இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு

கனவுகள் உண்மையானால்…

1 அரசர்கள் 3:5, 7-12
உரோமையர் 8:28-30
மத்தேயு 13:44-52

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? எத்தனை பேர் இரவில் நன்றாக உறங்கினீர்கள்? எத்தனை பேர் நேற்று இரவு கனவு கண்டீர்கள்? பிரியமானவர்களே! கடந்த வாரம் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு இறப்பு நாளை அனுசரித்தோம். இந்த மனிதர் எப்பொழுதெல்லாம் இளைஞர்களை சந்தித்தாரோ அவர் சொன்ன ஒற்றை வாக்கியம் “இளைஞர்களே கனவு கானுங்கள்; “உறக்கத்தில் வருவதல்ல கனவு நம்மை உறங்க விடாமல் செய்வது தான் கனவு”. ஆக மனிதர்கள் கானும் கனவுகள் அவர்களின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் மிகவும் பயன்படுகிறது.

இதைத்தான் சொல்வார்கள் சுதந்திர போரட்ட நாட்களில் ஒவ்வொரு இந்தியனும் கனவு கண்டனர். அதாவது சுதந்திரக் கனவு. அந்த சுதந்திரக் கனவை நனவாக்க எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வையே கையளிக்க நேர்ந்தது. சுதந்திரத்திற்கான கனவு ஆழமாக இருந்ததால் அதிலே வெற்றியும் கண்டனர். ஆனால் இன்று யாரும் கனவு காண்பதில்லை. அப்படியே கனவுகள் வந்தாலும் அவை மக்களிடத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இன்று நாம் கானும் கனவுகள் நம்மில் எத்தகைய மாற்றங்களை நம்மிலும் நமது சமுதாயத்திலும் ஏற்படுத்துகிறது என்று இன்றைய வாசகங்கள் வழியாக நாம் சிந்திக்கலாமா?

கனவு காண்பது நல்லதா அல்லது கெட்டதா?
கனவு காண்பது மிகவும் நல்லது. அது மனிதனுக்கு உந்து சக்தியையும், சாதிக்க வேண்டும் என்ற ஆற்றலையும் தருகிறது. கனவுகளை இலட்சியங்களாக வைத்து இந்த உலகில் சாதித்தவர்கள் ஏராளம். உதாரணமாக இயற்பில் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடுக்கு அடிப்படைக் காரணம் அவர் கண்ட கனவேயாகும்

மனிதகுலத்தின் மாபெரும் சிந்தனையாளரும் இயற்பியல் அறிஞருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905ம் ஆண்டு சிறப்பு சார்பியல் கோட்பாட்டை முன்மொழிந்தார். இக்கோட்பாடு வெளி (Space) மற்றும் காலம் (Time) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியது. ஐன்ஸ்டீனுக்கு முன்புவரை வெளி மற்றும் காலம் ஆகிய இரண்டும் தனித்தனியானவை, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்றே கருதப்பட்டு வந்தன. ஆனால் 26 வயதேயான இளைஞர் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த 3 கண்டுபிடிப்புகள் இயற்பியல் உலகையே புரட்டிப்போட்டது.

