இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து பிறப்பு விழா

இந்த வருடம் நான் பிறக்கமாட்டேன் என்கிறார் இயேசு

ஏசாயா 52:7-10
எபிரேயர் 1:1-6
யோவான் 1:1-18

இறையியல் படித்த நாட்களில் கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்காக தொகுத்த சிந்தனைகள்.

(திருப்பலியின் போது உன்னதங்களிலே பாடப்படும். ஆனால் கிறிஸ்துமஸ் குடிலில் பாலன் இயேசு இருக்கமாட்டார்.) இன்றைய சமூக சூழ்நிலையில் நமது கிறிஸ்து பெருவிழா.

ஒருவர் மற்றவர் முகத்தைப் பார்த்து கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? மகிழ்சியாக இருக்கின்றீர்களா? ஆம் என்றால்… உங்களுக்கான கேள்வி


கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடுவதற்கு யார் முக்கியம்?
பாலன் இயேசு.
அந்த பாலன் குடிலில் இருக்கின்றாரா என யாராவது எழுந்து பாருங்கள். இயேசுவே குடிலில் இல்லை. அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடியும். என்ன குழப்பமாக இருக்கின்றதா?

பிரியமானவர்களே! இதைப்போலத்தான் இன்று விண்ணகத்திலும் ஒரே கூச்சலும் குழப்பமும்.
பாலன் இயேசு உறுதியாக சொல்லிவிட்டார் நான் இந்த வருடம் பிறக்க போவதில்லை என்று. விண்ணக மக்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியவில்லை. பாலன் இயேசு பிறக்கவில்லையென்றால் நமக்கும், மக்களுக்கும் ஏது கிறிஸ்துமஸ்? கிறிஸ்துமஸ் இல்லையென்றால் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

உடனே விண்ணக தூதரனிகள் அனைவரும் பரம தந்தையிடமும், அன்னை மரியாவிடம் சென்று முறையிடுட்டு இயேசுவை பிறக்க வைக்க கட்டாயப் படுத்துகின்றனர்.


பரம தந்தை: மகனே என்ன இது புதுப்பழக்கம். நீ பிறந்தால் தன் நான் கடவுள். நீ பிறக்கவில்லையென்றால் உலகில் ஒருத்தரும் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள். கடவுள் மீது நம்பிக்கை வைப்பது வீண் என மக்கள் என்மீது பழிசுமத்துவார்கள். எனவே எனது வார்த்தையை ஏற்று இந்த வருடம் நீ பிறக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

பாலன் இயேசு: தந்தையே நான் ஒருபோதும் உங்களது வார்த்தையை மீறியது இல்லை. நான் உலகில் வாழ்ந்த போது உங்களது விருப்பத்தை மட்டுமே நான் நிறைவேற்றினேன். ஆனால் இந்த வருடம் மட்டும் எனது விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு அனுமதி தாருங்கள். எனவே இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

அன்னை மரியாள்: இயேசுவிடம் சென்று “மகனே ஏன் இப்படி செய்கின்றாய்” ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாளின் போது நீ பிறப்பது தானே வழக்கம். அதென்ன இந்த வருடம் பிறக்க மாட்டேன் என்பது? எனக்கு தெரியாது… இந்த வருடம் நீ பிறந்தே ஆகவேண்டும். நீ பிறந்தால் தான் உலக மக்களுக்கெல்லாம் மாபெரும் நற்செய்தி. நீ பிறந்ததால் தான் என்னை இயேசுவின் தாய் என்று மக்கள் போற்றுகின்றனர். நீ பிறக்கவில்லையென்றால் எனக்கும் மரியாதை கிடையாது. மக்களும் என்னை நம்ப மாட்டார்கள் எனவே நிச்சயம் இந்த வருடம் நீ பிறந்தே ஆக வேண்டும்.

