இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பன்னிரென்டாம் ஞாயிறு – முதலாம் ஆண்டு

துன்ப நேரத்தில் தைரியமாக…

எரேமியா 20: 10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே எத்தனை பேர் சந்தோசமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றீர்கள்? நீங்கள் சந்தோசமாக மட்டும் இருக்க வேண்டுமென்றால் உங்களுக்கான உலகம் எது தெரியுமா? விண்ணுலகம் தான் சந்தோசத்திற்கான இடம். காரணம் அங்கு மட்டும் தான் துன்பங்கள் இருக்காதுஇ துயரங்கள் இருக்காதுஇ வேதனை, சோதனை எதுவும் கிடையாது. எத்தனை பேர் விண்ணுலகம் செல்வதற்கு தயார்? விண்ணுலகம் செல்ல வேண்டுமென்றால் மரிக்க வேண்டும். எத்தனை பேர் மரிப்பதற்கு தயார்? இன்றைய சூழலில் அனைவருமே விண்ணகம் செல்வதற்கு தயார் ஆனால் மரிப்பதற்குத்தான் யாரும் தயாராக இல்லை.

பிரியமானவர்களே! ஒருமுறை ஒரு பாட்டியை சந்தித்தேன் அவரிடம் சந்தோசமாக இருக்கின்றீர்களா? என்று கேட்ட போது அவர்கள் ‘எங்க சாமி சந்தோசமா இருக்குறது’. மூனுபிள்ளைங்கள பெத்தேன் இன்று ஒன்று கூட என்னிடம் இல்லை. ஒரு கிழவிக்கு சாப்பாடு போடுவதற்கு ஏன் மூனுபிள்ளைங்களும் கணக்கு பாக்குறாங்க. என்னைய அநாதைய விட்டுட்டு போயிட்டாங்க’! எப்படி சாமி நான் சந்தோசம இருப்பேன்! என்றார்கள்.

மற்றொரு முறை எனக்கு தெரிந்த நபருடன் பேசிக்கொண்டிருந்த போது நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கின்றீர்களா? என்று கேட்டதற்கு அவர் நான் சந்தோசமாகத்தான் ஒருகாலத்துல இருந்தேன். ஆன எப்ப கல்யாணம் முடித்தேனோ அப்போதே துன்பத்தில் விழுந்து விட்டேன் என்று தொடர்ந்து கூற ஆரம்பித்தார். எனக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவர்களை நான் நன்கு படிக்க வைத்தேன். மூத்த மகளின் திருமணத்திற்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்தேன். ஆனால் இரண்டவது மகள் தனது படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்வதற்கு பணம் தேவைப்பட்டது. சேமித்து வைத்த பணத்தை கல்லூரிக்கு கட்டி படிக்க வைத்தேன். ஆனால் பாதியிலே காதல் என்ற வலையிலே விழுந்து இன்று காதலன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி கல்லூரிக்கு செல்ல முடியாமலும், படிப்பை தொடர முடியாமலும் வயிற்றில் குழந்தையை சுமந்துகொண்டு வீட்டிலே இருக்கின்றாள், பணமும் போச்சு, படிப்பும் போச்சு, முத்த மகளின் திருமணமும் போச்சு என்று தனது கவலையையும், சோதனையையும் பகிர்ந்து கொண்டார்.

