இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு

அழைக்கப்பட்டவர்கள் அறிவாளிகளா? சோம்பேரிகளா?

ஏசாயா 25: 6-10
பிலிப்பியர் 4:12-14, 19-20
மத்தேயு 22:13-14

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?

கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் அறிவாளிகளா? அல்லது சோம்பேரிகளா?

என்ற சிந்தனையில் இவ்வாரம் தியானிக்க இருக்கின்றோம். இன்று ஆலயம் வந்துள்ள நாம் அனைவரும் அறிவாளிகளா? அல்லது சோம்பேரிகளா?

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி மனிதன் இருந்தானாம். எந்த வேலையும் செய்யாமல் தின்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள். மருத்துவமனைக்கு போகக்கூட முடியாமல் ஒரு மருத்துவரையே வீட்டுக்கு வரவழைத்தானாம். அந்த மருத்துவர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகள் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் இதை சாப்பிடு. மாத்திரைகள் தீர்ந்ததும் வியாதியும் பறந்துவிடும் என்று சொன்னார். சோம்பேறி வீட்டுக்கு வந்து எப்போது வேர்க்குமென்று வியர்வைக்காக காத்திருந்தானாம். அப்போது அவன் மனைவி கூறினாள் ’நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாத்தான் வேர்க்கும்’ என்று. உடனே அவன் தன் துணிகளைத் துவைப்பது, தோட்ட வேலை செய்வது, கடைக்குப் போவது, நிலத்தில் வேலை செய்வது என உழைக்க ஆரம்பித்தானாம். ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் மாத்திரைகள் சாப்பிடவும் மறக்கவில்லை. கொஞ்ச நாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான். ஆனால் மாத்திரைகள் பாதிதான் தீர்ந்திருந்தது. மீதியை மருத்துவரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம் ’எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது’ என்று. அதற்கு அவர் ’உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குணமடைந்து விட்டாய். நான் கொடுத்தது மருந்தேயில்லை. வெறும் துளசி,வெல்லம் கலந்த மிட்டாய்’ என்றாராம். அவனும் நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.

பிரியமானவர்களே கடவுள் தகுதியுள்ளவர்களை அழைப்பது கிடையாது மாறக தகுதியற்றவர்களை அழைத்து தகுதியுள்ளவராக மாற்றுகின்றார். 1 கொரி 1:27 –ல் “கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்”. இன்று நம்முடைய விவிலியத்தில் வரும் பல மனிதர்கள், ஏன் நம் திருச்சபையில் இருக்கும் பல புனிதர்களின் வாழ்க்கையைப் பார்த்தோமானால் கடவுளின் அழைப்பிற்கு, முன்பு வெறும் சாதாரண மனிதர்கள் தான் ஆனால் கடவுளின் அழைப்பிற்கு பிறகு இவர்கள் அனைவரும் அறிவாளிகளாகவும், ஆசீர்வாதத்தின் கருவிகளாகவும் மாறுகின்றனர். இதற்கு காரணம் முதலில் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்தது, இரண்டாவதாக சோம்பலை நீக்கி கடினமாக உழைத்தது. இன்று நாமும் சோம்பலை நீக்கி கடவுளின் வார்த்தையைக் கேட்டு கடினமாக உழைக்கும்போது நாமும் அறிவாளிகள் தான் புனிதர்கள் தான். இதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

உதாரணமாக இன்றைய நற்செய்திப் பகுதியானது இரண்டு உவமைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. முதலில் திருமண உவமை. இரண்டாவதாக திருமண ஆடை பற்றிய உவமை. இந்த நற்செய்திப் பகுதியை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் தங்களது நற்செய்தியிலே குறிப்பிடுகின்றனர். குறிப்பாக திருமண உவமை இரண்டு நற்செய்திகளிலும் காணப்படுகிறது. ஆனால் இந்த திருமண ஆடை உவமை மத்தேயு நற்செய்திக்கு மட்டுமே உரித்தானது. எனவே இன்று திருமண ஆடை பற்றிய சிந்தனையில் நம்முடைய விசுவாசத்தை திடப்படுத்துவோமா?

