இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு

என் வாழ்க்கைக்கு தேவை பணமா? கடவுளா? நான் யரைச் சார்ந்து இருக்கின்றேன்

ஏசாயா 45: 1, 4-6
1தெசலோனிக்கர் 1:1-5
மத்தேயு 22:15-21

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? பிரியமானவர்களே நம்மில் பலபேருக்கு பூமி எதனால் சுழல்கிறது என்று தெரியுமா? தெரியாது? மின்சாரம் எப்படி பாய்கின்றது தெரியுமா? தெரியாது? நாம் சுவாசிக்கும் காற்று எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா? தெரியாது?. ஆனால் பூமியில் நாம் வாழும் இந்த வாழ்க்கை எதை அச்சாரமாகக் கொண்டு சுழல்கிறது என்று அனைவரும் அறிந்து தெரிந்து வைத்திருக்கின்றோம். நாம் வாழும் வாழ்க்கை எதை மையமாகக் கொண்டுள்ளது? கடவுளை மையமாகக் கொண்டிருக்கிறதா? அல்லது காகிதத்தை மையமாக கொண்டிருக்கிறது? இன்றைய சூழலில் பணம் என்ற காகிதம் தான் நமது வாழ்க்கையின் அச்சாரமாகவும், ஆனிவேரகவும் நம்மிடத்தில் இருக்கின்றது. நீங்கள் கூறலாம் கடவுள் தான் ஆதாரம் என்று. ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். Practical – ஆக யோசியுங்கள். நம் வாழ்க்கை எதை மையமாக கொண்டுள்ளது என்பது புரியும்.

உதாரணமாக வீடு கட்ட வேண்டுமா? பணம் தேவை, பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமா? பணம் தேவை, படித்த பிள்ளைகளுக்கு வேலை வாங்க வேண்டுமா? பணம் தேவை, மருத்துமனைக்கு செல்ல வேண்டுமா? பணம் தேவை, ஏன் கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமா? பணம் தேவை, உன் குடும்பத்திற்காக பூசை ஒப்புக்கொடுக்க வேண்டுமா? பணம் தேவை? உண்டியலில், தட்டில் பணம் போட்டால் தான் கோவிலில் உள்ள கடவுளே அர்ச்சகர்கள், குருக்கள் வடிவில் வந்து ஆசீர்வாதம் கொடுப்பார். இப்படி எந்த நாட்டினவரானும், எந்த மத்தினரானாலும், பணம் என்ற காகிதற்கு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றோம்.

தினமலர் நாளிதழில் வந்த ஒரு செய்தி. இயக்குனர் பாலாஜி அவர்கள் கடந்த ஆண்டு இயக்கிய 'நிறம்' என்ற நான்கு நிமிடக் குறும்படம் இப்படி நகர்கிறது. சென்னையில் கடைகள் சூழ்ந்துள்ள வீதியில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்தப் பகுதியில் கடந்து செல்வோர், காசு கொடுத்தாலும் அதைப் பயன்படுத்தத் தெரியாத மனநிலை. டீக்கடை, ஓட்டல்களில் உணவு கேட்டு கையேந்தும்போது, அவர்கள் எரிச்சல் அடைந்தாலும், அரைமனதோடு கொடுக்கின்றனர். அவரது புகலிடம் குப்பைத் தொட்டி அருகேதான். சாலையில் கிடந்த, 500 ரூபாய் நோட்டை எடுத்து, அதன் மதிப்புத் தெரியாமல், கண் குளிர பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஐ.டி.இ துறையில் பணி புரியும் இளைஞர் ஒருவர், அருகில் உள்ள சாலையோரக் கடையில் காலை உணவு உண்கிறார். திரும்பிச் செல்லும்போது, மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் இருக்கும் ஐந்நூறு ரூபாயைப் பார்க்கிறார். யாராவது தன்னைப் பார்க்கின்றனரா என, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர் அருகில் சென்று, தன்னிடம் இருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்த 500 ரூபாயைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பறக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர், ஐந்து ரூபாய் நாணயத்தைக் கீழே போட்டுவிட்டு, தனக்கான உலகத்தில் வாழ்கிறார். அலுவலகம் சென்று கொண்டிருக்கும் அந்த ஐ.டி. இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத தெருவில், வாகனத்தை நிறுத்தி திரும்பிப் பார்க்கிறார், வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணனி இருந்த பையைக் காணவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் தான் செய்த செயலை நினைத்துப் பார்த்துவிட்டு மனம் வெதும்பிய வண்ணம் நகர்ந்து செல்கிறார். பணத்தைப் பார்த்ததும், தன்நிலை மறந்து, மனிதர் நிறம் மாறுகின்றனர் என இக்கதை நமக்கு விளக்குகின்றது.

