இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

பாலைவனத்திலிருந்து ஒரு குரல்

ஏசாயா 40:1-5, 9-11
2பேதுரு 3:8-14
மாற்கு 1:1-8

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?

நாம் வாழும் இந்த உலகில் அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு குரல் உண்டு. குழந்தைகளுக்கான குரல், பெரிய மனிதர்களின் குரல், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு குரல் இப்படி பல. ஒவ்வொரு குரலும் சூழ்நிலை சந்தர்பத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. உதாரணமாக சந்தோசத்திற்கான குரல், அழுகைக்கான குரல்இ, துக்கத்திற்கான குரல், பசிக்கான குரல், இப்படி குரல்களை நாம் பலவகைப்படுத்தலாம். அதன் வழியே இன்றைய நற்செய்தி வயிலாக கடவுள் நம் அனைவருக்கும் ஒரு வித குரலை அறிமுகப்படுத்துகின்றார். அதுதான் பாலைவனக்குரல். பாலைவனத்தில் இருந்து ஒரு குரல் நம் அனைவரையும் அழைக்கின்றது. “எனது ஆடுகள் எனது குரலுக்கு செவிசாய்க்கும்” என்கிறார் இயேசு. இன்று பாலைவனத்தின் குரலை கேட்பதற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கின்றோம்.

பாலைவனம் ஓர் அறிமுகம்:
புவியியலின் படி எந்த பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அதுவே பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி.மீ.க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும், இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை. இப்படி மனித வாழ்க்கை வாழ தகுதியற்றதாக விளங்கும் பாலை நிலத்திலிருந்து ஒரு குரல் நம்மை அழைக்கிறது. “இதோ, என் தூதனை உனக்கு முன்பாக அனுப்புகிறேன். அவர் உம் வழியை ஆயத்தம் செய்வார். பலைவனத்திலிருந்து ஒருகுரல் முழங்குகின்றது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள்” இந்த பாலைவனக் குரலுக்கு எத்தை பேர் செவிசாய்த்து பாதைகளை ஆயத்தமாக்கப்போகின்றோம்.

பாலைவனக் குரல்:
அன்புக்குரியவர்களே பாலைவனத்தின் குரலை நாம் கேட்கவேண்டுமானால் ஒன்று நாம் பாலை நிலத்திலே வாழவேண்டும். அல்லது பாலைவனத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பாலைவனத்தின் குரலை நாம் அறிய முடியும். பசியின் வேதனை அறிந்தவருக்குதான் மற்றொருவரின் பசி புரியும்; வெயிலில் இருப்பவருக்குத்தான் நிழலின் அருமை தெரியும். அந்த வகையிலே பாலைவனத்தின் ஒருசில குரல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நான் இப்போது ஆப்பிரிக்கா நாட்டிலே உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனமாகிய சஃகாரா அல்லது சஹாரா பாலைவனத்தில் பணிசெய்து வருகின்றேன். எங்களுடைய நாட்டில் ஒரு பகுதி பாலைவனத்தால் நிரம்பியுள்ளது. இந்த பாலைவனம் உலகத்திலே இரண்டாவது மிக நீளமான பாலைவனமாகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அளவுக்கு பெரியதாகும்.
பாலைவனத்தின் முதல் குரல்: வாழ்க்கை நிரந்தரமற்றது:-
சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர். சஹாராவில் இருக்கும் வெப்பம் மிகக்கொடியது அத்தோடு இங்கு கடுமையான மணற் புயல்களும் வீசும். இந்த பாலைவனத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய மணற் குன்றுகள் உருவாகும். சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். இன்றுதென்படும் மண்குன்றுகள் நாளை இருக்காது. காரணம் அந்த அளவிற்கு வெப்பக்காற்று வீசும். அந்த காற்றிலே மனற்குன்றுகள் அடித்துச் செல்லப்பட்டு புதிய மணற்க் குன்றுகள் தோன்றும். ஆக ஒரு நிரந்தரமான நிலப்பகுதியை காண்பது மிகவும் அரிது. அதைப்போலவே, பிரியமானவர்களே நாம் அனைவருக்கும் தெரியும் நம்முடைய வாழ்வு நிரந்தரமில்லாதது என்றும், கடவுள் மட்டுமே நிரந்தரம் என்று நாம் அறிந்துள்ளோம். நாம் வாழும் வாழ்க்கை நிரந்தர மற்றது எனத்தெரிந்தும் நாம் எதை நோக்கி பயணிக்கின்றோம்? கடவுளை நோக்கி பயணிக்கின்றோமா? அல்லது நிரந்தர மற்ற வாழ்வை நிரந்தரமாக்கிக்கொள்ள பயணிக்கின்றோமா? இன்று நாம் ஒவ்வொருவருமே தெரியும் பணம், பதவி, பட்டம், உடல், சொத்து இப்படி எதுவும் நிரந்தரம் கிடையாது ஆனாலும் நமது மனம் இவற்றை நோக்கியே அழைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு உதாரணாக ஹாலிவுட் ஹீரோ அர்னால்டினை எடுத்துக் கொள்ளலாம். இவர் ஹாலிவுட்டில், சினிமாத்துறை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருந்த போது, ஒருமுறை தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட ஒரு ஆடம்பர ஹோட்டலை அர்னால்ட் திறந்து வைத்தார். அந்த ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்” என்று அறிவித்தார்…
நாட்கள் நகர்ந்தன… பதவி போனது… புகழ் போனது…
அப்படிப்பட்ட நிலையில், சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
“ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது. தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை” என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே, அதிர்ச்சியில் உறைந்து போனார், ஹாலிவுட் முன்னாள் ஹீரோ… கலிபோர்னியா முன்னாள் கவர்னர்… அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்…

