இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு

எனது சொல்லும்... எனது செயலும்...

எசேக்கியேல் 18:25-28
பிலிப்பியர் 2:1-11
மத்தேயு 21:21-32

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? மாதத்தின் முதல் நாளில் உங்கள் அனைவரையும் இயேசுவின் நாமத்தில் இன்றைய வழிபாட்டிற்கு வரவேற்கின்றேன். இன்று நாம் சொல்கின்ற சொல்லும், செய்கின்ற செயலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகிறதா? அல்லது முரண்பட்டு இருக்கின்றதா? என்ற சிந்தனையில் இம்மாதத்தின் முதல் நாளை நாம் தொடங்க இருக்கின்றோம்.

ஒரு முறை எங்களது நண்பரின் திருமணத்திற்கு நாங்கள் அனைவரும் செல்ல தீர்மானித்து இருந்தோம். காலை 10 மணிக்கு திருமணம் எனத் தெரிந்து அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒரு நண்பர் 11 மணி ஆகியும் வரவில்லை. அலைபேசியில் தொடர்புகொண்டு ‘என்ன நண்பா இன்னும் வரலையே?’ என்று கேட்டதற்கு இதோ இப்போதுதான் வீட்டில் இருந்து கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அசால்ட்டாக. மேலும் அவர் 10 மணி திருமணம், 11 மணிக்கு மேல்தான் நடக்கும் எனவே யாரும் அவசரப்பட வேண்டாம் என்றார். கடைசியாக 11.30 மணிக்கு திருமணத்திற்கு சென்றோம். அவர் சென்னது போலவே 11.30 ஆகியும் திருமணம் தொடங்கவில்லை. பிரியமானவர்களே இப்படித்தான் பல வேளைகளிலே நம்முடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. 10 மணிக்கு வரவேண்டிய பேருந்து சரியான நேரத்திற்கு வருவதில்லை. 11 மணிக்கு ஆரம்பிக்கும் கூட்டம் சரியான நேரத்திற்கு ஆரம்பிப்பதில்லை. ஏன் கூட்டங்கள், திருப்பலிகள் சரியான நேரத்திற்கு ஆரம்பித்தாலும் நாம் சரியான நேரத்திற்கு செல்வதில்லை. உதாரணமாக 8 மணிக்கு திருப்பலி என்றால் 8.15, 8.30 க்குத் தானே நாம் செல்கின்றோம். நாம் சொல்லும் சொல்லும், நாம் செய்யும் செயலும் நம்முடைய வாழ்க்கையில் முரண்பட்டு கிடக்கிறது.

நாம் கொடுத்த வாக்கை நாமே காப்பாற்றவில்லையென்றால் யார் தான் காப்பாற்றுவார்கள். நம்முடைய வாக்கை பிறர் மதிக்க வேண்டும் என்று நாம் கருதுவதுபோல் நம் வாக்கை முதலில் நாம் மதிக்க வேண்டும். அப்பொழுதுதானே பிறர் நம்மை மதிப்பார்கள். அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று பிறர் நம்மை நம்புவார்கள். நாம் வாக்கு தரும் போதே அதை நம்மால் நிறைவேற்ற இயலுமா என்பதை ஒருவிநாடி நினைத்துவிட்டு வாக்குக்கொடுத்தால் அது வெற்றியாக அமையும். சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்கவேண்டும். இதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

பிரியமானவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஓர் உவமையை விளக்குகின்றார். அந்த தந்தைக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனைப் பார்த்து ‘மகனே இன்று நீ திராட்சை தோட்டத்திற்கு சென்று வேலை செய்’ என்கிறார். ஆனால் அந்த மகனோ ‘நான் போக விரும்பவில்லை’ என்கிறார் ஆனால் பிறகு தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு திராட்சை தோட்டத்திற்கு சென்று வேலை செய்தார். அதைப்போலவே தன்னுடைய இளைய மகனிடமும் சென்று ‘மகனே இன்று நீ திராட்சை தோட்டத்திற்கு சென்று வேலை செய்’ என்கிறார். ஆனால் அந்த மகனோ ‘நான் போகிறேன்’ என்கிறார். ஆனால் போகவில்லை. இந்த இருவரில் எவர் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியது? இரண்டாவதாக இயேசுவின் பதில் என்னவாக இருந்தது? உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?

