இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு

கண்ணீரால் கடவுளை வெல்வோமா!

விடுதலைப்பயண நூல் 22:21-27
1தெசலோனிக்கர் 1:5-10
மத்தேயு 22:34-40

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை. வெங்காயம் உரிக்கும்போது நாம் ஏன் அழுகின்றோம்?
ஒருமுறை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் நெருங்கிய நண்பர்களான வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மூன்றும் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தன. திடீரென்று தக்காளிக்கு ஒரு யோசனை தோன்றியது.
“நாம் மட்டும் ஏன் இந்தப் பெட்டிக்குள்ளேயே அடைஞ்சு கெடக்கணும்? வெளியில் போய் ஜாலியா சுத்திட்டு வரலாமா?”
என்று தனது நண்பர்களிடம் கேட்டது. “ஐயோ… வேண்டாம். நமக்குத்தான் ஆபத்து” என்று எச்சரித்தது வெங்காயம். “இங்க மட்டும் நமக்கு ஆபத்து இல்லையா என்ன? வா, போகலாம்” என்று தக்காளியின் பேச்சுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது பச்சை மிளகாய். அப்போது வீட்டில் உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது, மூன்றும் தப்பித்து வெளியே குதித்தன. அப்படியே மூன்றும் வெளி உலகத்துக்கு வந்தன.

“அடடா! வெளி உலகம் எவ்வளவு நல்லா இருக்கு, பாரேன்!’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் ஒருவன் தக்காளியை ஒரு மிதி மிதித்தான். அவ்வளவுதான்… தக்காளி நசுங்கி சட்னியாக மாறிவிட்டது.

இதைப் பார்த்த வெங்காயமும் பச்சை மிளகாயும் கண்ணீர் விட்டு அழுதன.

சற்றுத் தூரம் சென்றதும், ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்ததை இரண்டும் பார்த்தன. வாசனையால் ஈர்க்கப்பட்ட பச்சை மிளகாய், குடுகுடுவென்று ஓடி பாட்டிக்கு அருகில் நின்று எட்டிப் பார்த்தது. “ஏய் பச்சை மிளகாய் உன்னைத்தான் காணோமேன்னு பார்த்தேன்… இங்கதான் இருக்கியா?” என்று கேட்டபடி, மிளகாயை நறுக்கி வடை மாவில் போட்டார் பாட்டி.

தூரத்தில் நின்று கண்ணீர் விட்ட வெங்காயம், அருகில் இருந்த கோவிலுக்குச் சென்று கடவுளே “என் நண்பர்கள் இறக்கும்போது நான் கண்ணீர் விட்டேன். ஆனால், நான் இறக்கும்போது எனக்காக அழுவதற்கு யாருமில்லை” என்று வருத்தப்பட்டு கடவுளிடம் முறையிட்டது வெங்காயம்.

“நீ இறக்கும்போது, உனக்காக மனிதர்கள் கண்ணீர் விடுவார்கள்… கவலை வேண்டாம்” என்றார் கடவுள்.
அன்று முதல், வெங்காயத்தின் தோலை உரிக்கும்போதெல்லாம் மனிதர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பிரியமானவர்களே இது ஒரு வேடிக்கையான கதையாக இருக்கலாம். ஆனால் கடவுளும் இன்று நமக்கு இந்த கருத்தைத்தான் தெளிவு படுத்துகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தாமே கூறுகின்றார் ‘இந்த உலகத்தில் மனிதர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்’ என்கிறார். ஆக கடவுளிடம் யாரெல்லாம் அழுது முறையிடுகின்றார்களோ அவர்களின் குரல்கள் அனைத்திற்கும் கடவுள் செவிசாய்க்கின்றார்.

