இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருக்காட்சி பெருவிழா

ஆண்டவரைப் பார்ப்பது எனக்கு கலக்கமா? குதுகலமா?!

எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3, 5-6
மத்தேயு 2:1-12

இறை இயேசுவில் பிரியமான சகோதர சதோதரிகளே! அனைவரும் சந்தோசமாக இருக்கின்றீர்களா? மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று நமது தாயாம் திருச்சபையானது ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இன்று நான்கு முக்கிய சிந்தனைகளில் நமது விசுவாச வாழ்வை அலசிப் பார்க்க திருச்சபை அழைக்கின்றது.


முதலாவதாக திருக்காட்சி பெருவிழாவில் யூதர் அல்லாத கீழ்திசை ஞானிகள் இயேசுவை சந்திக்கின்றனர். அதாவது பாலன் இயேசு கிறிஸ்து ஏதோ ஒரு சமயத்திற்கு மட்டும் சொந்தக்கரார் அல்ல! மாறாக உலக மக்கள் அனைவருக்கும் இயேசு சொந்தம்! என்பதை கூறுகின்றது.

இரண்டாவதாக கீழ்திசை ஞானிகளின் சந்திப்பு எப்படிப்பட்ட தாக்கத்தை என்னில் ஏற்படுத்துகின்றது? உதாரணமாக “இந்த ஞானிகள் குழந்தை இயேசுவைக் கண்டு மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்: நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்: தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்”. ஆனால் அரசன் ஏரோதுவுக்கும், எருசலேம் மக்கள் அனைவருக்கும் இந்த கீழ்திசை ஞானிகளின் சந்திப்பு கலக்கத்தை உண்டு பண்ணியது. “கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்; என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று”.

மூன்றாவதாக இயேசுவை சந்திக்க வந்தவர்களை நாம் ஞானிகள் என்கிறோம், மூன்று இராஜக்கள் என்கின்றோம். எவராக இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஞானத்தில் பெரியவர்கள், செல்வத்தில் உயர்ந்தவர்கள், பெயரும், புகழும் பெற்றவர்கள், அதிகார மிக்கவர்கள், சமூதாய அந்தஸ்தை பெற்றவர்கள், ஆனாலும் இவையணைத்தும் இருந்தும் அவர்களால் மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை. ஆனால் பாலன் இயேசுவை கண்டதும் மட்டில்லா பெருமகிழ்ச்சி அடைந்தனர். இன்று நம்முடைய மகிழ்ச்சி நம்மிடம் இருக்கும் பட்டம், பதவி, அதிகாரம், சொத்து, சுகத்தில் இருக்கின்றதா? அல்லது மாட்டுதொழுவத்தில் எழையாக பிறந்து இன்றும் நம்மிடையே வாழும் ஏழை மனிதர்களை சந்திப்பதில் இருக்கின்றதா?

நான்காவதாக இந்த ஞானிகள் எவரும் கையை வீசிக்கொண்டு வரவில்லை. மாறாக தங்களது அன்பையும், வணக்கத்தையும் தெரியப்படுத்தும் விதமாக தங்களால் முயன்றதை பலன் இயேசுவுக்கு அன்பு பரிசாகக் கொடுக்கின்றனர். இன்றோடு கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு வாரம் முடிந்துவிட்டது. உங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக எத்தனை மனிதர்களுக்கு நீங்கள் உதவி செய்து இருப்பீர்கள்? உங்களது வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாமல் இருக்கட்டும் என்கிறது விவிலியம். அந்த அடிப்படையில் உங்களோடு வாழும் ஏழை மக்களிடத்தில் பாலன் இயேசுவை கண்டுகொள்ள முடிந்ததா?

ஆக இன்று நம்முடைய வாழ்வில் சந்தோசத்தை தருவது நம்மிடம் இருக்கும் பதவி, சொத்து, செல்வங்களா? அல்லது மாட்டுதொழுவத்தில் எந்த வித வசதி வாய்ப்புகளும் இல்லாமல் பிறந்து இருக்கும் பாலன் இயேசுவா? நம்முடைய மகிழ்ச்சி எங்கு இருக்கின்றது? நம்முடைய தேடலை வைத்து நம்முடைய பதிலும் இருக்கின்றது. சிந்திப்போம்!