ஆம் அன்புக்குரியவர்களே! இவ்வுலகமானது இன்பமும், துன்பமும் நிறைந்தது. குழந்தை பிறக்கும் போது இன்பம்; அதே குழந்தை இறந்தால் துக்கம், வேலை கிடைத்தால் இன்பம்; வேலையில்லையென்றால் துன்பம், சாதனைகள் படைத்தால் இன்பம்; சோதனைகள் வந்தால் துன்பம், ஆக இவ்வுலகில் மனிதர்கள் வாழவேண்டுமென்றால் இரண்டையும் அனுபவிக்க வேண்டும். ஒன்றைவிட்டு பிரிந்து மற்றொன்று வாழ முடியாது. எனவே துன்பமே வாழ்க்கை கிடையாது, இன்பமே வாழ்க்கை முழுவதும் கிடையாது. ஆக இன்பமும் துன்பமும் இருபக்கங்களை உடைய நாணயங்கள் போல. நாம் சந்திக்கும் துன்ப வேளைகளில் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களாக வாழவேண்டும் என்பதை தெளிவாக ஆண்டவர் விளக்குகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தனது வாழ்வில் அனுபவித்த துன்பத்தை புலம்பலாக எடுத்துரைக்கின்றார். தன்னுடைய துன்பங்கள் எவ்வளவு கொடுரமானவை என்பதை துன்பத்தின் உச்ச நிலைக்குச் சென்று விவரிக்கின்றார். ‘சுற்றிலும் ஒரே திகில், வாருங்கள் அவன்மேல் பழிசுமத்துவோம் என்கிறார்கள். என் நண்பர்கள் கூட எனது வீழ்ச்சிக்காக காத்திருக்கின்றனர். அவனை வெற்றி கொண்டு அவன் மேல் பழியை தீர்த்துக்கொள்ளலாம்’ என்கின்றனர். மேலும் இந்த 20-ம் அதிகாரம் முழுவதிலும் அவர் அனுபவித்த துன்பங்களை நாம் அறியலாம். தனது பிறந்த நாளை, பெற்றெடுத்த தாயை, ஏன் அந்த பிறப்பு செய்தியை அறிவித்த மனிதரைக் கூட எரேமியா சபிக்கிறார். இரண்டாவது வாசகத்தில் ஒரு மனிதன் வழியாக பாவம் வந்தது அந்த பாவத்தினால் சாவு வந்தது அந்த சாவினால் துன்பமும், வேதனையும் நம் ஒவ்வொருவரையும் ஆட்கொண்டுள்ளது என்கிறது. நற்செய்தி வாசகத்தில் உடலைக் கொல்பவர்களை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறது. எனவே சோதனைகளை வேதனைகளை அனுபவிக்காத மனிதர்கள் யரும் இவ்வுலகில் கிடையாது. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் துன்பங்களையும், துயரங்களையும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்கள், சோதனைகளுக்கு காரணம் யார் என அறிந்து நம்மை சுயஆய்வு மேற்கொள்வோமா?

நம்முடைய துன்பங்களுக்கு காரணம் யார்?
01. நாம் தான் நம்முடைய துன்பங்களுக்கு காரணம்.
முதலில் நாம் தான் நம்முடைய துன்பங்களுக்கு காரணம். அன்று கடவுளின் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் துன்பத்திற்கு காரணம் அவர்கள் செய்த பாவமே. தவறு செய்தனர் துன்பத்தை அனுபவித்தனர். இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக முனுமுனுக்கின்றனர். துன்பங்களை அனுபவிக்கின்றனர். தாவீது அரசர் கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறார் துன்பத்தை அனுபவிக்கிறார். ஆக இருப்பதை வைத்து வாழ்ந்தால் நாம் எப்போதுமே சந்தோசமாக வாழலாம். மாறாக மற்றவரைப் போல நானும் வாழவேண்டும் என சிந்திக்கும்போதே துன்பதை அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம். எனவேஇ மனிதர்களின் சுயநலம் தான் துன்பத்திற்கு காரணம். இதைத்தான் தூய யாக்கோப்பு 1:14-ல் ‘ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படும்போது அதை எதிர்கொள்ள தைரியம் இல்லாத போது துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

02. நமது துன்பங்களுக்கு சாத்தான் தான் காரணம்
யோபுவின் வாழ்வில் சாத்தான் தான் துன்பத்தின் அதிபதியாய் இருக்கின்றான். “ஆண்டவர் சாத்தானை நோக்கி இதோ யோபு உன் கையில். அவன் உயிரை மட்டும் விட்டுவை… சாத்தான் யோபுவை உள்ளங்கால் முதல் உச்சந் தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்… இவ்வளவு துன்பத்தின் மத்தியிலும் யோபு தன் வாயால் கூட பாவம் செய்ய வில்லை” யோபு2:6-7. இயேசுகிறிஸ்து 40 நாள் பாலைவனத்தில் சாத்தானால் சோதிக்கப்படுகிறார். அவரும் துன்பத்தை அனுபவிக்கிறார் ஆனால் பாவம் செய்யவில்லை.

