இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









இறைவனின் தாய் அன்னை மரியாள் – புத்தாண்டு விழா

ஆண்டவரே! என் அன்னை வழியாக எனக்கு ஆசீர்வழங்குவீராக!

எண்ணிக்கை 6:22-27
கலாத்தியர் 4:4-7
லூக்கா 2:16-21

இறை இயேசுவில் பிரியமான சகோதர சதோதரிகளே! அனைவரும் சந்தோசமாக இருக்கின்றீர்களா? சந்தோசமாக இருக்கின்றீர்கள் என்பதை தெரியப்படுத்தும் விதமாக ஒருவர் மற்றவர் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு புத்தாண்டுப் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோமா!

இன்று நமது தாயாம் திருச்சபையானது அன்னை மரியாவை இறைவனின் தாய் என பெருமைப்படுத்துகின்றது. இரண்டாவதாக புத்தாண்டிலே புதிய சிந்தனைகளோடு காலடி எடுத்து வைக்கின்றோம். மூன்றாவதாக இந்த புதிய ஆண்டிலே இறைவன் நம்மை முழுமையாக ஆசீர்வதிக்க வேண்டியும், நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் இறைவனுடைய அருளுக்காக இன்று நாம் ஒன்றாக கூடியிருக்கின்றோம்.

ஆண்டின் முதல் நாளான இன்று நமது தாயாம் திருச்சபை மரியாள் இறைவனின் தாய் என்ற விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. அதாவது வருடத்தின் முதல் நாளிலே நம் அனைவரையும் அன்னையின் பாரமரிப்பில் கடவுள் ஒப்படைக்கின்றார். காரணம் தாய்க்கு மட்டும் தான் தெரியும் தனது பிள்ளைக்கு எது தேவை, எது தேவையில்லை, எது நல்லது, எது கெட்டது என்று. மேலும் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என ஒவ்வொரு தாயும் அறிந்தும், தெரிந்தும் வைத்திருப்பதால் தான் நம்மையெல்லாம் படைத்த கடவுளே நம் அனைவரையும் அவரது அன்னையின் பாரமரிப்பில் ஒப்பைடைக்கின்றார். ஆக கடவுள் நம்மீது எவ்வளவு அக்கரை கொண்டுள்ளார் என்பதை இவ்வருட முதல் நாளே நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

மரியாளைப் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நம்மிடம் இருந்து வந்துள்ள போதிலும், மரியாவைப் பற்றிய நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

01. மரியா இறைவனின் தாய் – கி.பி 431; 02. மரியா என்றும் கன்னி – கி.பி 553 03. மரியா அமல உற்பவி – கி.பி 1854; 04. மரியா விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டார் – கி.பி 1950. மேற்சொல்லப்பட்ட நான்கு கோட்படுகளில் மிகவும் பழமையானதும், முதன்மையானதுமாக இருப்பது மரியா இறைவனின் தாய் (Theotokos) என்னும் விசுவாசக் கோட்பாடு தான்.

பிரியமானவர்களே அன்னை மரியாவை இறைவனின் தாய் என்று நாம் அழைக்கலாமா?
மரியன்னையின் அன்பை உலக மொழிகளில் எடுத்துரைக்க போதிய வார்த்தைகளே இல்லை. அதையே தூய அகுஸ்தினார் “ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நாக்குகளாக மாறினாலும் மரியன்னையை, அவருடைய தாய்மைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கின்றார். மேலும் இரண்டாம் வத்திக்கான் சங்கம் “ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்கள் அனைத்தும் புனிதர்களுக்கு மட்டும்தான். இவ்வடிப்படையில் மரியா கிறிஸ்துவின் தாயும், இறைவனின் தாயுமாக இருப்பதால் அவருக்கு சிறப்பான வணக்கம் செலுத்தப்படுகின்றது” என்று கூறுகின்றது. “தந்தையில்லாமல் கடவுளால் பிறக்க முடிந்தபோது, தாயில்லாமல் அவரால் பிறக்க முடியவில்லை” என்கிறது நமது திருச்சபை. மரியாளினால் கடவுள் மகிமைக்குள்ளானர் என்பதல்ல பொருள். மகிமை பொருந்திய கடவுளை ஈன்றெடுத்ததால் மரியா இறைவனின் தாயாகும் பேறுபெற்றார் என்பதே கத்தோலிக்கர்களின் உண்மையான விசுவாசம் ஆகும். அன்னை மரியாளுக்கு ஆயிரம் சிறப்பியல்புகள் இருந்தாலும் இறைவனின் தாய் என்பதே இயேசு கிறிஸ்துவின் தாய்க்கு மகிமை சேர்ப்பதாக உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

