இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறு

ஞானம் மனிதரைத் தேடுகின்றதா? மனிதர்கள் ஞானத்தை தேடுகின்றனரா?

சாலமோனின் ஞானம் 6:12-16
1தெசலோனிக்கர் 4:13-18
மத்தேயு 25:1-13

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய வசதிகளையும், வாய்ப்புகளையும் பெருக்கிக்கொள்ள ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டே இருக்கின்றான். அவனது தேடல் கருவரையில் ஆரம்பித்து கல்லரை வரை மிகநீளமாக வளர்ந்து கொண்டே போகின்றது. தேடல் நின்று விட்டால் வாழ்க்கையும் முடிந்து விட்டது என கவிஞன் கூறுகின்றான். இந்த தேடலில் எதையெல்லாம் எப்படிப்பட்ட வழிகளில் நாம் தேடுகின்றோம் என்பதை இன்று சிந்திப்போமா?

இன்று நமக்கு அறிவு முக்கியமான தேவையா? அல்லது ஞானம் முக்கியமான தேவையா? அறிவுக்கும், ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இன்று நாம் அறிவைத் தேடுகின்றோமா? அல்லது ஞானத்தை தேடுகின்றோமா?

அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அனுபவத்தில் இருந்து வருவது அறிவு. அனுபவம் என்பது நாம் கற்றுக்கொள்ள பயன்படுத்திய புத்தகங்கள், ஆசான்கள், முதியோர்கள் இவர்கள் வழியாக நாம் அறிவைப் பெற்றுக்கொள்கின்றோம். உதாரணமாக அமெரிக்கா செல்ல வேண்டும். அறிவு இருந்தால் போதும் நாம் நினைத்த இடத்தை எளிதாக அடைந்து விடலாம். இந்த அறிவை அடைந்து கொள்வதற்கு நாம் அன்றாடம் நிறைய படிக்கின்றோம், மக்களை சந்தித்து, கேட்டு அறிந்து கொள்கின்றோம், இப்படி அனுபவப் பூர்வமாக உணர்ந்து, அறிந்து அறிவைப் பெற்றுக் கொள்கின்றோம்.

ஆனால் ஞானம் என்பது அறிவைவிட மேலானது. நமக்கு நல்லது எது? கெட்டது எது? என என அறிவுறுத்துவது அறிவு. அதை செய்யவும் செய்யமால் இருக்க வைப்பது ஞானம். உதாரணமாக குழந்தைகள் முதல் அணைத்து பெண்களையும் தாயைப்போல, மகளைப்போல மதித்து காப்பாற்ற வேண்டும் என அறிவு நமக்கு சொல்லிக் கொடுக்கும். உன்னிடத்தில் ஞானம் இருந்தால் பெண்களை மதிப்பாய், போற்றுவாய், அவர்களை காப்பாற்றுவாய், ஞானம் இல்லை என்றால் தாயாக இருந்தலும், மகளாக இருந்தாலும் தவறான எண்ணங்களில் சிந்திக்கவும், செயல்படவும் வைக்கும். கடந்த வாரம் நம்முடைய திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு திருப்பலியின் போது
“இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்” என குருக்கள் செபிக்கின்றார் ஆனால் மக்களும் மற்ற அழைக்கப்பட்டவர்களும் “செல்பி எடுப்பதற்காக செல்போனை உயர்த்துகின்றனர்” என வேதனையோடு கிறித்தவர்கள் யாரும் திருப்பலியின் போது தயவுசெய்து செல்போன் பயன்படுத்த வேண்டாம் என நமக்கு அறிவுறுத்தினார். ஞானம் நிறைந்தவர்களாக இருந்தோமானால் நிச்சயம் செல்போன் பயன்படுத்த மாட்டோம்; ஞானமற்றவர்களானால் ஏதாவது ஒரு விளக்கம் கொடுத்து நிச்சயம் பயன்படுத்துவோம். இன்றைய சூழலில் நம் அனைவருக்கும் அறிவு நிறைய உண்டு, ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற ஞானம் நம்மில் பலபேருக்கு கிடையாது. இன்று ஞானத்தை பெற்றுக்கொள்ள ஞானமாகிய கடவுள் தாமே நம்மை தேடிவருகின்றார்.