பாலன் இயேசு: அம்மா நான் உங்களை மதிக்கின்றேன். ஆனால் இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை. தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம் என உறுதியாக கூறிவிட்டார்.

புனித யேசேப்பு: மகனே ஏன் இந்த முடிவு? நீ பிறந்ததால் தான் சாதாரண தச்சரான என்னை புனித நிலைக்கு உயர்த்தினார்கள். நான் உன்னை பெற்றெடுக்காவிட்டாலும் நீ எனது மகன். பாவம் இந்த ஏழைகளும், சிறு குழந்தைகளும் நீ பிறந்தால் தான் மகிழ்ச்சி. எனவே இந்த வருடம் நீ பிறந்தே ஆக வேண்டும்.

பாலன் இயேசு: அப்பா நீங்கள் எப்பொழும் எனது தந்தை. உங்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நேர்மையாளருக்கு உதாரணமே நீங்கள் தான். ஆனாலும் நீங்கள் என்னை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என உறுதியாக அவரிடமும் கூறிவிட்டார்.

முக்கியமான மனிதர்கள் கூறியே இயேசு நான் பிறக்க போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார். இனி என்ன செய்வது எனத் தெரியமால் இயேசுவின் சீடர்களிடம் முறையிடுகின்றனர் விண்ணக தூதரனி.

புனித இராயப்பர்: இயேசுவே நான் எனது தந்தையோடு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். நீர் தான் என் பின்னே வாரும் எனச்சொல்லி என்னை உமது திருச்சபையின் தலைவராக்கினீர். ஒவ்வொரு வருடமும் தாயாம் திருச்சபையானது உமது பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறது. இந்த வருடம் நீர் பிறக்கவில்லை என்று சொன்னால் திருச்சபையை யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே உங்களது மனதை மாற்றிக்கொண்டு இந்த வருடம் தயவு செய்து நீங்கள் பிறக்க வேண்டும் என்றார்.

பாலன் இயேசு: இராயப்பா நீர் எனது நம்பிக்கைகுரிய சீடர். உன்னை வைத்துத்தான் நான் எனது திருச்சபையைக் கட்டினேன். இரயப்பா நீர் என்னை அன்பு செய்கின்றாயா? என மூம்முறை கேட்க இராயப்பரும் ஆம் ஆண்டவரே நான் உன்னை அன்பு செய்கின்றேன் என்பது உமக்கு தெரியுமே என்றார். நீர் என்னை அன்பு செய்வதால் எனது விருப்பத்தை நிச்சயம் நீர் ஏற்றாக வேண்டும் இந்த வருடம் நான் பிறக்க மாட்டேன் என உறுதியாக இரயப்பரிடம் கூறிவிட்டார்.

புனித பவுல்: இயேசு ஆண்டவரே இப்படி நடக்கும் எனத் தெரிந்து தான் உமது சீடர்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றொழிக்க வேண்டும் என நினைத்து தமஸ்கு நகர் நோக்கி சென்றேன். அன்று மட்டும் நீர் என்னை தடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் எல்லா கிறித்தவர்களையும் நான் கொன்று போட்டிருப்பேன். நீரும் ஒவ்வொரு வருடமும் பிறக்க வேண்டியதில்லை. ஆனால் அன்று என்னை தடுத்து சவுலாகிய என்னை பவுலாக மாற்றி உமது பிறப்பின் நோக்கத்தை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க என்னை தேர்ந்தெடுத்தீர். ஆனால் இன்று நான் பிறக்க மாட்டேன் என அடம் பிடிப்பது நல்லதல்ல. எனவே நீங்கள் என்னை அழைத்தது உண்மையானால் நிச்சயம் இந்த வருடமும் நீங்கள் பிறக்க வேண்டும் என்றார்.