இறைவனின் தாய் மரியாவைப் பற்றி மார்டின் லூதரின் சிந்தனைகள்

மார்டின் லூதர் கத்தோலிக்க சபையை விட்டு சென்றவர் என்று நாம் அறிந்ததே! அவர் அன்னை மரியாவைப் பற்றி சொல்லும் போது “மனித அறிவுக்கு எட்டாத ஞானம் எதுவென்றால் அன்னை மரியாள் இறைவனின் தாயாக இருப்பது தான்”. அதைத் தொடர்ந்து “அன்னை மரியாவின் புகழை ஒரே ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால் “அவள் இறைவனின் தாய்” மட்டுமே. இந்த விசுவாசக் கோட்பாட்டை மூளையில் வைத்து சிந்திப்பதைக் காட்டிலும் இதயத்தில் வைத்து சிந்திப்பதே சாலச் சிறந்தது”. இப்படிப்பட்ட அன்னை மரியாள் “சாதாரண மனித வடிவில் வந்த இயேசுவை மட்டும் வயிற்றில் சுமக்கவில்லை; மாறாக கடவுளும்-மனிதனுமான இயேசுவை, பரிசுத்த ஆவியின் வல்லமையால் கருத்தாங்கினாள். அப்படி கருத்தாங்கும்போது தன்னுடைய கன்னிமைத் தன்மை குறையாமல் இயேசுவை கருத்தாங்கினாள்! எனவே இந்த உலகில் எந்த பெண்களுக்கும் கிடைக்காத சிறப்பு அன்னை மரியாவுக்கு கிடைத்தது. அதாவது மரியாள் கன்னியும் - தாயுமாக இருக்கின்றாள்”. பிரியமானவர்களே இதைவிட அன்னை மரியாளுக்கு வேறு விளக்கம் தமக்கு தேவைப்படாது.

மரியா இறைவனின் தாயான வரலாற்றுச் சிந்தனை
நாம் கொண்டாடும் அன்னை மரியாள் இறைவனின் தாய் என்னும் இவ்விழா எப்படி, எப்போது தொடங்கப்பட்டது என அறிந்துகொள்வது மிகவும் சிறப்பானதாகும். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த கொன்ஸ்தாந்தி நோபிளின் ஆயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியாள் இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் தாய் அல்ல’ என்ற புது வாதத்தை முன்வைத்தார். இயேசு ஓர் ஆள் அல்ல, அவர் இரண்டு ஆட்கள். ஒன்று இயேசு மனிதன், இன்னொன்று இயேசு கடவுள். அவரது போதனைப்படி இயேசு மரியாவிடமிருந்து பிறக்கும்போது, சாதாரண மனிதராகத் தான் பிறந்தார்; பின்னர் தம் வாழ்க்கைக் காலத்தில் கடவுளாக மாறினார் என்று கூறினார்.

அதற்கு திருச்சபையிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இயேசு மனித இயல்பு (Human Nature) இறை இயல்பு (Divine Nature) ஆகிய இரண்டு இயல்புகளையும் கொண்டவர். இதற்கு மாறாகப் போதித்த நெஸ்டோரியஸின் போதனையைச் சரி செய்யவும், இது மட்டுமல்லாமல் இயேசு பிறக்கும்போது சாதாரண மனிதனாகப் பிறந்தார் என்பதால் மரியாவை கடவுளின் தாய் என்று சொல்லக்கூடாது. மாறாக இயேசுவின் தாய் என்று தான் சொல்லவேண்டும் என்ற போதனையைச் சரி செய்யவும் அலெக்ஸான்டரியா ஆயர் சிரில் தலமையில் கி.பி 431 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாதம் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற எபேசு திருச்சங்கம் மரியா கடவுளின் தாய் (Mary is Theotokos) என்று உறுதியிட்டு பிரகடணம் செய்தது. இந்தத் திருச்சங்கம் நடைபெற்றபோது மன்னராக இருந்தவர் இரண்டாம் தியோடோசிஸ்.