பிரியமானவர்களே நம்முடைய திருச்சபையில் எத்தனையோ புனிதர்கள் இருக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகனும் புனிதராக இருக்கின்றனர். யார் அந்த குடும்பத்தினர்? புனித மோனிக்கா மற்றும் புனித அகுஸ்தினார். மோனிக்காவிற்கு ஓர் அடைமொழி இருக்கின்றது. யாருக்காவது தெரியுமா? அதாவது மோனிக்கா என்றாலே 'கண்ணீரால் கடவுளை வென்றவர்!' என்று சொல்வார்கள். நம் ஊரில் ஒரு பழமொழி 'தென்னையை வைத்தா இளநீரு! பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு!' என்று சொல்வார்கள். ஆனால் மோனிக்கம்மாளின் வாழ்வில் 'கல்யாணம் முடிச்சால் கண்ணீரு!' என்றும் கசந்து போனதுதான் மிகப்பெரிய சோகம். முதலில் தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தன் கணவனின் மனமாற்றத்திற்காக கண்ணீர் வடிக்கின்றார், இரண்டாவதாக பாதியிலே வயதிலே இறந்துவிட்ட தனது கணவனுக்காகவும், குடும்ப சூழ்நிலைக்காகவும் கண்ணீர் சிந்துகின்றார், மூன்றாவதாக தான் பெற்றெடுத்த மகன் அகுஸ்தினார் 17 வயதில் தப்பறைக் கொள்கை ஒன்றில் மூழ்கி அதில் திளைத்துக் கிடக்க, அவன் மனமாறி கத்தோலிக்க நம்பிக்கையை தழுவமாட்டானா என்று அவனின் 31 வயது வரை கண்ணீர் வடிக்கின்றார் மோனிக்கா. இப்படியாக தனது வாழ்நாளில் பாதிநாட்களை கண்ணீரிலே கரைத்தவர் தான் புனித மோனிக்கா.

தன்னுடைய கண்ணீரால் கடவுளின் மனதையே இளகச் செய்கின்றார். கடவுளும் ‘உன் மகன் என்றும் உன்னோடு!' 'உன் கண்ணீரால் உன் மகன் அழிந்து போகமாட்டான்!' – என மிலான் நகர ஆயரான அம்புரோசுவினால் மோனிக்கவை திடப்படுத்துகின்றார். கார்த்தேஜிலிருந்து, ரோம், ரோமிலிருந்து மிலான் என தப்பி ஓடிய அகுஸ்தினாரை அவருக்கே தெரியாமல் ஜெபத்தோடும், கண்ணீரோடும் பின்தொடர்கின்றார் மோனிக்கா. இறுதியில் கண்ணீர் ஜெயிக்கின்றது! அகுஸ்தினார் தூய அம்புரோசியாரின் திருமுன் கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்று திருமுழுக்கு பெறுகின்றார்.

மோனிக்கா தனது மரணப்படுக்கையில் தன் மகனிடம் மூன்று வார்த்தைகளை பகிர்ந்து கொள்கின்றார். அதை புனித அகுஸ்தினார் தன் புத்தகமான 'உள்ளக்கிடக்கைகளில்' (Confession) –ல் இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார்

1. 'நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்கிறேன் என்றும், நான் இன்னும் செய்ய வேண்டிய பணி என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் விரும்பியதெல்லாம் உன்னை ஒருநாள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனாகவும், வான்வீட்டின் மகனாகவும் பார்ப்பதுதான். அதற்காகவே எனது கண்ணீரை காணிக்கையாக்கினேன். ஆனால் நான் கேட்டதற்கும் மேலாக கடவுள் எனக்குக் கொடுத்துவிட்டார். ஆம்! வாழ்வின் சுகங்கள் எதுவும் வேண்டாம் என்று நீ எல்லாவற்றையும் விலக்கி உன்னையே அவரின் பணிக்கு ஒப்படைத்துவிட்டாயே! எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?'

2. 'நான் எங்கு புதைக்கப்பட்டால் என்ன, கடவுளின் கைக்கு எதுவும் தூரமா என்ன? அவர் என்னை எழுப்பி என்னைத் தன் கரங்களால் அணைத்துக்கொள்வார்!'

3. 'என் கண்ணீரின் மகனே!' இன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன. ஆம் பிரியமானவர்களே மோனிக்காவின் அழுகையும், கண்ணீரும் தான் பாவியான அகுஸ்தினாரை புனிதராக மாற்றியது.