பாலன் இயேசு: பவுலே நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். நீர் கிறித்தவர்களையும் எனது சீடர்களையும் அன்றே கொன்றிருந்தால் நிச்சயம் இன்று மகிழ்ச்சியடைந்து இருப்பேன். ஆனாலும் நான் உன்னை அழைத்தது உண்மைதான். எல்லா மக்களுக்கும் எனது பிறப்பின் நோக்கத்தை அறிவிக்க சொன்னதும் நான் தான். இந்த வருடம் மட்டும் நான் சொல்வதைக் கேள். நிச்சயம் இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

இப்பேது விண்ணகப் பேரணி தனித்தனியாக சென்றால் தான் இயேசு இவ்வாறு கூறுகின்றார். எனவே நாம் ஒரு குழுவாக சென்று நமது கருத்தை எடுத்துக் கூறுவோம் நிச்சயம் அவர் ஏற்றுக்கொள்வார் என நினைத்து விண்ணகத்தில் உள்ளவர்களை தனித்தனி குழுவாக பிரித்தது அனைவரும் இயேசுவை சந்திக்க முடிவு செய்தனர்.

புனிதர்கள் கூட்டம்: இயேசு ஆண்டவரே! நீரே எங்களை மனித வடிவில் மீட்க வந்த பாலன் இயேசு. உம்முடைய பிறப்பாலும், உம்முடைய போதனையாலும் உந்தப்பட்டு நாங்கள் உம்மை பின்பற்றினோம். உமக்காக எங்களில் பலபேர் இரத்தம் சிந்தி வேத சாட்சிகளாக மரித்திருக்கின்றோம். உம்மை நம்பி எங்களது சொத்து, சுகம், வீடு, வாசல், என அனைத்தையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றி வந்தோம். ஆனால் இன்று நீர் பிறக்கமாட்டேன் என்று சொல்வது வழியாக எங்களது அனைத்து தியாகங்களும் வீணாகி விட்டதோ என நினைக்கத் தோன்றுகின்றது. எனவே இந்த வருடமும் நீங்கள் பிறக்க வேண்டும் அப்பொழுதான் எங்களது தியாகங்கள் அர்த்தமுள்ளதாகும் என்றனர்.

பாலன் இயேசு: என்னை பின்பற்றிய புனிதர்களே நான் உங்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். ஆனால் கொஞ்சம் என்னையும் புரிந்துகொள்ளுங்கள். நிச்சயம் நான் இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

இப்பொழுது விண்ணகத்தில் என்னசெய்வது என்று தெரியவில்லை. உடனே அனைவரும் ஒன்று சேர்ந்து இயேசுவை பிறக்க வைக்க ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள் என கூறுகின்றனர். அப்போது சீடர்களும், அன்னை மரியாவும் சேர்ந்து கூறுகின்றனர். என் மகன் இந்த மக்களை மீட்பதற்காக மனிதனாகவே பிறந்தவன். ஏழைகளுக்காக ஏழையாவே வாழ்ந்தவன். எனவே நாம் மண்ணுலகத்திற்குச் சென்று அங்குள்ள ஒருசில மனிதர்களை நாம் அழைத்து வந்து இயேசுவிடம் பேசவைத்தால் நிச்சயம் இயேசு மனம்மாறி பிறந்துவிடுவார் என முடிவு செய்து மண்ணுலகம் வருகின்றனர். இங்கு வந்து ஒருசில மனிதர்களை தேர்ந்தெடுத்து விண்ணகம் சென்று இயேசுவிடம் பேச வைக்கின்றனர்.

திருத்தந்தை பிரான்சிஸ்: என் ஆண்டவரும், மீட்பருமான இயேசுவே நீர் விட்டுச்சென்ற திருச்சபையையும், உமது மக்களையும் நான் வழிநடத்தி வருகின்றேன். நீர் நிச்சயம் பிறந்து விடுவாய் என நினைத்து அனைத்து மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளேன். அனைத்து மக்களையும் கிறிஸ்துமஸ் கொண்டாட அழைப்பும் விடுத்துள்ளேன். இப்பொழுது நீர் பிறக்கமாட்டேன் என்று சொன்னால் எனது வார்த்தை பொய்யாகிவிடும். மக்கள் எவரும் கிறித்தவத்தை நம்ப மாட்டார்கள் எனவே எனக்காவும், எனது மக்களுக்காகவும் நீர் நிச்சயம் பிறக்க வேண்டும் என கூறினார்.