எபேசு நகரில் கூடிய திருச்சங்கம்,
“இயேசுவில் இறைத்தன்மையும், மனிதத் தன்மையும் முழுமையாகக் குடிகொண்டிருகின்றன. ஆகவே மரியாள் இறைவனின் தாய்” என்பதை நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தது. அதாவது மரியா கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் என்றே அழைக்கப்படவேண்டும் என்று எபேசு திருச்சங்கம் ஆணித்தரமாக இவ்விசுவாச சத்தியத்தை உறுதியுடன் பிரகடனம் செய்தது.

மரியாவின் தனிப்பெரும் பேறான கடவுளின் தாய் என்பது இயேசு, இறைவன் – மனிதன் என்ற இரண்டு இயல்புகளை உள்ளடக்கிய ஒரே கடவுள் என்பதால் உண்மையாகிறது. இயேசு கடவுளின் மகன் மட்டுமல்ல. இயேசு கடவுளும் ஆவார். விவிலியம் நமக்கு கூறுகின்றது
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை… வார்த்தையாக இருந்த கடவுள் இயேசு எனும் மனிதர் ஆனார்; இயேசு எனும் மனிதர் நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” என யோவான் நமக்கு கூறுகின்றார்.

ஆகவே கடவுள், மனிதராக அன்னை மரியாள் வழியாக உலகிற்கு வருகின்றார். இரண்டாம் நிலையில் இருக்கும் மகனாகிய கடவுளை அன்னை மரியாள் பெற்றெடுத்ததால் அவர் இறைவனின் தாய் ஆவாள். அன்றிலிருந்து இன்றுவரை திருச்சபை மரியாளை இறைவனின் தாய் என்று அன்போடு அழைத்து வருகிறது. நம்முடைய முன்னாள்
திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல், தான் எழுதிய ‘மீட்பரின் தாய்’ என்னும் திருத்தூது மடலில், “மரியாள் திருச்சபையின் தாய்” என்றும் அழைத்து சிறப்பு செய்கிறார். ஆகவே, மரியாள் இறைவனின் தாய் மட்டுமல்ல, திருச்சபையின் தாயாக, நம் ஒவ்வொருவருடைய தாயாக விளங்குகின்றாள். அப்படிப்பட்ட தாயின் அரவனைப்பில் நம்மையும் நமது குடும்பத்தையும் ஒப்புக்கொடுத்து அவரின் அருள் வேண்டி புதிய ஆண்டை தொடங்குவோமா!

அன்னை மரியாள் இயேசுவின் தாய் தான் எனக் கூறும் விவிலிய சிந்தனைகள்
இறைவனின் தாய் மரியா என்னும் கோட்பாட்டிற்கு விவிலியத்தில் நமக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மனிதகுல மீட்பரான இறைவனின் தாயைப் பற்றி 2 இடங்களில் முன்னறிவிப்புகள் இடம் பெறுகின்றன.

ஆதிப்பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றனர். இந்த பாவத்திற்கு மீட்பு உண்டு என்று உலகிற்கு வரவிருக்கும் மீட்பரைப் பற்றி கடவுள் வாக்களிக்கின்றார். ஆண்டவராகிய கடவுள் அலகையிடம்,
"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" தொ.நூல் 3:15. என்று மீட்பரைப் பற்றியும், மீட்பரின் தாய் எப்படிப்பட்டவர் என்றும் கடவுள் விளக்குகின்றார். அதாவது இதில் 'வித்து' என்பது இயேசு கிறிஸ்துவையும், 'பெண்' என்பது அவரது தாய் மரியாவையும் குறிக்கிறது. இவ்வாறு வரலாற்றின் தொடக்கத்திலேயே, இறைவனின் படைப்பின் போது அல்ல; இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியாவும் இடம் பெற்றிருந்தார். படைப்பின் போது பெண்ணாகிய ஏவாள் பங்கெடுக்கின்றாள்; மீட்பின் போது அன்னை மரியாள் பங்கெடுக்கின்றாள்.

இரண்டாவதாக, இறைவாக்கினர் எசாயா கடவுளின் தாயைப் பற்றி முன்னறிவிக்கிறார். "ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்." "ஏனெனில், ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்" என்று எசாயா 7:14-ல் கூறுகிறார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். புதிய ஏற்பாட்டில் இம்மானுவேலாக அழைக்கப்பட்டவர் இறைமகன் இயேசு. இந்த இம்மானுவேலை பெற்றெடுத்தவர் அன்னை மரியாள். ஆக அன்னை மரியாள் மீட்பின் திட்டத்தில் மீட்பரோடு இருக்கின்றார். மீட்பரை பெற்றெடுத்தவராகவும் இருக்கின்றார்.