03. நமது துன்பங்களுக்கு கடவுள் தான் காரணம்
சபைஉரையாளர் 7:14 –ல் ஆண்டவர் கூறுகிறார் “வாழ்க்கை இன்பமாய் இருக்கும் போது மகிழ்சியோடு இரு. துன்பம் வரும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள் இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார். ஆக இன்பமும் துன்பமும் கடவுளிடமிருந்து வருகின்றன.

கடவுள் ஏன் துன்பத்தை கொடுக்க வேண்டும்?
நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகள், கடவுளின் சாயலாக அவரது உருவிலே படைக்கப்பட்டவர்கள். மனிதர்கள் தங்களுடைய சுயநலத்தினால் கடவுளுக்கு எதிராக எழுந்து கடவுளின் சாயலை இழந்து நிற்கும் போது கடவுள் நம்மை சோதித்தறிந்து மீண்டும் அவருடைய பிள்ளைகளாக மாற்றுகிறார். இப்படி சோதிக்கப்படும் காலங்களில் தான் நாம் துன்பத்தை அனுபவிக்கின்றோம். உதாரணமாக ஏசாயா 48:10 -ல் “நான் உன்னை புடமிட்டேன். வெள்ளியைப் போல அல்ல. துன்பம் எனும் உலை வழியாய் நான் உன்னை தேர்ந்தெடுத்தேன்”. ஆக கடவுள் நம்மை தேர்ந்தெடுப்பதற்கு அவர் பயன்படுத்தும் கருவி தான் துன்பங்கள்.

எனவே துன்பங்களை நாம் அனுபவிக்கும் போது நமது மனநிலை எப்படியிருக்கின்றது.

01. துன்பங்களைக் கண்டு பயப்படுகிறோம்
இன்றைய உலகில் அனைவருமே துன்பங்களை அனுபவிக்கின்றோம். துன்பத்தை எதிர்த்து போராடுபவர்களைக் காட்டிலும் துன்பத்தைக் கண்டு பயப்படுபவர்கள் தான் நம்மில் அதிகம். ஏன் நாம் துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோம்? உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர் அதாவது முன்னைய காலங்களில் குழந்தைகள் சுகபிரசவத்திலே பிறந்தனர். ஒவ்வொரு தாயுமே பிரசவ வேதனையை அனுபவித்து தனது குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வந்தனர். அந்த தாயோடு சேர்ந்து குழந்தையும் கஸ்டப்பட்டு இவ்வுகிற்கு வரும். தாயைவிட்டு வெளியே வந்தவுடன் அந்த குழந்தையானது முச்சு விடுதலில் இருந்து, கண் விழித்து பார்க்கும் வரை பல துன்பங்களை கடந்து உயிர் வாழ துடி துடிக்கும். அதனால் துன்பத்தை எதிர்கொள்ள பிறந்த நொடி முதல் அந்த குழந்தை பழகிக் கொள்கிறது. எனவேதான் முன்னைய காலங்களில் தற்கொலைகள் அதிகம் கிடையாது. ஆனால் இன்று ஒவ்வொரு தாயும் மருத்துவமனைக்குச் சொன்று மயக்க ஊசி போட்டுக் கொண்டு பிரசவ வேதனையை தானும் அனுபவிக்காமல், தனது பிள்ளையும் அனுபவிக்காமல் இவ்வுலகிற்கு வருகின்றனர். அதனால் வாழ்க்கையில் சிறு சிறு பிரட்சனைகள் வந்தாலும் அவர்களால் அந்த பிரட்சனையை எதிர்கொள்ள தைரியம் வருவதில்லை. எனவே துன்பத்தைக் கண்டு பயப்படுபவர்கள் தான் நம்மில் அதிகம் பேர்.

