இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிறு

விரும்பி துன்பப்பட்டால் விரும்பியதை அடையலாம்

2 அரசர் 4:8-11, 14-16
உரோமையர் 6:3-4, 8-11
மத்தேயு 10:37-42

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,
இன்று நீங்கள் எதையெல்லாம் விரும்புகின்றீர்கள்? உதாரணமாக பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டி விருப்பம், படித்தவர்களுக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் என விருப்பம், திருமணம் முடித்தவர்களுக்கு நல்ல குடும்பம் அமைய வேண்டும் என விருப்பம், வயதானவர்களுக்கு தங்கள் முதிர்ந்த வயதில் சந்தோசமாக இருக்க வேண்டும் என விருப்பம். இப்படியாக இன்று நம்மில் ஒவ்வொருவருக்குமே ஒருவித விருப்பங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு உங்களது விருப்பங்கள் என்னென்ன?

இன்று நமதாண்டவர் இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்து அவனாகவும், கிறிஸ்து அவளாகவும் அதாவது கிறிஸ்துவை பிரதிபலிப்பவர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவை பிரதிபலித்து வாழவேண்டுமென்றால் கிறிஸ்துவை விரும்புபவர்களாகவும், கிறிஸ்து விரும்பியதை நிறைவேற்றுபவர்களாகவும் வாழ வேண்டும். எனவே, இன்று நாம் விரும்பும் கிறிஸ்தவர்களா? அல்லது புலம்பும் கிறிஸ்தவர்களா? விரும்பும் கிறிஸ்தவர்கள் என்று சொன்னால் எதையெல்லாம் நாம் விரும்புகின்றோம்? சிந்திப்போம்?

பிரியமானவர்களே நீங்கள் விருப்பப்பட்டு கிறிஸ்தவர்கள் ஆனீர்களோ அல்லது விருப்பப்படாமல் கிறிஸ்தவர்களாக இருக்கின்றீர்களோ தெரியாது ஆனால் நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருப்பது கடவுள் உங்களுக்கு கொடுத்த மாபெரும் கொடையே ஆகும். காரணம் கிறிஸ்தவ வாழ்வு என்பது பஞ்சு மெத்தையில் அலங்கரிக்கப்பட்ட பாதை போன்ற வாழ்வு கிடையாது. மாறாக இது கல்லும், முள்ளும் நிறைந்த பாதை, கரடு, முரடான பாதை தான் நமது கிறிஸ்தவத்தின் பாதை. அதனால் தான் இயேசு கூறுகிறார் “வாழ்வுக்கு செல்லும் பாதை மிகவும் இடுக்கமானது; வழியும் குறுகலானது; இதை கண்டுபிடிப்போர் சிலரே” மத் 7:14. அந்த சிலர் தான் இன்று ஆலயம் வந்திருக்கின்றீர்கள். நீங்கள் தான் அந்த சிலர். ஆக, கிறிஸ்தவ வாழ்வு புலம்பக் கூடிய வாழ்வு கிடையாது. உதாரணமாக இன்று ஆலயம் வராதவர்களைப் பார்த்து கேளுங்கள் ஏன் இன்று கோயிலுக்கு வரவில்லை என்று? எனக்கு அந்த வேலை இருந்தது, இங்கு செல்ல வேண்டியிருந்தது… என புலம்ப ஆரம்பித்துவிடுவர். மாறாக தைரியமாக எத்தகைய துன்பங்களையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வாழ்வு தான் நமது கிறிஸ்தவ வாழ்வு. கடவுளுக்காக யாரெல்லாம் விரும்பி துன்பப்பட்டார்களோ அவர்கள் அனைவருமே சாதனை மனிதர்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். எனவே நீங்கள் துன்பங்களை கண்டு புலம்புபவர்களா? அல்லது துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ளும் தைரியசாலிகளா?

துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ளும் தைரியசாலிகள் மட்டும் தான் கடவுளுடைய மக்கள் எனக் கருதப்படுவர் என இயேசு கூறுகிறார். இன்று யாரெல்லாம் கடவுளுடைய மக்கள்?

01. என்னைவிட தனது பெற்றோரை அன்பு செய்பவர் என்னுடையவர்கள் அல்ல

அப்படியானால் நம்முடைய பெற்றோரை விட கடவுளை முதலில் நாம் அன்பு செய்ய வேண்டும். காரணம் கடவுள் தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றார். எனவே கடவுளைத்தான் முதலில் அன்பு செய்ய வேண்டும். அப்படியானால் பெற்றோரை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வது ஆகாதா? நிச்சயம் ஆகாது. காரணம் முதலில் பெற்றோர்கள் கடவுள்கள் கிடையாது. இரண்டாவதாக பெற்றோர்கள் கடவுள் போல வாழ்வது கிடையாது.

உதாரணமாக நமது குடும்பத்திலே சிறு பிள்ளைகள் தங்கள் அப்பா போல, அம்மா போல நடந்துகொள்ள முயல்வதை எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் நடக்கும் விதம், பேசும் விதம், செயல்படும் விதம் ஆகியவற்றில் தன் அப்பாவை போல, அம்மாவைப் போல அந்த பிள்ளைகள் செய்ய முயலலாம். காலப்போக்கில், ஒழுக்க நெறிகளிலும், ஆன்மீக காரியங்களிலும் கூட அந்தப் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களின் மாதிரியையே பின்பற்றலாம். ஆக, இந்த குழந்தைகள் பெற்றோர்களின் மாதிரிகள் தான். பெற்றோர்கள் கிடையாது. ஆக பெற்றோர்கள் வேறு. குழந்தைகள் வேறு. பெற்றோரைப்போல செயல்படுவதால் அவர்கள் பெற்றோர்கள் ஆகிவிட மாட்டார்கள். எனவே பெற்றோரை அன்பு செய்வதால் கடவுளை அன்பு செய்வது ஆகிவிட முடியாது. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனிதர்கள் நாம் அனைவருமே ஜெராக்ஸ் காப்பி போல ஒரிஜினல் கடவுள் மட்டும் தான். அதனால் தான் கடவுள் மனிதரைப் படைக்கும்போது கடவுளின் சாயலாகத்தான் மனிதரைப் படைத்தார். எனவே பெற்றோரை அன்பு செய்வது வேறு கடவுளை அன்பு செய்வது வேறு.

ஒரு சிலர் கேட்கலாம் என்னுடைய பெற்றேர்கள் எனக்கு கடவுள் போல. எனவே அவர்களை நான் அன்பு செய்தால் நிச்சயம் கடவுளை அன்ப செய்பவன் ஆவேன் என்று. உதாரணமாக உங்களது பெற்றோர்கள் உங்களுக்கு கடவுள் போல. அப்படியானால் என்னுடைய பெற்றோர்கள் எனக்கு கடவுள் போல, அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்கு கடவுள் போல. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். அதாவது என்னுடைய பெற்றோரை நான் கடவுளாக பார்க்கிறேன் ஆனால் அடுத்தவருடைய பெற்றோரை நான் கடவுளாக பார்ப்பது கிடையாது. மாறக நீ உன்னுடைய பெற்றோரையும், உலகில் உள்ள அனைத்து பெற்றோரையும் கடவுளாக பார்த்தால் நிச்சயம் பெற்றோரை அன்பு செய்வது கடவுளுக்கு சமம் எனக் கூறலாம். ஆனால் நம்மால் முடியுமா? இன்றைய சூழலில் தங்களது சொந்த பெற்றோரை அன்பு செய்ய முடியாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து வரும் மனிதர்களுக்கு மத்தியில் எப்படி பெற்றோரை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வது ஆகும்.