அதைப்போலவே புதிய ஏற்பாட்டில் அனைத்து நற்செய்தியாளர்களும் மரியா இறைவனின் அன்னை என ஏற்றுக் கொள்கின்றனர்.

மரியாள் இறைமகனை கருவில் தாங்கிப் பெற்றெடுத்தார் என்பதை லூக்கா நற்செய்தியாளர் 1:28-33-ல் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
“வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். இங்கு உன்னத கடவுளின் மகன் என்ற வார்த்தை வழியாக மரியாள் கடவுளின் மகனை பெற்றெடுக்கப் போகின்றார். எனவே மரியா தான் கடவுளின் தாய் என்பது தெளிவாகின்றது.

அத்தோடு மட்டுமல்லாமல் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து மரியாவை நோக்கி,
லூக் 1:42-ல் "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்கிறார். எலிசபெத்து கடவுளின் ஆவியால் உந்தப்பட்டு மரியா உயிருடன் இருக்கும்போதே இறைவனின் தாய் என வாழ்த்துகின்றார்.

மேலே கூறிய இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கு மரியாவிடம் நிறைவேறியதை நற்செய்தியாளர் மத்தேயு பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
யோசேப்புக்குக் கனவில் தோன்றிய ஆண்டவரின் தூதர், "மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" மத்தேயு 1:22-23. என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. நற்செய்தியாளரும் மரியாவை கடவுளின் தாய் என உறுதிபடுத்துகின்றார்.

மேலும் திருத்தூதர் பவுலும் மரியா இறையன்னையே என்பதைப் பின்வருமாறு கலாத்தியார் 4:4-ல் எடுத்துரைக்கிறார்:
"காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." இறைத் திட்டத்தின்படி இறைமகனைப் பெற்றெடுத்த மரியா, இறையன்னை என்ற பெயரை உரிமையாக்கிக் கொண்டார்.

ஆம் பிரியமானவர்களே! படைப்பின் தொடக்கத்திலே கடவுள் மரியாவை தன்னுடைய மகனின் தாயாக தேர்ந்தெடுக்கின்றார். இறைவாக்கினர்கள் மரியாவைப் பற்றி முன்னறிவிக்கின்றனர். கடவுளின் தூதர் மரியாவை இறைவனின் தாய் என வாழ்த்துகின்றார். எலிசபெத்து மரியாவை இறைவனின் தாய் என வாழ்த்துகின்றார். நற்செய்தியாளர்கள் மரியாவை இறைவனின் தாய் என வாழ்த்தி எழுதுகின்றார்கள். தாய்த்திருச்சபை மரியாவை இறைவனின் தாய் என போற்றுகின்றது. இவர்கள் அனைவருக்கும் மரியா இறைவனின் தாயாக தெரிகின்றார். அப்படியென்றால்
உங்களுக்கும், எனக்கும் அன்னை மரியாள் யார்?

அன்புக்குரியவர்களே அன்னை மரியாவை இறைவனின் தாய் என ஏற்றுக் கொண்டுள்ள நீங்களும் நானும், நம்மை பத்து மாதம் பெற்றெடுத்த தாயை எந்த நிலையில் வைத்திருக்கின்றோம்? நம்முடைய அன்னையர்களுக்கு எப்படிப்பட்ட மரியாதைகளை நாம் கொடுக்கின்றோம்? இன்று எத்தனை பேருடைய தாய்மார்கள் உங்களோடு, நல்ல உறவிலே, உங்களது வீட்டில், உங்களோடு இருக்கின்றனர்?. அப்படி உங்களது தாய்மார்கள் உங்களோடு இருந்தால் நம்முடைய ஊர்களில் எதற்கு முதியோர் இல்லங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? சிந்தித்துப் பார்க்ககூடிய தருணம்? புதிய ஆண்டிலே புதிய சிந்தனையோடு நமது வாழ்வை தொடங்க இருக்கும் நாம், நம்முடைய தாய்மார்களைப் பற்றியும் சிந்திப்போமா?