உதாரணமாக ஒருவர் அரசராக வரவேண்டும் என்று சொன்னால் நிச்சயம் அறிவில் சிறந்தவராக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் அரசர்கள் போன்ற அரசியல்வாதிகளை நான் சொல்லவில்லை. அந்த வகையிலே சாலமோன் அரசருக்கு அனைத்து விதமான வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. அறிவை புகட்டுவதற்கு தேவையான ஆசான்கள் இருந்தனர். ஆனாலும் அவரது உள்ளம் நிறைவடையவில்லை. இத்தனை செல்வங்கள் இருந்தும் அவரும் தேடுகின்றார். கடைசியிலே தான் தேடியதை கடவுளிடம் கேட்டு பெற்றுக்கொண்டு சந்தோசமாக வாழ ஆரம்பிக்கின்றார். அறிவைப் பெற்றுக்கெள்ள ஆசான்களும் அனுபவங்களும் போதும் ஆனால் ஞானத்தை பெற்றுக்கொள்ள கடவுளை மட்டும் தான் தேடவேண்டும். ஞானத்தை தருபவர் கடவுள் மட்டுமே! இன்று நாமும் தேடுகின்றோம் நம்முடைய பிள்ளைகளும் தேடுகின்றனர் நம்முடைய தேடல் எதை நோக்கியதாக இருக்கின்றது? அறிவைநோக்கியதாக இருக்கின்றதா? அல்லது ஞானத்தை நோக்கியதாக இருக்கின்றதா? அறிவை வளர்த்துக் கொள்ள அன்றாடம் செய்திதாள்கள் படிக்கின்றோம், பள்ளிக்கு சென்று படிக்கின்றோம், டியூசன் சென்று படிக்கின்றோம், கணிணி உலகத்தில் சென்று படிக்கின்றோம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 6 மணி முதல் 8 மணி நேரத்தை அறிவுக்காக செலவிடுகின்றோம். ஆனால் ஞானத்திற்காக எவ்வளவு நேரம் நாம் செலவிடுகின்றோம்?

பிரியமானவர்களே அதனால் தான் ஞானத்தை நாம் தேடாத காரணத்தினால் “ஞானமே தனக்கு தகுதியுள்ளவர்களை கண்டறிந்து ஞானம் அவர்களைத் தேடிச்செல்கின்றது. அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னை காட்டுகின்றது. அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கின்றது” என முதல்வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. நற்செய்தி வாசகத்திலே ஞானமாகிய மணமகன் தனக்காக தகுந்த தயாரிப்படன் காத்துக் கொண்டிருந்தவர்களோடு சேர்ந்துகொள்கின்றார். இன்று உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் எது தேவை? ஞானமா? அறிவா?

ஞானம் என்றால் என்ன?
கிறிஸ்துவே ஞானமாக இருக்கின்றார் என விவிலியம் நமக்கு கூறுகின்றது. உதாரணமாக 1கொரி 1:24-ல் “கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கின்றார்”. மேலும் அதே அதிகாரம் வசனம் 30ல் “கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம்”. ஆக கடவுள்தான், கிறிஸ்து தான் நமக்கு ஞானமாக இருக்கின்றார்.

ஞானத்தை எப்படி பெற்றுக்கொள்வது?
யோபு 28:12ல் ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும் என்ற கேள்வியைக் கேட்கின்றார். அதற்கு பதிலாக அதே அதிகாரம் 28-ம் வசனத்தில் “ஆண்டவருக்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம். தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு”. மேலும் நீதிமொழிகள் 5:31-ல் “கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்”. சீரக்கின் ஞானம் 19:20-ல் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழுஞானம்”. ஆக கடவுள் தான் ஞானம் அவர் மீது கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் என நாம் அறிந்துகொள்கின்றோம்.