அன்பிற்க்குரியவர்களே நான் இறையியல் படிக்கும் காலத்தில் என்னை அதிகமாக சிந்தித்த வைத்த நற்செய்தி பகுதி இதுவேயாகும். இந்த நற்செய்தியிலே அரசர் ஒருவர் தன்னுடைய மகனுக்கு திருமண ஏற்பாடு செய்திருக்கின்றார். ஆனால் அழைக்கப்பட்டவர்கள் எவரும் திருமணத்திற்கு வரவில்லை. எனவே அரசர் தாமே தன்னுடைய பணியாளர்களை அழைத்து திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது; அழைக்கப்பட்டவர்களோ தகுதியற்று போனார்கள். எனவே நீங்கள் சென்று சாலையோரங்களில் கானும் ஏழைகள், நல்லோர், தீயோர், என அனைவரையும் அழைத்து வாருங்கள் என்கின்றார். பணியாளர்களும் சென்று அரசர் சொன்னபடி அனைவரையும் அழைத்து வருகின்றனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. தனது விருந்தினர்களை பார்வையிட அரசர் திருமண மண்டபத்திற்கு வருகின்றார். மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன் அரசருக்கு மிக்க மகிழ்ச்சி, ஆனால் சற்று கவலை. காரணம் இந்த விருந்தினர் கூட்டத்தில் அனைவரும் திருமண ஆடை அணிந்து இருக்க ஒரே ஒரு மனிதார் மட்டும் திருமண ஆடை அணியாமல் அமர்ந்திருக்கின்றான். எனவே அரசர் தாமே அவனிடம் சென்று “தோழா திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?” என்று கேட்ட போது “அவன் வாயடைத்து நிற்கின்றான்”. உடனே அரசர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து இவனுடைய கைகளையும், கால்களையும், கட்டி புறம்பே தள்ளுங்கள், அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என மிகப்பெரிய தண்டனையைக் நிறைவேற்ற கட்டளையிடுகின்றார்.
அரசர் செய்தது சரியா தவறா?

ஏன் இவ்வளவு பெரிய தண்டனையை அரசர் அவனுக்கு கொடுக்க வேண்டும்?

அரசருக்கு பிடிக்கவில்லையென்றால் அவனை மண்டபத்தை விட்டு வெளியே அனுப்பியிருக்கலாம் ஆனால் அவனுடைய கைகளையும், கால்களையும், கட்டி புறம்பே தள்ளுங்கள், அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என கூற காரணம் என்ன?


இன்று நம்முடைய சிந்தனையை இந்த கேள்வியில் இருந்து ஆரம்பிப்போம்.

பிரியமானவர்களே யூதர்களின் திருமண சடங்குகளை சற்று உற்று நோக்கினால் நமக்கு பல உண்மைகள் புலப்படும். திருமண நிகழ்வு என்பது யூதர்களுக்கு மிக முக்கியமான நிகழ்வு. ஒரு சில இடங்களில் திருமண நிகழ்வு ஒரு வாரம் முழுவதும் நடைபெறும். அதிலும் அரசர் வீட்டு திருமணம் என்றால் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டும் சற்று சிந்தித்து பார்ப்போம்.

அன்பிற்க்குரியவர்களே விவிலிய அறிஞர்கள் மூன்று வித கருத்துக்களை இங்கு பட்டியலிடுகின்றனர்.
01. திருமணம் ஒற்றுமையின் அடையாளம்.
முதலில் திருமணத்திற்கு என்று ஒருசில பிரத்தியோக ஆடைகளை யூதர்கள் வரையருத்து இருந்தனர். சமுதாயத்திலே எவ்வளவு பெரியவராக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும் திருமண ஆடைகள் அணிகின்ற போது அனைவரும் சமம் என்ற கருத்தை வழியுறுத்துகின்றனர். (நமது ஊர் பள்ளி சீருடைகள் போல) காரணம் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஏழைகள், நல்லவர்கள், கெட்டவர்கள். இவர்களிடத்திலே எந்த வித பாகுபாடும் இருக்க கூடாது. யாரும் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ கிடையாது. மாறக அரசர் முன்னால் அனைவரும் சமம் என்பதை இந்த திருமண ஆடை வழியுறுத்துகிறது.