இந்த உலகை படைத்த கடவுள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைக் கொடுத்துள்ளார் மேலும் தாயும் - தெய்வமும் தனித்தனி வடிவங்கள் இல்லை; மாறாக இரண்டும் ஒன்று என்கிறது நமது சங்ககால நூல்கள். நான் கண்ட மொழிகளியே தமிழ் மொழியைப் போல் வேறு எந்த மொழியும் இல்லை என்றான் பாரதி. தாயை வேறெந்த மொழியில் விளக்கினாலும் வராத பொருள் தமிழில் விளக்கினால் வரும்.
அம்மா (தாய்) அ-உயிர் எழுத்து. தன்னுடைய குழந்தைக்கு தாய் உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், ம்- மெய் எழுத்து. அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடலைக்) கொடுக்கிறாள். மா- உயிர்மெய் எழுத்து. பத்து மாதம் சுமந்து பின்பு தனது குழந்தையை உலகத்தில் உயிர்மெய்யாய் உலாவ விடுகிறாள். இந்த உண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் சேர்ந்து உருவானது தான் 'அம்மா'! என்பார்கள். அதானால் தான் நம்முடைய நாடும், மொழியும், மண்ணும் தாயை உருவகமாக வைத்திருக்கின்றன. தாய் நாடு, தாய்மொழி, தாய்மண் என்று…

மேலை நாடுகளில் ஒரு பெண், ஒரு ஆணால் மனைவியாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். ஆனால் நமது நாட்டில் பெண் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள்தன் முழுவாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
'தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது' என்றார் நபிகள் நாயகம்.
'ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களுள் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணித்தல்' என்கிறது திருக்குர்-ஆன்.
என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன்' என்றார் ஆபிரகாம் லிங்கன்.
'பிரெஞ்சு நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக நல்ல தாய்மார்கள் பெருக வேண்டும்' என்றான் நெப்போலியன்.
கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில் கூட இறுதிவரை தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர், தன் மார்பில் தாயின் படத்தை தழுவியபடி நாற்காலியில் சரிந்து கிடந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.
காமராஜர் தனது தாய்க்கு மட்டும் மாதம்தோறும் அடிப்படைச் செலவுக்கு 120 ரூபாய் அனுப்பி வைத்தார்.
“தந்தையில்லாமல் கடவுளால் பிறக்க முடிந்தபோது, தாயில்லாமல் அவரால் பிறக்க முடியவில்லை”
என்கிறது நமது திருச்சபை எனவே தான் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, கண்மூடும் கடைசி நிமிடத்தில் தன் தாயை நினைத்தார்.

ஆனால் இன்று பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலத்தில் நீங்களும், நானும் வாழ்கின்றோம். தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றிப் பணம் சேர்க்கும் இளைஞர்கள் நமது மத்தியில் அதிகம். இந்த காகிதம் என்ற பணத்தை சம்பாதிக்கும் நோக்கில் நம்மால் புறக்கணிக்கப்பட்ட தாய்மார்கள் எத்தனைபேர்? கட்டிய மனைவிக்காக சொந்த தாயை விட்டை விட்டு வெளியே அனுப்பும் பிள்ளைகள் நம்மில் எத்தனைபேர்? அப்படிப் புறக்கணிக்கப்பட்ட பெற்றோரின் கண்ணீரில் வரைந்த ஒரு கவிதை இவ்வாறு கூறுகின்றது.


மகனே... நீ பிறந்த அன்று; தோட்டத்தில் வைத்தோம் ஒரு தென்னங்கன்று; எங்கள் வியர்வையில் நீ உயர்ந்தாய்; நாங்கள் வார்த்த தண்ணீரில் தென்னை வளர்ந்தது; எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம் உனக்கு இன்பம் தருகிறது; இங்கே இருக்கும் தென்னை மரம் எங்கள் இருவருக்கும் சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது; ஒருநாள்... நீ ஈமெயிலில் மூழ்கியிருக்கும்போது; எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும் ; இறுதிப் பயணத்தில் நீ இல்லாமற் போனாலும்; தென்னை ஓலை எங்கள் கடைசி மஞ்சமாகும்!

ஆம் அன்புக்குரியவர்களே இன்று நம்மை பெற்றெடுத்த தாய் எங்கே இருக்கின்றாள்?. மரியாவை இறைவனின் தாயாக போற்றும் நீ உன் தாயை எப்படி போற்றுகின்றாய்.