கடவுளிடம் கொள்ளும் அச்சம் என்றால் என்ன?
கடவுள் ஆதாமையும், ஏவளையும் படைத்து, அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்து நல்லது எது? கெட்டது எது? என அறிந்துகொள்ளக்கூடிய தன்னுடைய ஞானத்தால் அவர்களை நிரப்பி தினமும் அவர்களோடு உரையாடி வருகின்றார். ஆனால் நல்லது எது? கெட்டது எது? எனத் தெரிந்தும் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றனர். அப்படி பாவம் செய்த போது கடவுள் மீது பயம் ஏற்படுகின்றது, கடவுளைப் பார்த்து அச்சப்படுகின்றனர். தான் படைத்த படைப்புகள் பயந்து போய் இருக்கின்றார்கள் என நினைத்து ஞானமாகிய கடவுளே அவர்களைத் தேடி வருகின்றார் ஆனால் ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு பயந்து அச்சப்பட்டு தோட்டத்தில் உள்ள மரங்களுக்கிடையில் ஒளிந்து கொள்கின்றனர். தொ.நூல் 1:9-10 “ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். அதற்கு ஆதாம், “உம் குரல் ஒளியை நான் கேட்டேன். ஆனால் எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில் நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்துகொண்டேன்” என்கின்றான்.

கடவுள் மீது கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் என்றால் ஆதாம் கடவுளின் ஞானத்தை முழுமையாக பெற்றிருந்தானா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் மீது கொள்ளும் அச்சம் பாவம் செய்ய தூண்டாது, பயம் கொள்ளாது, தன்னை மறைத்துக்கொள்ளச் செய்யாது. இங்கு ஆதாமும், ஏவாளும் தாங்கள் பாவம் செய்துவிட்டோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர், ஒருவர் மற்றவர் மீது பழிசுமத்துகின்றனர், கடவுளே நான் பாவம் செய்துவிட்டேன் என்னை மன்னியும் என்று சொல்ல தைரியம் இல்லாமல் மரங்களுக்கிடையே ஒளிந்து கொள்கின்றனர். அறிவு இருந்தும் ஞானம் இல்லாததால் கடவுளின் பிரசன்னத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.

பிறக்கும் போதே கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவன், துன்ப வேளையில் கடவுளால் காப்பாற்றப்பட்டவன். தன்னுடைய சக மனிதன் எபிரேயன் ஒருவன் எகிப்தியரால் துன்புறுத்தப்படும் போது அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் துன்பப்படுத்தியவனை கொன்றுவிட்டு பாலைவனத்திற்கு தப்பிஓடுகின்றான். (வி.ப 2:11-12) அங்கு ஆடுமேயத்துக் கொண்டிருக்கின்றான். யார் அந்த மனிதர்? மோயீசன்.

ஒருநாள் ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். மோயீசன் பார்த்த போது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்து போகவில்லை. ஒருவிதமான அச்சத்தால் ஆட்கொள்ளப்படுகின்றார். ஆனாலும் மோயீசன் ஏன் முட்புதர் தீய்ந்து போகவில்லை அதை பார்ப்பதற்காக நான் அங்கு செல்வேன் என அந்த முட்புதரை நோக்கி பயனிக்கின்றான். கடவுள் மேயீசன் வருவதை அறிந்து
“மோசே மோசே என அழைக்கின்றார் அவர் இதோ நான்” என்று பதிலளிக்கின்றார்…. மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தன் முகத்தை மூடிக்கொண்டார். ஆனால் கடவுள் இவரை தேர்ந்தெடுத்து தன்னுடைய மக்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தன்னுடைய கருவியாக செயல்படுத்துகின்றார்.

பிரியமானவர்களே இங்கு ஆதாமும் ஏவாளும், மோசேயும் கடவுளுக்கு அஞ்சுகின்றனர். ஒருவர் கடவுளுக்கு பயந்து மரங்களுக்கு மத்தியில் ஒளிந்து கொள்கின்றார். மற்றொருவர் எரிகின்ற மரத்தை பார்ப்பதற்காக அதை நோக்கி செல்கின்றார்.
கடவுள் ஆதாம் ஆதாம் என்று அழைக்க அவனோ “உம் குரல் ஒளியை நான் கேட்டேன். ஆனால் எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில் நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்துகொண்டேன்” என்கின்றான். அதேவேளையில் கடவுள் “மோசே மோசே என அழைக்கின்றார் அவர் இதோ நான்” என்று பதிலளிக்கின்றார். கொலை செய்தவன் கடவுளை நோக்கி செல்கின்றான்; கடவுளின் கட்டளையை மீறியவன் பயந்து ஒளிந்து கொள்கின்றான். அன்புக்குரியவர்களே இன்றும் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நம்முடைய பெயரைச் சொல்லி அழைக்கின்றார். நாம் பாவிகள் எனத் தெரிந்தும் அவர் நம்மை தேடி வருகின்றார். நம்முடைய பதில் என்னவாக இருக்கின்றது? கடவுளைத் தேடுவோர் அவரின் ஞானத்தை கண்டடைகின்றனர்.