இன்னும் சொல்லப்போனால் முன்னைய காலங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தான் தங்களுடைய வீட்டுப் பாடங்களை செய்து வருவர். ஆனால் இன்று தனது பிள்ளை நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், பாவம் என் பிள்ளை கஸ்டப்படக்கூடாது என நினைத்து குழந்தைகளின் வேலைகளை ஒவ்வொரு பெற்றோருமே செய்து வருகின்றனர். அதனால் துன்பம் ஏன்றால் என்ன? என்று கேட்கும் அளவிற்கு நமது பிள்ளைகளை நாம் வளர்த்து வருகின்றோம். ஆக இன்றைய நாட்களில் நம்முடைய அன்புப்பிள்ளைகள் துன்ப படக்கூடாது கஸ்டப்படக்கூடாது என நினைத்து அவர்களுக்கு நாம் சந்தோசமான வாழ்வை கொடுக்க விரும்புகிறோம்.

ஆனால் கடவுள் தன்னுடைய அன்பு மகனுக்கு என்ன செய்தார் தெரியுமா? கடவுள் தன்னுடைய ஒரே மகன் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருக்கிறார். அப்படி தான் அன்பு செய்த மகனுக்கு அவர் துன்பத்தை மட்டுமே கொடுத்தார். உதாரணமாக இன்று பிரசவத்திற்காக செல்லும் போது நல்ல மருத்துவமனை, தங்கும் வசதி, நல்ல காற்றோட்டான சூழல், பிறக்க போகும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து தருகின்றனர். ஆனால் கடவுள் தன்னுடைய அன்பு மகன் பிறந்த போது அவருக்கு கொடுத்தது மாட்டுத் தொழுவம். படுத்து உறங்குவதற்கு பஞ்சு மெத்தைகள் கிடையாது வைக்கோலில் கிடத்தியிருந்தனர். அந்த பாலன் இயேசு விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருட்கள் கிடையாது மாறக இக்குழந்தை துன்பத்தை அனுபவிக்கும் என்பதின் அடையாளமாக சாம்பிரானியும்இ வெள்ளைப் போளமும் கொடுக்கப்பட்டடது.

மேலும் இந்த இயேசு வளர்ந்த பிறகு படுத்து உறங்குவதற்கு ஒரு வீடுகூட இல்லாமல் வாழ்ந்து வந்தார். இதைவிடக் கொடுமை என்னவென்றால் தான் துன்பப்பட போகிறேன் என அறிந்த இயேசு தன்னுடைய தந்தையைப் பார்த்து கண்ணீர் விட்டு இரத்த வியர்வை சிந்தி ஜெபிக்கிறார் ‘தந்தையே உம் விருப்பமானால் இத்துண்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் என்று’. அந்த நேரத்தில் கூட தனது அன்பு மகனின் குரலுக்கு செவிசாய்க்காமல் தந்தை மவுனம் காக்கின்றார். கடைசியிலே அந்த கல்வாரியிலே விண்ணுக்கும் மண்ணுக்குமிடையில் தெங்கிக் கொண்டிருந்த போது ‘தந்தையே உமது கையில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன்’ எனச் சொல்லி தான் பிறந்த நேரம் முதல் கடைசி முச்சு நிற்கும் வரை துன்பங்களை மட்டுமே அனுபவித்தவர் தான் நம்முடைய கடவுள். ஆக நம்முடைய கடவுள் துன்பத்தை அனுபவித்தவர்இ துன்பத்தைக் கண்டு பயப்படாதவர்இ துன்பத்தை வெற்றி கொண்டவர். ஆனால் இன்று அவரை பின்பற்றும் நாம் ஒரு சிறு துன்பம் வந்தால் கூட அதை நம்மால் தாங்கி கொள்வது கிடையாது. துன்பத்தைக் கண்டால் பத்தடித்தூரம் ஓடிச்செல்கிறோம். அப்படியானால் உண்மையிலே நாம் இயேசுவை பின்பற்றுபவர்களா? சிந்திப்போம்?

