கையில் எடுத்தவர் நன்கு மதுவை குடிக்கின்றார். குடிபோதையில் அழகுள்ள பெண்ணை பார்க்கின்றர். தன்வயப்படுத்த முயல்கின்றார். ஆனால் அப்பெண் ஒத்துழைக்காததால் கத்தியை எடுத்து அவரை கொலை செய்கின்றார். இரண்டாவதாக ஒருவர் கத்தியை எடுக்கின்றார் பெண்ணை மிட்டுகின்றார். தாகத முறையில் நடந்து கொள்கின்றார். மதுவை குடித்து மயங்கி விடுகின்றார். மூன்றாவதாக ஒருவர் பெண்ணை பார்க்கின்றார் அவளது அழகில் மயங்குகின்றார். இருவரும் மதுவைக் குடிக்கின்றனர். கத்தியை எடுத்து ஒருவரையொருவர் குத்திக் கொள்கின்றனர். நமது பார்வைப் படியே நமது வாழ்வும் இருக்கும் என்று கூறி வகுப்பை முடித்தார்.
2 பேதுரு 2 : 14 – “இவர்களது கண்கள் கற்பு நெறியிழந்த பெண்களையே நாடுகின்றன; பாவத்தை விட்டு ஓய்வதேயில்லை. இவர்கள் மனவுறுதி அற்றவர்களை மயக்கித் தம்வயப்படுத்துகிறார்கள். பேராசையில் ஊறிய உள்ளம் கொண்ட இவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள்” என்று கூறுகின்றது.

அதன் பிறகு நான் அவர்களுக்க தியானம் கொடுக்க சென்றேன். அதே மேசையில் மதுபாட்டில், கூர்மையான கத்தி, அழகான பெண்ணின் படம், அத்தோடு நல்லாயன் இயேசுவின் படத்தை வைத்து கூறினேன். உங்களுடைய பார்வை எங்கு இருக்கின்றதோ அங்கு தான் உங்களது எண்ணகளும் இருக்கும். உங்களது பார்வையை இயேசுவின் மீது திருப்புங்கள், யாரைப் பார்த்தாலும் அவர்களில் இயேசுவைப் பாருங்கள், உங்களையே ஒரு இயேசுவாகப் பாருங்கள். உங்களுடைய பார்வை எப்படிப்பட்டதாக இருக்கின்றதோ அப்படியே உங்களது எண்ணங்கள் இருக்கும்; உங்களது எண்ணங்கள் எப்படிப்பட்டதாக இருக்கின்றதோ அப்படித்தான் உங்கள் சிந்தனைகள் இருக்கும்; உங்களது சிந்தனைகள் எப்படி உள்ளதோ அப்படித்தான் உங்கள் வாழ்வும் இருக்கும். அன்புக்குரியவர்களே! இப்போது இங்கு உள்ள படங்களில் உங்களது பார்வை எங்கு இருக்கின்றது?. முதல் மூன்றில் இருந்தது எனச் சொன்னால் அதற்கு ஏற்ற தீர்வை மேலே பார்த்தோம். ஆனால் உங்களது பார்வை இயேசுவின் மீது இருந்தால் நிச்சயம் தவறான அந்த மூன்றையும் தொட்டுகூட பார்க்க ஆசைப்பட மாட்டீர்கள். உங்களது பார்வை இயேசுவை நோக்கி இருந்தால் நிச்சயம் நீங்கள் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாக மாட்டீர்கள். நிச்சயம் உங்களது உடலையும், அடுத்தவரின் உடலையும் கிறிஸ்துவின் உடல் உறுப்புகள் என்றுதான் நினைப்பீர்கள்.


திபா. 16:8 –ல் “ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன்” என்றும் மேலும் திபா 101: 3 “இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது” என்கிறார். ஆக நம்முடைய பார்வை ஆண்டவரை நோக்கி இருக்கும்போது ஆண்டவரின் பார்வையும் நம்மை நோக்கி தான் இருக்கும். இதைத்தான் சீராக்கின் ஞானம் 34: 16 “ஆண்டவருடைய கண்கள் அவர்மேல் அன்புகூர்வோர்மீது உள்ளன” என்கிறது.

ஆண்டவருடைய கண்கள் அவரை யாரெல்லாம் அன்பு செய்கின்றனரோ அவர்கள் மேல் இருக்கின்றன என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் இங்கு சிந்திக்க வேண்டியது என்னவென்றால் திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களோடு நின்று கொண்டிருக்கின்றார். அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு தன்னுடைய சீடர்களிடம் “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என இயேசுவைப் பார்த்து சுட்டிக்காட்டுகின்றார். திருமுழுக்கு யோவனை விட்டுவிட்டு அவருடைய சீடர்கள் இயேசுவின் பின்னால் செல்கின்றனர்.