தற்பொழுது நான் ஆப்பிரிக்கா நாட்டில் கப்புச்சின் அதிபர்கள் மற்றும் மறைபணியாளர்கள் மாநாட்டிற்காக டன்சானியா என்ற நாட்டில் இருக்கின்றேன். எங்களில் ஒரு ஐந்து பேர் இங்கு உள்ள கிளிமஞ்சாரோ என்ற மலையில் ஏறுவதற்கு பயனித்தோம். ஆனால் தட்பவெப்ப சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் எங்களது பயணம் தடைபெற்றது. ஆனாலும் எப்படியாவது ஒரு மலையிலாவது ஏறி கிளிமஞ்சாரே என்ற அழகான மலையை தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருந்தோம். மறுநாள் ஒரு மலையை தேர்ந்தெடுத்து பயணத்திற்கு தேவையான பொருட்களை சுமந்துகொண்டு மலைஏற ஆரம்பித்தோம். ஒருசில மணிநேரத்தில் பயணச்சுமையும், களைப்பும் எங்களை வாட்டியது. பாதிவழியிலே மிகவும் சோர்ந்து விட்டோம். நடக்க முடியாத அளவிற்கு சோர்ந்து விட்டோம். எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை, இவ்வளவு தூரம் நடந்து எல்லாம் வீணாகிவிடுமோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் ஒருசிலர் எப்படியும் ஏறிவிடவேண்டும் என்ற முடிவில் இருந்தோம். அப்பொழுது அந்த மலையில் இருந்து ஒரு பெண் விறகு கட்டுகளை சுமந்து கொண்டு மேலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்தார். நாங்கள் களைப்பாக இருப்பதைக் கண்டு எங்களுக்கு தைரியம் ஊட்டினார். மேலும் தன்னுடைய விறகு கட்டை பிரித்து எங்களுக்கு ஆளுக்கு ஓரு தடியை கொடுத்து இதை வைத்து ஊன்றிக் கொண்டு நடங்கள் இன்னும் சிறிது தூரத்தில் மலையை அடைந்து விடலாம் என்றார். களைப்பாக இருந்த எங்களுக்கு அவர் சொன்ன வார்த்தைகளும், அவரது செயல்பாடுகளும் எங்களுக்கு தைரியத்தை வரவளைத்தது. ஒருசில நிமிடங்களில் மலையை அடைந்து விட்டோம். அழகான கிளிமஞ்சரோ என்ற மலையை தூரத்தில் இருந்து கண்டு இரசித்தோம். நாம் எதிர்பார்த்ததை அடையவேண்டும் என்று சொன்னால் தைரியமாக, தகுந்த தயாரிப்புடன் போராடும் போது நிச்சயம் வெற்றியை அடையலாம். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அறிவுறுத்துகின்றது.

ஞானமாகிய கடவுள் மணமகனுக்கு ஒப்பிடப்படுகின்றார். இந்த மணமகனை சந்திப்பதற்கு 10 பேர் கொண்ட குழு செல்கின்றது. அதில் 5 பேர் அறிவாளிகள், 5 பேர் அறிவிலிகள். இவர்கள் 10 பேரும் ஞானமாகிய கடவுளுக்காக காத்திருக்கின்றனர். இன்று ஆலயத்திற்கு வந்திருக்கும் நாமும் இந்த கடவுளுடைய பிரசன்னத்திற்காக அந்த 10 மனிதர்களைப்போல காத்திருக்கின்றோம். நம்முடைய காத்திருப்பு எத்தகைய பலனை நமக்கு தரப்போகின்றது.