ஆக இன்று பணத்தை நாம் பெரிதாக மதிக்கத் தொடங்கி விட்டோம். செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாகக்கூட நினைக்கத் தொடங்கி விட்டோம். பண ஆசை சமுதாயத்தின் 'பண்பு' என்று சொல்லுமளவிற்குக் கூட நாம் வளர்ந்து விட்டோம். ஏன் பணமே கடவுள் என்று கூறும் அளவிற்கு பணத்தின் மீது பற்றும், மரியாதையும் மிகுந்து உள்ளது. அதேவேளையில் பணத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்களும் பொன்மொழிகளும் நமது சமுதாயத்தில் நிறையேவே உள்ளன. “கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை” “கையில் சில்லரை இல்லையென்றால் எந்த அறையும் உன்னறை (வீடு) கிடையாது” “காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா…” ஆக பணப் பேராசை நம் அடிமனத்துள் சாத்தான் போல் புகுந்து கொண்டு நம்மைப் பல விதங்களில் ஆட்டி வைக்கிறது. இந்த தருணத்தில் நாம் யாரைச் சார்ந்து இருக்கின்றோம்? அல்லது யாருக்கு அடிமைகளாக இருக்கின்றோம்? என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

சீசருக்கு வரி செலுத்துவது முறையா? முறையற்றதா?
என பரிசேயர்கள் மட்டுமல்ல எரோதியர்களும் சேர்ந்து இயேசுவிடம் கேட்கின்றனர். இயேசு ஒரு நாணயத்தை கேட்க அவர்கள் ஒரு தெனாரியத்தை கொண்டு வருகின்றனர். அதைப் பார்த்த பிறகு இயேசு சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்கின்றார்.

இன்று உங்களிடம் ஒரு கேள்வி நமது அரசாங்கத்திற்கு நாம் வரி செலுத்துவது சரியா? தவறா? முறையா? முறையற்றதா?

பிரியமானவர்களே முன்னொரு காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. எனது ஊரில் நான் சிறு பிள்ளையாக இருந்த போது ஒருசில பண்டமாற்று முறைகளைப் பார்த்திருக்கின்றேன். அதாவது தங்களிடம் உள்ள பொருட்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு பிற ஊர்களுக்குச் சென்று மாற்றிவருவது வழக்கம். உதாரணமாக நெல் விளைவித்தவர்கள் தங்களது நெல்லை வண்டியில் ஏற்றிக்கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்று தங்களது நெல்லைக் கொடுத்து தங்கள் வீட்டிற்கு தேவையான வேறு பொருளை வாங்கிக் கொள்வார்கள். உதாரணமாக நெல்லைக் கொடுத்து உப்பு மற்ற மளிகை வகைகள், கடலையைக் கொடுத்து எண்ணெய், கம்பு, சோளம் இவற்றை கொடுத்து மீன், கருவாடு.. இப்படி தங்களுக்கு எந்த பொருள் தேவையோ தன்னிடம் உள்ள பொருட்களை கொடுத்து இல்லாத பொருட்களை வாங்கிக் கொள்வர். இன்றும் கொல்லிமலை என்ற இடத்தில் இருந்து அங்கு விளையக்கூடிய கடுகு, சோம்பு, சீரகம் போன்ற பொருட்களை எடுத்து கிராமங்களுக்கு வந்து அவர்களுக்கு தேவையான கம்பு, சோளம், நெல் மணிகளை பெற்றுச் செல்வது வழக்கம். இந்த பண்டமாற்ற முறை இருந்த போது யாரும் யாருக்கும் வரி செலுத்தவில்லை. ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ளதை பகிர்ந்துகொண்டு வாழ்ந்தனர். சந்தோசமாக இருந்தனர். ஆனால் இந்த பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பணம். இன்று பணமானது மனிதனின் சுவாசமாகவே மாறிவிட்டது . நிறைய பிரச்சனைகளின் தொடக்கப்புள்ளியாகவும் முடிவுப்புள்ளியாகவும் பணமே இருந்து வருகின்றது. எப்பொழுது பணம் புழக்கத்திற்கு வந்ததோ அப்பொழுதே வரி என்ற சுமையை மக்கள் கழுத்தில் சுமக்க ஆரம்பித்தனர்.