02. துன்ப நேரத்தில் கடவுளை பழித்துரைக்கிறோம்
நம்முடைய துன்பங்களை தாங்கிக்கொள்ள தைரியம் இல்லாத காரணத்தினால் கடவுளை நாம் பழித்துரைக்கின்றோம். உதாரணமாக இஸ்ராயேல் மக்கள் எகிப்திலே துன்பப்படுகின்றனர் என்று கடவுள் அம் மக்கள் மீது இரக்கம் கொண்டு எகிப்தியரின் படியில் இருந்து அவர்களை காப்பாற்றி அழைத்து வருகின்றார். மேலும் இம்மக்களை சோதித்து அறிவதற்காக கடவுள் ஒருசில துன்பங்களை அவர்களுக்கு கொடுக்கிறார். ‘என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்’. ஆனால் இஸ்ராயேல் மக்கள் அவர்களின் துன்பத்திற்கு பயந்து கடவுளை பழித்துரைக்கின்றனர். வி.ப.16:3 –ல் இஸ்ராயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்த பாலை நிலத்தில் மோசேக்கும்இ ஆரோனுக்கும் எதிராக முனுமுனுத்தனர். இஸ்ராயேல் மக்கள் அவர்களை நோக்கி ‘இறைச்சி பாத்திரத்தின் அருகில் அமர்ந்து அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருக்கும். ஆனால் இந்த சபையினர் அனைவரும் மாண்டுபோகவோ இப்பாலை நிலத்திற்குள் நீங்கள் எங்களை கூட்டி வந்திருக்கின்றீர்கள்”. அதற்கு மோயீசன் உங்கள் முறுமுறுப்புகள் ஆண்டவருக்கு எதிரானவை (8) என்றார்.

கடவுளின் பணிக்காக யோனாவை கடவுள் தேர்ந்து கொள்கிறார். யோனாவை சோதித்தறிய ஒருசில துன்பங்களை கடவுள் கொடுக்கிறார். அதற்கு யோனா ஆண்டவரிடம் “ஆண்டவரே என் உயிரை எடுத்துக்கொள்ளும். வாழ்வதை விட சாவதே எனக்கு நல்லது என வேண்டிக்கொண்டார்’ யோனா 4:3, 8.

மேலும் கடவுளின் பார்வையில் யோபு நல்லவராக தெரிகிறார். அந்த யோபுவும் தன் வாழ்வில் கொடுரமான துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவிக்கிறார். ஆனால் அவரது மனைவியோ “இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர். கடவுளை பழித்து மடிவது தானே” என்கிறார். இன்று நம்முடைய வாழ்விலும் கூட ‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை, ‘கடவுளே நீர் இருக்கின்றீரா? இல்லையா?’ ‘இந்த கடவுளை வணங்கி துன்பத்தை அனுபவிப்பதை விட வேற்று தெய்வங்களை வணங்கி சந்தோசமாக இருப்பது நலம்’ எனச் சொல்லி நம்மில் எத்தனை மனிதர்கள் வேற்று தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்துகின்றனர். ஆம் அன்புக்குரியவர்களே துன்ப நேரங்களில் துன்பத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் கடவுளை பழித்துரைத்தவர்களே அதிகம். இன்று நாம் கடவுளை பழித்துரைப்பவர்களா? அல்லது துன்பத்தை தாங்குபவர்களா?

03. நமது துன்பத்திற்கு அடுத்தவரை குறைகூறுகிறோம்
நமது துன்பப்படுவதற்கு யார் காரணம்? பல வேளைகளில் நமது துன்பத்திற்கு அடுத்தவரை குறைசொல்லியே பழகிவிட்டோம். இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல? படைப்பின் தொடக்கத்திலே நமது குற்றத்திற்கு பிறரை குறைசொல்லி பழகிவிட்டோம். ஆதாம் தனக்கு துணையாக கொடுக்கப்பட்ட ஏவாளின் மீது குறை சொல்லுகிறான். “என்னுடன் நீர் இருக்கும் படி தந்த அந்த பெண்தான் எனக்கு கொடுத்தாள்”. அதைப்போலவே ஏவாளும் “பாம்பு என்னை ஏமாற்றி விட்டது” தொ.நூல்3:12-13. என தாங்கள் செய்த தவற்றிற்காக அடுத்தவரை குறைசொல்ல ஆரம்பிக்கின்றனர். எனவே துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