பாலன் இயேசு: பாறையில் கட்டப்பட்ட திருச்சபையை வழிநடத்தும் பிரான்சிசே மண்ணுலகில் உனது செயலைக் கண்டு நான் வியக்கின்றேன். இந்தவருடமும் பிறந்து விடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் உனது மறையுரைக்கு பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்தேன். நான் பிறப்பதால் மண்ணுலகில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என இவ்வுலகை நான் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். எனவே இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

பால் வியபாரி: ஆண்டவரே நான் மிகப்பெரிய பாவி. ஒவ்வொரு நாளும் நான் ஒரு லிட்டர் பாலில் ஐந்து லிட்டர் தண்ணீர் கலந்து விற்று வருகின்றேன். ஆனால் இந்த கிறிஸ்துமஸ் நாளின் போது மட்டும் சுத்தமான பாலை தண்ணீர் கலக்காமல் விற்பனை செய்வேன். ஆனால் நீர் இந்த வருடம் பிறக்கவில்லை என்றால் மீண்டும் தண்ணீர் கலந்து தான் விற்க வேண்டும். நல்ல முடிவை சீக்கிறமாக சொல்லவும் என்றான்.

பாலன் இயேசு: உன்னுடைய நல்ல முயற்சியை நான் பாரட்டுகின்றேன். ஆனாலும் இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என்றார்.

கடைக்காரர்: பாலன் இயேசுவே இந்த வருடம் எங்களது தொழில் மிகவும் நஷ்டப்பட்டு விட்டது. மக்கள் அனைவரும் பணத்திற்காக வங்கிகளில் கூட்டம் கூட்டமாக காத்திருக்கின்றனர். மேலும் அரசாங்கம் ஜி.எஸ்.டி போன்ற வரிகளை விதித்து எங்களை மிகவும் கடனில் தள்ளிவிட்டது. இந்த கிறிஸ்துமஸ் நாளின் போது மட்டும் தான் ஏதாவது காசு சம்பாதிக்க முடியும். ஸ்டார், குடில், பல்புகள், பொம்மைகள் என விற்பணை செய்யமுடியும் இந்த வருடம் நீர் பிறக்கவில்லையென்றால் மீண்டும் எங்களது தொழில் நஷ்டம் அடைந்து விடும். எனவே எங்களுகாகவாது நீர் பிறந்தே ஆகவேண்டும்.

பாலன் இயேசு: யார் நஷ்டமானலும் எனக்கு பாரவாயில்லை. இந்த வருடம் நான் பிறப்பதில்லை எனக் கூறிவிட்டார்.

அரசியல்வாதி: இயேசுவே நான் கோவிலுக்கே செல்வது கிடையாது. எப்பொழுது கிறிஸ்துமஸ் வருகின்றதோ அப்பொழுதான் கோவிலுக்கு செல்வது வழக்கம். காரணம் ஜெபிப்பதற்காக அல்ல! மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக. கிறிஸ்துமஸ் நாளின் போது ஆலயத்திற்கு முன்னால் மிகப்பெரிய பேனர்கள் வைத்து எனது பெயராலும் எனது கட்சியின் பெயராலும் இனிப்புகள், புடவைகள், பரிசுப்பொருட்கள் மக்களுக்கு வழங்குவது வழக்கம். மக்களும் அதை நம்பி எங்களுக்கு ஓட்டுப் போடுவர். நீர் இந்த வருடம் பிறக்கவில்லையென்றால் என்னைப் பற்றியும், எங்களது கட்சியைப் பற்றியும் மக்களிடம் எடுத்துகூற முடியாது. எனவே எங்களது கட்சிக்காக இந்த வருடம் நீங்கள் பிறந்தே ஆக வேண்டும் என்றார்.