மனமுடைந்த அர்னால்ட், தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்துவிட்டார். இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அப்படியே தூங்கி விட்டார். அந்த காட்சியை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொன்னார் அவர்.

“நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும். ஆனால் எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம். நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்… எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல… அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது…“உங்கள் புகழை, உங்கள் பதவியை, உங்கள் அதிகாரத்தை, உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்… இந்த உலகில் உள்ள எதுவுமே நிரந்தரம் கிடையாது.

ஆம் பிரியமானவர்களே! இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு சூட்டிக் காட்டுகின்றது. “ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன”. ஆக எதுவுமே நிரந்தரம் கிடையாது. நிரந்தரமான இறைவனைத் தேடிச்செல்வோம்; அவரை சிக்கென பற்றிக்கொள்வோம்.

பாலைவனத்தில் வாழும் உயிரினங்கள் எதையும் தாங்கும் வல்லமை படைத்தவை:-
பாலைவனத்தின் தட்ப வெப்பநிலை மற்றும் இங்கு காணப்படும் பருவநிலை மாற்றங்கள் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்றதல்ல. இருந்தாலும் இங்கு வாழ்வதற்கு என தங்களையே அவை தயாரித்துக் கொள்கின்றன. மனிதர்கள் உயிர் வாழ சுத்தமான காற்று, சுத்தமான நீர், உணவு, உடை, இருப்பிடம் மிகவும் அவசியம். ஆனால் இவை எதுவுமே இந்த பாலைவனத்தில் நிறைவாக கிடைப்பதில்லை. உதாரணமாக எங்கள் பங்கு இருக்கும் இடத்திலிருந்து ஒரு 200 முதல் 300 கி.மீ. சென்றால் இந்த பாலைநிலத்தின் நிலமையை அப்பட்டமாக பார்க்கலாம். ஆனாலும் இங்கு மனித இனம் வாழ்கின்றது. நாங்கள் வாழும் சூழ்நிலையை என்னுடை (Facebook) முகநூலில் பதிவிட்டுருக்கின்றேன். சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று கிடைப்பதில்லை. இந்த சஹாரா பாலைவனத்தில் இருந்து வரும் வெப்ப மணல் காற்றானது மிக நுண்ணிய மாசுகள் கலந்து வரும். நாங்கள் தங்கியிருக்கும் அறையில் காலை எழுந்து பார்த்தால் ஒருவித தூசுபடலம் அறைமுழுதும் நிரம்பியிருக்கும். வெளியிடங்களில் திருப்பலிக்கு சென்று வீடு திரும்பினால் உடல் முழுவதும் மணலில் விளையாண்டது