02. அரசரின் அன்பு பரிசு
இரண்டாவதாக திருமண விருந்துக்கு வருபவர்கள் உயர்ந்த தரமுள்ள ஆடைகளை அணிந்து வருவது வழக்கம். அப்படியிருக்க இங்கு அரசர் வீட்டு திருமணத்தில் அழைக்கப்பட்டவர்களோ வரவில்லை. அரசரும் பல முறை தனது பணியாளர்களை அனுப்பி மீண்டும் மீண்டும் அழைக்கின்றார். ஆனால் அழைக்கப்பட்ட அனைவருமே அரசரின் அழைப்பை புறக்கணித்துவிட்டனர். எனவே அரசர் வீதியில் இருந்தவர்களை அழைக்கின்றார். வீதியில் இருந்தவர்கள் யாரென்றால் ஏழைகள், அநாதைகள், கைபெண்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் இவர்கள் தான் அரசரின் பேச்சைக் கேட்டு திருமணத்திற்கு வந்திருக்கின்றனர். இந்த வீதியில் இருந்தவர்களுக்கு நிச்சயம் அரசர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் அளவிற்கு திருமண ஆடைகள் இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை. எனவே அரசர் தாமே முன்வந்து திருமணத்திற்கு வந்தவர்களை நல்ல முறையில் கவனித்து அனுப்ப ஆசைப்பட்டு தனது பணியாளர்களிடம் வந்திருக்கும் அனைவரும் உயரிய தரமான திருமண ஆடைகள் வழங்குமாறும், அவர்களுக்கு எந்தவித குறையும் வந்துவிடக்கூடாது என கட்டளையிடுகின்றார். அவ்வண்ணமே திருமணத்திற்கு வந்த அனைவரும் தரமான ஆடைகள் உடுத்தி மணப்பையனுக்காகவும், மணப்பெண்ணுக்காகவும் அனைவரும் காத்திருக்கின்றனர். இவ்வாறு திருமணத்திற்கு வருகை தந்த அனைவரும் அரசரின் அன்பு பரிசை ஏற்றுக்கொள்கின்றனர்.

03. அரசரின் எளிய உள்ளம்
வழக்கமாக வந்தோரை வரவேற்பது என்பது பண்டையகால வழக்க முறை. ஏன் நம்முடைய தமிழ் சமூதாயத்திலும் வந்தோரை வரவேற்பது முக்கியமான நிகழ்வு. இங்கு அரசர் வீட்டு திருமணம் நிச்சயம் வந்தோரை வரவேற்ப்பதற்கு பணியாளர்களை நிச்சயம் நியமித்து இருப்பார். ஆனால் இந்த அரசர் மிகவும் கருணையுள்ளம் படைத்தவர், எனவே, தான் அரசர், என்ற பெருமிதம் கொள்ளாமல், அரசர் என்ற ஆணவத்தில் இல்லாமல் தானே அரச இருக்கையில் இருந்து இறங்கி திருமண மண்டபத்திற்கு வந்து அனைவரையும் வரவேற்கின்றார், அனைவரோடும் உரையாடுகின்றார், அவர்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திருக்கிறாதா என்று பார்வையிடுகின்றார்.

இந்த தருணத்ததில் தான் அங்கு திருமண ஆடையில்லாத மனிதரைப் பார்க்கின்றார். மிகவும் மணமுடைந்தவராய் அவரது அருகில் சென்று அரசர் அவரிடம் சென்று “தோழா திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?” என மிகவும் பாசத்தோடும், அக்கரையோடும் கேட்கின்றார். ஆனால் அவனோ வாயடைத்து நிற்க்கின்றான். காரணம் அவன் மிகப்பெரிய சேம்பேரி… முதலில் திருமண ஆடை அணிய விருப்பமில்லாமல் சேம்பேரித்தனமாக இருக்கின்றான். இரண்டாவதாக அரசர் அவனை தன்னுடைய தோழனாகவும், நண்பனாகவும் பாவித்து ஏன் திருமண ஆடை அணியவில்லை என்று கேட்கின்றார். அவனோ அதற்கு கூட பதில் சொல்ல முடியாத சேம்பேரியாக இருக்கின்றான்.