ஒருமுறை புதிதாக திருமணம் முடித்த வீட்டில்
மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"
கணவன்; "அதெல்லாம் சேர்த்தாச்சு"
மனைவி; "எங்கம்மா சொன்னது சரிதாங்க"
கணவர்; "என்னா சொன்னாங்க"
மனைவி; "நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?
கணவர்; "ஏனாம்?
மனைவி;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."
கணவர்;" சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்"
மனைவி; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"
கணவர்; "கிடைச்சுட்டாங்க"
மனைவி; "அப்படியா யாரு?"

கணவர்;"உங்கம்மா தான். இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்"
மனைவி: என்னது? பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?"


தன்னுடைய தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப விருப்பமில்லாத பெண்கள் பிறகு ஏன் திருமணம் ஆணவுடன் உங்களது மாமியாரை, அத்தையை மட்டும் முதியோர் இல்லத்திற்கு அனுப்புகின்றீர்கள்? உங்கள் தாய்க்கு கொடுக்கும் மரியாதையை ஏன் உங்கள் தாயைப் போல இருக்கும் பிற பெண்களுக்கு கொடுப்பதில்லை? இன்று முதியோர் இல்லங்கள் அதிகமாவதற்கு காரணம் கணவனும், மனைவியும் தான். அதனால்தான் ஒருவர் இவ்வாறாக கூறுவார் முதியோர் இல்லத்திற்கு உணவு கொடுங்கள், உடை கொடுங்கள், பணம் கொடுங்கள், ஆனால் உங்களது பெற்றோர்களை மட்டும் கொடுக்காதீர்கள். முன்பு கல்லறைகளில் எழுதப்பட்டு வந்த வசனங்கள் இன்று ஒவ்வொரு முதியோர் இல்லத்திலும் எழுதப்பட்டு உள்ளன “மகனே இன்று எனக்கு; நாளை உனக்கு”.

பிரியமானவர்களே! மலையில் உள்ள கல்லை யாரும் மதித்து வணங்குவதில்லை. ஆனால் அக்கல் சிற்பியின் கைப்பட்டு சிலையாகும் போது அதற்கு ஒரு மரியாதை பிறக்கிறது. அந்த சிலைக் கோவிலில் வைக்கப்படும்போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. அதைப் போலத்தான், ஒவ்வொரு பெண்ணும் ஒரு கல்லைப் போன்றவள். இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாக செதுக்கப்படுகிறாள். அவள் தாயாகும் போது குடும்பக் கோவிலில் வைத்து தெய்வமாக கருதப்படுகின்றாள். நமது தாய் அன்னை மரியாவைப் போல.

அன்னை மரியாவை மதித்து, வணக்கம் செலுத்தும் போது கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என நம்பும் நாம், நம்மை பெற்றெடுத்த தாயை மதிக்கும்போதும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும்போதும் கடவுள் நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார். புதிய ஆண்டின் தொடக்கத்தில் கடவுளின் ஆசீர் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் நமது கண்முன்னால் உயிரோடு இருக்கும் நமது தாயிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குவோம். கடவுள் நமது தாய் வழியாக நமது குடும்பத்தை இந்த வருடம் முழுவதும் ஆசீர்வதிக்கட்டும். அதேவேளையில் நாமும் ஆசீர்வாதத்தின் கருவிகளாக இருக்க கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரால் ஆசி பெற்ற அனைவருமே பிறருக்கு அந்த ஆசியை வழங்கவேண்டும் என்கிறது விவிலியம்.


நான் சிறுபிள்ளைகளாக இருந்த போது புத்தாண்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு பெரியவராக தேடிச்சென்று ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் இன்று இந்த பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. காரணம் பாத்திரத்தில் இருந்தால்த் தானே அகப்பையில் வரும்! நம்மிடையே கடவுளின் ஆசீர்வாதம் குறைந்துவிட்டபோது நாம் எப்படி பிறருக்கு ஆசீர்வாதத்தை கொடுக்க முடியும்? புதிய ஆண்டிலே கடவுள் உங்களையும், என்னையும் தன்னுடைய ஆசீரின் கருவியாக மாற்றுகின்றார்.
01. கடவுள் ஆசீர்வாதத்தின் ஊற்று:
அனைத்து ஆசீர்களும் கடவுளிடமிருந்துதான் வருகின்றன. அவரே ஆசீரின் ஊற்றாகவும் இருக்கின்றார். கடவுள் தான் படைத்த அனைத்திற்கும் “ஆசி வழங்கி பலுகிப் பெருகுங்கள்” என்றார். தொ.நூ 1:22.