அதனால் தான் திருக்குறளும், பண்டைய கிரேக்க, உரேமை நாவல்களும் அன்பை மூன்று விதமாக பிரித்து பேசுகின்றன. முதலில் குடும்ப உறவுகளில் நிகழ்கின்ற அன்பு. இதில் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்களின் அன்பு அடங்கும். இரண்டாவதாக காதலர்கள் நடுவே நிகழும் அன்பு இதைப்பற்றி திருக்குறள் தெளிவாக விளக்குகிறது. மூன்றாவதாக நண்பர்களுக்கிடையே நிகழும் அன்பு. இந்த மூன்றுவித அன்பிலும் அடிப்படை ஒற்றுமை என்னவென்றால் அன்பு செய்பவர்கள் ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொண்டு அன்பு செய்வார்கள். ஆனால் கடவுளின் அன்பு இந்த மூன்றையும் தாண்டிச் செல்லும். அதாவது அன்பு செய்பவர்களை மட்டுமல்லாது தங்களது எதிரிகளையும் அன்பு செய்ய வேண்டும். நமக்கு ஒருவர் தீங்கிழைத்தார் என்று சொன்னால் அவரை மன்னித்து அவருக்காக ஜெபிக்க வேண்டும் என விவிலியம் நமக்கு கூறுகிறது. “உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்… திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்” லூக் 6:35.

யூத மதத்தில் கடவுள் எகிப்தியர்களை செங்கடலில் மூழ்கடித்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கதை ஒன்று சொல்வார்கள்: இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய போது எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறார்கள். இஸ்ராயேல் மக்கள் செங்கடலை கடந்து விட்ட நிலையில், எகிப்தியர்கள் செங்கடலில் அவர்களை பின்தொடர்ந்து வருகிறார்கள். கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து எகிப்தியர்களும் அதில் மூழ்கி இறந்து போகிறார்கள். இதனைக் கண்ட வானதூதர்கள் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், கடவுளோ மிகவும் சோகமாக, என்னுடைய படைப்புகள் அங்கே இறந்து கொண்டிருக்கிறது. நீங்களோ என்னை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, என்று வேதனைப்பட்டாராம். இதுதான் கடவுளின் அன்பு. கடவுளின் அன்பை நாம் எதனோடும் ஒப்பிட்டு கூற முடியாது. அவரது அன்பு ஈடு இணையில்லாதது, எனவே பெற்றோரை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வது ஆகாது. மேலும் யாரெல்லாம் கடவுளை விட பெற்றோரை அன்பு செய்கின்றனரோ அவர்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகளாக முடியாது. இன்று நாம் எப்படி?

02. என்னை விட தங்களது பிள்ளைகள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் என்னுடையவர்கள் அல்ல
பொள்ளாச்சிக்கு அருகில் மிக அழகான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டீபன் மரிய ஜோசப். இந்த குடும்பம் கடவுள் பக்தியில் சிறந்து விளங்கியது. ஒவ்வொரு நாளும் குடும்ப ஜெபம், ஜெபமாலை என ஜெபிக்க மறந்தது இல்லை. அந்த குடும்பத்திலே மூன்று பெண்குழந்தைகள் ஒரே ஒரு ஆண் குழந்தை. அவர் தான் அந்த ஸ்டீபன். ஒரே ஒரு ஆண்குழந்தை என்பதால் எந்த அளவிற்கு அன்பு செய்திருப்பார்கள் என்று விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. இப்படியாக அந்த பெற்றோரும், சகோதரிகளும் அவரை அளவுக்கு அதிகமாக அன்பு செய்து வந்தனர். நிச்சயம் இந்த ஸ்டீபன் நம்மை முதிர்ந்த வயதில் நம்மை பாதுகாப்பான் என்ற கனவோடு அந்த குடும்பம் இருந்தது. ஆனால் ஸ்டீபனோ கடவுளை அன்பு செய்கிறேன் எனச் சொல்லி குருவாக செல்ல தனது பெற்றோரிடம் அனுமதி கேட்கின்றார். அந்த பெற்றேர் ஒரு நொடியும் யோசிக்காமல் கடவுள் உன்னை அழைத்தார் என்றால் நிச்சயம் அவரது பணிக்கு தைரியமாக செல். அதற்கு முன்னதாக நீ எங்களுக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதாவது குருத்துவ பணி என்பது மிகப்பெரிய கொடை. அதிலே ஆயிரக்கணக்கான துன்பங்களை நீ சந்திக்க நேரிடும். நீ விரும்பிதை அடைய வேண்டுமென்றால் விருப்பட்டு உனது சிலுவைகளை துக்கிக்கொண்டு செல். நாங்கள் உனக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி அவரை கடவுளின் பணிக்கு அனுப்புகின்றனர்.