நியூட்டனுடன் முடிந்து விட்டதாக கருதப்பட்ட இயற்பியலின் புரட்சி சகாப்தம் ஐன்ஸ்டீனினால் தலைகீழாகிப் போனது. அதாவது நியூட்டன் புவியிர்ப்பு விசையை கண்டுபிடித்தார். ஆனால் அது எப்படி நிகழ்கிறது என்று அவரால் விளக்கம் அளிக்க முடியவில்லை. ஆனால் ஐன்ஸ்டைன் அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினார். ஒரு பாத்திரத்திலே துணியை வைத்து உள் புரமாக கீழே தொங்காத அளவிற்கு இருக்கமாக இழுத்து கட்டிவிடுங்கள். இப்போது அந்த துணியின் மீது அதிக எடைகொண்ட ஒருபொருளை வைத்தால் அந்த பொருள் எந்த பக்கம் செல்கிறதோ அந்த பக்கம் ஈர்ப்பு விசை காரணமாக கீழே இரங்கும் என்று இதுவரை விளக்கப்படாத ஈர்ப்பு விசைக்கு புதிய வரையறையை ஐன்ஸ்டீன் அளித்தார். அத்தோடு ஒளியானது நேர்கோட்டில் தான் செல்லும் என்ற சிந்தனைக்கு மத்தியில் “ஒளி” கூட பெரும் நிறையால் ஏற்படும் கால-வெளி இவற்றின் வளைவில் ஒளியானது வளைந்து பயணமாகும் என்ற அதிரடி உண்மையை ஐன்ஸ்டீன் போட்டு உடைத்தார். ஒளியின் வேகம் குறித்து இயற்பியலில் நிலவிய கருத்து மோதல்களுக்கு காலம், வெளி, நிறை (Mass) இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று விளக்கினார். இப்படியாக விஞ்ஞான உலகின் மேதை என்று அழைக்கப்பட காரணம் தான் கண்ட கனவுகளே என்று இவரே கூறுகின்றார். கனவுகளை இலட்சியங்களாக மாற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

அதனால் தான் என்னவோ நமது முன்னோர்கள் “கற்பனை சக்தி (கனவுகள்) கற்ற அறிவை விட முக்கியமானது! ஏனெனில் கற்றது வரையறைக்கு உட்பட்டது! ஆனால் கற்பனை ஆற்றல், கனவுச்சிந்தனை பூகோளத்தையே சுற்றும் தன்மையுடையது”! இன்று ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. ஆக மனிதரின் கனவுகள் வரலாற்றை மட்டுமல்ல சரித்திரத்தையே மாற்றி எழுதியிருக்கிறது. ஆக கனவுகள் மக்களின் வாழ்வோடும் சமுதாய முன்றேத்தோடும் பின்னிப் பினைந்துள்ளது.

கனவுகள் என்றால் என்ன?
கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம். கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைதான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்களைப் பார்த்து ‘என்னாயிற்று உனக்கு?’ என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். அதாவது நாம் அயர்ந்து தூங்கும் போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் தான் வேலை செய்யும். அந்த நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வது தான் கனவுகள். அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.

இரண்டாவதாக நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போது கூட ஏதோ காட்சிகள் நம் முன் வருகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம். ஆக அனைவருக்குமே கனவுகள் வருகின்றன.

கனவுகள் வருவதற்கு என்ன காரணம்?
பகலிலே அல்லது உறங்குவதற்கு முன்பு, ஒருவரின் மனம் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறதோ, அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு, சிதறல்கள், அவர்களுக்கு கனவாக வருகிறது. உதாரணமாக, தெய்வ பக்தி அதிகம் உள்ளவர்களுக்கு, கடவுளின் உருவங்கள், கோவில், கோபுரங்கள் அதிகம் கனவில் வரும். ஆக கனவுகளை நாம் மூன்று விதமாக நாம் பார்க்கலாம். நல்ல கனவுகள், கெட்ட கனவுகள், குழப்பமான தெளிவில்லாத கனவுகள்.

நல்ல கனவுகள்
நமக்கு நல்லது நடப்பதைப் போன்ற நிகழ்வுகள் மற்றும் நாம் விரும்பும் நிகழ்வுகளை கனவுகளாக காணுவது நல்ல கனவுகள் ஆகும். விவிலியத்திலே இந்த நல்ல கனவு கண்டவர்கள் ஏராளம். உதாரணமாக பழைய ஏற்பாட்டில் தொடக்க நூல் 28:10-23 -ல் யாக்கோபு பெத்தேல் ஊரில் கண்ட கனவு விவரிக்கப்படுகிறது. யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, காரானை நோக்கிச் செல்கிறார். அங்கே இரவைக் களிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்குகின்றார். அப்போது அவர் கண்ட கனவு: நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, "உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே. நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன். உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறும். நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்" என்றார். யாக்கோபு தூக்கம் தெளிந்து, "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்" என்று அச்சமடைந்து, "இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்" என்றார். பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து, அந்த நகருக்குப் 'பெத்தேல்' என்று பெயரிட்டார்.