பாலன் இயேசு: கோயிலுக்கே வராத நீ கிறிஸ்துமஸ் அன்றாவது கோவிலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி. நீர் ஜெபிக்காவிட்டாலும் ஏழைகளுக்கு உதவி செய்வது மகிழ்ச்சி தான் ஆனாலும் உனது கட்சிக்காகவெல்லம் நான் பிறக்க மாட்டேன் என்றார்.

மாசில்லா குழந்தைகள்: இயேசுவே இந்த வருடம் தான் நீர் சரியான முடிவை எடுத்து இருக்கின்றீர். நீர் பிறந்ததால்த் தான் அன்று ஏரோது அரசன் எந்த பாவமும் அறியாத எங்களைப் போன்ற குழந்தைகளை கொன்று போட்டான். நீர் பிறக்கவும் வேண்டாம், நாங்கள் சாகவும் வேண்டாம் என்றனர்.

பங்குத்தந்தை: இயேசு ஆண்டவரே கடந்த ஒருமாத காலமாக கிறிஸ்துமஸ்காக எங்களது பங்கில் நிறைய வேலைகளை நான் செய்து வருகின்றேன். பிரமாண்டமான குடில் நீர் பிறப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வருடம் பங்கின் செலவு மிக அதிகமாக போய்விட்டது. பங்கிலே பணம் இல்லை. எனவே கிறிஸ்துமஸ் உண்டியலை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். நீர் பிறக்கவில்லை என்றால் யாரும் உண்டியலில் காசு போட மாட்டார்கள் என நீர் பிறந்தே ஆகவேண்டும் என்றார்.

கன்னியர்கள் (சிஸ்டர்): இயேசுவே நீர் பிறந்து விடுவாய் என்ற மகிழ்ச்சியில் பீடம் தயார் செய்துவிட்டோம், எங்களது சபையில் இருந்து காசு போட்டு பூக்கள் வாங்கி ஜோடித்து உள்ளோம். இந்த பங்குத்தந்தை ஒவ்வொருநாளும் எங்களை கேரல்சுக்கு வரச்சொல்லி தினமும் எங்களுக்கு தொந்தரவு கொடுத்தார். அனைத்தையும் பொருத்துக் கொண்டு உனது பிறப்பை மக்களுக்கு வெளிப்படுத்தினோம். நீர் பிறக்கமாட்டேன் என்று சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நீர் பிறக்க வேண்டும் என்றனர்.

பாடகர் குழுவினர்: இயேசுவே தயவு செய்து நீங்கள் பிறந்துவிடுங்கள். உங்களுக்காக எங்களது வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒவ்வொருநாளும் பாடல்களைத் தேடி, கண்டுபிடித்து, தொண்டை வலிக்கும் அளவுக்கு தயார் செய்து உள்ளோம். நீர் பிறக்கவில்லை என்றால் எங்களது முயற்சிகள் அனைத்தும் வீண் என்றனர்.

பிறசபையினர்: இயேசுவே கிறிஸ்துமஸ் மட்டும் தான் கிறித்தவர்களை ஒன்றினைக்கின்றது. தயவு செய்து நீங்கள் பிறந்துவிடுங்கள். வேண்டுமானால் மரியாவையும், சூசையப்பரையும் குடிலில் இருந்து எடுத்து விடுகின்றோம். நீங்கள் மட்டும் வந்து பிறந்துவிடுங்கள். எங்களுக்கு நீர் மட்டும் போதும் என்றனர்.