அன்புக்குரியவர்களே தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு குழந்தையும் உயிர் உள்ளதா? உயிரற்றதா? ஆரோக்கியமானதா? ஆரோக்கியமற்றதா? என எதை வைத்து நாம் தெரிந்து கொள்கின்றோம்? குழந்தைகள் அழவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையை விட்டு வெளியே வரும்போது அழவேண்டும். அழுதால் தான் அது ஆரோக்கியமான குழந்தை. அதே குழந்தை இறந்து கல்லரைக்குச் சென்றாலும் அல்லது பெரிய மனிதனாகி அனைத்தையும் சாதித்து கல்லறைக்குச் சென்றாலும் அதற்காக அழுவதும் நாம் தான்.

ஒருவர் இறக்கும் போது நாம் ஏன் அழுகின்றோம்?
பாசம், அன்பு இவையெல்லாம் இருந்தாலும் கூட ஒருசிலர் கூறுவர் “அதாவது ஒருகாலத்தில் நீ அழுது கொண்டே பிறந்தபோது உன்னை சுற்றியிருப்பவர்கள் சந்தோசமாக சிரித்திருப்பார்கள். ஆனால் நீ இறக்கும் போது நீ சந்தோசமாக கண் மூடவேண்டும். அப்போது உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும்”. ஆக அழுகை என்பது கடவுள் கொடுத்த அற்புதமான கொடை.

அழுகையானது எதனால் வருகிறது?
அழுகையானது உடல் வலி, மன வலி என்ற இரண்டு காரணங்களுக்காக வருகின்றது. உடல் வலியினால் வரும் கண்ணீர்
உடல் வலி என்று கூறும் போது இன்று உடல் நோயினால் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கண்ணீர் வடிக்கின்றனர். உதாரணமாக விவிலியத்தில் யோபுவை எடுத்துக்காட்டாக நாம் பார்க்கலாம். யோபு உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை எரியும் புண்களால் உடல் அளவில் வேதனையும் துன்பத்தையும் அனுபவித்தபோது கடவுளிடம் கண்ணீர் வடிக்கின்றார் (யோபு 2:7). மேலும் யோபு 16: 20 – “என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்” என்கிறார். கடவுளும் அவருடைய கண்ணீருக்கு செவிசாய்த்து முன்னைய காலத்தில் இருந்ததை விட இரண்டு மடங்காக ஆசீர்வாதத்தால் நிரப்புகின்றார்.

மனவலியின் போது வரும் கண்ணீர்
இன்று உடல் வலிகளைக் காட்டிலும் மனவலியினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் ஏராளம். இப்படி உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டவர் இறைவாக்கினர் எரேமியா. எரேமியா இறைவாக்கினரை கடவுள் அழைக்கின்றார். கடவுளின் அழைப்பிற்கு கீழ்படிந்து கடவுள் சொல்வதையெல்லாம் நிறைவேற்றுகின்றார். இதனால் மன்னன் அவருக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கின்றான். இதனால் மனமுடைந்த எரேமியா கடவுளிடத்தில் கண்ணீரோடு முறையிடுகின்றார். எரே 15:18-ல் “எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ” என அழுது, புலம்பும் இரைவாக்கினரின் குரலுக்கு கடவுள் செவிசாய்த்து எரேமியா 31: 16 –ல் ஆண்டவர் “நீ அழுகையை நிறுத்து; கண்ணீர் வடிக்காதே; ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும்,” என்கிறார் ஆண்டவர்.