நம்மிடத்தில் ஏற்படும் பயத்திற்கும், அதனால் வரும் கலக்கத்திற்கும் காரணம் என்ன?

பிரியமானவர்களே! நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது எனக்கு ஏற்பட்ட கலக்கமான அனுபவம். நான் எங்களது பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் கிடையாது. ஏதோ சுமாராகத்தான் படிப்பேன். அரையாண்டுத் தேர்வு முடிந்து தேர்வுத் தாள்கள் கொடுக்கும் நேரம் அது. அந்த தேர்விலே மூன்று பாடங்களிலே நான் தேர்ச்சி பெறவில்லை. எனவே எனது ஒவ்வொரு பாட ஆசிரியரும் தேர்வு எழுதிய பேப்பரைக் கொடுத்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொன்னார்கள். பெற்றோரிடம் தேர்வுத் தாளைக் காண்பிப்பதற்கு மிகுந்த பயம். காரணம் எனது அப்பாவிடம் நான் பல முறை அடிவாங்கியிருக்கின்றேன். அதுவும் மாட்டை அடிக்கும் சாட்டையிலும், புளியங்குச்சியிலும் அடிவாங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு நாளும் எனது அப்பா ஊருக்கு போய்விட்டார், மருத்துவமனைக்கு சென்றுவிட்டார் என ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து விட்டேன்.

ஒருநாள் நானே எனது அப்பாவின் கையெழுத்தை போட்டு ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன். ஆசிரியரும் எதுவும் சொல்லாமல் வாங்கி வைத்து விட்டார். எனக்கும் மிகுந்த சந்தோசம். அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டில் எங்களது மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எங்களது கணித ஆசிரியர் எனது விட்டின் முன்பாக நின்று கொண்டு எனது தந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஒருவித பயம் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து எங்களது ஆங்கில வகுப்பு ஆசிரியரும் வந்து எனது அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இதற்கு மேலும் எனக்கு பயமும், கலக்கமும் தொற்றிக் கொண்டது. ஆனாலும் தைரியசாலிபோல சமாளித்து விட்டேன். மறுநாள் காலையில் நான் பள்ளிக்கு வந்து விட்டேன். அதன் பிறகு எனது அப்பா எங்களது பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார் என எனது நண்பர்கள் தெரிவித்தனர். உண்மையிலே அந்த நேரம் தான் எனக்கு மிகுந்த கலக்கத்தை உண்டு பண்ணியது. என்ன செய்வது எனத்தெரியாமல் ஓடிச்சென்று என் அப்பாவிடமும், எனது தலைமை ஆசிரியரிடமும் மன்னிப்பு கேட்டேன்.
“சார் மன்னித்துக் கொள்ளுங்கள். எனது அப்பாவின் கையெழுத்தை நான் தான் போட்டேன்” என எனது தவற்றை ஒப்புக்கொண்டேன். அந்த மன்னிப்பு கேட்ட ஒரு நொடியில் எனக்கு இருந்த பயம், கலக்கம் அனைத்தும் பறந்துபோனது.

ஆனால் இன்று வரை எதற்காக எனது ஆசிரியர்கள் எனது அப்பாவை சந்தித்து பேசினர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களின் சந்திப்பு எனக்கு பயத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது. காரணம் நான் தவறு செய்து இருந்தேன். அந்த தவறு எனக்கு பயத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

ஆம் அன்புக்குரியவர்களே! இங்கு ஏரேதும் அவரோடு இருந்த எருசலேம் மக்கள் அனைவருக்கும் மிகுந்த பயத்தையும், கலக்கத்தையும் உண்டு பண்ணியது இந்த கீழ்திசை ஞானிகளின் சந்திப்பு. அதற்க காரணம் இயேசுவின் பிறப்பு.
லூக்கா 2:34-35ல் “சிமியோன் இயேசுவின் பெற்றோருக்கு ஆசிகூறி, தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் என்றார்”. ஆக ஏரோது அரசன் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயப்படுகின்றான். அனால் அனது உள்ளமும், மனமும் கலக்கத்திற்கு உள்ளாகின்றது. ஒவ்வொரு மனிதர்க்கும் இந்த பயமும், கலக்கமும் வருவது சகஜம் தான். ஆனால் அந்த பயத்தில், கலக்கத்தில் நாம் எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். தவறு செய்த போது பயமும், கலக்கமும் எனக்கு இருந்தது. ஆனல் எனது தவற்றை நான் ஒப்புக்கொண்டபோது ஒருநொடியில் அனைத்தும் பறந்து பேனது. இங்கு ஏரோதும் பயமும் கலக்கமும் அடைகின்றான். ஆனால் சூழ்ச்சியாக சிந்திக்கின்றான்.