பிரியமானவர்களே இன்றைய உலகில் ஒவ்வொரு பெற்றோர்களின் விருப்பம் என்னவாக இருக்கின்றது? ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளை தன்னுடைய சொல்லை தட்டமாட்டான், தன்னுடைய சொல்லுக்கு நிச்சயம் மதிப்பளிப்பான் என்று அனைவருமே நம்புகின்றனர். ஆனால் தன்னுடைய மகன் தன்னுடைய சொல் பேச்சை கேட்டவில்லையென்றால் அந்த தந்தையின், தாயின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும். தந்தையின் பேச்சை கேட்க்காமல் ஆயிரம் நல்ல செயல்கள் நீ செய்தாலும் அதனால் தந்தை மகிழ்ச்சி அடையப்பேவதில்லை. காரணம் நீ தந்தையின் பேச்சை மதிக்காத மகன் என்ற பட்டத்தை பெற்றுவிடுகின்றாய். அதே வேளையிலே தந்தை சொல்வதற்கெல்லாம் சரி சரி என தலையாட்டிவிட்டு எதுவுமே செய்யவில்லையென்றால் நீயும் தந்தையின் பேச்சை மதிக்காதவனாகின்றாய். இன்றைய நற்செய்தியிலே இரண்டு பிள்ளைகளும் தந்தையின் பேச்சை மதிக்கவில்லை. மூத்தமகனின் சொல் தவறாக இருக்கின்றது; ஆனால் அவனது செயல்பாடுகள் சரியாக இருக்கின்றது. ஆனால் இளைய மகனின் சொல் சரியாக இருக்கின்றது ஆனால் அவனது செயல்பாடுகள் சரியாக இல்லை. அதனால் தான் இயேசுவும் எந்த பதிலும் கூறவில்லை.

இன்று நாம் எப்படி? பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பவர்களா? அல்லது பெற்றோரின் பேச்சை ஊதாசினப்படுத்துபவர்களா?

இன்று பெற்றோரின் பேச்சை உதாசினப்படுத்துவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? முதலில் பெற்றோர்களின் சொல்லும் செயலும் முரண்பாடகத்தான் இருக்கின்றது. அதனால் பெற்றோர்கள் சரியான வழிகாட்டிகள் கிடையாது. ஒருமுறை அந்த ஊரில் இருந்த பெற்றோருக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். ஒவ்வொரு முறையும் அந்த தந்தை நல்லது எது கெட்டது எது என தினந்தோறும் கற்பித்து வந்தார். ஒருமுறை அந்த மகனுக்கு நண்பர்களுடன் சென்று தியேட்டரில் படம் பார்க்க ஆசை, எனவே ஒருநாள் தனது பெற்றோரிடம் வந்து தனது ஆவலை தெரிவித்தான். ஆனால் அவனது பெற்றோர்கள் அந்த படம் நல்ல படம் கிடையாதது… படிப்பை வைத்துக்கொண்டு படம் பார்ப்பது நல்லது கிடையாது… அதுவும் நண்பர்களுடன் சென்று பார்ப்பது நல்லது கிடையாது என மறுத்துவிட்டனர். ஆனால் அந்த மகன் தன்னுடைய நண்பர்களுடன் முடிவு செய்து ஒருநாள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடிவு செய்தான். நண்பர்கள் அனைவரும் தியேட்டரில் ஒரு வரிசையில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் களித்து அவர்களின் இருக்கைக்கு முன்னால் ஒரு தம்பதியினர் வந்து அமர்ந்தனர். அந்த மகனுக்கு அவர்களை பார்த்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் அங்கு அவனுடைய தந்தை யாரோ வேறொரு பெண்ணுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். கோவத்தில் தியேட்டரை விட்டு வெளியேறி மேலே இருந்த மாலுக்கு சென்றான் அங்கு அவனது தாய் வேறொரு ஆணுடன் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அந்த மகனுக்கு எது நல்லது எது கெட்டது என்ற குழப்பத்திலே வீடு வந்து சேர்ந்தான்.