இப்படியாக மண்ணிகத்தில் இருந்து வந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற பாணியில் இயேசுவை பிறக்க வைக்க முயற்சி செய்தனர் . ஆனால் இவர்கள் எவரின் குரலுக்கும் இயேசு செவிசாய்க்கவில்லை. நான் இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

இப்போது விண்ணகத்தினர் முயற்சியும், மண்ணகத்தினர் முயற்சியும் தோல்வி அடைந்துவிட வேறு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் எனது மறையுரைக்கு பிறகு தான் இயேசு இந்த வருடம் பிறக்க போவதில்லை என்ற முடிவை எடுத்து இருக்கின்றார். நாம் அனைவரும் சேர்ந்து எவ்வளவோ சொல்லியும் இயேசு பிறக்க மாட்டேன் என கூறினால் அவரிடம் எதாவது ஓர் அர்த்தம் இருக்கும். அதை அவரிடமே கேட்டு விடலாம். ஏன் இந்த வருடம் பிறக்க மாட்டார் என்று? உடனே அனைவரும் கிளம்பி இயேசுவிடம் வந்து ஆண்டவரே ஏன் இந்த வருடம் பிறக்கமாட்டீர்? என்பதை தெரிந்து கொள்ளாமா எனக் கேட்டனர்.

பாலன் இயேசு: அன்புக்குரியவர்களே! இப்பொழுதாவது எனது கருத்தை கேட்க முன்வந்தீர்களே! நான் பிறப்பதால் இந்த உலகில் என்னென்ன மாற்றங்கள் வந்துவிடப் போகின்றது?. எனது பிறப்பால் யாருக்கு இலாபம்?, யாருக்கு மகிழ்ச்சி? எனக் கேட்டு முதன் முதலில் எனது பிறப்பு செய்தி யாருக்கு அறிவிக்கப்பட்டது எனக் கேட்டார்? அதற்கு அனைவருமே முதன் முதலில் இடையர்களுக்குத் தான் உனது பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்டது என்றனர். அதற்கு இயேசு எங்கே அந்த இடையர்கள் ? என்று கேட்டார். அனைவரும் சுற்றும் முற்றும் பார்க்கின்றனர். இந்த கூட்டத்தில் இடையர்களே இல்லை.

நான் பிறக்கும் போது அந்த இடையர்கள் எங்கு வாழ்ந்தனர்? உடனே அங்கிருந்தவர்கள் வழக்கமாக இடையர்கள் ஊருக்கு வெளியே, ஆடுகளுக்கு காவலுக்காக விழிப்போடு, பனியிலும், மழையிலும் இருந்தனர் என்றனர்.

இப்பொழுது இயேசு அவர்களிடம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நான் பிறந்தேன். அப்போதும் இந்த இடையர்கள் ஊருக்கு வெளியே அனைவராலும் ஒதுக்கப்பட்டு குளிரிலும், பனியிலும் வாழ்ந்தனர். இன்றும் அந்த இடையர்களைப் போன்று எத்தனை பேர் பனியிலும், குளிரிலும் வாடுகின்றனர். உதாரணமாக டெல்லியிலே விவசாயிகள் தங்களது கோரிக்கைக்காக எத்தனை நாள் குளிரிலும், பனியிலும், மழையிலும் தங்களது மானத்தை இழந்து போரடினர். உங்களது ஆடம்பர கிறிஸ்துமஸ் கொண்டாடத்தால் கண்ணீர் சிந்திய அவர்களுக்கு என்ன பயன்?

மற்றொருபுறம் மீனவர்கள் தங்களது தந்தையையும், மகனையும் புயலில் இழந்து கடற்கரையில் எத்தனை நாள் குளிரிலும், பனியிலும் போரடினர். உங்களது ஆடம்பர கிறிஸ்துமஸ் கொண்டாடத்தால் கண்ணீர் சிந்திய அவர்களுக்கு என்ன பயன்?