முதலாவதாக எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரிக்கின்றான். பிறகு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொள்கின்றான். மேலும் அவர்களிடம் நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள் என்கின்றான். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். ஆனால் நடந்தது என்ன?

ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் கீழ்திசை ஞானிகளின் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
“ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்”.

பிரியமானவர்களே எங்கோ ஒரு நாட்டில் பிறந்து, வானில் தோன்றிய விண்மீனை அடையாளமாக வைத்து இந்த ஞானிகள் பல மைல் தூரம் கடந்து பாலன் இயேசுவை சந்திக்க வருகின்றனர். ஆனால் சொந்த நாட்டிலே பிறந்து, பிறந்த நாட்டிலே அரசராக இருந்து அவருடைய நாட்டிலே பிறந்திருக்கும் பாலன் இயேசுவைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அவரை சந்திக்க மனமில்லாதவனாக ஞானிகளை மட்டும் தனியே அனுப்புகின்றான். பிறகு தன்னுடைய பதவிக்கு எதிராக இருக்கும் எவரையும் பழிவாங்க ஆசைப்படுகின்றான். எனவே ஒருபாவமும் அறியதா குழந்தைகளை அவன் கொன்றொழிக்கின்றான். பயத்திலே எடுக்கும் முடிவு எப்படிப்பட்டது என்பதை விவிலியம் நமக்கத் தெளிவு படுத்துகின்றது.

இன்றும் நமது அன்றாட வாழ்வில் பயத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன? நம்மிடையே இருக்கும் சொத்து, செல்வாக்கு இவற்றை எப்படிப்பட்ட செயலுக்கு நாம் பயன்படுத்துகின்றோம்? ஏரோதுவைப் போல பிஞ்சு குழந்தைகளின் வாழ்வை அழிப்பதற்காகவா? அல்லது நம்மிடம் இருக்கும் செல்வங்களை ஒரு பொருட்டாக கருதாமல் கடவுளே முக்கியம் என அவரைத் தேடி கண்டு கொள்ளப் போகின்றோமா? சிந்திப்போம்.

பாலன் இயேசு யூத சமூகத்தல் பிறந்தால் யூதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. மாறாக உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர். அதைப்போலவே நாம் நமது பெற்றோர் வழியாக இந்த உலகத்திற்கு வந்திருக்கலாம்; ஆனால் நாம் நமது பெற்றோர்களுக்கோ, நமது சொந்த பந்தங்களுக்கோ உரியவர்கள் அல்ல; மாறாக நமது வாழ்வு உலக மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். எனவேதான் பாவேந்தர் பாரதிதாசன் இமயமலையில் ஒருவன் இருமினால் குமரியில் வாழ்பவன் மருந்துகொண்டு ஓடவேண்டும் எனப்பாடுகின்றார். அதானல் தான் நமது நாட்டில் எத்தனையே ஞானிகளும், புனிதர்களும் தங்களது வாழ்வை ஒரு குடும்பத்திற்காகவோ அல்லது ஒரு சமுதயாத்திற்காகவோ அர்ப்பணிக்காமல் உலக மக்கள் அனைவருக்காவும் அர்ப்பணித்தனர்.