போல இருக்கும். உணவு நாம் நினைத்த உணவுகளை சாப்பிட முடியாது. காரணம் எதுவும் இங்கு கிடைக்காது. நமது ஊர்களைப் போல பெரிய பெரிய வீடுகளை பார்கக முடியாது. காரணம் ஏழ்மைநிலை அவர்களால் நம்முடைய ஊரில் இருக்கும் அளவிற்கு வீடுகள் கட்ட முடியாது. யாருக்கும் சொந்த இருப்பிடங்கள் கிடையாது. வாழும் வரை எங்கு வேண்டுமானாலும் தங்கி வாழ்ந்து கொள்ளலாம். இறந்த பிறகு அனைத்தும் அரசுக்கு சென்று விடும். ஆனால் இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் கிறித்தவ விசுவாசம் மிகவும் ஆழமாக இருப்பதை கண்கூடக தினமும் பார்க்க முடியும். உதாரணமாக நம்முடைய பங்கில் எத்தனை கிறித்தவ குடும்பங்கள் இருக்கும்? தோராயமாக ஒவ்வொரு திருப்பலிக்கும் எத்தனை பேர் பங்கெடுப்போம்?

நாங்கள் இருக்கும் பங்கில் மட்டும் 65000 கிறித்தவர்கள் இருக்கின்றனர். 45 அன்பியங்கள் உள்ளன. ஓவ்வொரு அன்பியத்திலும் 800 முதல் 1000 குடும்பங்கள் இருக்கின்றன.. ஒவ்வொரு திருப்பலிக்கும் குறைந்த பட்சம் 2000 முதல் 3000 பேர் பங்கெடுப்பார்கள். ஒவ்வொரு மாதமும் 1 000 000 (ஒரு இலட்சம்) நற்கருணை (அப்பம்) கடையில் வாங்கி வருவோம். ஓவ்வொரு திருப்பலியும் குறைந்தது 2முதல் 3 மணிநேரம் வரை செல்லும். திருவிழா மற்றும் கிறிஸ்துமஸ் திருப்பலிகள் 5 மணிநேரம் வரைச் செல்லும். ஆக வாழ்க்கை எவ்வளவு துன்பமானதாக இருந்தாலும், தாகம் தீர்ப்பதற்கும், சுவாசிப்பதற்கும் சத்தமான காற்றும், நீரும் இல்லாவிட்டாலும், உயிர் வாழ்வதற்கே கடினமானதாக இருந்தாலும்; இங்கு உள்ள மக்களையும் எங்களையும் வழிநடத்துவது இறைவன் மட்டும் தான் என்பதை பல வேளைகளில் நாங்கள் உணர்ந்து இருக்கின்றோம். தூய பவுலடிகளர் கூறுவது போல “எனக்கு வலுவுட்டு இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்பதை ஒவ்வொருநாளும் கடவுள் எங்களுக்கு தெளிவுப்படுத்திக் கொண்டு இருக்கின்றார். இதைத்தான் இன்றை முதல் வாசகத்திலே “கடவுள் ஆயனைப் போல தனது மந்தைகளை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளை தம் கையால் ஒன்று சோர்ப்பார், அவற்றை தம் தேளில் தூக்கி சுமப்பார்”. இப்படியாக பாலைவனத்தில் வாழும் ஒவ்வொரு மக்களையும் கடவுள் வழிநடத்தி வருகின்றார். காரணம் பாலைவன மக்கள் அனைவரும் கடவுள் மட்டும் தான் நிரந்தரம் என அவரை நம்பி வாழ்கின்றனர். இன்று நம்மையும் அப்படிப்பட்ட வாழ்வு வாழ கடவுள் நம்மை அழைக்கின்றார்.