ஆம் பிரியமானவர்களே! இன்று நீங்கள் கண்ணீர் சிந்துகின்றீர்களா? உங்களுடைய கண்ணீர் உடல் நோயைச் சார்ந்தா? அல்லது மனநோயைச் சார்ந்ததா? பலவேளைகளில் நம் வீட்டின் தலையணைகளுக்கு மட்டும்தான் நமது கண்ணீர் தெரியும் என நினைத்திருக்கின்றோம். ஆனால் அதே கண்ணீரை கடவுளின் பாதத்தில் சிந்தும் போது கடவுள் நம்முடைய கண்ணீரை துடைக்க காத்துக்கொண்டிருக்கின்றார். யாரெல்லாம் கடவுளிடத்தில் கண்ணீர்விட்டு முறையிடுகின்றனரோ கடவுள் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கின்றார். அன்பிற்குரியவர்களே! இன்று மனிதர்கள் கண்ணீர் சிந்தாமல் இருக்கவும், கண்ணீர் சிந்தக்கூடியவர்களை காப்பாற்றவும் ஆலயம் வந்துள்ள நம் ஒவ்வொருவரையும் கடவுளின் கருவிகளாக செயல்பட ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கடவுள் அழைப்பு விடுக்கின்றார். அடுத்தவரின் கண்ணீரை துடைக்க நான் ரெடி? நீங்க ரெடியா? வெரேணிக்கா இயேசுவின் கண்ணீரைத் துடைத்தார் தன்னுடைய முகத்தை பரிசாக இயேசு கொடுக்கின்றார். இன்று நாமும் பிறரின் கண்ணீரை துடைக்கும்போது கடவுளும் தக்க பரிசை நமக்ககத் தருவார்.
ஒருவர் கண்ணீர் சிந்தாமல் இருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு இரண்டு கட்டளைகளை நம்முன்பு நிறுத்துகின்றார். முதலாவதாக கண்ணீர் சிந்துபவர்கள் அனைவருமே வேதனையையும், துன்பத்தையும் அனுபவிப்பவர்கள். அவர்களிடத்தில் கடவுளின் நம்பிக்கையை புதுப்பிக்க வேண்டும். (புனித அம்புரோஸ் ஆயரும் – புனித மோனிக்காவும், இயேசுவும் – பாவியான பெண்ணும், இயேசுவும் – மார்த்தா, மரியாவும்) "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து” என கடவுளை அன்பு செய்ய அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

இரண்டாவதாக வேதனையிலும், துன்பத்திலும் இருப்பவர்கள் அனைவருமே உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை நாம் அன்பு செய்ய வேண்டும். எப்படியென்றால் நம்மை நாம் எப்படி அன்பு செய்கின்றோமோ அதைப் போலவே கண்ணீர் விடுபவர்களையும் நாம் அன்பு செய்ய வேண்டும். இதுவே இரண்டாவது கட்டளை. கண்ணீர் விடுபவர்களை நாம் அன்பு செய்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தால் நிச்சயம் அவர்கள் கண்ணீர் சிந்த மாட்டார்கள்.

ஆனால் மக்கள் கண்ணீர் சிந்துவதற்கு நீங்களும், நானும் ஒருவேளை காரணமாக இருந்தோமானால் அதற்கான தண்டனை மிகப் பெரியது என முதல் வாசத்தில் நாம் வாசிக்கின்றோம். அதாவது “நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என்சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், அவருக்கு நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்”. எனவே அடுத்தவரின் கண்ணீரை துடைப்பது நம்முடைய தலையாய கடமை என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக கடவுள் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

ஒருமுறை மரணப் படுக்கையில் இருந்த ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம், 'நீங்கள் மீண்டும் உங்கள் வாழ்நாளைக் கழிக்க முடியும் என்றால், அதனை எப்படிக் கழிப்பீர்கள்?' என்று கேட்டார்கள். நீண்ட பெருமூச்சுடன் பெர்னாட்ஷா இப்படிப் பதிலளித்தார், 'இப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, எப்படி எல்லாம் வாழாமல் இருந்தேனோ... அப்படி எல்லாம் வாழ்வேன் என்றார். பிரியமானவர்களே இந்த வாரத்தில் நாம் இரண்டு முக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்க இருக்கின்றோம். ஒன்று மனித வாழ்க்கையானது வேதனைகளையும், கண்ணீர்களையும் உள்ளடக்கியதாக இருந்தாலும் தங்களது கண்ணீரை கடவுளிடத்தில் காணிக்கையாக்கிய புனிதர்களின் விழா மற்றொன்று இவ்வாழ்க்கை துன்பம் நிறைந்தது என அன்றாடம் கண்ணீர் வடித்து கல்லறைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் இறந்த விசுவாசிகளின் நினைவுவிழா. நமது குடும்பத்தில் இறந்தவர்களுக்காக கண்ணீர் வடிக்கும் பட்சத்தில் அடுத்தவரின் கண்ணீரைத் துடைக்க முயற்ச்சிகள் எடுப்போம். நமது கண்ணீரை கடவுளின் பாதத்தில் காணிக்கையாக்குவோம்; கடவுளின் கருணையை பெற்றுக்கொள்வோம்.

அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன" திருவெளிப்பாடு 21 : 4.