இன்று பெற்றோர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு மத்தியில் எனது பிள்ளை எனது சொல்படி தான் நடக்க வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர். இதைத்தான் வள்ளுவர் அப்பொழுதே கூறினார் சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். ஒரு சொல்லை செல்வதற்கு முன்பாக சற்று யோசித்து சொல்ல வேண்டும். அதன் பிறகு தான் சொல்லிய வாக்கை காப்பாற்ற வேண்டிய கடமையும் நமக்கு இருக்கின்றது. நாம் சொல்கின்ற சொல்லும், செய்கின்ற செயலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கின்ற பட்சத்தில் நம்முடைய வாழ்க்கை நேர்மையானதாக இருக்கும். அது அடுத்தவர்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் முன்மாதிரியாக இருக்கும். அதனால் தான் தான் இன்றைய முதல் வாசகத்திலே எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக கடவுள் நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகின்றார். பங்கு மக்களே! கேளுங்கள் "கடவுளின் வழிகள் செம்மையானதாக இல்லை" என்று நீங்கள் சொல்கிறீர்கள். பங்கு மக்களே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நீங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்கின்றது ஒன்றாகவும் இருக்கின்றது. எனவே நீங்கள் செய்து வரும் தவறுகளில் இருந்து உங்களை திருத்தி கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் உங்களுடைய தண்டனை உங்கள் மேலே இருக்கும். ஆனால் உங்களது சொல்லையும், செயலையும் ஒன்றுபடுத்தி நேர்மையாக வாழும் போது நிச்சயம் நீங்களும் உங்களது, சந்ததியும் வாழும்.

இதற்கு உதாரணமாகத்தான் நற்செய்தியிலே இரண்டு மகன்களில் ஒரு மகன் தன்னுடைய தவற்றை உணர்ந்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றான். கடவுளுக்கும் பெற்றோருக்கும் உகந்த பிள்ளையாக மாறுகின்றான். இதைத்தான் மத்தேயு நற்செய்தி 7:21ல் இயேசு என்னை நோக்கி, “'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்”. மேலும் நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மாறாக நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். இன்று நம்முடைய சொல்லும் செயலும் ஒத்துப்போகும் போது நாம் நேர்மையாளராகவும், அறிவாளிகளாகவும் கடவுளால் போற்றப்படுவோம்.