இங்கு திருமுக்கு யோவான் மற்றும் அவரது சீடர்களின் பார்வை இயேசுவை நோக்கி இருக்கின்றன. எனவே இயேசுவின் பார்வையும் அவர்கள் பக்கம் திரும்புகின்றது. இயேசு அவர்களை திரும்பி பார்த்து
“என்ன தேடுகின்றீர்கள்” என்கிறார். அதற்கு பதிலைப் பாருங்கள் “ரபி நீர் எங்கே தங்கியிருக்கின்றீர் என்கின்றனர்?” இயேசு கேட்ட கேள்விக்கும், சீடர்கள் கூறிய பதிலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? இருந்தாலும் இயேசுவும் அவர்களிடம் “வந்து பாருங்கள்” என்கிறார். சீடர்கள் சென்று இயேசு தங்கியிருந்த இடத்தை பார்த்தனர். அவரோடு தங்கினர். அத்தோடு மட்டுமல்லாமால் இராயப்பரைப் பார்த்து நாங்கள் மெசியாவைக் கண்டோம் எனக் கூறி அவரையும் இயேசுவிடம் கூட்டி வருகின்றனர். இங்கு இயேசு இராயப்பரை கூர்ந்து பார்த்து “நீ யோவனினன் மகன் சீமோன். இனி கேபா எனப்படுவாய். கேபா என்றால் பாறை என்பது பொருள்” என்று இயேசு தன்னுடைய பார்வையிலே இராயப்பர் எப்படிப்பட்டவர் எனக் கண்டுகொள்கின்றார்.

ஆம் அன்புக்குரியவர்களே யாரொல்லம் தங்களுடைய பார்வைகளை இயேசுவிடம் திருப்பினரோ அவர்கள் அனைவரையுமே, இயேசு தன்னுடைய பிள்ளைகளாக மாற்றுகின்றார். உதாரணமாக விவிலியத்தில் வரும் குள்ள மனிதன் சக்கேயு மக்கள் அனைவரின் பார்வையிலும் அவர் வரிதண்டுபவர், பாவி என்று பார்க்கப்பட்டான். அப்படிப்பட்ட அவனிடம் சொத்து இருந்தது, செல்வாக்கு இருந்தது, பணம் இருந்தது, பதவி இருந்தது, ஆனாலும் அவரது பார்வை இயேசுவை காணவேண்டும் என துடிக்கின்றது. எனவே யாருக்கும் தெரியாமல் காட்டுஅத்திமரத்தில் ஏறி ஒளிந்து கொண்டு இயேசுப் பார்க்கின்றான். இயேசு அவ்வழியே வருகின்றார் அவரைச் சுற்றறி மக்கள் கூட்டம் நிறைய இருக்கின்றது. ஆனாலும் இயேசுவின் பார்வை சக்கேயுவை நோக்கி செல்கின்றது.
“சக்கேயு விரைவாய் கீழே இறங்கி வாரும்; இன்று நான் உன்னோடு உன் வீட்டில் தங்க வேண்டும்” என அழைக்கின்றார். இயேசுவின் பார்வை தன்மீது பட்டவுடனே பாவியான சக்கேயு ஆபிரகாமின் மகனாக மாறுகின்றான் லூக் 9:1-9.

இன்று நீங்களும் நானும் ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது யாருடைய பார்வையிலே பட்டு எழுந்தரிக்கின்றோம்? இன்றும் பல வீடுகளில் வீட்டைச் சுற்றிலும் நடிகர் நடிகைளின் படங்கள், அரசியல்வாதிகளின் படங்கள், படுக்கைக்கு அருகிலே செல்போன், கதைப் புத்தகங்கள், கணிணி, செய்திதாள்கள், சட்டைப்பையிலே அரசியல்வாதிகளின் படங்கள் எனப் பல… யாரைப் பார்த்து நம்முடைய வாழ்வைத் நாம் தொடங்குகின்றோம்? தொடக்க நூலில் ஆதாம், ஏவாலுக்கு கடவுள் சகல வசதிகளையும் கொடுத்தார். ஆனாலும் அவர்களின் பார்வையோ விலக்கப்பட்ட கனியின் மீது இருந்தது. காரணம் பாவத்திற்கு இட்டுச்செல்லும் எவையும் கண்களுக்கு களிப்புட்டுவதாக இருந்தது. எனவே தங்களுடைய பார்வைக்கு எது களிப்பு ஊட்டியதோ அதனாலேயே அவர்கள் கடவுளின் பிரசன்னத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.


இன்று உங்களுடைய பார்வை எதைநோக்கியதாக இருக்கின்றது? கடவுளை நோக்கியதாக இருக்கிறதா? அல்லது பரத்தமையை நோக்கியதாக இருக்கின்றாதா? எவன் ஒருவன் ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கும் எவரும் தன் உள்ளத்தால் ஏற்கெனவே விபச்சாரம் செய்தாயிற்று என்கிறது மத் 5:28. ஆக பெண்களை நோக்கிய எனது பார்வையும், எனது பிள்ளைகளின் பார்வையும் எப்படிப்பட்டதாக இருக்கின்றது? நான் தவறு செய்தாலும் எனது பிள்ளை தவறு செய்தாலும் அதற்கு காரணம் நானே!

மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப் பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்து அவரைப் பார்க்கின்றான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்து அவரைப் பார்க்கின்றான். “காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டே சென்றான். சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டு சென்றார். ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமாக இருக்கின்றது. இன்று எனது பார்வையும், எனது பிள்ளைகளின் பார்வையும் எந்த விதம்?

தமிழர்களின் திருவிழாவாகிய பொங்கல் பெருநாளில் நம்முடைய பார்வைகளை பரமன் மீது செலுத்தி பந்துக்களோடு சந்தோசமாக வாழ்வோம். அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!