நான் அன்று பிறக்கும் போது எனது தாய் மரியாள் கந்தையான, கிழிந்த போன துணியில் என்னை கிடத்தினார். இன்று நீங்கள் உடுத்தும் உடைகள் எப்படிப் பட்டவையாக இருக்கின்றன. ஒருபுறம் மானத்தை காக்க ஆடையில்லாமல் தெருவோரம் குளிரிலும், பனியிலும் நடுங்கிக் கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம்; மற்றொருபுறம் அலங்காரம் என்ற பெயரில் மானத்தை இழக்கும் அளவிற்கு நீங்கள் அரைகுறை ஆடை அணிந்து வந்திருக்கின்றீர்கள்;. உங்களது பணத்தின் மதிப்பையும், குடும்ப கெளவுரவத்தையும் வெளிப்படுத்துவதற்க பகட்டான ஆடைகள் அணிந்து வந்திருக்கின்றனர். உங்களில் எத்தனை பேர் ஏழைமக்களுக்கு என்பெயரால் ஆடை கொடுத்தீர்கள்?

நான் அன்று பிறக்கும் போது எனக்கு நல்ல வீடு கிடையாது. நல்ல இடம் கிடையாது. இன்று எப்படிப்பட்ட இடத்தில் என்னுடைய பிறப்பை கொண்டாடி வருகின்றீர்கள்? ஆடம்பரமான குடில்கள், ஆயிரம் ஆயிரம் பணம் செலவு செய்து யாருடைய குடில்கள் வெற்றிபெறும் என உங்களுக்குள் போட்டிகள். தற்பொழுது ஒருமாதத்திற்கு முன்பாக மழையிலும் வெள்ளத்திலும் வீடுகளை இழந்து எத்தனை பேர் தவிக்கின்றனர். உங்களால் அவர்களுக்கு ஏதாவது நல்லது நடந்ததா? அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உங்களால் ஒரு வீடு கட்ட முடிந்ததா?

நான் அன்று பிறக்கும்போது எனக்கு வண்ண வண்ண விளக்குகள் கிடையாது. எனது தந்தை அரிக்கேன் விளக்கு ஏந்தி என்னுடைய பிறப்பிற்காக காத்திருந்தார். இன்று எத்தனை ஆயிரங்கள் செலவு செய்து, வண்ண வண்ண விளக்குகளால் எனது குடிலை அலங்கரிக்கின்றீர்கள்? இன்றும் கிரமங்களிலும் மற்ற ஏழைக் குடும்பங்களிலும் மற்றும் ஆப்பிரிக்க, போன்ற இடங்களில் வெளிச்சம் இல்லாமல் இருட்டில் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றனர்? உங்களது ஆடம்பர கிறிஸ்துமஸ் கொண்டாடத்தால் அவர்களுக்கு பயன் ஏதும் உண்டா?

நான் அன்று பிறக்கும் போது என்னைச் சுற்றி நல்ல வாசனை திரவியங்கள் கிடையாது. என்னைச் சுற்றிலும் ஒரே விலங்குகளின் சாணம் மற்றும் கழிவுகளின் நாற்றம். இன்று நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் போன்று உடலுக்கு வெளியே எத்தனை விதமான வாசனை திரவியங்களை போட்டுக்கொண்டு ஆலயம் வந்திருக்கின்றீர்கள். ஒருநிமிடம் உங்களது உள்ளத்தை உற்று நோக்குங்கள். எத்தனை பேர் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து இத்திருப்பிலியில் பங்கெடுக்கின்றீர்கள்? உங்களில் எத்தனை பேர் மனதில் வஞ்சகமும், மன்னிக்க இயலா தன்மையும், போட்டியும், பொறாமையும், பழிவாங்கும் எண்ணமும் இருக்கின்றது. இவ்வளவு நாற்றங்களை உங்களுக்குள் வைத்துக்கொண்டு ஏன் இந்த ஆடம்பர கிறிஸ்துமஸ் பெருவிழா? யாரை ஏமாற்றுகின்றீர்கள்?