01. ஞானத்திற்காக காத்திருருப்பவர்கள்
நற்செய்தியில் வரும் 5 மனிதர்கள் கடவுளுக்காக விழிப்போடு காத்திருக்கின்றனர். இன்றைய சூழலில் எத்தனை பேர் கடவுளுக்காக காத்திருக்கின்றோம். உதாரணமாக 8 மணிக்கு திருப்பலி என்றால் 8.15 அல்லது 8.20 க்கு அல்லவா நாம் செல்கின்றோம். ஆனால் தியேட்டரில் 10 மணிக்கு திரைப்படம் என்றால் 9.30க்கெல்லம் திரையரங்க வாசலில் சென்று காத்திருக்கின்றோம். 9 மணிக்கு பள்ளிக்கூடம், கம்பெனியில் வேலையென்றால் 7 மணியில் இருந்தே தயாராகி காத்திருக்கின்றோம். பிரியமானவர்களே இன்று நாம் அறிவுக்காக காத்திருக்கின்றோமா? அல்லது ஞாத்திற்காக காத்திருக்கின்றோமா?

02. ஞானமாகிய கடவுளை சந்திக்க தகுந்த தயாரிப்போடு காத்திருப்பவர்கள்:
நற்செய்தியில் வரும் 5 மனிதர்கள் தகுந்த தயாரிப்போடு ஞானமாகிய கடவுளுக்காக விழிப்போடு காத்திருக்கின்றனர். அவர்களின் முன்மதியான தயாரிப்பிற்கு ஏற்ற வண்ணம் ஞானத்தை கண்டுகொண்டனர். இன்று உதாரணமாக நம்மில் எத்தனை பேர் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நல்ல தாயரிப்போடு திருப்பலியில் பங்கெடுக்கின்றோம்? எத்தனை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஞானத்தை பெற்றுக்கொள்ள ஆலயத்திற்கு தயாரிப்போடு அவர்களை அழைந்து வந்திருக்கின்றோம்? அறிவைப் பெற்றுக் கொள்ள பலவித தயாரிப்புகளை நாம் மேற்கொள்கின்றோம். உதாரணமாக புத்தக அறிவைப்பெற பலவிதமான பத்தகங்களை வாங்கி படித்து அறிவை வளர்த்துக் கொள்கின்றோம். செய்முறை அறிவை பெற பல இடங்களுக்கு வேலைக்குச் சென்று அனுபவ அறிவை பெற்றுக் கொள்கின்றோம். தொலைக்காட்சி, கணிணி, என பல வழிகளில் நம்முடைய அறிவை பெலப்படுத்திக் கொள்கின்றோம். பிள்ளைகளுக்கு நல்ல பள்ளிக்கூடம், நல்ல டியூசன், என தகுந்த தயாரிப்போடு அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் நாம் செய்து கொடுக்கின்றோம். அறிவை வளர்க்க வாய்ப்புகளை ஏற்படுத்தும் நாம் ஞானத்தை பெற்றுக்கொள்ள நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் என்னென்ன? நம்மால் பட்டியலிடமுடியுமா?

இன்றைய சூழலில் நம் அனைவருக்கும் அறிவு இருக்கின்றது. ஆனால் அந்த அறிவை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித் தரும் ஞானம் மிகக் குறைவு. அந்த ஞானத்தை அடைந்து கொள்ள எந்தவித முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை. அதனால்த்தான் ஞானமாகிய கடவுளே நம்மைத் தேடி வருகின்றார்.