இதற்கு உதாரணமாக இந்த மாதம் முழுவதும் நாம் பல புனிதர்களின் விழாக்களை கொண்டாட இருக்கின்றோம். உதாரணமாக இன்று குழந்தை இயேசுவின் புனித தெரேசா, நாளை தூய காவல் தூதர்கள், நான்காம் தேதி அசிசி நகர் புனித பிரான்சிஸ் இப்படி பல… மேலும் இம்மாதம் அன்னை மரியாளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம், ஜெபமாலை மாதம். இந்த புனிதர்களும், அன்னை மரியாளும் எதைச் சொன்னார்களோ அதைத்தான் தங்களது வாழ்வில் செய்து காட்டினார்கள். இதோ உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் எனச் சொல்லி கடவுளின் சொல்லுக்கு செவிமடுத்து தன்னுடைய செயல்படுகளை கடவுளுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டார் அன்னை மரியாள். “எனது ஆலயத்தை பழுதுபார்” என்ற ஒன்றை வாக்கியத்தை கேட்டு அசிசி நகரில் பழுதடைந்த ஆலயங்களை புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல் மனிதர் உள்ளங்களில் உள்ள ஆலயங்களை கட்டியெழுப்ப தனது கடைசி முச்சு வரை கடவுளின் சொல்லை செயல்படுத்தியவர் புனித அசிசி பிரான்சிஸ். இப்படியாக அனைத்து புனிதர்களின் சொல்லும் செயலும் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்தது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அழகாக கூறுகின்றார் பிரியமானவர்களே! “கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும், பரிவுள்ளமும், இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்” என்கின்றார். ஆக இந்த மாதம் முழுவதும் கடவுளின் மகிழ்ச்சியை நிறைவுபடுத்த நம்மை அழைக்கின்றார். நம் ஒவ்வொருவரையும் கடவுள் பல வழிகளில் பலநேரங்களில் நம்மை மகிழ்ச்சி படுத்துகின்றார். இம்மாதம் அவரை மகிழ்ச்சிபடுத்த வேண்டுமென்றால் நாம் அனைவரும் குறிப்பாக பங்கு மக்கள் அனைவரும் ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டவர்களாக வாழவேண்டும். இது சாத்தியபடவேண்டுமானால் நம்முடைய சொல்லும் செயலும் ஒத்துப்போக வேண்டும் . நம்முடைய சொல்லும் செயலும் ஒன்றுபட்டு செல்லும்போது நம் வாக்கின் மீது பிறருக்கு மரியாதை வரும். சொல்லையும் செயலையும் சம்பந்தப்படுத்தி மிக நெருக்கமாக வைத்திருப்பவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள். உதாரணமாக புனிதர்களின் அருட்சொற்கள், சாக்கரட்டீசின் தத்துவங்கள், மகாகவி பாரதியின் கவிதை வரிகள், விவேகானந்தரின் அமுதமொழிகள் இப்படி இன்னும் பல மனிதர்களின் சொற்கள் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் கொடுத்த வாக்கு சுத்தம்தான். மேலும் நம்முடைய ஊர்களில் நாம் கேள்விபட்டிருப்போம் ‘அவர் வாயில் விழாதே நீ மிகவும் கஷ்டப்படுவாய்’ இவ்வாறு சொல்வதற்கு காரணம் அவர் மிகவும் நல்ல மனிதர் கொடுத்த வாக்கு சுத்தம் தான். வாக்கு சுத்தம் உடையவர்கள் வாக்கு பழித்துவிடும் என்பதுதான் வரலாற்று உண்மை.

எனவே பிரியமானவர்களே இந்த மாதம் நாம் ஒரு முடிவு எப்போம் நம்மால் முடியாத விஷயத்தை முடியாது என்று முகத்துக்கு நேராக சொல்ல முடிவு எடுப்போம். அப்படி நேரடியாக சொல்லும் போது அந்த சூழ்நிலையில் நமக்கு மனக்கசப்பு ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை. இரண்டாவதாக இந்த உலகத்தில் முடியாது என்று ஒன்று நிச்சயம் இல்லை. முயன்றால், முயன்று முடிவு எடுத்தால் அனைத்துமே சாத்தியம். உதாரணமாக பாவசங்கீர்தானம் செய்யும்போது ‘முழுமனதுடன் இந்த பாவங்களை செய்வதில்லை’ என வாக்கு கொடுக்கின்றோம். ஆனால் வெளியே சென்ற பிறகு கொடுத்த வாக்கை காப்பாற்ற என்னென்ன காரியங்களை நாம் செய்கின்றேம் எனச் சிந்திப்போம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததை இறப்புக்குச் சமம் என்று கருதிய காலம் உண்டு. சொல்லும் செயலும் நம்முடைய இரண்டு கண்கள் போல. கடவுள் வார்த்தையால் உலகைப் படைத்தார், மோயீசன் தன்னுடைய செயலால் செங்கடலில் பாதையை ஏற்படுத்தினார். இப்படியாக நம்முடைய சொல்லையும் செயலையும் நெருக்கமாக வைத்திருந்தால் நம் வாக்கும் ஆசீர்வாதமாகும், நாம் செய்வதும் பழிக்கும்.