ஏன் வரி செலுத்த வேண்டும்?
முதலில் மக்கள் உழைத்தனர். அந்த உழைப்பினால் வருமானம் வந்தது. மக்களும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் இருந்து வந்தனர். வாழ்க்கையும் சந்தோசமாக இருந்தது. ஆனால் எப்பொழுது அரசாங்கம் உருவாக்கப்பட்டதோ அப்பொழுதே வரிகளும் வரையறுக்கப்பட்டன. காரணம் அரசாங்கம் செயல்பட வேண்டுமானால் அதற்கு போதிய வருவாய் தேவை. அரசாங்கம் மக்களிடமிருந்துதான் இந்த வருவாயை பெருக்க வேண்டும். எனவே வரிகள் தான் ஒரு நாட்டின் வருமானத்திற்கு ஆதார புள்ளி ஆகும். இந்த வரிகளால் தான், ஒரு அரசு தமது மக்களுக்கு பணியாற்ற, செயலாற்ற தேவையான நிதியினை பெறுகிறது. அதனால் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மீதும், நிறுவனங்களின் மீதும் அரசு வரிகளை விதிக்கின்றது. தயாரிக்கப்படும் பொருட்களின் மீதும், இடத்தின் மீதும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களின் மீதும், வரிகள் விதிக்கப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கபட்ட வரிகளைக் கொண்டு தான், அரசு சிறந்த நிர்வாகத்தையும், சிறந்த சேவையினையும் மக்களுக்கு வழங்குகிறது. உதாரணமாக 1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி வருமானத்துக்கு வரி வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தியவர் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன். ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்களிடம் மட்டுமே வரியானது வசுலிக்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே வருமான வரியாக 30 லட்ச ரூபாய் வசூலாகியது. இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் (2017-2018) ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொர் ஆண்டும் வருமானவரி இலக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசுக்கு மிகப்பெரிய வருமானம் வருமான வரி தான்.

இந்த வரியை மிகப்பெரிய நிலையான திட்டங்கள் நிறைவேற்றப் பயன்படுத்துகிறது அரசு. குறிப்பாக, ஆற்றுப்பாலங்கள், சாலைகள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆக வரி செலுத்துவதின் நோக்கம் என்னவென்றால் நாடும், நாட்டு மக்கள் அனைவரும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகவே வரி செலுத்தப்பட வேண்டும். இதுநடைமுறையில் உள்ளதா? இல்லையா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இன்று பலவிதமான வரிகளை நாம் செலுத்தியும் நாடும் நாட்டு மக்களும் சந்தேசமாக இருக்கின்றனரா? நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட தருணத்தில் நாம் நமது அரசாங்கத்திற்கு நாம் வரி செலுத்துவது சரியா? தவறா? முறையா? முறையற்றதா?