அவரும் குருமடத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கின்றார். அடுத்தடுத்து பிரட்சனைகள் அந்த குடும்பத்தில் எழ ஆரம்பிக்கின்றன. ஒருவர் பின் ஒருவராக அவரின் பெற்றோர்கள் நோய்வாய்ப்படுகின்றனர். ஒவ்வொரு பெற்றோருமே குறிப்பாக நோய்வாய்பட்டிருக்கும் போது தனது பிள்ளை தனது அருகில் இருக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் அந்த பெற்றோர் என்ன கூறினார்கள் தெரியுமா? நாங்கள் உன்னை கடவுளுக்கு அர்ப்பணத்து விட்டோம். நீ கடவுளின் பிள்ளை. எங்களைப் பற்றி கவலை படவேண்டாம். நிச்சயம் அந்த கடவுள் எங்களை வழிநடத்துவார் என ஸ்டிபனுக்கு ஆறுதல் கூறினர். அதைப் போலவே ஒவ்வொரு குருவும் தனது குருத்துவ பட்டத்திற்கு தனது பெற்றோர்கள் அருகில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். ஆனால் எந்த அளவிற்கு கடவுளை அன்பு செய்தார்களோ அந்த அளவுக்கு அவர்களை சீக்கிரமாகவே தன்னோடு அழைத்துக் கொண்டார். தனது பிள்ளையை விட கடவுளை அதிகமாக அன்பு செய்த ஒரே காரணத்தினால் தனது மகனின் குருப்பட்டத்திற்கு விண்ணில் இருந்து ஆசீர்வழங்கினர். இன்றும் அந்த குடும்பம் அந்த பெற்றேர்களை தெய்வமாக போற்றி வருகின்றனர். தன்னுடைய பெற்றோர்கள் சென்ற இடத்திற்கே ஸ்டீபனும் 2004 ல் சென்று விட்டார். ஆம் அன்புக்குரியவர்களே! கடவுள் ஒவ்வொருவருக்குமே ஒரு திட்டம் வைத்துள்ளார். அவரது திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் விரும்பி நாம் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். அப்படி அனுபவித்தால் நிச்சம் நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் தாம்.

புனித மோனிக்கா மற்றும் புனித அகுஸ்தினார் வாழ்விலும் கூட மோனிக்க தன்னுடைய பிள்ளையை விட கடவுளை அதிகமாக அன்பு செய்கிறார். அதனால் என்னிலடங்கா துன்பங்களை அனுபவிக்கின்றார். இன்று அவரும் புனிதராக கடவுளின் கருவியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்று நாம் கடவுளை அதிகமாக அன்பு செய்கின்றோமா? அல்லது நமது பிள்ளைகளை அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.? கடவுளை அன்பு செய்தால் கடவுளுக்குரிய காரியங்களை அதிகம் செய்ய வேண்டும். பிள்ளைகளை அன்பு செய்தால் பிள்ளைகளுக்குரிய காரியங்களை நாம் செய்ய வேண்டும். இன்று நாம் செய்யும் செயல்களே நாம் யாரை அன்பு செய்கின்றோம் என தீர்மானிக்கின்றன. நமது பிள்ளைகள் படிக்க வேண்டும், நன்கு சம்பாதிக்க வேண்டும், நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும், அவர்கள் வாழ்வில் நன்கு முன்னேற வேண்டும், என அக்கறை எடுத்து பல விதமான செயல்களை அவர்களுக்கு நாம் செய்கின்றோம். நம்முடைய செயல்பாடுகள் அவர்களை அன்பு செய்வதை உறுதிபடுத்துகிறது. அப்படியானால் கடவுளை அன்பு செய்கின்றோம் என்றால் அவருக்காக நாம் என்னென்ன செயல்களை செய்கின்றோம்? கொஞ்சம் பட்டியலிட முடியுமா?

