இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு

வார்த்தையின் பலம்

ஏசாயா 55:10-11
உரோமையர் 8:18-23
மத்தேயு 13:1-23

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இந்த உலகில் பேசாத மனிதர்கள் யாரவது இருக்கின்றனரா? அனைவருமே இவ்வுலகில் பேசுகின்றனர். ஏன் வாய் பேச முடியாத ஊமையர்கள் கூட தங்களது செய்கையால் பேசுகின்றனர் என்று கூறுகின்றனர். ஆகா நாம் அனைவருமே பேசுகின்றோம். நமது வாயிலிருந்து நூற்றுக்கணக்காக வார்த்தைகள் வெளிவருகின்றன. இவற்றில் நல்லவைகளும் உள்ளன கெட்டவைகளும் உள்ளன. சில வார்த்தைகள் வாழ்வைத் தருகின்றன; சில வார்த்தைகள் வாழ்வை கெடுக்கின்றன. இன்று நமதாண்டவர் இன்றைய வழிபாட்டின் வழியாக நம்முடைய வார்த்தைகள் எப்படிபட்ட பலனை கொடுக்கின்றன என்று சிந்தித்து செயல்பட நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.

பிரியமானவர்களே! இன்று நாம் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? நாம் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை நம்முடைய பேச்சு காட்டிக்கொடுத்து விடுகிறது. ஒருவரை நல்லவராகவும், கொடியவராகவும், மென்மையானவராகவும் காட்டுமிரண்டியாகவும் பிரதிபலிக்கும் சக்தி மனிதர்கள் பேசும் பேச்சிற்கு உண்டு.

ஒருமுறை அந்த பிரதமர் நாட்டுமக்களுடன் பேசுவதற்கு ஒரு நாளை ஒதுக்கியிருந்தார். ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை பிரதமருடன் நேரிலே பகிர்வது வழக்கம். அப்படி ஒருநாள் ஒரு வயதான பெண்ணிடம் சாந்தமாகப் பேசி முடித்த பிறகு, ‘மைக் ஆன்’ ஆகியிருப்பதை அறியாத பிரதமர் தன்னுடைய ஊழியர்களைக் கூப்பிட்டு ‘இந்தப் பொம்பளய ஏன் என்கிட்ட வரவிட்டீங்க? திமிர்பிடிச்சவ’ என்று கேவலமாகப் பேசினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதுவரை அவர் சம்பாதித்திருந்த நற்பெயரை எல்லாம் ஒரு நொடியில் இழந்துவிட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்து, பிரதமர் பதவியையும் இழந்தார். ஆக நாம் பேசும் வார்த்தைகள் வழியாகவே நாம் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் அடைகிறோம். இந்த மண்ணுலகில் மட்டுமல்ல விண்ணுலகிலும் நாம் பேசும் பேச்சுக்கு தக்க பரிசு உண்டு மத்தேயு 12:36-ல் மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார் நமதாண்டவர்.

மேலும் கடவுள் இன்றைய வார்த்தை வழிபாடு வழியாக நான்கு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். வழியோர நிலத்திற்கு ஒப்பான மனிதர்கள். பாறைநிலத்திற்கு ஒப்பான மனிதர்கள், முட்செடி மனநிலையுடைய மனிதர்கள், நல்ல நிலத்தின் பண்புகளை உடைய மனிதர்கள்.

வழியோர நிலத்திற்கு ஒப்பான மனிதர்கள்:-
யார் இத்தகைய மனிதர்கள்? 1 .புரிந்துகொள்ள இயலாத மனிதர்கள், 2. தீய வழியில் வாழும் மனிதர்கள். இவர்கள் அனைவரும் வழியோரமாய் உள்ள நிலத்திற்கு சமம்.. இவர்களுக்கு எப்படிப்பட்ட விளக்கத்தை கூறினாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இயேசுவே கூறுகிறார் இப்படிப்பட்ட மனிதர்கள் இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான். இன்று நம்மில் எத்தனை பேர் இறைவார்த்தையை புரிந்து வைத்திருக்கின்றோம்? நம்மில் எத்தனை பேர் தீய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம்? சற்று சிந்தித்து பார்ப்போம்.

பாறைநிலத்திற்கு ஒப்பான மனிதர்கள்:-
இவர்கள் இறைவார்த்தையில் ஆர்வம் கொண்டவர்கள் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்களிடத்திலே ஆழமான விசுவாசம் இல்லததால் ஏதாவது பிரட்சனைகள், வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் வரும்போது தடுமாற்றம் அடைந்து சீக்கிரமே துவண்டு விடுவார்கள். உதாரணமாக ஆதாம்-ஏவாள் கடவுளின் வார்த்தையை கேட்க ஆர்வம் கொண்டனர் ஆனால் சோதனை வந்த போது தடுமாறி பாவநிலைக்கு சென்று விட்டனர். இன்றும் நம்மில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு துன்பங்கள் வருகின்றபோது எத்தனைபோர் வேற்றுதெய்வங்களை நோக்கி செல்கின்றோம்?

முட்செடி மனநிலையுடைய மனிதர்கள்:-
இவர்களுக்கு இறைவார்த்தையை கேட்கவேண்டும் என்ற ஆவலும் ஆசையும் இருக்கும். அதேவேளையில் உலக நாட்டங்களுக்கும் ஆசைகளுக்கும் இடம்கொடுக்கும்போது கடவுளை மறந்து உலகப்போக்கிலே வாழ்கின்றவர்கள். உதாரணமாக ஞாயிற்றுகிழமை திருப்பலிக்கு செல்லவேண்டும் என்ற ஆசையிருக்கும் அதேவேளையில் ஞாயிற்றுகிழமையன்று டிவியிலே புதிய படமோ அல்லது கிரிக்கெட்டின் இறுதி விளையாட்டு ஒளிபரப்பானால் திருப்பலியை தவிர்த்து விட்டு டிவிக்கு முக்கியதுவம் கொடுப்பவர்கள் முட்செடி மனநிலையுடைய மனிதர்கள் ஆவார்கள்.