உதாரணமாக நாம் செலுத்தும் வரிகள்…
வருமான வரி INCOME TAX: இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். வருமான வரம்பை பொறுத்து வருமான வரி மறுபடும்.
நிறுவன வரி CORPORATE TAX: இது ஒரு நிறுவனத்தின் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
கலால் வரி EXCISE TAX : இது பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஆகும் இவை நேரடியாக பொருட்களின் மீது விதிக்கப்படாமல் உற்பத்தியாளர் மற்றும் வணிகர்கள் மீது விதிக்கப் படுகிறது.
சொத்து வரி PROPERTY TAX: உள்ளூராட்சி, நகராட்சி முதலியன அதன் எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் மேல் வாங்கும் வரி. இப்படி சேகரிக்கப்பட்ட வரிகளைக் கொண்டு தான், ஒரு நகராட்சி அதனுடைய சாலை, குடிநீர் மற்றும் பள்ளிகூட வசதிகளை ஏற்படுத்தி கொள்ளுகின்றன.
விற்பனை வரி SALES TAX: வணிக விற்பனையாளர்களால் அரசுக்கு செலுத்தப்படும் வரி ஆகும். உண்மையில் இந்த வரி, நுகர்வோர் மீது விதிக்கப்படும் மறைமுக வரி. பொருள் வாங்கும் நுகர்வோருக்கு இந்த வரி பற்றி தெரிவதற்கு வாய்பில்லை. பின்னர், பொருளை விற்ற விற்பனையாளர், தான் விற்ற தொகையிலிருந்து கிடைத்த வரிப் பணத்தை எடுத்து அரசுக்கு செலுத்துகிறார்.
சேவை வரி SERVICE TAX: அரசும், உற்பத்தி நிறுவனங்களும் அவை வழங்கிய சேவையின் அடிப்படையில் நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
ஏற்றுமதி வரி EXPORT TAX: உள் நாட்டில் உற்பத்தியான பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப்படும் வரி ஆகும். இவ்வரியை ஏற்றுமதி நிறுவனங்களால் செலுத்தப்படுகிறது.
இறக்குமதி வரி அல்லது சுங்க வரி IMPORT TAX: வெளிநாட்டில் உற்பத்தியான பொருளை நம் நாட்டில் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப்படும் வரி ஆகும். இவ்வரியை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் செலுத்தப் படுகிறது.
மதிப்பு கூட்டபட்ட வரி VALUE ADDED TAX – VAT: பொருள் விற்பனைக்கு வரும் போது, அதன்மீது செலுத்தப்படும் வரி. இதை நுகர்வோர் மீது விதிக்கப்படுகிறது. இத்தகைய வரி முன்பு மேலை நாடுகளில் மட்டும் தான் இருந்தது. தற்பொழுது இந்தியாவிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு வரி AD VALOREM TAX: ஒருவர் தான் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை பொறுத்து விதிக்கப்படும் வரி. Ad valorem எனப்படும் இவ்வார்த்தை (Latin) இலத்தீன் மொழியிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் According to Value என ஆங்கிலத்தில் பொருள் கொள்ளப்படும். இதனை நாம் சொத்து மதிப்பு வரி எனலாம். இத்தகைய வரி தான் ஒரு நகராட்சிக்கு அல்லது நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறது.
வருமான குவிப்பு வரி ACCUMULATED EARNINGS TAX: ஒரு நிறுவனம் தன் வருமானத்திற்கு அதிகமான வருமானத்தை ஈட்டுவதாக கொள்வோம். அந்த வருமானத்தை அந்நிறுவனம் தன்னிடத்தே வைத்திருக்க முயலுமானால் அதற்கு அரசு வரி விதிக்கிறது. இதனை வருமான குவிப்பு வரி எனலாம்.
சுமை வரி DUTY வரி: அரசு சில பொருட்களின் மீதும், வியாபார பரிவர்த்தனைகளின் போதும், வழங்கும் சேவையினை பொறுத்தும் சுமத்தும் வரி தான் இந்த டூட்டி ( Duty) எனும் சுமை வரி.
மறைமுக வரி HIDDEN TAXES: இந்த மறைமுக வரிகள் நுகர்வோரின் அறிவுக்கு தெரியாமலே, அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய வரிகள், நுகர்வோருக்கு எதனால் விதிக்கப்படுகிறது என்பதை ஒருபோதும் தெரிவிக்கப்படுவதில்லை.
வெகுமதி வரி GIFT TAX: ஒரு அரசு, தன் குடிமகன் ஒருவர், மற்றொருவருக்கு விலை உயர்ந்த பொருளை வெகுமதியாக கொடுத்தால் அதன் பேரில் ஒரு வரி விதிக்கிறது. அது தான் இந்த வெகுமதி வரி. இந்த வரியை வெகுமதி வழங்குபவர் தான் கொடுக்க வேண்டும். அத்தோடு அல்லாமல், பரிசு பெற்றவரும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இந்த வரி, சில சமயங்களில் சாதனை புரிந்த இந்தியருக்கு வழங்கப்பட்ட பரிசின் போது விலக்கப்படுகிறது. உதாரணமாக டெண்டுல்கர்க்கு கிடைத்த பெர்ராரி (Ferrari) கார் மீது 2. ரவி சாஸ்திரி கிடைத்த அவ்டி (Audi) கார் மீது வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
இவ்வளவு வரியையும் அரசாங்கத்திற்கு செலுத்திவிட்டு இன்று அரசாங்கத்தால் ஒரு நல்ல மருத்துவமனை, நல்ல பள்ளிக்கூடங்கள், நல்ல பேருந்துகள், நல்ல சாலைகள், நல்ல உணவுகள் என எதையுமே கொடுக்க முடியவில்லை. அப்படியானால் நாம் செலுத்தும் வரிகள் எங்கு செல்கின்றது? இப்படிப்பட்ட இத்தருணத்தில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது முறையா? முறையற்றதா? என்று சிந்திப்போம்.

