இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

நான் யாருடைய பிரதிநிதி

2 சாமுவேல் 7:1-5,8-12, 14-16
உரோமையர் 16:25-27
லூக்கா 1:26-38

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் நாத்தான் கடவுளின் பிரதிநிதியாக தாவீது அரசரிடம் அனுப்பப்படுகின்றார். இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கிறிஸ்துவின் பிரதிநிதியாக உரோமை நகர மக்களுக்கு நற்செய்தி உரைக்கின்றார். நற்செய்தி வாசகத்திலே கபிரியேல் வானதூதர் கடவுளின் பிரதிநிதியாக அன்னை மரியாவுக்கு இறைவாக்கு உரைக்கின்றார். பிரியமானவர்களே இன்று நீங்களும் நானும் யாருடைய பிரதிநிதிகளாக இருக்கின்றோம்? என்பதை சிந்தித்து பார்க்க கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

பிரதிநிதிகள் என்பவர் யார்?
இன்றைய சமூக, அரசியில் சூழலில் நாம் ஒவ்வொருவருமே நான் இந்த கட்சியின் பிரதிநிதி என்றும், நான் அந்த கட்சியின் பிரதிநிதி என்றும் அறிவித்துக் கொள்கின்றோம். உதாரணமாக தற்போது நடந்த ஆர்.கே நகர் தேர்தலில் ஒவ்வொரு கட்சித்தலைவர்களும் தங்களது பிரதிநிதிகளாக ஒருவரை நிறுத்தி அவருக்காக வாக்குகளை சேகரித்தனர். ஏன் ஒருசில வேட்பாளர்கள் கூட நான் அரசியல்வாதி கிடையாது மாறக மக்களின் பிரதிநிதியாக போட்டியிடுகின்றேன் என்றெல்லம் மக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இப்படியாக நம்முடைய வாழ்வை சற்று உற்று நோக்கினால் நாம் அனைவருமே யாரோ ஒருவரின் பிரதிநிதியாக வாழ்ந்து வருகின்றோம்.

அந்த குடும்பத்தில் தந்தை ஆரோக்கியம் என்பவர் வங்கியிலே மேனேஜராக இருக்கின்றார். அருடைய மனைவியோ ஒரு பள்ளியின் தாளாராக இருக்கின்றார். அவரது மூத்த மகன் கட்டிட இஞ்ஜினியராக இருக்கின்றார். அவருடைய மகள் மருத்துவமனையில் உயர்ந்த பதவியில் இருக்கின்றார். ஒரு நாள் அந்த கும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். உடனே மனைவி தன்னுடைய விடுமுறை நாட்களில் மற்றொரு ஆசிரியரை தன்னுடைய பிரதிநிதியாக இருந்து பள்ளியை கவனித்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கின்றார். அதைப்போலவே மகனும், மகளும் தங்களின் பிரதிநிதிகளாக வேரொருவரை நியமனம் செய்துவிட்டு சுற்றுலா செல்கின்றனர். திடீரென்று வங்கியில் இருந்து ஒரு முக்கியமான அழைப்பு உடனே தான் வெளியூரில் இருப்பதாக சொல்லி வங்கியில் இருக்கும் நம்பிக்கையான ஒரு மனிதரை வங்கியின் பிரதிநிதியாக அந்த தந்தை அனுப்பி வைக்கின்றார்.

பிரியமானவர்களே இங்கு இவர்களால் அனுப்பப்பட்ட ஒவ்வொருவருமே அவரவரின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர். அதாவது பிரதிநிதி என்று சொல்லும் போது அனுப்பியவரை பிரதிபலிக்கின்றனர். இன்றும் ஒருசில குடும்பங்களில் பார்க்கலாம் ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெற்றோர்களின் பிரதிநிதியாக விழாக்களில் பங்கெடுக்கின்றனர், மனைவி, கணவனின் பிரதிநிதி கணவருக்கு பதில் பங்கெடுக்கின்றார், நாம் வேலைசெய்யும் இடங்களில் ஒருசில வேளைகளில் நாம் பிரதிநிதிகளாக அனுப்பப் படுகின்றோம். ஆக நாம் அனைவருமே பிரதிநிதிகள் தாம்! யாருக்கு, எப்படிப்பட்ட மனிதர்களுக்கு பிரதிநிதிகள் என்பதை சிந்தித்துப் பார்க்க கடவுள் நம்மை அழைக்கின்றார்.

புனித அசிசி பிரான்சிஸ் தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்பு அசிசி நகருக்கும் பொருஜியா நகருக்கும் இடையே நடக்கும் போருக்கு செல்கின்றார். அந்த போரிலே அசிசி நகர வீரர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர். அனைவரையும் சிறையில் அடைக்கின்றனர். அந்த சிறையில் மாற்றத்திற்கான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. செல்லும் வழியில் ஸ்பொலேட்டோ எனும் இடத்தில் வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்கின்றது “பிரான்சிஸ் யாருக்கு பணிவிடை (பிரதிநிதியாக இருக்க ) செய்ய விரும்புகின்றாய்” கடவுளுக்கா? மனிதருக்கா? பிரன்சிஸ் கடவுளின் பிரதிநிதியாக இருந்து கடவுளுக்கு பணிவிடைசெய்ய விரும்புகிறேன் எனச் சொல்லி அசிசிநகருக்கு திரும்பி மறுகிறிஸ்தாக வாழ்கின்றார். இந்த ஒற்றை வார்த்தை அவரின் வாழ்வை மாற்றி அமைத்தது.