இன்றைய முதல் வாசகத்தில் எப்படியெல்லாம் கடவுளை அன்பு செய்ய முடியும் என ஒரு குடும்பத்தை நமக்கு முன்னுதாரணமாக காட்டுகிறது. திருச்சபைக் கட்டளைகளில் 6வது கட்டளை என்ன? யாராவது சொல்ல முடியுமா? ‘நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலன உதவி செய்வது’. இதைத்தான் சூனோமில் வசித்த பெண் செய்கின்றாள். இவர் ஒரு பணக்காரர், செல்வாக்கு படைத்தவர். தன்னிடத்தில் பணம் இருக்கிறது, செல்வாக்கு இருக்கிறது என்ற அகந்தையில் வாழாமல் கடவுளின் பணியாளரான எலிசாவை இந்த பெண் நன்கு கவனித்துக் கொள்கிறார். எந்த அளவிற்கு என்றால் முன்பின் தெரியாத ஒருவருக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்து, உணவு பரிமாறி அவரின் தேவைகளை அறிந்து அவருக்கு உதவி செய்கிறார். இவருடைய உதவிக்கு கைமாறாக அந்த குடும்பத்தினுடைய தேவையை அறிந்து எலிசா அற்புதங்கள் செய்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த குடும்பத்திற்கு கடவுளின் அருளால் குழந்தை வரத்தை கொடுக்கிறார். இன்றைய நற்செய்திலும் இயேசு கூறுகிறார் “கடவுளின் பணியாளர்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால் கூட அதற்கேற்ப கைமாறு பெறாமல் போகான்” என்கிறார். b>இன்று நாம் கடவுளை அதிகமாக அன்பு செய்கின்றோம் என்றால் நம்மில் உள்ள எந்த செயல்பாடுகள் கடவுளின் அன்பை வெளிப்படுத்துகிறது.


03. தன்னுடைய சிலுவையை சுமக்காதவர் என்னுடையவர் அல்ல
கடவுளை அன்பு செய்வதின் முதல் அடையாளம் நமது சிலுவைகளை நாம் சுமக்க வேண்டும். இன்று உலகில் வாழும் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கின்றது. கிறித்தவர்களின் அடையாளம் சிலுவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். உதாரணமாக உங்களது கழுத்தை ஒருமுறை தொட்டுப் பாருங்கள். எத்தனை பேரின் கழுத்தில் கிறித்தவர்களின் அடையாளமான இந்த சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது? சாதாரணமான இந்த சிலுவையை தங்களது கழுத்தில் அணிவதற்கே நாம் முன்வருவதில்லை அப்படியானால் நமது வாழ்வில் வரும் சிலுவைகளை எப்படி நாம் சுமக்க போகின்றோம். நீங்கள் கேட்கலாம் சிலுவையை அணிந்தால் மட்டும் தான் கடவுளை அன்பு செய்ய முடியுமா என்று? இன்றைய அல்லேலூயா வாழ்தொலி கூறுகிறது “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பதுஉங்களது பணி”. அப்படியானல் எந்தெந்த வகையில் கிறிஸ்துவை நாம் மக்களுக்கு பறைசாற்றுகின்றோம் என நீங்கள் பட்டியலிட்டு கூறுங்கள்.