இயேசு சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று கூறுகின்றார். அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன?
பிரியமானவர்களே உங்களிடம் பணம் இருக்கின்றதா? ஒரு நிமிடம் அதை எடுத்துப்பாருங்கள். அதிலே பணத்தின் நடுவில் கவர்னர் (ஆளுனர்) கையெழுத்திற்கு மேலே ஒரு வசனம் எழுதியிருக்கும் சற்று யாராவது அதை படியுங்கள். I Promise to pay the bearer the sum of … one hundred rupees, அதைப்போலவே அமெரிக்க நாட்டுப்பணத்தில் this note is a leagal tender for all debts public and private அப்படியென்றால் அதற்கு அர்த்தம் என்ன? நீங்கள் கையில் வைத்திருக்கும் பணம் உங்களுடையதா? நிச்சயம் இந்த பணம் உங்களுடையது கிடையாது. இது அரசாங்கத்திற்கு சொந்தமான பணம். இந்த பணம் செல்லுமா அல்லது செல்லாதா, மதிப்புள்ளதா அல்லது மதிப்பற்றதா என அரசாங்கம் தான் தீர்மானிக்கும். கடந்த வருடம் அதைத்தான் நாம் பார்த்தோம். கொஞ்ச நாளுக்கு மட்டும் இந்த பணத்திற்கு மதிப்பு இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் வேறொரு அரசாங்கம் வந்தால் பணம் அதன் மதிப்பை இழந்து விடும். ஆக பணம் என்பது வெறும் காகிதம். அதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். இப்படி மாறிக்கொண்டிருக்கும் பணத்தை கடவுளாக பாவிப்பதும், அதற்கு ஆரதனை செய்வதும் தவறு என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த உலகில் சீசருக்கு என்று இருப்பது எது? (அரசாங்கத்திற்கு என்று இருப்பது எது?)
முதலில் நாணயம் சீசருடையது கிடையாது! மண்ணில் புதைந்து கிடக்கும் வெள்ளியும் பொன்னும் தான் நாணயமாக மாற்றப்படுகிறது. அப்படியானால் நாணயம் சீசருக்கு சொந்தமில்லை. அது மண்ணுக்குச் சொந்தம். பணம் என்ற காகிதமானால் அது மரத்திற்கு சொந்தம்.

இரண்டாவதாக நாணயத்தில் இருக்கும் அவரது உருவம். இந்த உருவமும் அவருக்குச் சொந்தம் கிடையாது. காரணம் உருவத்தை கொடுத்தவர் இறைவன். மேலும் நாம் அனைவரும் கடவுளின் உருவைக் கொண்டுள்ளோம் என ஆதியாகமம் கூறுகின்றது. அப்படியானல் நாணயத்தில் இருக்கும் அவரது உருவமும் அவருக்கு சொந்தமில்லை.

ஆக இந்த உலகில் சீசருக்கு என்று ஏதாவது உண்டா. இந்த உலகில் சீசருக்கு என்று எதுவும் இல்லை. அரசாங்கத்திற்கு என்றும் எதுவுமில்லை. ஏன் உங்களுக்கும் எனக்கும் என்று இவ்வுலகத்தில் எதுவுமே இல்லை. இவ்வுலகில் உள்ள அனைத்துமே கடவுளுக்கு சொந்தம். அனைத்தையும் படைத்தவர் அவரே. இதைத்தான் தி.பணி 7:49 - ல் “கடவுள் விண்ணுலகம் எனது அரியனை மண்ணுலகம் எனது கால்மனை” என்கின்றார் இதைத்தான் இயேசு யூதர்களுக்கு புரியவைக்க விரும்புகின்றார். மனிதர்கள் யாருக்கும் யாருக்கும் அடிமைகள் கிடையாது. குறிப்பாக இஸ்ராயேல் மக்களை கடவுள் தாமே தன்னுடைய மக்களாக தேர்ந்துகொள்கின்றார். தன்னுடைய மக்கள் நல்வழியில் நடக்க கடவுள் தாமே கட்டளைகளை கொடுக்கின்றார். உதாரணமாக வி.ப 20:3-4 -ல் “என்னைத்தவிர வேறுதெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ, ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்கு பணிவிடை புரியவோ வேண்டாம்” என்கின்றார். ஆனால் இந்த இஸ்ராயேல் மக்களோ அரசரை ஏற்படுத்தி அரசாங்கத்தை உருவாக்கி நாங்கள் அரசருக்கு அடிமைகள், அரசருக்கு பணிவிடை புரிவோம், அரசரை மட்டுமே ஆராதிப்போம் என கடவுளை மறந்து வாழ்கின்றனர்.