இப்படியாக இவன் இங்கு மூன்று தவறுகளை செய்கின்றான்.
அரசர் அனைவரும் சமம், எந்தவித ஏற்றத்தாழ்வும் இங்கு இருக்க கூடாது என நினைக்கின்றார் ஆனால் இவனோ திருமண ஆடை அணியாமல் ஒருவித பாகுபாட்டிற்கு காரணமாக அமைகின்றான்.

இரண்டாவதாக அரசர் தரும் அன்பு பரிசை வேண்டாம் என ஓதுக்குகின்றான்.
மூன்றாவதாக அரசரின் எளிய உள்ளத்தையும், அவரது நட்பையும் ஏற்றுக்கெள்ள மறுக்கின்றான்.
இக்காரணத்தினால் அரசரின் கோபத்திற்கு ஆளாகின்றான்.
அரசர் ஏன் அவனது கைகளையும், கால்களையும், கட்டி புறம்பே தள்ளுங்கள், அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என கட்டளையிடுகின்றார்?

இங்கு அழைக்கப்பட்வர்கள் வராத காரணத்தில் அரசர் தனது பணியாளர்களை விட்டு மீண்டும் மீண்டும் அழைக்கின்றார். அழைப்பு பெற்றவர்களோ அரசர் கூறியது எதையும் பொருட்படுத்தாமல் ஒருவர் வயலுக்குச் செல்கின்றார்… மற்றவரோ கடைக்கு செல்கின்றார்… மற்றவர்களே அரசனின் பணியாளர்களை பிடித்து இழிவுபடுத்தி, கொலை செய்கின்றனர்… அழைக்கப்பட்டவர்கள் செய்த செயலுக்காக அழைக்கப்பட்டவர்களையும் அவர்களின் நகரத்தையும் அரசர் தீக்கிரையாக்குகின்றார். அப்படி தீக்கிரையாக்கும் போது அந்த நகரம் முழுவதும் அழுகையும், அங்கலாய்ப்பும் நிறைந்து இருக்கின்றது. அப்படிப்பட்ட இடத்தில் இவனது கைகளையும், கால்களையும், கட்டி தள்ளுங்கள் இவனுக்கும் அழுகையும் அங்கலாய்ப்பும் அங்கு இருக்கும். இவன் திருமணத்திற்கு வந்திருந்தாலும் வராத மனிதர் போல கருதப்படுவான் என்கின்றார்.

பிரியமானவர்களே இங்கு
அரசர் என்பவர் நம்முடைய கடவுளைக் குறிக்கும்
. திருமண விருந்து என்பது இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய இரவு உணவைக் குறிக்கும்.
அழைப்பு பெற்றவர்கள் கிறித்தவர்களாகிய நாம் தான்.
அழைப்பிதல் என்பது திருவருட்சாதனங்கள்.

அழைக்கப்பட்ட நாம் அனைவரும் எப்படிப்பட்ட முறையில் நம்முடைய திருவருட்சாதனங்களில் பங்கெடுக்கின்றோம். அரசர் எப்படி தன்னுடைய பணியாளர்களை விட்டு அழைக்கின்றாரோ அதைப்போலவே கடவுளும் தன்னுடைய பணியாளர்களை வைத்து இறைமக்களாகிய நம் ஒவ்வெருவரையும் அழைக்கின்றார்.

உதாரணமாக ஞாயிறு கடன் திருப்பலியில் குடும்பத்தோடு வந்து பங்கெடுங்கள் என பங்குத்தந்தை அழைக்கின்றார். பங்கு மக்களாகிய நாம் எத்தனை பேர் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றோம். நண்பர்களின் திருமண வீட்டிற்கு செல்வதற்கு நாம் குடும்பத்துடன் போகின்றோம், திரைப்படங்களுக்கு குடும்பத்துடன் போகின்றோம், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் போகின்றோம், வாகனத்தில் பயனிப்பதற்கு கூட குடும்பத்துடன் போகின்றோம் ஆனால் ஆலயம் வரும்போது எத்தனை பேர் குடும்பத்துடன் வந்திருக்கின்றோம். சற்று நம்மை சுற்றிப்பாருங்கள்.