04. எனக்காக தனது உயிரை கையளிப்பவர் என்னுடைய மக்கள் ஆவர்.
பிரியமானவர்களே! சிலுவைக்கும் சிம்மாசனத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மனித வாழ்க்கை. அனைவருமே சிம்மாசனத்தில் எற அமர ஆசைப்படுகிறோம். ஆனால் சிலுவைகள் இல்லாமல் அடைய வேண்டும் என அனைவருமே விரும்புகின்றோம். ஆனால் கடவுள் கூறுகிறார் சிலுவைகளுக்கு அப்பால் தான் சிம்மாசனம் உண்டு என்று. பிரசவ வேதனைக்கு பிறகு தான் குழந்தை. இது மிகப்பெரிய வேதனையாக இருந்தாலும் அதற்கு பிறகு குழந்தை வடிவில் வரும் சந்தோசம் அனைத்து துன்பங்களையும் மறக்கடித்து விடுகிறது. பரிட்சை துன்பம் தான் அனால் அதற்கு பிறகு வரும் மதிப்பெண் அனைத்து துன்பங்களையும் மறக்கடித்து விடுகிறது. புயலுக்கு பிறகு தான் அமைதி, துன்பங்களுக்கு பிறகுதான் சந்தோசம், இழப்புக்கு பிறகு தான் வளர்ச்சி, இறப்புக்கு பிறகு தான் உயிர்ப்பு. இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் சிலுவைகள் சுமைகாளாக தெரியாது. சிலுவைகள் சுமைகள் இல்லையைன்றால் நிச்சம் கடவுளுக்காக உயிரை கையளிப்பதில் எந்த வித தடங்களும் இருக்காது. இதைத்தான் புனிதர்கள் தங்களது வாழ்வில் வாழ்ந்து காண்பித்தனர். கிறிஸ்துவுக்காக தங்களது உயிரை கையளித்தனர் இன்று கடவுளின் சிம்மாசனத்தில் அமர்ந்து நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

நாம் ஏன் கடவுளுக்காக நம் உயிரை கையளிக்க வேண்டும்?
அன்புக்குரியவர்களே மண்ணுலகில் நாம் வாழும் இந்த வாழ்க்கையானது நம்முடையது கிடையாது. நாம் வாழும் வாழ்க்கை கடவுள் நமக்கு கொடையாக கொடுத்தது. கடவுள் நமக்கு கொடுத்ததை திருப்பி அவரிடம் கொடுக்க நாம் ஏன் முன் வரக்கூடாது. இரண்டாவதாக கிறிஸ்தவ வாழ்வு தியாகம் நிறைந்த வாழ்வு என்று இறைமகன் இயேசு நமக்கு கற்பிக்கின்றார். தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார். (லூக் 9:24) கடவுளுக்காக நம் உயிரை நாம் இழக்கும் போதுதான் நம் உயிரை நாம் காத்துக் கொள்ள முடியும்.

மூன்றாவதாக கடவுள் தம் மக்கள் மீது அன்பு கொண்டதன் காரணமாக அவர் தனது உயிரையே கையளித்தார். இன்று நாம் கடவுளை அன்பு செய்கின்றோம் என்றால் நாமும் அவருக்காக வாழ வேண்டும். கடவுளுக்காக நாம் வாழவேண்டுமென்றால், நம்முடைய கடவுளின் வாழ்வு துன்பங்கள் நிறைந்தது, தியாகங்கள் நிறைந்தது. எனவே கடவுளை நாம் அடைய வேண்டுமானால் நமது வாழ்வில் வரும் அன்றாட சிலுவைகளை சுமந்து, கடவுளுக்காக தம் உயிரையும் கையளிக்கும் போது நாமும் உண்மையில் கடவுளை அன்பு செய்பவர்கள் ஆவோம். எனவே கடவுளுக்காக விரும்பி துன்பப்படுவோம் நிச்சயம் நாம் விருப்பபட்டதை கடவுள் நமக்கு அருளுவார். ஆமென்.