ஆக இந்த பரிசேயர்களும், யூதர்களும் கடவுளின் கட்டளைகளை மீறி பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பணத்தில் சீசரின் உருவத்தை பொரித்து அவரை வணங்கவும் செய்கின்றனர். இயேசு இவர்களின் இந்த தவறாக செயல்களை சுட்டிக்காட்டி நீங்கள் கடவுளின் பிள்ளைகள், தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் யாருக்கும் அடிமைகள் கிடையாது. மாறாக கடவுளுக்கு மட்டும் பணிந்திருங்கள் என்கின்றார்.

இதையேத்தான் இயேசு இன்று நமக்கும் கூறுகின்றார். பணம் கடவுளாகி விட்டதால் கடவுள் நமது ஒவ்வோர் உள்ளத்தையும், இல்லத்தையும் விட்டு வெகுதுரத்தில் இருக்கின்றார். அரசாங்கத்திற்கு உகந்த வரியை மாதம் தவறாமல் செலுத்தும் நாம் கடவுளுக்கு உரியதை எந்தெந்த வழிகளில் நாம் செலுத்துகின்றோம். அன்று இஸ்ராயேல் மக்களுக்கு கடவுள் சொன்னது போல இன்றும் முதல் வாசகம் வழியாக கடவுள் நம்மைப் பார்த்து “என்னையின்றி உங்களுக்கு வேறு கடவுள்கள் இல்லை. நானே ஆண்டவர் என நமக்கு அறிவுருத்துகின்றார். அதைப்போலவே தூய பவுல் வழியாக இன்றைய இரண்டவாது வாசகத்தில் நாம் அனைவரும் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படும் முன்பே “கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்” என அறிவுறுத்துகின்றார். எனவே ஒரு நிமிடம் நம்மையே நாம் சுயபரிசோதனை செய்வோமா?

உதாரணமாக இன்று நாம் தண்ணீருக்கு வரி, வீட்டிற்கு வரி, மின்சாரத்திற்கு வரி, வாங்கும் பொருட்களுக்கு வரி, ஏன் உண்ணும் உணவுப் பொருட்களுக்கு கூட வரி, வாகனத்திற்கு வரி, எரிபொருளுக்கு வரி, சாலைக்கு வரி, இப்படி பல வரிகளை நாம் மாதந்தோறும் மறக்காமல் செலுத்தி வருகின்றோம். உதாரணமாக ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் வரி செலுத்துகிறோம் என வைத்துக் கொள்வோம். அதே ஒரு வருடத்தில் எத்தனை முறை நாம் திருப்பலியில் பங்கெடுக்கின்றோம், எத்தனை முறை நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கின்றோம், ஆன்மீக கரியங்களில் நாம் பங்கெடுக்கின்றோம். இந்தவாரம் ஆலயம் வந்தால் மீண்டும் அடுத்த வரம் தான் கடவுளைத்தேடி வருகின்றோம். ஒருசிலர் அப்படியும் வருவதில்லை. வரி செலுத்தவில்லை என்றால் நம்முடைய உரிமைகள் பரிக்கப்படும் என அரசாங்கம் தெரிவிப்பது போல கடவுளும் கடவுளுக்குரியதை செலுத்த மறந்தால் உன் வாழ்வை எடுத்துக் கொள்வேன் என்று சொன்னால் நம்முடைய நிலமை என்னவாகும்? அரசாங்கத்திற்கு 500 சதவீகிதம் ஆனால் நம்மை படைத்த ஆண்டவனுக்கோ 5 சதவிகிதம் கூட கிடையாதா? சிந்திப்போம்! நம் வாழ்வில் பணம் நமக்கு நிச்சயமாகத் தேவை. அது இல்லாமல் குடும்பத்தையோ, வேறு எந்த நிறுவனத்தையோ நடத்த முடியாது. ஆனாலும் பணம் மட்டுமே நம் வாழ்க்கைக்கு போதாது. இன்று நாம் யார் பக்கம்? நான் யாரைச் சார்ந்து இருக்கின்றேன்? கடவுளையா? செல்வத்தையா? பணமும் மகிழ்ச்சியும் பரமப் பகைவர்கள். ஒன்று இருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை என்கிறது ஆஸ்திரேலியப் பழமொழி.