இதைப் போலவே இன்றைய முதல் வாசகத்திலே சாலமோன் அரசரும் நல்ல கனவு காண்கின்றார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், என் தந்தை தாவீதுக்கு நீர் பேரன்பு காட்டினீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதிவழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான். மேலும், உன் தந்தை தாவீதைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்" என்றார். அவர் கனவில் கண்ட படியே கடவுளும் அவரை ஆசீர்வாதங்களால் நிரப்பினார். ஆக நாம் கானும் நல்ல கனவுகள் நமக்கும் சமூதாயத்திற்கும் ஆசீர்வாதத்தை பெற்றுத் தருகின்றது.

கெட்ட கனவுகள்
நம்முடைய கனவுகளில் நமக்கு கெட்டது நடப்பதைப் போன்ற நிகழ்வுகள் மற்றும் நாம் வெறுக்கும் நிகழ்வுகளை கனவுகளாக காணும் போது அது கெட்ட கனவுகளாக நாம் உணர்கின்றோம். உதாரணமாக விவிலியத்தில் பிலாத்து இயேசு குற்றமற்றவர் என அறிந்து அவரை விடுவிக்க வழி தேடிய தருணம் அது; ஆனாலும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆலோசனைகள் நடத்துகின்றான். அந்த வேளையில் “பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி பிலாத்திடம் ஆளனுப்பி, "அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினார். ஆனாலும் பிலத்தது தனக்கு அனைத்துவிதமான அதிகாரங்கள் இருந்தும் இயேசுவை விடுவிக்க அவனால் முடியவில்லை. கனவில் எச்சரிக்கப்பட்டும் அவனால் நேர்மையாக தீர்ப்பு வழங்க முடியவில்லை. ஆனால் இப்படி தீய கனவுகள் நமக்கு வரும்போது அதை கடவுளின் சித்ததிற்கு உட்படுத்தி வாழும் போது நாமும் காப்பாற்ற படலாம்.

குழப்பமான தெளிவில்லாத கனவுகள்:-
குழப்பமான தெளிவில்லாத கனவு என்பது நாம் என்ன கனவு கண்டோம் என்பதே தெரியாத குழப்பமான கனவுகளாகும். அர்த்தமற்ற கனவுகளாகவும், கெட்ட கனவுகளாகவும் கூட இவை இருக்கலாம். உதாரணமாக நெபுகத்னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு, உள்ளம் கலங்கி, உறக்கமின்றித் தவித்தான். மேலும் அதை அறிந்துகொள்ளவும் ஆசைப்பட்டான். ஆனால் எவருமே அரசனது கனவை விளக்கி கூற முன்வரவில்லை. அந்நேரத்தில் தானியேல் அரசனுக்கு விளக்கி கூறுகின்றார். அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள் பிற்காலத்தில் நிகழப் போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்குத் தெரிவித்துள்ளார்; நீர் கண்ட கனவும், நீர் படுத்திருந்த பொழுது, உம் மனக்கண் முன்னே தோன்றின காட்சிகளும் பின்வருமாறு; அரசரே! நீர் படுத்திருந்த பொழுது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் தொடங்கினீர்; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்க விருப்பதை உமக்குக் காண்பித்தார்.

அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை. அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. அந்தக் கல் இரும்பினாலும் களி மண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது. அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று. அரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுகிறேன் என்றார்.

“அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. உமக்குப்பின் வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும். பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களி மண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காததுபோல், அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்கமாட்டார்கள்.

அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையுயம் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி என்றார். அதைக் கேட்ட அரசன் நெபுகத்னேசர் தானியேலின் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்; அவர்க்குக் காணிக்கைப் பொருட்களைப் படைத்துத் தூபமிடுமாறு ஆணையிட்டான். ஆக குழப்பமான கனவுகளை நாம் கானும் போது அதை தக்க முறையில் புரிந்து கொண்டால் நிச்சயம் அதுவும் நமக்கு ஆசீர்வாதமாக அமையும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய ஆசீர்வாதத்தை மூன்று விதமான உவமைகள் வழியாக வெளிப்படுத்துகின்றார். இந்த மூன்று உவமைகளையும் கனவோடு ஒப்பிட்டு பார்த்தோமானால் முதலில் கனவு என்பது மனிதர்களுக்கு கிடத்த மிகப்பெரிய பொக்கிஷம். காரணம் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் வரக்கூடியது. இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ போர் துக்கம் இல்லாமல் துக்கமாத்திரைகளைப் சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கொல்லம் இந்த கனவு என்ற புதையல் அல்லது பொக்கிஷம் கிடைப்பது இல்லை. முதலாவது உவமையிலே புதையலை கண்டுபிடிக்கின்றார். இன்று கனவு என்ற புதையலை எத்தனைபேர் தேடி கண்டுபிடிக்கின்றனர். இங்கு சாலமோன் அரசருக்கு இந்த புதையல் கனவில் வெளிப்படுத்தப்பட்டது. அவரும் அதைப் பெற்றுக்கொண்டு தனது மக்களை நீதியுடன் ஆட்சி நடத்தினார்.

இரண்டாவதாக விலையுயர்ந்த முத்து. இன்றைய இரண்டாவது வாசகத்திலே நாம் அனைவருமே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். இப்படி தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் அனைவரும் கடவுளின் சாயலை பெற்றிருக்க வேண்டும் என விரும்புகின்றார் தூய பவுல். கடவுளின் சாயலை பெற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே விலையுயர்நத முத்துகளுக்கு சமமாக இருக்கின்றோம். இந்த விலையுயர்ந்த முத்துக்களை எங்கு தேடுவது? அது நம்முடைய கனவிலே சாத்தியமாகும். அன்னை மரியாள் என்ற விலையுயர்ந்த முத்தை தன்னுடைய கனவிலே சிந்தித்துக் கொண்டிருந்தவர் புனித சூசையப்பர். அன்னை மரியாள் என்ற விலையுயர்ந்த முத்தை அடைந்துகொள்ள தமக்கு இருந்த அனைத்து சுகங்களையும், மரியாதைகளையும், மரியாவுக்காக அர்பணிக்கிறார். கடவுளும் அவரை பன்மடங்கு ஆசீர்வதித்து பாலன் இயேசுக்கு முன்மாதிரியாக வாழ்க்கையை கற்றுக்கொடுக்க கடவுள் அவரை தேர்ந்துகொள்கின்றார்.

மூன்றாவதாக கடலிலே வீசப்பட்ட மீன் வலை. இது எல்லாவகையான மீன்களையும் இழுத்துக் கொண்டு வருகிறது. அதைப்போலவே கனவிலும் பலவிதமான செயல்பாடுகளை நாம் படமாக காண்கின்றோம். நல்லது, கெட்டது, புரிந்துகொள்ள இயலாது என பல விதமான கனவுகளை நாம் காண்கின்றோம். நாம் காணும் அனைத்து கனவுகளும் நமது வாழ்வில் நிறைவேறுவது இல்லை. எப்படி நல்ல மீன்களைப் பிரித்து கெட்டவற்றை தூக்கி எறிவது போல நம்மிடத்தில் வரும் கெட்ட கனவுகளை தூக்கி எறிந்துவிட்டு நல்ல கனவுகளை மட்டும் ஆராய்ந்து அதையே கடவுளின் சித்தத்திற்கு உட்படுத்தி வாழும் போது நாமும் சாலமோனைப்போல, சூசையப்பரைப்போல ஆசீர்வதிக்கப்படலாம்.

பிரியமானவர்களே கனவுகள் நம்முடைய மனதில் இருந்துதான் வருகின்றன. இன்றைய காலக்கட்டங்களில் கனவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இருந்த உளவியல் நிபுணர்களான ஃபிராய்டு மற்றும் ஜங், கனவுகளுக்கு மிக அதிமான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். கனவுகள், என்பது நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர்.