ஆனால் இன்று நடப்பது என்ன? உதாரணமாக குமரியில் மீனவர்கள் செத்தபோது நம்மில் எத்தனைபேர் அவர்களுக்கு ஓடிச்சென்று உதவிகள் செய்தோம்? காரணம் நமக்கு வேலைகள் உண்டு, குடும்பங்கள் உண்டு, என்று சுயநலத்தில் அல்லவா வாழ்ந்து வந்தோம்! யாரெல்லாம் சமூதாயத்திற்காக உழைத்தார்களோ அவர்கள் அனைவரையும் ஒருகுறுகிய வட்டத்தில் வைத்து தானே போற்றுகின்றோம் உதாரணமாக திருவள்ளுவர் உலக மக்கள் அனைவருக்காகவும் நல் போதனைகளை எழுதினார். ஆனால் ஒரு சமூகத்திற்க மட்டும் சொந்தமானவர் என அவரை முடக்கி விடுகின்றோம். காமராஜர் தமிழக மக்கள் அனைவருக்கும் பல நல்ல திட்டங்களைச் செய்ததர்; ஆனால் இன்று அவர் ஒரு சமூகத்தைச் சார்ந்தவர் என்ற சிந்தனையை போதிக்கின்றோம். அதைப்போலத்தான் இயேசுவும் ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; மாறாக அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு உலகத்திற்கு சொந்தமான இயேசுவை உலக மக்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் கடமை நமக்கு இருக்கின்றது. இந்த கீழ்திசை ஞானிகள் தாங்கள் கண்டுகொண்ட இயேசுவை அறியாத ஏரோதுவுக்கு அறிவிக்கின்றனர். ஆனால் ஏரோது இயேசுவை ஏற்றுக்கொள்ள மனமில்லதவராக இருக்கின்றான்.

பிரியமானவர்களே இன்றைய முதல் வாசகத்தில் ஏசாய இறைவாக்கினர் நம் அனைவரையும் பார்த்து எழுந்து ஒளிவீச அழைக்கின்றார். காரணம் விண்மீன் என்ற ஒளி வழியாக ஞானிகள் பாலன் இயேசுவை கண்டுகொண்டனர். இன்றும் ஞானஸ்தானத்தின் போது ஒவ்வொரு குழந்தைக்கும் எரியும் மெழுகுதிரியானது கொடுக்கப்படுகின்றது. காரணம் இந்த குழந்தையும் இருளைக் கடந்து ஆண்டவரின் ஒளி இக் குழந்தை மேலும், இக் குழந்தையின் குடும்பத்தின் மேலும் வீச வேண்டும் என போதிக்கின்றது. கிறிஸ்துவாகிய ஒளியை திருமுழுக்கு என்ற அருட்சாதனத்தால் பெற்றுக் கொண்ட நமது வாழ்வு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? பணம், பதவி, சொத்து, என்ற இருளை நோக்கியா? அல்லது ஒளியாகிய பாலன் இயேசுவை நோக்கியா? பாலன் இயேசுவை நோக்கி வந்தவர்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். பதவி, அதிகாரம், சொத்து தான் முக்கியம் என வாழ்ந்தவர்கள் இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டனர். இன்று நாம் எப்படி?

இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக உலக மக்கள் அனைவரும் எக்குலத்தவரானாலும், எம்மதத்தினவரானாலும், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும்; ஒரே உடலின் உறுப்பினர்கள் என்று போதிக்கின்றது.
“நற் செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்”. ஆக நாம் அனைவரும் கடவுள் என்ற உடலின் உறுப்பினர்களா? அல்லது பணம், பதவி, சொத்து, அதிகாரம் என்ற அங்கத்தின் உறுப்பினர்களா? இன்று நாம் பங்கெடுக்கும் இந்த திருக்காட்சி பெருவிழா நம்முடைய வாழ்வில் கலக்கத்தை உண்டு பண்ணுகிறதா? அல்லது குதுகலத்தை உண்டு பண்ணுகின்றதா? பாலன் இயேசுவுக்கு நான் கொடுத்த, கொண்டுவந்த எனது அன்பு பரிசு என்ன? இன்று மாட்டுதொழுவத்தில் பிறந்த இயேசுவை மையப்படுத்தி நம் வாழ்வு இருக்க போகின்றதா? அல்லது பணம், பதவி, சொத்து, சுகம், அதிகாரம், இவற்றை மையப்படுத்தி நம் வாழ்வு இருக்க போகின்றதா? சிந்திப்போம். விண்மீன் வழியாக சரியான பாதையை தேர்ந்தெடுத்த ஞானிகளைப் போல வாழப் போகின்றோமா? அல்லது ஏரோது அரசனைப் போல பயந்து பயந்து வாழப்போகின்றோமா?

ஞானிகளுக்கு வழிகாட்டிய விண்மீன் இந்த புதிய ஆண்டிலே நமக்கும், நமது பிள்ளைகளுக்கும் நல்வழியை காட்டுவாராக!

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2018 –ம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.