எத்தனை முறை திருத்தந்தையும், உங்களது பங்குத்தந்தையும் மனம் மாறுங்கள் என அறிவுறுத்தினர். ஏன் குறிப்பாக கடந்த நான்கு வாரமாக திருவருகைக்கான நாட்களில் மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள், எழைகளுக்கு உதவுங்கள் என மறையுரை வாயிலாகவும், கோரல்ஸ் வாயிலாகவும், கிறிஸ்துமஸ் தாத்தா வழியாகவும், இப்போது உள்ள வாட்ஸ்அப் மற்றும் மற்ற மின்னஞ்சல் வழியாகவும் உங்களுக்கு எத்தனை முறை அறிவுறுத்தப்பட்டது. உங்களில் எத்தனை பேர் தகுந்த தயாரிப்போடு ஆலயத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள்?


எனவே தான் நான் கூறுகின்றேன் இந்த வருடம் நான் பிறக்க போவதில்லை என்று? நான் பிறப்பதால் யாருக்கு என்ன பயன்? அன்று நான் பார்த்த இடையர்கள் இன்றும் உங்கள் மத்தியில் இருக்கின்றனர். இடையர்கள் போன்ற உங்களோடு வாழும் ஏழைகள், அனாதைகள், கைபெண்கள், கண்ணீரில் தவிப்பவர்கள், நோயினால் ஆட்கொண்டவர்கள், இவர்களின் துன்பத்தை போக்க எப்போது முடிவு எடுப்பீர்களோ அப்பொழுதான் நான் பிறப்பேன். நான் பிறக்க வேண்டிய இடம் பணத்தாலும், செல்வத்தாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிங்கப்பட்ட குடில் அல்ல! மாறாக உயிரோடு வாழும் உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நான் பிறக்க ஆசைப்படுகின்றேன். அப்படிப்பட்ட ஓர் இடத்தை எனக்கு தயார் செய்யுங்கள் நான் வந்து அங்கு பிறக்கின்றேன் என்றார் இயேசு.

பிரியமானவர்களே! இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் இதில் உள்ள கருத்துக்கள் உண்மையானவை. இன்று இயேசு நமக்கு மத்தியில் பிறக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? பாலன் இயேசு பிறப்பது நம்முடைய பதிலில் தான் இருக்கின்றது. நமது ஆலயத்தில் நம்மோடு பாலன் இயேசு பிறக்க வேண்டுமானால் அனைவரும் ஒருநிமிடம் எழுந்து ஓர் உறுதிமொழி எடுப்போமா?

பாலன் இயேசுவே நீர் எந்தவித பாகுபாடும் இல்லாமல் எங்கள் அனைவரையும் உமது பிள்ளைகளாக படைத்திருக்கின்றீர். நாங்கள் எங்களது சுயநலத்தால் நான், எனது, எனது குடும்பம் என ஒற்றை வட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் பணத்தையும், பொருளையும், நேரத்தையும் செலவு செய்து எங்களது உள்ளங்களிலும், இல்லங்களிலும், ஆலயத்திலும் அலங்கார குடில்கள் செய்து உள்ளோம். இந்நேரம் முதல் எங்களோடு வாழும் ஏழைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், விதவைகள், குழந்தைகள், கண்ணீரோடும், கவலையோடும் வாழும் எங்களது சகோதர சகோதரிகளுக்கு எங்கள் முடிந்த உதவிகளை செய்து அவர்களும் உமது பிறப்பின் மகிழ்ச்சியை கொண்டாட நாங்கள் வழிசெய்கின்றோம். இன்றைய கிறிஸ்துமஸ் நாளில் என்னால் முடிந்த உதவியை தேவையில் இருப்போருக்கு நான் உதவி செய்வேன் என உறுதி அளிக்கின்றேன். எனவே எங்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க எங்களோடு பிறந்தருளும். ஆமென்.

வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார் இப்பொழுது பாடகர் குழுவினரோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் பாடல் பாடி பாலன் இயேசுவை நமது குடிலில் பிறக்க வைப்போமா?