அந்த குடும்பம் மிகவும் பக்தியான நல்ல கத்தோலிக்க குடும்பம். அந்த குடும்பத்திலே ஆறு குழந்தைகள். அன்றாடம் வேலைக்கு சென்று தனது குடும்பத்தை வழிநடத்தி வந்தார் அந்த தந்தை. தனது குழந்தைகள் கஸ்டப்படக் கூடாது என தினமும் இந்த தந்தை கஸ்டப்பட்டு உழைத்தார். ஆறு குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்தார். அதிலே மூத்த குழந்தையை கடவுளின் பணிக்காக அருட்கன்னியராக அனுப்பி விட்டார். இதுவரை சந்தோசமாக சென்ற வாழ்க்கையில் சிறு சிறு பிரட்சனைகள் குடும்பத்தில் தலைதூக்க ஆரம்பித்தன. தாய் மிகவும் நோய்வாய் பட ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் மருத்துவச்செலவு அதிகரித்துக் கொண்டே போனது. இரண்டவது மகளுக்கு தான் சம்பாதித்த பணத்தை வைத்து திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடித்த ஒரு மாதத்திலே தனது கணவன் நல்லவன் கிடையாது என்பதை அறிந்து கொள்கிறார். அவருக்கு பல பெண்களோடு தொடர்பு எனத் தெரிந்து விவாகரத்து பெற தனது வீட்டிற்கே திரும்பி விட்டார். உற்றாரும், ஊராரும் அந்த குடும்பத்தை பற்றி தவறான கதைகள் கூற ஆரம்பித்தனர். இவர்களின் துன்பத்திற்கு, கஸ்டத்திற்கு காரணம் அந்த அருட்கன்னியர்தான். எனச் சொல்லி அவர்மீது பழிசுமத்துகின்றனர். யார் எது சென்னாலும் கடவுள் ஒருவர் இருக்கின்றார் அனைத்தையும் அவர் அறிவார் எனச்சொல்லி இந்த குடும்பத்தினர் இன்னும் அதிகமாக ஜெபம் செய்ய ஆரம்பித்தனர்.

ஒருவருடம் கழித்து மற்றொரு பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது. புதிதாக வந்த மருமகள் வந்த சில நாட்களிலே தனிக்குடித்தனம் செல்ல சண்டை போட்டு தனியாக சென்று விடுகிறார். மற்ற குழந்தைகளும் ஆளுக்கொரு திசையில் செல்கின்றனர். மற்றொரு மகன் வேறு மதத்திலே திருமணம் முடிக்கின்றான். இப்படியாக அந்த குடும்பம் முழுவதும் துன்பங்களை அனுபவிக்கின்றது. இப்போது அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எங்களுடைய துன்பத்திற்கு காரணம் அந்த அருட்சகோதரிதான் எனச் சொல்லி அவரை வீட்டிற்கே வரக்கூடாது எனக் கூறுகின்றனர். தான் பணிசெய்யக்கூடிய இடத்தில் உள்ள மக்கள் ‘முதலில் உன்னுடைய குடும்பத்தில் உள்ள பிரட்சனைகளை சரிசெய் பிறகு வந்து எங்களது பிரட்சனையை கேட்கலாம்’ என்று பேசிவருகின்றனர். இப்போது அந்த அருட்சகோதரிக்கு என்ன பதில் சொல்வீர்கள்? குடும்பத்தினரின் துன்பத்திற்கு, கஸ்டத்திற்கு யார் காரணம்? சந்தோசமாக செல்லும் வரை பிறரை வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம். ஆனால் அதே துன்பங்களை அனுபவிக்கும் போது பிறரை குறைசொல்ல ஆரம்பிக்கின்றோம்.