இரண்டாவதாக ஒவ்வொரு முறை நற்கருணை வாங்கும் போதும் நல்ல பாவசங்கீர்தனம் செய்து நற்கருணை உட்கொள்ள வேண்டும் எனத் தெரிந்தாலும், பங்குத்தந்தையும் மீண்டும் மீண்டும் அழைப்புவிடுத்தாலும் நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றோம். இன்று ஆலயம் வந்துள்ள நாம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து இருக்கின்றோமா?

மூன்றாவதாக ஆலயத்திற்கு வரும்போது அலைபேசிகளை எடுத்துவர வேண்டாம், அப்படியே எடுத்து வந்தாலும் அது அனைத்து வைக்கப்பட வேண்டும் என எத்தனை முறை அறிவித்தாலும் நம்மில் எத்தனை பேர் கடைபிடிக்கின்றோம். ஒரு நிமிடம் உங்களது பைகளை சற்று உற்று நோக்குங்கள் எத்தனை பேருடைய அலைபேசி அனைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

பிரியமானவர்களே இப்படியே நாம் அடுக்கிக் கொண்டு போகலாம்… திருமண விருந்துக்கு அந்த மனிதன் அழைக்கப்பட்டாலும் சரியான தயாரிப்பு இல்லாமலும், அரசரின் பேச்சை பொருட்படுத்தாமலும் வந்த மனிதனை சோம்பேரி என்றும், அவனது கைகளையும், கால்களையும், கட்டி புறம்பே தள்ளுங்கள், அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என கட்டளையிடுகின்றார். இன்று நாமும் அழைக்கப்பட்டவர்கள் என்றால் நம்மில் எப்படிப்பட்ட தயாரிப்பு இருக்கின்றது. கடவுள் முன்பு நாம் சோம்பேரிகளா? அல்லது அறிவாளிகளா? சேம்பேரிகள் என்றால் நிச்சயம் நம்முடைய கைகளையும், கால்களையும், கட்டி புறம்பே தள்ளுங்கள், அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என கடவுள் கட்டளையிட தயாரக இருக்கின்றார்.

ஆனால் எவன் ஒருவன் கடவுளின் வார்த்தைக்கு செவிமடுத்து செயல்படுகின்றானோ அவனுக்கு மிகப்பெரிய விருந்தை கடவுள் தாமே ஏற்பாடு செய்திருக்கின்றார். இதையே நம்முடைய புனிதர்களும் சுவைத்து பார்த்து இருக்கின்றனர். புனிதர்கள் அனைவரும் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து செயல்பட்டதால் மிக்ப்பெரிய விருந்தை கடவுள் ஏற்பாடு செய்தார் என்பதை முதல் வாசகம் நமக்கு தெளிவு படுத்துகின்றது.

“படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.”

பிரியமானவர்களே நிச்சயம் கடவுளின் வார்த்தைக்கு செவிமடுத்து நடப்பது என்பது சற்று கடினமான காரியம் தான். ஆனால் நம்முடைய இந்த வலுவற்ற நிலையில் தான் கடவுள் நம் ஒவ்வொருவரையும் திடப்படுத்துகின்றார் என்பதை இன்றைய இரண்டாவது வாசகத்தில் தூய பவுல் தெளிவாக குறிப்பிடுகின்றார். “எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவுட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு”.

ஆம் பிரியமானவர்களே நமக்கு வலுவுட்டுகின்ற கடவுள் நமது கதவருகே நின்று நம்மை ஒவ்வொருநாளும் அழைத்துக் கொண்டிருக்கின்றார். அவரது குரலுக்கு செவிசாய்த்து அறிவாளிகளாக ஆசீர்வாதத்தின் கருவிகளாக மாறப்போகின்றோமா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்குபோல சோம்பேரியாக வாழப்போகின்றோமா? சிந்திப்போம்… செவிமடுப்போம்…