பாலைவனத்தில் ஊற்றெடுக்கும் நம்பிக்கை
விவிலியத்திலும் சரி, எங்களது மறைபயண அனுவத்திலும் சரி பாலைவனங்கள் நம்பிக்கை தரும் இடங்களாக இருக்கின்றன. உதாரணமாக இஸ்ராயேல் மக்களை கடவுள் தன்னுடைய மக்களாக தேர்ந்துகொள்கின்றார். ஆனால் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் கடவுளுக்கு எதிராக சென்ற போது அவர்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்காக 400 ஆண்டுகள் எகிப்து நாட்டில் அந்த பாலைதேசத்தில் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். எப்பொழுது அவர்களுக்கு யாவே கடவுளின் மீது நம்பிக்கை வந்ததோ அந்நேரமே கடவுள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களை தேடிச் சென்று அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு வருகின்றார்.
ஆனால் வருகின்ற வழியில் மீண்டும் அவர்கள் கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை இழக்கின்றனர். “பாலைவனத்தில் எங்களை சாகடிக்கவா அழைத்துவந்தீர்” என மேசேயீடம் முறையிடுகின்றனர். அதனால் அவர்களின் குறைவுள்ள விசுவாசத்தை திடப்படுத்துவதற்காக 40 ஆண்டுகள் பாலைவனத்திலே அழைந்து திரிகின்றனர். இந்த 40 ஆண்டுகளாக கடவுள் அவர்கள் சுடவே இருந்து அவர்களது நம்பிக்கையை திடப்படுத்துகின்றார். கடைசியாக பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை அடைகின்றனர். ஆக பாலைவனம் நம்பிக்கை தரும் இடமாக நம்பிக்கையை திடப்படுத்தும் இடமாகவும் இருக்கின்றன.

மேலும் புதிய ஏற்பாட்டிலே இயேசு கிறிஸ்து 40 நாள் பாலைவனத்தில் சோதிக்கப்பட்போது 40 தாவது நாளின் முடிவில் நம்பிக்கையில் திடம்பெற்றவராக வருகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானும் பாலைநிலத்தில் வாழ்ந்து இறைவனின் வழியை ஆயத்தம் செய்து மக்களை கடவுளிடம் கொண்டுவர தயார்படுத்துகின்றார். அதே கடவுள் இன்று நம்மையும் அழைக்கின்றார். நாமும் கடவுளின் வழிகளை அறிந்துகொண்டு அவருக்கான வழியை ஆயத்தம் செய்ய முற்படுவோம்.

பிரியமானவர்களே பள்ளிநாட்களில் படித்த ஒருகதை. தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். அம்மா! “நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?”
தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு”
குட்டி திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்”
தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது. “பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”
குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”
“அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்”.
பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம். “பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?”.
இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அம்மா ஒட்டகம் சொன்னது. “பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?”
இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?”

பிரியமானவர்களே இந்த குட்டிக் ஓட்டகத்தைப்போல திருச்சபையானது நம் ஒவ்வொருவரிடமும் கேட்கின்றது. கிறித்தவர்கள் என்பதை நம்முடைய பெயரில் மட்டும் நாம் வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகின்றோம் திருவருகைக்காலம் என்பது ஆண்டவருக்கான வருகை. அதை நாம் ஆயத்தம் செய்யவேண்டும். அவருடைய வருகைக்காக நம்மையே நாம் தயாரிப்பு செய்ய வேண்டும் பாலைவனமாக இருந்துவரும் நமது இதயத்தையும், நமது கிறித்தவ வாழ்வையும் பாலும் தேனும் பொழியும் கடவுளின் இல்லமாக மாற்ற கடவுள் நம்மை அழைக்கின்றார். அவரின் குரலுக்கு செவிசாய்த்து வாழ வரம் வேண்டி இப்பலியில் இணைவோம்.