04. துன்பங்களை அனுபவிக்கும் போது நாம் தனிமையை உணர்கிறோம்.
நாம் துன்பங்களை அனுபவிக்கும் போது பல வேளைகளில் தனிமையை உணர்கிறோம். சந்தோசமாக இருக்கும்போது நம்மோடு பலர் இணைந்திருக்கின்றனர். ஆனால் துன்பம், கஸ்டங்களை அனுபவிக்கும் போது நம்மை தனியே விட்டு விட்டு செல்கின்றனர். இந்த தனிமை உணர்வு தான் நம்மை மேலும் மேலும் துன்பப்பட வைக்கிறது. இன்று தற்கொலை செய்து கொள்பவர்களில் பலபேர் துன்பத்தினாலோ அல்லது கஸ்டத்தினாலே தற்கொலை செய்து கொள்வது கிடையாது. மாறக அவர்கள் தனிமையை உணரும் போது அப்படிப்பட்ட முடிவுக்கு ஆளாகின்றனர்.

துன்பங்களை அனுபவிக்கும் போது எப்படிப்பட்ட மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும்.

துன்பங்களை நாம் அனுபவிக்கும் போது கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்தோமானால் நமது துன்பங்கள் சோதனைகளாக தெரியாது. மாறாக நமது துன்பங்கள் அனைத்தும் சாதனைகளாவே தெரியும். இதைத்தான் இன்றைய வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா வெளிப்படுத்துகிறார். வேதனையின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்தினாலும் எரேமியா கூறுகிறார் “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரர் போல என்னோடு இருக்கின்றார். ஆண்டவர் என்னோடு இருப்பதனால் என்னை துன்புறுத்துவோர் யாரும் என்னை வெற்றி கொள்ள மாட்டார்கள்”. ஆக துன்ப வேளையில் ஆண்டவர் சாதராண வீரராக அல்ல வலிமை வாய்ந்த வீரர் போல இருக்கிறார். இன்றும் நம்முடைய துன்பநேரத்திலும் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்தோமானால் நிச்சயம் துன்பத்தை நாம் எதிர்கொள்ள முடியும்.

இரண்டாவது வாசகத்தில் ஆதாமும், ஏவாளும் கடவுளின் தோட்டத்தில் குடியிருந்தாலும் அவர்களால் கடவுளின் பிரசன்னத்தை உணர முடியவில்லை மாறாக சாத்தானின் பிரசன்னமும்இ அவனது பேச்சும் அவர்களை கவர்ந்திழுக்கிறது. தங்களுடைய சுயநலத்திற்காக சாத்தானின் வலையில் விழுகின்றனர் துன்பத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் நாமதண்டவர் இயேசுவும் சாத்தான் வழியாக சோதிக்கப்பட்டு துன்பத்தை அனுபவிக்கிறார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்ததால் துன்பத்தின் மீது வெற்றி கொள்கிறார்.

நற்செய்தி வாசகத்தில் உடலை கொல்பவர்களுக்காக அஞ்ச வேண்டாம். உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிப்பவர்கே அஞ்சுங்கள். மேலும் யோவான் 16:33-ல் “உலகில் உங்களுக்கு துன்பம் உண்டு எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன்”. எனவே துன்பத்தைக் கண்டு துவண்டுவிட வேண்டாம். ஏனெனில் உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கின்றேன் என ஒவ்வொருநாளும் கடவுள் நம்மை தேற்றி வருகிறார். நம்முடைய துன்ப வேளைகளில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து தைரியமாக துன்பத்தை எதிர்த்து போரடுவோம். துன்பத்தைக் கண்டு ஓ! இவ்வளவு பெரிய துன்பமா என்று கேட்பதை நிறுத்திவிட்டு ஓ! உலகையே படைத்த கடவுள் என்னுடைய துன்ப வேளையில் என்னோடு துணைநிற்கிறார் என்று சொல்லி பார்ப்போம். துன்பங்கள் அனைத்தும் கடவுளின் பிரசன்னத்தால் தவிடு பொடியாகிவிடும். துன்பங்களை தைரியமாக எதிர்கொள்ள வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.