ஆக கடவுளாக இருந்த ஞானம் காலம் நிறைவுற்ற போது மண்ணுலகில் தோன்றிற்று என பாருக்கு எரேமியாவின் மடலில் தெளிவுபடுத்துகிறது 3:38-ல் “ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது”. யோவான் 1:14-ல் வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார். ஆக இயேசு கிறிறிஸ்துவே உண்மையான ஞானம் ஆகும். இயேசு கிறிஸ்துவை எவரெல்லாம் அறிந்து கொண்டுள்ளனரோ அவர்கள் அனைவரும் ஞானத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக ஆண்டவர் இயேசு தனக்கு தேவை என பாவிகளாய் வாழ்ந்தவர்களில் 12 மனிதர்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய சீடர்கள் என அங்கிகாரத்தை கொடுக்கின்றார். தம்மோடு சேர்ந்து பயணிக்க வாய்ப்பு அளிக்கின்றார், நற்செய்தியை பறைசாற்ற தயார்படுத்துகின்றார், இந்த 12 சீடர்களையும் தன்னுடைய நண்பர்கள் என அழைக்கின்றார். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வழிகளிலும் உதவி செய்கின்றார். அதிலே யூதாசை கடவுள் அதிகம் அன்பு செய்கின்றார், நேர்மையான மனிதராகவும் இருக்கின்றார் அதனால்த்தான் பணப்பையை அவரிடம் ஒப்படைக்கின்றார். நிச்சயம் யூதாசு அறிவில் சிறந்தவராக இருக்க வேண்டும். அறிவில் சிறந்த மனிதனுக்கு ஞானம் இல்லாமல் போய்விட்டதே! இயேசுவை காட்டிக்கொடுக்கின்றான். தான் செய்தது தவறு என தனது அறிவு அவனுக்கு சுட்டிக்காட்டுகின்றது “ஐயோ மாசற்ற இரத்தத்தை காட்டிகொடுத்துவிட்டேனே” என அழுது புலம்புகின்றான். தன்னுடைய தவற்றையும் ஏற்றுக்கொள்ளுகின்றான் ஆனால் தன்னுடைய தவறைக்காட்டிலும் கடவுளின் அன்பு மிகப்பெரியது, கடவுளின் அன்பு நிச்சயம் தனது தவற்றை மன்னிக்கும் என்பதை மறந்துவிடுகின்றான் எனவே தான் செய்த தவற்றிற்காக தற்கொலை செய்கின்றான். ஞானம் இருந்திருந்தால் நிச்சயம் கடவுளிடம் திரும்பி வந்திருப்பான். இன்று அவனும் ஒரு புனிதனாக மாறியிருப்பான்.

அதே வேளையிலே இரயப்பரும் தவறு செய்கின்றார். தன் உயிர் நண்பரான இயேசுவை யாரென்றே எனக்கு தெரியாது என ஒரு முறை அல்ல, இருமுறையல்ல மும்முறை மறுதலிக்கின்றார். தான் செய்தது தவறு என்பதை அறிவு சுட்டிக்காட்டுகின்றது. எனவே ஞானம் நிறைந்தவராய் கடவுளிடம் திரும்பிச் சென்று மன்னிப்பு கேட்கின்றார். கடவுளும் அவரை தைரியப்படுத்தி, அவரது விசுவாசத்தில் உறுதிபடுத்துகின்றார்.

பிரியமானவர்களே இன்று நாமும் தவறு செய்பவர்கள் தாம். அறிவு உள்ளவர்கள் தாம். இன்று கடவுள் நம்மை தேடி வரும்போது நம்முடைய பதில் என்னவாக இருக்கப் போகின்றது. ஞானம் சொல்வதைக் கேட்டு நடக்கப் போகின்றோமா? அல்லது அறிவு சொல்வதைக் கேட்டு நடக்கப் போகின்றோமா? புனித பிரான்சிஸ் அசிசியார் கூறுவார் “இதுவரை நாம் எதுவும் செய்யவில்லை; இந்த நிமிடம் முதல் கடவுளுக்காக எதையாவது செய்யத் தொடங்குவோம்” என்று! அறிவைப் பெற்றுக்கொள்ள தகுந்த தாயாரிப்புகளை மேற்கொள்ளும் நாம் ஞானத்தையும் ஒரு கணம் சிந்தித்து பார்ப்போம். அறிவு இருந்தால் பணம், பட்டம், புகழ் வரும் ஆனால் கிடைத்த பணத்தையும், புகழையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ஞானம் வேண்டும். எனவே நம்முடைய வாழ்க்கைக்கு ஏது முக்கியம் ஞானமா? அறிவா? ஞானத்திற்கு ஏற்று வாழ்வோம். கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.