அதைப்போலவே புதிய ஏற்பாட்டில் சவுல் எனும் மனிதன் ஆண்டவரின் சீடர்களையும், கிறித்தவர்கள் அனைவரையும் கொன்றொழிக்க வேண்டும் என தமஸ்கு நகருக்குள் நெருங்குகின்றான். அப்போது வானத்தில் இருந்து ஒரு ஒளி “சவுலே சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?” என கேட்டு கடவுள் சவுலை பவுலாக மாற்றி உயிர்த்த ஆண்டவரின் பிரதிநிதியாக மாற்றுகின்றார்.

பிரியமானவர்களே இன்று நீங்களும் நானும் பிரதிநிதிகள் தான். ஆனால் நாம் மக்களின் பிரதிநிதிகளா? அல்லது நம்மை படைத்த படைத்தவனின் பிரதிநிதிகளா? மக்களின் பிரதிநிதிகள் மண்ணை (உலகத்தை) ஆளலாம், மக்களின் வாய்ச்சொல்லாக செயல்படலாம், ஆனால் கடவுளின் பிரதிநிதிகளாக இருந்தால் கடவுளின் வாய்ச்சொல்லாகவும், கடவுள் காணும் உலத்தை ஆளலாம்?

இன்று யாரின் பிரதிநிதிகளாக இருக்க ஆசைப்படுகின்றீர்கள்? சிந்திப்போம்?

இன்றை முதல் வாசகத்திலே சாதாரணமாக ஆடுமேய்த்துக்கொண்டிருந்த தாவீதை, கடவுள் அவரின் பிரதிநிதியாக தேர்ந்து கொள்கின்றார்.
“மனிதர் முகத்தை பார்க்கின்றனர் ஆனால் கடவுளோ அகத்தை பார்க்கிறார்” என சொல்லி ஆடு மேய்த்தவரை அரசராக திருப்பொழிவு செய்கின்றார், தாவீது சென்ற இடமெல்லாம் கடவுளும் அவரோடு செல்கின்றார், பெலிஸ்தியரின் தலைவரான கோலியாத்தை வெல்வதற்கு எந்தவிதமான போர்க்கருவிகளும் எடுத்துச்செல்லாமல் கடவுளின் பிரதிநிதியாக மட்டும் சென்று வெற்றிவாகை சூடுகின்றர், தாவீது போருக்கு சென்ற பொழுதெல்லாம் வெற்றியைக் கொடுத்தார், மனித குல மீட்பிற்கு தாவீதின் பரம்பரையை தேர்ந்தெடுக்கின்றார். இப்படியாக தாவீது அரசரை கடவுள் அவரின் பிரதிநிதியாக இருந்து செயல்பட அழைப்பு விடுக்கின்றார்.
ஆனால் தாவீதோ கடவுளின் கட்டளைகளை மீறி மனிதர்களின் பிரதிநிதியாக செயல்படுகின்றான். அதனால் தான் கடவுள் இறைவாக்கினர் நாத்தானை தன்னுடைய பிரதிநிதியாக தாவீதிடம் அனுப்பி தவறான பாதையில் சென்ற தாவீதை மீண்டும் கடவுளின் பாதையில் நடக்க அழைப்பு விடுக்கின்றார். தாவீதும் தன்னுடைய தவற்றை உணர்ந்து கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகின்றார்.

அதைப்போலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் கபிரியேல் வானதூதர் கடவுளின் பிரதிநிதியாக அன்னை மரியாளை நோக்கி செல்கின்றார். மரியாள் தாவீது குடும்பத்தில் வாழும் யோசேப்புக்கு மணஒப்பந்தம் ஆனவர். இங்கு சாதரணமாக வாழும் மரியாவை “அருள்மிகப் பெற்றவரே” என கடவுளே வாழ்த்துகின்றார். காரணம் கபிரியேல் வனதூதர் இங்கு கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகின்றார். இங்கு வானதூதர் பேசிய வார்த்தைகள் அனைத்துமே கடவுள் பேசிய வார்த்தைகள் தான்.