02. பெற்றோர்கள் ஆசீர்வாதத்தின் கருவிகள்:
யாக்கோப்பு தன்னுடைய முதிர்நத வயதில் தன்னுடைய பிள்ளைகள் பன்னிருவருக்கும் கடவுளின் ஆசீரை அளித்து வாழ்த்துகின்றார். தொ.நூ 49:28

03. குருக்கள் ஆசீர்வாதத்தின் கருவிகள்:
குருக்கள் அனைவரும் இறைமக்களுக்கு ஆசிர் வழங்க வேண்டுமென கடவுளே கூறுகின்றார். அதைத்தான் இன்யை முதல் வாசகத்திலே நாம் வாசிக்க கேட்டோம். ஆண்டவர் மோசேயிடம் கூறியது; நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை;

"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்”. எண் 6:22-26

04. ஒருவர் மற்றவருக்கு ஆசிர் வழங்குதல்:
ஆபிரகாம் வழியாக அனைத்து மக்களும் ஆசீர் பெற்றனர். தொ.நூ 18:18; யாக்கோப்பு வழியாக லாபான் ஆசிபெற்றான் 30:27-30.

05. புதிய ஏற்பாட்டில் ஆசீர்வாதம்
இங்கு இயேசு ஆசீர் அளிக்கின்றார். சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் எனச்சொல்லி அவர்களுக்கு ஆசீர் வழங்குகின்றார். அப்பத்தை எடுத்துஆசி கூறி மக்களின் பசியை போக்குகின்றார். விண்ணேற்றம் செல்லும் முன் தனது கையை உயர்த்தி தனது சீடர்களுக்கு ஆசி வழங்கினார். தன்னுடைய சீடர்களையும் எங்கு சென்றாலும் ஆசீர் அளியுங்கள் என கட்டளையிட்டார். நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக என வாழ்த்தி ஆசீர்வதிக்க கட்டளையிட்டார். உலகெங்கும் சென்று அனைத்து படைப்புகளுக்கும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆசீர் அளியுங்கள் என்றார்.

06. பகைவர்களுக்கும் ஆசிர்:
பழைய ஏற்பட்டில் நண்பர்களுக்கு மட்டுமே ஆசீர் கூறுங்கள் என்கிறார் ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசு பகைவர்களுக்கும் ஆசீர் கூறுங்கள் என கூறுகின்றார். லூக்கா 6:27-28-ல் "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் ஏன்கிறார்.

பிரியமானவர்களே வருடத்தின் முதல் நாளில் கடவுள் தன்னுடைய அன்னையை நமது அன்னையாக கொடுக்கின்றார். அந்த அன்னை வழியாக ஆண்டவரை பின்பற்றும் நாம், நம்முடைய அன்னையரை போற்றி அவர்களை மதித்து நடக்கவும், அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தவும், புதிய ஆண்டிலே நமது சொல், சிந்தனை, செயல் அனைத்தையும் அன்னை மரியின் மடியில் ஒப்படைத்து அவரின் அசீரை நம்மை பெற்றெடுத்த அன்னையர்கள் வழியாக பெற்றுக் கொள்வோம். அப்படி பெற்றுக் கொண்ட கடவுளின் ஆசீரை நாமும் நம்மோடு வாழும் பிற மனிதர்களுக்கு அளித்து புத்தாண்டை கொண்டாடுவோம். இறைக்கின்ற கிணறு தான் அதிகம் நீர் சுரக்கும் என்பார்கள் அது போல ஆண்டவரின் ஆசிரை, அன்னை மரியாவின் பரிந்துரையால், நம்முடைய பெற்றோர் வழியாக பெற்ற நாம், நாமும் அந்த ஆசிரை பிறரோடு பகிர்வோம். அப்போது ஆசீர்வாத்தின் ஊற்றாகிய இறைவன் நமது உள்ளத்தையும், இல்லத்தையும், தனது ஆசீரால் நிரப்புவாராக!

அனைவருக்கும் 2018 –ம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.