ஆனால் இன்று பொதுவாக பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வையே கனவுபோல் தான் வாழ்கிறார்கள் என்று கூறுகின்றனர். எப்படியெனில், ஒருமுறை ஜாக் ஸ்டீவன்சன் தன் கனவில் தவறு செய்துவிட்டதாக வருந்திக் கொண்டிருந்தார். மக்கள் கேட்டனர் “என்ன முட்டாள்தனம், கனவில் எப்படி தவறு செய்ய முடியும்?” அதற்கு அவர் சொன்னார், “இல்லை! இல்லை! நடந்தது என்னவெனில், நான் வாட்டிகன் (ரோமாபுரியில் உள்ள போப்பாண்டவரின் மாளிகைக்கு) சென்றிருந்தேன். அங்கே போப் தன் கையால் எனக்கு பானம் அளிக்க நினைத்து, “சூடாக வேண்டுமா? குளிர்பானம் வேண்டுமா?” என்று கேட்டார். நான் “சூடாக வேண்டும்” எனக் கூறினேன். அங்குதான் தவறு நிகழ்ந்தது. அவர் தண்ணீரை சூடு செய்வதற்காக உள்ளே சென்றார். நான் அதற்குள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன். நான் குளிர்பானம் போதுமென்று சொல்லியிருந்தால் அதையாவது குடித்து மகிழ்ந்திருப்பேன் என்றாராம்”. பிரியமானவர்களே நிறைய மக்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. தண்ணீர் சூடாவதற்கு முன்னால் வேறோரு பானம் அருந்த முடியும் என நினைத்து, இரண்டையுமே இழந்து விடுகிறார்கள்.

ஆனால் கனவுக்கு உரம் போட்டு வளர்த்து சாதனையாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் இந்த உலகில் சும்மா வசிக்கிறார்கள் என்கின்றனர். ஒரு தலைமுறையே கனவு காண்பதை நிறுத்திவிட்டால் சமூகத்தில் என்ன அற்புதங்கள் நடத்தப்பட்டாலும் அவை எல்லாம் வீண்தான்.

12-ம் நூற்றாண்டிலே எளிய உடை உடுத்திக்கொண்டு திருத்தந்தையின் இலாத்தரன் அரண்மனைக்குச் சென்ற அசிசி பிரான்சிசையும் அவரது தோழர்களையும் சந்திக்க திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் மறுத்துவிடுகிறார். அன்று இரவு அவர் ஓர் கனவு காண்கின்றார். அந்த கனவில் இலாத்தரன் தேவாலயம் இடிந்துவிழுவதுபோல் தோன்றியதாம். அது கீழே விழுந்துவிடாமல் ஓர் ஏழை மனிதர் தோள்கொடுத்து அதைத் தாங்கிக்கொண்டாராம். விழித்தெழுந்த திருத்தந்தை கனவின் பொருள் யாதென உணர்ந்தார். அதாவது, திருச்சபை அழிந்து போகாமல் காப்பதற்காகக் கடவுள் அசிசி பிரான்சிசு என்னும் ஏழை மனிதரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரையும் அவர் தொடங்கிய இயக்கத்தையும் தடுப்பது சரியல்ல என்னும் உணர்வு திருத்தந்தையின் உள்ளத்தில் எழத்தொடங்கியது. அன்று திருத்தந்தையின் கனவினால் அசிசி பிரான்சிஸ் வழியாக ஆரம்பித்த பிரான்சிஸ்கன் சபை திருச்சபையின் பல்வேறு மாற்றத்திற்கு அடிப்படை காரணமாக இன்றும் இருந்து வருகிறது.

பிரியமானவர்களே! கனவுகள் வருவதை யாரும் தடுக்க முடியாது. அப்படி நாம் கானும் கனவுகள் நல்லதாகவும், கெட்டதாகவும் இருந்தால் அனைத்தையும் கடவுளின் விருப்பத்திற்கு உட்படுத்தி சரியான முறையில் நாம் செயல்பட்டால் நிச்சயம் நமக்கு ஆசீர்வதாங்கள் நிறைய கிடைக்கும். எனவே கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கெள்ள முதலில் நன்கு உறங்குவோம்; அந்த உறக்கத்தில் கனவு காண்போம். பிறகு கனவிற்கான அர்த்தத்தை கண்டுபிடிப்போம். கடவுள் நம் அனைவரையும் சாலமோனைப்போல அசீர்வதிக்க வரம்வேண்டி பக்தியுடன் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.