இங்கு வானதூதர் கடவுளின் பிரதிநிதியாக ஐந்து முக்கிய பணிகளை செய்கின்றர்.
முதலில் மரியாவை கடவுளின் பெயரால் வாழ்த்துகின்றார்.
“அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்”
இரண்டாவதாக மரியாவிடம் இருந்த அச்சம், பயம், சந்தேகம், இவற்றை போக்குகின்றார்.
(அச்சம், பயம், ) மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்… (சந்தேகம்) மேலும் மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். அதற்கு வானதூதர் "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்று கூறி மரியாவை தைரியப்படுத்துகின்றார்.
மூன்றாவதாக கடவுள், குழந்தையாக உம்முடைய வயிற்றில் இருந்து பிறக்கப் போகின்றார் என்ற நற்செய்தியை அறிவிக்கின்றார்.
“இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” என்ற நற்செய்தியை அறிவிக்கின்றார்.
நான்காவதாக இறைமகனாக பிறப்பவர்க்கு பெயர் வைக்கும் அதிகாரத்தை மரியாவுக்கு கொடுக்கின்றார்.
“இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
கடைசியாக உறவினர் எலிசபெத்தை உதாரணமாக காட்டி கடவுளின் வார்த்தை மீது நம்பிக்கை வைக்க அழைப்பு விடுக்கின்றார்.
உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
கடவுளின் பிரதிநிதியியாக செயல்பட்ட கபிரியேல் வானதூதர் வார்த்தையை கடவுளின் வார்த்தையாக நம்பி கடவுளிடம் தன் வாழ்வை முழுவதுமாக "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என தன்னையே முழுமையாக கடவுளிடம் ஒப்புக்கொடுக்கின்றார்.
அந்நேர முதல் சாதாரண மரியாள் கடவுளின் பிரதிநிதியாக வாழ ஆரம்பிக்கின்றார். இரண்டாவது வாசகத்திலே கடவுளின் பிரதிநிதியாக வாழ்பவர்கள் கடவுளுக்கு மட்டுமே புகழ்ச்சி பாடல் பாட வேண்டும் என தூய பவுல் வழியுறுத்துகின்றார். உதாரணமாக அன்னை மரியாள் தன்னை எப்பொழுது கடவுளின் பிரதிநிதியாக மாற்றிக்கொண்டாரோ அந்நேரமே கடவுளுக்கு புகழ்ச்சி பாடல் பாடுகின்றார்.
பிரியமானவர்களே! இன்று நீங்களும், நானும் யாருடைய பிரதிநிதிகள்? யாருக்கு புகழ்பாக்கள் பாடிக்கொண்டிருக்கின்றோம்?

இன்றை சமூக சூழலில் நம்முடைய ஒருசில அரசியல் மற்றும் சமயத் தலைவர்களும், நம்மை வழிநடத்தும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பங்குத்தந்தைகள், நமது முதலாளிகள், இவர்கள் அனைவரும் கொள்கை ரீதியாகவும், வாழ்க்கை முறையிலும் தவறானவர்கள், தவறான கொள்கைகளுக்காக வாழ்பவர்கள், மக்களின் மீது அக்கறை இல்லாதவர்கள், பணத்திற்காகவும், பதவிக்காவும், எதையும் செய்ய துணிந்தவர்கள் எனத் தெரிந்தும் நம்மில் எத்தனை பேர் அவர்களின் பிரதிநிதிகளாக வாழ்ந்து வருகின்றோம், அப்படிப்பட்டவர்களுக்கு ஜால்ரா அடித்து வருகின்றோம்? தங்களுடைய தலைவர்களுக்காக சிறைசெல்லவும், தீக்குளிக்கவும், மற்றவரை கொலை செய்யவும், தவறானவர்களுக்கு ஓட்டுபோட்டு நம்முடைய தலைவர்களாகவும், மக்களின் பிரதிநிதிகளாகவும் தேர்ந்தெடுக்கும் நம் ஒவ்வொருவரையும் பார்த்து கடவுள் கேட்கின்றார்.


என் அன்பு மகனே, மகளே! முதலில் நீ எப்படிப்பட்ட பிரதிநிதியாக இருக்கின்றாய்? இரண்டாவதாக நீ பின்பற்றும் உன் தலைவன் எப்படிப்பட்ட பிரதிநிதியாக இருக்கின்றான்? மூன்றாவதாக உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட பிரதிநிதிகளை அடையாளம் காட்டுகின்றாய்?

பிரியமானவர்களே! நாம் அனைவரும் முதலில் படைக்கப்படும்போதே கடவுளின் சாயலாக அவரின் பிரதிநிதியாக நாம் படைக்கப்பட்டோம். ஆனால் மனித இயல்பினால் கடவுளின் பிரதிநிதித்துவத்தை இழந்து வாழ்கின்றோம். எனவே தாவீதுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை போலவே இன்றும் நமக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. இன்றும் அதே கடவுள் பாலன் இயேசு வழியாக நம்மை தேடி வருகின்றார். நாம் நம்முடைய பாவ வாழ்வை விட்டு கடவுளின் பிரதிநிதியாக வாழப்போகின்றோமா? அல்லது மனிதர்களின் பிரதிநிதியாக மக்களை ஏமற்றி வாழ்பவர்களோடு ஜால்ரா அடித்து அவர்களுக்காக வாழப்போகின்றோமா?