நல்ல நிலத்தின் பண்புகளை உடைய மனிதர்கள்:-
இவர்கள் அனைவரும் இறைவார்த்தையை கேட்டு அதன்படி நடப்பவர்கள். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் கடவுள் விரும்புகின்றார். உதாரணமாக அன்னை மரியாள், புனிதர்கள் அனைவரும் இத்தகைய மனிதர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கின்றனர். இன்று நம்மையும் நல்ல நிலத்தின் பண்புகளை உடைய மனிதர்களாக வாழ கடவுள் அழைப்பு விடுக்கின்றார்.

திருச்சியிலே நடந்த உண்மைச் சம்பவம். பிரபாகர் சாந்தி என்பவருக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகளாக குழந்தைகள் கிடையாது. ஒருமுறை வேளாங்கண்ணி மாதவிடம் குழந்தை பாக்கியம் வேண்டி பாதையாத்திரையாக நடந்து செல்கின்றனர். அன்னையின் அருளால் அவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அவர்களுக்கு இன்னும் ஓர் ஆண்குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தனர். முதல் குழந்தைக்கு நான்கு வயது ஆகிய போது மீண்டும் அந்த தாய் கருத்தரிக்க ஆரம்பித்தாள். மருத்துவர்கள் பரிசோதித்த பிறகு வயிற்றில் இருக்கும் இந்த குழந்தை நிச்சயம் இறந்துவிடும் ஏனென்றால் இதற்கு போதிய வளர்ச்சியில்லை என்றனர். என்ன செய்வது என்று அறியாமல் மீண்டும் அன்னையிடம் ஜெபிக்க ஆரம்பித்தனர்.

இவர்கள் சற்று வித்தியாசமாக ஜெபித்தனர். அந்த தாயின் வயிற்றில் தனது இரண்டு கரங்களையும் வைத்துக்கொண்டு அந்த தந்தை தினமும் ஜெபிப்பார். அதைப்போலவே அந்த நான்கு வயது குழந்தையும் தாயின் வயிற்றில் முத்தம் கொடுத்து ‘எனக்கு தம்பி பையன் வேண்டும்; சீக்கீரம் வெளியே வாடா; நான் உன்னுடன் விளையாட வேண்டும், என்னுடைய விளையாட்டுப் பொருட்கள் அனைத்தையும் உனக்கே கொடுத்து விடுகிறேன்’ என்று குழந்தைதனத்தோடு அந்த தந்தையும், மகளும் தினமும் தாயின் வயிற்றை முத்தங்கள் கொடுத்து, வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் தினமும் பேசுவர். அடுத்த பரிசோதனையின் போது இந்த குழந்தை சற்று வளர்ச்சி அடைந்திருந்தது. இது அவர்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. மீண்டும் இன்னும் அதிகமாக வயிற்றில் இருந்த குழந்தையோடு பேச ஆரம்பித்தனர். அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அனைத்தையும் வயிற்றில் இருந்த குழந்தையோடு பகிர்ந்துகொள்வர்.

சிலநாட்கள் களித்து அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உயிர் இருந்தது; ஆனால் எந்த செயல்பாடும், அசைவும் இல்லாமல் இருந்தது. மருத்துவர்கள் எங்களால் எதுவும் முடியாது என கைவிரித்து விட்டனர். உடனே இந்த தந்தையும், குழந்தையும் கண்ணீர் மல்க அந்த குழந்தையின் மீது கைகளை வைத்து ஜெபித்தனர். அந்த குழந்தையிடம் மீண்டும் பேச ஆரம்பித்தனர். அவர்கள் பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் இந்த குழந்தை ஒருவித அசைவைக் கொடுத்தது. மருத்துவர்கள் அனைவரும் சுற்றி நிற்க இன்னும் அதிகமாக அந்த தந்தையும், 4வயது குழந்தையும், முத்தங்கள் கொடுத்தும், மார்பின் மீது வாய் வைத்தும் பேசத்தொடங்கினர். மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் அந்த குழந்தை நல்ல நிலைக்கு திரும்பியது. இச்சம்பவம் நடந்து இன்றோடு 10 ஆண்டுகள் முடிந்துள்ளன. இன்றும் அந்த குழந்தைக்கு ஏதாவது பிரட்சனை என்றால் அவர்கள் பேசியே அக்குழந்தையை நல்ல நிலைக்கு கொண்டு வருகின்றனர். ஆம் அன்புக்குரியவர்களே மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத செயலை சாதாரண பேச்சு அந்த குழந்தைக்கு வாழ்வளித்தது. உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை கடவுள் நம்மோடு பேசிவருகிறார். அவருடைய வார்த்தை எத்தகைய தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தியிருக்கிறது?

இன்றைய முதல் வாசகத்திலே “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை என்கிறார். ஆக கடவுளின் வார்த்தை 100 மடங்கு பலனையும் பலத்தையும் நமக்கு கொடுக்கிறது. அப்படியானால் நம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலம் இருக்கின்றது. எனவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் பலத்தை கொடுக்கிறதா? அல்லது பலவீனத்தைக் கொடுக்கிறதா? என்பதை சிந்தித்து முடிவெடுப்போம் கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.